“தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”
“ஒருவனுக்குக் கடவுள்மீது அன்பு இருந்தால், கடவுள் அவனை அறிந்திருக்கிறார்.”—1 கொ. 8:3.
1. மோசேயின் காலத்தில் சிலர் என்ன தப்புக்கணக்குப் போட்டார்கள்? விளக்குங்கள். (படத்தைப் பாருங்கள்.)
ஒருநாள் காலை, தலைமை குருவான ஆரோன் தூபக்கலசத்தைப் பிடித்துக்கொண்டு ஆசரிப்புக் கூடார வாசலில் நின்றார். கோராகும் அவனைச் சேர்ந்த 250 பேரும் அதேபோல் தூபக்கலசத்தைப் பிடித்துக்கொண்டு யெகோவாவுக்குத் தூபம் காட்டினார்கள். (எண். 16:16-18) மேலோட்டமாகப் பார்த்தால், இவர்கள் எல்லோரும் யெகோவாவின் உண்மை ஊழியர்கள் போல்தான் தெரியும். ஆனால், ஆரோனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி வெறிபிடித்தவர்கள். (எண். 16:1-11) யெகோவா தங்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்வார் என்று மனக்கோட்டை கட்டினார்கள். ஆனால், யெகோவாவுக்கு அவர்களுடைய மனதில் இருப்பதுகூட தெரியும். அவர்களுடைய வெளிவேஷம் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் நியமித்த ஊழியர்களுக்கு எதிராக நடந்துகொண்டது, அவருக்கு எதிராக நடந்துகொண்டதைப் போல் இருந்தது.—எரே. 17:10.
2. மோசே என்ன சொன்னார், அது எப்படி நிறைவேறியது?
2 இந்தச் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் மோசே இப்படிச் சொல்லியிருந்தார்: ‘நாளைக்குக் யெகோவா தம்முடையவன் யார் என்று காண்பிப்பார்.’ (எண். 16:5) அவர் சொன்னபடியே அடுத்த நாள், தம்மை யார் உண்மையாகச் சேவிக்கிறார்கள், யார் வெளிவேஷம் போடுகிறார்கள் என்பதை யெகோவா வெட்ட வெளிச்சமாக்கினார். “அக்கினி [யெகோவாவுடைய] சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின [கோராகையும்] இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது.” (எண். 16:35; 26:10) இதன்மூலம், ஆரோன் தம்முடைய உண்மையான ஊழியன், தாம் நியமித்த தலைமை குரு என்பதை யெகோவா காட்டினார்.—1 கொரிந்தியர் 8:3-ஐ வாசியுங்கள்.
3. (அ) பவுலின் காலத்தில் என்ன நிலைமை இருந்தது? (ஆ) யெகோவா மேலோட்டமாகப் பார்ப்பதில்லை என்று பவுலுக்கு எப்படித் தெரியும்?
3 பவுலின் காலத்திலும் இதேபோன்ற நிலைமை இருந்தது. கிறிஸ்தவ சபையில் இருந்த சிலர் பொய் போதனைகளைப் பரப்பினார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், இவர்களுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இவர்களுடைய போதனைகள் உண்மை கிறிஸ்தவர்களைப் பாதிக்க வாய்ப்பிருந்தது. இவர்கள், ‘சிலருடைய விசுவாசத்தைக் குலைத்துப்போட்டார்கள்.’ (2 தீ. 2:16-18) மோசேயின் காலத்தில் நடந்த சம்பவத்திலிருந்து யெகோவா மேலோட்டமாகப் பார்ப்பதில்லை என்று பவுல் தெரிந்துகொண்டார். இதைப்பற்றி தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
‘யெகோவா மாறாதவர்’
4. பவுல் எதை உறுதியாக நம்பினார், இதைப்பற்றி தீமோத்தேயுவுக்கு என்ன எழுதினார்?
