வாழ்க்கை சரிதை
யெகோவாதான் எனக்கு அப்பா
ஆஸ்திரியாவில் 1899-ஆம் ஆண்டு என்னுடைய அப்பா பிறந்தார். முதல் உலகப் போரின்போது ஒரு வாலிபனாக இருந்தார். இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தபோது ஜெர்மனி ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ரஷ்யாவில் போர் செய்யும்போது 1943-ல் உயிரிழந்தார். அப்போது எனக்கு இரண்டு வயதுதான். அப்பாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ அவரோடு நெருங்கிப் பழகவோ எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கூடப்படிப்பவர்கள், அவர்களுடைய அப்பாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். என்றென்றும் வாழும் ஒரு அப்பாவைப் பற்றி வாலிப வயதில் தெரிந்துகொண்டபோது ஆறுதலாக இருந்தது.
சாரணர் இயக்கத்தில் சேர்ந்தபோது
ஏழு வயதில் நான் சாரணர் இயக்கத்தில் (Boy Scouts) சேர்ந்தேன். அது 1908-ல் கிரேட் பிரிட்டனில் ஒரு பிரிட்டிஷ் உயர் அதிகாரியால் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய இயக்கம். அவர் 1916-ல் சிறுவர் சாரணர் இயக்கத்தை (Wolf Cubs or Cub Scouts) ஆரம்பித்தார்.
சனி, ஞாயிறுகளில் நாங்கள் நாட்டுப்புற பகுதிகளுக்குப் போவோம், அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்கே கூடாரங்களில் தூங்குவோம், சீருடை அணிந்திருப்போம், மேள சத்தத்தோடு அணிவகுத்து நடப்போம். என்னுடன் வரும் பிள்ளைகளோடு நேரம் செலவிடும்போது சந்தோஷமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அமர்ந்து பாடல்களைப் பாடுவோம்; காட்டுப்பகுதியில் விளையாடுவோம். இயற்கையைப் பற்றியும் நிறைய தெரிந்துகொண்டோம்; அதனால் படைப்பாளரை நேசிக்க ஆரம்பித்தேன்.
இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் தினமும் ஒரு நல்ல செயலை செய்ய வேண்டியிருந்தது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது “எப்போதும் தயாராக இரு” என்று சொல்லிக்கொள்வோம். அது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. என்னோடு நூறுக்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தார்கள். அதில் பாதி பேர் கத்தோலிக்க மதத்தினர்; பாதி பேர் புராட்டஸ்டண்ட் மதத்தினர்; ஒருவன் மட்டும் புத்த மதத்தைச் சேர்ந்தவன்.
1920-லிருந்து உலக சாரணியர் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. சில வருடங்களுக்கு ஒருமுறைதான் இவை நடக்கும். நான் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டேன். ஆகஸ்ட் 1951-ல் ஆஸ்திரியாவில் ஒன்று நடந்தது. இரண்டாவதாக, ஆகஸ்ட் 1957-ல் இங்கிலாந்தில் நடந்த கூட்டத்திற்கு 85 நாடுகளைச் சேர்ந்த 33,000 பேர் கலந்துகொண்டார்கள். 7,50,000 பார்வையாளர்களும் வந்திருந்தார்கள்; இங்கிலாந்தின் ராணி எலிசபெத்தும் வந்திருந்தார். அந்த உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதைவிடச் சிறந்த ஆன்மீகக் சகோதரத்துவத்தின் பாகமாக ஆகப்போகிறேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தபோது
என் சொந்த ஊரான ஆஸ்திரியாவில் ஒரு சர்வராக ஓட்டலில் நான் பெற்ற பயிற்சி 1958-ஆம் வருடத்தில் முடியவிருந்தது. அப்போது, அங்கு வேலை பார்த்த ரூடோல்ஃப் சிக்கர்ல் எனக்குச் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். அவரை ரூடி என்று செல்லமாகக் கூப்பிடுவோம். இதற்குமுன் சத்தியத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. திரித்துவம் என்ற போதனை பைபிளில் இல்லை என்று அவர் சொன்னார். அவர் சொன்னது தவறு என்று நிரூபிக்க நினைத்தேன். அவரும் நானும் நல்ல நண்பர்கள். அதனால், எப்படியாவது அவரை கத்தோலிக்க சர்ச்சிற்கு இழுத்துவிட ஆசைப்பட்டேன்.
