Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?

“ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?

“சமாளிப்பதற்குக் கடினமான கொடிய” காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1-5) ஒவ்வொரு நாளும் நம் விசுவாசத்திற்கு பல சோதனைகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு காலம் வரும் என்று இயேசுவுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி வரை உண்மையோடு இருக்க உதவி செய்வதாகத் தம் சீடர்களுக்கு வாக்குக் கொடுத்தார். “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என்று சொன்னார். (மத். 24:3, 13; 28:20) “ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிப்பதற்காக” இயேசு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமிப்பதாகச் சொன்னார்.—மத். 24:45, 46.

இந்த அடிமையை இயேசு 1919-ல் நியமித்தார். பல மொழிகளைப் பேசும் மக்கள், நற்செய்தியைத் தெரிந்துகொள்ள இவர்கள் உதவுகிறார்கள். (மத். 24:14; வெளி. 22:17) அதற்காக நிறைய பைபிள் பிரசுரங்களை வெளியிடுகிறார்கள். ஆனால், எல்லா பிரசுரங்களும் எல்லா மொழிகளிலும் கிடைப்பதில்லை. சில தகவல்கள் நம்முடைய வெப் சைட்டில் மட்டுமே கிடைக்கின்றன. jw.org வெப் சைட்டிலிருக்கும் வீடியோக்களையும் கட்டுரைகளையும் எல்லோராலும் பார்க்க முடிவதில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு பைபிளைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியுமா? பதிலைத் தெரிந்துகொள்ள பின்வரும் நான்கு கேள்விகளைச் சிந்திக்கலாம்.

 1 யெகோவாவோடுள்ள நம் பந்தத்தை வளர்க்க எது முக்கியமாக உதவுகிறது?

கற்களை அப்பமாக்கும்படி சாத்தான் ஒருமுறை இயேசுவிடம் சொன்னான். அப்போது, “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்று இயேசு சொன்னார். (மத். 4:3, 4) யெகோவா நமக்குச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பைபிளில் இருக்கிறது. (2 பே. 1:20, 21) யெகோவாவோடுள்ள நம் பந்தத்தை வளர்க்க பைபிள்தான் முக்கியமாக உதவுகிறது.—2 தீ. 3:16, 17.

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ, 120-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் இன்னும் நிறைய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மற்ற மொழிபெயர்ப்புகளிலும் பைபிள் கிடைக்கிறது. ஏனென்றால், “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” யெகோவாவுடைய விருப்பம். (1 தீ. 2:3, 4) அவர் மக்களுடைய இருதயத்தைப் பார்க்கிறார். பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் ஆட்களுக்கு தம்முடைய அமைப்பின் மூலமாக ஏற்ற வேளையில் ‘உணவை’ தருகிறார்.—எபி. 4:13; மத். 5:3, 6; யோவா. 6:44; 10:14.

2 நம் விசுவாசத்தைப் பலப்படுத்த பிரசுரங்கள் எப்படி உதவுகின்றன?

நம் விசுவாசம் பலமாக இருக்க வேண்டுமென்றால், பைபிளை வாசித்தால் மட்டும் போதாது; அதைப் புரிந்துகொள்ள வேண்டும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். (யாக். 1:22-25) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த எத்தியோப்பிய அதிகாரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் ஏசாயா புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது பிலிப்பு அவரிடம், “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார். “ஒருவர் சொல்லிக் கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று அந்த அதிகாரி பிலிப்புவிடம் சொன்னார். (அப். 8:26-31) அவர் படித்த விஷயத்தை புரிந்துகொள்ள பிலிப்பு அவருக்கு உதவினார். இயேசுவைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டவுடன் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். (அப். 8:32-38) நம்முடைய பிரசுரங்களும் பைபிள் போதனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அதனால், படிக்கும் விஷயங்களை நம்மால் தியானிக்க முடிகிறது; வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முடிகிறது.—கொலோ. 1:9, 10.

விதவிதமான தகவல்களை, நிறைய தகவல்களை பிரசுரங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். (ஏசா. 65:13) உதாரணத்திற்கு, காவற்கோபுர பத்திரிகை பைபிள் தீர்க்கதரிசனங்களை விளக்குகிறது, முக்கியமான பைபிள் போதனைகளை புரிந்துகொள்ள உதவுகிறது, பைபிள் சொல்கிறபடி வாழ உந்துவிக்கிறது. 210-க்கும் அதிகமான மொழிகளில் இந்தப் பத்திரிகை கிடைக்கிறது. விழித்தெழு! பத்திரிகையின் மூலம் யெகோவாவுடைய படைப்புகளைப் பற்றிய அருமையான தகவல்களைத் தெரிந்துகொள்கிறோம்; பைபிள் ஆலோசனைகளை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்கிறோம். கிட்டத்தட்ட 100 மொழிகளில் இந்தப் பத்திரிகை கிடைக்கிறது. (நீதி. 3:21-23; ரோ. 1:20) மற்ற பைபிள் பிரசுரங்கள் 680-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. உங்கள் மொழியில் கிடைக்கும் எல்லா பிரசுரங்களையும் வாசிக்கிறீர்களா? தினமும் பைபிளை வாசிக்கிறீர்களா?

சபைக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நாம் கேட்கும் பேச்சுகளும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து வந்ததுதான். அந்தப் பேச்சுகளையும் நாடகங்களையும் நடிப்புகளையும் பேட்டிகளையும் பார்க்கும்போது நாம் சந்தோஷப்படுகிறோம். யெகோவா தம்முடைய அமைப்பின் மூலமாகத் தொடர்ந்து ஏராளமான ‘உணவை’ கொடுத்து வருகிறார். அதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!—ஏசா. 25:6.

