Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்

ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்

“ மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத். 7:12.

1. ஊழியத்தில் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியமா? உதாரணம் கொடுங்கள். (படத்தைப் பாருங்கள்.)

பிஜி தீவில் ஒரு தம்பதி, நினைவுநாள் அழைப்பிதழ்களைக் கொடுத்தார்கள். ஒரு பெண்ணுடைய வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே, அவர்களிடம் இருந்த இரண்டு குடைகளில் ஒன்றை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ஒரு குடையை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நினைவுநாள் அனுசரிப்புக்கு அந்தப் பெண் வந்திருந்ததைப் பார்த்து அவர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் பேசிய விஷயம் அந்தப் பெண்ணுக்கு அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால், அவர்கள் நடந்துகொண்ட விதம் அவரை ரொம்பவே கவர்ந்ததால், அங்கு வந்ததாகச் சொன்னார். அப்படி அன்பாக நடந்துகொள்ள அந்தத் தம்பதிக்கு எது உதவியது? இயேசுவின் பொன்மொழியைப் பின்பற்றியதே!

2. இயேசு என்ன பொன்மொழியைச் சொன்னார், அதை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

2 இயேசு என்ன பொன்மொழியைச் சொன்னார்? “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்” என்ற இயேசுவின் அறிவுரையே அந்தப் பொன்மொழி. (மத். 7:12) அதை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களோ, அதேபோல்  மற்றவர்களை நடத்துங்கள்.—1 கொ. 10:24.

3, 4. (அ) நாம் ஏன் மற்றவர்களிடம் பழகும்போதும் பொன்மொழியைக் கடைப்பிடிக்க வேண்டும்? விளக்குங்கள். (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப்பற்றிச் சிந்திப்போம்?

3 நம் சகோதர சகோதரிகளிடம் பழகும்போது மட்டுமே இந்தப் பொன்மொழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு சொன்னாரா? இல்லவே இல்லை. நம் எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென விவரித்த சமயத்தில்தான், இந்தப் பொன்மொழியைச் சொன்னார். (லூக்கா 6:27, 28, 31, 35-ஐ வாசியுங்கள்.) நம் எதிரிகளின் விஷயத்திலேயே இந்தப் பொன்மொழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றால், ஊழியத்தில் சந்திப்பவர்களின் விஷயத்தில் நாம் இன்னும் எந்தளவு அதிகமாக அதைக் கடைப்பிடிக்க வேண்டும்! அவர்களில் அநேகர் ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களாக’ இருக்கலாம்.—அப். 13:48.

4 ஊழியத்தில் ஈடுபடும்போது நினைவில் வைக்க வேண்டிய நான்கு கேள்விகளை இப்போது சிந்திக்கலாம்: ‘நான் யாரிடம் பேசுகிறேன்? எங்கு பேசுகிறேன்? எப்போது பேசுகிறேன்? எப்படிப் பேசுகிறேன்?’ மற்றவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களிடம் சிறந்த விதத்தில் பேச இந்தக் கேள்விகள் உதவும்.—1 கொ. 9:19-23.

யாரிடம் பேசுகிறேன்?

5. என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்?

5 ஊழியத்தில் வித்தியாசமான ஆட்களைச் சந்திக்கிறோம். அவர்கள் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், வெவ்வேறு பிரச்சினைகளை அனுபவிக்கலாம். (2 நா. 6:29) ஒருவரிடம் பேசும்போது, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “அவரோட இடத்துல நான் இருந்தா, அவரு என்னை எப்படி நடத்தணும்னு விரும்புவேன்? என்ன பத்தி தெரிஞ்சிக்காமலேயே நான் இப்படித்தான்னு யாராவது முடிவுகட்டினா எனக்கு எப்படி இருக்கும்? என்னை பற்றி அவர் முதல்ல தெரிஞ்சிக்கணும்னுதான விரும்புவேன்?” இதுபோன்ற கேள்விகளை யோசித்துப் பார்த்தால் மற்றவர்களிடம் நல்ல விதத்தில் நடந்துகொள்வோம், இயேசுவின் பொன்மொழியைப் பின்பற்றுவோம்.

