Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 வாழ்க்கை சரிதை

யெகோவா எப்போதும் எனக்கு உதவியிருக்கிறார்

யெகோவா எப்போதும் எனக்கு உதவியிருக்கிறார்

வருடம் 1957. அதிகாலை நேரம், குளிர் வாட்டியது. நானும் ஈவ்லினும் ஹாம்பேன் ரயில் நிலையத்தில் இறங்கினோம். அது, கனடாவிலுள்ள வடக்கு ஒன்டாரியோவில் ஒரு காட்டுப் பகுதி. எங்களுக்குத் திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்தன. எங்களை அழைத்துச் செல்ல ஒரு சகோதரர் வந்திருந்தார். மனைவி மகனோடு அவர் அந்த ஊரில் வாழ்ந்துவந்தார். அவருடைய வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு ஊழியத்திற்குக் கிளம்பினோம். வழியெல்லாம் பனிப் போர்த்தியிருந்தது. அன்று மதியம், ஒரு வட்டாரக் கண்காணியாக என்னுடைய முதல் பொதுப் பேச்சைக் கொடுத்தேன். என்னையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே அங்கு இருந்தார்கள்.

உண்மையைச் சொன்னால், நான் கொடுத்த அந்தப் பேச்சைக் கேட்க வேறு யாரும் வராததை நினைத்து நான் கவலைப்படவே இல்லை. ஏனென்றால், எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம். சிறு வயதில், யாராவது வீட்டிற்கு வந்தால்போதும், அவர்கள் தெரிந்தவர்களாக இருந்தால்கூட எங்கேயாவது போய் ஒளிந்துகொள்வேன்.

எனக்குக் கிடைத்த பெரும்பாலான நியமிப்புகளில், தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் நிறைய பேச வேண்டியிருந்தது. ஆனால், தன்னம்பிக்கை இல்லாததால் கூச்ச சுபாவத்தோடு போராடினேன். அந்த நியமிப்புகளை எல்லாம் சரியாகச் செய்வதற்கு யெகோவாதான் எனக்கு உதவினார். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று அவர் கொடுத்துள்ள வாக்குறுதி உண்மை என்பதை அடிக்கடி ருசித்துப் பார்த்தேன். (ஏசா. 41:10) முக்கியமாக, சகோதர சகோதரிகள் மூலம் யெகோவா எனக்குச் சிறு வயதிலிருந்தே உதவியிருக்கிறார். எப்படி என்பதை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

பைபிளும் கறுப்பு நிற நோட்டும்

தென்மேற்கு ஒன்டாரியோவிலுள்ள பண்ணை வீட்டில்

1940களின்போது ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை, பிரகாசமான காலைப்பொழுதில் தென்மேற்கு ஒன்டாரியோவிலிருந்த எங்களுடைய பண்ணை வீட்டுக்கு எல்ஸி ஹன்டிங்ஃபர்ட் என்ற சகோதரி வந்தார். அம்மா கதவருகே சென்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பா என்னைப் போலவே கூச்ச சுபாவமுள்ளவராக இருந்தார். அதனால், நானும் அப்பாவும் உள்ளே உட்கார்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.  அந்தப் பெண் ஏதோ விற்பனை செய்ய வந்திருக்கிறார் என்றும் அம்மா தேவையில்லாத பொருளை வாங்கிவிடக் கூடாது என்றும் நினைத்து, ‘எங்களுக்கு இதுல இஷ்டமில்ல’ என்று அப்பா சொல்லிவிட்டார். உடனே அந்தச் சகோதரி “பைபிளை படிக்க உங்களுக்கு இஷ்டமில்லையா?” என்று கேட்டார். “அது எங்களுக்கு ரொம்ப இஷ்டம்” என்று அப்பா சொன்னார்.

சகோதரி ஹன்டிங்ஃபர்ட் சரியான சமயத்தில்தான் எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அப்பாவும் அம்மாவும் யுனைட்டெட் சர்ச் ஆஃப் கனடாவின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். ஆனால், அதைவிட்டு விலகத் தீர்மானித்திருந்தார்கள். ஏனென்றால், சர்ச் வராண்டாவில் போடப்பட்டிருந்த நன்கொடை பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் கடைசியில்தான் இருக்கும், அதிக நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்கள் மேலே இருக்கும். என்னுடைய பெற்றோர் அந்தளவு வசதியானவர்களாக இல்லாததால், குறைந்தளவு பணமே கொடுக்க முடிந்தது. ஆனால், நிறைய நன்கொடை கொடுக்கும்படி சர்ச் பாதிரிகள் வற்புறுத்தினார்கள். மற்றொரு பாதிரி அவருடைய வேலை பறிபோய்விடக் கூடாது என்பதற்காக, அவர் நம்பாத விஷயங்களையெல்லாம் சர்ச்சில் போதிப்பதாக ஒப்புக்கொண்டார். இதையெல்லாம் பார்த்து, நாங்கள் சர்ச்சைவிட்டு விலகினோம். ஆனாலும் ஆன்மீக விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தோம்.

