Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

எதன் அடிப்படையில் முதல் நூற்றாண்டு யூதர்கள் மேசியாவின் வருகையை ‘எதிர்பார்த்தார்கள்’?

யோவான் ஸ்நானகரின் காலத்தில், “மக்கள் எல்லாரும் கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதனால், ‘இவர்தான் கிறிஸ்துவாக இருப்பாரோ?’ என யோவானைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக். 3:15) அந்தச் சமயத்தில்தான் மேசியா தோன்றுவார் என யூதர்கள் ஏன் எதிர்பார்த்திருக்கலாம்? அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

பெத்லெகேமில் இயேசு பிறந்தபோது, வயலில் ஆடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு யெகோவாவின் தூதர் தோன்றினார். (1) “எஜமானராகிய கிறிஸ்து உங்களுடைய மீட்பராக இன்று தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்று அந்தத் தூதர் அறிவித்தார். (லூக். 2:8-11) அதன் பிறகு, “திரளான தேவதூதர்கள் அந்தத் தேவதூதருடன் தோன்றி, ‘உன்னதத்தில் இருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியில் அனுக்கிரகம் பெற்ற மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாவதாக’ என்று சொல்லிக் கடவுளைப் புகழ்ந்தார்கள்.” *லூக். 2:13, 14.

அதைக் கேட்டவுடன், அந்த மேய்ப்பர்கள் உடனடியாக பெத்லெகேமுக்குப் புறப்பட்டார்கள். அங்கே யோசேப்பையும் மரியாளையும் குழந்தை இயேசுவையும் கண்டபோது, “குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.” அப்போது, “மேய்ப்பர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்ட எல்லாரும் வியப்படைந்தார்கள்.” (லூக். 2:17, 18) “கேட்ட எல்லாரும்” என்ற வார்த்தைகள், தேவதூதர் சொன்னதை மேய்ப்பர்கள் யோசேப்பிடமும் மரியாளிடமும் மட்டுமல்ல, அங்கிருந்த மற்றவர்களிடமும் தெரிவித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. “தாங்கள் பார்த்தவையும் கேட்டவையும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டபடியே இருந்ததால்,” அந்த மேய்ப்பர்கள் வீடு திரும்பிய பிறகும், ‘கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தார்கள்.’ (லூக். 2:20) கிறிஸ்துவைப் பற்றி கேட்ட விஷயங்களை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் அறிவித்தார்கள்.

திருச்சட்டத்தின்படி, மரியாள் தன்னுடைய முதல் மகனை ஆலயத்திற்கு எடுத்துவந்தபோது, தீர்க்கதரிசினியான அன்னாள் “அங்கு வந்து கடவுளுக்கு நன்றி சொன்னார்; எருசலேமின் விடுதலைக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அந்தப் பிள்ளையைப் பற்றிப் பேசினார்.” (2) (லூக். 2:36-38; யாத். 13:12) இவ்வாறு, மேசியாவைப் பற்றிய செய்தி பரவ ஆரம்பித்தது.

பிற்பாடு, “கிழக்கிலிருந்து சோதிடர்கள் எருசலேமுக்கு வந்து, ‘யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்? நாங்கள் கிழக்கிலே இருந்தபோது அவருடைய நட்சத்திரத்தைப் பார்த்தோம், அவர்முன் தலைவணங்க வந்தோம்’ என்றார்கள்.” (மத். 2:1, 2) அதைக் கேட்டதும், “ஏரோது ராஜா . . . கலக்கம் அடைந்தான்; அவனோடு எருசலேமில் இருந்த அனைவரும் கலக்கம் அடைந்தார்கள்; அதனால்  பிரதான குருமார்கள், வேத அறிஞர்கள் ஆகிய அனைவரையும் அவன் ஒன்றுகூட்டி, கிறிஸ்து எங்கே பிறப்பாரென அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.” (3) (மத். 2:3, 4) அதனால், மேசியா வந்துவிட்டார் என்ற செய்தி இன்னும் அநேகருக்குத் தெரியவந்தது. *

லூக்கா 3:15-ல் நாம் பார்த்தபடி, யோவான் ஸ்நானகர்தான் கிறிஸ்து என யூதர்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்களிடம் யோவான் இவ்வாறு சொன்னார்: “எனக்குப்பின் வரப்போகிறவர் என்னைவிட வல்லவர்; அவருடைய காலணிகளைக் கழற்றுவதற்கும்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் கடவுளுடைய சக்தியினாலும் நெருப்பினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.” (மத். 3:11) அவருடைய வார்த்தைகள், மேசியாவைப் பற்றி மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.