ரூடி எனக்கு ஒரு பைபிள் கொடுப்பதாகச் சொன்னார். கத்தோலிக்க பைபிளை மட்டும்தான் வாசிப்பேன் என்று சொல்லிவிட்டேன். அவர் கொடுத்த பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் காவற்கோபுர சங்கத்தின் ஒரு துண்டுப்பிரதியை வைத்திருந்தார். அதில் இருப்பது உண்மையைப் போல் தோன்றினாலும் அதில் பொய்யான கருத்துகளே இருக்கும் என்று நினைத்ததால் அதைப் படிக்க விரும்பவில்லை என்று சொன்னேன். அதற்குப் பிறகு ரூடி எனக்கு எந்தப் பிரசுரங்களையும் கொடுக்கவில்லை. வெறுமனே பைபிளிலிருந்து அவரோடு பேசுவதற்கு எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த மூன்று மாதங்களில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பைபிளைப் பற்றி பேசுவோம். சில நேரங்களில் நடுராத்திரி வரை பேசுவோம்.
ஓட்டலில் என்னுடைய பயிற்சி முடிந்த பிறகு, ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் இருந்த ஓர் இடத்திற்கு மேற்கொண்டு படிக்கச் சென்றேன். அனுபவம் பெறுவதற்காக அங்கிருந்த ஓட்டலுக்கு சில சமயம் வேலைக்குச் சென்றேன்.
மிஷனரி சகோதரிகளைச் சந்தித்தபோது
ரூடி என் புதிய விலாசத்தை வியன்னாவிலிருந்த கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். ஒருநாள் இரண்டு பெண்கள் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக ரிசப்ஷனில் வேலை செய்பவர் சொன்னார். அவர்கள் யாரென்றே தெரியாமல் குழம்பினேன். இருந்தாலும், போய்ப் பார்த்தேன். அவர்கள் இல்ஸா அன்டர்டோர்ஃபர், எல்ஃப்ரீடா லோர் என்ற இரண்டு மிஷனரி சகோதரிகள். * இவர்கள் நாசி ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின்போது ரகசியமாகப் பிரசுரங்களை எடுத்துச் சென்றவர்கள். போர் ஆரம்பிக்கும் முன்பே ஜெர்மனியின் ரகசிய போலீஸ் இவர்களைக் கைது செய்து லிக்டன்பர்க் சித்திரவதை முகாமில் போட்டார்கள். போர் நடந்தபோது பெர்லினில் இருக்கும் ராவன்புரூக் முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.
அந்தச் சகோதரிகளுக்கு என் அம்மா வயது இருக்கும். அதனால், அவர்களை மதித்தேன். இரண்டு மூன்று வாரங்களுக்கு வெறுமனே அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு பிறகு வேண்டாம் என்று சொல்லி அவர்கள் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதனால், போப்புகள் பேதுருவின் வம்சத்தில் வந்தவர்கள் என்ற போதனையைப் பற்றிய வசனங்களைக் கொண்டுவரச் சொன்னேன். பாதிரியாரிடம் அந்த வசனங்களை வைத்து பேசப் போவதாகச் சொன்னேன். இதன்மூலம் உண்மையைத் தெரிந்துகொள்ள நினைத்தேன்.
