Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளைப் பயன்படுத்துங்கள்

பைபிளைப் பயன்படுத்துங்கள்

“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது.”—எபி. 4:12.

1, 2. யெகோவா மோசேயை என்ன செய்யச் சொன்னார், அவருக்கு எப்படி நம்பிக்கை அளித்தார்?

உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய அதிகாரியின் முன் நிற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். கடவுள் சொன்ன செய்தியை அவரிடம் சொல்ல வேண்டும். உங்களுக்கு எப்படி இருக்கும்? பயமாகவும் பதட்டமாகவும் இருக்கும். வாயில் வார்த்தையே வராது. அவரிடம் என்ன பேசுவதென்று ரொம்ப நேரம் யோசித்திருப்பீர்கள். கடவுளுடைய பிரதிநிதியாக உங்களால் தைரியமாகப் பேச முடியுமா?

2 இந்த நிலைமையில்தான் மோசேயும் இருந்தார். மோசே ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவர்.’ (எண். 12:3) ஆனால், தலைக்கனம் பிடித்த பார்வோனிடம் பேசுவதற்கு யெகோவா மோசேயைத்தான் அனுப்பினார். (யாத். 5:1, 2) எகிப்தில் அடிமைகளாக இருந்த லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்யும்படி பார்வோனிடம் கட்டளையிடச் சொன்னார். அப்போது மோசே, “பார்வோனிடம் போவதற்கும் எகிப்திலிருந்து இஸ்ரவேலரை அழைத்து வருவதற்கும் நான் யார்?” என்று யெகோவாவிடம் கேட்டார். பார்வோனிடம் பேச தனக்கு தகுதியில்லை என்று நினைத்தார். ஆனால், “நான் உன்னோடே இருப்பேன்” என்று யெகோவா அவருக்கு நம்பிக்கையளித்தார்.—யாத். 3:9-12, NW.

3, 4. (அ) மோசே ஏன் பயந்தார்? (ஆ) நமக்கு எப்படி மோசேயைப் போன்ற நிலைமை வரலாம்?

3 மோசே இரண்டு விஷயங்களை நினைத்துப் பயந்தார்: ‘என்னை கடவுள்தான் அனுப்பினார்னு பார்வோன் நம்புவானா? யெகோவாதான் என்னை அனுப்பினார்னு இஸ்ரவேல் மக்களாவது நம்புவாங்களா?’ அதனால், அவர் யெகோவாவிடம் இப்படிக் கேட்டார்: “அவர்கள்  என்னை நம்பாவிட்டால், நான் சொல்வதைக் கேட்காவிட்டால், என்ன செய்வது? ‘யெகோவா உன்முன் தோன்றவில்லை’ என்று அவர்கள் சொல்வார்களே.”—யாத். 3:15-18; 4:1, NW.

4 அதற்கு யெகோவா என்ன சொன்னார்? பிறகு என்ன நடந்தது? இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? ஒருவேளை உயர் அதிகாரியிடம் சாட்சிக் கொடுக்க வேண்டிய நிலைமை உங்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், ஊழியத்தில் சாதாரண ஆட்களிடம் பேசுவதற்கே நீங்கள் பயப்படுகிறீர்களா? அப்படியென்றால், மோசேயின் முன்மாதிரி உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.

“உன் கையில் என்ன இருக்கிறது?”

5. மோசேயின் பயத்தைப் போக்க யெகோவா என்ன செய்தார், அது மோசேயை எப்படிப் பலப்படுத்தியது? (ஆரம்பப் படம்.)

5 “யெகோவா [மோசேயிடம்], ‘உன் கையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒரு கோல்’ என்றார். கடவுள் அவரிடம், ‘அதைத் தரையில் போடு’ என்றார். அவர் அதைத் தரையில் போட்டதும் அது ஒரு பாம்பானது; உடனே மோசே அங்கிருந்து ஓடினார். யெகோவா மோசேயிடம், ‘உன் கையை நீட்டி, அதன் வாலைப் பிடி’ என்றார். அவர் தன் கையை நீட்டி அதைப் பிடித்தார், அது ஒரு கோலானது. கடவுள் அவரிடம், ‘. . . யெகோவா உன்முன் தோன்றினார் என்பதை அவர்கள் நம்புவதற்கு இது ஓர் அடையாளம்’ என்றார்.” (யாத். 4:2-5, NW) இப்படிச் செய்வதன் மூலம் யெகோவா மோசேயின் பயத்தைப் போக்கினார். அவர் கையில் இருந்தது ஒரு சாதாரண கோல்தான். ஆனால் யெகோவாவுடைய சக்தியால் அது உயிருள்ள பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தைப் பார்ப்பவர்கள், மோசேயைக் கடவுள்தான் அனுப்பினார் என்பதை நிச்சயம் நம்புவார்கள். “இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்” என்று யெகோவா அவரிடம் சொன்னார். (யாத். 4:17) கடவுள் கொடுத்த சக்தியுடன் மோசே, பார்வோனிடமும் இஸ்ரவேலர்களிடமும் தைரியமாகப் பேசினார்.—யாத். 4:29-31; 7:8-13.

