Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நூறாண்டு ஆட்சி நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நூறாண்டு ஆட்சி நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

“கடவுளாகிய யெகோவாவே, [நித்திய ராஜாவே] உங்களுடைய செயல்கள் மகத்தானவை, அற்புதமானவை.”—வெளி. 15:3.

1, 2. கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும், இந்த அரசாங்கம் நிச்சயம் வருமென்று நாம் ஏன் உறுதியோடு இருக்கலாம்?

கி.பி. 31, இளவேனிற்காலம். கப்பர்நகூமுக்கு அருகேயுள்ள ஒரு மலையில், இயேசு தம் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார். (மத். 6:10) இன்று அநேகர், கடவுளுடைய அரசாங்கம் வருமா என்று சந்தேகிக்கிறார்கள். ஆனால் நாம், அந்த அரசாங்கம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையோடு ஜெபம் செய்கிறோம்.

2 கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலும் பூமியிலுமுள்ள அவருடைய குடும்பத்தை ஒன்றுசேர்க்கும். யெகோவாவின் இந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும். (ஏசா. 55:10, 11) சொல்லப்போனால், யெகோவா நம் நாளில் ஏற்கெனவே ராஜாவாகிவிட்டார்! கடந்த 100 ஆண்டுகளாக நடந்து வரும் சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் இதற்கு அத்தாட்சி. லட்சக்கணக்கான ஊழியர்களுக்காக அவர் அநேக மகத்தான, அற்புதமான காரியங்களைச் செய்து வருகிறார். (சக. 14:9; வெளி. 15:3) என்றாலும், யெகோவா ராஜாவாகியிருப்பதற்கும், அவருடைய அரசாங்கம் வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் எப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டிருக்கின்றன, இது நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது?

சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்ட ராஜா செயலில்!

3. (அ) இயேசு எப்போது, எங்கே ராஜாவாக நியமிக்கப்பட்டார்? (ஆ) இயேசு 1914-ல் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதை எப்படி விளக்கலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

3 பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் சமயத்தில், 2,500 வருடங்களுக்குமுன் தானியேல் பதிவு செய்த தீர்க்கத்தரிசனத்தை கடவுளுடைய மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். “அந்த ராஜாக்களின் நாட்களிலே,  பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்” என்று அது சொல்கிறது. (தானி. 2:44) பைபிள் மாணாக்கர்கள், 1914 ஒரு முக்கிய ஆண்டாக இருக்குமென்று பல வருடங்களாகவே அறிவித்து வந்தார்கள். அந்தச் சமயத்தில் எதிர்காலத்தைப் பற்றி அநேகர் நம்பிக்கையோடு இருந்தார்கள். “1914, நம்பிக்கையும் வாக்குறுதிகளும் தந்த வருடம்” என்று ஒரு எழுத்தாளரும் குறிப்பிட்டார். பிற்பாடு, அந்த வருடத்தில் முதல் உலகப் போர் வெடித்தபோது தானியேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து வந்த பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள், அதோடு மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்கள், 1914-ல் இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதற்கு அத்தாட்சி அளித்தன. * இவ்வாறு, தமது மகனை மேசியானிய ராஜாவாக நியமித்ததன் மூலம், ஒரு புது அர்த்தத்தில் யெகோவா ராஜாவானார்.

4. இயேசு ராஜாவானதும் என்ன நடவடிக்கை எடுத்தார்? அதற்குப்பின் என்ன செய்தார்?

