“மனந்திரும்பியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து”
‘இயேசுவைத் தெரியவே தெரியாது’ என பேதுரு மூன்று முறைச் சொன்னார்; பின்பு அதை நினைத்து வருத்தப்பட்டு அழுதார். இப்படி நடக்கும் என இயேசுவுக்கு முன்பே தெரியும். பேதுரு பழைய நிலைக்குத் திரும்ப, காலம் எடுக்கும் என்பதும் இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான், “நீ மனந்திரும்பியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து” என்று பேதுருவிடம் சொல்லியிருந்தார். (லூக். 22:32, 54-62) இயேசு சொன்னபடியே, பிற்பாடு பேதுரு கிறிஸ்தவ சபையைப் பலப்படுத்தினார். (கலா. 2:9) அதேபோல், ஒரு காலத்தில் மூப்பராகச் சேவை செய்த ஒருவரால் மீண்டும் மூப்பராக முடியும். சகோதர சகோதரிகளைப் பலப்படுத்தவும் முடியும், சந்தோஷத்தைப் பெறவும் முடியும்.
முன்பு மூப்பராக இருந்த ஒருவர் இப்போது மூப்பராக இல்லை என்றால் கண்டிப்பாக அதை நினைத்து வருத்தப்படுவார். தென் அமெரிக்காவில் 20 வருடங்கள் மூப்பராக இருந்த எட்வின் * சொல்கிறார்: “பேச்சுகளை தயாரிக்கிறது, சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துறது, மேய்ப்பு சந்திப்புகளை செய்றது இதெல்லாந்தான் என் வாழ்க்கையில முக்கியமா இருந்தது. இதெல்லாம் திடீர்னு இல்லாமல் போனப்போ வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்த மாதிரி இருந்தது. ஒவ்வொரு நாளும் அத நினைச்சு நினைச்சு வேதனைப்பட்டேன்.” எட்வின் இப்போது மீண்டும் ஒரு மூப்பராக இருக்கிறார்.
“சந்தோஷப்படுங்கள்”
“என் சகோதரர்களே, நீங்கள் பல்வேறு சோதனைகளை எதிர்ப்படும்போது அதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுங்கள்” என்று யாக்கோபு சொன்னார். (யாக். 1:2) இங்கு யாக்கோபு எந்தச் சோதனைகளைப் பற்றிச் சொல்கிறார்? கடவுளுக்கு உண்மையாக இருப்பதால் வரும் சோதனைகளைப் பற்றியும் பாவம் செய்வதால் வரும் சோதனைகளைப் பற்றியும் சொல்கிறார். நாம் பாவிகளாக இருப்பதால் நமக்குக் கெட்ட ஆசைகள் வரலாம். ஒருவேளை சிலரிடம் ஓரவஞ்சனையாக நடந்துகொள்ளலாம். (யாக். 1:14; 2:1; 4:1, 2, 11) நம் தவறுகளுக்காக யெகோவா நம்மைத் தண்டிக்கும்போது நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். (எபி. 12:11) இதுவும் ஒரு சோதனைதான். ஆனால், நாம் சந்தோஷத்தை இழந்துவிடக்கூடாது.
இப்போது நாம் ஒரு மூப்பராக இல்லாவிட்டாலும், நமக்கு யெகோவா மீது எந்தளவு அன்பும் விசுவாசமும் இருக்கிறது என்பதைக் காட்ட முடியும். ‘நான் ஏன் ஒரு மூப்பராக இருந்தேன்?’ என்று நாம் யோசித்துப் பார்க்கலாம். நம் சொந்த ஆசைகளுக்காகச் சேவை செய்தோமா அல்லது யெகோவா மீதும் சகோதர சகோதரிகள் மீதும் இருக்கிற அன்பினால் சேவை செய்தோமா? (அப். 20:28-30) இப்போது நாம் ஒரு மூப்பராக இல்லாவிட்டாலும், யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் யெகோவா மீது உண்மையான அன்பு இருக்கிறது என்பதை அனைவருக்கும் காட்ட முடியும். சாத்தானுக்குப் பதிலடி கொடுக்க முடியும்.
தாவீது ராஜா மோசமான பாவங்களைச் செய்தபோது யெகோவா அவரைத் தண்டித்தார், மனந்திரும்பியபோது மன்னித்தார். “பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். குற்றமற்றவன் எனக் கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று தாவீது சொன்னார். (சங். 32:1, 2, ஈஸி டு ரீட் வர்ஷன்) தாவீதுக்குக் கிடைத்த தண்டனை அவரை இன்னும் சிறந்த ராஜாவாக மாற்றியது.
ஒருவர் மீண்டும் மூப்பராகும்போது இன்னும் சிறந்த விதத்தில் கடவுளுடைய மந்தையை மேய்க்கிறார். மீண்டும் மூப்பரான ஒருவர் சொல்கிறார்: “தப்பு செஞ்ச ஒருத்தர்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு இப்போ இன்னும் நல்லா தெரிஞ்சிக்கிட்டேன்.” இன்னொரு சகோதரர் சொல்கிறார்: “சகோதர சகோதரிகளுக்காக சேவை செய்றது எவ்ளோ பெரிய பாக்கியம்னு இப்போ எனக்கு இன்னும் நல்லா புரியுது.”
உங்களால் மீண்டும் மூப்பராக முடியுமா?
