Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சேர்ந்திருப்போம் உலக முடிவை சந்திப்போம்!

சேர்ந்திருப்போம் உலக முடிவை சந்திப்போம்!

“நாம் ஒரே உடலின் உறுப்புகளாக” இருக்கிறோம். —எபே. 4:25.

1, 2. எல்லாரும் தம்மை எப்படி வணங்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?

நீங்கள் ஒரு இளைஞரா? அப்படியென்றால், நீங்கள் யெகோவாவுக்கும் அவருடைய சபைக்கும் எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா? இன்று, ஞானஸ்நானம் எடுக்கிறவர்களில் நிறையப் பேர் இளைஞர்களாக இருக்கிறார்கள். இத்தனை இளைஞர்கள் யெகோவாவை வணங்குவதை பார்க்கும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது!

2 இளைஞர்களாக நீங்கள், உங்கள் வயது பிள்ளைகளோடு பழகத்தான் ஆசைப்படுவீர்கள். அதில் ஒன்றும் தவறில்லை. இருந்தாலும், சகோதர சகோதரிகள் எல்லாரோடும் சேர்ந்து நீங்கள் யெகோவாவை வணங்க வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறார். சிறியவர்கள்-பெரியவர்கள், ஏழைகள்-பணக்காரர்கள், நாடு-கலாச்சாரம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். ‘பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டும், மீட்புப் பெற வேண்டும்’ என்பதுதான் கடவுளுடைய ஆசை என பவுல் சொன்னார். (1 தீ. 2:3, 4) யெகோவாவை வணங்குகிறவர்கள், “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும்” சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று வெளிப்படுத்துதல் 7:9 சொல்கிறது.

3, 4. (அ) யெகோவாவை வணங்காத இளைஞர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? (ஆ) சபையை பற்றி, எபேசியர் 4:25-ல் பவுல் என்ன சொன்னார்?

3 யெகோவாவை வணங்குகிற இளைஞர்களுக்கும் அவரை வணங்காத இளைஞர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யெகோவாவை வணங்காத இளைஞர்கள், ரொம்ப சுயநலமாக நடந்துகொள்கிறார்கள். எப்போதும் தங்களை பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆராய்ச்சியாளர் அவர்களை பற்றி இப்படி சொன்னார்: ‘முன்னாடி இருந்த இளைஞர்களவிட இப்ப இருக்குற இளைஞர்கள்தான் ரொம்ப சுயநலமா இருக்காங்க. அடக்கமே இல்லாத துணிமணிகளை போடுறாங்க, மரியாதையே இல்லாம பேசுறாங்க. இது, மத்தவங்கமேல அவங்களுக்கு சுத்தமா மரியாதயே இல்லைனு காட்டுது; முக்கியமா பெரியவங்கள அவங்க மதிக்கிறதே இல்லைனு காட்டுது.’

4 இன்று நிறைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால், நாம் யெகோவாவை பிரியப்படுத்த வேண்டுமென்றால் அவர்களை போல் இருக்கக் கூடாது. இதற்கு நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ‘உலகச் சிந்தை, அதாவது கீழ்ப்படியாதவர்களிடம் செயல்படுகிற சிந்தை’ இருக்கக் கூடாது என்று பவுல் ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடம் சொன்னார். (எபேசியர் 2:1-3-ஐ வாசியுங்கள்.) ஆனால், நம் சபையில் இருக்கிற இளைஞர்கள் மற்ற இளைஞர்களைப் போல் இல்லை. இதை பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! நம் இளைஞர்கள், எல்லா சகோதர சகோதரிகளோடும் சேர்ந்து ஒற்றுமையாக யெகோவாவை வணங்குகிறார்கள். சபையில் இருக்கிற எல்லாரும் “ஒரே உடலின் உறுப்புகளாக” இருக்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது, சபை ஒரு உடல் போலவும் அதில் உள்ளவர்கள் உடலில் இருக்கிற உறுப்புகள் போலவும் இருக்கிறார்கள் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள் (எபே. 4:25) சாத்தானுடைய உலகம் அழிவதற்கு, இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கிறது. இந்த சமயத்தில்தான் நம் சகோதர சகோதரிகளோடு, நாம் ரொம்ப ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள சில பைபிள் உதாரணங்களை பார்க்கலாம்.

அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள்

5, 6. லோத்துவிடம் இருந்தும் அவருடைய மகள்களிடம் இருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 பைபிள் காலத்தில் வாழ்ந்த யெகோவாவுடைய மக்கள் சிலர், ரொம்ப ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்ததால்தான் யெகோவா அவர்களை காப்பாற்றினார். இப்போது, சில பைபிள் உதாரணங்களை பார்க்கலாம். சிறியவர்கள்-பெரியவர்கள் என்று நாம் எல்லாருமே அதில் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். முதலில், லோத்துவைப் பற்றி பார்க்கலாம்.

6 லோத்துவும் அவருடைய குடும்பமும் சோதோம் என்ற ஊரில் வாழ்ந்தார்கள். அந்த ஊரை அழிக்கப் போவதாக தேவதூதர்கள் மூலமாக யெகோவா சொன்னார்; உயிர் தப்ப வேண்டுமென்றால் அவர்கள் மலைக்கு ‘ஓடிப்போக’ வேண்டும் என்று சொன்னார். (ஆதி. 19:12-22) லோத்துவும் அவருடைய இரண்டு மகள்களும் உடனே கீழ்ப்படிந்தார்கள். ஆனால், லோத்துவின் மகள்களை கல்யாணம் செய்யவிருந்த மாப்பிள்ளைகள் யெகோவாவுக்கு கீழ்ப்படியவில்லை. லோத்து இந்த விஷயத்தை அவர்களிடம் சொன்னபோது, அவரை கேலி செய்தார்கள். அதனால், அவர்கள் அழிந்தே போனார்கள். (ஆதி. 19:14) ஆனால், லோத்துவும் அவருடைய இரண்டு மகள்களும் ஒற்றுமையாக இருந்து யெகோவாவுக்கு கீழ்ப்படிந்ததால் உயிர் தப்பினார்கள்.

7. எகிப்தைவிட்டு வந்தவர்களை யெகோவா ஏன் காப்பாற்றினார்?

7 இஸ்ரவேலர்களிடம் இருந்தும் நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். எகிப்தில் இருந்து விடுதலையாகி அவர்கள் கானான் ஊருக்கு போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது, அவர்கள் இஷ்டத்துக்கு பிரிந்து ஆளுக்கு ஒரு திசையில் போகவில்லை; ஒற்றுமையாக, ஒன்றாகத்தான் போனார்கள். யெகோவா செங்கடலை பிளந்தபோதுகூட மோசே தனியாகவோ கொஞ்சம் ஆட்களோடோ போகவில்லை. இஸ்ரவேலர்கள் எல்லாரும் மோசேயோடு சேர்ந்து ஒன்றாகப் போனதால்தான் யெகோவா அவர்களை காப்பாற்றினார். (யாத். 14:21, 22, 29, 30) இஸ்ரவேலர்களாக இல்லாத மற்ற ஆட்களும் எகிப்தைவிட்டு வந்தார்கள். அவர்களும் இஸ்ரவேலர்களோடு சேர்ந்து ஒன்றாகப் போனார்கள். (யாத். 12:38) இந்த கூட்டத்தில் இருந்த கொஞ்ச பேர் மட்டும், ஒருவேளை இளைஞர்கள் மட்டும், தனியாக போயிருந்தால் அவர்களை போன்ற முட்டாள்கள் வேறு யாரும் இருந்திருக்க முடியாது. யெகோவாவும் அவர்களை நிச்சயம் காப்பாற்றியிருக்க மாட்டார்.—1 கொ. 10:1.

8. யோசபாத் ராஜா காலத்தில் கடவுளுடைய மக்கள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்கள்?

