Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்

முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்

“பூமிக்குரிய காரியங்கள் மீதல்ல,பரலோகத்திற்குரிய காரியங்கள் மீதே உங்கள் மனதை ஊன்ற வையுங்கள்.”—கொலோ. 3:2.

1, 2. (அ) கொலோசெ சபையில் என்ன பிரச்சினை இருந்தது? (ஆ) அவர்களுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்?

முதல் நூற்றாண்டு கொலோசெ சபையில் பிரிவினைகள் இருந்தன. சில கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். சிலர், எந்த ஆசைகளும் இல்லாமல் துறவியைப் போல் வாழ வேண்டும் என்று சொன்னார்கள். இந்தப் பொய் போதனைகளிலிருந்து விலகி இருக்கும்படி பவுல் கொலோசெ சபைக்குக் கடிதம் எழுதினார்: “தத்துவங்களினாலும் வஞ்சனையான வீண் கருத்துகளினாலும் ஒருவனும் உங்களைக் கவர்ந்துகொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவை மனித பாரம்பரியங்களையும் இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களையுமே சார்ந்தவை, கிறிஸ்துவைச் சார்ந்தவை அல்ல.”—கொலோ. 2:8.

2 கொலோசெ சபையில் இருந்தவர்கள் ஒருவேளை இந்தப் பொய் போதனைகளை நம்பியிருந்தால் இயேசுவோடு ஆட்சி செய்யும் வாய்ப்பை இழந்திருப்பார்கள். (கொலோ. 2:20-23) அதனால், பவுல் அவர்களுக்கு ஓர் ஆலோசனை கொடுத்தார்: “பூமிக்குரிய காரியங்கள் மீதல்ல, பரலோகத்திற்குரிய காரியங்கள் மீதே உங்கள் மனதை ஊன்ற வையுங்கள்.” (கொலோ. 3:2) இந்த ஆலோசனை, யெகோவாவோடு அவர்களுக்கு இருந்த பந்தத்தைப் பலப்படுத்தியது. “பரலோக நம்பிக்கை” உள்ள அந்தக் கிறிஸ்தவர்கள், பரலோகத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள்  மீது கவனம் செலுத்த வேண்டியிருந்தது.—கொலோ. 1:4, 5.

3. (அ) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

3 இன்றும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், அவர்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். (ரோ. 8:14-17) பூமியில் வாழப்போகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? பவுலின் வார்த்தைகளை அவர்கள் எப்படிப் பின்பற்றலாம்? ‘வேறே ஆடுகளாகிய’ நாம் எப்படி “பரலோகத்திற்குரிய காரியங்கள்” மீது கவனம் செலுத்த முடியும்? (யோவா. 10:16) இந்த விஷயத்தில், ஆபிரகாம், மோசே போன்ற உண்மையுள்ள ஊழியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுங்கள்

4. பூமியில் வாழப்போகிறவர்கள் எப்படி “பரலோகத்திற்குரிய காரியங்கள்” மீது கவனம் செலுத்த முடியும்?

4 பூமியில் வாழப்போகிற நாம் எப்படி “பரலோகத்திற்குரிய காரியங்கள்” மீது கவனம் செலுத்த முடியும்? யெகோவாவுக்கும் அவருடைய சேவைக்கும் முதலிடம் கொடுப்பதன் மூலம் அதைச் செய்யலாம். (லூக். 10:25-27) அதற்கு, இயேசு வைத்த சிறந்த முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். (1 பே. 2:21) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே நமக்கும் சில சவால்கள் இருக்கின்றன. சாத்தானுடைய உலகத்தில் பொய் போதனைகள், உலக தத்துவங்கள், பொருளாசை எல்லாம் நிறைந்திருக்கிறது. (2 கொரிந்தியர் 10:5-ஐ வாசியுங்கள்.) இவையெல்லாம் நம்மை யெகோவாவிடமிருந்து பிரித்துவிடலாம். இயேசுவைப் போலவே நாமும் சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டும்.

5. நமக்குப் பொருளாசை இருக்கிறதா என்று எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

5 “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத். 6:21) நாம் எதை விரும்புகிறோமோ அதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருப்போம். அதைத்தான் செயலிலும் காட்டுவோம். அப்படியென்றால், நமக்குப் பொருளாசை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: “‘நிறைய பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம், சொகுசா வாழ்றதுக்கு வேறென்ன வாங்கலாம்’-னு அடிக்கடி யோசிக்கிறேனா? அல்லது ‘கடவுளுடைய சேவைக்காக இன்னும் என்னெல்லாம் செய்யலாம்’-னு யோசிக்கிறேனா?” (மத். 6:22) ‘பூமியில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவர்கள்’ கடவுளோடு இருக்கும் பந்தத்தை இழந்துவிடுவார்கள் என்று இயேசு எச்சரித்தார்.—மத். 6:19, 20, 24.