4 அரியணையில் அமர்த்தப்பட்ட ராஜா, முதலில் தம்முடைய தந்தையின் பிரதான எதிரியான சாத்தானுக்கு எதிராகப் போரிட்டார். இயேசுவும் அவருடைய தூதர்களும் சேர்ந்து பிசாசையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளினார்கள். இதனால் பரலோகத்தில் பெருமகிழ்ச்சியும் பூமியில் சரித்திரம் காணாத பெருந்துன்பங்களும் ஏற்பட்டன. (வெளிப்படுத்துதல் 12:7-9, 12-ஐ வாசியுங்கள்.) அதற்குப்பின், பூமியிலுள்ள குடிமக்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக, இயேசு அவர்களைச் சுத்திகரிக்கவும் அவர்களுக்குக் கற்பிக்கவும் அவர்களை ஒழுங்கமைக்கவும் ஆரம்பித்தார். புதிய ராஜாவின் வழிநடத்துதலுக்குக் அவர்கள் கீழ்ப்படிந்தது நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறதென இப்போது சிந்திப்போம்.

மேசியானிய ராஜா தமது குடிமக்களைச் சுத்திகரிக்கிறார்

5. என்ன சுத்திகரிப்பு 1914-க்கும் 1919-ன் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது?

5 சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் கெட்ட செல்வாக்கைப் பரலோகத்திலிருந்து துடைத்தழித்த பின், பூமியிலுள்ள தம் ஊழியர்களின் ஆன்மீக நிலையைச் சோதனையிடுவதற்கும் அவர்களைச் சுத்தப்படுத்துவதற்கும் இயேசுவுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார். இதை ஆன்மீகச் சுத்திகரிப்பாக மல்கியா தீர்க்கதரிசி விவரிக்கிறார். (மல். 3:1-3) இது 1914-க்கும் 1919-ன் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்ததென சரித்திரம் காட்டுகிறது. * யெகோவாவுடைய பரலோகக் குடும்பத்தின் பாகமாக இருக்க விரும்பினால், நாம் சுத்தமானவர்களாக, அதாவது பரிசுத்தமானவர்களாக, இருக்க வேண்டும். (1 பே. 1:15, 16) நம்மீது பொய் மத செல்வாக்கோ அரசியல் செல்வாக்கோ இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

6. ஆன்மீக உணவு எப்படிக் கிடைக்கிறது, இந்த உணவு நமக்கு ஏன் தேவை?

6 அடுத்ததாக, இயேசு தம்முடைய ராஜ அதிகாரத்தினால் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்தார். இந்த அடிமை இயேசுவின் கவனிப்பில் உள்ள ‘ஒரே மந்தைக்கு’ தேவையான ஆன்மீக உணவைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. (மத். 24:45-47; யோவா. 10:16) பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களாலான இந்தச் சிறு தொகுதியினர் 1919 முதற்கொண்டு, “வீட்டாருக்கு” உணவளிக்கும் முக்கிய பொறுப்பை உண்மையோடு நிறைவேற்றி வருகிறார்கள். இவர்கள் மூலம் கிடைக்கும் ஏராளமான ஆன்மீக உணவு நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. ஆன்மீக ரீதியில், ஒழுக்க ரீதியில், மன ரீதியில், உடல் ரீதியில் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தில் இன்னும் உறுதியோடிருக்க உதவுகிறது. இன்று செய்யப்பட்டு வருகிற மிக முக்கியமான பிரசங்க வேலையில் முழு மூச்சோடு ஈடுபடவும் உதவுகிறது. நீங்கள் இந்த ஆன்மீக உணவிலிருந்து முழுமையாகப் பயனடைகிறீர்களா?

ராஜா பிரசங்க வேலைக்காக குடிமக்களுக்குக் கற்பிக்கிறார்

7. பூமியிலிருந்தபோது இயேசு என்ன முக்கியமான வேலையை ஆரம்பித்தார், எதுவரைக்கும் இந்த வேலை நீடிக்கும்?

