Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா—சீராக, ஒழுங்காகச் செயல்படுபவர்

யெகோவா—சீராக, ஒழுங்காகச் செயல்படுபவர்

கடவுள் குழப்பத்தின் கடவுளாக இல்லாமல் சமாதானத்தின் கடவுளாக இருக்கிறார்.”—1 கொ. 14:33.

1, 2. (அ) யாரைக் கடவுள் முதன் முதலில் படைத்தார், அவரை எப்படிப் பயன்படுத்தினார்? (ஆ) தேவதூதர்கள் சீராக, ஒழுங்காக செயல்படுகிறார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?

அண்டசராசரத்தையும் படைத்த யெகோவா எதைச் செய்தாலும் சீராக, ஒழுங்காகச் செய்பவர். அவர் முதன் முதலில் தம்முடைய ஒரே மகனைத்தான் படைத்தார். தம் ஊழியர்களிடம் பேசுவதற்கு அவரை முக்கியப் பிரதிநிதியாகப் பயன்படுத்துகிறார். அதனால் அவரை “வார்த்தை” என்று பைபிள் அழைக்கிறது. யுகா யுகங்களாக அவர் யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார். அதனால்தான் பைபிள் சொல்கிறது: “ஆரம்பத்தில் வார்த்தை என்றழைக்கப்படுபவர் இருந்தார், அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார். எல்லாம் அவர் மூலமே உண்டானது, அவரில்லாமல் எதுவுமே உண்டாகவில்லை.” அந்த வார்த்தைதான் இயேசு கிறிஸ்து. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் அவரை பூமிக்கு அனுப்பினார். இந்தப் பூமியில் இயேசு பரிபூரண மனிதனாகத் தம் அப்பாவுடைய விருப்பத்தின்படி சேவை செய்தார்.—யோவா. 1:1-3, 14.

2 இந்த மகன் பூமிக்கு வருவதற்குமுன், “திறமையுள்ள வேலைக்காரனாக” கடவுளுக்குச் சேவை செய்தார். (நீதி. 8:30, ஈஸி டு ரீட் வர்ஷன்) இவரைப் பயன்படுத்தி யெகோவா தேவன் கோடிக்கணக்கான தேவதூதர்களைப் படைத்தார். (கொலோ. 1:16) இந்தத் தேவதூதர்களைப்பற்றி பைபிள் சொல்கிறது: “ஆயிரமாயிரம்பேர் அவரை [யெகோவாவை] சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்.” (தானி. 7:10) இவர்களையும் யெகோவா ஒழுங்குபடுத்தியிருக்கிறார்.  அதனால்தான் இவர்களை ‘சேனைகள்’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 103:21.

3. எத்தனை நட்சத்திரங்கள், கோள்கள் இருக்கின்றன? எப்படி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன?

3 நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறதா? டெக்ஸஸில் உள்ள ஹௌஸ்டன் என்ற நகரில் வெளிவரும் க்ரானிக்கல் பத்திரிகையில் சமீபத்தில் வந்த அறிக்கை இது: “இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததைவிட மூன்று மடங்கு அதிக நட்சத்திரங்கள் அல்லது 3-க்கு பிறகு 23 பூஜ்யங்கள் அளவு (3,00,00,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள்” இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் தாறுமாறாக இல்லாமல் நட்சத்திர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நட்சத்திர மண்டலத்தில் கோடானகோடி நட்சத்திரங்களும் எண்ணற்ற கோள்களும் இருக்கின்றன. பல மண்டலங்கள் சேர்ந்து கொத்துகளாகவும் பல கொத்துகள் சேர்ந்து மாபெரும் கொத்துகளாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.

4. பூமியிலிருக்கும் யெகோவாவுடைய ஊழியர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

4 தேவதூதர்களைப் போலவே நட்சத்திரங்களும் கோள்களும் மிகச் சிறந்த விதத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. (ஏசா. 40:26) அப்படியென்றால், பூமியிலிருக்கும் அவருடைய ஊழியர்களையும் யெகோவா ஒழுங்குபடுத்துவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு முக்கியமான நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவர்கள் சீராக, ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அன்றும் இன்றும் யெகோவாவின் ஊழியர்கள் விசுவாசத்தோடு சிறப்பாகச் சேவை செய்து வருகிறார்கள். கடவுள் அவர்களோடு இருக்கிறார் என்பதற்கும் அவர் “குழப்பத்தின் கடவுளாக இல்லாமல் சமாதானத்தின் கடவுளாக இருக்கிறார்” என்பதற்கும் இது மிக சிறந்த அத்தாட்சி.1 கொரிந்தியர் 14:33, 40-ஐ வாசியுங்கள்.