6. (அ) ஊழியத்தில் நாம் எதைப் பயன்படுத்த வேண்டும், ஏன்? (ஆ) கடவுளுடைய வார்த்தை “உயிருள்ளது,” “வல்லமையுள்ளது” என்று எப்படிச் சொல்லலாம்?

6 நாமும் கடவுளுடைய செய்தியை மற்றவர்களிடம் சொல்கிறோம். நம்முடைய கையில் என்ன இருக்கிறது? பைபிள் இருக்கிறது. இன்று மக்கள் பைபிளை ஒரு சாதாரண புத்தகமாக நினைக்கிறார்கள். ஆனால், அதன்மூலம்தான் யெகோவா நம்மிடம் பேசுகிறார். (2 பே. 1:21) “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 4:12-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. பைபிளில் இருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேறிக்கொண்டே இருக்கிறது, எதிர்காலத்திலும் நிறைவேறப்போகிறது. (ஏசா. 46:10; 55:11) அதனால்தான் கடவுளுடைய வார்த்தை “உயிருள்ளது” என்று சொல்கிறோம். இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஒருவர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களைச் செய்வார். ஏனென்றால், பைபிளுக்கு ஆளையே மாற்றும் “வல்லமை” இருக்கிறது.

7. நாம் எப்படி பைபிளைச் சரியாகப் பயன்படுத்தலாம்?

7 மோசேக்கு யெகோவா அற்புதம் செய்யும் சக்தியைக் கொடுத்தது போல் இன்று நமக்கு அவருடைய சக்தியால் எழுதப்பட்ட பைபிளைக் கொடுத்திருக்கிறார். அதை ஊழியத்தில் பயன்படுத்தும்போது நாம் சொல்லும் செய்தி உண்மை என்றும் அது கடவுள் சொன்ன செய்திதான் என்றும் மக்கள் நம்புவார்கள். அதனால்தான், “சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்து” என்று தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். (2 தீ. 2:15) நாம் எப்படி பைபிளைச் சரியாகப் பயன்படுத்த முடியும்? அதற்கு, மக்களின் மனதைத் தொடுகிற பொருத்தமான வசனங்களை வாசித்துக் காட்ட வேண்டும். இதைச் செய்ய, 2013-ல் நமக்குக் கிடைத்த துண்டுப்பிரதிகள் உதவும்.

பொருத்தமான வசனங்களை வாசியுங்கள்

8. புது துண்டுப்பிரதிகளைப் பற்றி ஒரு ஊழிய கண்காணி என்ன சொன்னார்?

8 எல்லா துண்டுப்பிரதிகளும் ஒரே மாதிரிதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்த கற்றுக்கொண்டால் எல்லாவற்றையும் அதே மாதிரி பயன்படுத்தலாம். அமெரிக்காவில் உள்ள ஒரு சபையின் ஊழியக் கண்காணி இப்படி எழுதினார்: “வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் பொது ஊழியத்திலும் இந்தத் துண்டுப்பிரதிகள் இவ்வளவு பிரயோஜனமாக  இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.” இந்தத் துண்டுப்பிரதிகளின் தலைப்பு மக்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அவர்கள் மனந்திறந்து பேசவும் உதவுகிறது. முன்பக்கத்தில் மூன்று பதில்கள் இருப்பதால், தவறான பதிலைச் சொல்லிவிடுவோமோ என்று மக்கள் பயப்படுவதில்லை. அதனால், இந்தத் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவது சுலபம் என்று அந்தச் சகோதரர் சொல்கிறார்.

9, 10. (அ) பைபிளைப் பயன்படுத்த துண்டுப்பிரதிகள் எப்படி உதவும்? (ஆ) எந்தத் துண்டுப்பிரதியைப் பயன்படுத்துவது உங்களுக்குச் சுலபமாக இருக்கிறது, ஏன்?

