Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நித்திய ராஜாவான யெகோவாவை வழிபடுங்கள்

நித்திய ராஜாவான யெகோவாவை வழிபடுங்கள்

“நித்திய ராஜாவாக . . . இருக்கிற ஒரே கடவுளுக்கே என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக.”1 தீ. 1:17.

1, 2. (அ) “நித்திய ராஜா” யார், இந்தச் சிறப்புப் பெயர் ஏன் பொருத்தமானது? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.) (ஆ) யெகோவா நம்மை ஆட்சி செய்ய வேண்டுமென ஏன் விரும்புகிறோம்?

இரண்டாம் ஸோபூஸா, நவீன கால வரலாற்றில் முத்திரை பதித்த ராஜா. இவர், ஸ்வாஸிலாந்தின் ஆட்சி பீடத்தில் சுமார் 61 வருடங்கள் வீற்றிருந்தவர். இவர் இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அற்ப ஆயுசுள்ள மனிதரைப் போலின்றி ‘நித்தியமாக’ ஆட்சி புரிகிற வேறொரு ராஜாவைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 தீ. 1:17) இந்த உன்னதப் பேரரசரின் பெயரைக் குறிப்பிட்டு சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா என்றென்றும் அரசாளுகிறவர்.”—சங். 10:16, திருத்திய மொழிபெயர்ப்பு.

2 மனித ஆட்சியிலிருந்து யெகோவாவின் ஆட்சியை தனியே பிரித்துக்காட்டுவது அவருடைய நித்திய கால ஆட்சிதான். பூர்வ இஸ்ரவேலை 40 ஆண்டுகள் ஆண்ட ஒரு ராஜா கடவுளைப் புகழ்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது.” (சங். 103:8, 19) யெகோவா நம் ராஜா மட்டுமல்ல நம் அன்பான பரலோகத் தகப்பனும்கூட. ஆனால், அவர் எவ்விதத்தில் ஒரு தகப்பனாக இருந்திருக்கிறார்? ஏதேனில் நடந்த கலகம் முதற்கொண்டு யெகோவா எப்படித் தம் அரசதிகாரத்தை நிரூபித்திருக்கிறார்? இக்கேள்விகளுக்கான பதில்கள், யெகோவாவிடம் இன்னுமதிகமாக நெருங்கி வரவும் இதயப்பூர்வமாக அவரை வழிபடவும் நம்மைத் தூண்டும்.

 நித்திய ராஜா சர்வலோகக் குடும்பத்தை உருவாக்குகிறார்

3. யெகோவாவுடைய சர்வலோகக் குடும்பத்தின் முதல் அங்கத்தினர் யார், யாரும்கூட கடவுளுடைய ‘புத்திரராக’ படைக்கப்பட்டார்கள்?

3 யெகோவா தம்முடைய ஒரே மகனைப் படைத்தபோது எவ்வளவாய் அகமகிழ்ந்திருப்பார்! கடவுள் அவரை ஒரு சாதாரண குடிமகனைப் போல நடத்தவில்லை, மாறாக அவர்களுக்கிடையே அப்பா-மகன் என்ற பாசப் பிணைப்பு இருந்தது. கோடிக்கணக்கான பரிபூரண தேவதூதர்களைப் படைப்பதில் தமக்குத் துணையாகவும் யெகோவா அவரைப் பயன்படுத்திக்கொண்டார். (கொலோ. 1:15-17) “கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற” இந்தத் தூதர்கள் ஆனந்தமாக அவரைச் சேவிக்கிறார்கள்; அவர்களை அவர் “புத்திரர்” என அழைத்து கௌரவிக்கிறார். அவர்கள் யெகோவாவின் சர்வலோகக் குடும்பத்தின் பாகமானவர்கள்.—சங். 103:20-22; யோபு 38:7.

4. மனிதர்கள் எப்படி கடவுளுடைய சர்வலோகக் குடும்பத்தின் பாகமானார்கள்?

