தைரியமாயிருங்கள் —யெகோவா உங்கள் துணை!
“‘யெகோவாவே எனக்குத் துணை’ . . . என்று நாம் மிகுந்த தைரியத்துடன் சொல்லலாம்.”—எபி. 13:6.
1, 2. வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் அநேகர் என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.)
“வெளிநாட்டுல எனக்கு கௌரவமான வேலையும் கைநிறைய சம்பாத்தியமும் இருந்துச்சு. ஆனா, யெகோவாவின் சாட்சிகளோட பைபிள் படிக்க ஆரம்பிச்சப்போ, எனக்கு முக்கியமான ஒரு பொறுப்பு இருக்குறத தெரிஞ்சுக்கிட்டேன். பணத் தேவைகள மட்டும் கவனிச்சா போதாது, குடும்பத்தோட இருந்து ஆன்மீக ரீதியில அவங்கள கவனிச்சுக்கிறதுதான் முக்கியங்கறத உணர்ந்தேன். அதனால சொந்த ஊருக்குத் திரும்புனேன்” என்கிறார் எட்வர்ட். *—எபே. 6:4.
2 சொந்த ஊருக்குத் திரும்புவதைத்தான் யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது எட்வர்டுக்குத் தெரியும். ஆனால், முந்தின கட்டுரையில் பார்த்த மெர்லின் சொன்னது போல, குடும்ப உறவுகளை மீண்டும் சரிசெய்வது எட்வர்டுக்குச் சவாலாக இருந்தது. குறைந்த வருமானத்தில் மனைவி, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சவாலையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றுவார்? சபையார் எந்தளவுக்கு உதவுவார்கள்?
ஆன்மீக மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வது
3. பெற்றோர் பக்கத்தில் இல்லாதது பிள்ளைகளை எப்படிப் பாதிக்கிறது?
3 “குழந்தைகளுக்கு அன்பும் அறிவுரையும் ரொம்ப தேவையா இருந்த சமயத்துல, நான் அவங்க பக்கத்துல இல்லாம போயிட்டேன். அவங்களுக்கு பைபிள் கதைகள சொல்லித்தர்றதுக்கு, அவங்களோட சேர்ந்து ஜெபம் செய்றதுக்கு, அவங்கள செல்லமா அரவணைக்குறதுக்கு, அவங்களோட விளையாடறதுக்கு அவங்க பக்கத்துல இல்லாம போயிட்டேன்” என்று ஒத்துக்கொள்கிறார் எட்வர்ட். (உபா. 6:7) “அப்பா எங்களோட இல்லாதது எதையோ இழந்த மாதிரி இருந்துச்சு. ஆனா, அவர் திரும்பி வந்தப்போ அவரோட முகத்தையும் குரலையும் வெச்சுதான் அப்பானு தெரிஞ்சுக்கிட்டோம். அவர் ஆசையா என்னை கட்டி அணைச்சப்பகூட என்னால அவரோட பாசத்தை உணரமுடியல” என்கிறார் அவருடைய மூத்த மகள் அன்னா.
4. குடும்பத்தாரிடமிருந்து வெகு நாட்கள் பிரிந்திருந்த ஒரு அப்பாவுக்கு தலைமை ஸ்தானத்தை நிறைவேற்றுவது ஏன் கஷ்டமாக இருக்கும்?
4 வெகு நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த ஒரு தகப்பனுக்கு, தலைமை ஸ்தானத்தைச் சரிவர நிறைவேற்றுவது கஷ்டமாக இருக்கும். எட்வர்டின் மனைவி ரூபி இப்படிச் சொல்கிறார்: “அப்பாவுக்கு அப்பாவா அம்மாவுக்கு அம்மாவா இருந்து நானே எல்லா தீர்மானங்களையும் எடுத்துகிட்டு இருந்தேன். அவர் வெளிநாட்டுல இருந்து திரும்பி வந்த பிறகு தலைமை ஸ்தானத்துக்கு கீழ்ப்படிஞ்சு நடக்க நான் பழக வேண்டியிருந்துச்சு. இப்போகூட சில சமயங்கள்ல, கணவர் வீட்டுலதான் இருக்குறாருனு எனக்கு நானே அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு.” (எபே. 5:22, 23) எட்வர்ட் இப்படிச் சொல்கிறார்: “என்னோட பிள்ளைங்க எல்லாத்தையும் அம்மாகிட்ட கேட்டு செஞ்சுட்டு இருந்தாங்க. அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்துதான் தீர்மானம் எடுக்கிறாங்கனு பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டியிருந்துச்சு. ஒரு கிறிஸ்தவ தகப்பனா எல்லாத்தையும் முன்நின்று செய்ய நான் கத்துக்க வேண்டியிருந்துச்சு.”
