Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?

யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?

“யெகோவாவுடைய கண்கள் நீதிமான்களைப் பார்க்கின்றன.” —1 பே. 3:12.

1. இஸ்ரவேலர்களுக்குப் பதிலாகத் எந்தப் புதிய அமைப்பை யெகோவா தேர்ந்தெடுத்தார்? (படத்தைப் பாருங்கள்.)

யெகோவா முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையை ஒழுங்குபடுத்தினார். இன்று நம்மையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறார். போன கட்டுரையில் பார்த்தபடி, கடவுள் இஸ்ரவேலர்களைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர்கள் யெகோவாவிற்குக் கீழ்ப்படியாமல் போனபோது அவர்களை நிராகரித்தார். பின்னர், கிறிஸ்துவின் சீடர்கள் அடங்கிய புதிய அமைப்பைத் தேர்ந்தெடுத்தார். கி.பி. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் புதிய அமைப்பு பாதுகாக்கப்பட்டது. (லூக். 21:20, 21) முதல் நூற்றாண்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் படம் பிடித்துக் காட்டின. விரைவில் சாத்தானின் உலகம் துடைத்தழிக்கப்படும், யெகோவாவின் மக்கள் காப்பாற்றப்படுவார்கள். (2 தீ. 3:1) இதை எப்படி நம்பலாம்?

2. ‘மிகுந்த உபத்திரவத்தை’ பற்றி இயேசு என்ன சொன்னார், அது எப்போது ஆரம்பமாகும்?

2 தம்முடைய பிரசன்னத்தையும் இந்த உலகத்தின் முடிவையும்பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதன் பின்பும் வரப்போவதில்லை.” (மத். 24:3, 21) பொய் மத உலக பேரரசான “மகா பாபிலோன்” அழிக்கப்படும்போது இந்த உபத்திரவம் ஆரம்பமாகும். யெகோவா மனித அரசாங்கங்களைக்கொண்டு,  பொய் மதத்தை அழிப்பார். (வெளி. 17:3-5, 16) அடுத்தது என்ன நடக்கும்?

சாத்தானின் தாக்குதலுக்குப் பிறகு அர்மகெதோன்

3. பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு யெகோவாவின் மக்களுக்கு என்ன நடக்கும்?

3 பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு சாத்தானும் அவனுடைய ஆட்களும் யெகோவாவுடைய மக்களைத் தாக்குவார்கள். ‘மாகோகு தேசத்தானாகிய கோகுவைப்பற்றி’ பைபிள் இப்படிச் சொல்கிறது: “பெருங்காற்றைப்போல் எழும்பிவருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.” யெகோவாவின் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததுபோல் தோன்றுவதால் அவர்களைச் சுலபமாகத் தாக்கலாம் என்று சாத்தான் நினைக்கலாம். அது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்!—எசே. 38:1, 2, 9-12.

4, 5. தம் மக்களைச் சாத்தான் தாக்கும்போது யெகோவா என்ன செய்வார்?

4 தம் மக்களைச் சாத்தான் தாக்கும்போது யெகோவா என்ன செய்வார்? சர்வலோகப் பேரரசரான யெகோவா தம் மக்களின் சார்பாகப் போரிடுவார். தம் மக்களைத் தாக்குவது தம்மையே தாக்குவதுபோல் யெகோவா நினைக்கிறார். (சகரியா 2:8-ஐ வாசியுங்கள்.) அதனால், நம் பரலோகத் தகப்பன் சரியான சமயத்தில் நம்மைக் காப்பாற்றுவார். அதன் பிறகு ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போரில்,’ அதாவது அர்மகெதோனில், சாத்தானின் உலகத்தை அழித்துவிடுவார்.—வெளி. 16:14, 16.

5 “தேசங்களுக்கு எதிராக யெகோவா தீர்ப்பு வழங்க போகிறார். எல்லா மக்களையும் அவர் நியாயந்தீர்க்கப் போகிறார். துன்மார்க்கரைப் பட்டயத்தால் கொன்று குவிப்பார். நாட்டுக்கு நாடு பேரழிவு பரவ போகிறது. பூமியின் எல்லைகளிலிருந்து மகா புயல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவங்கிப் பூமியின் மறுமுனைமட்டும் யெகோவாவால் கொலை செய்யப்பட்டவர்கள் கிடப்பார்கள்; அவர்களுக்காக யாரும் அழ மாட்டார்கள். அவர்களின் உடல்களை யாரும் அடக்கம்பண்ண மாட்டார்கள். பூமியின்மேல் எருவாவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எரே. 25:31-33, NW ) இந்தப் பொல்லாத உலகம் அர்மகெதோனில் அழிக்கப்படும். ஆனால், யெகோவாவின் மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

யெகோவாவின் அமைப்பு செழித்தோங்குகிறது

6, 7. (அ) ‘திரள் கூட்டத்தார்’ எங்கிருந்து வந்தவர்கள்? (ஆ) யெகோவாவின் அமைப்பு எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது?