4 யெகோவா வானத்தையும் பூமியையும் படைத்த பின் தமது சர்வலோகக் குடும்பத்தை விரிவாக்கினார். உயிர்வாழ்வதற்கேற்ற அனைத்து வசதிகளுடன் ஓர் அழகிய வீடாக பூமியைப் படைத்தார். அதில், தம் படைப்புகளின் மணிமகுடமாக முதல் மனிதன் ஆதாமை உருவாக்கினார், அவனை அவருடைய சாயலில் உருவாக்கினார். (ஆதி. 1:26-28) படைப்பாளரான தமக்கு ஆதாம் கீழ்ப்படிய வேண்டும் என யெகோவா எதிர்பார்த்தார். ஒரு அப்பாவாக, அன்பாகவும் கனிவாகவும் அறிவுரைகளை வழங்கினார். இவை, எந்த விதத்திலும் அவனுடைய சுதந்திரத்தைப் பறிக்கவில்லை.ஆதியாகமம் 2:15-17-ஐ வாசியுங்கள்.

5. இந்தப் பூமியை மக்களால் நிரப்புவதற்கு கடவுள் என்ன ஏற்பாடு செய்தார்?

5 மனித ஆட்சியாளர்களைப் போல இல்லாமல், யெகோவா தம் குடிமக்களை தமது குடும்ப அங்கத்தினர்களைப் போல நடத்தினார்; அவர்கள்மீது நம்பிக்கை வைத்து அநேக பொறுப்புகளைக் கொடுத்தார். உதாரணமாக, மற்ற ஜீவராசிகள்மீது ஆதாமுக்கு அதிகாரம் அளித்தார். அதுமட்டுமல்ல, மிருகங்களுக்குப் பெயர் சூட்டும் சந்தோஷமான, அதே சமயத்தில் சவாலான வேலையையும் கொடுத்தார். (ஆதி. 1:26; 2:19, 20) இந்தப் பூமியை மக்களால் நிரப்புவதற்காக கோடிக்கணக்கான பரிபூரண மனிதர்களைக் கடவுள் படைக்கவில்லை. மாறாக, ஆதாமுக்கு ஏற்ற துணையாக, ஒரு பெண்ணை, ஏவாளை படைத்தார். (ஆதி. 2:21, 22) பிறகு, அந்தத் தம்பதியிடம் பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்பும்படிச் சொன்னார். சாதகமான சூழ்நிலையில், தோட்டத்தின் எல்லைகளைப் படிப்படியாக விரிவாக்கி, பூமி முழுவதையும் ஒரு பூஞ்சோலையாக மாற்றும் வாய்ப்பு மனிதர்களுக்கு இருந்தது. சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக, பரலோகத்திலுள்ள தேவ தூதர்களுடன் சேர்ந்து யெகோவாவை என்றென்றுமாக வழிபடும் வாய்ப்பும் இருந்தது. ஆம், அருமையான எதிர்காலம் அவர்களுக்குக் காத்திருந்தது! ஒரு அப்பாவாக யெகோவா காட்டிய அன்புக்கு அது ஓர் அத்தாட்சி!

கடவுளுடைய ஆட்சியை எதிர்த்த புத்திரர்கள்

6. (அ) கடவுளுடைய குடும்பத்தில் கலகம் தலைதூக்கியது எப்படி? (ஆ) யெகோவா தம் கட்டுப்பாட்டை இழந்துவிடவில்லை என எப்படிச் சொல்கிறோம்?

6 வருத்தகரமாக, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவாவைத் தங்களுடைய பேரரசராக ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் போனது. அவர்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த பரலோகப் புத்திரனான சாத்தானைப் பின்பற்றவே விரும்பினார்கள். (ஆதி. 3:1-6) கடவுளுடைய ஆட்சியை அவர்கள் புறக்கணித்ததால், மனிதர்களுக்கு வேதனையும் துன்பமும் மரணமும் வந்தது. (ஆதி. 3:16-19; ரோ. 5:12) அதனால், கடவுளுக்குக் கீழ்ப்படியும் குடிமக்கள் பூமியில் இல்லாமல் போனார்கள். அப்படியானால், பூமிமீதும் குடிமக்கள்மீதும் அவர் தமது கட்டுப்பாட்டை இழந்து, தம் பேரரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை! ஆதாமையும் ஏவாளையும் அந்த ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி, அவர்கள் மறுபடியும் அங்கு வருவதைத் தடுக்க அதன் நுழைவாயிலில் கேருபீன்களைக் காவல் வைத்தார்; இப்படி, யெகோவா தமது அதிகாரத்தைச் செயல்படுத்தினார். (ஆதி. 3:23, 24) அதோடு அன்பான ஒரு தகப்பனாக, பரலோகப் புத்திரர்களும் பூமியிலுள்ள புத்திரர்களும் இணைந்த ஒரு சர்வலோகக் குடும்பத்தை மீண்டும் உருவாக்கப் போவதாக உறுதி அளித்தார். சாத்தானுக்கும் ஆதாம் செய்த பாவத்தின் விளைவுகளுக்கும் முடிவுகட்டப்போகும் ஒரு ‘சந்ததியை’ (NW, அடிக்குறிப்பு) பற்றியும் வாக்குறுதி அளித்தார்.ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள்.

