Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது

ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது

“ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; . . . கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.”—மத். 6:24.

1-3. (அ) பண விஷயத்தில் இன்று பலர் என்ன பிரச்சினையை எதிர்ப்படுகிறார்கள், அதைச் சமாளிக்க என்ன செய்கிறார்கள்? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.) (ஆ) பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக என்னென்ன விஷயங்கள் பெற்றோரின் மனதைக் குடையலாம்?

“என்னோட கணவர் ஜேம்ஸ் ஒவ்வொரு நாளும் ஓய்ஞ்சு போய்தான் வீட்டுக்கு வருவாரு. அப்படி உழைச்சும் எங்களோட தேவைகளை மட்டும்தான் கவனிக்க முடிஞ்சுது. அவரோட பாரத்தை கொஞ்சம் குறைக்கலாம்னு நெனச்சேன், மற்ற பசங்க வெச்சிருக்கிற மாதிரி என் பையன் ஜிம்மிக்கும் நல்ல பொருள்கள வாங்கி தரணும்னு நெனச்சேன்” என்கிறார் மெர்லின். * சொந்தபந்தங்களுக்கு உதவவும் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்கவும் அவர் ஆசைப்பட்டார். கை நிறைய சம்பாதிப்பதற்காக அவருடைய நண்பர்கள் பலர் வெளிநாட்டிற்குப் போயிருக்கிறார்கள். வெளிநாட்டிற்குப் போவதைப் பற்றி மெர்லின் யோசித்தபோது பலவிதமான எண்ணங்கள் அவரை அலைக்கழித்தன. ஏன்?

2 கணவரையும் மகனையும் விட்டுவிட்டு... குடும்பமாக யெகோவாவை வழிபடுவதை விட்டுவிட்டு... வெளிநாட்டிற்குப் போவதை நினைத்து மெர்லின் பயந்தார். இருந்தாலும், ‘மத்தவங்க எல்லாம் சில காலத்திற்கு அப்படி போயிருக்காங்களே, ஆன்மீக விஷயங்கள்ல அவங்க குடும்பமெல்லாம் நல்லாதானே இருக்கு’ என்று நினைத்து தன்னுடைய தீர்மானத்தை நியாயப்படுத்தினார். ஆனால், தூரத்தில் இருந்துகொண்டு ஜிம்மியை எப்படி வளர்க்க முடியும் என்று யோசித்தார். இன்டர்நெட் மூலமாக ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவனைக் கண்டிக்கவும், அவருடைய சிந்தையை அவனுடைய மனதில் பதிய வைக்கவும்’ அவரால் முடியுமா?—எபே. 6:4.

3 மெர்லின் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்படிப்  போவதில் தனக்கு விருப்பமில்லை என்று அவருடைய கணவர் சொல்லிவிட்டார். ஒருவேளை அப்படிப் போவதாக முடிவெடுத்தால், அதைத் தடுக்கப்போவதில்லை என்றும் சொன்னார். சபை மூப்பர்களும் மற்ற சகோதர சகோதரிகளும், அவர் இங்கேயே இருப்பதுதான் நல்லது என சொன்னார்கள். ஆனால் சபையிலிருந்த சகோதரிகள் பலர், வெளிநாட்டிற்குப் போக அவரை உற்சாகப்படுத்தினார்கள். “உங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு நெனச்சீங்கனா கண்டிப்பா போவீங்க. அங்க போனாலும் யெகோவாவ வழிபடலாமே” என்று சொன்னார்கள். குடும்பத்தை விட்டுவிட்டுப் போவது மெர்லினுக்குக் கஷ்டமாக இருந்தாலும், “நான் சீக்கிரம் வந்துடுவேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்குப் புறப்பட்டார்.

குடும்பப் பொறுப்புகளும் பைபிள் நியமங்களும்

4. நிறைய பேர் குடும்பத்தை விட்டு ஏன் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளை யாரிடம் விட்டுவிட்டுச் செல்கிறார்கள்?