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை கனடாவில் அப்போது தடை செய்யப்பட்டிருந்ததால், பைபிளையும் குறிப்புகள் எழுதி வைத்திருந்த சிறிய கறுப்பு நோட்டையும் வைத்தே சகோதரி ஹன்டிங்ஃபர்ட் எங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தினார். நாங்கள் அதிகாரிகளிடம் அவரைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்பது தெரிந்த பிறகுதான் பைபிள் பிரசுரங்களை அவர் எங்களுக்குத் தர ஆரம்பித்தார். படிப்பு முடிந்ததும் அந்தப் பிரசுரங்களை யாரும் பார்க்காத இடத்தில் மறைத்து வைப்போம். *

வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சத்தியத்தைக் கேட்ட என் பெற்றோர், 1948-ல் ஞானஸ்நானம் எடுத்தபோது

எதிர்ப்பையும் வேறு பல தடைகளையும் சமாளித்துக்கொண்டு, சகோதரி ஹன்டிங்ஃபர்ட் பக்திவைராக்கியத்துடன் நற்செய்தியை அறிவித்து வந்தார். அவருடைய ஆர்வம் என்னையும் தொற்றிக்கொண்டதால், யெகோவாவுக்கு என்னை அர்ப்பணிக்கத் தீர்மானித்தேன். அப்பாவும் அம்மாவும் ஞானஸ்நானம் எடுத்த அடுத்த வருடம், அதாவது பிப்ரவரி 27, 1949-ல் நானும் ஞானஸ்நானம் எடுத்தேன். ஆடுமாடுகளுக்கு தண்ணீர் வைக்கிற தொட்டியில் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு 17 வயது. அதன் பிறகு, முழுநேர ஊழியம் செய்யத் தீர்மானித்தேன்.

தைரியமாயிருக்க யெகோவா உதவினார்

1952-ல் பெத்தேல் சேவையை ஆரம்பித்தபோது

பயனியர் சேவையை உடனடியாக ஆரம்பிக்கத் தயங்கினேன். பயனியர் சேவைக்குக் கைகொடுப்பதற்காக, ஒரு வங்கியிலும் ஓர் அலுவலகத்திலும் கொஞ்ச காலத்திற்கு வேலை செய்தேன். ஆனால், எனக்கு பணத்தை எப்படி  சேர்த்து வைப்பதென்றே தெரியவில்லை. சம்பாதிப்பதெல்லாம் காற்றில் கரைந்தது. ஆனால், டெட் சார்ஜன்ட் என்ற சகோதரர் தைரியமாக இருக்கும்படியும் யெகோவாமீது விசுவாசம் வைக்கும்படியும் எனக்கு ஆலோசனை கொடுத்தார். (1 நா. 28:10) அதனால், நவம்பர் 1951-ல் பயனியர் சேவையை ஆரம்பித்தேன். என்னிடம் 40 டாலர் பணமும், ஒரு பழைய சைக்கிளும், ஒரு புதிய சூட்கேஸும்தான் இருந்தன. யெகோவா எப்போதுமே எனக்கு எந்தக் குறையும் இல்லாதபடி பார்த்துக்கொண்டார். சகோதரர் டெட் மட்டும் என்னை ஊக்கப்படுத்தாமல் இருந்திருந்தால், என்னால் நிச்சயமாக பயனியர் செய்திருக்க முடியாது. அதைத் தொடர்ந்து யெகோவா என்னைப் பல விதங்களில் ஆசீர்வதித்தார்.

