Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மைக் கிறிஸ்தவர்கள் யார்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் யார்?

‘நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.’—ரோ. 12:2.

1. இரண்டாம் உலகப் போரின்போது பாதிரியார்கள் என்ன செய்தார்கள்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் போரில் கலந்துகொள்வதை கடவுள் விரும்புவாரா? கடந்த 100 வருடங்களில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் போரில் கலந்துகொண்டார்கள். இரண்டாம் உலகப் போரின்போது கத்தோலிக்கர்கள், கத்தோலிக்கர்களைக் கொன்று குவித்தார்கள். புராட்டஸ்டன்ட் மதத்தினர், புராட்டஸ்டன்ட் மதத்தினரைக் கொன்றார்கள். ராணுவ வீரர்களையும் அவர்களுடைய ஆயுதங்களையும் பாதிரியார்களே ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.

2, 3. இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்குப் பிறகும் யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்தார்கள்? ஏன்?

2 இரண்டாம் உலகப் போரின்போது யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் போரில் கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள். ‘நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டினால், என்னுடைய சீடர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்’ என்ற இயேசுவின் கட்டளையை அவர்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்தார்கள். (யோவா. 13:35) “நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், உலகத்தாரைப் போல் போர் செய்வதில்லை” என்று பவுல் சொன்ன வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொண்டார்கள்.2 கொரிந்தியர் 10:3, 4-ஐ வாசியுங்கள்.

3 யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சொல்கிறபடி  வாழ்கிறார்கள். அதனால்தான், போரில் கலந்துகொள்வதும் இல்லை; அதைக் கற்றுக்கொள்வதும் இல்லை. இப்படிப் போரில் கலந்துகொள்ளாததால், ஆண்கள்-பெண்கள், சிறியோர்-பெரியோர் என ஆயிரக்கணக்கான சாட்சிகள் நிறைய கொடுமைகளை அனுபவித்தார்கள். சித்திரவதை முகாம்களிலும் சிறைகளிலும் போடப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள். இருந்தாலும், அவர்கள் வைராக்கியமாக நற்செய்தியை அறிவித்தார்கள். ஹிட்லர் காலத்தில் நிறைய பேர் கொலை செய்யப்பட்டார்கள். ஐரோப்பாவில் இருந்த சாட்சிகள் சித்திரவதை செய்யப்பட்டபோதிலும் நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவில்லை. 1994-ஆம் ஆண்டு, ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலையில் யெகோவாவின் சாட்சிகள் கலந்துகொள்ளவில்லை. யுகோஸ்லாவியாவைப் பிரித்தபோது நடந்த போராட்டங்களிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

4. யெகோவாவின் சாட்சிகள் போரில் கலந்துகொள்ளாதது எதை நிரூபித்திருக்கிறது?

4 யெகோவாவின் சாட்சிகள் கலவரங்களிலும் போர்களிலும் கலந்துகொள்ளாததால், அவர்களுக்குக் கடவுள்மீதும் மக்கள்மீதும் உண்மையான அன்பு இருக்கிறது என்பதை நிறைய பேர் புரிந்துகொண்டார்கள். அவர்கள்தான் இயேசுவின் உண்மையான சீடர்கள் என்பதையும் புரிந்துகொண்டார்கள். யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதற்கு இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

வரலாறு காணாத சாதனை

5. இயேசுவின் சீடர்கள் என்ன மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது?

5 இயேசு பூமியில் இருந்தபோது முழு மூச்சோடு ஊழியம் செய்தார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அவருடைய சீடர்களையும் அதையே செய்யச் சொன்னார். முதலில் 12 அப்போஸ்தலர்களுக்கும், பிறகு 70 சீடர்களுக்கும் ஊழியம் செய்யக் கற்றுக்கொடுத்தார். (லூக். 6:13; 10:1) நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் அவர்களும் முழு மூச்சோடு ஈடுபட்டார்கள். ஆரம்பத்தில், யூதர்களுக்கு மட்டும்தான் நற்செய்தியைச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது. மற்ற தேசத்து மக்களுக்கும் நற்செய்தியைச் சொல்ல வேண்டியிருந்தது.—அப். 1:8.

6. யெகோவா பாரபட்சமற்றவர் என்பதை பேதுரு எப்படிப் புரிந்துகொண்டார்?

6 ரோம அதிகாரியான கொர்நேலியுவிடம் நற்செய்தியைச் சொல்வதற்கு அப்போஸ்தலன் பேதுருவை யெகோவா அனுப்பினார். யூதர்களை மட்டுமல்ல மற்ற தேசத்து மக்களையும் பாரபட்சமில்லாமல் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்பதை பேதுரு புரிந்துகொண்டார். உடனே கொர்நேலியுவையும் அவருடைய வீட்டாரையும் ஞானஸ்நானம் எடுக்கச் சொன்னார். அன்றுமுதல் இயேசுவின் சீடர்கள் எல்லா தேசத்து மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.—அப். 10:9-48.