யெகோவா அப்பாவைப் பற்றித் தெரிந்துகொண்டபோது
எல்லா போப்புகளும் அப்போஸ்தலன் பேதுருவின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்று கத்தோலிக்க சர்ச் போதிக்கிறது. (மத்தேயு 16:18-லிருக்கும் இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.) போப்பை “திரு தந்தை” என்று அழைத்தார்கள். அவர் சொல்வதுதான் வேதவாக்கு, அவர் சொல்வது தவறாக இருக்க முடியாது என்று கத்தோலிக்கர்கள் நம்பினார்கள். நானும் அதை நம்பினேன். அதனால், திரித்துவ போதனை பைபிளில் இருக்கிறது என்று போப் சொன்னால், அதுவும் தவறாக இருக்க முடியாது என்று நினைத்தேன். கத்தோலிக்க போதனைகளிலேயே போப் பேதுரு வம்சத்தில் வந்தவர் என்பதுதான் முக்கியமான போதனை. மற்ற எல்லா கத்தோலிக்க போதனைகளும் இதைச் சார்ந்ததே.
பாதிரியாரிடம் என்னுடைய கேள்விகளைக் கேட்டபோது அவர் எதற்குமே பதில் சொல்லவில்லை. போப், பேதுரு வம்சத்தில் வந்தவர் என்பது பற்றிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படித்த பிறகு எனக்கு இன்னும் நிறைய சந்தேகம் வந்தது. அதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ‘இது உண்மைனு என்னால உன்னை நம்ப வைக்க முடியாது, இது பொய்யுனு உன்னால என்னை நம்ப வைக்க முடியாது. நீயே யோசிச்சு முடிவு பண்ணிக்கோ’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதற்குமேல் அவர் என்னிடம் பேச விரும்பவில்லை.
அப்போதுதான், பைபிள் படிப்புக்கு நான் ஒத்துக்கொண்டேன். அந்த மிஷனரி சகோதரிகள் யெகோவா அப்பாவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். (யோவா. 17:11) பைபிள் படிப்பு படித்து வந்த ஒருவருடைய வீட்டில்தான் கூட்டங்கள் நடந்தன. சிலர் மட்டுமே கூட்டத்திற்கு வருவார்கள். ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரர் இல்லாததால், மிஷனரி சகோதரிகள் இருவரும் பேசிக்கொள்வதுபோல் கூட்டத்தை நடத்தினார்கள். எப்போதாவது ஒருமுறை வேறு இடத்திலிருந்து ஒரு சகோதரர் வந்து பொதுப்பேச்சு கொடுப்பார்.
ஊழியத்தை ஆரம்பித்தபோது
பைபிள் படிக்க ஆரம்பித்து மூன்றே மாதங்களில், ஜனவரி 1959-ல், ஞானஸ்நானம் எடுத்தேன். அதற்கு முன்பே வீட்டுக்குவீடு ஊழியத்தை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டேன். (அப். 20:20) முதல்முறை அவர்களோடு போனபிறகு, எனக்கும் ஒரு பிராந்தியம் வேண்டும் என்று கேட்டேன். ஒரு கிராமத்தை எனக்கு நியமித்தார்கள். தனியாகவே வீட்டுக்குவீடு ஊழியமும் மறுசந்திப்பும் செய்தேன். முதன்முதலில் என்னோடு ஊழியம் செய்த சகோதரர், பிற்பாடு எங்கள் சபைக்கு வட்டாரக் கண்காணியாக வந்தார்.
1960-ல் என்னுடைய படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினேன். சொந்தக்காரர்களுக்கு பைபிள் சத்தியங்களைச் சொன்னேன். ஆனால், யாருமே சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் மட்டும் இப்போது கொஞ்சம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
முழுநேர ஊழியத்தின்போது
1961-ல் சில முக்கியமான கடிதங்கள் சபைகளில் வாசிக்கப்பட்டன. பயனியர் செய்யும்படி அவை அனைவரையும் உற்சாகப்படுத்தின. அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. ஆரோக்கியமாகவும் இருந்தேன். பயனியர் செய்ய எதுவுமே எனக்குத் தடையில்லை. கார் வாங்கினால் பயனியர் செய்ய உதவியாக இருக்கும் என்று யோசித்தேன். அதனால், இன்னும் கொஞ்சம் காலம் வேலை செய்ய நினைத்தேன். அதைப் பற்றி வட்டாரக் கண்காணி கர்ட் கூன்னிடம் பேசினேன். “இயேசுவும் அப்போஸ்தலர்களும் கார்ல போய்தான் ஊழியம் செஞ்சாங்களா?” என்று அவர் கேட்டார். அவர் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டேன். உடனடியாக பயனியர் செய்யத் தீர்மானித்தேன். ஆனால், வாரத்திற்கு 72 மணிநேரம் ஓட்டலில் வேலை செய்ததால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.
