Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே என்னுடைய உணவு’

‘கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே என்னுடைய உணவு’

உங்களுக்கு எது அதிக சந்தோஷத்தைத் தரும்? துணையோடு நேரம் செலவிடுவதா, குடும்பத்தைக் கவனிப்பதா அல்லது நண்பர்களோடு இருப்பதா? நம் அன்பானவர்களோடு சேர்ந்து சாப்பிடுவதும் தனி சந்தோஷம்தான். ஆனால், யெகோவாவின் ஊழியர்களான நமக்கு கடவுளுடைய சித்தத்தைச் செய்வது... அவருடைய வார்த்தையைப் படிப்பது... நற்செய்தியை அறிவிப்பது... போன்றவையே அளவில்லா சந்தோஷத்தைத் தருகின்றன.

“என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று தாவீது ராஜா படைப்பாளரைப் புகழ்ந்து பாடினார். (சங். 40:8) வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்தபோதிலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் தாவீது அகமகிழ்ந்தார். தாவீதைப் போல கடவுளுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள்.

சங்கீதம் 40:8-லுள்ள வார்த்தைகளை மேசியாவோடு, அதாவது கிறிஸ்துவோடு சம்பந்தப்படுத்தி அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “கிறிஸ்து உலகத்திற்கு வந்தபோது கடவுளை நோக்கி, ‘பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை, ஆனால் எனக்காக ஓர் உடலைத் தயார்ப்படுத்தினீர்கள். தகன பலிகளையும் பாவநிவாரண பலிகளையும் நீங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்று சொன்னார். அதோடு, ‘கடவுளே, இதோ! உங்கள் சித்தத்தைச் செய்வதற்கு வந்திருக்கிறேன்; புத்தகச் சுருளில் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ளது’ எனச் சொன்னேன்.”—எபி. 10:5-7.

இயேசு பூமியில் இருந்தபோது படைப்புகளைப் பார்த்து ரசித்தார்; நண்பர்களோடு நேரம் செலவிட்டார்; விருந்துகளில் கலந்துகொண்டார். (மத். 6:26-29; யோவா. 2:1, 2; 12:1, 2) ஆனாலும், பரலோகத் தகப்பனின் சித்தத்தைச் செய்வதிலேயே ஆர்வம் காட்டினார், அதில் அதிக சந்தோஷமும் கண்டார். “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவு” என்று சொன்னார். (யோவா. 4:34; 6:38) உண்மையான சந்தோஷத்தின் ரகசியத்தை இயேசுவிடமிருந்தே அவருடைய சீடர்கள் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் சந்தோஷத்தோடும் ஆர்வத்தோடும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்.—லூக். 10:1, 8, 9, 17.

‘சீடராக்குங்கள்’

“புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா  நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என்று சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டார். (மத். 28:19, 20) இந்தக் கட்டளையை நிறைவேற்ற, மக்களை எங்கெல்லாம் பார்க்கிறோமோ அங்கெல்லாம் அவர்களிடம் நாம் பிரசங்கிக்க வேண்டும், ஆர்வம் காட்டுபவர்களை மறுபடியும் சந்திக்க வேண்டும், அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டும். இது எவ்வளவு சந்தோஷம் தரும் வேலை!

மக்கள் அலட்சியம் செய்தாலும், தொடர்ந்து பிரசங்கிக்க அன்பு நம்மைத் தூண்டுகிறது

மக்கள் நற்செய்திக்கு ஆர்வம் காட்டினாலும் காட்டாவிட்டாலும், சந்தோஷத்தை இழக்காமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது. எதிர்ப்பின் மத்தியிலும் நாம் ஏன் தொடர்ந்து பிரசங்க வேலை செய்கிறோம்? கடவுள்மீதுள்ள அன்பும் மற்றவர்கள்மீதுள்ள அன்புமே இதைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. அதுமட்டுமா, நம்முடைய உயிரும் மற்றவர்களுடைய உயிரும் ஆபத்தில் இருக்கிறதே! (எசே. 3:17-21; 1 தீ. 4:16) சவால்கள் நிறைந்த பிராந்தியங்களில் பக்திவைராக்கியத்துடன் பிரசங்கித்த நம் சகோதரர்களின் அனுபவங்களை இப்போது பார்க்கலாம்.

சந்தர்ப்பங்களை நழுவ விடாதீர்கள்

ஊழியத்தில், சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியான கேள்விகளைக் கேட்கும்போது நல்ல பலன்களைக் காண முடியும். ஒரு நாள் காலை, பூங்காவில் உட்கார்ந்து ஒருவர் செய்தித்தாள் வாசிப்பதை அமல்யா பார்த்தார். அவரிடம் போய் ‘அதுல ஏதாவது நல்ல செய்தி இருக்கா?’ என்று கேட்டார். ‘அப்படி ஏதும் இல்லை’ என்று அவர் சொன்னபோது, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை உங்ககிட்ட சொல்ல விரும்புறேன்’ என்றார் அமல்யா. இது அவருடைய ஆர்வத்தைத் தூண்டியது; பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார். அந்தப் பூங்காவிலேயே மூன்று பைபிள் படிப்புகளை அவர் ஆரம்பித்திருக்கிறார்.