6, 7. ஊழியத்தில் யாராவது நம்மிடம் கோபமாகப் பேசினால் என்ன செய்ய வேண்டும்?

6 கிறிஸ்தவர்களாக, நம்முடைய “பேச்சு எப்போதும் இனிமையாக” இருக்க வேண்டுமென்றே நாம் விரும்புவோம். (கொலோ. 4:6) நாம் எப்போதுமே சரியாகப் பேசுவோம் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில், எதையாவது சொல்லிவிட்டு, பின்பு வருத்தப்படுவோம். (யாக். 3:2) கஷ்டத்தில் இருக்கும்போது, யாரிடமாவது நாம் கோபமாக பேசிவிடலாம்; அதற்காக நம்மை “கடுகடுப்பாக பேசுபவர்” என்றோ “முன்யோசனையின்றி பேசுபவர்” என்றோ சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அந்த நேரத்தில், நம்மை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்போம்? அதேபோல் நாமும் மற்றவர்களைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

7 ஊழியத்தில் நாம் சந்திக்கும் நபர் கோபமாகப் பேசினால், அவர் ஏன் அப்படிப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, வேலையிலோ பள்ளியிலோ அவருக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருக்கலாம். அல்லது வியாதியால் கஷ்டப்படலாம். அதனால்தான் கோபமாக பேசியிருப்பார். இப்படிப்பட்டவர்களிடம் மென்மையாக, மரியாதையாக பேசுங்கள். அப்படிப் பேசியதால் நிறைய பேர் சத்தியத்தைக் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறார்கள்.—நீதி. 15:1; 1 பே. 3:15.

8. ‘எல்லா விதமான ஆட்களுக்கும்’ நாம் ஏன் நற்செய்தியைச் சொல்ல வேண்டும்?

8 ஊழியத்தில் எல்லா விதமான ஆட்களையும் சந்திக்கிறோம். உதாரணத்திற்கு, கடந்த சில வருடங்களில் மட்டுமே, “பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற காவற்கோபுர கட்டுரைகளில் 60-க்கும் அதிகமான அனுபவங்கள் வந்திருக்கின்றன. அவர்களில் பலர் திருடர்களாக, குடிகாரர்களாக, ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்களாக, போதைப்பொருளுக்கு அடிமைகளாக இருந்தவர்கள். இன்னும் சிலர், அரசியல்வாதிகளாக, மதத் தலைவர்களாக, சமுதாயத்தில் பேரும் புகழும் பெற்றவர்களாக இருந்தவர்கள். சிலரோ ஒழுக்கங்கெட்ட  வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இருந்தாலும், இவர்கள் எல்லோரும் நற்செய்திக்குச் செவிசாய்த்து, பைபிளைப் படித்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு சத்தியத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆகவே, ‘இவங்கெல்லாம் சத்தியத்தை கேட்கவே மாட்டாங்க’ என்று யாரையுமே தவறாக எடைபோடக் கூடாது. (1 கொரிந்தியர் 6:9-11-ஐ வாசியுங்கள்.) மாறாக, ‘எல்லா விதமான ஆட்களும்’ சத்தியத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.—1 கொ. 9:22.

எங்கு பேசுகிறேன்?

9. நாம் ஏன் மற்றவர்களுடைய வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்?

9 ஊழியத்தில் பொதுவாக ஆட்களை எங்கு சந்திக்கிறோம்? அவர்களுடைய வீடுகளில்தான். (மத். 10:11-13) பொதுவாக, நம்முடைய வீட்டில் பாதுகாப்பாக, யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்க விரும்புவோம். மற்றவர்கள் நம்முடைய வீட்டையும் உடைமைகளையும் மதித்து நடக்க வேண்டுமென எதிர்பார்ப்போம். ஏனென்றால், நம்முடைய வீடு நமக்கு முக்கியம். அதேபோல், நாமும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில், மற்றவர்களுடைய வீட்டையும் உடைமைகளையும் மதித்து நடக்க வேண்டும்.—அப். 5:42.

