Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இனி மரணம் இருக்காது!

இனி மரணம் இருக்காது!

“ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.”—1 கொ. 15:26.

1, 2. ஆதாமும் ஏவாளும் ஆரம்பத்தில் எப்படி வாழ்ந்தார்கள், என்ன கேள்விகள் எழும்புகின்றன?

ஆதாம்-ஏவாளை கடவுள் எந்தக் குறையும் இல்லாமல் படைத்தார். அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். கடவுளுடைய பிள்ளைகளாக அவரோடு பேசும் அருமையான பாக்கியம் அவர்களுக்கு இருந்தது. (ஆதி. 2:7-9; லூக். 3:38) அதோடு, கடவுள் அவர்களுக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28-ஐ வாசியுங்கள்.) அதை நிறைவேற்ற அவர்கள் எவ்வளவு நாள் வாழ வேண்டும்? ‘பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துவதற்கு’ அவர்கள் என்றென்றும் வாழ வேண்டிய அவசியமில்லை. ஆனால், ‘பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்வதற்கு’ அவர்கள் சாகாமல், என்றென்றும் உயிர் வாழ வேண்டும்.

2 இன்று ஏன் இந்தப் பூமி கடவுள் படைத்த விதமாக இல்லை? மனிதர்கள் ஏன் சாகிறார்கள்? மனிதர்களின் கஷ்டங்களை எல்லாம் கடவுள் எப்படிச் சரிசெய்வார்? இந்தக் கேள்விகளுக்கு பைபிளில் பதில் இருக்கிறது. இப்போது அதைப் பற்றிப் பார்க்கலாம்.

கடவுள் கொடுத்த கட்டளை

3, 4. (அ) ஆதாம்-ஏவாளுக்கு கடவுள் என்ன கட்டளை கொடுத்தார்? (ஆ) அதற்கு அவர்கள் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?

3 ஆதாம்-ஏவாளுக்கு கடவுள் முடிவில்லா வாழ்க்கையைக் கொடுத்தார். ஆனால், அவர்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு  காற்று, தண்ணீர், உணவு, தூக்கம் எல்லாம் தேவைப்பட்டது. முக்கியமாக, யெகோவாவோடு அவர்கள் நெருங்கிய பந்தம் வைத்திருக்க வேண்டியிருந்தது. (உபா. 8:3) கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்தான் அவர்கள் தொடர்ந்து சந்தோஷமாக வாழ முடியும். “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதி. 2:16, 17) ஏவாளைப் படைப்பதற்கு முன்பே ஆதாமிடம் கடவுள் இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தார்.

4 ஆதாமை கடவுள் தம்முடைய சாயலில் படைத்தார்; அவனுக்கு மனசாட்சியைக் கொடுத்தார். அதனால், யோசித்து முடிவெடுக்கும் திறமை அவனுக்கு இருந்தது. ஆனால், நல்லது எது, கெட்டது எது என்று தீர்மானிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது. “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி”-யை பார்க்கும்போதெல்லாம் இது அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். அதனால், ஆதாம்-ஏவாள் எப்போதுமே அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்தப் பழத்தை அவர்கள் சாப்பிட்டால், கடவுளுடைய வழிநடத்துதல் தங்களுக்குத் தேவையில்லை என்று சொல்வதைப் போல் இருக்கும். அப்படிச் செய்தால், அவர்களும் அவர்களுடைய சந்ததியாரும் பயங்கரமான விளைவுகளை அனுபவிப்பார்கள் என்று கடவுள் தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மரணத்தின் ஆரம்பம்

5. ஆதாம்-ஏவாள் ஏன் கீழ்ப்படியாமல் போனார்கள்?

5 ஏவாள் படைக்கப்பட்ட பிறகு, கடவுள் கொடுத்த கட்டளையை ஆதாம் அவளிடம் சொன்னான். அதனால்தான், பாம்பிடம் அதைப் பற்றி அவளால் தெளிவாகச் சொல்ல முடிந்தது. (ஆதி. 3:1-3) சாத்தான்தான் பாம்பைப் பயன்படுத்தி ஏவாளிடம் பேசினான். கடவுள் அவனை ஒரு நல்ல தேவதூதனாக படைத்தார். ஆனால், அவன் கடவுளைப் போல் ஆவதற்கு ஆசைப்பட்டான். (யாக்கோபு 1:14, 15-ஐ ஒப்பிடுங்கள்.) அதனால், ஏவாளிடம் கடவுளைப் பற்றி பொய்களைச் சொன்னான். அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அவர்கள் சாக மாட்டார்கள் என்றும் கடவுளைப் போல் ஆகிவிடுவார்கள் என்றும் சொன்னான். (ஆதி. 3:4, 5) ஏவாள் அதை நம்பி, அந்தப் பழத்தைச் சாப்பிட்டாள்; ஆதாமுக்கும் கொடுத்தாள். (ஆதி. 3:6, 17) ஏவாள் ஏமாந்துவிட்டாள். (1 தீமோத்தேயு 2:14-ஐ வாசியுங்கள்.) சாத்தான் சொன்னது பொய் என்பது ஆதாமுக்குத் தெரிந்திருந்தும், “மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து” அந்தப் பழத்தைச் சாப்பிட்டான். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால், அவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆனால், நல்லவனைப் போல் நடித்து, அவர்களை ஏமாற்றிவிட்டான்.