7, 8. (அ) நோவாவின் காலத்திற்குள்ளாக பூமி எப்படிச் சீர்கெட்டுப் போயிருந்தது? (ஆ) பூமியைச் சுத்தப்படுத்தி, மனித குடும்பத்தைக் காக்க யெகோவா என்ன செய்தார்?

 7 அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், சிலர் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் நடந்துகொண்டார்கள். ஆபேலும் ஏனோக்கும் அவர்களில் அடங்குவர். ஆனால், பெரும்பாலான மக்கள் யெகோவாவைத் தங்களுடைய தகப்பனாகவும் ராஜாவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. நோவாவின் காலத்திற்குள்ளாக, பூமி ‘கொடுமையினால் நிறைந்தது.’ (ஆதி. 6:11) அப்படியானால், பூமி கடவுளுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தமாகி விடுமா? சரித்திரம் என்ன சொல்கிறது?

8 நோவாவின் பதிவைக் கவனியுங்கள். தன்னையும் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு பிரம்மாண்டமான பேழையைக் கட்டும்படி யெகோவா நோவாவிடம் சொன்னார். அதற்குத் தேவையான எல்லா நுட்ப விவரங்களையும் கொடுத்தார். அதுமட்டுமல்ல, மனித குடும்பத்தின்மீது அவருக்கு அளவுகடந்த அன்பு இருந்ததால், ‘நீதியைப் பிரசங்கிக்கும்படி’ நோவாவுக்குக் கட்டளையிட்டார். (2 பே. 2:5) அந்தக் கட்டளைக்கு இசைய, மனந்திரும்பும்படி மக்களுக்கு நோவா அழைப்பு விடுத்தார்; வரவிருந்த அழிவைப் பற்றியும் எச்சரித்தார். மக்களோ எதையும் காதில் வாங்கவில்லை. நோவாவும் அவருடைய குடும்பமும் பல ஆண்டுகள் அந்தக் கொடூரமான, ஒழுக்கங்கெட்ட மக்கள் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். அக்கறையுள்ள அப்பாவான யெகோவா, உண்மையுள்ள அந்த எட்டுப் பேரையும் காப்பாற்றி அவர்களை ஆசீர்வதித்தார். பெருவெள்ளத்தால் கலகக்காரர்களையும் பொல்லாத தூதர்களையும் அழித்ததன் மூலம் யெகோவா தம் அதிகாரத்தைக் காட்டினார். ஆம், பூமி யெகோவாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.—ஆதி. 7:17-24.

யெகோவா ஒருபோதும் தம்முடைய அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிடவில்லை (பாராக்கள் 6, 8, 10, 12, 17)

பெருவெள்ளத்திற்குப் பின் யெகோவாவின் அரசுரிமை

9. பெருவெள்ளத்திற்குப் பின் மனிதர்களுக்குக் கடவுள் என்ன வாய்ப்பு கொடுத்தார்?

9 நோவாவும் அவருடைய குடும்பமும் பேழையிலிருந்து வெளியே வந்து, சுத்தமான பூமியில் கால் பதித்து, சுகமான காற்றை சுவாசித்தார்கள். அப்போது, யெகோவா தங்களைக் காத்து பராமரித்ததை நினைத்து அவர்களுடைய இதயம் நன்றியால் பெருக்கெடுத்திருக்கும். யெகோவாவை வழிபடுவதற்காக, நோவா உடனடியாக ஒரு பலிபீடத்தைக் கட்டி பலிகளைச் செலுத்தினார். நோவாவையும் அவரது குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்று கட்டளையிட்டார். (ஆதி. 8:20–9:1) ஒன்றுபட்டு கடவுளை வழிபடவும் பூமியை நிரப்பவும் மனிதர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்.