60 மணிநேரம் வேலை செய்ய முதலாளியிடம் அனுமதி கேட்டேன். அவர் சம்மதித்தார், சம்பளத்தையும் குறைக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு 48 மணிநேரம் வேலை செய்ய அனுமதி கேட்டேன். அதற்கும் ஒத்துக்கொண்டார், சம்பளத்தையும் குறைக்கவில்லை. அடுத்தது, 36 மணிநேரம் வேலை செய்ய அனுமதி கேட்டேன். அதற்கும் ஒத்துக்கொண்டார், ஆச்சரியம் என்னவென்றால் இந்த முறையும் சம்பளத்தை குறைக்கவில்லை. நான் வேலையை விட்டுப் போவதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது. உடனே ஒழுங்கான பயனியர் செய்ய ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் மாதத்திற்கு 100 மணிநேரம் செய்ய வேண்டியிருந்தது.
நான்கு மாதத்திற்குப் பிறகு, ஷ்பிட்டால் ஆன் டேர் ட்ராவ் என்ற நகரத்தில் உள்ள சபையில் விசேஷ பயனியராகவும் சபை ஊழியனாகவும் நியமிக்கப்பட்டேன். அப்போது விசேஷ பயனியர்கள் 150 மணிநேரம் செய்ய வேண்டியிருந்தது. பெரும்பாலும் நான் தனியாக ஊழியம் செய்தேன். சகோதரி ஜெர்ட்ரூடா லோப்னர் சில சமயங்களில் எனக்கு உதவினார்; அவர் உதவி சபை ஊழியனாக இருந்தார். *
புதிய நியமிப்புகள் கிடைத்தபோது
1963-ல் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். சபைகளுக்கு ரயிலில் சென்றேன். அப்போது பெரும்பாலான சகோதரர்களிடம் கார் கிடையாது. அதனால், என்னை அழைக்க யாரும் ரயில் நிலையத்திற்கு வரவில்லை. நான் டாக்ஸியில் போய் அவர்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. கனமான பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நான் தங்க வேண்டிய வீட்டிற்கு நடந்தே போனேன்.
1965-ல் 41-ஆவது கிலியட் பள்ளியில் கலந்துகொண்டேன். அதில் கலந்துகொண்ட அநேகர் என்னைப் போலவே திருமணம் ஆகாதவர்கள். பள்ளி முடிந்த பிறகு, என் சொந்த ஊருக்கே வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அமெரிக்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு நான்கு வாரங்களுக்கு ஆன்டனி கான்டி என்ற சகோதரரோடு வட்டார சேவையில் ஈடுபட்டேன். அவர் அன்பானவர், ஊழியத்தை நெஞ்சார நேசித்தார், மக்களிடம் திறம்படப் பேசினார். நாங்கள் நியு யார்க்கில் இருந்த கார்ன்வால் பகுதியில் சேவை செய்தோம்.
ஆஸ்திரியாவுக்கு வந்ததும் நான் நியமிக்கப்பட்ட வட்டாரத்தில் டோவ் மெரீட் என்ற அழகான சகோதரியைச் சந்தித்தேன். அவர் ஐந்து வயதிலிருந்தே சத்தியத்தில் வளர்ந்தவர். நாங்கள் எப்படிச் சந்தித்தோம் என்று யாராவது கேட்டால் “கிளை அலுவலகம்தான் ஏற்பாடு செய்தது” என்று வேடிக்கையாகச் சொல்வேன். ஏப்ரல் 1967-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். தொடர்ந்து வட்டார கண்காணியாக சேவை செய்தேன்.