6 யெகோவாவுடைய ஆசீர்வாதம் இருப்பதால்தான் அவருடைய அமைப்பு செழித்தோங்குகிறது. அதைக் குறித்து பைபிள் சொல்கிறது: “யெகோவாவுடைய கண்கள் நீதிமான்களைப் பார்க்கின்றன, அவருடைய காதுகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.” (1 பே. 3:12) இங்கு ‘நீதிமான்கள்’ என்பது ‘மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைக்கும்’ ‘திரள் கூட்டமான மக்களை’ குறிக்கிறது. (வெளி. 7:9, 14) இந்த வசனத்தில், வெறும் “கூட்டம்” என்று சொல்லாமல் “திரள் கூட்டம்” என்று சொல்வதைக் கவனியுங்கள். அப்படியென்றால் எண்ணற்ற மக்கள் தப்பிப்பிழைப்பார்கள். நீங்களும் தப்பிப்பிழைப்பீர்களா?

7 எல்லா தேசத்திலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்பட்டவர்கள்தான் இந்த திரள் கூட்டத்தார். பிரசங்க வேலை மூலமாக இவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று இயேசு சொன்னார். (மத். 24:14) கடைசி நாட்களில் வாழ்வதால் பிரசங்க வேலை கடவுளுடைய மக்களுக்கு முக்கியமானது. யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிறார்கள், கற்பிக்கிறார்கள். அதனால், லட்சக்கணக்கான மக்கள் கடவுளுடைய “சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” யெகோவாவை வழிபட கற்றுக்கொண்டிருக்கிறார்கள். (யோவா. 4:23, 24) உதாரணத்திற்கு, 2003-லிருந்து  2012 வரையான ஊழிய ஆண்டுகளில் 27,07,000-ற்கும் அதிகமானோர் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இன்று 79,00,000 சாட்சிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் சாட்சிகளுடன் சேர்ந்து கிறிஸ்துவின் மரண நினைவுநாளில் கலந்துகொள்கிறார்கள். இதில் நம்முடைய சாதனை எதுவுமில்லை, சத்திய விதையை “வளரச் செய்கிற கடவுளுக்கே பெருமை சேரும்.” (1 கொ. 3:5-7) ஒவ்வொரு ஆண்டும் திரள் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

8. இன்று யெகோவாவின் அமைப்பில் ஏற்பட்டுள்ள அபார அதிகரிப்பிற்குக் காரணம் என்ன?

8 யெகோவா தம் அமைப்பை ஆசீர்வதிப்பதால் அவருடைய ஊழியர்களின் எண்ணிக்கையில் அபார அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. (ஏசாயா 43:10-12-ஐ வாசியுங்கள்.) இதை பைபிள் முன்னறிவித்தது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசா. 60:22) ‘கடவுளுடைய இஸ்ரவேலர்கள்,’ அதாவது பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், ஒரு காலத்தில் “சின்னவன்” போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள். ஆனால், யெகோவா பிரசங்க வேலையை ஆசீர்வதித்ததால் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. (கலா. 6:16) காலப்போக்கில் பூமிக்குரிய நம்பிக்கையுள்ள லட்சக்கணக்கானோரும் சேர்ந்துகொண்டதால் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது.

நம்மிடம் யெகோவா எதை எதிர்பார்க்கிறார்?