5. குடும்பத்தைவிட்டுப் போனதால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய ஒரு தகப்பன் என்ன செய்தார், அதன் பலன் என்ன?
5 குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யவும், குடும்பத்தாரை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தவும் எட்வர்ட் கடுமையாக உழைத்தார். “சத்தியத்தை பிள்ளைங்க மனசுல பதிய வைக்க வேண்டியிருந்துச்சு. யெகோவாவ நேசிக்கிறேன்னு வாயளவுல சொல்லாம அதை செயலில் காட்ட வேண்டியிருந்துச்சு” என்கிறார் எட்வர்ட். (1 யோ. 3:18) எட்வர்ட் எடுத்த முயற்சிக்கு யெகோவா பலனளித்தாரா? “ஒரு நல்ல அப்பாவா எங்களோட அன்னியோன்யமா இருக்குறதுக்கு அவர் செஞ்ச முயற்சியினால எங்க குடும்பத்துல பெரிய மாற்றத்த பார்க்க முடிஞ்சுது. சபையில அப்பாவுக்கு பொறுப்புகள் கிடைச்சப்போ எங்களுக்கு பெருமையா இருந்துச்சு. எங்களை யெகோவாகிட்ட இருந்து விலக்குறதுக்கு இந்த உலகம் முயற்சி செஞ்சுது. ஆனா, அப்பாவும் அம்மாவும் சத்தியத்தில உறுதியா இருந்ததுனால அவங்கள மாதிரி உறுதியா இருக்க நாங்களும் முயற்சி செஞ்சோம். எங்களைவிட்டு இனி போக மாட்டேனு அப்பா சொன்னாரு. சொன்ன மாதிரியே அவர் எங்களைவிட்டு போகவே இல்ல. ஒருவேளை அப்படி போயிருந்தா இன்னைக்கு நான் சத்தியத்திலயே இருந்திருக்க மாட்டேன்” என்று சொல்கிறாள் அன்னா.
பொறுப்பை ஏற்றுக்கொள்வது
6. போர் நடந்த சமயத்தில் பெற்றோர் சிலர் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார்கள்?
6 பெற்றோர் கூடவே இருக்க வேண்டும் என்றுதான் பிள்ளைகள் ஆசைப்படுவார்கள். உதாரணத்திற்கு, பால்கன் நாடுகளில் போர் நடந்தபோது அங்கு வாழ்ந்து வந்த யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் மோசமான சூழ்நிலையிலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். ஏன்? போரின் காரணமாக பெற்றோரால் வேலைக்குப் போக முடியவில்லை. அதனால், பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கவும், விளையாடவும், உட்கார்ந்து பேசவும் முடிந்தது. இதிலிருந்து பெற்றோர் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? பணம், பரிசுகள் ஆகியவற்றைவிட, பெற்றோர் அருகிலேயே இருப்பதைத்தான் பிள்ளைகள் விரும்புகிறார்கள். பைபிள் சொல்கிறபடி, பெற்றோரின் கவனிப்பும் பயிற்சியும் இருந்தால் பிள்ளைகள் பயனடைவார்கள்.—நீதி. 22:6.
7, 8. (அ) வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும் பெற்றோர் சிலர், ஏன் அதிர்ச்சியடைகிறார்கள்? (ஆ) பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட பிளவை எப்படிச் சரிசெய்யலாம்?
7 வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பெற்றோர் சிலர், பிள்ளைகள் தங்களிடம் நடந்துகொள்வதைப் பார்த்து அதிர்ச்சியடையலாம். ஏனென்றால், தாங்கள் திரும்பி வந்தது பிள்ளைகளுக்கு எரிச்சலாக இருக்கலாம். அல்லது தங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். அப்போது, “நான் உங்களுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டேன், கொஞ்சங்கூட உங்களுக்கு நன்றியே இல்லையே” என்று சொல்லி பெற்றோர் வருத்தப்படலாம். ஆனால், பிள்ளைகள் அப்படி நடந்துகொள்வதற்கு பெற்றோர் அவர்களைவிட்டு ரொம்ப நாள் பிரிந்திருந்ததுதான் காரணம். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்தப் பிளவை எப்படிச் சரிசெய்வது?