10. நாம் எப்படி ஊழியத்தில் சந்திப்பவர்களின் கோபத்தைக் கிளறிவிடாதபடி நடந்துகொள்ளலாம்?

10 இந்தப் பொல்லாத உலகில், முன்பின் தெரியாத யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களை மக்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். (2 தீ. 3:1-5) ஊழியத்தில் சந்திப்பவர்களுடைய சந்தேகத்தை நாம் அதிகரிக்கக் கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறீர்கள். வீட்டிலிருந்து யாருமே குரல் கொடுக்கவில்லை. அப்போது, ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கவோ யாராவது இருக்கிறார்களா என வீட்டுக்கு வெளியே சுற்றிப் பார்க்கவோ நினைக்கலாம். அப்படிச் செய்தால், வீட்டின் சொந்தக்காரர் கோபப்பட மாட்டாரா? அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? நாம் முழுமையாய்ச் சாட்சி கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். (அப். 10:42) அவர்கள் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடுதான் அங்கே போகிறோம். (ரோ. 1:14, 15) ஆனாலும், அவருடைய கோபத்தைக் கிளறிவிடாதபடி ஞானமாக நடந்துகொள்ள வேண்டும். “எங்களுடைய ஊழியத்தில் யாரும் குறை காணக்கூடாது என்பதற்காக நாங்கள் எவருக்கும் எவ்விதத்திலும் இடையூறு உண்டாக்காமல்” நடந்துகொள்கிறோம் என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொ. 6:3) மற்றவர்களுடைய வீடுகளுக்கும் அவர்களுடைய உடைமைகளுக்கும் மதிப்புக் கொடுக்கும்போது, அதைப் பார்த்து சிலர் சத்தியத்திடம் ஈர்க்கப்படலாம்.1 பேதுரு 2:12-ஐ வாசியுங்கள்.

மற்றவர்கள் சந்தேகப்படும்படி நடக்காதீர்கள் (பாரா 10)

எப்போது பேசுகிறேன்?

11. நம்முடைய நேரத்திற்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டுமென நாம் ஏன் எதிர்பார்க்கிறோம்?

11 கிறிஸ்தவர்களான நமக்கு எப்போதும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதையெல்லாம் செய்வதற்கு நேரத்தை முன்கூட்டியே கவனமாகத் திட்டமிடுகிறோம். (எபே. 5:16; பிலி. 1:10) நம்முடைய வேலைகளுக்கு நடுவில் ஏதாவது இடைஞ்சல் வந்தால், எரிச்சலாக இருக்கும். நம்மிடம் பேச வரும் ஒருவர் நமக்கு நிறைய வேலைகள் இருப்பதைப் புரிந்துகொண்டு, நம்முடைய நேரத்தை வீணடிக்கக் கூடாது என எதிர்பார்ப்போம். அப்படியென்றால், ஊழியத்தில் மற்றவர்களுடைய நேரத்தை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

12. ஆட்களை வீட்டில் எப்போது சந்திப்பது சிறந்தது?

12 ஆட்களை வீட்டில் சந்திப்பதற்கான சிறந்த நேரம் எது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். நம்முடைய பிராந்தியத்தில், பொதுவாக ஆட்கள் எப்போது வீட்டில் இருப்பார்கள், எந்தச் சமயத்தில் பொறுமையாகக் கேட்பார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். சில இடங்களில், மாலை ஊழியம் செய்வது அதிக பலன் தருகிறது. உங்களுடைய பிராந்தியத்திலும் மாலை நேரத்தில் ஊழியம் செய்வது பலனளிக்கும் என்றால், முயற்சி செய்து பாருங்களேன்! (1 கொரிந்தியர் 10:24-ஐ வாசியுங்கள்.) நம் சௌகரியத்தைப் பார்க்காமல், மற்றவர்களுக்கு வசதியான நேரத்தில் ஊழியம் செய்யும்போது யெகோவா நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்.