8 யோசபாத் ராஜா ஆட்சி செய்தபோது கடவுளுடைய மக்களை தாக்க, எதிரிகளுடைய படை வந்தது. அது ரொம்ப பெரிய படை, அதில் இருந்தவர்கள் எல்லாரும் பயங்கர பலசாலிகள். (2 நா. 20:1, 2) இஸ்ரவேலர்கள் அப்போது என்ன செய்தார்கள்? யெகோவாவையே முழுமையாக நம்பினார்கள், உதவிக்காக அவரிடம் ஜெபம் செய்தார்கள். (2 நாளாகமம் 20:3, 4-ஐ வாசியுங்கள்.) பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று தனித்தனியாக யோசிக்காமல், அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவந்தார்கள். “யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 20:13) பெரியவர்கள்-சிறியவர்கள் என்று மொத்த ஜனங்களும், யெகோவா உதவி செய்வார் என்று நம்பினார்கள். ஒற்றுமையாக இருந்து அவர் சொன்னதை செய்தார்கள். அதனால்தான், யெகோவா அவர்களை காப்பாற்றினார். (2 நா. 20:20-27) எதிர்ப்பு வரும்போது, இஸ்ரவேலர்களை போலவே நாமும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் யெகோவா நம்மையும் காப்பாற்றுவார்.

9. ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் யெகோவாவை ஒற்றுமையாக வணங்கினார்கள். யூதர்களும் யூதர்களாக இல்லாதவர்களும் கிறிஸ்தவர்களாக மாறினபோது அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களைத்தான் அவர்கள் எல்லாருமே கடைப்பிடித்தார்கள். அவர்கள் ஒன்றாக இருந்தார்கள், ஒன்றாக சாப்பிட்டார்கள், ஒன்றாகவே ஜெபம் செய்தார்கள். (அப். 2:42) எதிரிகள் சித்திரவதை செய்தபோதுகூட கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்தார்கள், ஒருவரையொருவர் பலப்படுத்தினார்கள். முக்கியமாக, அந்த மாதிரி சமயத்தில்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியிருந்தது. (அப். 4:23, 24) நமக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்.

இப்போதே ஒற்றுமையாக இருங்கள்

10. எந்த சமயத்தில் ஒற்றுமையாக இருப்பது ரொம்ப முக்கியம்?

10 சீக்கிரத்தில் ரொம்ப பயங்கரமான சம்பவங்கள் இந்த உலகத்தில் நடக்கப்போகின்றன. அந்த மாதிரி சம்பவங்களை இதுவரைக்கும் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். யோவேல் தீர்க்கதரிசி அதை, “இருளும் அந்தகாரமுமான நாள்” என்று சொன்னார். (யோவே. 2:1, 2; செப். 1:14) அந்த சமயத்தில்தான் கடவுளுடைய மக்கள், இப்போது இருப்பதைவிட இன்னும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால், “பிளவுபட்டிருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்” என்று இயேசு சொன்னார். (மத். 12:25) நாமும் பிளவுபட்டிருந்தால், அதாவது பிரிந்திருந்தால், உயிர் தப்ப முடியாது.

11. சங்கீதம் 122:3, 4-ல் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆரம்ப படம்)

11 நாம் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும்? இதை புரிந்துகொள்ள எருசலேம் நகரத்தில் வீடுகள் எப்படி கட்டப்பட்டிருந்தது என்று பாருங்கள். அங்கிருந்த வீடுகளை நெருக்கம் நெருக்கமாக கட்டியிருந்தார்கள். அதனால்தான், “எருசலேம் நகரம் ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட ஒரு நகரமாக இருக்கிறது” என்று சங்கீதக்காரர் சொன்னார். அங்கிருந்த வீடுகள், அந்தளவு நெருக்கமாக இருந்ததால்தான் ஜனங்கள் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தார்கள். ஏதாவது பிரச்சினை வந்தால் உதவி செய்ய பக்கத்தில் ஆள் இருக்கிறார்கள் என்று தைரியமாக இருந்தார்கள். வீடுகள் எல்லாம் எப்படி நெருக்கமாக இருந்ததோ அதேபோல் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் யெகோவாவை வணங்குவதில் ஒற்றுமையாக, நெருக்கமாக இருக்க வேண்டுமென்று சங்கீதக்காரர் சொன்னார். (சங்கீதம் 122:3, 4-ஐ அடிக்குறிப்பில் இருந்து வாசியுங்கள். *) இப்போதும் சரி இனிமேல் வரப்போகிற கஷ்டமான காலத்திலும் சரி, நாம் ஒற்றுமையாக இருப்பது ரொம்ப முக்கியம்.