6, 7. யெகோவா எப்படி ஒரு நீதிபதியாகச் செயல்பட்டார்?

6 உயிர் கொடுத்த கடவுளுக்கு ஆதாம்-ஏவாள் கீழ்ப்படியாமல் போனார்கள். நடந்ததை எல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். (1 நா. 28:9; நீதிமொழிகள் 15:3-ஐ வாசியுங்கள்.) அவர்கள் தவறு செய்ததை நினைத்து யெகோவா நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார். (ஆதியாகமம் 6:6-ஐ ஒப்பிடுங்கள்.) தவறு செய்த மூன்று பேரிடமும் நடந்ததை விசாரித்தார். இப்போது, ஒரு நீதிபதியாக கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

7 “[நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை] நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று கடவுள் சொல்லியிருந்தார். பழத்தைச் சாப்பிட்ட அதே நாளில் செத்துவிடுவான் என்று ஆதாம் நினைத்திருப்பான். அன்று மாலை யெகோவா அவர்களிடம் பேசினார். (ஆதி. 3:8) நடந்ததைப் பற்றி ஆதாம்-ஏவாளிடம் நேரடியாக விசாரித்தார். (ஆதி. 3:9-13) அதன்பிறகு, அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கினார். (ஆதி. 3:14-19) யெகோவா நினைத்திருந்தால் அப்போதே அவர்களை அழித்திருக்கலாம். ஆனால், ஆதாம்-ஏவாளுடைய  சந்ததி பூமியை நிரப்ப வேண்டும் என்ற யெகோவாவுடைய வார்த்தை நிறைவேறியிருக்காதே! (ஏசா. 55:11) ஆதாம்-ஏவாள் பாவம் செய்ததால் முன்பு சொன்னதைப் போலவே அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தார். யெகோவாவைப் பொறுத்தவரை ஆதாம்-ஏவாள் பாவம் செய்த அதே நாளில் இறந்துவிட்டார்கள். “ஒருநாள்” என்பது யெகோவாவுக்கு 1,000 வருடம் என்பதால் அவர்கள் அதே நாளில் இறப்பார்கள் என்ற கடவுளுடைய வார்த்தை நிறைவேறியது. (2 பே. 3:8) ஆதாம்-ஏவாள் பிள்ளைகளைப் பிறப்பிக்க யெகோவா அனுமதித்தார். அவர்களுடைய சந்ததியார் யெகோவா செய்யும் அன்புள்ள ஏற்பாட்டிலிருந்து நன்மை அடைவார்கள்.

8, 9. ஆதாம்-ஏவாளின் பிள்ளைகள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? (ஆரம்பப் படம்.)

8 ஆதாம்-ஏவாள் செய்த பாவம் அவர்களுடைய பிள்ளைகளையும் பாதித்தது. “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று ரோமர் 5:12 சொல்கிறது. ஆதாம் செய்த பாவத்தின் விளைவாக இறந்துபோன முதல் நபர் ஆபேல். (ஆதி. 4:8) ஆதாமுடைய மற்ற பிள்ளைகளும் வயதாகி, இறந்துபோனார்கள். அதுமட்டுமல்ல, ஆதாம் செய்தத் தவறினால் இன்று நாம் எல்லோருமே பாவிகளாக இருக்கிறோம். ‘ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் பலர் பாவிகளாக்கப்பட்டார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோ. 5:19) ஆதாம்-ஏவாள் செய்த பாவத்திற்கும் அதனால் வந்த மரணத்திற்கும் மனிதர்கள் அடிமைகளாக ஆனார்கள்; மனிதர்களால் தங்களைத் தாங்களே விடுவிக்க முடியாது. இன்று பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் ஆதாம்-ஏவாள் செய்த பாவத்தின் விளைவுகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பாவம் எப்படிக் கடத்தப்படுகிறது என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது.

9 “எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு ‘மரணம்’ என்று அழைக்கப்படுகிறது.” (ஏசா. 25:7, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஒரு “முக்காடு” போல் மரணம், எல்லா மனிதர்களையும் மூடியிருக்கிறது. அதனால்தான், ‘ஆதாமினால் எல்லோரும் சாகிறோம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 15:22) “மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்?” என்று பவுல் கேட்டார். (ரோமர் 7:24) யாரால் பவுலைக் காப்பாற்ற முடியும்?