7 இயேசு பூமியில் பிரசங்க வேலையை ஆரம்பித்தபோது, “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அறிவித்தார். (லூக். 4:43) மூன்றரை வருடங்களுக்கு இந்த வேலையே அவருடைய வாழ்க்கையின் உயிர்நாடியாக இருந்தது. “‘பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது’ என்று பிரசங்கியுங்கள்” என்று தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 10:7) அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, தம்மைப்  பின்பற்றுபவர்கள் இந்தச் செய்தியை “பூமியின் கடைமுனைவரையிலும்” அறிவிப்பார்கள் என்று முன்னறிவித்தார். (அப். 1:8) இந்த மிக முக்கியமான வேலையில் அவருடைய ஆதரவு தொடர்ந்து நம் நாள்வரையாக இருக்கும் என்று உறுதியளித்திருந்தார்.—மத். 28:19, 20.

8. பிரசங்க வேலையில் ஈடுபடும்படி குடிமக்களை ராஜா எப்படி ஊக்கப்படுத்தினார்?

8 வருடம் 1919-லிருந்து “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி” மற்றொரு பரிமாணத்தை ஏற்றது. (மத். 24:14) எப்படி? அப்போது ராஜா, பரலோகத்தில் தமது ஆட்சியை ஆரம்பித்திருந்தார்; பூமியில் சுத்திகரிக்கப்பட்ட குடிமக்களின் ஒரு சிறிய தொகுதியைக் கூட்டிச் சேர்த்திருந்தார். ‘கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது என்ற நற்செய்தியை பூமியெங்கும் பிரசங்கியுங்கள்’ என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு அவர்கள் முழுமனதோடு கீழ்ப்படிந்தார்கள். (அப். 10:42) உதாரணமாக, செப்டம்பர் 1922-ல் அமெரிக்காவிலுள்ள, ஒஹாயோ, சீடர் பாயிண்ட்டில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு கடவுளுடைய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சுமார் 20,000 பேர் வந்திருந்தார்கள். “கடவுளுடைய அரசாங்கம்” என்ற தலைப்பில் சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்த பேச்சில், “இதோ, ராஜா ஆட்சி செய்கிறார்! நீங்களே அவரது பிரதிநிதிகள். ஆகவே, ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என்று அறிவித்தார். அப்போது கூடிவந்திருந்தோர் அடைந்த பெருமகிழ்ச்சியை சற்று எண்ணிப்பாருங்கள்! அவர்களில் இரண்டாயிரம் பேர் அந்த அறிவிப்பை ஏற்று, விசேஷ ஊழிய தினத்தில் கலந்துகொண்டார்கள்; மாநாடு நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 45 மைல் (72 கி.மீ.) தூரம்வரையுள்ள வீடுகளில் நற்செய்தியை அறிவித்தார்கள். ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தை விளம்பரப்படுத்துங்கள் என்று அவர் அறிவித்ததையும் அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் எழுப்பிய கரகோஷத்தையும் என்னால் மறக்கவே முடியாது!” அதேபோல் சொன்னவர்கள் பலர்.

9, 10. (அ) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன? (ஆ) இதிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?

9 வருடம் 1922-க்குள் உலகமுழுவதும் 58 நாடுகளில் 17,000-க்கும் அதிகமானோர் நற்செய்தியை மும்முரமாக பிரசங்கித்து வந்தார்கள். இருந்தாலும், அவர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது. ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயேசு, தம் முதல் நூற்றாண்டு சீடர்களுக்கு, எதைப் பற்றி பிரசங்கிக்க வேண்டும், எங்கு பிரசங்கிக்க வேண்டும், எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்ற தெளிவான அறிவுரைகளைக் கொடுத்தார். (மத். 10:5-7; லூக். 9:1-6; 10:1-11) அவ்வாறே இன்றும், பிரசங்க வேலையில் ஈடுபடுகிறவர்களுக்கு அறிவுரைகளை வழங்கவும் பிரசங்கிப்பதற்குத் தேவையானவற்றை அளிக்கவும் அவர் ஏற்பாடு செய்கிறார். (2 தீ. 3:17) ஊழியத்தைத் தம்முடைய குடிமக்கள் திறம்படச் செய்வதற்கு, கிறிஸ்தவ சபை மூலம் அவர் பயிற்சி அளிக்கிறார். அதற்கு அவர் பயன்படுத்துகிற ஒரு வழி, தேவராஜ்ய ஊழியப் பள்ளி; உலகமுழுவதும் 1,11,000-க்கும் மேற்பட்ட சபைகளில் இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளியிலிருந்து பயனடைந்த 70 லட்சத்திற்கும் அதிகமானோர் இப்போது ‘எல்லாவித’ மக்களுக்கும் ஏற்றாற்போல் பிரசங்கிக்கிறார்கள், கற்றுக்கொடுக்கிறார்கள்.1 கொரிந்தியர் 9:20-23-ஐ வாசியுங்கள்.