“[யெகோவா] எப்போதும் குற்றங்காண்பதில்லை” என்று தாவீது சொன்னார். (சங். 103:9, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஒருவர் மோசமான தவறு செய்திருந்தாலும், அவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பினால் யெகோவா மன்னிப்பார்; அவரை நம்பி பொறுப்புகளையும் கொடுப்பார். பல வருடங்கள் மூப்பராக இருந்த தாமஸ் சொல்கிறார்: “ஒரு மூப்பரா இருக்க முடியாதுனு தெரிஞ்சப்போ நான் ரொம்ப வருத்தப்பட்டேன். திரும்ப நான் ஒரு மூப்பரா ஆக முடியுங்கற நம்பிக்கை போயிடுச்சு, எனக்கு அந்தத் தகுதியே இல்லைனு நினைச்சேன். ஆனா மத்தவங்களுக்கு உதவி செய்றது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால நிறைய பேருக்கு பைபிள் படிப்பு நடத்துனேன், கூட்டங்களுக்கு போகும்போது சகோதர சகோதரிகள உற்சாகப்படுத்தினேன், அவங்ளோட ஊழியம் செஞ்சேன். மறுபடியும் ஒரு மூப்பரா இருக்க முடியுங்கிற நம்பிக்கை கிடைச்சிது. இப்போ நான் திரும்பவும் ஒரு மூப்பரா இருக்கேன்.”
மூப்பர்கள்மேல் பகையை வளர்த்துக்கொண்டால் நாம் மீண்டும் மூப்பராவதற்கு அதுவே ஒரு தடையாக இருக்கும். இந்த விஷயத்தில் தாவீதின் உதாரணத்தை நாம் பின்பற்றலாம். சவுல் ராஜா தாவீதைக் கொல்ல நினைத்தபோது அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். சவுலைப் பழிவாங்க வாய்ப்புகள் கிடைத்தும் அவரை ஒன்றும் செய்யவில்லை. (1 சா. 24:4-7; 26:8-12) போரில் சவுலும் யோனத்தானும் இறந்தபோது தாவீது அவர்களை நினைத்து அழுதார், ‘பிரியமானவர்கள்’ என்று சொன்னார். (2 சா. 1:21-23) அவர் தன் மனதில் பகையை வளர்த்துக்கொள்ளவில்லை.
மூப்பர்கள் அநியாயமாக நடந்துகொண்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; அவர்கள்மீது கோபம் வரலாம். ஆனால், மனதில் பகையை வளர்க்காதீர்கள். இங்கிலாந்தில் 30 வருடங்கள் மூப்பராகச் சேவை செய்த மைக்கேல், பொறுப்பை இழந்தபோது சில மூப்பர்கள் மீது கோபமாக இருந்தார். இந்த விஷயத்தில் மைக்கேலுக்கு எது உதவியது? “யோபுவை பத்தி படிச்சது எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்திச்சு. யோபுவும் அவரோட மூனு நண்பர்களும் சமாதானம் ஆகறதுக்கு யெகோவா உதவி செஞ்சார். அப்படினா, மூப்பர்களோட சமாதானம் ஆகறதுக்கு எனக்கும் கண்டிப்பா உதவி செய்வார்னு புரிஞ்சிக்கிட்டேன்.”—யோபு 42:7-9.
யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்
கடவுளுடைய மந்தையை மேய்க்கும் பொறுப்பிலிருந்து நீங்களாகவே விலகியிருந்தால், ஏன் அப்படி செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். சமாளிக்க முடியாத அளவுக்குப் பிரச்சினை வந்ததா? குடும்பம், வேலை என்று மூழ்கிப்போய் இருந்தீர்களா? மற்றவர்களின் குற்றங்குறைகளை பார்த்து சோர்ந்துபோய் இருந்தீர்களா? ஒரு மூப்பராக இருந்தபோது நீங்கள் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்திருப்பீர்கள். என்னவெல்லாம் செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்த பேச்சுகள் எத்தனை பேரை பலப்படுத்தியிருக்கும்! உங்கள் முன்மாதிரி எத்தனை பேரை உற்சாகப்படுத்தியிருக்கும்! நீங்கள் செய்த மேய்ப்பு சந்திப்புகள் எத்தனை உள்ளங்களை ஆறுதல்படுத்தியிருக்கும்! ஒரு மூப்பராக நீங்களும் சந்தோஷப்பட்டிருப்பீர்கள், யெகோவாவையும் சந்தோஷப்படுத்தியிருப்பீர்கள்.—நீதி. 27:11.
மீண்டும் ஒரு மூப்பராவதற்கு, இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெறுவதற்கு யெகோவா நிறைய பேருக்கு உதவியிருக்கிறார். மூப்பர் பொறுப்பிலிருந்து நீங்களாகவே விலகியிருந்தாலும் சரி விலக்கப்பட்டிருந்தாலும் சரி, நீங்கள் “கண்காணியாவதற்குத் தகுதிபெற” முடியும். (1 தீ. 3:1) கொலோசெயர் சபையிலிருந்த கிறிஸ்தவர்கள் ‘யெகோவாவுக்கு ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்த’ வேண்டும் என்று பவுல் அவர்களுக்காக “இடைவிடாமல் ஜெபம்” செய்தார். (கொலோ. 1:9, 10) நீங்கள் மீண்டும் மூப்பரானால் பலத்திற்காகவும் பொறுமைக்காகவும் சந்தோஷத்தை மீண்டும் பெறுவதற்காகவும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய மந்தையை மேய்ப்பதற்கு அன்பான மூப்பர்கள் தேவை. உங்கள் சகோதரர்களைப் பலப்படுத்த உங்களுக்கு ஆசையிருக்கிறதா?
^ பாரா. 3 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.