9 ஒவ்வொரு துண்டுப்பிரதியிலும் பொருத்தமான வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியை ஒருவரிடம் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். தலைப்பிலுள்ள கேள்வியை அவரிடம் கேட்டால் “வரும்?” “வராது?” “வரலாம்?” இதில் ஏதாவது ஒரு பதிலை அவர் சொல்வார். எந்தப் பதிலைச் சொன்னாலும் சரி, “கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?” என்ற பகுதியை அடுத்த பக்கத்திலிருந்து காட்டுங்கள். பிறகு, வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசித்துக் காட்டுங்கள்.

10 பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்? என்ற துண்டுப்பிரதியையும் இதே மாதிரி கொடுக்கலாம். நாம் சந்திக்கும் நபர் எந்தப் பதிலைச் சொன்னாலும் சரி, அடுத்தப் பக்கத்திலிருக்கும் வசனத்தை அவருக்குக் காட்டுங்கள். “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன” என்பதை துண்டுப்பிரதியிலிருந்தே வாசியுங்கள். பிறகு பைபிளிலிருந்து 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசித்து அந்த வசனத்திலிருக்கும் கூடுதலான விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

11, 12. (அ) ஒருவர் ஆர்வமாகக் கேட்காவிட்டாலும் ஊழியத்தில் எப்படிச் சந்தோஷம் கிடைக்கும்? (ஆ) மறுசந்திப்பு செய்ய இந்தத் துண்டுப்பிரதிகள் எப்படி உதவும்?

11 ஒருவர் ஆர்வமாகக் கேட்கவில்லை என்றால்? துண்டுப்பிரதியிலிருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லியிருப்போம். பைபிளிலிருந்து ஒருசில வசனங்களையும் வாசித்து காட்டியிருப்போம். அந்த நபர் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், பைபிளைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்ற சந்தோஷம் நமக்குக் கிடைக்கும். அவர் ஆர்வமாகக் கேட்டால், தொடர்ந்து துண்டுப்பிரதியிலிருந்தே விளக்குங்கள். மறுசந்திப்பில் கூடுதலாகப் பேசுங்கள்.

12 ஒவ்வொரு துண்டுப்பிரதியிலும் “சிந்தித்துப் பாருங்கள்” என்ற பகுதி இருக்கிறது. அதில் ஒரு கேள்வியும் அதற்குப் பொருத்தமான வசனங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற துண்டுப்பிரதியில், “உலக நிலைமைகளைக் கடவுள் எப்படிச் சரிசெய்வார்?” என்ற கேள்வியும் மத்தேயு 6:9, 10-ம் தானியேல் 2:44-ம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? என்ற துண்டுப்பிரதியில், “நாம் ஏன் வயதாகி சாகிறோம்?” என்ற கேள்வியும் ஆதியாகமம் 3:17-19-ம்  ரோமர் 5:12-ம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பயன்படுத்தி மறுசந்திப்பில் பேசலாம்.

13. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க இந்தத் துண்டுப்பிரதிகள் எப்படி உதவும்?

13 சுலபமாக பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க இந்தத் துண்டுப்பிரதிகள் உதவும். கடைசி பக்கத்திலிருக்கும் QR code-ஐ ஸ்கேன் செய்தால், “பைபிளை ஏன் படிக்க வேண்டும்?” என்ற வீடியோவை நம் வெப் சைட்டில் பார்க்க முடியும். பைபிள் படிப்பைப் பற்றி அதிலிருந்து தெரிந்துகொள்ளவும் முடியும். துண்டுப்பிரதியின் கடைசி பக்கத்தில், கடவுள் சொல்லும் நற்செய்தி! என்ற சிற்றேட்டிலிருந்து ஒரு பாடம் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, இந்த உலகம் யார் கையில்? என்ற துண்டுப்பிரதியில் பாடம் 5 கொடுக்கப்பட்டுள்ளது. குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? என்ற துண்டுப்பிரதியில் பாடம் 9 கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்தும் நாம் பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். முதல் சந்திப்பிலும் மறுசந்திப்பிலும் இந்தத் துண்டுப்பிரதிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று இதுவரைப் பார்த்தோம். இப்படிச் செய்தால் பைபிளைச் சரியாகப் பயன்படுத்த முடியும். நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கவும் முடியும். ஊழியத்தில் பைபிளைச் சிறப்பாகப் பயன்படுத்த வேறென்ன செய்யலாம்?