அடுத்த வருடம், பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன் என்று புரிந்துகொண்டேன். கடவுளுடைய மகனாகத் தத்தெடுக்கப்பட்டதை உணர்ந்துகொண்டேன். யெகோவாவின் அளவற்ற கருணையினால் அவரோடு விசேஷ பந்தத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன். ரோமர் 8:15-ன்படி யெகோவாவை “‘அபா,’ அதாவது ‘அப்பா!’ என்று அழைக்க” வாய்ப்பு கிடைத்தது.
1976 வரை வட்டாரக் கண்காணியாகவும் மாவட்ட கண்காணியாகவும் சேவை செய்தேன். பனி காலத்தில் சில நேரங்களில், உறைந்துபோகும் அளவுக்கு குளிர் இருக்கும். அப்போது, ஹீட்டர் இல்லாத அறைகளில் தூங்க வேண்டியிருந்தது. ஒருமுறை, காலையில் எழுந்தபோது நாங்கள் போர்த்தியிருந்த கம்பளியின் ஓரம் எங்கள் மூச்சுக் காத்து பட்டு உறைந்துவிட்டது. அதனால், ஒரு சிறிய எலக்ட்ரிக் ஹீட்டரை எடுத்துச் செல்லத் தீர்மானித்தோம். சில வீடுகளில் கழிவறை வெளியே இருக்கும். இரவில் பனியின் மேல் நடந்துதான் போக வேண்டியிருந்தது. எங்களுக்கென்று சொந்த வீடு இல்லை. அதனால், நாங்கள் தங்கியிருந்த சகோதரர் வீட்டிலேயே திங்கள்கிழமையும் தங்கிவிட்டு, மறுநாள் அடுத்த சபைக்குப் போவோம்.
இத்தனை வருடங்களாக என் மனைவி எனக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கிறாள். ஊழியம் செய்வதென்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவளை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற அவசியமே இருந்ததில்லை. சகோதர சகோதரிகளையும் அவள் நேசித்தாள், அவர்கள்மீது அக்கறை காட்டினாள். அப்படிச் செய்தது எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.
1976-ல் வியன்னா பெத்தேலில் கிளை அலுவலகக் குழு அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். அப்போது, தடை செய்யப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஆஸ்திரியா மேற்பார்வை செய்தது. அங்கிருந்த சகோதரர்களுக்கு ரகசியமாகப் பிரசுரங்களை அனுப்பி வந்தது. யுயர்ஜன் ருன்டல் தலைமையில் இந்த வேலை நடந்தது. அவரோடு சேர்ந்து வேலை செய்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்போது, அவரும் அவரது மனைவியும் ஜெர்மனியில் விசேஷப் பயனியர்களாக இருக்கிறார்கள். பிறகு, நான் 10 கிழக்கு ஐரோப்பிய மொழிகளின் மொழிபெயர்ப்பு வேலையை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டேன். 1978-லிருந்து ஆஸ்திரிய கிளை அலுவலகம் ஆறு மொழிகளில் பிரசுரங்களை அச்சடிக்க ஆரம்பித்தது. பல நாடுகளுக்கு சந்தாக்களையும் அனுப்பியது. இந்த வேலையில் சகோதரர் ஓட்டோ கூக்லிச் முக்கிய பங்கு வகித்தார். அவரும் அவரது மனைவியும் இப்போது ஜெர்மனி பெத்தேலில் சேவை செய்கிறார்கள்.
கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சகோதரர்களும் அவர்களுடைய சொந்த நாடுகளில் பத்திரிகைகளைப் பிரசுரித்தார்கள். இருந்தாலும், அவர்களுக்கு வேறு நாடுகளிலிருந்து உதவி தேவைப்பட்டது. அவர்கள் ரகசியமாகச் செய்த வேலையை யெகோவா ஆசீர்வதித்தார். பல வருடங்களாகத் தடைகள் மத்தியிலும் இந்த வேலையைச் செய்த சகோதரர்களை நாங்கள் மிகவும் நேசித்தோம்.