பாவமும் மரணமும் இனி இருக்காது

10. (அ) மரணத்தை யெகோவா ஒழிப்பார் என்பதற்கு சில பைபிள் வசனங்களைச் சொல்லுங்கள். (ஆ) இதிலிருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் என்ன தெரிந்துகொள்கிறோம்?

10 யெகோவாவால் மட்டும்தான் பவுலை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும். ‘மரணம் என்ற முக்காடு’ பற்றி சொன்ன பிறகு, ‘[யெகோவா] மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்’ என்று ஏசாயா சொன்னார். (ஏசா. 25:8) ஓர் அன்பான அப்பா, பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்து, அவர்களுடைய கஷ்டங்களைப் போக்குவது போல யெகோவா நம்முடைய கண்ணீரைத் துடைத்து, மரணத்தை ஒழிப்பார். அதற்கு, யெகோவா ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார். “ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொ. 15:22) இந்த ஏற்பாட்டைப் புரிந்துகொண்ட பவுல், “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்று சொன்னார். (ரோ. 7:25) ஆதாம்-ஏவாள் தவறு செய்த பிறகும்கூட, யெகோவா மனிதர்கள்மேல் அன்பு வைத்திருந்தார். மனிதர்களைப் படைக்கும்போது அவர்களைப் பார்த்து சந்தோஷப்பட்ட இயேசுவுக்கும் அன்பு குறைந்துவிடவில்லை. (நீதி. 8:30, 31) ஆனால், நமக்கு எப்படி கிறிஸ்துவினால் விடுதலை கிடைக்கும்?

11. மனிதர்களுக்கு உதவ யெகோவா என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்?

11 ஆதாம் பாவம் செய்ததால் யெகோவா மரண தண்டனை கொடுத்தார். ‘ஒரே  மனிதனுடைய குற்றத்தினால் பலதரப்பட்ட ஆட்களும் தண்டனை தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 5:18) அதனால், அவனுடைய பிள்ளைகளான நாம் எல்லோருமே பாவிகளாக இருக்கிறோம், மரணமடைகிறோம். (ரோ. 5:12, 16) யெகோவா நம்மை எப்படி மரணத்திலிருந்து காப்பாற்றுவார்? ‘அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்காக மனிதகுமாரன் வந்தார்’ என்று இயேசு சொன்னார். (மத். 20:28) ‘சரிசமமான மீட்புவிலையை’ கொடுக்கவே இயேசு பூமிக்கு வந்தார்; ஆதாமைப் போல் குறையற்ற மனிதனாகப் பிறந்தார். யெகோவா நீதியானவர் என்பதை இந்த மீட்புவிலை ஏற்பாடு எப்படிக் காட்டுகிறது?—1 தீ. 2:5, 6.

12. யெகோவா நீதி தவறாதவர் என்பதை எப்படிக் காட்டினார்?

12 இயேசு ஆதாமைப் போல் குறையில்லாத மனிதனாக இருந்ததால் சாகாமல் என்றென்றும் வாழும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆதாமும் சாகாமல் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா விரும்பினார். ஆதாம் பாவம் செய்ததால் அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. யெகோவாமீதும் ஆதாமின் சந்ததிமீதும் இயேசுவுக்கு அன்பிருந்ததால், தம் உயிரையே பலியாகக் கொடுத்தார். பிறகு, இயேசுவை மீண்டும் யெகோவா பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பினார். (1 பே. 3:18) ஆதாம் இழந்த உயிருக்கு சரிசமமான உயிரை இயேசு கொடுத்தார். அந்த சரிசமமான பலியை யெகோவா ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், அவர் நீதி தவறாதவர் என்பதைக் காட்டினார். இப்படி, ஆதாமின் சந்ததியாரை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்தார்; ஆதாம் இழந்த ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவிக்க வழி செய்தார். “பூமிக்குரிய உடலைப் பெற்ற ‘முதல் ஆதாம் உயிருள்ளவன் ஆனான்’ என்று எழுதப்பட்டுள்ளதே; பரலோகத்திற்குரிய உடலைப் பெற்ற கடைசி ஆதாம் உயிரளிக்கிறவர் ஆனார்” என்று பவுல் இதைப் பற்றிச் சொன்னார்.—1 கொ. 15:45.

‘உயிரளிக்கிறவரான’ இயேசு ஆபேலை உயிர்த்தெழுப்புவார் (பாரா 13)

13. “கடைசி ஆதாம்” இறந்தவர்களுக்கு எப்படி உதவுவார்?

