Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 நம் வரலாற்றுச் சுவடுகள்

“யுரேகா டிராமா”

“யுரேகா டிராமா”

“யுரேகா!” என்றால் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று அர்த்தம். 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரத்தில் நிறைய பேர் தங்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். அதைக் கண்டுபிடித்தவர்கள், “யுரேகா!” என்று கத்தினார்கள். சார்ல்ஸ் டேஸ் ரஸலும் மற்ற பைபிள் மாணாக்கர்களும் தங்கத்தைவிட மிக மதிப்புள்ள ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதாவது பைபிளின் உண்மை போதனைகளைத் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களிடமும் சொல்ல ஆர்வமாக இருந்தார்கள்.

ஃபோட்டோ டிராமா ஆஃப் க்ரியேஷன்” என்ற 8 மணிநேர படத்தை சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் சங்கம் தயாரித்தது. 1914-ல் பெரிய நகரங்களில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்தப் படத்தைப் பார்த்தார்கள். மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்... வண்ண வண்ண படங்கள்... இனிமையான இசை... வியக்க வைக்கும் தகவல்கள்... இந்த படத்தில் இருந்தன. மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்து இயேசு கிறிஸ்துவுடைய ஆயிர வருட ஆட்சியின் முடிவுவரையுள்ள விஷயங்கள் இதில் காட்டப்பட்டன.—வெளி. 20:4. *

கிராமங்களிலும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று பைபிள் மாணாக்கர்கள் நினைத்தார்கள். அதனால் ஆகஸ்ட் 1914-ல், “யுரேகா டிராமா” என்ற இன்னொரு படத்தைத் தயாரித்தார்கள். இதை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்வது சுலபம். “ஃபோட்டோ டிராமா”-வில் இருந்த சில பகுதிகள் இதில் இல்லை. இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. “யுரேகா X,” “யுரேகா Y,” “யுரேகா ஃபேமிலி டிராமா” என்ற மூன்று விதங்களில் இது தயாரிக்கப்பட்டது. “யுரேகா X”-ல் ஆடியோ பதிவும் இசையும் இருந்தது. “யுரேகா Y”-ல் ஆடியோ பதிவுகளோடு படங்களும் இருந்தன. “யுரேகா ஃபேமிலி டிராமா” வீட்டில் போட்டுப் பார்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் ஆடியோ பதிவோடு பாடல்களும் இருந்தன. குறைந்த விலையில் கிடைத்த ப்ரொஜக்டர்களிலும் இந்தப் படங்களைக் காட்ட முடிந்தது.

வண்ண வண்ண படங்களைக் காட்ட ப்ரொஜக்டர் பயன்படுத்தப்பட்டது

இதற்கு சினிமா தியேட்டரில் பயன்படுத்தப்படும் ப்ரொஜக்டர்களோ பெரிய திரைகளோ தேவையில்லை. அதனால், பைபிள் மாணாக்கர்களால் இந்தப் படங்களைச் சுலபமாக கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. இப்படி, நற்செய்தி எட்டாத இடங்களிலும் இதைக் காட்ட முடிந்தது. “யுரேகா X”-ஐ பகலிலும் கேட்கலாம் இரவிலும் கேட்கலாம். “யுரேகா Y”-ஐ போட்டு காட்ட மின்சாரம் தேவையில்லை, நிலக்கரி விளக்கே போதும். “இந்தப் படங்களை எங்களால் எல்லா இடங்களிலும் போட்டுக் காட்ட முடிகிறது” என்ற ஒரு அறிக்கை பின்லாந்து காவற்கோபுரத்தில் வெளிவந்தது.