10. (அ) பெருவெள்ளத்திற்குப் பிறகு யெகோவாவுக்கு எதிராக மீண்டும் எங்கே கலகம் தலைதூக்கியது, எப்போது? (ஆ) தம் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா என்ன நடவடிக்கை எடுத்தார்?

10 பெருவெள்ளம் மனிதரின் அபூரணத்தைத் துடைத்தழிக்கவில்லை. அதோடு, சாத்தான் மற்றும் அவனுடைய கலகக்கார தூதர்களின் காண முடியாத செல்வாக்கையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. சீக்கிரத்தில், யெகோவாவின் அன்பான ஆட்சிக்கு எதிராகக் கலகம் தலைதூக்கியது. உதாரணத்திற்கு, நோவாவின் கொள்ளுப்பேரனான நிம்ரோது யெகோவாவின் ஆட்சியை எதிர்த்தான். அவன் “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்” என்று பைபிள் சொல்கிறது. அவன் பாபேல் போன்ற பெரிய நகரங்களைக் கட்டி, ‘சிநெயார் தேசத்தில்’ தன்னை ராஜாவாக்கினான். (ஆதி. 10:8-12) இந்தக் கலகக்கார ராஜாவுக்கு எதிராக நித்திய ராஜா என்ன நடவடிக்கை எடுத்தார்? ‘பூமியை நிரப்ப’ வேண்டுமென்ற தமது நோக்கத்தைத் தடுப்பதற்கு அவன் எடுத்த முயற்சிகளை எப்படித் தவிடுபொடியாக்கினார்? மக்களின் மொழியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களை “பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.” அவர்கள் சென்ற இடமெல்லாம் தங்களுடைய பொய் மத வழிபாட்டையும் மனித ஆட்சிமுறையையும் நிறுவினார்கள்.—ஆதி. 11:1-9.

11. யெகோவா எப்படி ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்தார்?

11 பெருவெள்ளத்திற்குப் பின், அநேகர் பொய்க் கடவுட்களை வழிபட ஆரம்பித்தாலும், உண்மையுள்ள சிலர் யெகோவாவுக்குத் தொடர்ந்து மகிமை சேர்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆபிரகாம். அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, ஊர் நகரிலிருந்த வசதியான வீட்டை விட்டுவிட்டு பல வருடங்கள் கூடாரங்களில் வாழ்ந்தார். (ஆதி. 11:31; எபி. 11:8, 9) சுற்றுமுற்றும் அநேக ராஜாக்கள் மதில்சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்தாலும், நாடோடியாக வாழ்ந்த ஆபிரகாமையும் அவருடைய குடும்பத்தையும் யெகோவா பாதுகாத்தார். ஒரு அப்பாவைப் போல யெகோவா பாதுகாக்கும் விதத்தைப் பற்றி சங்கீதக்காரன்  இவ்வாறு குறிப்பிட்டார்: ‘[கடவுள்] அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் [எந்தவொரு மனிதனுக்கும்] இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொள்வார்.’ (சங். 105:13, 14) யெகோவா ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்ததால், “உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்” என்று அவருக்கு உறுதியளித்தார்.—ஆதி. 17:6; யாக். 2:23.

12. பார்வோனிடம் தம்முடைய பேரரசுரிமையை யெகோவா எப்படி நிரூபித்துக்காட்டினார், அப்போது இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்?