12. யெகோவாவுடைய மக்களை கோகு தாக்கும்போது அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

12 எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையாக இருப்பது ஏன் மிகவும் முக்கியம்? ஏனென்றால், எசேக்கியேல் 38-ம் அதிகாரத்தில் சொல்லியிருப்பது போல் “மாகோகு தேசத்தானான கோகு” யெகோவாவுடைய மக்களை சீக்கிரத்தில் தாக்கப் போகிறான். அந்த சமயத்தில், நம்முடைய ஒற்றுமையை குலைத்துப் போட எதையுமே நாம் அனுமதிக்கக் கூடாது. சாத்தானுடைய உலகத்தோடு எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படி வைத்துக்கொண்டால், அதுதான் நம் வாழ்க்கையில் செய்கிற மிகப் பெரிய தவறாக இருக்கும். அதேசமயத்தில் நாம் யெகோவாவுடைய அமைப்பில் இருந்தாலே தப்பித்துக்கொள்வோம் என்று நினைக்கக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும், அவர் சொல்கிறபடி நடக்க வேண்டும். அப்போதுதான், சாத்தான் நம்மை தாக்க வரும்போது யெகோவாவும் இயேசுவும் நம்மை காப்பாற்றுவார்கள். (யோவே. 2:32; மத். 28:20) யெகோவாவின் மக்களோடு சேர்ந்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யெகோவா சொல்கிறபடி செய்யாமல், நம் இஷ்டத்திற்கு நடந்தால் அவர் நிச்சயம் நம்மை காப்பாற்ற மாட்டார்.—மீ. 2:12.

13. இதுவரை பார்த்த உதாரணத்தில் இருந்து என்ன விஷயங்களை இளைஞர்கள் கற்றுக்கொள்ளலாம்?

13 இளைஞர்களே, நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒற்றுமையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் வயது பிள்ளைகளோடு மட்டுமே சேர்ந்து இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அதுபோன்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால், நமக்கு எல்லா சகோதர சகோதரிகளும் முக்கியம். இப்போது இருப்பதைவிட ஒருவருக்கு ஒருவர் இன்னும் ஆதரவாக இருக்க வேண்டிய காலம் சீக்கிரத்தில் வரப் போகிறது. அதனால், இப்போதே எல்லா சகோதர சகோதரிகளிடமும் நன்றாகப் பழகுங்கள், எல்லாரோடும் சேர்ந்து சந்தோஷமாக யெகோவாவை வணங்குங்கள். அப்போதுதான், எதிர்காலத்தில் உயிர் தப்ப முடியும்.

‘நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்’

14, 15. (அ) ஒற்றுமையாக இருக்க யெகோவா நமக்கு ஏன் இப்போதே பயிற்சி கொடுக்கிறார்? (ஆ) ஒற்றுமையாக இருக்க அவர் என்ன செய்ய சொல்கிறார்?

14 சகோதர சகோதரிகள் எல்லாரும் “தோளோடு தோள் சேர்ந்து” சேவை செய்ய யெகோவா உதவுகிறார். (செப். 3:8, 9, NW) அவர் சீக்கிரத்தில் எல்லாவற்றையும் ‘கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்க’ போகிறார். அந்த சமயத்தில் ஒற்றுமையாக இருக்க, இப்போதே நமக்கு பயிற்சி கொடுக்கிறார். (எபேசியர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.) பரலோகத்தில் இருக்கிறவர்களும் பூமியில் இருக்கிறவர்களும் ஒரே குடும்பமாக சேர்ந்து அவரை வணங்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார். அதை அவர் நிச்சயம் செய்வார். இளைஞர்களே, நீங்களும் அந்த குடும்பத்தில் ஒருவராக இருப்பீர்களா?

