Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘யெகோவாவின் இனிய குணத்தைத் தியானியுங்கள்’

‘யெகோவாவின் இனிய குணத்தைத் தியானியுங்கள்’

வேதனைமிக்க சூழ்நிலைகளைச் சமாளிப்பது கொடுமையிலும் கொடுமை. அவை நம்முடைய சிந்தையைச் சிதறடித்துவிடும், சக்தியை உறிஞ்சிவிடும், வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும். பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது பல கஷ்டங்களில் அல்லாடினார். அவற்றையெல்லாம் அவர் எப்படிச் சமாளித்தார்? அவர் இயற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு பாடலில் இதற்கான பதில் இருக்கிறது. அவர் இவ்வாறு பாடினார்: “ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன். என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்; என் மனம் சோர்வுற்றிருந்தது; நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்.” ஆம், உதவிக்காக தாவீது தாழ்மையோடு யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.—சங். 142:1-3, பொது மொழிபெயர்ப்பு.

வேதனையான காலத்தில் தாவீது யெகோவாவிடம் தாழ்மையோடு ஜெபித்தார்

தாவீது பாடிய மற்றொரு பாடல்: “யெகோவாவிடம் ஒன்றை நான் கேட்டேன், அதையே நான் நாடுவேன்; யெகோவாவின் இனிய குணத்தைத் தியானிப்பதற்காகவும் அவருடைய ஆலயத்தை நன்றியுணர்வோடு பார்ப்பதற்காகவும் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” (சங். 27:4, NW) தாவீது ஒரு லேவியர் அல்ல. இருந்தாலும், உண்மை வழிபாட்டின் மையமாக இருந்த ஆசரிப்புக்கூடாரத்தின் பரிசுத்த முற்றத்திற்கு வெளியே அவர் நின்றுகொண்டிருந்த காட்சியை உங்கள் மனதில் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அவருடைய இருதயத்தில் நன்றி பெருக்கெடுத்ததால், “யெகோவாவின் இனிய குணத்தைத் தியானிப்பதற்காக” தன் வாழ்நாளெல்லாம் ஆலயத்திலேயே தங்கிவிட நினைத்தார்.

“இனிய” என்ற வார்த்தை, “மனதுக்கும் உணர்ச்சிகளுக்கும் பிடித்தமான அல்லது மகிழ்வூட்டுகிற நிலையோடு அல்லது குணத்தோடு” சம்பந்தப்பட்டது. உண்மை வழிபாட்டிற்காக கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டை தாவீது எப்போதும் நன்றியுணர்வோடு பார்த்தார். ‘தாவீது உணர்ந்ததுபோல நானும் உணர்கிறேனா?’ என்று நம்மைக் கேட்டுக்கொள்ளலாம்.

கடவுளுடைய ஏற்பாட்டை ‘நன்றியுணர்வோடு பாருங்கள்’

நம் நாட்களில், யெகோவா தம்மை அணுகுவதற்கு ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார். அது, ஆலயம் போன்ற கட்டிடத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. மாறாக, பெரிய ஆன்மீக ஆலயத்தை, அதாவது உண்மை வழிபாட்டிற்கான பரிசுத்த ஏற்பாட்டை, குறிக்கிறது. * இந்த ஏற்பாட்டிற்கு ‘நன்றியோடு இருந்தால்’, நாமும் ‘யெகோவாவின் இனிய குணத்தைத் தியானிக்க முடியும்.’

ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன் வெண்கலத்தாலான தகனபலிபீடம் இருந்தது. (யாத். 38:1, 2; 40:6) இயேசுவின் மீட்பு பலியை ஏற்றுக்கொள்ள யெகோவா மனமுள்ளவராய் இருந்ததை அந்தப் பலிபீடம் அர்த்தப்படுத்தியது. (எபி. 10:5-10) இந்தப் பலியினால் நாம் பெறும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள்! “நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவரது மகனுடைய மரணத்தின் மூலம் அவருடன் சமரசம் செய்யப்பட்டோம்” என்று பவுல் எழுதினார். (ரோ. 5:10) இயேசு சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கும்போது, நாம் கடவுளுடைய நண்பர்களாக ஆக முடியும்; அவருடைய தயவையும் நம்பிக்கையையும் சம்பாதிக்க முடியும். அதன் பலனாக, “யெகோவாவோடு நெருங்கிய நட்பை” அனுபவிக்க முடியும்.—சங். 25:14, NW.

நம்முடைய ‘பாவங்கள் துடைத்தழிக்கப்படுவதால்’, “யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே” இருக்கிறது. (அப். 3:19) மரண தண்டனைக்குக் காத்திருக்கும் வேளையில், மனந்திரும்பி பெரும் மாற்றங்களைச் செய்கிற ஒரு கைதியின் சூழ்நிலையைப் போலவே நம்முடைய சூழ்நிலையும் இருக்கிறது. அவன் செய்யும் மாற்றத்தைப் பார்க்கிற ஒரு நல்ல நீதிபதி, அவனை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கத் தீர்மானிக்கிறார். இப்போது, அந்தக் கைதி நிம்மதி பெருமூச்சு விடுவதையும் சந்தோஷத்தில் மிதப்பதையும் சற்று கற்பனை செய்து பாருங்கள்! அதுபோலவே, மனந்திரும்பிய மனிதர்கள்மீது யெகோவா தயவு காட்டி, அவர்களை மரண தீர்ப்பிலிருந்து விடுவிக்கிறார்.