12 ஆபிரகாமுக்குக் கொடுத்த அதே வாக்குறுதியை அவருடைய மகன் ஈசாக்குக்கும் பேரன் யாக்கோபுக்கும் கடவுள் கொடுத்தார். (ஆதி. 26:3-5; 35:11) ஆனால், யாக்கோபின் சந்ததியிலிருந்து ராஜாக்கள் தோன்றுவதற்கு முன்பே அவர்கள் எகிப்தில் அடிமைகளாகிவிட்டார்கள். அப்படியானால், யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றவில்லை அல்லது தமது பேரரசுரிமையை விட்டுக்கொடுத்து விட்டார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை! தக்க சமயத்தில், கல்நெஞ்சக்காரனான பார்வோனிடம் அவர் தம்முடைய அதிகாரத்தையும் பேரரசுரிமையையும் நிரூபித்துக்காட்டினார். அப்போது, அடிமைகளாய் இருந்த இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரம் வழியாகத் தங்களை அற்புதமாய் விடுவித்த யெகோவாமீது விசுவாசம் வைத்தார்கள். ஆம், உன்னதப் பேரரசராகவும் அன்பான தகப்பனாகவும் இருக்கிற யெகோவா தமது மகா வல்லமையினால் தம் மக்களைக் காப்பாற்றினார்.யாத்திராகமம் 14:13, 14-ஐ வாசியுங்கள்.

இஸ்ரவேலர்களுக்கு யெகோவா ராஜாவாகிறார்

13, 14. (அ) இஸ்ரவேலர்கள், தாங்கள் பாடிய பாடலில் யெகோவாவின் அரசாட்சியைப் பற்றி என்ன குறிப்பிட்டார்கள்? (ஆ) தாவீதுக்கு கடவுள் என்ன வாக்கு கொடுத்தார்?

13 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து அற்புதமாய் விடுதலை பெற்றவுடன் யெகோவாவைத் துதித்து ஒரு வெற்றிப் பாடலை பாடினார்கள். அந்தப் பாடல் யாத்திராகமம் 15-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 18-ஆம் வசனம் இப்படிச் சொல்கிறது: “கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்.” ஆம், யெகோவா அந்தப் புதிய தேசத்தின் ராஜாவானார். (உபா. 33:5) ஆனாலும், காணமுடியாத ஒருவர் தங்களுக்கு ராஜாவாக இருப்பதில் அவர்கள் திருப்தியடையவில்லை. எனவே, எகிப்தைவிட்டு வந்து சுமார் 400 வருடங்களுக்குப் பிறகு, சுற்றியிருந்த புற தேசத்தாரைப் போல தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென கடவுளிடம் கேட்டார்கள். (1 சா. 8:5) அவர்கள் விருப்பப்படி ஒரு ராஜாவை ஏற்படுத்திய பிறகும், யெகோவா நித்திய ராஜாவாகவே இருந்தார்; இஸ்ரவேலின் இரண்டாம் ராஜாவான தாவீதின் ஆட்சிக் காலத்தில் அது தெளிவானது.

14 தாவீது, பரிசுத்தமான ஒப்பந்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்த சமயத்தில், லேவியர்கள் யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள். “‘யெகோவா ராஜாவானார்’ என்று எல்லாத் தேசங்களிலும் அறிவிக்கப்படுவதாக” என்ற முக்கியமான  குறிப்பு அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தது. (1 நா. 16:31, NW) ‘யெகோவா நித்திய ராஜாவாக இருக்கிற அதே சமயத்தில் எப்படி ராஜாவாக ஆக முடியும்?’ என்று ஒருவர் நினைக்கலாம். யெகோவா தம் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது அல்லது தமக்குப் பிரதிநிதியாக ஒருவரை நியமிக்கும்போது ராஜாவாக ஆகிறார். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு தாவீதிடம் யெகோவா சொன்னதைக் கவனியுங்கள். தாவீது மரிப்பதற்கு முன்பே அவருடைய அரசாட்சி என்றென்றைக்கும் நிலைக்குமென யெகோவா அவருக்கு வாக்கு கொடுத்தார். “நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்” என்று சொன்னார். (2 சா. 7:12, 13) அந்த “சந்ததி” 1,000-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பின் தோன்றியபோது, யெகோவா கொடுத்த வாக்கு நிறைவேறியது. அந்த ராஜா யார், அவர் எப்போது ராஜாவானார்?

புதிய ராஜா நியமிக்கப்படுகிறார்

15, 16. இயேசு எப்போது வருங்கால ராஜாவாக நியமிக்கப்பட்டார், அதற்காக பூமியிலிருந்தபோது இயேசு என்ன ஏற்பாடு செய்தார்?