4 தம்முடைய மக்கள் வறுமையில் வாடவேண்டுமென யெகோவா விரும்புவதில்லை. வறுமையைப் போக்க வேறு நாட்டிற்குப் போவது அந்த காலத்தில் இருந்த ஒரு பழக்கம். (சங். 37:25; நீதி. 30:8) உணவுக்கு வழியில்லாமல் தவித்த சமயத்தில், முற்பிதாவான யாக்கோபு தன்னுடைய மகன்களை உணவு வாங்கிவர எகிப்துக்கு அனுப்பினார். * (ஆதி. 42:1, 2) ஆனால், இன்று வெளிநாட்டிற்குப் போகிற நிறைய பேர் வயிற்றுப்பிழைப்புக்காகப் போவதில்லை. வேறு எதற்காகப் போகிறார்கள்? சிலர், கடன்தொல்லையைச் சமாளிப்பதற்காகப் போகிறார்கள். இன்னும் சிலர், வசதியாக வாழ வேண்டுமென்ற ஆசையில் போகிறார்கள். தாங்கள் வாழும் பகுதியில் அதிகம் சம்பாதிக்க முடியாததால், வெளிநாட்டிற்கோ சொந்த நாட்டிலேயே வேறு இடத்திற்கோ போகத் தீர்மானிக்கிறார்கள். இளம் பிள்ளைகளை தங்களுடைய துணையிடமோ, மூத்த பிள்ளைகளிடமோ, தாத்தா-பாட்டியிடமோ, சொந்தக்காரர்களிடமோ, நண்பர்களிடமோ விட்டுவிட்டுச் செல்கிறார்கள். துணையையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிவது வேதனையாக இருந்தாலும் அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

5, 6. (அ) சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் பற்றி இயேசு என்ன சொன்னார்? (ஆ) எதற்காக ஜெபிக்கும்படி இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்தார்? (இ) யெகோவா நம்மை எவ்விதத்தில் ஆசீர்வதிக்கிறார்?

5 இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில்கூட ஏழை மக்கள் இருந்தார்கள். கை நிறைய பணம் இருந்தால், சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் வாழலாமென அவர்கள் நினைத்திருக்கலாம். (மாற். 14:7) ஆனால், அழிந்துபோகும் செல்வத்தின்மீது நம்பிக்கை வைக்காமல் அழியாத செல்வத்தின்மீது, அதாவது யெகோவாமீது, அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமென்றே இயேசு விரும்பினார். பொருள் செல்வங்களின் மூலமோ சொந்த முயற்சியின் மூலமோ உண்மையான சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் பெற முடியாது; பரலோகத் தந்தையிடம் நமக்கு உள்ள நட்பின் மூலமே அவற்றைப் பெற முடியும் என்பதை அவர் தம்முடைய மலைப் பிரசங்கத்தில் விளக்கினார்.

6 இயேசு தம்முடைய மாதிரி ஜெபத்தில், சொத்துப்பத்துகளைச் சேர்த்து வைப்பதற்காக அல்ல, ‘அன்றாடத் தேவைகளுக்காக’, அதாவது ‘இன்றைக்குத் தேவையான ஆகாரத்திற்காக’ ஜெபிக்கும்படியே சொன்னார். “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்; . . . மாறாக, பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடர்களிடம் சொன்னார். (மத். 6:9, 11, 19, 20) யெகோவா தம்முடைய வாக்குறுதியின்படியே நம்மை ஆசீர்வதிப்பார் என்பதை நாம் முழுமையாக நம்பலாம். தம்முடைய மக்களாக அவர் நம்மை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்ல நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும் நம்மை ஆசீர்வதிக்கிறார். அப்படியானால், உண்மையான சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் பெறுவதற்கு ஒரே வழி, நம் தந்தை யெகோவாமீது நம்பிக்கை வைப்பதுதான்.மத்தேயு 6:24, 25, 31-34-ஐ வாசியுங்கள்.

7. (அ) பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை யெகோவா யாரிடம் கொடுத்துள்ளார்? (ஆ) பிள்ளைகளுக்கு ஏன் அப்பா, அம்மா இருவருமே கற்பிக்க வேண்டும்?