9. ஒளிமயமான எதிர்காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

9 நாம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி திரள் கூட்டத்தினராக இருந்தாலும் சரி, கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும். அதற்கு யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (ஏசா. 48:17, 18) உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஒழுக்க விஷயத்தில், வியாபாரத்தில், பிள்ளை வளர்ப்பில், மற்றவர்களை நடத்தும் விதத்தில் சட்டங்களைக் கொடுத்து, யெகோவா அவர்களைப் பாதுகாத்தார். (யாத். 20:14; லேவி. 19:18, 35-37; உபா. 6:6-9) இன்றும் நாம் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் நன்மை அடைவோம். அவருடைய சட்டங்கள் பாரமானவை அல்ல. (1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.) அப்படிக் கீழ்ப்படியும்போது, இஸ்ரவேலர்களைப் போலவே பாதுகாப்பையும் பெறுவோம், ‘விசுவாசத்தில் ஆரோக்கியமானவர்களாக’ இருப்போம்.—தீத். 1:13.

10. பைபிளைப் படிப்பதற்கும் குடும்ப வழிபாட்டிற்கும் நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்?

10 கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகம், பல விதங்களில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, இன்று நம்மால் பைபிள் சத்தியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்” என்ற வார்த்தைகள் இன்று நிறைவேறுகிறது. (நீதி. 4:18) ஆனால், உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிள் சத்தியங்களின் புதிய விளக்கங்களை நான் தெரிந்து வைத்திருக்கிறேனா? பைபிளைத் தினமும் படிக்கிறேனா? பிரசுரங்களையும் ஆர்வமாகப் படிக்கிறேனா? என் வீட்டில் தவறாமல் குடும்ப வழிபாடு நடக்கிறதா?’ இதையெல்லாம் செய்வது அவ்வளவு கடினமல்ல, நேரம் ஒதுக்கினால் போதும். மிகுந்த உபத்திரவம் சீக்கிரம் வரப்போவதால் பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்வதும் அதைக் கடைப்பிடிப்பதும் ஆன்மீக முன்னேற்றம் செய்வதும் எந்தளவு முக்கியம்!

11. அன்றிருந்த வருடாந்தரப் பண்டிகைகளும் நம் காலத்தில் இருக்கும் கூட்டங்களும் மாநாடுகளும் எந்த விதத்தில் பலன் அளித்திருக்கின்றன?

11 அப்போஸ்தலன் பவுலுடைய வார்த்தையைப் பின்பற்றும்படி அமைப்பு நம்மை உற்சாகப்படுத்துகிறது: “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர்  ஊக்கப்படுத்துவோமாக; நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக.” (எபி. 10:24, 25) இஸ்ரவேலர்கள் வருடாந்தரப் பண்டிகைகளின்போதும் வழிபாட்டிற்காகக் கூடி வரும்போதும் ஆன்மீக விதத்தில் பலமடைந்தார்கள். அதுமட்டுமில்லாமல், நெகேமியாவின் காலத்தில் கொண்டாடிய கூடாரப் பண்டிகைகள் நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுகளாக இருந்தன. (யாத். 23:15, 16; நெ. 8:9-18) நாமும் இன்று நம்முடைய கூட்டங்களிலிருந்தும் மாநாடுகளிலிருந்தும் அதிக பலனடைகிறோம். ஆன்மீக விதத்தில் பலமாகவும் சந்தோஷமாகவும் இருக்க இந்த ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்துவோமாக!—தீத். 2:2.

12. பிரசங்க வேலையை நாம் எப்படிக் கருத வேண்டும்?

12 யெகோவாவின் அமைப்பின் பாகமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் கடவுளுடைய “நற்செய்தியை அறிவிக்கும் பரிசுத்த வேலையில்” ஈடுபடும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். (ரோ. 15:16) இந்த “பரிசுத்த வேலையில்” ஈடுபடும்போது, “பரிசுத்தராக” இருக்கும் யெகோவாவின் “சக வேலையாட்களாக” ஆகிறோம். (1 கொ. 3:9; 1 பே. 1:15) பிரசங்க வேலையின் மூலமாக யெகோவாவின் புனிதப் பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம். “சந்தோஷமுள்ள கடவுள்” மகத்தான நற்செய்தியை நம்மிடம் ஒப்படைத்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—1 தீ. 1:11.

13. ஆன்மீக விதத்தில் பலமாக இருக்கவும் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும்?

13 கடவுளுக்கும் அவருடைய அமைப்பின் எல்லா ஏற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் ஆன்மீக விதத்தில் பலப்படுவோம். இதைத்தான் யெகோவா விரும்புகிறார். மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னதைக் கவனியுங்கள்: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.” (உபா. 30:19, 20) யெகோவாவின் சித்தத்தின்படி செய்து, அவரை நேசித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரை விட்டு விலகாமல் இருந்தால் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

14. யெகோவாவுடைய அமைப்பைக் குறித்து ஒரு சகோதரர் எப்படி உணர்ந்தார்?