15 கி.பி. 29-ல், யோவான் ஸ்நானகர் “மனந்திரும்புங்கள், பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது” என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார். (மத். 3:2) இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது, யெகோவா இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகவும் கடவுளுடைய அரசாங்கத்தின் வருங்கால ராஜாவாகவும் நியமித்தார். “இவர் என் அன்பு மகன், நான் இவரை அங்கீகரிக்கிறேன்” என்று சொன்னதன் மூலம் இயேசுவின் மீதுள்ள பாசத்தை யெகோவா வெளிக்காட்டினார்.—மத். 3:17.

16 இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில் தம் தகப்பனை எப்போதும் மகிமைப்படுத்தினார். (யோவா. 17:4) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதன் மூலம் இதைச் செய்தார். (லூக். 4:43) அந்த அரசாங்கம் வருவதற்காக ஜெபம் செய்யவும் தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத். 6:10) கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவான இயேசு தம்மை எதிர்த்தவர்களிடம், “கடவுளுடைய அரசாங்கம் உங்கள் மத்தியிலேயே இருக்கிறது” என்று தைரியமாகச் சொன்னார். (லூக். 17:21) தாம் மரிப்பதற்கு முந்தின இரவு, தம் சீடர்களுடன் ‘ஓர் அரசாங்கத்திற்கான ஒப்பந்தம்’ செய்தார். உண்மையுள்ள சீடர்களில் சிலர், கடவுளுடைய அரசாங்கத்தில் தம்முடன் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தியது.லூக்கா 22:28-30-ஐ வாசியுங்கள்.

17. கி.பி. 33-ல் இயேசு எவ்விதத்தில் தம் ஆட்சியை ஆரம்பித்தார், எதற்காக அவர் காத்திருக்க வேண்டியிருந்தது?

17 இயேசு எப்போது ஆட்சி செய்யத் தொடங்கினார்? அவர் ஒப்பந்தம் செய்த உடனேயே தமது ஆட்சியை ஆரம்பிக்க முடியவில்லை. ஏனென்றால், அடுத்த நாள் மதியம் அவர் கொலை செய்யப்பட்டார், அவருடைய சீடர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். (யோவா. 16:32) என்றாலும், இந்தச் சந்தர்ப்பத்திலும் யெகோவா தமது அதிகாரத்தை இழந்துவிடவில்லை. மூன்றாம் நாளில், தம் மகனை அவர் உயிர்த்தெழுப்பினார். கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாலான சபைமீது இயேசு தம் ஆட்சியை ஆரம்பித்தார். (கொலோ. 1:13) இருந்தாலும், வாக்குப்பண்ணப்பட்ட ‘சந்ததியான’ இயேசு பூமியை ஆளுவதற்கான முழு அதிகாரத்தையும் பெற காத்திருக்க வேண்டியிருந்தது. யெகோவா தம் மகனிடம், “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்” என்றார்.—சங். 110:1.

நித்திய ராஜாவை வழிபடுங்கள்

18, 19. நாம் என்ன செய்யத் தூண்டப்படுகிறோம், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?

18 ஆயிரக்கணக்கான வருடங்களாக, தூதர்களும் சரி மனிதர்களும் சரி, யெகோவாவின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்திருக்கிறார்கள். ஆனாலும், யெகோவா தமது அதிகாரத்தை இழக்கவுமில்லை, தம் பேரரசுரிமையை விட்டுக்கொடுக்கவுமில்லை. அன்புள்ள அப்பாவான அவர் நோவா, ஆபிரகாம், தாவீது போன்ற உண்மையுள்ள குடிமக்களைப் பாதுகாத்தார், பராமரித்தார். இது நம் பரலோகத் தகப்பனும் ராஜாவுமான யெகோவாவுக்குக் கீழ்ப்பட்டிருக்கவும் அவரிடம் இன்னும் நெருங்கி வரவும் நம்மைத் தூண்டுகிறது, அல்லவா?

19 ஒருவேளை நாம் இப்படிக் கேட்கலாம்: நம் நாளிலும் யெகோவா எப்படி ராஜாவானார்? நாம் எப்படி யெகோவாவுடைய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களாகவும் அவருடைய சர்வலோகக் குடும்பத்தின் பரிபூரண புத்திரர்களாகவும் ஆகலாம்? கடவுளுடைய அரசாங்கம் வரும்படி எந்த அர்த்தத்தில் ஜெபம் செய்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதிலளிக்கும்.