Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தம்மிடம் நெருங்கி வர யெகோவா உதவுகிறார்

தம்மிடம் நெருங்கி வர யெகோவா உதவுகிறார்

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக். 4:8.

1. நாம் எதை விரும்புவதில்லை, யாருடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்?

நாம் யாருமே தனியாக இருக்க விரும்புவதில்லை; நம் எல்லோருக்குமே நண்பர்கள் தேவை. நம்மை நேசிக்கிற... மதிக்கிற... புரிந்துகொள்கிற... நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். விசேஷமாக, நம் படைப்பாளரான யெகோவா தேவனோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வதுதான் ரொம்ப முக்கியம்.—பிர. 12:1.

2. யெகோவா எதை விரும்புகிறார், ஆனால் நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்?

2 நாம் யெகோவாவிடம் நெருங்கி வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவரிடம் நெருங்கிப்போனால், அவரும் நம்மிடம் நெருங்கி வருவார். (யாக். 4:8) இதைப் படிக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! ஆனால், கடவுளிடம் நெருங்கிப்போக தங்களுக்குத் தகுதியில்லை என்றும் கடவுள் எங்கேயோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறார் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். அப்படியென்றால், நாம் கடவுளிடம் நெருங்கிப்போக முடியாதா?

3. நாம் யெகோவாவிடம் நெருங்கிப்போக முடியுமா?

3 யெகோவா யாருக்குமே தூரமானவர் இல்லை. நாம் அவரிடம் நிச்சயம் நெருங்கிப்போக முடியும். (அப்போஸ்தலர் 17:26, 27-ஐயும்; சங்கீதம் 145:18-ஐயும் வாசியுங்கள்.) நாம் பாவிகளாக, குறையுள்ளவர்களாக இருந்தாலும் யெகோவா நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார். (ஏசாயா 41:8; 55:6) “ஜெபத்தை கேட்கிறவரே, எல்லா மக்களும் உங்களிடம் வருவார்கள்; உங்களிடம் நெருங்கி வர நீங்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ,  யாரை அழைக்கிறீர்களோ அவர் சந்தோஷமானவர்” என்று தாவீது எழுதினார். (சங். 65:2, 4, NW) யூதாவை ஆட்சி செய்த ஆசா ராஜாவின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். அவர் எப்படி யெகோவாவிடம் நெருங்கிப்போனார் என்றும் யெகோவா எப்படி அவரிடம் நெருங்கி வந்தார் என்றும் பார்க்கலாம். *

ஆசாவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

4. ஆசா என்ன செய்தார், மக்களை என்ன செய்யச் சொன்னார்?

4 ஆசா ராஜாவானபோது, யெகோவாவின் ஆலயத்தில் ஒழுக்கங்கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டிருந்தன. மக்கள் சிலை வழிபாட்டில் ஊறிப்போயிருந்தார்கள். இவை எல்லாவற்றையும் ஆசா ஒழித்துக் கட்டினார். (1 இரா. 15:9-13) மக்கள் யெகோவாவைப் பின்பற்றும்படி அவர் கட்டளையிட்டார். ‘[யெகோவாவே] நம் முற்பிதாக்களால் ஆராதிக்கப்பட்ட தேவன். அவரது கட்டளைகளையும் சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டும்’ என்று ஆசா சொன்னார். இப்படி உண்மை வணக்கத்திற்குப் பக்தி வைராக்கியம் காட்டியதால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார். அவருடைய ஆட்சியில், முதல் பத்து வருடங்களுக்கு மக்கள் போரில்லாமல் சமாதானமாக இருந்தார்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால்தான் “அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்று மக்களிடம் ஆசா சொன்னார்.—2 நா. 14:1-7, ஈஸி டு ரீட் வர்ஷன்.

5. யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை ஆசா எப்படிக் காட்டினார், யெகோவா எப்படி ஆசாவிற்கு உதவினார்?

5 ஆசாவை எதிர்த்துப் போர் செய்ய எத்தியோப்பியனாகிய சேரா வந்தான். அவனோடு 10 லட்சம் போர் வீரர்களும் 300 ரதங்களும் இருந்தன. (2 நா. 14:8-10) ஆனால், ஆசாவிடம் 5 லட்சத்து 80 ஆயிரம் போர் வீரர்கள்தான் இருந்தார்கள். ஆசாவின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? கடவுள் ஏன் இந்தக் கஷ்டத்தைத் தடுக்கவில்லை என்று நினைத்திருப்பீர்களா? நீங்களே சமாளித்துவிட முடியும் என்று நினைத்திருப்பீர்களா? அல்லது யெகோவா உங்களை நிச்சயம் காப்பாற்றுவார் என்று நம்பியிருப்பீர்களா? ஆசாவுக்கு யெகோவாவோடு நெருங்கிய பந்தம் இருந்ததால், யெகோவாவை அவர் முழுமையாக நம்பினார். “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்” என்று ஜெபம் செய்தார். ஆசாவின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார், எத்தியோப்பியரைத் தோற்கடித்தார்; அவர்களில் ஒருவர்கூட உயிர்தப்பவில்லை.—2 நா. 14:11-13.

