Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்களா?

உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்களா?

யெகோவாவின் சாட்சியாக இருக்கிற சில இளைஞர்கள் படம் பார்க்க ஒரு தியேட்டருக்கு போகிறார்கள். அது ரொம்ப சூப்பரான படம் என்று கூடப் படிக்கிற பிள்ளைகள் சொல்லியிருந்தார்கள். ஆனால், தியேட்டருக்கு போய் போஸ்டரை பார்த்தபோதுதான் அந்த படத்தில் ரொம்ப கொடூரமான காட்சிகள் இருப்பது தெரிய வருகிறது. அந்த படத்தில் வருகிறவர்கள் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பதையும், பெண்கள் அரைகுறையாக துணி போட்டு இருப்பதையும் பார்க்கிறார்கள். இப்போது இந்த கிறிஸ்தவ இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அந்த படத்தை பார்ப்பார்களா, மாட்டார்களா?

நாமும் ஒவ்வொரு நாளும் நிறைய தீர்மானங்களை எடுக்கிறோம். நாம் எடுக்கிற தீர்மானங்கள் யெகோவாவை சந்தோஷப்படுத்தலாம், இல்லை வேதனைப்படுத்தலாம். சிலநேரங்களில் நாம் ஒரு விஷயத்தை பற்றி யோசிக்காமல் சட்டென்று முடிவு எடுத்துவிடலாம். ஆனால், அதை பற்றி நன்றாக யோசித்த பிறகு நம் மனதை மாற்றிக்கொள்ளலாம். நம் தீர்மானத்தை இப்படி மாற்றிக்கொள்வது சரியா? அல்லது நமக்கு சரியான தீர்மானம் எடுக்க தெரியவில்லை என்று அர்த்தமாகுமா?

எப்போது நம் மனதை மாற்றிக்கொள்ளக் கூடாது?

யெகோவாமீது நமக்கு அந்தளவு அன்பு இருப்பதால்தான் இனி அவருக்காகவே நாம் வாழ்வோம் என்று சொல்லியிருக்கிறோம். கடைசி மூச்சுவரை அவருக்கு உண்மையாக இருப்போம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறோம். கொடுத்த வாக்கை காப்பாற்ற ரொம்ப முயற்சி செய்கிறோம். ஆனால் நம் எதிரி சாத்தான் அதை முறித்துப் போட வழி தேடுகிறான். (வெளி. 12:17) நாம் யெகோவாவுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும் என்பதால் நாம் எடுத்த முடிவிலிருந்து மாறாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அப்படி மாறினால், நம் உயிரே போய்விடும்.

கிட்டத்தட்ட 2,600 வருடங்களுக்கு முன்பு பாபிலோனில் நடந்த ஒரு சம்பவத்தை பாருங்கள். பாபிலோன் ராஜா ஒரு பெரிய தங்க சிலையை செய்து எல்லாரும் அதை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். யாரெல்லாம் அந்த சிலையை வணங்கவில்லையோ அவர்களை எல்லாம் எரிகிற நெருப்பில் போடுவதாக சொன்னார். ஆனால், யெகோவாவை வணங்கிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ யெகோவாவுடைய மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால், அந்த சிலையை வணங்க மாட்டோம் என்று ராஜாவிடம் உறுதியாக சொன்னார்கள். அதைக் கேட்டதும் ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்து, அவர்களை எரிகிற நெருப்பில் போட சொன்னார். ஆனால் யெகோவா அவர்களுடைய உயிரை காப்பாற்றினார். ஒருவேளை, யெகோவா அவர்களை காப்பாற்றாமல் போயிருந்தாலும்கூட அவர்கள் எடுத்த முடிவில் இருந்து மனதை மாற்றியிருக்க மாட்டார்கள்.—தானி. 3:1-27.

தானியேல் தீர்க்கதரிசியின் உதாரணத்தை கவனியுங்கள். இவர் யெகோவாவிடம் ஜெபம் செய்வதை யாராவது பார்த்தால், சிங்கங்கள் இருக்கிற குகையில் போட்டுவிடுவார்கள் என்று அவருக்கு நன்றாக தெரியும். சிங்கங்களிடம் சிக்கி சாவது எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்!  இதெல்லாம் தெரிந்திருந்தும், தானியேல் தினமும் மூன்று தடவை ஜெபம் செய்தார். யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை தானியேல் மாற்றிக்கொள்ளவில்லை. அதனால்தான், யெகோவா அவரை சிங்கங்களிடம் இருந்து காப்பாற்றினார்.—தானி. 6:1-27.