10 தேவராஜ்ய ஊழியப் பள்ளியைத் தவிர வேறு பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சபை மூப்பர்கள், மணமாகாத சகோதரர்கள், கிறிஸ்தவத் தம்பதிகள், கிளை அலுவலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய மனைவிகள், பயணக் கண்காணிகள்  மற்றும் அவர்களுடைய மனைவிகள், மிஷனரிகள் ஆகியோருக்கு பயிற்சியளிக்க பள்ளிகள் நடத்தப்படுகின்றன. * கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி ஒன்றில் கலந்துகொண்ட மாணாக்கர்கள், “இந்த விசேஷித்த பயிற்சியினால் யெகோவாமீதுள்ள எங்கள் அன்பு அதிகரித்திருக்கிறது, அதோடு, மற்றவர்களுக்கு இன்னும் சிறந்த விதத்தில் உதவுவதற்கான திறமையையும் பெற்றிருக்கிறோம்” என்று பாராட்டி எழுதியிருந்தார்கள்.

11. நற்செய்தியை அறிவிப்பவர்களால் எப்படி எதிர்ப்பின் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கிக்க முடிந்திருக்கிறது?

11 பிரசங்கிப்பதற்காகவும் கற்பிப்பதற்காகவும் எடுக்கப்படுகிற முயற்சிகளை எதிரியான சாத்தான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். பிரசங்க வேலையையும் பிரசங்கிப்பவர்களையும் அவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குகிறான். ஆனால், இந்த வேலையைத் தடுத்து நிறுத்துவதற்காக அவன் எடுக்கிற எந்த முயற்சியும் வெற்றிபெறாது. ஏனென்றால், யெகோவா தமது மகனை “எல்லா அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், தலைமை ஸ்தானத்திற்கும் மேலாக” உயர்த்தியிருக்கிறார். (எபே. 1:20-22) ராஜாவான இயேசு, தம்முடைய தகப்பனின் சித்தம் செய்யப்படுவதற்காக தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது சீடர்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். * அதனால், நற்செய்தி எங்கும் பிரசங்கிக்கப்படுகிறது, நல்மனமுள்ள லட்சக்கணக்கானோருக்கு யெகோவாவின் வழிகளைப் பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த மாபெரும் வேலையில் நாம் ஈடுபடுவது எவ்வளவு பெரிய பாக்கியம்!

மாபெரும் வேலையில் ஈடுபட குடிமக்களை ராஜா ஒழுங்கமைக்கிறார்

12. இயேசு 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்தது முதற்கொண்டு கடவுளுடைய ஊழியர்களை எப்படி ஒழுங்குபடுத்தியிருக்கிறார்?