ஜேனஸ் என்பவருக்கு வேலை செய்யும் இடம்தான் ஊழியப் பிராந்தியம். அங்கிருந்த வாட்ச்மேனுக்கும் அவரோடு சேர்ந்து வேலை செய்கிற ஒருவருக்கும் காவற்கோபுரத்திலுள்ள ஒரு கட்டுரை பிடித்துப்போனதால், தொடர்ந்து பத்திரிகைகளைக் கொடுப்பதாகச் சொன்னார். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வரும் விதவிதமான கட்டுரைகள், கூடவேலை பார்க்கும் இன்னொருவரையும் கவர்ந்ததால், அவருக்கும் பத்திரிகைகளைக் கொடுத்தார். இதைப் பார்த்து இன்னொருவரும் பத்திரிகைகளைக் கேட்டார். இப்படி, வேலை செய்யும் இடத்தில் 11 பேரிடம் தொடர்ந்து பத்திரிகைகளைக் கொடுத்திருக்கிறார். “இதெல்லாம் யெகோவாவோட ஆசீர்வாதம்தான்!” என்று ஜேனஸ் சொல்கிறார்.

நம்பிக்கையான மனப்பான்மையுடன் இருங்கள்

ஒரு பயணக் கண்காணி கொடுத்த ஆலோசனையைக் கவனியுங்கள். ஊழியத்தில் சந்திப்பவரிடம் வெறுமனே “இன்னொரு நாள் வருகிறோம்” என்று சொல்லாமல், “பைபிள் படிப்பை எப்படி நடத்துறோம்னு உங்களுக்குக் காட்டட்டுமா?” அல்லது “உங்களை மறுபடியும் எப்போ சந்திக்கலாம்?” என்று கேட்கச் சொன்னார். இப்படிச் செய்ததால், ஒரு சபையில் ஒரே வாரத்தில் 44 பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொன்னார்.

தாமதிக்காமல் சொன்ன நாளிலேயே அல்லது சில நாட்களிலேயே மறுபடியும் போய்ச் சந்திப்பது சிறந்த பலன்களைத் தரும். அப்படிச் செய்தால், நல்மனமுள்ளவர்களுக்கு பைபிளைப்பற்றிக் கற்றுக்கொடுக்க நாம் ஆர்வமாய் இருப்பதைக் காட்டலாம். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டதற்கான  காரணத்தை ஒரு பெண்ணிடம் கேட்டபோது, “என்மேல உண்மையான அக்கறையும் அன்பும் காட்டுனாங்க, அதனாலதான் நான் படிக்க ஒத்துக்கிட்டேன்” என்றார்.

“பைபிள் படிப்பை எப்படி நடத்துறோம்னு உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேளுங்கள்

மடாயி என்ற சகோதரி, பயனியர் ஊழியப் பள்ளியை முடித்த சில நாட்களிலேயே, 15 பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார். இன்னும் ஐந்து பைபிள் படிப்புகளை மற்ற பிரஸ்தாபிகளிடம் ஒப்படைத்தார். அவருடைய பைபிள் மாணாக்கர்களில் அநேகர் கூட்டங்களுக்கு வந்தார்கள். இத்தனை பைபிள் படிப்புகளை அவரால் எப்படி ஆரம்பிக்க முடிந்தது? ஆர்வம் காட்டியவர்களை திரும்பத் திரும்பப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதை பயனியர் பள்ளியில் கற்றுக்கொண்டதுதான் அவருக்கு உதவியது. சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு அநேகருக்கு உதவிய மற்றொரு சகோதரி சொல்கிறார்: “மக்கள் யெகோவாவைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னா, விடாமல் மறுசந்திப்பு செய்றது ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சுகிட்டேன்.”

பைபிளைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் தவறாமல் மறுசந்திப்பு செய்வோம்

மறுசந்திப்பு செய்வதற்கும் பைபிள் படிப்பு நடத்துவதற்கும் ஊக்கமான முயற்சி அவசியம். முயற்சிக்குக் கிடைக்கும் பலன்களோ ஏராளம், ஏராளம்! கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதன்மூலம், ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடையவும்’ மீட்பு பெறவும் மற்றவர்களுக்கு உதவுகிறோம். (1 தீ. 2:3, 4) அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் ஈடிணையே இல்லை!