மக்களின் தேவைக்கேற்ப பேசுங்கள்

14, 15. ஊழியத்தில் நாம் எப்படி பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

14 “எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை” பவுல் ஊழியத்தில் சந்தித்தார். (1 கொரிந்தியர் 9:19-23-ஐ வாசியுங்கள்.) ‘யூதர்கள், திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்கள், திருச்சட்டம் இல்லாதவர்கள், பலவீனர்கள்’ என எல்லோருமே மீட்பு பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதனால்தான், “எப்படியாவது சிலரையேனும் மீட்புக்கு வழிநடத்த எல்லாருக்கும் எல்லாமானேன்” என்று அவர் சொன்னார். (அப். 20:21) மக்களுடைய தேவைக்கேற்ப பவுல் பேசினார். இன்று நாமும் ‘பலதரப்பட்ட ஆட்களுக்கு’ சாட்சிக் கொடுக்கிறோம். நாம் எப்படி பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?—1 தீ. 2:3, 4.

15 நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கும் மாதிரி அணுகுமுறைகளை நாம் ஊழியத்தில் பயன்படுத்தலாம், அல்லது மக்களின் தேவைக்கேற்ப வேறொரு அணுகுமுறையைப் பயன்படுத்தலாம். மக்களைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதற்கு பொருத்தமான வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். ஒரு வட்டார கண்காணியும் அவருடைய மனைவியும் ஊழியத்தில் பைபிளை அதிகமாக பயன்படுத்தினார்கள். இதைப் பற்றி அந்தச் சகோதரர் சொல்கிறார்: ‘சுருக்கமாக பேசி ஒரு வசனத்தை காட்டினால் நிறைய பேர் கேட்பாங்க. நாங்க எதுக்காக வந்திருக்கோம்னு சொன்ன பிறகு பைபிளைத் திறந்து ஒரு வசனத்தை வாசிப்போம்.’ இப்படி அவர் பைபிளைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். இன்னும் சிலர் பைபிளை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். அவர்கள் எதைப் பற்றி பேசினார்கள், என்ன கேள்வி கேட்டார்கள், எந்த வசனத்தை வாசித்தார்கள் என்று பார்க்கலாம். நீங்கள் ஊழியம் செய்யும் இடத்திற்கு அது பொருந்துமா என்று யோசித்துப் பாருங்கள்.

துண்டுப்பிரதிகளையும் பைபிளையும் ஊழியத்தில் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? (பாராக்கள் 8-13)

16. ஊழியத்தில் மீகா 4:3, 4-ஐ எப்படிப் பயன்படுத்தலாம்?

16 அடிக்கடி, போரும் கலவரமும் நடக்கும் ஓர் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் இப்படிப் பேசலாம்: “ஒருநாள் தலைப்புச் செய்தியில் ‘போரில்லாத உலகம்!’ என்று வாசிக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு உலகம் சீக்கிரத்தில் வரப்போவதாக பைபிளில், மீகா 4:3, 4 சொல்கிறது. எதிர்காலத்தில் கடவுள் செய்யப்போகும் நிறைய விஷயங்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது.” அதன்பிறகு, அதில் ஒரு வசனத்தை வாசித்துக் காட்டுங்கள்.

17. ஊழியத்தில் மத்தேயு 5:3-ஐ எப்படிப் பயன்படுத்தலாம்?

17 நீங்கள் ஊழியம் செய்யும் இடத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே கஷ்டப்படுகிறார்களா? அவர்களிடம் இப்படிக் கேளுங்கள்: “நிறைய பணம் இருந்தால் சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?” அவர்கள் பதில் சொன்ன பிறகு இப்படிச் சொல்லலாம்: “பணம் இருக்கிற நிறைய பேர்கூட சந்தோஷமாக இல்லை. அப்படியென்றால், சந்தோஷமாக வாழ்வதற்கு எது முக்கியம்?” அதன்பிறகு மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள். அவர் ஆர்வம் காட்டினால் பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.

18. வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசிப்பது எப்படி மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

 18 இயற்கை பேரழிவினால் அல்லது வேறு ஏதாவது துயர சம்பவத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அவர்களிடம் இப்படிப் பேசுங்கள்: “ஆறுதலான ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசியுங்கள்.) எதிர்காலத்தில் எதுவெல்லாம் இருக்காது என்று இந்த வசனம் சொல்கிறது? ‘கண்ணீர், மரணம், துக்கம், அழுகை, வேதனை’ எதுவுமே இருக்காது. இதைக் கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! ஆனால், இது எப்படி நடக்கும்?” அதன்பிறகு, கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டிலிருந்து ஒரு பாடத்தைக் காட்டுங்கள்.

19. கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லிம்களிடம் வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ எப்படிப் பயன்படுத்தலாம்?

19 நீங்கள் ஊழியம் செய்யும் இடத்தில் கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லிம்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் இப்படிக் கேளுங்கள்: “ஒரு தேவதூதன் உங்களிடம் பேசினால் என்ன செய்வீர்கள்? அவர் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள்தானே? (வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ வாசியுங்கள்.) இந்த வசனத்தில், ‘கடவுளுக்குப் பயப்படுங்கள்’ என்று அந்தத் தேவதூதன் சொல்கிறார். எந்தக் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்? ‘வானத்தையும் பூமியையும் படைத்த’ கடவுள் என்று அவரே சொல்கிறார். இதே வார்த்தைகள் சங்கீத புத்தகத்திலும் இருக்கிறது. சங்கீதம் 124:8-ல், ‘நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு சொல்லப்பட்டிருக்கும் கர்த்தருடைய பெயர் உங்களுக்குத் தெரியுமா? சங்கீத புத்தகத்திலேயே அவருடைய பெயர் இருக்கிறது.” பிறகு, சங்கீதம் 83:17-லிருந்து யெகோவாவுடைய பெயரைக் காட்டுங்கள். ஆர்வம் காட்டினால் கூடுதலாக விளக்குங்கள்.

20. (அ) யெகோவாவைப் பற்றி சொல்ல நீதிமொழிகள் 30:4 எப்படி உதவும்? (ஆ) வேறு ஏதாவது வசனத்தை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா?

20 ஊழியத்தில் இளைஞரைச் சந்தித்தால் அவரிடம் இப்படிப் பேசுங்கள்: “ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி உங்களுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். (நீதிமொழிகள் 30:4-ஐ வாசியுங்கள்.) இந்த வசனத்திலிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? இதையெல்லாம் நிச்சயமாக ஒரு மனிதன் செய்திருக்க முடியாது. அப்படியென்றால், எல்லாவற்றையும் படைத்தவரைப் பற்றிதான் இந்த வசனம் சொல்கிறது. * அவர் யார்? அவருடைய பெயர் என்ன? அதை நான் உங்களுக்கு பைபிளிலிருந்து காட்ட ஆசைப்படுகிறேன்.”

ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்துங்கள்

21, 22. (அ) பொருத்தமான வசனங்களைப் பயன்படுத்துவதால் என்ன நன்மை? (ஆ) என்ன செய்ய தீர்மானமாய் இருக்கிறீர்கள்?

21 ஆஸ்திரேலியாவில் இரண்டு சகோதரர்கள் ஊழியத்தில் ஒரு பெண்ணை சந்தித்தார்கள். அவரிடம் “உங்களுக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா?” என்று கேட்டார்கள். பிறகு சங்கீதம் 83:17-ஐ வாசித்துக் காட்டினார்கள். அந்தப் பெண் சொல்கிறார்: “எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் போனதும் நான் 35 மைல் (56 கி.மீ.) தூரத்தில் இருந்த புத்தகக் கடைக்குப் போனேன். அங்கு இருந்த மற்ற பைபிள்களிலும் கடவுளுடைய பெயர் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒரு அகராதியிலும் பார்த்தேன். அப்போதுதான் கடவுளுடைய பெயர் யெகோவா என்று நான் நம்பினேன். எனக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு விஷயம் பைபிளில் இருக்கிறதோ என்று யோசித்தேன்.” பிறகு அவரும் அவரைத் திருமணம் செய்யப் போகிறவரும் தொடர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில் ஞானஸ்நானமும் எடுத்தார்கள். நீங்களும் பொருத்தமான வசனங்களை வாசித்தால் சிறந்த பலன்களை அனுபவிப்பீர்கள்.

22 பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது; அது “உயிருள்ளது.” ஒருவர் பைபிளை வாசித்து, அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது நன்மையடைவார். (1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.) மக்களுடைய மனதை மாற்றும் சக்தி பைபிளுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதனால், கிடைக்கிற எல்லா சந்தர்ப்பங்களிலும் பைபிளைப் பயன்படுத்துவோமாக!

^ பாரா. 20 மே 15, 2002 காவற்கோபுரத்தில் பக்கம் 5-ஐ பாருங்கள்.