முதல் நூற்றாண்டு யூதர்கள், தானியேல் 9:24-27-லுள்ள 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் மேசியா வரும் காலத்தைக் கணக்கிட்டிருப்பார்களா? அதற்குச் சாத்தியமிருந்தாலும், அதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், இயேசுவின் காலத்தில் அந்த 70 வாரங்களைப் பற்றிய பல முரண்பாடான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அவை எதுவுமே, நாம் இன்று புரிந்துகொண்டுள்ள விளக்கத்தோடு ஒத்திருக்கவில்லை. *

இஸ்ஸனஸ் என்றழைக்கப்பட்ட துறவிகள் (யூத மதப் பிரிவினராகக் கருதப்பட்டவர்கள்), 490 வருடங்களின் முடிவில் இரண்டு மேசியாக்கள் தோன்றுவார்கள் என கற்பித்தார்கள். தானியேல் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில்தான் அவர்கள் அதைக் கணக்கிட்டார்களா என்பது நமக்குச் சரியாகத் தெரியாது. அப்படிக் கணக்கிட்டிருந்தாலும், அந்தத் துறவிகள் சொன்னதைப் போய் யூத மதத்தினர் நம்பியிருப்பார்களா, என்ன?

அந்த 70 வாரங்கள், கி.மு. 607-ல் முதல் ஆலயம் அழிக்கப்பட்டதற்கும் கி.பி. 70-ல் இரண்டாவது ஆலயம் அழிக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தையே குறிப்பதாக இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள் சிலர் நம்பினார்கள். மற்றவர்களோ, அந்தத் தீர்க்கதரிசனம் மக்கபேயர்களின் காலமான கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் நிறைவேறியதாக நம்பினார்கள். ஆக, 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை ஆளுக்கொரு விதமாகவே கணக்கிட்டார்கள்.

ஒருவேளை, அந்த 70 வாரங்களின் காலக்கணக்கை முதல் நூற்றாண்டு யூதர்கள் நன்கு புரிந்துவைத்திருந்தால் அப்போஸ்தலர்களும், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் அதை ஆதாரமாக வைத்து வாக்குப்பண்ணப்பட்ட மேசியா குறித்த காலத்தில் வந்துவிட்டார் என்று சொல்லியிருப்பார்கள், அல்லவா? ஆனால், அதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.

மற்றொரு குறிப்பையும் நாம் கவனிக்க வேண்டும். எபிரெய வேதாகமத்திலுள்ள சில தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதாக சுவிசேஷ எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (மத். 1:22, 23; 2:13-15; 4:13-16) ஆனாலும், அவர்களில் ஒருவர்கூட மேசியாவின் வருகையை 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதவில்லை.

சுருங்கச் சொன்னால், 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை இயேசுவின் காலத்திலிருந்த மக்கள் சரியாகப் புரிந்திருந்தார்கள் என திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், மேசியாவின் வருகைக்காக மக்கள் ஏன் ‘எதிர்பார்த்திருந்தார்கள்’ என்பதற்குத் தகுந்த காரணங்கள் சுவிசேஷ புத்தகங்களில் உள்ளன.

^ பாரா. 4 இயேசுவுடைய பிறப்பின்போது தூதர்கள் “பாடியதாக” பைபிள் குறிப்பிடுவதில்லை.

^ பாரா. 7 சோதிடர்கள், கிழக்கில் தோன்றிய “நட்சத்திரத்தை” ‘யூதர்களுடைய ராஜாவின்’ பிறப்போடு எப்படிச் சம்பந்தப்படுத்தியிருப்பார்கள்? ஒருவேளை அவர்கள் இஸ்ரவேல் தேசம் வழியாக பயணித்தபோது இயேசுவின் பிறப்பைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்களோ? என்றெல்லாம் நாம் யோசிக்கலாம்.

^ பாரா. 9 70 வாரங்களைப் பற்றிய சரியான விளக்கத்தைத் தெரிந்துகொள்ள தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐப் பாருங்கள்.