13. ஊழியத்தில் சந்திப்பவர்களுக்கு நாம் இன்னும் எப்படி மதிப்புக் காட்டலாம்?

 13 ஊழியத்தில் சந்திப்பவர்களுக்கு இன்னும் எப்படி மதிப்புக் காட்டலாம்? ஒருவர் நன்றாகக் கேட்கிறார் என்பதற்காக ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அவர் வேறு ஏதாவது முக்கியமான வேலையைச் செய்வதற்காக அந்த நேரத்தை ஒதுக்கியிருக்கலாம். ஒருவேளை நேரமில்லை என்று சொன்னால், சுருக்கமாய் சொல்லிவிடுவதாகச் சொல்லுங்கள்; சொன்னபடியே சுருக்கமாக முடித்துவிடுங்கள். (மத். 5:37) பேசி முடித்த பிறகு, மறுபடியும் எப்போது சந்தித்தால் அவருக்கு வசதியாக இருக்கும் என கேளுங்கள். “உங்கள திரும்பவும் வந்து பார்க்க ஆசப்படுறேன். வர்றதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன், இல்லனா, மெசேஜ் அனுப்புறேன்” என்று சொல்வது நல்ல பலன்களைத் தந்திருக்கிறது. இப்படி, பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தில் அவர்களைச் சந்திக்கும்போது நாம் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அவர் ‘தனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், அநேகர் மீட்புப் பெறுவதற்காக அவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாடினார்.’—1 கொ. 10:33.

எப்படிப் பேசுகிறேன்?

14-16. (அ) எதற்காக வந்திருக்கிறோம் என்பதை ஏன் தெளிவாகச் சொல்ல வேண்டும்? விளக்குங்கள். (ஆ) பயணக் கண்காணி ஒருவர் ஊழியத்தில் எப்படித் திறம்பட பேசுகிறார்?

14 முன்பின் தெரியாத ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப்பற்றிக் கேட்கிறார். ‘யாரு இவரு, இவருக்கு என்ன வேணும்’ என்று நீங்கள் யோசிப்பீர்கள். பேச்சை முடித்துக்கொள்ளவே விரும்புவீர்கள். ஆனால், அவர் தன்னுடைய பெயரைச் சொல்லிவிட்டு, ஊட்டச்சத்து துறையில் வேலை செய்வதாகவும், பயனுள்ள  சில விஷயங்களைச் சொல்ல விரும்புவதாகவும் சொல்கிறார். அப்போது அவர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பீர்கள். மற்றவர்கள் நம்மிடம் எதையும் மறைக்காமல், அதே சமயத்தில் கனிவோடு பேச வேண்டும் என்றுதான் நாம் எப்போதும் விரும்புவோம். ஊழியத்தில் சந்திப்பவர்களிடமும் இதே விதமாக எப்படிப் பேசலாம்?

15 அநேக பிராந்தியங்களில், நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்வது அவசியம். மக்களுக்குத் தெரியாத முக்கியமான விஷயத்தை நாம் சொல்லப் போகிறோம். ஆனால், நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், “இந்த உலகத்தில இருக்கிற பிரச்சினையை உங்களால சரிசெய்ய முடிஞ்சா, எதை முதல்ல சரிசெய்வீங்க?” என்று திடீரென கேட்டால் அவர் என்ன நினைப்பார்? எதற்காக அந்தக் கேள்வியைக் கேட்கிறோம் என்பது நமக்குத் தெரியும். அந்த நபருடைய மனதிலிருப்பதை தெரிந்துகொள்வதற்கும், பைபிளிலிருந்து விளக்குவதற்குமே அப்படிக் கேட்கிறோம். ஆனால், ‘யாரு இவங்க, ஏன் என்கிட்ட இந்தக் கேள்விய கேட்குறாங்க? எதுக்கு இதெல்லாம் கேட்குறாங்க?’ என்று அவர் யோசிப்பார். அவரை இப்படித் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கக் கூடாது. (பிலி. 2:3, 4) அப்படியென்றால், நாம் என்ன செய்யலாம்?