ருமேனியாவுக்கு போனபோது
1989-ல் ருமேனியாவுக்கு ஆளும் குழுவின் அங்கத்தினரான சகோதரர் தியோடர் ஜெராக்ஸோடு செல்லும் பாக்கியம் கிடைத்தது. அமைப்பைவிட்டுப் பிரிந்து சென்ற நிறைய சகோதரர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம். 1949-லிருந்து அவர்கள் அமைப்பை விட்டு விலகி சொந்த சபைகளை ஆரம்பித்திருந்தார்கள். இருந்தாலும், சாட்சிகளைப் போலவே பிரசங்கித்தார்கள், ஞானஸ்நானம் கொடுத்தார்கள், கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொண்டதால் சிறைக்குக்கூட சென்றார்கள். ருமேனியாவில் தடை உத்தரவு நீடித்ததால் நாங்கள் பாம்ஃபில் ஆல்பூ என்ற சகோதரர் வீட்டில் ரகசியமாகச் சந்தித்தோம். அங்கு கிளை அலுவலகம் இல்லாததால் ருமேனிய நாட்டின் ஆலோசனை குழு பிரதிநிதிகளும் பிரிந்து சென்ற நான்கு மூப்பர்களும் வந்திருந்தார்கள். ஆஸ்திரியாவிலிருந்து ரால்ஃப் கெல்னர் என்ற மொழிபெயர்ப்பாளரையும் அழைத்துச் சென்றோம்.
இரண்டாவது நாள் சகோதரர் ஆல்பூ தன்னோடு வந்த மூப்பர்களிடம் “இப்போ நாம அமைப்போட ஒன்னுசேரலனா, திரும்ப இப்படியொரு வாய்ப்பு கிடைக்காம போயிடலாம்” என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். இதன் விளைவாக 5,000 சகோதரர்கள் மீண்டும் அமைப்போடு சேர்ந்துகொண்டார்கள். யெகோவாவுக்கு எப்பேர்ப்பட்ட வெற்றி!
1989-ன் முடிவில் ஆளும் குழு என்னையும் என் மனைவியையும் நியு யார்க் தலைமை அலுவலகத்திற்கு அழைத்தார்கள். எங்களுக்கு ஒரே சந்தோஷம்! ஜூலை 1990-ஆம் ஆண்டு புருக்லின் பெத்தேலில் எங்கள் சேவையை ஆரம்பித்தோம். 1992-ல் ஆளும் குழுவின் ஊழியக் குழுவுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டேன். ஜூலை 1994 முதற்கொண்டு ஆளும் குழு அங்கத்தினராகச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது.
எதிர்கால எதிர்பார்ப்புகள்
முன்பு ஓட்டலில் உணவு பரிமாறினேன். இப்போது உலகளாவிய சகோதரர்களுக்கு ஆன்மீக உணவைத் தயாரித்து அளிக்கும் வேலையில் பங்குகொள்கிறேன். (மத். 24:45-47) முழுநேர சேவையில் 50 வருடங்களைக் கடந்துவிட்டேன். உலகளாவிய அமைப்பை யெகோவா ஆசீர்வதித்ததற்கு நன்றியோடு இருக்கிறேன். சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வது எனக்குக் கிடைத்த பாக்கியம்.
இன்னும் லட்சக்கணக்கானோர் பைபிளைப் படித்து சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக யெகோவாவை ஒற்றுமையாகச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். (1 பே. 2:17) பூமியில் உயிர்த்தெழுந்து வருபவர்களை, முக்கியமாக என் அப்பாவை, பரலோகத்திலிருந்து பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். அப்பா-அம்மா, உறவினர்கள் எல்லோரும் பூஞ்சோலை பூமியில் யெகோவாவை வழிபட விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
பூமியில் உயிர்த்தெழுந்து வருபவர்களை, முக்கியமாக என் அப்பாவை, பரலோகத்திலிருந்து பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்
^ பாரா. 15 நவம்பர் 1, 1979 ஆங்கில காவற்கோபுர இதழில் இவர்களுடைய வாழ்க்கை சரிதையைப் பாருங்கள்.
^ பாரா. 27 சபை ஊழியன் என்பது மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரைக் குறிக்கும், உதவி சபை ஊழியன் என்றால் செயலரைக் குறிக்கும்.