4 தமக்கு யார் உண்மையோடு சேவை செய்கிறார்கள், யார் வெளிவேஷம் போடுகிறார்கள் என்பது யெகோவாவுக்குத் தெரியும். பவுலுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து இது தெரிகிறது. விசுவாசதுரோகிகளின் கருத்துகள் சபையை எப்படிப் பாதித்திருக்கிறது என்று சொன்ன பிறகு பவுல் இப்படி எழுதினார்: “கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம் நிலைத்து நிற்கிறது; அதில், ‘தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்’ என்றும், ‘யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் அநீதியைக் கைவிட வேண்டும்’ என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது.”—2 தீ. 2:18, 19.
5, 6. “கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம்” என்ற வார்த்தைகள் எப்படி தீமோத்தேயுவைப் பலப்படுத்தியிருக்கும்?
5 “கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம்” என்ற வாக்கியம் பைபிளில் வேறெங்குமே இல்லை. ஆனால், “அஸ்திவாரம்” என்ற வார்த்தை பைபிளில் நிறைய இடங்களில் இருக்கிறது. உதாரணத்திற்கு, இஸ்ரவேலின் தலைநகரமான எருசலேமை ‘அஸ்திவாரம்’ என்று பைபிள் சொல்கிறது. (சங். 87:1, 2) யெகோவாவின் நோக்கத்தில் இயேசுவுக்கு இருக்கும் பங்கை விளக்குவதற்கும் “அஸ்திவாரம்” என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 கொ. 3:11; 1 பே. 2:6) “கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம்” என்று சொன்னபோது பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?
6 அதற்கு என்ன அர்த்தம் என்று பவுல் சொல்லவில்லை. இருந்தாலும், அந்த வார்த்தைகள் தீமோத்தேயுவுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்கும். எப்படி? எண்ணாகமம் 16:5-ல் மோசே சொன்ன வார்த்தைகளைக் குறிப்பிட்டபோதுதான், “கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம்” என்ற வாக்கியத்தைப் பவுல் சொன்னார். இந்த வார்த்தைகள் மோசேயின் காலத்தில் நடந்த சம்பவங்களை தீமோத்தேயுவுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். கோராகுக்கு ஏற்பட்ட முடிவிலிருந்து, வெளிவேஷம் போடுகிறவர்களை யெகோவா சும்மா விடமாட்டார் என்பது தீமோத்தேயுவுக்குப் புரிந்திருக்கும். யெகோவாவுக்கு விரோதமாக கோராகுவால் செயல்பட முடியவில்லை. அதேபோல் விசுவாசதுரோகிகளால் யெகோவாவுக்கு விரோதமாகச் செயல்பட முடியாது என்பதையும் தீமோத்தேயு புரிந்துகொண்டிருப்பார்.
7. யெகோவா எப்போதுமே நீதியாக நடந்துகொள்வார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
7 யெகோவா கொடுத்திருக்கும் நியமங்கள் மாறவே மாறாது. “[யெகோவாவுடைய] ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்” என்று சங்கீதம் 33:11 சொல்கிறது. யெகோவாவின் ஆட்சியுரிமை, அவருடைய நீதி, கிருபை, உண்மைத்தன்மை மாறவே மாறாது என்று மற்ற வசனங்கள் குறிப்பிடுகின்றன. (யாத். 15:18; சங். 106:1; 112:9; 117:2) “நான் கர்த்தர், நான் மாறாதவர்” என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (மல். 3:6) யெகோவா “நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல” என்று யாக்கோபு 1:17 சொல்கிறது.
விசுவாசத்தைப் பலப்படுத்தும் வார்த்தைகள்
8, 9. பவுல் பயன்படுத்திய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 பூர்வ காலத்தில், ஒரு கட்டிடத்தைக் கட்டியவரைப் பற்றி அல்லது அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரரைப் பற்றி சில வார்த்தைகள் அதன் அஸ்திவாரத்தில் செதுக்கப்பட்டிருக்கும். இந்த உதாரணத்தை பவுல்தான் முதன்முதலில் 2 தீமோத்தேயு 2:19-ல் பயன்படுத்தினார். * ‘கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரத்தில்’ இரண்டு சொற்றொடர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. “தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்” என்றும் “யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் அநீதியைக் கைவிட வேண்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. எண்ணாகமம் 16:5-ல் (வாசியுங்கள்.) மோசே சொன்னதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது.