பைபிள் மாணாக்கர்கள் இந்தப் படங்களைக் காட்டுவதற்கு பெரிய சினிமா தியேட்டர்களை வாடகைக்கு எடுக்கவில்லை. பள்ளிக்கூடங்களிலும் அரசாங்கக் கட்டிடங்களிலும் ரயில் நிலையங்களிலும் பெரிய வீடுகளின் வரவேற்பறைகளிலும் இதைப் போட்டுக் காட்டினார்கள். பெரும்பாலும் திறந்த வெளியில் போட்டுக்  காட்டினார்கள். ஒரு பெரிய வெள்ளைத் துணியைத் திரை போல் தொங்கவிட்டு ப்ரொஜக்டர் மூலம் இந்தப் படத்தைக் காட்டினார்கள். “விவசாயிகள் அவர்களுடைய தோட்டத்திலேயே உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்” என்று ஆன்தனி ஹம்பக் எழுதினார். இந்த “டிராமா”-வை போட்டுக் காட்டியவர்கள், அவர்களுடைய பெட்டிப் படுக்கைகளையும் சமையல் பொருள்களையும் ஒரு வண்டியில் வைத்து எடுத்துச் சென்றார்கள். அந்த வண்டியை “டிராமா வேகன்” என்று அழைத்தார்கள்.

“யுரேகா டிராமா”-வை அநேகர் பார்த்தார்கள். அமெரிக்காவிலுள்ள ஒரு ஊரில் 150 பேர் மட்டுமே வாழ்ந்தார்கள். ஆனால், அந்தப் படத்தைப் பார்க்க 400 பேர் ஒரு பள்ளிக்கூடத்திற்கு வந்தார்கள். இன்னொரு இடத்தில், சிலர் அந்தப் படத்தைப் பார்க்க 8 கி.மீ. (5 மைல்) நடந்தே வந்தார்கள். சுவீடனில், ஷார்லட் ஆல்பேர்க் என்ற சகோதரியின் வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இந்த “டிராமா”-வை கேட்க வந்தார்கள். அதைக் கேட்டு அவர்கள் “நெகிழ்ந்துபோனார்கள்.” ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஊரில் ஒரே சமயத்தில் 1500 பேர் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடிவந்தார்கள். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் இருந்த “ஆசிரியர்களும் மாணவர்களும் ஆடியோ பதிவுகளையும் படங்களையும் பார்த்து அசந்துபோனார்கள்” என்று ஒரு காவற்கோபுரம் சொன்னது. சினிமா தியேட்டர்கள் இருந்த இடங்களில்கூட “யுரேகா டிராமா”-வை பார்க்கத்தான் ஆட்கள் குவிந்தார்கள்.

நற்செய்தி பரவியது

பைபிள் மாணாக்கர்கள் நிறைய இடங்களில் இந்த “யுரேகா டிராமா”-வை காட்டினார்கள், பேச்சுகளையும் கொடுத்தார்கள். இதனால், நற்செய்தியில் ஆர்வம் காட்டுகிறவர்களைக் கண்டுபிடித்து புதிய சபைகளை உருவாக்கினார்கள். எத்தனை பேர் இந்த “டிராமா”-வை பார்த்தார்கள் என்பது சரியாகத் தெரியாது. ஏனென்றால், பல இடங்களில் இந்த “டிராமா” திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டப்பட்டது. 1915-ல், 86 குழுக்களைச் சேர்ந்த சகோதரர்கள் இந்த “டிராமா”-வை காட்டினார்கள். ஆனால், எத்தனை பேர் அதைப் பார்க்க வந்தார்கள் என்று 14 குழுக்களில் இருந்தவர்கள் மட்டுமே தகவல் தெரிவித்தார்கள். அந்த வருடத்தின் முடிவிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் அந்த “டிராமா”-வை பார்த்திருக்கலாம். அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் நம் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள்.

“யுரேகா டிராமா”-வை பற்றி இன்று நிறைய பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். இருந்தாலும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த அருமையான “டிராமா”-வை பார்த்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து அர்ஜென்டினாவரை, தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டன்வரை, இந்தியா மற்றும் கரீபியன் என்று எட்டுத் திக்கிலும் இருந்தவர்கள் இந்த “டிராமா”-வை பார்த்தார்கள். இதன்மூலம் நிறைய பேர் நற்செய்தியைத் தெரிந்துகொண்டார்கள்.

^ பாரா. 4 “நம் வரலாற்றுச் சுவடுகள்—நூறு வயதைத் தொட்ட விசுவாசக் காவியம்!” என்ற கட்டுரையை காவற்கோபுரம் பிப்ரவரி 15, 2014, பக்கங்கள் 30-32-ல் பாருங்கள்.