8 உங்கள் குடும்பத்தார் எப்படி உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பிறகு, உங்கள் குடும்பத்தாரிடம் பேசும்போது இந்தப் பிரச்சினைக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். உள்ளப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது பலனளிக்கும். நிலைமையைச் சரிசெய்வதற்கு நீங்கள் எடுத்துவரும் முயற்சியை உங்களுடைய மணத்துணையும் பிள்ளைகளும் பார்க்கும்போது உங்களை நன்றாகப் புரிந்துகொள்வார்கள். பொறுமையோடு தொடர்ந்து உழைத்தால், இழந்துபோன அன்பையும் மரியாதையையும் மீண்டும் சம்பாதிக்க முடியும்.
‘தன்னை நம்பியிருப்பவர்களைக் கவனிப்பது’
9. ‘நம்மை நம்பியிருப்பவர்களைக் கவனிப்பதற்காக’ ஏன் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்க வேண்டியதில்லை?
9 வயதான கிறிஸ்தவர்கள் தங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போகும்போது, பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ‘பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய’ வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் சொல்லியிருக்கிறார். அதே சமயத்தில், அன்றாடத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இருந்தால், அவற்றில் திருப்தியுடன் இருக்கும்படி எல்லா கிறிஸ்தவர்களையும் அவர் அறிவுறுத்தினார். வசதியாக வாழ்வதற்காகவும் எதிர்காலத்திற்காக சேர்த்துவைப்பதற்காகவும் பணம் சம்பாதிப்பதில் குறியாய் இருக்கக் கூடாது. (1 தீமோத்தேயு 5:4, 8; 6:6-10-ஐ வாசியுங்கள்.) பொருள், வசதி எல்லாம் இருந்தால்தான் ஒரு கிறிஸ்தவரால் ‘தன்னை நம்பியிருப்பவர்களைக் கவனிக்க’ முடியும் என்றில்லை; இந்தப் பொருள் வசதிகளெல்லாம் சீக்கிரத்தில் அழிந்துவிடும். (1 யோ. 2:15-17) ஆகவே, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் நம்முடைய குடும்பம் ‘உண்மையான வாழ்வை அடைய’ வேண்டுமென்றால் ‘செல்வத்தின் வஞ்சக சக்திக்கோ’ ‘வாழ்க்கையின் கவலைகளுக்கோ’ நாம் இடங்கொடுக்கக் கூடாது.—மாற். 4:19; லூக். 21:34-36; 1 தீ. 6:19.
10. கடனைத் தவிர்ப்பது ஏன் ஞானமானது?
10 நமக்கு ஓரளவு பணம் தேவை என்பது யெகோவாவுக்குத் தெரியும். ஆனால், அது நமக்கு பாதுகாப்பையோ வாழ்வையோ தராது; யெகோவா தரும் ஞானமே பாதுகாப்பையும் வாழ்வையும் தரும். (பிர. 7:12; லூக். 12:15) வெளிநாட்டுக்குப் போவதால் வரும் பாதிப்புகளை மக்கள் பெரும்பாலும் உணருவதில்லை; அதுமட்டுமல்ல, அங்கே போய் நிறைய சம்பாதிக்கலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாறாக, நிறைய ஆபத்துகளே இருக்கின்றன. அப்படிச் சென்றவர்கள் பலர், பெரும் கடனுடன்தான் திரும்பி வந்திருக்கிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக, கடன்பட்டவர்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். (நீதிமொழிகள் 22:7-ஐ வாசியுங்கள்.) ஆகவே, கடனுக்குள் மூழ்கிவிடாதபடி பார்த்துக்கொள்வதே ஞானமானது.
11. பணப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு பட்ஜெட் போடுவது எப்படி உதவும்?