9 பவுல் பயன்படுத்திய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (1) யெகோவா தமக்கு உண்மையாக இருப்பவர்களை நேசிக்கிறார், (2) யெகோவா அநீதியை வெறுக்கிறார். யெகோவாவை நேசிக்கிறவர்கள் இந்த இரண்டு நியமங்களையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த விஷயங்கள் விசுவாசதுரோகத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
10. பவுலின் காலத்தில் இருந்த விசுவாசதுரோகம் உண்மை கிறிஸ்தவர்களை எப்படிப் பாதித்தது?
10 விசுவாசதுரோகிகளைப் பார்த்து தீமோத்தேயுவும் மற்ற உண்மை கிறிஸ்தவர்களும் எரிச்சல் அடைந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஆட்களை யெகோவா ஏன் விட்டுவைத்திருக்கிறார் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். போலி கிறிஸ்தவர்களின் வெளிவேஷத்தை யெகோவா பார்க்கிறாரா இல்லையா என்றுகூட நினைத்திருக்கலாம்.—அப். 20:29, 30.
11, 12. பவுலின் கடிதம் தீமோத்தேயுவை எப்படிப் பலப்படுத்தியிருக்கும்?
11 பவுலின் கடிதம் தீமோத்தேயுவை நிச்சயம் பலப்படுத்தியிருக்கும். மோசே காலத்தில் வெளிவேஷக்காரர்களின் முகத்திரையை யெகோவா கிழித்ததையும் உண்மை ஊழியர்களை அங்கீகரித்ததையும் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். இதன்மூலம் பவுல் ஒரு முக்கிய விஷயத்தைப் புரிய வைத்தார். கிறிஸ்தவ சபையில் போலி கிறிஸ்தவர்கள் இருந்தாலும், மோசேயின் காலத்தை போலவே ‘தமக்குரியவர்களை’ யெகோவா அறிந்திருக்கிறார் என்பதைப் புரிய வைத்தார்.
12 யெகோவா என்றும் மாறாதவர், நாம் அவரை முழுமையாக நம்பலாம். மனந்திரும்ப மனமில்லாதவர்களை சீக்கிரத்தில் அழித்துவிடுவார். ஏனென்றால், அவர் அநீதியை வெறுக்கிறார்; ‘யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்களும்’ அநீதியை வெறுக்க வேண்டும். எனவே, தீமோத்தேயுவும் போலி கிறிஸ்தவர்களின் அநீதியான செயல்களை வெறுத்து ஒதுக்க வேண்டியிருந்தது. *
விசுவாசம் வீண்போகாது
13. நாம் எதில் நிச்சயமாக இருக்கலாம்?
13 பவுலின் வார்த்தைகளிலிருந்து நாமும் பலம் பெறலாம். முதலாவதாக, தம் உண்மை ஊழியர்கள் யார் என்பது யெகோவாவுக்குத் தெரியும். யாரென்று தெரிந்துகொள்வதோடு அவர் நிறுத்திக்கொள்வதில்லை; ‘தமக்குரியவர்கள்மீது’ ஆழ்ந்த அக்கறையும் காட்டுகிறார். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, [யெகோவாவுடைய] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 16:9) “சுத்தமான இருதயத்தோடு” நாம் யெகோவாவுக்கு செய்யும் சேவை நிச்சயம் வீண்போகாது.—1 தீ. 1:5; 1 கொ. 15:58.
14. எப்படிப்பட்ட வணக்கத்தை யெகோவா வெறுக்கிறார்?
14 இரண்டாவதாக, போலித்தனமான வணக்கத்தை யெகோவா வெறுக்கிறார். ‘கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருப்பதால்,’ ‘உத்தம இருதயமுள்ளவர்கள்’ யார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என்று நீதிமொழிகள் 3:32 சொல்கிறது. அப்படியென்றால், யெகோவா வெறுக்கும் காரியங்களை ரகசியமாகச் செய்தாலும் அவரால் பார்க்க முடியும். அப்படிச் செய்யும் நபர் மற்றவர்கள் கண்ணில் மண்ணை தூவலாம். ஆனால், யெகோவாவை ஏமாற்ற முடியாது. ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்’ என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 28:13; 1 தீமோத்தேயு 5:24-ஐயும் எபிரெயர் 4:13-ஐயும் வாசியுங்கள்.