14 கடவுளுக்கும் அவருடைய அமைப்பிற்கும் உண்மையாய் இருந்த சகோதரர் ப்ரைஸ் ஹியூஸ் இப்படி எழுதினார்: “1914-க்கு முன்பிருந்தே சத்தியத்தில் இருப்பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். . . . யெகோவாவுடைய அமைப்பு சொல்கிறபடி நடப்பதும், அமைப்போடு சேர்ந்து செயல்படுவதுமே என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நம்முடைய இருதயத்தை நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொந்த அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டேன். அதனால், தொடர்ந்து அமைப்பு சொல்வதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தேன். யெகோவாவுடைய ஆசீர்வாதத்தைப் பெற வேறு எந்தக் குறுக்கு வழியுமே இல்லை!”

அமைப்போடு தொடர்ந்து முன்னேறுங்கள்

15. மாற்றங்கள் ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? உதாரணம் தருக.

15 யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்கு தேவையென்றால் அவருடைய அமைப்பிற்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும். முக்கியமாக, பைபிள் சத்தியங்களின் புதிய விளக்கங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைச் சிந்தித்துப் பாருங்கள்: ஆயிரக்கணக்கான யூத கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்திற்குப் பிறகும் திருச்சட்டத்தை வைராக்கியமாகப் பின்பற்றி வந்தார்கள். (அப். 21:17-20) ஆனால், எபிரெயருக்கு பவுல் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொண்டார்கள். ‘திருச்சட்டத்தின்படி  செலுத்தப்படுகிற பலிகளினால்’ பாவ மன்னிப்பு பெறுவது கிடையாது; ‘இயேசு கிறிஸ்து தமது உடலை எல்லாக் காலத்திற்கும் ஒரே முறையாகப் செலுத்திய பலியினாலேயே’ பாவ மன்னிப்பு பெற முடியும் என்பதைப் புரிந்துகொண்டார்கள். (எபி. 10:5-10) அவர்களில் அநேகர் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆன்மீக விதத்தில் முன்னேற்றம் செய்தார்கள். நாமும் இன்று கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிக்க வேண்டும். புதிய விளக்கங்களைப் படிக்கும்போதும் ஊழியத்தில் மாற்றங்கள் ஏற்படும்போதும் நாம் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

16. (அ) பூஞ்சோலை பூமியில் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்? (ஆ) எந்த ஆசீர்வாதத்தைக் காண நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள்?

16 யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் அவருடைய ஆசீர்வாதத்தை எப்போதும் அனுபவிப்பார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் சக வாரிசுகளாகப் பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள். (ரோ. 8:16, 17) மற்றவர்கள் பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழ்வார்கள். இதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்போது நம் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. (2 பே. 3:13) “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்று சங்கீதம் 37:11 சொல்கிறது. மக்கள் “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்,” “தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசா. 65:21, 22) பசி-பட்டினி, வறுமை, வன்முறை எதுவுமே இருக்காது. (சங். 72:13-16) மகா பாபிலோன் அழிக்கப்படும். அதை நம்பி யாரும் ஏமாற மாட்டார்கள். (வெளி. 18:8, 21) இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள். என்றென்றும் வாழும் வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படும். (ஏசா. 25:8; அப். 24:15) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் மக்களுக்கு எத்தனை எத்தனை ஆசீர்வாதங்கள்! இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க வேண்டுமென்றால், அமைப்புக்குக் கீழ்ப்படியுங்கள், அமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுங்கள், அமைப்போடு சேர்ந்து முன்னேறுங்கள்.

பூஞ்சோலை பூமியில் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்? (பாரா 16)

17. யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் குறித்து நமக்கு என்ன மனப்பான்மை இருக்க வேண்டும்?

17 இந்தப் பொல்லாத உலகம் சீக்கிரத்தில் அழியப் போகிறது. அதனால், நாம் விசுவாசத்தில் உறுதியோடு இருக்க வேண்டும். யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும். இதே மனப்பான்மைதான் தாவீதுக்கும் இருந்தது: “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” (சங். 27:4) யெகோவாவையே எப்போதும் சார்ந்திருப்போமாக; அவருடைய அமைப்போடு சேர்ந்திருப்போமாக; தொடர்ந்து முன்னேறுவோமாக!