7 ‘முதலாவது கடவுளுடைய . . . நீதிநெறிகளை நாடுவதில்’ குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதும் உட்பட்டுள்ளது. அவற்றை யெகோவா விரும்பும் விதத்தில் நாம் செய்ய வேண்டும். சொல்லப்போனால், திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கட்டளை, கிறிஸ்தவப் பெற்றோருக்கும் பொருந்துகிறது. பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அந்தக் கட்டளை. (உபாகமம் 6:6, 7-ஐ வாசியுங்கள்.) இந்தப் பொறுப்பை அப்பா, அம்மா இருவருக்குமே யெகோவா கொடுத்திருக்கிறார்; தாத்தா பாட்டியிடமோ வேறு யாரிடமோ கொடுக்கவில்லை. ‘என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன்  தாயின் போதகத்தைத் தள்ளாதே’ என்று சாலொமோன் ராஜா சொல்கிறார். (நீதி. 1:8) அப்படியானால் அப்பா, அம்மா இருவருமே அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், தேவையான வழிநடத்துதலைத் தர வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (நீதி. 31:10, 27, 28) பிள்ளைகள் நிறைய விஷயங்களை, முக்கியமாக ஆன்மீக விஷயங்களை, அப்பா அம்மாவிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆம், பெற்றோர் ஒவ்வொரு நாளும் யெகோவாவைப் பற்றிப் பேசுவதையும் அவர்கள் வைக்கும் முன்மாதிரியையும் பார்த்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.

எதிர்பாரா விளைவுகள்

8, 9. (அ) குடும்பத்தைவிட்டுப் பெற்றோர் பிரிந்திருப்பதால் வரும் விளைவுகள் என்ன? (ஆ) உணர்ச்சி ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் என்ன ஆபத்துகள் ஏற்படலாம்?

8 குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்குப் போவதால் வரும் பிரச்சினைகளைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியும். ஆனால், அது எந்தளவுக்கு குடும்பத்தைப் பாதிக்கும் என்று அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. (நீதி. 22:3) * குடும்பத்தை விட்டுப் பிரிந்த சில நாட்களிலேயே, கணவரையும் மகனையும் பார்க்க முடியாமல் மெர்லின் தவியாய்த் தவித்தார். அதே தவிப்பு அவருடைய கணவருக்கும் மகன் ஜிம்மிக்கும் இருந்தது. “நீங்க ஏன் என்னை விட்டுட்டுப் போனீங்க?” என்று ஜிம்மி, எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தான். மாதங்கள் வருடங்களாக ஓடின, குடும்பத்தின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி வருவதை மெர்லின் உணர்ந்தார். அம்மாவிடம் ஜிம்மி பேசுவது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அம்மா-பிள்ளை என்ற உறவே அறுந்து விடுமளவுக்குச் சென்று விட்டது. “என் மேல அவனுக்கு சுத்தமா பாசமே இல்லாம போயிடுச்சு” என்று வருத்தத்தோடு சொல்கிறார் மெர்லின்.

9 பெற்றோர் ஒருபக்கம் பிள்ளைகள் ஒருபக்கம் என்றிருந்தால், அவர்கள் உணர்ச்சி ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் பாதிக்கப்படுவார்கள். * சிறு வயது பிள்ளைகளைவிட்டு பல வருடங்கள் பிரிந்திருந்தால், விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். ஜிம்மியின் எதிர்காலத்திற்காகத்தான் வெளிநாட்டிற்குப் போனதாக மெர்லின் அவனிடம் சொன்னார். ஆனால் அவனோ, அம்மா தன்னை அம்போவென விட்டுவிட்டுப் போனதாக நினைத்தான். ஆரம்பத்தில் அம்மா தன் பக்கத்தில் இல்லாதது ஜிம்மிக்கு எரிச்சலாக இருந்தது. போகப்போக, தன்னைப் பார்க்க அம்மா வெளிநாட்டிலிருந்து வருவது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பெற்றோரால் தனித்து விடப்பட்ட பிள்ளைகளுக்கே உரிய எண்ணம்தான் ஜிம்மிக்கும் வந்தது. கீழ்ப்படிய வேண்டும், பாசமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க அம்மாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தான்.நீதிமொழிகள் 29:15-ஐ வாசியுங்கள்.

இன்டெர்நெட் வழியா உங்க பிள்ளைய கட்டி அணைக்க முடியாது (பாரா 10)

10. (அ) பரிசுகளைக் கொடுத்து தாங்கள் இல்லாத குறையைத் தீர்க்க பெற்றோர் முயற்சி செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? (ஆ) தூரத்திலிருந்து பிள்ளைகளை வளர்க்க முயற்சி செய்தால் எதை இழக்க வேண்டியிருக்கும்?