15. நாம் எதைத் தவிர்க்க வேண்டும், ஏன்?
15 பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவை உண்மையாகச் சேவித்து வருகிறார்கள். ஒருவர் வேண்டுமென்றே யெகோவாவுக்கு விரோதமாகச் செயல்பட மாட்டார். ஆனால், விசுவாசதுரோகம் மோசேயின் காலத்திலும் முதல் நூற்றாண்டிலும் இருந்ததென்றால் நம் நாளிலும் தலைதூக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. (2 தீ. 3:1, 5) அதற்காக, மற்றவர்களை நாம் எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டுமா? அவர்கள் வெளிவேஷம் போடுகிறவர்கள் என்று முடிவு கட்டுவது சரியா? அப்படிச் செய்யவே கூடாது. நம் சகோதர சகோதரிகளைக் காரணம் இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. (ரோமர் 14:10-12-ஐயும் 1 கொரிந்தியர் 13:7-ஐயும் வாசியுங்கள்.) அப்படிச் செய்தால் அது யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் பாதிக்கும்.
16. (அ) யெகோவாவை உண்மையாகச் சேவிக்கிறோமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (ஆ) “ சோதித்துப் பாருங்கள் . . . ஆராய்ந்து பாருங்கள்” என்ற பெட்டியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 ஒவ்வொரு கிறிஸ்தவனும் “தன்தன் செயல்களைச் சோதித்துப் பார்க்க” வேண்டும். (கலா. 6:4) நாம் பாவிகளாக இருப்பதால் நம்மை அறியாமலேயே யெகோவாவுக்கு விரோதமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. (எபி. 3:12, 13) அதனால், யெகோவாவை ஏன் சேவிக்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ‘யெகோவாவை நேசிப்பதாலும் அவருடைய ஆட்சிதான் சிறந்தது என்பதாலும் நான் அவரைச் சேவிக்கிறேனா? அல்லது பூஞ்சோலை பூமியில் அவர் தரப்போகும் ஆசீர்வாதங்களுக்காக மட்டும் அவரைச் சேவிக்கிறேனா? (வெளி. 4:11) நம் எண்ணங்களையும் செயல்களையும் சோதித்துப் பார்த்தால் நாம் யெகோவாவை உண்மையாகச் சேவிக்கிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
உண்மையாகச் சேவிப்பதன் பலன்கள்
17, 18. நாம் ஏன் வெளிவேஷம் போடக் கூடாது?
17 யெகோவாவை உண்மையாகச் சேவித்தால் ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிப்போம். “குற்றமற்றவன் எனக் கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று சங்கீதக்காரனான தாவீது எழுதினார். (சங். 32:2, ஈஸி டு ரீட் வர்ஷன்) வெளிவேஷம் போடாமல் யெகோவாவை உண்மையாகச் சேவித்தால் நாம் இப்போதும் எப்போதும் சந்தோஷமாக இருப்போம்.
18 சீக்கிரத்தில் யெகோவா வெளிவேஷம் போடுகிறவர்களை அழித்துவிடுவார். ‘தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் காண்பீர்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (மல். 3:18) “யெகோவாவுடைய கண்கள் நீதிமான்களைப் பார்க்கின்றன, அவருடைய காதுகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன” என்பதைத் தெரிந்துகொள்வது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!—1 பே. 3:12.
^ பாரா. 8 பவுல் தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதி சில பத்தாண்டுகளுக்கு பிறகுதான் வெளிப்படுத்துதல் எழுதப்பட்டது. 12 அப்போஸ்தலர்களுடைய பெயர்களும் 12 ‘அஸ்திவாரக் கற்களில்’ எழுதப்பட்டிருப்பதாக வெளிப்படுத்துதல் 21:14 சொல்கிறது.
^ பாரா. 12 யெகோவாவைப் போலவே நாம் எப்படி அநீதியை வெறுத்து ஒதுக்குவது என்பதை அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம்.