 உண்மை வழிபாட்டில் மகிழ்ச்சி காணுங்கள்

உண்மை வழிபாட்டின் என்னென்ன அம்சங்களை யெகோவாவுடைய வீட்டில் தாவீது கவனித்திருப்பார்? இஸ்ரவேலர்கள் எல்லோரும் கூடிவருவது... நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டு, விளக்கப்படுவது... தூபம் காட்டுவது... குருமார்களும் லேவியர்களும் பரிசுத்த சேவை செய்வது... என பல விஷயங்களைக் கவனித்திருப்பார். (யாத். 30:34-38; எண். 3:5-8; உபா. 31:9-12) இதற்கு இணையான காரியங்கள் நம்முடைய காலத்திலும் நடைபெறுகின்றன.

அன்றுபோல் இன்றும், “சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1) நம் உலகளாவிய “சகோதரர்கள்” மத்தியில் மாபெரும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. (1 பே. 2:17) நம்முடைய கூட்டங்களில் கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்படுகிறது; அதற்கு விளக்கமும் அளிக்கப்படுகிறது. யெகோவா தம் மக்களுக்கு போதிப்பதற்காக, தம்முடைய அமைப்பின் மூலம் அநேக ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். நாம் தனியாகவும் குடும்பமாகவும் படிப்பதற்கு ஏராளமான பிரசுரங்கள் கிடைக்கின்றன. ஆளும் குழு உறுப்பினர் ஒருவர் இப்படிச் சொன்னார்: “காலையில் எழுந்து யெகோவாவின் வார்த்தையைத் தியானித்து, அதன் அர்த்தத்தைச் சிந்தித்து, ஆழமான அறிவைப் பெறவும் நன்கு புரிந்துகொள்ளவும் ஆராயும்போது ஆன்மீக ஆசீர்வாதமும் மனநிறைவும் கிடைக்கிறது.” ஆம், அந்த ‘அறிவு நம் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.’—நீதி. 2:10.

இன்று, கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் யெகோவாவை நோக்கி ஜெபத்தை ஏறெடுக்கிறார்கள். யெகோவாவுக்குப் பிரியமான ஜெபங்கள் நல்வாசனைமிக்க தூபம்போல் அவரிடம் எழும்புகின்றன. (சங். 141:2) நாம் தாழ்மையோடு ஏறெடுக்கும் ஜெபத்தில் யெகோவா எந்தளவு பிரியப்படுகிறார் என்பதை அறிவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அல்லவா!

“எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும். நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்” என்று மோசே ஜெபித்தார். (சங். 90:17, ஈஸி டு ரீட் வர்ஷன்) நாம் பக்திவைராக்கியத்தோடு செய்யும் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார். (நீதி. 10:22) பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள நாம் சிலருக்கு உதவியிருக்கலாம். மக்களின் அலட்சிய மனப்பான்மை, நம்முடைய உடல் பலவீனம், மனப் போராட்டம், துன்புறுத்தல் ஆகியவற்றின் மத்தியிலும் தொடர்ந்து பல வருடங்களாக ஊழியம் செய்திருக்கலாம். (1 தெ. 2:2) அப்போது, “யெகோவாவின் இனிய குணத்தை” தியானித்திருப்போம், அல்லவா? நாம் எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் கவனித்து நம் பரலோகத் தகப்பன் சந்தோஷப்பட்டிருப்பார், அல்லவா?

“யெகோவா என் பங்கு, எனக்குரிய சொத்து, என் கிண்ணம். நீர் என் சொத்துகளைப் பாதுகாக்கிறீர். இனிய சுகமான இடங்கள் எனக்கு ஆஸ்தியாக அருளப்பட்டிருக்கின்றன” என்று தாவீது பாடினார். (சங். 16:5, 6, NW) தன்னுடைய ‘பங்குக்கு,’ அதாவது யெகோவாவோடுள்ள உறவுக்கும் அவருக்குச் சேவை செய்யும் பாக்கியத்துக்கும் தாவீது நன்றியுள்ளவராக இருந்தார். தாவீதைப் போல, நாமும் ஒருவேளை துன்பத்தில் தவித்துக்கொண்டிருந்தாலும் ஏராளமான ஆன்மீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். ஆகவே, உண்மை வழிபாட்டில் தொடர்ந்து மகிழ்ச்சி காண்போமாக! யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தை ‘நன்றியுணர்வோடு பார்ப்போமாக’!

^ பாரா. 6 காவற்கோபுரம் ஜூலை 1, 1996, பக்கங்கள் 14-24-ஐப் பாருங்கள்.