6. தவறான ஆசைகளை எதிர்த்து நாம் எப்படிப் போராடலாம்?

6 நாம் பாவிகளாக இருப்பதால், சில சமயத்தில் தவறான ஆசைகள் வரலாம். (ரோமர் 7:21-23-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நாம் நடக்கவில்லை என்றால், “நாம் இருளுக்குரிய செயல்களை” செய்ய ஆரம்பித்துவிடுவோம்; “குடித்துக் கும்மாளம் போடுதல், வெறிக்கவெறிக்கக் குடித்தல், பாலியல் ஒழுக்கக்கேடு, வெட்கங்கெட்ட நடத்தை” போன்றவற்றை செய்ய ஆரம்பித்துவிடுவோம். (ரோ. 13:12, 13) இதுபோன்ற “பூமிக்குரிய காரியங்கள்” மீது கவனத்தைச் செலுத்தாமல் நாம் கடவுளுடைய சேவையில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்படிச் செய்வது அவ்வளவு சுலபமல்ல. “என் உடலை அடக்கியொடுக்கி அடிமைபோல் நடத்தி வருகிறேன்” என்று பவுல் சொன்னார். (1 கொ. 9:27) அதேபோல், சாத்தானுடைய உலகத்திலிருந்து விலகியிருக்க நாமும் கடும் முயற்சி எடுக்க வேண்டும். அப்படிக் கடும் முயற்சி எடுத்து, ‘கடவுளைப் பிரியப்படுத்திய’ இரண்டு பேரைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.—எபி. 11:6.

ஆபிரகாம்

7, 8. (அ) ஆபிரகாமும் சாராளும் என்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள்? (ஆ) ஆபிரகாம் எதில் கவனம் செலுத்தினார்?

7 ஊர் என்ற பட்டணத்தை விட்டுப் போகும்படி ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். ஆபிரகாம் யெகோவாமீது விசுவாசம்  வைத்து அவருக்குக் கீழ்ப்படிந்தார். அதனால், ‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்று யெகோவா ஆபிரகாமிடம் சொன்னார். (ஆதி. 12:2) ஆனால், பல வருடங்கள் உருண்டோடியும் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் குழந்தையே பிறக்கவில்லை. செல்வ செழிப்பான ஊர் பட்டணத்தையும் அவர்களுடைய சொந்தபந்தங்களையும் வீட்டையும் விட்டு 1,600 கி.மீ. (1,000 மைல்) பயணம் செய்து கானான் தேசத்திற்கு வந்தார்கள். அங்கு அவர்களுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தன. சில நேரங்களில் பஞ்சத்தில் கஷ்டப்பட்டார்கள், கூடாரங்களில் வாழ்ந்தார்கள், கொள்ளை கூட்டங்களை எதிர்த்துப் போராடினார்கள். (ஆதி. 12:5, 10; 13:18; 14:10-16) இத்தனை கஷ்டங்கள் வந்தபோதிலும் ஊர் பட்டணத்திற்குத் திரும்பிப் போய்விடலாம் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை!எபிரெயர் 11:8-12, 15-ஐ வாசியுங்கள்.

8 ஆபிரகாம் “பூமிக்குரிய காரியங்கள்” மீது கவனம் செலுத்தாமல், யெகோவாவை முழுமையாக ‘விசுவாசித்தார்.’ (ஆதி. 15:6) கடவுளுடைய வாக்குறுதியில் உறுதியான நம்பிக்கை வைத்தார். யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டியதால், யெகோவா அவரைப் பலப்படுத்தினார். “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி . . . உன் சந்ததி [அதாவது, வாரிசு] இவ்வண்ணமாய் இருக்கும்” என்று யெகோவா சொன்னார். (ஆதி. 15:5) இதைக் கேட்டதும், ஆபிரகாமின் விசுவாசம் இன்னும் பலப்பட்டிருக்கும். அவர் வானத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் யெகோவா கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்திருக்கும். யெகோவா சொன்னபடியே ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறந்தான்.—ஆதி. 21:1, 2.

9. நாம் எப்படி ஆபிரகாமைப் பின்பற்றலாம்?