கடவுளின் அமைப்பு—பூர்வ காலத்தில்

5. கடவுளுடைய நோக்கம் எப்படித் தற்காலிகமாகத் தடைபட்டது?

5 முதல் மனித ஜோடியை யெகோவா படைத்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொன்னார். (ஆதி. 1:28) ஆதாம்-ஏவாள் பிள்ளைகளைப் பெற்று இந்த முழு பூமியையும் ஒரு பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்பதுதான் கடவுளுடைய நோக்கம். ஆனால், அவர்கள் கீழ்ப்படியாமல் போனபோது அந்த நோக்கம் தற்காலிகமாகத் தடைபட்டது. (ஆதி. 3:1-6) அதற்குப் பிறகு, “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும்” யெகோவா கண்டார். “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” அதனால், கடவுள் அந்தப் பொல்லாத மக்களைப் பெருவெள்ளத்தில் அழிக்க நினைத்தார்.—ஆதி. 6:5, 11-13, 17.

6, 7. (அ) யெகோவாவின் கண்களில் நோவாவுக்கு ஏன் கிருபை கிடைத்தது? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.) (ஆ) நோவாவின் காலத்தில் இருந்த பொல்லாத மக்களுக்கு என்ன ஆனது?

6 ‘நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தார்.’ அதனால் அவருக்கு, “கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.” அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால், ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி யெகோவா கட்டளையிட்டார். (ஆதி. 6:8, 9, 14-16) மனிதர்களையும் மிருகங்களையும் பாதுகாக்கும் விதத்தில் அந்தப் பேழை வடிவமைக்கப்பட்டது. ‘நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்.’ குடும்பத்தாருடைய உதவியோடு பேழையைச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் கட்டி முடித்தார். எல்லா உயிரினங்களும் பேழைக்குள் போனபிறகு, யெகோவா “கதவை அடைத்தார்.”—ஆதி. 7:5, 16.

7 கி.மு. 2370-ல், யெகோவா பூமியின்மேல் இருந்த மற்ற உயிரினங்கள் அனைத்தையும் பெருவெள்ளத்தில் அழித்தார். பேழைக்குள் இருந்த, விசுவாசமுள்ள நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் மட்டும் காப்பாற்றினார். (ஆதி. 7:23) இன்று பூமியில் இருக்கும் எல்லோரும் நோவாவின் சந்ததியிலிருந்து வந்தவர்கள். ஆனால், “நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா” சொன்னதைக் கேட்காமல், பேழைக்கு வெளியே இருந்த ஒருவர்கூட தப்பிப்பிழைக்கவில்லை.—2 பே. 2:5.

சீராக, ஒழுங்காக செயல்பட்டதால் எட்டு பேர் காப்பாற்றப்பட்டார்கள் (பாரா 6, 7)

8. இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் போனபோது யெகோவா அவர்களை எப்படி ஒழுங்குபடுத்தினார்?

 8 பெருவெள்ளம் வந்து 800 வருடங்களுக்குப் பிறகு, இஸ்ரவேலரைத் தம்முடைய தேசமாகக் கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்களுடைய வாழ்க்கைமுறை, முக்கியமாக அவர்களுடைய வணக்கமுறை நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. ஆசாரியர்களும் லேவியர்களும் மட்டுமல்லாமல், ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ‘பணியாற்றும் பெண்களும்’ ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தார்கள். (யாத். 38:8) என்றாலும், இஸ்ரவேலர்களைக் கானான் தேசத்திற்குள் போகும்படி யெகோவா கட்டளையிட்டபோது அவர்கள் கீழ்ப்படியவில்லை. அதனால், வேவு பார்த்து நல்ல செய்தி கொண்டுவந்த “எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை” என்று யெகோவா சொன்னார். (எண். 14:30, 37, 38) பிறகு, யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரவேலரை வழிநடத்த யோசுவாவை மோசே நியமித்தார். (எண். 27:18-23) “பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்று யோசுவாவிடம் யெகோவா சொன்னார்.—யோசு. 1:9.