10 பணத்தையும் பரிசுகளையும் கொடுத்து, தான் இல்லாத குறையைத் தீர்க்க மெர்லின் முயற்சி செய்தார். ஆனால், அப்படிச் செய்ததன் மூலம், தனக்கும் மகனுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டதை உணர்ந்தார். அதோடு, குடும்பத்தையும் யெகோவாவையும்விட பணம்தான் முக்கியம் என்ற எண்ணத்தைத் தன்னை அறியாமலேயே தன் மகனின்  மனதில் விதைத்ததை உணர்ந்தார். (நீதி. 22:6) “நீங்க வரவேண்டாம், கிஃப்ட் அனுப்புனா போதும்” என ஜிம்மி சொல்ல ஆரம்பித்தான். கடிதங்கள், ஃபோன், வீடியோ சாட் ஆகியவற்றின் மூலமாக மகனை வளர்க்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். “இன்டெர்நெட் வழியா உங்க பிள்ளைய கட்டி அணைக்கவோ, ஆசையா முத்தம் கொடுக்கவோ முடியாதே” என்கிறார் மெர்லின்.

மணத்துணையை விட்டுப் பிரிந்திருக்கும்போது என்ன ஆபத்தை நீங்கள் எதிர்ப்படலாம்? (பாரா 11)

11. (அ) வேலைக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்ததால் ஒரு தம்பதியின் மண வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்பட்டது? (ஆ) குடும்பத்தோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை மெர்லின் எப்போது புரிந்துகொண்டார்?

11 அதுமட்டுமல்ல, மெர்லினுக்கு யெகோவாவோடு இருந்த பந்தம் பாதிக்கப்பட்டது. கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே போக முடிந்தது, சில சமயங்களில் அதுவும் முடியவில்லை. அதோடு, கணவர் ஜேம்ஸ் தன்னுடன் இல்லாததால், முதலாளியின் செக்ஸ் தொல்லையையும் சமாளிக்க வேண்டியிருந்தது. பிரச்சினைகள் வரும்போது அவற்றை மனம்விட்டுப் பேச துணை பக்கத்தில் இல்லாததால், மெர்லினும் சரி கணவன் ஜேம்ஸும் சரி மற்றவர்களிடம் தங்களுடைய உணர்ச்சிகளைக் கொட்டினார்கள். அதனால், இருவருமே ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடும் ஆபத்தில் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய துணைக்குத் துரோகம் செய்யாவிட்டாலும் அவர்களுடைய மண வாழ்க்கை ஆட்டங்காணும் நிலையிலிருந்தது. ஒருவரையொருவர் பிரிந்திருந்ததால், உணர்ச்சிப்பூர்வ தேவைகளையும் பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற பைபிள் ஆலோசனையைப் பின்பற்ற முடியவில்லை என்பதை மெர்லின் உணர்ந்தார். இருவரும் அன்னியோன்யமாக நேரம் செலவிடவோ ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையும் காட்டவோ முடியவில்லை. (உன். 1:2; 1 கொ. 7:3, 5) தங்களுடைய மகனோடு சேர்ந்து யெகோவாவை வழிபடவும் முடியவில்லை. “யெகோவாவின் மகா நாள்ல நாங்க தப்பிக்கணும்னா குடும்ப வழிபாடு ரொம்ப முக்கியங்கறத ஒரு மாநாட்டுல கேட்டப்போ நான் திரும்ப வீட்டுக்குப் போயே ஆகணும்னு புரிஞ்சுக்கிட்டேன்” என்கிறார் மெர்லின். அவர் தன்னுடைய ஆன்மீக வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் புதுப்பிக்க வேண்டியிருந்தது.

ஆலோசனைகள்—நல்லவையும், கெட்டவையும்

12. குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்களுக்கு என்ன பைபிள் ஆலோசனை கொடுக்கலாம்?

12 வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்ப மெர்லின் தீர்மானித்தபோது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கொடுத்தார்கள். அங்கிருந்த சபை மூப்பர்கள், அவருடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் பாராட்டினார்கள். ஆனால், மெர்லினைப் போலவே துணையையும் பிள்ளைகளையும் விட்டுவந்தவர்கள் அவரைப் பாராட்டவில்லை. மாறாக, அவருடைய எண்ணத்தை மாற்ற முயன்றார்கள். “நீங்க போயிட்டீங்கனா பணத்துக்கு என்ன செய்வீங்க? சீக்கிரத்திலேயே திரும்ப வரத்தான் போறீங்க” என்று சொன்னார்கள். இப்படி ஆலோசனை கொடுப்பதற்குப் பதிலாக, “இளம் பெண்கள் தங்களுடைய கணவர்மீதும் பிள்ளைகள்மீதும் அன்புள்ளவர்களாகவும் . . . வீட்டு வேலைகள் செய்கிறவர்களாகவும்,” அதாவது தங்களுடைய வீட்டில் வேலை செய்கிறவர்களாகவும், இருக்க வேண்டுமென்றே சக கிறிஸ்தவர்கள் ஆலோசனை கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, ‘கடவுளுடைய வார்த்தை பழிப்பேச்சுக்கு உள்ளாகாது.’தீத்து 2:3-5-ஐ வாசியுங்கள்.