7, 8. யெகோவாவின் சாட்சிகள் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள்? (ஆரம்பப் படம்.)

7 இன்றும், யெகோவாவின் சாட்சிகள் எல்லா தேசத்து மக்களுக்கும் ஆர்வமாக நற்செய்தியை அறிவிக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 லட்சம் சாட்சிகள் 600-க்கும் அதிகமான மொழிகளில் நற்செய்தியை அறிவிக்கக் கடும் முயற்சி எடுக்கிறார்கள். வீட்டுக்குவீடு ஊழியம், தெரு ஊழியம், பொது ஊழியம் என வித்தியாசமான முறைகளில் சாட்சி கொடுக்கிறார்கள். சில நேரங்களில் மேஜைகளிலும் வீல் ஸ்டாண்டுகளிலும் (லிட்ரேச்சர் கார்ட்) பிரசுரங்களை வைத்து பொது இடங்களில் சாட்சி கொடுக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் இதையெல்லாம் செய்கிறார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

8 பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் மொழிபெயர்ப்பதற்காக 2,900 சகோதர சகோதரிகள் விசேஷ பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அநேகர் கேள்விப்படாத மொழிகளில்கூட அவர்கள் பிரசுரங்களை மொழிபெயர்க்கிறார்கள். உதாரணமாக, ஸ்பெயின் நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் காட்டலன் என்ற மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்க்கிறார்கள். அது அழிந்துவரும் மொழி என்று  சிலர் நினைத்தார்கள். ஆனால், சமீப காலங்களில் மீண்டும் அது முக்கிய மொழியாக ஆனது. இன்று லட்சக்கணக்கானோர் இந்த மொழியைப் பேசுகிறார்கள். இப்போது காட்டலன் மொழியில் அவர்களுக்குப் பிரசுரங்கள் கிடைக்கின்றன, கூட்டங்களும் நடக்கின்றன.

9, 10. நற்செய்தியை எல்லா தேசங்களுக்கும் அறிவிக்க யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்கிறார்கள்?

9 மெக்சிகோவில் பெரும்பாலான மக்கள் ஸ்பானிய மொழி பேசுகிறார்கள். மற்ற மொழி பேசுகிறவர்களும் அந்த நாட்டில் இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மாயா என்ற மொழி. இந்த மொழியை நிறைய பேர் பேசுவதால் இந்த மொழியிலும் பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் மாயா மொழி அதிகம் பேசப்படும் இடத்திலேயே தங்கி மொழிபெயர்க்கிறார்கள். நேபாளத்தில், 2 கோடியே 90 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு 120 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், 1 கோடி மக்கள் நேபாளி மொழியைப் பேசுகிறார்கள். மற்ற மொழியைப் பேசுகிறவர்களுக்கும் நேபாளி தெரியும். அதனால், நேபாளி மொழியில் பைபிள் பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

10 யெகோவாவின் சாட்சிகள் ஏன் பல மொழிகளில் பிரசுரங்களை மொழிபெயர்க்கிறார்கள்? ஏனென்றால், நற்செய்தியை அறிவிக்கும் வேலையை அவர்கள் ரொம்பவே முக்கியமாக நினைக்கிறார்கள். கோடிக்கணக்கான துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள், பத்திரிகைகள் விலையின்றி பொது மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. மனப்பூர்வமாகக் கொடுக்கப்படும் நன்கொடைகளால் இந்த வேலை நடைபெறுகிறது. “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு யெகோவாவின் சாட்சிகள் கீழ்ப்படிகிறார்கள்.—மத். 10:8.

லோ ஜெர்மன் மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்க்கிறார்கள் (பாரா 10)

லோ ஜெர்மன் மொழியிலுள்ள பிரசுரங்களை பராகுவே நாட்டில் பயன்படுத்துகிறார்கள் (ஆரம்ப படத்தையும் பாருங்கள்)

11, 12. யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் நற்செய்தியை அறிவிப்பது எதை நிரூபிக்கிறது?