9. யெகோவாவையும் அவருடைய மக்களையும் ராகாப் எப்படிக் கருதினாள்?

9 சொன்னபடியே, யோசுவா போன இடமெல்லாம் யெகோவா தேவன் அவர் கூடவே இருந்தார். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்கள் எரிகோ பட்டணத்தைச் சுற்றி முகாமிட்ட சம்பவத்தைக் கவனியுங்கள். எரிகோவை வேவு பார்க்க, கி.மு. 1473-ல் யோசுவா இரண்டு பேரை அனுப்பினார். அங்கே அவர்கள் ராகாப் என்ற வேசியைச் சந்தித்தார்கள். ராஜா அனுப்பிய காவலாளிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற, மொட்டை மாடியில் ராகாப் ஒளித்துவைத்தாள். பிறகு, அந்த வேவுக்காரர்களிடம் சொன்னாள்: ‘கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்ததையும், உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கு செய்ததையும் கேள்விப்பட்டோம். உங்கள் தேவனாகிய யெகோவா உயர வானத்திற்கும் கீழே பூமிக்கும் தேவனாய் இருக்கிறார்.’ (யோசு. 2:9-11) ராகாப் யெகோவாவின் மக்களோடு சேர்ந்துகொண்டதால், அவளையும் அவள் குடும்பத்தையும் எரிகோவின் அழிவிலிருந்து யெகோவா காப்பாற்றினார். (யோசு. 6:25) விசுவாசமுள்ள  ராகாப் யெகோவாவையும் அவருடைய மக்களையும் உயர்வாகக் கருதினாள்.

கடவுளின் அமைப்பு—முதல் நூற்றாண்டில்

10. யூத மதத் தலைவர்களிடம் இயேசு என்ன சொன்னார், ஏன்?

10 இஸ்ரவேலர்கள் யோசுவாவின் தலைமையில் ஒவ்வொரு பட்டணமாகக் கைப்பற்றி கானான் தேசத்தில் குடியேறினார்கள். ஆனால், யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்தார்களா? இல்லை. காலப்போக்கில், அவர்கள் கடவுளுடைய சட்டங்களைப் பலமுறை மீறினார்கள். இயேசு பூமிக்கு வந்த சமயத்தில் அவர்களுடைய அக்கிரமம் உச்சத்தை எட்டி இருந்தது. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள், அவருடைய பிரதிநிதிகளான தீர்க்கதரிசிகளையும் அசட்டை செய்தார்கள். அதனால்தான், ‘தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்த எருசலேமே’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 23:37, 38-ஐ வாசியுங்கள்.) யூத மதத் தலைவர்கள் கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா அவர்களை நிராகரித்தார். இயேசு சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு உங்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகிற வேறு மக்களிடம் கொடுக்கப்படும்.”—மத். 21:43.

11, 12. (அ) முதல் நூற்றாண்டில் யெகோவா புதிய தேசத்தை ஆரம்பித்ததற்கு என்ன அத்தாட்சி இருந்தது? (ஆ) அதன் அங்கத்தினர்கள் யார்?

11 கீழ்ப்படியாத இஸ்ரவேலர்களை முதல் நூற்றாண்டில் யெகோவா நிராகரித்தார். அதற்காக, பூமியில் யெகோவாவுக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் போய்விட்டதா? இயேசுவையும் அவருடைய போதனைகளையும் அடிப்படையாக வைத்து ஒரு புதிய தேசத்தை யெகோவா தேர்ந்தெடுத்தார். கி.பி. 33-ல் அது ஆரம்பமானது. அப்போது, சுமார் 120 சீடர்கள் எருசலேமில் கூடிவந்தார்கள். “பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் திடீரென்று வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதிலும் எதிரொலித்தது. அதோடு, நெருப்புப் போன்ற நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன; அவை ஒவ்வொன்றும் பிரிந்துபோய் அங்கிருந்த ஒவ்வொருவர் மீதும் அமர்ந்தன; இப்படி அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு, அந்தச் சக்தி அருளியபடியே வேற்று மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.” (அப். 2:1-4) கிறிஸ்துவின் சீடர்கள் அடங்கிய புதிய தேசத்தை யெகோவா ஆரம்பித்து வைத்ததற்கு இது தெள்ளத் தெளிவான அத்தாட்சி!