 3 அமைப்பு வெளியிடும் எல்லா பிரசுரங்களும் நம் மொழியில் இல்லை என்றால், விசுவாசத்தில் பலவீனமாகிவிடுவோமா?

மற்ற மொழிகளில் வெளிவரும் பிரசுரங்கள் நம் மொழியில் இல்லை என்பதால் நாம் விசுவாசத்தில் பலவீனமாகிவிட மாட்டோம். அப்போஸ்தலர்களின் காலத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். இயேசுவின் மற்ற சீடர்களைவிட அப்போஸ்தலர்களுக்கு அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. (மாற். 4:10; 9:35-37) அதனால், அந்தச் சீடர்கள் விசுவாசத்தில் பலவீனமாகிவிட்டார்களா? இல்லவே இல்லை. அவர்கள் விசுவாசத்தில் பலமாக இருப்பதற்குத் தேவையான தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தது.—எபே. 4:20-24; 1 பே. 1:8.

இயேசுவைப் பற்றிய எல்லா விஷயங்களும் பைபிளில் இல்லை. “இயேசு வேறுபல காரியங்களையும் செய்தார்; அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் சுருள்களை உலகமே கொள்ளாது” என்று யோவான் சொன்னார். (யோவா. 21:25) முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு, நம்மைவிட அதிகமாக இயேசுவைப் பற்றித் தெரியும். இருந்தாலும், நாம் இயேசுவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவரைப் பின்பற்றுவதற்குத் தேவையான தகவல்களை யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.—1 பே. 2:21.

அப்போஸ்தலர்கள் முதல் நூற்றாண்டில் சபைகளுக்கு நிறைய கடிதங்களை எழுதினார்கள். பல சபைகளுக்கு பவுல் எழுதிய கடிதங்களை பைபிளில் நாம் படிக்கிறோம். ஆனால், லவோதிக்கேயா சபைக்கு அவர் எழுதிய கடிதம் பைபிளில் இல்லை. (கொலோ. 4:16) அந்தக் கடிதம் இல்லை என்பதால் நாம் விசுவாசத்தில் பலவீனமாகிவிட்டோமா? இல்லை. நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும். நாம் விசுவாசத்தில் பலமாக இருப்பதற்குத் தேவையான தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்.—மத். 6:8.

நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும். நாம் விசுவாசத்தில் பலமாக இருப்பதற்குத் தேவையான தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்

சில மொழிகளில் நிறைய பிரசுரங்கள் கிடைக்கலாம். சில மொழிகளில் குறைந்த பிரசுரங்கள் மட்டுமே கிடைக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, உங்கள் மொழியில் கிடைக்கும் பிரசுரங்களைத் தவறாமல் வாசியுங்கள். உங்கள்மீது அக்கறை இருப்பதால்தான் யெகோவா அவற்றைக் கொடுத்திருக்கிறார். உங்கள் மொழியில் நடக்கும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த முடியும்.—சங். 1:2; எபி. 10:24, 25.

4 jw.org வெப் சைட்டில் வெளிவரும் தகவல்கள் நமக்குக் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

நம்முடைய பத்திரிகைகளும் பிரசுரங்களும் வெப் சைட்டில் வெளிவருகின்றன. தம்பதிகள், பெற்றோர்கள், டீனேஜ் பிள்ளைகள், சிறுவர்கள் என எல்லோருக்கும் தேவையான தகவல்கள் அதில் இருக்கின்றன. நிறைய பேர் இந்தத் தகவல்களைக் குடும்ப வழிபாட்டில் பயன்படுத்துகிறார்கள். ஆளும் குழுவின் வருடாந்தர கூட்டம், கிலியட் பட்டமளிப்பு விழா பற்றிய தகவல்களும் வெப் சைட்டில் இருக்கின்றன. இயற்கை பேரழிவுகளால் நம் சகோதர சகோதரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகள் பற்றியும் நம் வெப் சைட்டிலிருந்து தெரிந்துகொள்ளலாம். (1 பே. 5:8, 9) ஊழியத்திலும் வெப் சைட்டை நாம் சிறப்பாகப் பயன்படுத்தலாம். தடை செய்யப்பட்ட நாடுகளிலும் வெப் சைட் மூலமாக நிறைய பேர் நற்செய்தியைத் தெரிந்துகொள்கிறார்கள்.

வெப் சைட்டைப் பயன்படுத்த முடியாவிட்டாலும் நம்மால் விசுவாசத்தில் பலமாக இருக்க முடியும். ஏனென்றால், பிரசுரங்களின் மூலம் நமக்குத் தேவையான தகவல்களை யெகோவா கொடுத்து வருகிறார். அதனால், jw.org வெப் சைட்டைப் பயன்படுத்துவதற்காக விலையுயர்ந்த கம்ப்யூட்டரையோ மொபைல் ஃபோனையோ வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. வெப் சைட்டைப் பயன்படுத்த வசதி இல்லாதவர்களுக்கு அதிலிருக்கும் ஓரிரு தகவல்களை சிலர் ப்ரிண்ட் எடுத்து கொடுக்கிறார்கள். ஆனால், சபையில் இதற்காக ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.

நாம் விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக இருக்கத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து தருவதற்காக இயேசுவுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை, “ஏற்ற வேளையில்” யெகோவா உணவளிப்பார் என்பதில் நாம் நம்பிக்கையோடிருக்கலாம்.