11 குடும்பத்தோடு சேர்ந்திருக்க வேண்டுமென்றால் பண விஷயத்தில் கவனம் தேவை என்பதை எட்வர்ட் அறிந்திருந்தார். அதற்காக, அத்தியாவசிய தேவைகளை மனதில் வைத்து அவரும் அவருடைய மனைவியும் பட்ஜெட் போட்டார்கள். என்னதான் பட்ஜெட் போட்டாலும் அதையும் மீறி செலவு கையைக் கடிப்பது உண்மைதான். ஆனால், வீட்டில் எல்லோருமே ஒத்துழைத்ததால் தேவையில்லாத காரியங்களுக்காக யாருமே வீணாக பணத்தைச் செலவு செய்யவில்லை. * “உதாரணத்துக்கு, பிள்ளைகள தனியார் பள்ளிக்கூடத்துலருந்து அரசு பள்ளிக்கூடத்துக்கு மாத்துனேன்” என்கிறார் எட்வர்ட். ஆன்மீக விஷயங்களுக்கு பாதிப்பு வராத ஒரு வேலை அவருக்குக் கிடைப்பதற்காக, அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஜெபம் செய்தார்கள். அந்த ஜெபத்திற்கு யெகோவா எப்படிப் பதிலளித்தார்?
12, 13. குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக எட்வர்ட் என்ன செய்தார், எளிமையாக வாழ்வதற்கு அவர் எடுத்த தீர்மானத்தை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
12 “முதல் ரெண்டு வருஷத்துல, கொஞ்ச வருமானத்த வெச்சு குடும்பத்த ஓட்டுறது பெரும்பாடா இருந்துச்சு. சேர்த்து வெச்ச பணமெல்லாம் குறைய ஆரம்பிச்சுது. உடம்புல தெம்பே இல்லாம போயிடுச்சு. ஆனாகூட கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் தவறாம போனோம்” என்கிறார் எட்வர்ட். வீட்டைவிட்டு சில மாதங்களுக்கோ சில வருடங்களுக்கோ பிரிந்திருக்க வேண்டிய எந்தவொரு வேலையையும் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். “ஒரு வேலை இல்லைன்னா இன்னொரு வேலை செய்றதுக்காக நிறைய வேலைகள கத்துக்கிட்டேன்” என்று எட்வர்ட் சொல்கிறார்.
13 கடனை அடைக்க அவருக்கு ரொம்ப காலம் எடுத்ததால், வட்டியும் ஏறிக்கொண்டே போனது. யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி குடும்பத்தை நடத்துவதற்காக, அதையும் கட்ட அவர் தயாராய் இருந்தார். “இப்போ நான் சம்பாதிக்கிற பணம், வெளிநாட்டுல சம்பாதிச்ச பணத்துல பத்துல ஒரு பங்குகூட இல்ல. ஆனாலும் நாங்க யாரும் பட்டினியா இருந்ததில்ல. ‘யெகோவாவோட கை குறுகினது இல்லையே!’ சொல்லப்போனா, நாங்க பயனியர் செய்ய தீர்மானிச்சோம். ஆச்சரியம் என்னன்னா, அதுக்கப்புறம் எங்களோட பணக்கஷ்டம் குறைஞ்சுடுச்சு, குடும்பத்தோட தேவைகளையும் சுலபமா கவனிக்க முடிஞ்சுது” என்று எட்வர்ட் சொல்கிறார்.—ஏசா. 59:1.
உறவினர்களைச் சமாளிப்பது
14, 15. பணம் சம்பாதிப்பதற்கு முக்கியத்துவம் தருமாறு உறவினர்கள் சொல்லும்போது அதை எப்படிச் சமாளிக்கலாம்? இந்த விஷயத்தில் நல்ல முன்மாதிரி வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கலாம்?
14 உலகின் சில பகுதிகளில் வசிப்பவர்கள், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பணமும் பரிசும் கொடுக்க தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். “மத்தவங்களுக்கு கொடுக்குறது எங்க கலாச்சாரத்துல ஊறிப்போன பழக்கம். அப்படி கொடுக்கறது எங்களுக்கும் ரொம்ப சந்தோஷந்தான். அதுக்காக எப்பவும் கொடுத்துட்டு இருக்குறது கஷ்டம். என் குடும்பத்தோட ஆன்மீக காரியங்களுக்கு எந்த பிரச்சினையும் வராம என்னால எந்தளவுக்கு செய்ய முடியுமோ அந்தளவுக்குதான் செய்ய முடியுங்கறத என்னோட சொந்தபந்தங்கள்கிட்ட சாதுரியமா எடுத்து சொல்றேன்” என்கிறார் எட்வர்ட்.