இன்றும் யெகோவாவை வணங்குகிறவர்கள் அவருக்கு கொடுத்த வாக்கை, அதாவது அவரை மட்டுமே வணங்குவதாக அவர்கள் கொடுத்த வாக்கை, காப்பாற்றுகிறார்கள். இதற்கு ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை கவனியுங்கள். ஒரு பள்ளியில் படிக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள், அந்த நாட்டு தேசிய சின்னத்தை வணங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், அந்த பள்ளி நிர்வாகம் அவர்களை பள்ளியைவிட்டே துரத்தப் போவதாக மிரட்டினார்கள். பிறகு அந்த நாட்டுக் கல்வி அமைச்சரே அதைப் பற்றி அந்த பிள்ளைகளிடம் பேசினார். அந்த பிள்ளைகள் கொஞ்சம்கூட பயப்படாமல், அந்த சின்னத்தை வணங்க மாட்டோம் என்று ரொம்ப மரியாதையாக அவரிடம் சொன்னார்கள். இப்போது யாரும் தேசிய சின்னத்தை வணங்க சொல்லி அவர்களை கட்டாயப்படுத்துவது இல்லை.

ஜோசப் என்ற சகோதரரின் மனைவி திடீரென்று இறந்துவிட்டார். அவர்களுடைய சவ அடக்கத்தை யெகோவாவின் சாட்சிகளுடைய முறைப்படி செய்வதற்கு ஜோசப்பின் குடும்பம் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், அவருடைய மனைவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யெகோவாவின் சாட்சிகள் கிடையாது. அதனால் யெகோவாவுக்குப் பிடிக்காத சில சடங்குகளை செய்ய சொன்னார்கள். அதை பற்றி ஜோசப் சொல்கிறார்: “அவங்க என்னை எவ்ளோ வற்புறுத்தியும் நான் என்னோட மனசை மாத்திக்கவே இல்ல. அதனால, அவங்க என் பிள்ளைங்க மனசை மாத்த முயற்சி செஞ்சாங்க. ஆனா, என் பிள்ளைங்களும் இந்த விஷயத்துல ரொம்ப உறுதியா இருந்தாங்க. என் வீட்டுலேயே தங்கி சில சடங்குகளை செய்யவும் சொந்தக்காரங்க நினைச்சாங்க. ஆனா அதை என் வீட்டுல செய்யக் கூடாதுன்னு நான் அவங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன். இறந்துபோன என் மனைவிக்கும் இந்த சடங்குல எல்லாம் நம்பிக்கையில்லன்னு அவங்களுக்கு நல்லா தெரியும். அவங்க, என்ன சொல்லியும் நான் கடைசிவரை ஒத்துக்காததுனால அந்த சடங்கை வேறொரு இடத்துல செஞ்சுக்கிட்டாங்க.

“நாங்க எல்லாரும் ரொம்ப துக்கத்துல இருந்தோம். இருந்தாலும், யெகோவாவோட சட்டங்களை மீறி நானும் என் பிள்ளைங்களும் எதுவும் செஞ்சிடக் கூடாதுனு யெகோவாகிட்ட ஜெபத்துல கெஞ்சி கேட்டேன். யெகோவா என்னோட ஜெபங்களை கேட்டு, அந்த சூழ்நிலைய சமாளிக்க சக்தி தந்தார்.” ஜோசப்பும் அவருடைய பிள்ளைகளும் தாங்கள் எடுத்த தீர்மானத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

எப்போது நம் மனதை மாற்றிக்கொள்ளலாம்?