13, 14. குடும்பத்தாரைவிட யெகோவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு கிறிஸ்தவருக்கு ஏன் விசுவாசம் தேவை? உதாரணம் கொடுங்கள்.

13 வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் அநேகர், பாரம்பரியத்திற்கும் உறவினர்களுக்கும் விசேஷமாக  பெற்றோர்களுடைய விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தரும் கலாச்சாரங்களில் வளர்ந்தவர்கள். யெகோவாவின் விருப்பத்துக்கு முரணான ஒரு ஆலோசனையை குடும்பத்தார் கொடுக்கும்போது, அதற்கு அடிபணியாமலிருக்க ஒரு கிறிஸ்தவருக்கு பலமான விசுவாசம் தேவை.

14 கேரன் என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். “நானும் என் கணவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துட்டு இருந்த சமயத்துல, என் பையன் டான் பிறந்தான். நான் அப்போதான் பைபிள் படிக்க ஆரம்பிச்சிருந்தேன். நாங்க ஓரளவுக்கு சம்பாதிக்கிறவரைக்கும் டானை என் அப்பா, அம்மாகிட்ட விடணும்னு என் குடும்பத்துல இருக்குற எல்லாரும் எதிர்பார்த்தாங்க” என்கிறார் அவர். மகனை தானே வளர்க்க கேரன் முடிவெடுத்தபோது, அவருடைய உறவினர்களும், கணவரும் அவரை சோம்பேறி என்று சொல்லி ஏளனம் செய்தார்கள். “கொஞ்சம் வருஷத்துக்கு டானை என் அப்பா, அம்மாகிட்ட விடறதுல என்ன தப்புனு நான்கூட நெனச்சேன். ஆனா, என் பையனை வளர்க்குற பொறுப்பை யெகோவா என்கிட்டயும் என் கணவர்கிட்டயும்தான் கொடுத்திருக்காரு” என்கிறார் கேரன். அவர் மறுபடியும் கர்ப்பமானபோது, சத்தியத்தில் இல்லாத அவருடைய கணவர் அதைக் கலைத்துவிடுமாறு கட்டாயப்படுத்தினார். டானை வளர்க்கும் விஷயத்தில் ஏற்கெனவே உறுதியான தீர்மானம் எடுத்திருந்ததால், இப்போதும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்க விசுவாசம் அவருக்கு உதவியது. இப்போது கணவரோடும் பிள்ளைகளோடும் கேரன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒருவேளை, கேரன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை அல்லது ஒரு பிள்ளையைக்கூட அப்பா, அம்மாவிடம் விட்டிருந்தால், மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

15, 16. (அ) குழந்தைப் பருவத்தில் பாட்டியிடம் விடப்பட்ட ஒரு சகோதரியின் அனுபவத்தைச் சொல்லுங்கள். (ஆ) அவருடைய மகள் விஷயத்தில் அவர் ஏன் வித்தியாசமான தீர்மானம் எடுத்தார்?

15 விக்கி என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். “கொஞ்ச வருஷம் நான் என் பாட்டிகிட்ட வளர்ந்தேன். என் தங்கச்சி அப்பா, அம்மாகிட்ட இருந்தா. மறுபடியும் நான் அப்பா, அம்மாகிட்ட வந்தப்போ அவங்கமேல எனக்கிருந்த பாசம் குறைஞ்சிடுச்சு. என் தங்கச்சி அவங்ககிட்ட சகஜமா பேசினா, அவங்களை பாசமா அணைச்சிகிட்டா, ரொம்ப நெருக்கமா இருந்தா. ஆனா, என்னால அப்படி இருக்க முடியல. அப்பா, அம்மாவோட எனக்கு ஒட்டுறவு இல்லாத மாதிரி இருந்துச்சு. வளர்ந்து ஆளான பிறகுகூட என்னோட உணர்ச்சிகளை அவங்ககிட்ட வெளிப்படையா காட்ட முடியல. நானும் என் தங்கச்சியும் அப்பா, அம்மாவை வயசான காலத்துல பார்த்துக்குறதா சொல்லியிருக்கோம். நான் கடமையுணர்ச்சியோடு மட்டுந்தான் அவங்கள பார்த்துக்க முடியும். ஆனா, என் தங்கச்சியால பாசத்தோட பார்த்துக்க முடியும்” என்கிறார் விக்கி.