11 யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் நற்செய்தியை அறிவிப்பதற்கு நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறார்கள், புது மொழியைக் கற்றிருக்கிறார்கள், அந்தக் கலாச்சாரத்திற்குத் தங்களைப் பழக்கிக்கொள்கிறார்கள். இப்படி உலகம் முழுவதிலும் நற்செய்தியை அறிவிப்பதால் யெகோவாவின் சாட்சிகள்தான் இயேசுவின் உண்மையான சீடர்கள் அதாவது உண்மைக் கிறிஸ்தவர்கள், என்று நிறைய பேர் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

12 யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் கற்றுக்கொண்ட பைபிள் போதனைகள் உண்மை என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சில சகோதர சகோதரிகள் இதுதான் உண்மை என்பதை எப்படித் தங்களுக்குத் தாங்களே நிரூபித்திருக்கிறார்கள்? அவர்களிடமே கேட்கலாம்.ரோமர் 14:17, 18-ஐ வாசியுங்கள்.

 நாங்கள் ஏன் நம்புகிறோம்?

13. யெகோவாவின் சாட்சிகளால் எப்படி ஒழுக்கமாக வாழ முடிகிறது?

13 யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் கற்றுக்கொண்ட பைபிள் போதனைகள் உண்மை என்று ஏன் நம்புகிறார்கள்? இதுதான் கடவுளுடைய அமைப்பு என்று அவர்கள் நம்புவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன? ‘யெகோவாவோட அமைப்புல இருக்கிற எல்லாரும் ஒழுக்கமா நடந்துக்க ரொம்ப முயற்சி எடுக்குறாங்க. சபையில யாரு தப்பு செஞ்சாலும் அவங்கள மூப்பர்கள் கண்டிச்சு திருத்துவாங்க’ என்று பல வருடங்களாக யெகோவாவைச் சேவிக்கும் ஒரு சகோதரர் சொன்னார். யெகோவாவின் சாட்சிகள் ஒழுக்கமாக வாழ எது உதவுகிறது? அவர்கள் பைபிளில் இருக்கும் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கிறார்கள்; இயேசுவையும் அவருடைய சீடர்களையும் பின்பற்றுகிறார்கள். நிறைய பேர் ஒழுக்கமாக வாழ்வதில் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். மோசமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்கூட மனந்திரும்பி பைபிள் சொல்கிறபடி வாழ்கிறார்கள். ஒழுக்க விஷயங்களில் சிலர் பைபிள் சொல்கிறபடி வாழ மறுக்கும்போது சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.1 கொரிந்தியர் 6:9-11-ஐ வாசியுங்கள்.

14. சபைநீக்கம் செய்யப்பட்ட நிறைய பேர் என்ன செய்திருக்கிறார்கள்?

14 சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மனந்திரும்பும்போது மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். (2 கொரிந்தியர் 2:6-8-ஐ வாசியுங்கள்.) இப்படி யெகோவாவின் சாட்சிகள் ஒழுக்க விஷயங்களில் கடவுளுக்கு ஏற்ற விதத்தில் வாழ்வதால் சபையை சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகிறது. அவர்கள் மற்றவர்களுடைய நம்பிக்கையையும் சம்பாதித்திருக்கிறார்கள். ஆனால், சர்ச்சுகளில் ஒழுக்க விஷயங்களுக்கு இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதற்கு இது ஒரு முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

15. யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் பைபிளைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு சகோதரர் ஏன் நம்புகிறார்?

15 இதுதான் கடவுளுடைய அமைப்பு என்பதை நம்புவதற்கு இன்னும் சிலர் என்ன காரணங்களைச் சொல்கிறார்கள்? 54 வயதான ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: ‘சின்ன வயசிலிருந்தே நான் நம்புற எல்லாமே மூனு முக்கிய விஷயங்களை சார்ந்திருக்கு: (1) கடவுள் இருக்கிறார்; (2) அவர்தான் பைபிளைக் கொடுத்தார்; (3) யெகோவாவின் சாட்சிகள்தான் கடவுளோட விருப்பப்படி நற்செய்திய உலகெங்கும் அறிவிக்கிறார்கள். இந்த மூனு விஷயங்களும் உண்மையா இல்லையானு அடிக்கடி யோசிச்சு பார்ப்பேன். இது எல்லாம் உண்மைனு நம்புறதுக்கு எனக்கு நிறைய ஆதாரங்கள் கிடச்சிருக்கு. அதனால கடவுள் மேல இருக்கிற நம்பிக்கை இன்னும் அதிகமாயிருக்கு. யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் பைபிள சரியா புரிஞ்சிக்கிட்டிருக்காங்கனு நான் உறுதியா நம்புறேன்.’

16. யெகோவாவுடைய அமைப்புதான் உண்மையானது என்பதற்கு ஒரு சகோதரி என்ன காரணங்களைச் சொன்னார்?