6. நாம் எப்படி ஆசாவைப் பின்பற்றலாம்?

6 யெகோவா காப்பாற்றுவார் என்று ஆசா எப்படி அவ்வளவு உறுதியாக நம்பினார்? அவர் “யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்தார்,” “யெகோவாமேல் முழு இருதயத்தோடு நம்பிக்கை வைத்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 15:11, 14, NW) ஆசாவைப் போல நாமும் யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவாவிடம் நெருங்கிப்போக முடியும். நாம் அவரோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள அவரே உதவுகிறார். என்ன இரண்டு வழிகளில் உதவியிருக்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.

மீட்புவிலையைக் கொடுத்திருக்கிறார்

7. (அ) யெகோவாவிடம் நெருங்கிப்போக என்ன காரணங்கள் இருக்கின்றன? (ஆ) என்ன மிகச்சிறந்த விதத்தில் யெகோவா நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார்?

7 யெகோவா நமக்காக அழகான பூமியைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் உயிர்வாழத் தேவையான எல்லாவற்றையும் தந்திருக்கிறார். (அப். 17:28; வெளி. 4:11) உண்மையும் விவேகமும் உள்ள அடிமை மூலம் ஏற்ற வேளையில் நமக்கு உணவளிக்கிறார். (லூக். 12:42) நாம் செய்யும் ஜெபங்களையும் கவனமாகக் கேட்கிறார். (1 யோ. 5:14) எல்லாவற்றிற்கும் மேலாக, மீட்புவிலையைக் கொடுத்து நாம் அவரிடம் நெருங்கிப்போக உதவியிருக்கிறார். (1 யோவான் 4:9, 10, 19-ஐ வாசியுங்கள்.) நாம் மீட்பு பெறுவதற்காக தம்முடைய மகனையே பலியாகக் கொடுத்திருக்கிறார். இந்தப் பலியில் விசுவாசம் வைத்தால்தான் நாம் முடிவில்லா வாழ்வைப் பெற முடியும்.—யோவா. 3:16.

8, 9. யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல மீட்புவிலை எப்படி உதவுகிறது?

 8 மீட்புவிலையை யெகோவா எல்லோருக்காகவும்தான் கொடுத்தார். இயேசுவுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்கூட மீட்புவிலையிலிருந்து நன்மையடைய முடியும். எப்படி? மீட்புவிலையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைச் சொன்னபோது, அது கண்டிப்பாக நிறைவேறும் என்று யெகோவாவுக்குத் தெரியும். ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்பவர். (ஆதி. 3:15) அதனால்தான் “கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலை,” ‘முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களையும்’ போக்கியது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோ. 3:21-26) இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதால் எவ்வளவு நன்மைகள்!

9 இயேசுவின் மூலமாக மட்டும்தான் நாம் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடியும். “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 5:6-8) யெகோவாவும் இயேசுவும் நம்மை நேசிப்பதால்தான் மீட்புவிலையைக் கொடுத்தார்கள்; நாம் உண்மையோடு இருப்பதால் கொடுக்கவில்லை. அதனால்தான் இயேசு இப்படிச் சொன்னார்: “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் எவனும் என்னிடம் வர முடியாது.” “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.” (யோவா. 6:44; 14:6) கடவுள் தம் சக்தியின் மூலம் நம்மை அவரிடம் ஈர்க்கிறார். இயேசுவின்மீது விசுவாசம் வைத்தால்தான் நாம் யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல முடியும். அப்படி விசுவாசம் வைப்பவர்களை யெகோவா நண்பர்களாக ஏற்றுக்கொண்டு முடிவில்லா வாழ்வைக் கொடுக்கிறார். (யூதா 20, 21-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல உதவும் இரண்டாவது வழியைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பைபிளைக் கொடுத்திருக்கிறார்

10. யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல பைபிள் எப்படி உதவுகிறது?