9 “யெகோவாமீது ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாக எண்ணப்பட்டார்.” (ரோ. 4:3) ஆபிரகாமைப் போலவே நாமும் கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறோம். (2 பே. 3:13) “பூமிக்குரிய காரியங்கள்” மீது நாம் கவனம் செலுத்தினால் ‘கடவுள் தம் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லையே’ என்று நினைத்து கவலைப்பட ஆரம்பித்துவிடுவோம்; கடவுளுடைய சேவையில் மந்தமாகிவிடுவோம். ஒருவேளை, பயனியர் செய்வதற்காக அல்லது முழுநேர சேவைக்காக நீங்கள் தியாகங்களைச் செய்திருக்கலாம். ஆனால், இப்போதும் உங்களுக்கு அதே மனப்பான்மை இருக்கிறதா? ஆபிரகாமைப் போலவே எதிர்கால ஆசீர்வாதங்கள் மீது கவனம் செலுத்துகிறீர்களா? உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்கிறீர்களா?—எபி. 11:10.

மோசே

10. எகிப்தில் மோசே எப்படி வாழ்ந்தார்?

10 “மோசே எகிப்தியருடைய எல்லாத் துறைகளிலும் பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக விளங்கினார்.” (அப். 7:22) பார்வோனுடைய வீட்டிலேயே அவர் வளர்ந்தார். எகிப்து அந்தச் சமயத்தில் உலக வல்லரசாக இருந்தது. எகிப்தில் கற்ற கல்வியையும் பார்வோனுடைய செல்வாக்கையும் பயன்படுத்தி மோசே பேரும் புகழும் பெற்றிருக்கலாம். ஆனால், அவர் கடவுளுடைய சேவைக்காக இதையெல்லாம் தியாகம் செய்துவிட்டார்.

11, 12. மோசே எந்தக் கல்வியை உயர்வாக மதித்தார், அது நமக்கு எப்படித் தெரியும்?

11 மோசே பிறந்து சில வருடங்களுக்கு தன்னுடைய அம்மா யோகெபேத்தின் கவனிப்பில் இருந்தார். அப்போது யெகோவாவைப் பற்றி அவருடைய அம்மா நிச்சயம் சொல்லிக் கொடுத்திருப்பார். அவருக்குக் கிடைத்த இந்தக் கல்வியை மோசே மிக உயர்வாக மதித்தார். அதனால், பார்வோனுடைய வீட்டில் இருப்பதால் கிடைக்கும் பேரையும் புகழையும் அவர் விரும்பவில்லை. (எபிரெயர் 11:24-27-ஐ வாசியுங்கள்.) யெகோவா மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்தார். எதிர்கால ஆசீர்வாதங்கள் மீது கவனம் செலுத்தினார்.

12 பார்வோனுடைய வீட்டில் மோசேக்கு மிகச் சிறந்த கல்வி கிடைத்தது. ஆனால் அவர்,  “பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்; பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பதையே அவர் தேர்ந்தெடுத்தார்.” யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்யவே மோசே விரும்பினார்.

13, 14. (அ) கடவுள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற மோசேக்கு எது உதவியது? (ஆ) நாம் எப்படி மோசேயைப் பின்பற்றலாம்?

13 யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் சேவை செய்யவே மோசே விரும்பினார். மோசேக்கு 40 வயது இருந்தபோது, அடிமையாயிருந்த இஸ்ரவேலரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார். (அப். 7:23-25) ஆனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர் இன்னும் நிறைய குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா நினைத்தார். மனத்தாழ்மை, பொறுமை, சாந்தம், சுயக் கட்டுப்பாடு போன்ற குணங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. (நீதி. 15:33) எதிர்காலத்தில் வரும் சோதனைகளைச் சமாளிக்கவும் கஷ்டங்களைச் சகிக்கவும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. 40 வருடங்கள் மேய்ப்பனாக இருந்தபோது இந்தக் குணங்களை வளர்க்க வாய்ப்பிருந்திருக்கும்.

14 மேய்ப்பனாக இருந்தபோது மோசே அதையெல்லாம் கற்றுக்கொண்டாரா? அதில் சந்தேகமே இல்லை. ‘மோசே, பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராக’ ஆனார் என்று பைபிள் சொல்கிறது. (எண். 12:3) அதோடு, அவர் மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டதால்தான், இஸ்ரவேலர்களுடைய பிரச்சினைகளை அவரால் பொறுமையோடு தீர்த்து வைக்க முடிந்தது. (யாத். 18:26) மோசேயைப் போலவே, நாமும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் “மிகுந்த உபத்திரவத்தில்” தப்பிப்பிழைக்க முடியும். (வெளி. 7:14) உதாரணமாக, எல்லா சகோதர சகோதரிகளோடும் நீங்கள் சமாதானமாக இருக்கிறீர்களா? தொட்டதெற்கெல்லாம் கோபப்படும் அல்லது புண்பட்டுவிடும் ஆட்களோடும் சமாதானமாக இருக்கிறீர்களா? “எல்லா விதமான ஆட்களையும் உயர்வாக மதியுங்கள்; சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பே. 2:17) இந்த ஆலோசனையைப் பின்பற்றினால், நாம் எல்லோரோடும் சமாதானமாக இருக்க முடியும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