கி.பி. 32-ஆம் வருடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கவனியுங்கள். ஒரு பெண் இயேசுவிடம் வந்து, பேய் பிடித்த அவளுடைய மகளை குணமாக்க சொல்லி கேட்டாள். அவள் இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்த பெண் கிடையாது. அதனால், அவள் திரும்பத் திரும்ப கேட்டும் இயேசு அவளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. இயேசு அவருடைய சீடர்களை பார்த்து, “இஸ்ரவேல் வீட்டாரில் வழிதவறிப்போன ஆடுகளிடமே தவிர வேறு யாரிடமும் நான் அனுப்பப்படவில்லை” என்று சொன்னார். இருந்தாலும், மகளை குணமாக்க சொல்லி அந்த பெண் விடாமல் இயேசுவிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். அதனால் இயேசு அவளை பார்த்து, “பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்று சொன்னார். அதற்கு அந்தப் பெண், “உண்மைதான், ஐயா; ஆனால், தங்கள் எஜமானுடைய மேஜையிலிருந்து விழும் துணுக்குகளை நாய்க்குட்டிகள் சாப்பிடுமே” என்று சொன்னாள். அப்போது இயேசு, அவருடைய மனதை மாற்றிக்கொண்டு அவளுடைய மகளை குணமாக்கினார்.—மத். 15:21-28.

இந்த விஷயத்தில் இயேசு அவருடைய அப்பா யெகோவாவைப் போலவே நடந்துகொண்டார். ஏனென்றால், யெகோவாவும் சில நேரத்தில் அவருடைய மனதை மாற்றிக்கொள்ள தயாராக இருந்தார். ஒருசமயம், இஸ்ரவேலர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டியை செய்து வணங்கினார்கள். யெகோவாவுக்கு அது சுத்தமாக பிடிக்காது என்று தெரிந்தும் அதை செய்தார்கள். அதனால், யெகோவா அவர்களை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், அவர்களை அழிக்க வேண்டாம் என்று மோசே கெஞ்சி கேட்டபோது யெகோவா அவருடைய மனதை மாற்றிக்கொண்டார். அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.—யாத். 32:7-14.

யெகோவாவையும் இயேசுவையும் போலவே அப்போஸ்தலன் பவுலும் அவருடைய மனதை மாற்றிக்கொள்ள தயாராக இருந்தார். முதல் மிஷனரி பயணம் செய்தபோது அவரோடு வந்த மாற்கு, திடீரென்று அவரை விட்டு போய்விட்டார். அதனால் மாற்குவை இனி தன்னோடு அழைத்துக்கொண்டு போகவே கூடாது என்று பவுல் முடிவு செய்தார். ஆனால் மாற்கு ரொம்ப பொறுப்பானவராக மாறிவிட்டார் என்று தெரிந்தபோது பவுல் அவருடைய மனதை மாற்றிக்கொண்டார். அதனால் தீமோத்தேயுவிடம், “மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டு வா; ஏனென்றால், ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார்” என்று சொன்னார்.—2 தீ. 4:11.

இதுவரை பார்த்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாமும் சில நேரத்தில் மனதை மாற்றிக்கொள்வது ரொம்ப முக்கியம். யெகோவா தவறே செய்ய மாட்டார், அவர் என்ன முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சில நேரங்களில் அவருடைய மனதை மாற்றிக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார். ஏனென்றால், அவர் இரக்கமும் பொறுமையும் அன்பும் உள்ள கடவுள். ஆனால் நாம் எல்லாரும் தவறு செய்கிறவர்கள். சரியாக முடிவு எடுக்க நமக்கு தெரியாது. யெகோவாவே அவருடைய மனதை மாற்றிக்கொள்கிறார் என்றால் நாமும் நம் மனதை மாற்றிக்கொள்வதில் தவறே இல்லை. ஒருவேளை, சிலரை பற்றி ஆரம்பத்தில் நாம் தவறாக நினைக்கலாம். ஆனால், அவர்களைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ளும்போது நம் மனதை மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

யெகோவாவுடைய சேவையில் முன்னேற்றம் செய்ய நாம் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நாம் பைபிளை படித்துக்கொண்டும், கூட்டங்களுக்கு போய்க்கொண்டும் இருக்கலாம். ஆனால் ஞானஸ்நானம் எடுப்பதை மட்டும் தள்ளிப்போடலாம். சிலசமயம், பயனியர் சேவை செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருந்தும் அதை செய்ய நாம் தயங்கலாம். சில சகோதரர்கள் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்ய ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். (1 தீ. 3:1) நீங்களும் இப்படி யோசித்து இருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் மனதை உங்களால் மாற்றிக்கொள்ள முடியுமா? உங்கள் மனதை நீங்கள் மாற்றிக்கொண்டு யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷமாக சேவை செய்ய வேண்டும்... நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டும்... என்று யெகோவா ஆசைப்படுகிறார்.