10 பைபிள் யெகோவாவுடைய சக்தியால் எழுதப்பட்டது. அதைக் கொடுத்து, தம்மிடம் நெருங்கி வர யெகோவா உதவியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் மட்டும் இதுவரை 14 பைபிள் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்களை பார்த்தோம். பைபிள் இல்லையென்றால் யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல முடியும் என்ற விஷயமே நமக்குத் தெரிந்திருக்காது. மீட்புவிலையைப் பற்றியும் யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல இயேசு எப்படி உதவுகிறார் என்பதைப் பற்றியும் தெரிந்திருக்காது. யெகோவா நம்மை ஏன் படைத்தார் என்பதைப் பற்றியும் தெரிந்திருக்காது. யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்” என்று யாத்திராகமம் 34:6, 7 சொல்கிறது. இதைப் படிக்கும்போது யெகோவாவிடம் நாம் இன்னும் நெருங்கிப்போகத் தூண்டப்படுகிறோம். பைபிள் இல்லையென்றால், யெகோவாவுடைய நல்ல நல்ல குணங்களைப் பற்றியெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்? யெகோவாவைப் பற்றி நாம் எந்தளவு தெரிந்துகொள்கிறோமோ அந்தளவு அவரிடம் நெருங்கிச் செல்வோம்.

11. யெகோவாவைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? (ஆரம்பப் படம்)

11 கடவுளிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தின் முகவுரை நட்பைப் பற்றி இப்படிச் சொல்கிறது: ‘நாம் ஒருவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும்போது, அவருடைய நல்ல குணங்களைப் பார்த்துக் கவரப்படுவோம்; அப்போது அவரிடம் நெருங்கிச் செல்ல தூண்டப்படுவோம்.’ அப்படியென்றால், யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கு அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பைபிளைப் படிக்க வேண்டும். நாம் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. அதற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

12. பைபிளை எழுத யெகோவா ஏன் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார்?

12 யெகோவா, பைபிளை எழுத தேவதூதர்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஏனென்றால், தேவதூதர்களுக்கும் நம்மேல் அக்கறை இருக்கிறது. நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்துகொள்ள அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள். (1 பே. 1:12) யெகோவாவுடைய செய்தியை மனிதர்களைவிட சிறந்த விதத்தில் அவர்களால் எழுதியிருக்க முடியும். ஆனால், யெகோவா அவர்களைப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால், நமக்கிருக்கும்  தேவைகளோ, உணர்ச்சிகளோ, பலவீனங்களோ அவர்களுக்குக் கிடையாது. அதனால்தான் பைபிளை எழுத மனிதர்களை யெகோவா தேர்ந்தெடுத்தார். அந்த மனிதர்கள் நம்மைப் போலவே தவறு செய்தார்கள், பயந்தார்கள்; வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்தித்தார்கள்; நம்மைப்போல் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்தார்கள். அதையெல்லாம் பற்றி பைபிளில் எழுதியிருக்கிறார்கள். அதைப் படிக்கும்போது நம்மை அவர்களுடைய இடத்தில் வைத்துப் பார்க்க முடிகிறது. பைபிளை எழுதிய எல்லோருக்கும் ‘நமக்கிருக்கும் உணர்ச்சிகள்தான் இருந்தன.’—யாக். 5:17.

யோனாவிடமும் பேதுருவிடமும் யெகோவா நடந்துகொண்ட விதத்தைப் பற்றிப் படிக்கும்போது நாம் எப்படி யெகோவாவிடம் நெருங்கிச் செல்கிறோம்? (பாராக்கள் 13, 15)

13. யோனா செய்த ஜெபத்தைப் படிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

13 சில உதாரணங்களைக் கவனியுங்கள். யோனாவிற்குக் கடவுள் ஒரு முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார். ஆனால், யோனா அதைச் செய்யாமல் வேறு பக்கமாக ஓடிவிட்டார். அவரைக் கடலில் தூக்கிப் போட்டபோது ஒரு மீன் அவரை விழுங்கியது. அப்போது, “எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது. ஆனால் பிறகு நான் கர்த்தரை நினைத்தேன்” என்று யோனா மீனின் வயிற்றிலிருந்து ஜெபம் செய்தார். (யோனா 1:3, 10; 2:1-9, ஈஸி டு ரீட் வர்ஷன்) இதைப் படிக்கும்போது யோனாவின் வேதனையை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்தப் பதிவை ஒரு தேவதூதர் எழுதியிருந்தால் யோனாவுடைய உணர்ச்சிகளை அவரால் முழுமையாக விளக்கியிருக்க முடியுமா?

14. ஏசாயாவின் உணர்ச்சிகளை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடிகிறது?

14 யெகோவா சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பதை ஏசாயா ஒரு தரிசனத்தில் பார்த்தார். அப்போது “நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: ‘ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்’” என்று ஏசாயா சொன்னார். (ஏசா. 6:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஏசாயா, தான் ஒரு பாவி என்றும் யெகோவாவிடம் பேச தனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் நினைத்தார்.  ஒரு தேவதூதனால் இப்படிச் சொல்லியிருக்க முடியுமா? ஏசாயாவைப் போல நாமும் குறையுள்ள மனிதர்கள்தான். அதனால், ஏசாயா எப்படி உணர்ந்திருப்பார் என்று நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

15, 16. (அ) பைபிளை எழுதியவர்களுடைய உணர்ச்சிகளை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடிகிறது? உதாரணம் கொடுங்கள். (ஆ) யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல எது உதவும்?