16 யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்யும்  ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: ‘யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் யெகோவாவுடைய பெயரை வைராக்கியமாக அறிவிக்கிறாங்க. புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிள்ல 7,000 தடவைக்கும் மேல யெகோவாவோட பெயர் இருக்கு. 2 நாளாகமம் 16:9-ல “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என்ற வார்த்தைகள் என்னை ரொம்ப பலப்படுத்தியிருக்கு. நான் யெகோவாவ முழு இருதயத்தோட சேவிச்சாதான் அவர் என்னை ஆசீர்வதிப்பாருனு இதிலிருந்து தெரிஞ்சிக்கிட்டேன். யெகோவாவுக்கும் எனக்கும் இருக்கிற பந்தத்தை ரொம்ப உயர்வா நினைக்கிறேன். இயேசுவை பத்தி படிக்கும்போது யெகோவாவை பத்தி நிறைய தெரிஞ்சிக்க முடியுது.’

17. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் யெகோவாவின் சாட்சியான பிறகு என்ன சொன்னார்?

17 கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் யெகோவாவின் சாட்சியான பிறகு இப்படிச் சொன்னார்: ‘மனுஷங்க சந்தோஷமா வாழ்றதுக்காகதான் கடவுள் இந்த பூமிய படச்சார். அதனால, கஷ்டத்த ரொம்ப நாள் விட்டுவைக்க மாட்டார். இந்த உலகம் கடவுள் பயம் இல்லாம மோசமா போயிக்கிட்டிருக்கு. அன்பே இல்லாத இந்த உலகத்தில யெகோவாவின் சாட்சிகள்கிட்ட மட்டும்தான் உண்மையான அன்பும் விசுவாசமும் இருக்கு. அதுக்கு காரணம், கடவுளோட சக்தி அவங்ககிட்ட இருக்கு.’1 பேதுரு 4:1-4-ஐ வாசியுங்கள்.

18. இரண்டு சகோதரர்களின் அனுபவம் எதைக் காட்டுகிறது?

18 பல வருடங்களாக யெகோவாவைச் சேவிக்கும் மற்றொரு சகோதரர் இப்படிச் சொன்னார்: ‘யெகோவாவின் சாட்சிகள் எல்லா விஷயங்களையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை போலதான் செய்றாங்கனு நான் புரிஞ்சிக்கிட்டேன். நான் நிறைய நாடுகளுக்கு போயிருக்கேன், உலகம் முழுசும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் ஒரே மாதிரிதான் எல்லா விஷயத்தையும் செய்றாங்க. பைபிளிலிருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் எனக்கு உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் கொடுத்திருக்கு.’ யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதை நம்புவதற்கு இயேசுவைப் பற்றி தெரிந்துகொண்டது ஒரு சகோதரருக்கு உதவியிருக்கிறது. 60 வயதைத் தாண்டிய அந்த சகோதரர் சொல்கிறார்: ‘இயேசுவை பத்தியும் அவர் செஞ்ச ஊழியத்தை பத்தியும் நாம பைபிள்ல இருந்து நிறைய ஆராய்ச்சி செஞ்சிருக்கோம். அவர்மேல விசுவாசம் வச்சு, அவர அப்படியே பின்பற்ற முயற்சி செய்றோம். அதனால யெகோவாகிட்ட நெருங்கிப்போக முடியுது. கிறிஸ்து நமக்காக உயிர கொடுத்ததுனாலதான் பாவ மன்னிப்பு கிடச்சிருக்குனு உறுதியா நம்புறோம். அவர் உயிர்த்தெழுந்ததுக்கு கண்கண்ட சாட்சிகள் இருக்குனு பைபிள் சொல்லுது.’1 கொரிந்தியர் 15:3-8-ஐ வாசியுங்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

19, 20. (அ) நமக்கு என்ன பொறுப்பு இருப்பதாக பவுல் சொன்னார்? (ஆ) நாம் எதை பாக்கியமாக நினைக்கிறோம்?

19 பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை நம்மால் மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால், நாம் எல்லோரையும் நேசிக்கிறோம். “‘இந்தச் செய்தியை உங்களுடைய வாயினால்’ அறிவித்து, அதாவது இயேசுவே எஜமானர் என்று அறிவித்து, அவரைக் கடவுள் உயிர்த்தெழுப்பினார் என நீங்கள் உங்களுடைய இருதயத்தில் விசுவாசித்தால் மீட்புப் பெறுவீர்கள். ஒருவன் இருதயத்தில் விசுவாசிக்கும்போது கடவுளுக்குமுன் நீதிமானாகிறான்; என்றாலும், வாயினால் அறிவிக்கும்போது மீட்புப் பெறுகிறான்” என்று பவுல் சொன்னதை நீங்களும் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள்.—ரோ. 10:9, 10.

20 யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதை மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். நற்செய்தியை அறிவிக்கும்போது மக்கள் நாம் சொல்வதை மட்டுமல்ல நம்முடைய நடத்தையையும் பார்த்து நாம்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்று நம்ப வேண்டும்.