15 வெளிநாட்டிலிருந்து திரும்புகிறவர்களும், வெளிநாட்டிற்குப் போவதற்கான வாய்ப்புகளை உதறித்தள்ளுபவர்களும், சொந்தக்காரர்களின் கோபத்துக்கும் ஏளனப் பேச்சிற்கும் வெறுப்புக்கும் ஆளாகின்றனர். பணத்துக்காக இனி இவர்களுடைய கையை எதிர்பார்க்க முடியாது என்பதால், இவர்களை அன்பற்றவர்கள் அல்லது சுயநலவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள். (நீதி. 19:6, 7) “பணம் சம்பாதிக்கிறதுக்காக ஆன்மீக காரியங்கள நாங்க விட்டுகொடுக்காம இருக்குறத பார்க்கும்போது யெகோவா எங்களுக்கு எவ்வளவு முக்கியங்கறத சொந்தக்காரங்க தெரிஞ்சுப்பாங்க. இல்லனா, எப்படித் தெரிஞ்சுப்பாங்க” என்கிறார் எட்வர்டின் மகள், அன்னா.—1 பேதுரு 3:1, 2-ஐ ஒப்பிடுங்கள்.
கடவுள்மீது விசுவாசம் வையுங்கள்
16. (அ) தவறான காரணங்களைச் சொல்லி ஒருவர் எப்படி தன்னையே ‘ஏமாற்றிக்கொள்ள’ வாய்ப்பிருக்கிறது? (யாக். 1:22) (ஆ) எப்படிப்பட்ட தீர்மானங்களை யெகோவா ஆசீர்வதிப்பார்?
16 கணவரையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு செல்வம் கொழிக்கும் ஒரு நாட்டிற்கு வேலைக்கு வந்த ஒரு சகோதரி, அங்கிருந்த மூப்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் இங்கே வர்றதுக்கு வீட்டுல எல்லாரும் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருந்துச்சு. என் கணவர் மூப்பரா சேவை செய்றதகூட விடவேண்டியிருந்துச்சு. அதனால, என்னோட வேலைய யெகோவா கண்டிப்பா ஆசீர்வதிப்பாருனு நம்புறேன்.” யெகோவாமீது விசுவாசம் வைத்து தீர்மானங்கள் எடுத்தால், அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார். ஆனால், அவருடைய சித்தத்திற்கு முரணாக எடுக்கப்படும் தீர்மானத்தை அவர் எப்படி ஆசீர்வதிப்பார், அதுவும் தவறான தீர்மானம் எடுப்பதற்காக அவர் கொடுத்த பொறுப்புகளையே விட்டுவிடும்போது எப்படி ஆசீர்வதிப்பார்?—எபிரெயர் 11:6-ஐயும் 1 யோவான் 5:13-15-ஐயும் வாசியுங்கள்.
17. தீர்மானம் எடுப்பதற்கு முன்பே ஏன் யெகோவாவின் வழிநடத்துதலை நாடவேண்டும், அதை நாம் எப்படிச் செய்யலாம்?
17 தீர்மானங்களை எடுத்ததற்குப் பின் அல்ல, எடுப்பதற்கு முன்பே யெகோவாவின் வழிநடத்துதலை நாடுங்கள். அவருடைய சக்திக்காக, ஞானத்திற்காக, ஆலோசனைக்காக ஜெபம் செய்யுங்கள். (2 தீ. 1:7) உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்தச் சூழ்நிலையிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியத் தயாராயிருக்கிறேன் என்றால், சிக்கனமாக வாழவேண்டிய சூழ்நிலையிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து எளிமையாக வாழ்வேனா? (லூக். 14:33) மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம், யெகோவா அளித்திருக்கும் வாக்குறுதிகளில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காட்டுங்கள். மூப்பர்கள் உங்களுக்காக தீர்மானம் எடுக்க முடியாது. ஆனால், நீங்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு உதவும் தீர்மானங்களை எடுக்க அவர்கள் துணைபுரிவார்கள்.—2 கொ. 1:24.
18. குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யாருடையது, எந்தச் சூழ்நிலைகளில் மற்றவர்கள் பண உதவி செய்யலாம்?