மனதை மாற்றிக்கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம்

ஆப்பிரிக்கா பெத்தேலில் சேவை செய்யும் ஏலா என்ற சகோதரி சொல்கிறார்: “நான் பெத்தேல்ல சேவை செய்ய வந்தப்போ, இங்க ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு நினைச்சேன். யெகோவாவுக்கு சேவை செய்யணுங்கிற ஆசை இருந்தாலும் என் குடும்பத்தை பிரிஞ்சு இருக்கிறது கஷ்டமா இருந்துச்சு. ஆனா பெத்தேல்ல என்கூட தங்கியிருந்த சகோதரி என்னை ரொம்ப உற்சாகப்படுத்துனாங்க. அதனால அங்கேயே இருக்கலாம்னு முடிவு செஞ்சேன். இப்போ 10 வருஷமா நான் பெத்தேல்ல சேவை செய்றேன். இன்னும் எவ்ளோ வருஷம் முடியுமோ அவ்ளோ வருஷம் இங்கயே இருந்து நம்ம சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்யணும்னு ஆசைப்படுறேன்.”

எப்போது நம் மனதை மாற்றியே ஆக வேண்டும்?

சில நேரங்களில் நம் மனதை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். உதாரணத்திற்கு காயீனை எடுத்துக்கொள்ளுங்கள். காயீன் அவனுடைய தம்பிமீது ரொம்ப பொறாமைப்பட்டான். தம்பியை பார்த்தாலே அவனுக்கு பயங்கர ‘எரிச்சலாக’ இருந்தது. அப்போது யெகோவா அவனிடம், ‘பாவம் [உன்] வாசற்படியில் படுத்திருக்கிறது’ என்று எச்சரித்தார். அதாவது, அவன் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார். ஆனால், காயீன் யெகோவாவுடைய பேச்சை கேட்கவில்லை, மனதையும் மாற்றிக்கொள்ளவில்லை. கடைசியில் சொந்த தம்பியையே கொலை செய்துவிட்டான்.—ஆதி. 4:2-8.

காயீன், மனதை மாற்றியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

உசியா ராஜாவும் மனதை மாற்றிக்கொள்ளாமல் போனதால் ஒரு பெரிய தவறை செய்தார். ஆரம்பத்தில் அவர் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்த ஒரு நல்ல ராஜாவாக இருந்தார். போகப் போக அவர் ரொம்ப பெருமை பிடித்த ஆளாக மாறிவிட்டார். ஒருசமயம், ஆலய குருமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை செய்தார். அத்துமீறி ஆலயத்திற்குள் போய் யெகோவாவுக்கு தூபம் காட்டினார். அங்கிருந்த குருமார்கள் எவ்வளவு சொல்லியும் அவர் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்த குருமார்கள்மீதே ரொம்ப ‘கோபப்பட்டார்.’ அதனால், பயங்கரமான தொழுநோயால் யெகோவா அவரை தண்டித்தார்.—2 நா. 26:3-5, 16-20.

நம் நாளில்கூட ஜோயாக்கீம் என்ற சகோதரர் அவருடைய மனதை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் 1955-ல் ஞானஸ்நானம் எடுத்தார். ஆனால் 1978-ல் சபைநீக்கம் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அவர் மனந்திரும்பி சபைக்குள் மறுபடியும் வந்தார். இதற்கு ஏன் இத்தனை வருடம் எடுத்தது என்று ஒரு மூப்பர் கேட்டபோது ஜோயாக்கீம் சொன்னார்: “எனக்குள்ள கோபமும் பெருமையும் இருந்தது. நான் சபைக்கு வரலன்னாலும் யெகோவாவின் சாட்சிகள்கிட்டதான் உண்மை இருக்குனு எனக்கு நல்லா தெரியும். இத்தனை வருஷமா என் மனசை மாத்திக்காம இருந்ததை நினைச்சு ரொம்பவே வருத்தப்படுறேன்.”

நாமும் சிலசமயம் நம் மனதை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, எடுத்த தீர்மானத்தை மாற்ற வேண்டியிருக்கும். அப்படி செய்தால் யெகோவா நம்மை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுவார்.—சங். 34:8.