ஆகஸ்ட் 1952-ன் இறுதியில் ஒருநாள் சாயங்காலம் டோரான்டோவிலிருந்து ஒரு ஃபோன் வந்தது. செப்டம்பர் மாதம்முதல் பெத்தேலில் சேவை செய்வதற்கு கனடா கிளை அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பே அது. நானோ கூச்ச சுபாவமுள்ளவன், கனடா பெத்தேலுக்குப் போனதே கிடையாது. ஆனாலும், அந்த அழைப்பு கிடைத்தபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், பெத்தேலைப் பற்றிய அருமையான விஷயங்களை மற்ற பயனியர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அங்கே போனதும் நான் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

‘சகோதரர்கள்மேல அக்கறை காட்டுங்க’

பெத்தேலுக்குப் போன இரண்டு வருடத்திலேயே டோரான்டோவிலுள்ள ஷா யூனிட்டில், கம்பெனி சர்வன்டாக (அதாவது மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக) நியமிக்கப்பட்டேன். * அப்போது எனக்கு 23 வயதுதான். எனக்கு முன் சகோதரர் பில் ஏக்கஸ் அங்கு கம்பெனி சர்வன்டாக இருந்தார். அனுபவமில்லாத சின்ன பையனைப் போல உணர்ந்தேன். ஆனால், எல்லாவற்றையும் சரியாகச் செய்வதற்கு சகோதரர் ஏக்கஸ் அன்போடு எனக்கு உதவி செய்தார். அதுமட்டுமல்ல, யெகோவா எப்போதுமே எனக்கு உதவியாக இருந்தார்.

எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருக்கும் சகோதரர் ஏக்கஸ், சகோதர சகோதரிகள்மீது அதிக அக்கறையுள்ளவர். அவர் சகோதரர்களை நேசித்தார், அவர்களும் அவரை நேசித்தார்கள். சகோதரர்களுக்கு பிரச்சினை இருக்கும்போது மட்டுமல்ல, மற்ற சமயங்களிலும் தவறாமல் அவர்களுடைய வீடுகளுக்கு அவர் செல்வார். என்னையும் அப்படிச் செய்ய உற்சாகப்படுத்தினார். அதோடு, சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்யவும் என்னை உற்சாகப்படுத்தினார். “சகோதரங்க மேல இருக்குற அக்கறைய வெளிப்படையா காட்டுங்க. அப்போ, அவங்களோட குற்றங்குறைகளை பெருசா எடுத்துக்க மாட்டீங்க” என்று என்னிடம் சொன்னார்.

அன்பான மனைவி

ஜனவரி 1957-லிருந்து யெகோவா இன்னும் விசேஷமான விதத்தில் உதவினார். அந்த மாதத்தில்தான் நான் ஈவ்லினைக் கரம்பிடித்தேன்; அவள் கிலியட் பள்ளியின் 14-ஆம் வகுப்பில் பட்டம் பெற்றவள். திருமணத்திற்குமுன் கியுபெக்கிலுள்ள பிரெஞ்சு மொழி பேசும் மாகாணத்தில் சேவை செய்துகொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் கியுபெக், ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், அங்கு சேவை செய்வது ஈவ்லினுக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும், அந்தச் சேவையையும் யெகோவாவையும் விட்டு விலகவே இல்லை.

1957-ல் ஈவ்லினை கரம்பிடித்தபோது

அவள் எனக்கு எல்லா நேரத்திலும் ஒத்துழைப்புக் கொடுத்தாள். (எபே. 5:31) திருமணத்திற்குப் பிறகு, ஹனிமூனுக்காக அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவுக்குப் போக திட்டமிட்டிருந்தோம். ஆனால், திருமணமான மறுநாளே கனடா பெத்தேலில் ஒருவாரம் நடக்கவிருந்த கூட்டத்திற்குப் போகும்படி என்னிடம் சொல்லப்பட்டது. நாங்கள் திட்டமிட்டபடி ப்ளோரிடாவுக்குப் போக முடியாமற்போனாலும், யெகோவா சொன்னதைச் செய்யவே நானும் ஈவ்லினும் விரும்பினோம். அந்த வாரத்தில், பெத்தேலுக்குப் பக்கத்திலுள்ள பிராந்தியத்தில் அவள் ஊழியம் செய்தாள். கியுபெக்கிற்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் பெரும் வித்தியாசம் இருந்தாலும் ஈவ்லின் சந்தோஷமாக ஊழியம் செய்தாள்.