13 ‘கடைசி ஆதாம் [அதாவது, இயேசு] உயிரளிக்கிறவராக’ செயல்படும் காலம் ரொம்ப சீக்கிரத்தில் வரப்போகிறது. அப்போது, இறந்துபோன லட்சக்கணக்கானோர் உயிரோடு எழுந்து வருவார்கள்; இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள்.—யோவா. 5:28, 29.

14. பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் எப்படி விடுதலை பெறுவோம்?

14 பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நமக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? யெகோவாவுடைய அரசாங்கம் வரும்போது விடுதலை கிடைக்கும். ‘கடைசி ஆதாமும்,’ அதாவது இயேசுவும் பூமியிலிருந்து பரலோகத்திற்குப் போகிறவர்களும் சேர்ந்து இந்தப் பூமியை ஆட்சி செய்யப் போகிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10-ஐ வாசியுங்கள்.) மனிதர்களுக்கு வரும் கஷ்டநஷ்டங்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், அவர்களும் மனிதர்களாக வாழ்ந்தவர்கள்தான். அதனால், இயேசுவோடு சேர்ந்து ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்யும்போது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்கள் உதவி செய்வார்கள்.—வெளி. 20:6.

15, 16. (அ) மரணம் எப்போது ஒழிக்கப்படும்? (ஆ) 1 கொரிந்தியர் 15:28-ன்படி கடைசியில் என்ன நடக்கும்?

15 ஆயிர வருட முடிவில் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். “ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவார்கள்; முதலானவராக உயிர்ப்பிக்கப்பட்டவர் கிறிஸ்து; பின்பு, கிறிஸ்துவுக்குரியவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின் முடிவிலே, அவர் எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும் ஒழித்துவிட்டு, கடவுளும் தகப்பனுமானவரிடமே ஆட்சியை ஒப்படைத்துவிடுவார். ஆனால், எல்லா எதிரிகளையும் அவரது காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை  அவர் ராஜாவாய் ஆட்சி செய்தாக வேண்டும். ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.” (1 கொ. 15:22-26) அதற்குப் பிறகு ஆதாமின் பாவத்தால் வந்த மரணம் இருக்காது. எல்லா மனிதர்களையும் மூடியிருந்த “முக்காடு” முற்றிலும் நீக்கப்படும்.—ஏசா. 25:7, 8.

16 “எல்லாமே மகனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டபின், எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு மகனும் கீழ்ப்பட்டிருப்பார். அப்போது, கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்” என்று பவுல் சொன்னார். (1 கொ. 15:28) ஆயிர வருட ஆட்சியின் முடிவில், யெகோவா கொடுத்த பொறுப்புகளையெல்லாம் இயேசு செய்து முடித்திருப்பார். பிறகு, ஆட்சியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடுவார். யெகோவாவின் விருப்பப்படி பூமி முழுவதும் நீதியுள்ள மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்.

17. கடைசியில் சாத்தானுக்கு என்ன ஆகும்?

17 எல்லா கஷ்டங்களுக்கும் காரணமாக இருக்கிற சாத்தானுக்கு என்ன ஆகும்? வெளிப்படுத்துதல் 20:7-15 இதற்குப் பதிலளிக்கிறது. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, இந்தப் பூமியில் வாழும் நீதியுள்ள மனிதர்களைச் சோதிப்பதற்காக சாத்தான் அவிழ்த்துவிடப்படுவான். சாத்தானும் அவனோடு சேர்ந்துகொள்ளும் அனைவரும் “இரண்டாம் மரணத்தை” பெறுவார்கள். (வெளி. 21:8) இரண்டாம் மரணத்தைப் பெறுகிறவர்களுக்கு உயிர்த்தெழுதல் கிடையாது. ஆதாமால் வந்த மரணம்தான் ஒழிக்கப்படும்; ‘இரண்டாம் மரணம்’ ஒழிக்கப்படாது. சாத்தான் அழிக்கப்பட்ட பிறகும், யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகிறவர்கள் “இரண்டாம் மரணத்தை” பெறுவார்கள்.

18. ஆதாமுக்குக் கடவுள் கொடுத்த பொறுப்பு எப்படி நிறைவேறும்?

18 சாத்தான் அழிந்த பிறகு, நமக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது; நாம் அனைவரும் முடிவில்லா வாழ்க்கையைப் பெறுவோம். ஆதாமிடம் கடவுள் கொடுத்த பொறுப்பு நிறைவேற்றப்படும். இந்த முழு பூமியும் நீதியுள்ள மனிதர்களால் நிரப்பப்படும். எல்லா உயிரினங்களையும் நாம் ஆண்டுகொள்வோம்; சந்தோஷமாக வாழ்வோம். இந்த அருமையான ஆசீர்வாதங்களை அள்ளிக்கொடுக்கும் யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!