15 யாக்கோபு தன்னை “தகுதியற்றவன்” என்று சொன்னார். “நான் பாவியான மனுஷன்” என்று பேதுரு சொன்னார். தேவதூதர்களால் இப்படியெல்லாம் சொல்லியிருக்க முடியுமா? (ஆதி. 32:10; லூக். 5:8) இயேசுவின் சீடர்கள் சில நேரங்களில் “பயந்துபோனார்கள்.” பவுலுக்கும் மற்றவர்களுக்கும் துன்புறுத்துதல் வந்தபோது பிரசங்கிக்க தைரியம் தேவைப்பட்டது. (யோவா. 6:19; 1 தெ. 2:2) தேவதூதர்களுக்கு இதுபோல் தைரியம் தேவைப்பட்டிருக்குமா? தேவதூதர்கள் குறையே இல்லாதவர்கள், மனிதர்களைவிட பலசாலிகள். ஆனால், நம்மைப் போன்ற குறையுள்ள மனிதர்கள் பைபிளை எழுதியதால்தான் அவர்களுடைய உணர்ச்சிகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நாம் பைபிளைப் படிக்கும்போது, ‘சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுகிறோம்; அழுகிறவர்களோடு அழுகிறோம்.’—ரோ. 12:15.

16 தம் ஊழியர்களிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்று படிக்கும்போது, அவரைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். நம்மைப் போன்ற குறையுள்ள மனிதர்களிடம் அவர் எவ்வளவு பொறுமையாக, அன்பாக நடந்துகொண்டார், அவர்களிடம் எப்படி நெருங்கிச் சென்றார் என்று புரிந்துகொள்ள முடியும். யெகோவாவைப் பற்றிப் படிக்க படிக்க அவர்மேல் உள்ள அன்பு அதிகமாகும். அவரிடம் நாம் இன்னும் நெருங்கிச் செல்வோம்.சங்கீதம் 25:14-ஐ வாசியுங்கள்.

யெகோவாவைவிட்டு விலகிப் போய்விடாதீர்கள்

17. (அ) அசரியா என்ன ஆலோசனை கொடுத்தார்? (ஆ) ஆசா என்ன செய்தார், அதனால் என்ன நடந்தது?

17 யூதாவின் ராஜாவான ஆசாவிடமிருந்து நாம் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம். எத்தியோப்பிய ராஜாவைத் தோற்கடித்த பிறகு, தீர்க்கதரிசியான அசரியா அவருக்கு ஒரு ஆலோசனை கொடுத்தார்: “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.” (2 நா. 15:1, 2) ஆசா கொஞ்ச காலத்திற்கு பிறகு யெகோவாவைவிட்டு விலகிப்போய்விட்டார். இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் போருக்கு வந்தபோது ஆசா பயந்துபோனார். யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக பொய் தெய்வங்களை வணங்கிய சீரியா தேசத்திடம் உதவி கேட்டுப் போனார். அதனால் தீர்க்கதரிசியான அனானி மூலமாக யெகோவா இப்படிச் சொன்னார்: “இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும்.” (2 நா. 16:1-9) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்?

18, 19. (அ) யெகோவாவிடமிருந்து விலகிப்போயிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) யெகோவாவிடம் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

18 யெகோவாவைவிட்டு நாம் ஒருபோதும் விலகிப்போய்விடக் கூடாது. அப்படி விலகிப்போயிருந்தால் உடனடியாக அவரிடம் நெருங்கி வர வேண்டும். “இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு” என்று ஓசியா 12:6 சொல்கிறது. மீட்புவிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது, பைபிளை ஆழ்ந்து படிக்கும்போது யெகோவாவிடம் இன்னும் நெருங்கிச் செல்வோம்.உபாகமம் 13:4-ஐ வாசியுங்கள்.

19 “எனக்கோ, தேவனோடு நெருங்கியிருப்பதே நல்லது” என்று ஆசாப் சொன்னார். (சங். 73:28, NW) நாமும் எப்போதும் யெகோவாவிடம் நெருங்கி இருக்க வேண்டும். யெகோவாவைப் பற்றி புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்போது யெகோவாமேல் நமக்கு இருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும். யெகோவாவிடம் நாம் நெருங்கிச் சென்றால், அவரும் நம்மிடம் நெருங்கி வருவார்.

^ பாரா. 3 ஆகஸ்ட் 15, 2012 காவற்கோபுரத்தில், உங்கள் செயல்களுக்கேற்ற கைமாறு கிடைக்கும்’ என்ற கட்டுரையைப் பாருங்கள். அதிலிருந்து ஆசாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.