16 “என் அம்மா என்னை பாட்டிகிட்ட விட்டமாதிரி, இப்போ என் மகளை அவங்ககிட்ட விடணும்னு நினைக்கிறாங்க. ஆனா, நான் நாசூக்கா அதை மறுத்துட்டேன். நானும் என் கணவரும் என் மகளை யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி வளர்க்கணும்னு ஆசைப்படறோம். அவளோட எனக்கு இருக்குற உறவை கெடுத்துக்க நான் விரும்புல” என்கிறார் விக்கி. பணம் சம்பாதிப்பதையும் குடும்பத்தாரின் விருப்பங்களையும்விட யெகோவாவுக்கும் அவருடைய ஆலோசனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்பதை விக்கி அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். “ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு [அதாவது, கடவுளுக்கும் செல்வத்துக்கும்] அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.—மத். 6:24; யாத். 23:2.

நம்முடைய முயற்சிகளை யெகோவா “வாய்க்கப்பண்ணுகிறார்”

17, 18. (அ) கிறிஸ்தவர்கள் கடவுள் கொடுத்துள்ள என்ன வாக்குறுதிகளை நம்பலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திக்கப் போகிறோம்?

17 நாம் கடவுளுடைய அரசாங்கத்திற்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால், நம்முடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதாக யெகோவா உறுதியளித்திருக்கிறார். (மத். 6:33) நாம் என்ன சவால்களைச் சந்தித்தாலும், பைபிள் நியமங்களை விட்டுக்கொடுக்காமலேயே அதைச் சமாளிப்பதற்கு ‘வழிசெய்வதாகவும்’ அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.) நாம் அவரிடம் ஜெபம் செய்வதன் மூலமும், அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் அவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டலாம். (சங். 37:5, 7) அவருடைய சேவைக்கு முதலிடம் கொடுக்க நாம் எடுக்கும் உள்ளப்பூர்வமான முயற்சிகளை அவர் பார்க்கும்போது, நாம் செய்யும் அனைத்தையும் ‘வாய்க்கப்பண்ணுவார்.’—ஆதியாகமம் 39:3-ஐ ஒப்பிடுங்கள்.

18 வேலைக்காக வெளிநாட்டுக்குப் போனதால் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படிச் சரி செய்யலாம்? குடும்பத்தைவிட்டுப் பிரியாமலேயே நம்முடைய குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள என்ன நடைமுறையான படிகளை எடுக்கலாம்? இந்த விஷயத்தில் நல்ல தீர்மானங்கள் எடுக்க மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம்? இந்த கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 1 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 4 யாக்கோபின் மகன்கள் குடும்பத்தைவிட்டு எகிப்துக்குச் சென்றபோதெல்லாம் மூன்று வாரங்களுக்கு மேல் அங்கு தங்கவில்லை. பிற்பாடு, யாக்கோபு தன் மகன்களோடு எகிப்திற்கு குடிமாறியபோது அவர்கள் தங்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டுதான் சென்றார்கள்.—ஆதி. 46:6, 7.

^ பாரா. 8 “வெளிநாட்டுக்குச் செல்வது—கனவுகளும் நிஜங்களும்” என்ற கட்டுரையை பிப்ரவரி 2013, ஆங்கில விழித்தெழு!-வில் பாருங்கள்.

^ பாரா. 9 வெளிநாட்டில் வேலை செய்வதற்காக துணையையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதால், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதாக பல நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. மணத்துணைக்கு துரோகம் செய்வது, ஓரினச்சேர்க்கையில் அல்லது முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது ஆகியவை இவற்றில் அடங்கும். பிள்ளைகளோ, பள்ளியில் பிரச்சினைகளை எதிர்ப்படலாம். கோபப்படுபவர்களாக, சோகமானவர்களாக, மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடலாம், தற்கொலை செய்யவும் துணியலாம்.