16 ஒரு பயணக் கண்காணிக்குப் பலனளித்த அணுகுமுறையைக் கவனியுங்கள். ஊழியத்தில் சந்திப்பவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை அவரிடம் கொடுத்து, இப்படிச் சொல்வார்: “இங்க இருக்கிற எல்லாருக்கும் இந்தத் துண்டுப்பிரதிய கொடுக்குறோம். நிறைய பேரோட மனதைக் குடைகிற ஆறு கேள்விகள் இதுல இருக்கு. இதுல இருக்கிற கேள்விகள நீங்க எப்போதாவது கேட்டிருக்கீங்களா?” இப்படி, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டால், நாம் சந்திப்பவர் குழம்பிப்போக மாட்டார்; நம்மால் தொடர்ந்து பேச முடியும் என்று அவர் சொல்கிறார். அடுத்ததாக, அதிலுள்ள ஒரு கேள்வியை அந்த நபர் தேர்ந்தெடுத்தால், துண்டுப்பிரதியைத் திறந்து அதைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை விளக்குவார். இல்லையென்றால், அவரே அதில் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதைப்பற்றி விளக்குவார். அந்த நபர் தர்மசங்கடமாக உணராதபடி பயணக் கண்காணி பார்த்துக்கொள்வார். இதேபோல், உரையாடலை ஆரம்பிக்க பல வழிகள் இருக்கின்றன. சில இடங்களில், நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொல்வதற்குமுன் மக்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ற விதமாக சில விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். எனவே, உங்களுடைய பிராந்தியத்திலிருக்கும் மக்களுக்குத் தகுந்த விதத்தில் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பொன்மொழியைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்

17. பொன்மொழியை ஊழியத்தில் எப்படியெல்லாம் பின்பற்றலாம்?

17 இயேசுவின் பொன்மொழியை ஊழியத்தில் எப்படியெல்லாம் பின்பற்றலாமென கற்றுக்கொண்டோம். ஒவ்வொரு நபரையும் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தகுந்த விதத்தில் பேச வேண்டும். மற்றவர்களுடைய வீட்டையும் உடைமைகளையும் மதித்து நடக்க வேண்டும். மக்களுக்கு வசதியான நேரத்தில் ஊழியத்திற்குப் போக வேண்டும். மக்களுக்கு ஏற்ற விதத்தில் பேச வேண்டும்.

18. இயேசுவின் பொன்மொழியைக் கடைப்பிடிப்பதால் வரும் பலன்கள் என்ன?

18 மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோமோ, அதேபோல் ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் நடந்துகொண்டால் பலன்கள் ஏராளம். அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்ளும்போது, பைபிள் நியமங்களை நாம் பின்பற்றுகிறோம்; யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறோம். (மத். 5:16) மற்றவர்களிடம் நாம் மரியாதையுடன் நடந்துகொண்டால் நிறைய பேர் சத்தியத்திடம் ஈர்க்கப்படுவார்கள். (1 தீ. 4:16) நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, ஊழியத்தில் மிகச் சிறந்ததைச் செய்கிறோம் என்ற திருப்தி கிடைக்கும். (2 தீ. 4:5) “நற்செய்தியை நான் மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்கிறேன்” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை நாம் அனைவரும் பின்பற்றுவோமாக! (1 கொ. 9:23) ஆகவே, ஊழியத்தில் நாம் எப்போதும் இயேசுவின் பொன்மொழியைக் கடைப்பிடிப்போமாக!