18 குடும்பத்தின் அன்றாட “பாரத்தை” சுமக்கும் பொறுப்பை, யெகோவா குடும்பத் தலைவருக்குக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுடைய வற்புறுத்தலுக்கும் சொந்த ஆசைக்கும் அடிபணிந்து, வெளிநாட்டிற்குப் போகாதவர்களை நாம் மனமார பாராட்ட வேண்டும், அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும். அதே சமயத்தில் பேரழிவுகள், வியாதி போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் சக கிறிஸ்தவர்கள் கஷ்டப்படும்போது, அவர்களிடம் அன்பையும் அனுதாபத்தையும் காண்பிக்க வேண்டும். (கலா. 6:2, 5; 1 பே. 3:8) அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் சக கிறிஸ்தவருக்கு பணம் கொடுத்து உதவ முடியுமா? உள்ளூரிலேயே அவருக்கு ஒரு வேலை தேடித் தர முடியுமா? அப்படிச் செய்தால், குடும்பத்தைவிட்டு அவர் தூர இடத்திற்கு போக வேண்டியிருக்காது.—நீதி. 3:27, 28; 1 யோ. 3:17.
யெகோவா உங்கள் துணை என்பதை மறந்து விடாதீர்கள்!
19, 20. யெகோவா உதவுவார் என நாம் ஏன் நம்பிக்கையோடிருக்கலாம்?
19 “பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்; ஏனென்றால், ‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். அதனால், ‘யெகோவாவே எனக்குத் துணை; நான் பயப்பட மாட்டேன், மனுஷன் எனக்கு என்ன செய்துவிட முடியும்?’ என்று நாம் மிகுந்த தைரியத்துடன் சொல்லலாம்” என்பதாக பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபி. 13:5, 6) இந்த அறிவுரையை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
20 “யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமான ஜனங்கனு நம்மளப் பற்றி மற்றவங்க அடிக்கடி சொல்றாங்க. வசதியில்லாத சகோதரங்ககூட அழகா உடை உடுத்தியிருக்கிறதையும் எந்த குறையும் இல்லாதவங்க மாதிரி தெரியறதையும் அவங்க பார்க்குறாங்க” என்று வளரும் நாடுகள் ஒன்றில் மூப்பராக பல வருடங்கள் சேவை செய்யும் ஒருவர் சொல்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைப்பவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதத்தைப் பற்றி இயேசு சொன்னது இவர்கள் விஷயத்தில் எவ்வளவு உண்மை! (மத். 6:28-30, 33) ஆம், உங்கள் பரலோகத் தந்தை யெகோவா, உங்களை நேசிக்கிறார்; உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்ததைத் தர விரும்புகிறார். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என்று அவருடைய வார்த்தை சொல்கிறது. (2 நா. 16:9) அவர் நம்முடைய நன்மைக்காக, குடும்பத்தை நடத்துவது பற்றியும் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வது பற்றியும் ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றைப் பின்பற்றும்போது, அவரை நாம் நேசிக்கிறோம், அவரை நம்புகிறோம் என்று அர்த்தம். “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”—1 யோ. 5:3.
21, 22. யெகோவாமீது நம்பிக்கை வைக்க நீங்கள் ஏன் தீர்மானித்திருக்கிறீர்கள்?
21 “என்னோட மனைவி, பிள்ளைகளவிட்டு பிரிஞ்சிருந்த காலத்தை ஈடுகட்டவே முடியாதுனு எனக்குத் தெரியும். அதுக்காக, அதையே நெனச்சு நெனச்சு கவலைப்படல. என்கூட வேலை பார்த்த நிறைய பேரு வசதியா இருந்தாலும், சந்தோஷமா இல்ல. நிறைய பிரச்சினைகள்ல சிக்கித் தவிக்கிறாங்க. ஆனா, நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்! இங்க இருக்குற நிறைய சகோதரங்க ஏழைங்களா இருந்தாலும், கடவுளுக்கு முதலிடம் கொடுக்குறத பார்க்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. இயேசு கொடுத்த வாக்கு எவ்வளவு உண்மைங்கிறத நிஜத்துல பார்க்குறோம்” என்று எட்வர்ட் சொல்கிறார்.—மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள்.
22 ஆகவே, தைரியமாயிருங்கள்! யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவர்மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் யெகோவாவையும் மனைவி, பிள்ளைகளையும் நேசித்தால் ஒரு நல்ல குடும்பத் தலைவராக இருப்பீர்கள்! ‘யெகோவா உங்கள் துணை’ என்பதை அனுபவத்தில் ருசிப்பீர்கள்!
^ பாரா. 1 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
^ பாரா. 11 “சிக்கனமாகச் செலவு செய்வது எப்படி?” என்ற அட்டைப்பட கட்டுரைகளை செப்டம்பர் 2011 ஆங்கில விழித்தெழு!-வில் பாருங்கள்.