12 இயேசு 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்தது முதற்கொண்டு, கடவுளுடைய ஊழியர்கள் தம் தகப்பனின் சித்தத்தைச் செய்வதற்கான வழிகளை ஒழுங்கமைத்தார். (ஏசாயா 60:17-ஐ வாசியுங்கள்.) 1919-ல், பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துவதற்காக ஒவ்வொரு சபையிலும் சர்வீஸ் டைரக்டர் நியமிக்கப்பட்டார். 1927-ல், எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் தவறாமல் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும் ஏற்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டது. 1931-ல், கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற வேதப்பூர்வமான பெயரை ஏற்றபோது, இந்த வேலையை பெரியளவில் செய்ய ஊக்கம் பெற்றார்கள். (ஏசா. 43:10-12) 1938 முதற்கொண்டு, சபைக் கண்காணிகள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்பட்டார்கள். 1972-ல், சபையை ஒரு சகோதரர் மட்டுமே மேற்பார்வை செய்வதற்குப் பதிலாக, மூப்பர்கள் ஒரு குழுவாக அதைச் செய்வதற்கான ஏற்பாடு ஒழுங்கமைக்கப்பட்டது. தகுதிபெற்ற சகோதரர்கள் எல்லோருமே, ‘தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்ப்பதற்கு’ முன்வரும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள். (1 பே. 5:2) 1976-ல், உலகெங்கும் பிரசங்க வேலையைக் கண்காணிப்பதற்காக, ஆளும் குழு ஆறு கமிட்டிகளாக ஒழுங்கமைக்கப்பட்டது. ஆம், 1914 முதற்கொண்டு இயேசு தம்முடைய குடிமக்களை தேவராஜ்ய முறைப்படி தொடர்ந்து ஒழுங்குபடுத்தி வந்திருக்கிறார்.

13. மேசியானிய ராஜா தம்முடைய 100 வருட ஆட்சியில் சாதித்திருக்கும் காரியங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

 13 மேசியானிய ராஜா தம்முடைய 100 வருட ஆட்சியில் என்னவெல்லாம் சாதித்திருக்கிறார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவுக்கென்று ஒரு மக்கள் தொகுதியை சுத்திகரித்திருக்கிறார். 239 நாடுகளில் பிரசங்க வேலையை ஒழுங்கமைத்திருக்கிறார். அதன்மூலம், லட்சக்கணக்கானோருக்கு யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். தம் தகப்பனின் சித்தத்தைச் செய்ய மனமுவந்து அர்ப்பணித்திருக்கும் எழுபது லட்சத்திற்கும் அதிகமானோரை ஒன்றுசேர்த்திருக்கிறார். (சங். 110:3) ஆம், மேசியானிய அரசாங்கத்தின் மூலம் யெகோவா செய்திருக்கும் காரியங்கள் மகத்தானவை, அற்புதமானவை. சிலிர்ப்பூட்டும் இன்னும் பல சம்பவங்கள் சீக்கிரத்தில் நிகழவிருக்கின்றன!

மேசியானிய அரசாங்கத்தின் எதிர்கால ஆசீர்வாதங்கள்

14. (அ) “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று ஜெபிக்கும்போது கடவுளிடம் நாம் என்ன கேட்கிறோம்? (ஆ) 2014-க்கான வருடாந்தர வசனம் என்ன, அது ஏன் பொருத்தமானது?

14 இயேசு கிறிஸ்துவை ராஜாவாக 1914-ல் யெகோவா முடிசூட்டியிருந்தாலும், “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்ற ஜெபத்திற்கான பதில் இன்னும் முழுமை அடையவில்லை. (மத். 6:10) இயேசு ‘சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்வார்’ என்று பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. (சங். 110:2) சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிற மனித அரசாங்கங்கள் கடவுளுடைய அரசாங்கத்தை இன்னும் எதிர்த்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆகவே, கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென நாம் ஜெபிக்கும்போது, மேசியானிய ராஜாவும் அவருடைய சக ராஜாக்களும் மனித ஆட்சிக்கு முடிவு கட்டவும், கடவுளுடைய அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை அழிக்கவும் வர வேண்டும் என்றே நாம் கேட்கிறோம். அப்போது தானியேல் 2:44-லுள்ள வார்த்தைகள் நிறைவேறும்; கடவுளுடைய அரசாங்கம், ‘அந்த ராஜ்யங்களையெல்லாம் [மனித அரசாங்கங்களை] நொறுக்கி, நிர்மூலமாக்கும்.’ ஆம், அரசியல் எதிரிகள் எல்லோரையும் அழித்துவிடும். (வெளி. 6:1, 2; 13:1-18; 19:11-21) இது சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. இயேசு பரலோகத்தில் தம் ஆட்சியை ஆரம்பித்து இப்போது 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்படியென்றால், மத்தேயு 6:10-லுள்ள “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்ற வார்த்தைகளை, 2014-க்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுத்திருப்பது எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது!