12 அன்றே, “சுமார் மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.” அதன்பிறகு, “மீட்பின் வழியை ஏற்றுக்கொண்டவர்களை யெகோவா தினந்தோறும் அவர்களோடு கூட்டிச்சேர்த்து வந்தார்.” (அப். 2:41, 47) முதல் நூற்றாண்டு சீடர்கள் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்தார்கள். “கடவுளுடைய வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது; எருசலேமில் சீடர்களின் எண்ணிக்கையும் அதிகமதிகமாகப் பெருகிக்கொண்டே வந்தது; ஆலய குருமார்களிலும்கூட ஏராளமானோர் விசுவாசிகளானார்கள்.” (அப். 6:7) நல்மனமுள்ள நிறைய பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு கடவுளுடைய புதிய தேசத்தோடு சேர்ந்துகொண்டார்கள். பிறகு, கிறிஸ்தவ சபையோடு ‘புறதேசத்தாரையும்’ யெகோவா சேர்த்துக்கொண்டார். அவர்களுக்கும் அவர் சக்தியைத் தந்தது, புதிய தேசத்தின்மீது அவருடைய ஆதரவு இருப்பதற்கு மற்றொரு தெளிவான அத்தாட்சி!அப்போஸ்தலர் 10:44, 45-ஐ வாசியுங்கள்.

13. புதிய தேசத்திற்குக் கடவுள் என்ன வேலை கொடுத்தார்?

13 கிறிஸ்துவின் சீடர்களுக்குக் கடவுள் என்ன வேலையைக் கொடுத்தார் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. இயேசுவே இதற்குச் சிறந்த முன்மாதிரி வைத்தார். அவர் ஞானஸ்நானம் எடுத்த உடனேயே ‘பரலோக அரசாங்கத்தைப் பற்றி’ பிரசங்கிக்க ஆரம்பித்தார். (மத். 4:17) தம் சீடர்களுக்கும் அதே வேலையை, அதாவது பிரசங்க வேலையை, கற்றுக்கொடுத்தார். “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (அப். 1:8) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இதை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். பிசிதியா-அந்தியோகியாவில், யூத மதவாதிகளிடம் பவுலும் பர்னபாவும் சொன்ன வார்த்தைகள் இதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன: “கடவுளுடைய வார்த்தையை உங்களுக்குத்தான் நாங்கள் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. நீங்களோ அதை உதறித் தள்ளி, முடிவில்லா வாழ்வுக்கு உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கிறீர்கள்!  அதனால், இப்போது நாங்கள் புறதேசத்தாரிடம் போகிறோம். சொல்லப்போனால், ‘பூமியின் கடைமுனைவரை மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைப் புறதேசத்தாருக்கு ஒளியாய் நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தின்படி யெகோவாவே எங்களுக்கு அந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கிறார்.” (அப். 13:14, 45-47) அன்றுமுதல், கடவுளின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊழியர்கள் இந்தப் பூமியில் இரட்சிப்பின் செய்தியை அறிவித்து வருகிறார்கள்.

கடவுளுடைய ஊழியர்கள் தப்பிப்பிழைத்தார்கள்

14. முதல் நூற்றாண்டில் எருசலேமுக்கு என்ன ஆனது, யார் தப்பிப்பிழைத்தார்கள்?