 அந்த வார இறுதியில் எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. வடக்கு ஒன்டாரியோவுக்கு வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு ஒரு அனுபவமும் கிடையாது. வயதும் 25தான். கல்யாணமான புதிது வேறு. இருந்தாலும், யெகோவாமீது நம்பிக்கை வைத்து புறப்பட்டோம். அந்த சமயம் கனடா நாடு குளிரின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. தங்களுடைய நியமிப்பிற்குத் திரும்பிச் செல்லும் அனுபவமுள்ள வட்டாரக் கண்காணிகள் சிலருடன் நாங்களும் ரயில் ஏறினோம். அவர்கள் எங்களை ரொம்பவே உற்சாகப்படுத்தினார்கள். இரவு முழுக்க உட்கார்ந்துகொண்டு செல்லாமல், படுத்துக்கொண்டு செல்வதற்காக ஒரு சகோதரர் அவருக்கென முன்பதிவு செய்திருந்த இருக்கைகளை எங்களுக்குத் தந்துவிட்டார். அடுத்த நாள் காலை, ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, ஹாம்பேனில் ஒரு சிறிய தொகுதியைச் சந்தித்தோம். அப்போது எங்களுக்குத் திருமணமாகி 15 நாட்களே ஆகியிருந்தது.

இதுபோல் பல மாற்றங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்தன. 1960-ன் இறுதியில் நான் மாவட்டக் கண்காணியாகச் சேவை செய்கையில், 36-வது கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டேன். இந்தப் பத்து மாத பயிற்சி, நியு யார்க்கிலுள்ள புருக்லினில் பிப்ரவரி 1961-ல் ஆரம்பிக்கவிருந்தது. அதை நினைத்து நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஆனால், ஈவ்லினை அழைக்கவில்லை என்பதை அறிந்தபோது என் சந்தோஷமெல்லாம் பறிபோனது. நான் அதில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், பத்து மாதம் பிரிந்திருக்க சம்மதம் தெரிவித்து ஈவ்லின் ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடினாலும், அந்தப் பள்ளியிலிருந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக என்னை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தாள்.

அந்தச் சமயத்தில், ஈவ்லின் கனடா கிளை அலுவலகத்தில் சேவை செய்தாள். அப்போது, மார்க்ரெட் லவல் என்ற சகோதரியின் அறையில் தங்கியிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள், ஏனென்றால், அந்தச் சகோதரி பரலோக நம்பிக்கையுள்ளவர். நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்தது எங்கள் இருவருக்குமே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் யெகோவாவின் உதவியோடு எங்களுடைய தற்காலிக நியமிப்புகளில் மனதைப் பதித்தோம். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்; அதற்காக நாங்கள் சேர்ந்து நேரம் செலவிடுவதைக்கூட தியாகம் செய்ய அவள் மனமுள்ளவளாய் இருந்தது என் மனதைத் தொட்டது.

கிலியட் பள்ளிக்குச் சென்று சுமார் மூன்று மாதங்களில், சகோதரர் நேதன் நார் (அப்போது உலகெங்கும் பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தியவர்) வேறொரு புதிய நியமிப்பிற்கான அழைப்பை விடுத்தார். கிலியட் பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு, கனடா கிளை அலுவலகத்தில் நடக்கவிருந்த ராஜ்ய ஊழியப் பள்ளியில் கொஞ்ச நாட்களுக்கு போதனையாளராகச் சேவை செய்ய முடியுமா என்று கேட்டார். கட்டாயமாகப் போகச் சொல்லவில்லை, வேண்டுமானால், கிலியட் பயிற்சியை முழுமையாக முடித்துவிட்டு மிஷனரியாகவும் போகலாம் என்றார். கனடாவுக்குப் போவதாக இருந்தால், திரும்பவும் கிலியட் பள்ளிக்கு வரமுடியாது என்றார்; ராஜ்ய ஊழிய பள்ளி முடிந்த பிறகு, ஒருவேளை கனடாவிலேயே ஊழிய வேலைக்கு நியமிக்கப்படலாம் என்றும் சொன்னார். இதைப் பற்றி மனைவியிடம் கலந்துபேசி தீர்மானிக்கும்படி சொல்லிவிட்டார்.

கடவுளுடைய அமைப்பிலிருந்து கிடைக்கும் நியமிப்புகளை நெஞ்சார நேசிப்பதாக அவள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறாள். அதனால், “யெகோவாவுடைய அமைப்பு எதைச் செய்யச் சொன்னாலும் அதை நாங்க சந்தோஷமா செய்வோம்” என்று உடனடியாக சகோதரர் நேதன் நாரிடம் சொன்னேன். எங்களுக்கென சில விருப்பங்கள் இருந்தாலும், யெகோவாவின் அமைப்பு எங்கு போகச் சொல்கிறது அங்கு போக வேண்டும் என்பதுதான் எப்போதுமே எங்கள் மனதில் இருந்தது.