2014-ன் வருடாந்தர வசனம்: “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.” மத்தேயு 6:10

15, 16. (அ) என்ன சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நடக்கும்? (ஆ) மேசியானிய ராஜாவான இயேசு கடைசியில் என்ன செய்வார், யெகோவாவின் என்ன நோக்கம் அப்போது நிறைவேறும்?

15 மேசியானிய ராஜா கடவுளுடைய எதிரிகளை அழித்த பிறகு, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் ஆயிரம் வருடங்களுக்கு அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடுவார். (வெளி. 20:1-3) அப்போது, சாத்தானுடைய செல்வாக்கு எதுவும் இருக்காது. அதனால், இயேசுவின் மீட்பு பலியிலிருந்து மக்கள் நன்மையடையவும் ஆதாம் செய்த பாவத்தின் விளைவுகளை முற்றிலுமாக துடைத்தழிக்கவும் கடவுளுடைய அரசாங்கம் விரைவில் செயல்படும். மரித்துப்போன எண்ணிலடங்கா மக்களை இயேசு உயிர்த்தெழுப்புவார்; அவர்கள் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு உலகளாவிய கல்வி புகட்டும் திட்டத்தை ஏற்பாடு செய்வார். (வெளி. 20:12, 13) பூமி முழுவதும் ஏதேன் தோட்டத்தைப்போல் மிளிரும். உண்மையுள்ள மனிதர்கள் எல்லோரும் பரிபூரணத்தை அடைவார்கள்.

16 மேசியானிய அரசாங்கம் அதன் ஆயிர வருட ஆட்சியின் முடிவில், யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கும். அதற்குப்பின், இயேசு அந்த அரசாங்கத்தைத் தம்முடைய தகப்பனிடம் ஒப்படைத்துவிடுவார். (1 கொரிந்தியர் 15:24-28-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கும் பூமியிலுள்ள அவருடைய மக்களுக்கும் இடையே இனியும் ஒரு மத்தியஸ்தர் தேவைப்பட மாட்டார். பரலோகத்திலுள்ள கடவுளுடைய புத்திரர்களும் பூமியிலுள்ள அவருடைய பிள்ளைகளும் சர்வலோகக் குடும்பமாக தங்கள் பரலோகத் தந்தையோடு ஒன்றுபட்டு இருப்பார்கள்.

17. அரசாங்கத்திற்காக நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?

17 நூறாண்டு ஆட்சியில் நடந்த சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள், யெகோவா தம் கட்டுப்பாட்டை இழந்துவிடவில்லை என்பதையும் அவர் பூமியைப் படைத்ததற்கான நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, அவருடைய உண்மையுள்ள குடிமக்களாக நிலைத்திருந்து, ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி தொடர்ந்து அறிவிப்போமாக! “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்ற ஜெபத்திற்கு சீக்கிரத்தில் யெகோவா பதிலளிப்பார் என்ற நம்பிக்கையோடு இப்படிச் செய்வோமாக!

^ பாரா. 3 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 88-92-ஐப் பாருங்கள்.

^ பாரா. 10 காவற்கோபுரம் செப்டம்பர் 15, 2012, பக்கங்கள் 13-17-ல் “தேவராஜ்ய பள்ளிகள் யெகோவாவின் அன்பிற்கு அத்தாட்சி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 11 பல நாடுகளில் நடந்த நீதிமன்ற வழக்குகளில் கிடைத்த வெற்றிகளைப் பற்றி அறிந்துகொள்ள காவற்கோபுரம் டிசம்பர் 1, 1998, பக்கங்கள் 19-22-ஐப் பாருங்கள்.