14 பெரும்பாலான யூதர்கள் இரட்சிப்பின் செய்தியைக் கேட்காததால் அழிக்கப்பட்டார்கள். இயேசு தம் சீடர்களை இப்படி எச்சரித்தார்: “எருசலேம் படைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது அதன் அழிவு நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள். அப்போது, யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும். எருசலேமுக்குள் இருக்கிறவர்கள் வெளியேற வேண்டும்; நாட்டுப்புறங்களில் இருக்கிறவர்களோ எருசலேமுக்குள் நுழையாதிருக்க வேண்டும்.” (லூக். 21:20, 21) கி.பி. 66-ல், இயேசு சொன்னபடியே நடந்தது. யூதர்கள் கலகம் செய்ததால், செஸ்டியஸ் கேலஸின் தலைமையில் ரோம படை எருசலேமை முற்றுகையிட்டது. ஆனால், திடீரென பின்வாங்கியது. இதுதான் இயேசுவின் சீடர்கள் எருசலேமையும் யூதாவையும் விட்டு தப்பியோட வேண்டிய சரியான நேரம்! சரித்திராசியர் யூசிபியஸ் சொல்கிறபடி, நிறைய பேர் யோர்தானைக் கடந்து பெரேயாவிலுள்ள பெல்லாவுக்குத் தப்பியோடினார்கள். கி.பி. 70-ல் தளபதி டைட்டஸ் தலைமையில் திரும்பி வந்த ரோம படை, எருசலேமைச் சின்னாபின்னமாக்கியது. ஆனால், இயேசுவின் எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தப்பிப்பிழைத்தார்கள்.

15. எதன் மத்தியிலும் கிறிஸ்தவ சபை செழித்தோங்கியது?

15 கஷ்டங்கள், துன்புறுத்துதல்கள், சோதனைகள் என எல்லாவற்றையும் கிறிஸ்துவின் சீடர்கள் தாக்குப்பிடித்தார்கள். இதற்கு மத்தியிலும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டது. (அப். 11:19-21; 19:1, 19, 20) கடவுள் அவர்களை ஆசீர்வதித்ததால், ஆன்மீக விதத்தில் செழித்தோங்கியது.—நீதி. 10:22.

16. ஆன்மீக விதத்தில் செழித்தோங்க, கிறிஸ்தவ சபையில் இருந்த ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டியிருந்தது?

16 ஆன்மீக விதத்தில் செழித்தோங்க, அன்றைய கிறிஸ்தவ சபையில் இருந்த ஒவ்வொருவரும் கடும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகப் படித்து, தவறாமல் கூட்டங்களுக்குச் சென்று, சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. இவையெல்லாம் அவர்களுடைய ஆன்மீக செழுமைக்கும் கிறிஸ்தவ ஒற்றுமைக்கும் கைகொடுத்தது. ஒழுங்குபடுத்தப்பட்ட கிறிஸ்தவ சபையோடு சேர்ந்துகொண்ட எல்லோரும், அங்கிருந்த கண்காணிகளிடமிருந்தும் உதவி ஊழியர்களிடமிருந்தும் எண்ணற்ற உதவிகளைப் பெற்றார்கள். (பிலி. 1:1; 1 பே. 5:1-4) பவுலைப் போன்ற பயணக் கண்காணிகள் சபைகளைச் சந்தித்தபோது சபையார் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். (அப். 15:36, 40, 41) அன்றும் இன்றும் யெகோவாவின் வழிபாட்டில் எத்தனை எத்தனை ஒற்றுமை! யெகோவா தம் ஊழியர்களை ஒழுங்குபடுத்தியிருப்பதைப் பார்க்கும்போது நம் உள்ளத்தில் நன்றி பெருக்கெடுக்கவில்லையா? *

17. அடுத்தக் கட்டுரையில் எதைப்பற்றி படிப்போம்?

17 இந்தப் பொல்லாத உலகத்தின் காட்சி முடிவு கட்டத்திற்கு வந்துவிட்டது. இருந்தாலும், அண்டசராசரத்தையும் படைத்த யெகோவாவுடைய ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பின் பூமிக்குரிய பாகம் எப்போதையும்விட அதிவேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. நீங்களும் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கிறீர்களா? ஆன்மீக விதத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்களா? இதைச் செய்ய அடுத்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

^ பாரா. 16 காவற்கோபுரம் ஜூலை 15, 2002-ல் “கிறிஸ்தவர்கள் ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்குகிறார்கள்,” “அவர்கள் தொடர்ந்து சத்தியத்திலே நடக்கிறார்கள்” என்ற கட்டுரைகளைப் பாருங்கள். யெகோவாவுடைய ஊழியர்கள் பூமியில் இன்று எப்படி சீராக, ஒழுங்காக செயல்படுகிறார்கள் என்பதைப்பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தைப் பாருங்கள்.