 அதனால், ஏப்ரல் 1961-ல் ராஜ்ய ஊழியப் பள்ளியில் போதிப்பதற்காக நான் புருக்லினிலிருந்து கனடாவுக்குக் கிளம்பினேன். பிற்பாடு, பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தோம். அதன் பிறகு, ஓர் ஆச்சரியம்! 1965-ல் ஆரம்பிக்கவிருந்த கிலியட் பள்ளியின் 40-வது வகுப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றேன். நாங்கள் இருவரும் பிரிந்திருக்க சம்மதம் தெரிவித்து ஈவ்லின் மீண்டும் கடிதம் எழுத வேண்டியிருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு, என்னுடன் பள்ளியில் கலந்துகொள்ள அவளுக்கும் அழைப்பு வந்தது. நாங்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுவிட்டோம்.

கிலியட் பள்ளிக்கு வந்த பிறகு, எங்களைப் போல, சபைகளில் நடத்தப்படும் பிரெஞ்சு மொழி வகுப்புகளில் பயிற்சி பெறுபவர்கள் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று சகோதரர் நேதன் நார் சொன்னார். ஆனால், பட்டமளிப்பு விழாவின்போது நாங்கள் கனடாவுக்கே திரும்ப நியமிக்கப்பட்டோம். அங்கே கிளை அலுவலக கண்காணியாக (அதாவது கிளை அலுவலக குழு ஒருங்கிணைப்பாளராக) நியமிக்கப்பட்டேன். அப்போது எனக்கு 34 வயதுதான். “நான் வயசுல ரொம்ப சின்னவன்” என்று சகோதரர் நேதன் நாரிடம் சொன்னேன். ஆனால், அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார். அப்போதிலிருந்து, முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முன், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த சகோதரர்களிடம் ஆலோசனை கேட்பேன்.

பெத்தேல்—கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏற்ற இடம்

பெத்தேலில் சேவை செய்ததால் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. கிளை அலுவலகக் குழுவிலுள்ள மற்ற அங்கத்தினர்கள் என் மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். பெத்தேலிலும் நாங்கள் சேவை செய்த சபைகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான முதிய, இளம் சகோதர சகோதரிகளிடமிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றிருக்கிறோம்.

கனடா பெத்தேலில் காலை வழிபாடு நடத்தும்போது

பெத்தேல் சேவை, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும் எனக்கு வாய்ப்பளித்தது. ‘கற்றுக்கொண்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி’ என்றும் “என்னிடமிருந்து நீ கேட்டறிந்ததும் பலர் சாட்சி அளித்திருக்கிறதுமான விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்பிக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்” என்றும் தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 தீ. 2:2; 3:14) என்னுடைய 57 வருட பெத்தேல் சேவையில் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டேன் என சக கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் என்னிடம் கேட்பார்கள். என்னுடைய ஒரே பதில் இதுதான்: யெகோவாவின் அமைப்பு கொடுக்கிற வேலையை, யெகோவாமீது நம்பிக்கை வைத்து சந்தோஷ மனதுடன் உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

கூச்ச சுபாவமுள்ள, அனுபவமில்லாத ஓர் இளைஞனாக நேற்றுதான் பெத்தேலுக்கு வந்ததுபோல் இருக்கிறது. இத்தனை வருடங்களாக யெகோவா என் “வலதுகையைப் பிடித்து” வழிநடத்தியிருக்கிறார். மிக முக்கியமாக, சகோதர சகோதரிகள் காட்டிய தயவு, தக்க சமயத்தில் அவர்கள் அளித்த ஆலோசனைகள் மூலம், யெகோவா எனக்கு எப்போதும் உதவியிருக்கிறார். “பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்” என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.—ஏசா. 41:13.

^ பாரா. 10 மே 22, 1945-ல் கனடா நாட்டு அரசாங்கம் அந்தத் தடையை நீக்கியது.

^ பாரா. 16 அந்தக் காலத்தில், ஒரு நகரில் ஒன்றுக்கும் அதிகமான சபைகள் இருந்தால், அந்த ஒவ்வொரு சபையும் யூனிட் என அழைக்கப்படும்.