15, 16. (அ) நாம் ஏன் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்?” (ஆ) நாம் ஏன் “நன்னடத்தை உள்ளவர்களாக” இருக்க வேண்டும்?

15 ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1) அதனால், நாம் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.” (1 தெ. 5:6-9) அதற்கு நாம் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

16 நடத்தை: “உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள்; அவர்கள் . . . உங்களுடைய நற்செயல்களைக் கண்ணாரக் கண்டு, கடவுள் பரீட்சிக்கிற நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்” என்று பேதுரு சொன்னார். (1 பே. 2:12) வீட்டில், வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், ஊழியத்தில் என எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் யெகோவாவுடைய பெயருக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் நாம் நடந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் பலமுறை தவறு செய்கிறோம். (ரோ. 3:23) ஆனால், ‘விசுவாசத்திற்காகச் சிறந்த போராட்டத்தைப் போராடினால்’ தவறான ஆசைகளை வேறோடு பிடுங்கி எறிய முடியும்.—1 தீ. 6:12.

17. நாம் எப்படி இயேசுவின் மனப்பான்மையைப் பின்பற்றலாம்? (ஆரம்பப் படம்.)

17 மனப்பான்மை: “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே சிந்தை [அதாவது, மனப்பான்மை] உங்களுக்கும் இருக்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 2:5) நமக்கு நல்ல மனப்பான்மை இருந்தால்தான் அதைச் செயலில் காட்டுவோம். இயேசு பல விதங்களில் நல்ல மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு, அவர் மனத்தாழ்மையுள்ள நபராக இருந்தார். அதனால், ஊழியத்திற்காக நிறைய தியாகங்களைச் செய்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதுதான் வாழ்க்கையில்  ரொம்ப முக்கியம் என்று நினைத்தார். (மாற். 1:38; 13:10) யெகோவா சொன்னதை இயேசு அப்படியே செய்தார். (யோவா. 7:16; 8:28) வேதவசனங்களைக் கவனமாகப் படித்தார். அதனால்தான், மக்களுக்குக் கற்பிக்கும்போது அவர் நிறைய வசனங்களை மனப்பாடமாக சொல்ல முடிந்தது; அவற்றைச் சரியாக விளக்க முடிந்தது. நாம், மனத்தாழ்மையைக் காட்டுவதன் மூலமாகவும் வைராக்கியமாக ஊழியம் செய்வதன் மூலமாகவும் பைபிளை ஆழமாகப் படிப்பதன் மூலமாகவும் ‘இயேசுவுக்கு இருந்த அதே மனப்பான்மையை’ காட்டலாம்.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதையே இயேசு முக்கியமாக நினைத்தார் (பாரா 17)

18. எந்த விதத்தில் நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

18 கீழ்ப்படிதல்: “பரலோகத்திலும் பூமியிலும் . . . இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் முழங்கால்படியிட வேண்டும்” என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (பிலி. 2:9-11) இயேசுவை யெகோவா இந்தளவு உயர்த்தியிருந்தாலும், இயேசு மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறார். (1 கொ. 15:28) நாமும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ‘சீடர்களாக்கும்’ வேலையை வைராக்கியமாகச் செய்வதன் மூலம் கீழ்ப்படியலாம். (மத். 28:19) “எல்லாருக்கும் நன்மை செய்வோமாக” என்ற அறிவுரைக்கும் கீழ்ப்படிய வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு முக்கியமாக, நம் சகோதரர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.—கலா. 6:10.

19. என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

19 ‘பரலோகத்திற்குரிய காரியங்கள் மீது மனதை ஊன்ற வையுங்கள்’ என்று யெகோவா தந்த அறிவுரைக்காக நாம் நன்றியோடு இருப்போமாக! கடைசிவரை “சகிப்புத்தன்மையுடன் ஓடுவோமாக!” (எபி. 12:1) எதைச் செய்தாலும் ‘யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு செய்வோமாக!’ அப்படிச் செய்தால் யெகோவா நம் முயற்சிகளை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—கொலோ. 3:23, 24.