15 புதிய உலகத்தில் ஒற்றுமையாக இருக்க யெகோவா இப்போதே நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். எல்லார்மீதும் ‘அக்கறையாக’ இருங்கள், ஒருவர்மீது ஒருவர் “சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும்” காட்டுங்கள், ஒருவரை ஒருவர் “ஆறுதல்படுத்துங்கள்,” ஒருவரை ஒருவர் ‘பலப்படுத்துங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். (1 கொ. 12:25; ரோ. 12:10; 1 தெ. 4:18; 5:11) நாம் தவறு செய்கிறவர்கள் என்றும் ஒற்றுமையாக இருப்பது எல்லா சமயத்திலும் சுலபம் இல்லை என்றும் யெகோவாவுக்கு தெரியும். அதனால்தான், ஒருவரை ஒருவர் ‘தாராளமாக மன்னித்துக்கொண்டே’ இருங்கள் என்று அவர் சொல்கிறார்.—எபே. 4:32.

16, 17. (அ) நாம் கூட்டங்களுக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன? (ஆ) இயேசுவிடம் இருந்து இளம் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 ஒற்றுமையாக இருக்க சபை கூட்டங்கள் மூலமாக யெகோவா நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். நாம் கூட்டங்களுக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணம், ‘ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்கு’ என்று எபிரெயர் 10:24, 25 சொல்கிறது. யெகோவாவுடைய நாள் நெருங்கி வர வர, சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் வருவது ரொம்ப முக்கியமாக இருக்கிறது.

17 இந்த விஷயத்தில் இயேசு நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். ஏனென்றால், அவர் யெகோவாவின் மக்களோடு சேர்ந்து இருக்கத்தான் விரும்பினார். அவருக்கு 12 வயது இருந்தபோது அவருடைய அப்பா-அம்மாவோடு சேர்ந்து பண்டிகை கொண்டாட ஆலயத்திற்கு போனார். அப்போது நிறையப் பேர் அங்கே வந்திருந்தார்கள். இயேசுவுடைய அப்பா-அம்மா, தெரியாமல் அவரை விட்டுவிட்டு போய்விட்டார்கள். அந்த சமயத்தில், இயேசு அவருடைய வயதில் இருந்த பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டு இருந்தாரா? இல்லை. ஆலயத்தில் இருந்த போதகர்களோடு சேர்ந்து பைபிளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.—லூக். 2:45-47.

18. ஒற்றுமையாக இருக்க ஜெபம் எப்படி உதவும்?

18 நம் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்யும்போது நம்மால் இன்னும் ஒற்றுமையாக இருக்க முடியும். அவர்களுக்கு இருக்கிற கஷ்டங்களை சொல்லி ஜெபம் செய்யும்போது அவர்கள்மீது நமக்கு அக்கறை இருப்பதை காட்டுவோம். நம் சகோதர சகோதரிகளை நேசிப்பதும், சபையில் அவர்களை உற்சாகப்படுத்துவதும், அவர்களுக்காக ஜெபம் செய்வதும் ரொம்ப முக்கியம். இளைஞர்களே, நீங்கள் இதையெல்லாம் செய்கிறீர்களா? அப்படி செய்தால் சபையில் இருக்கிறவர்களோடு நல்ல நண்பர்களாக ஆக முடியும். வரப்போகிற அழிவில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நம் சகோதர சகோதரிகளோடுதான் நெருங்கி இருக்க வேண்டும், சாத்தானின் உலகத்தில் இருக்கிறவர்களோடு இல்லை.

நம் சகோதரர்களுக்காக எல்லாருமே ஜெபம் செய்யலாம் (பாரா 18)

‘ஒரே உடலின் உறுப்புகள்’ என்பதை காட்டுங்கள்

19-21. (அ) கஷ்டத்தில் இருக்கிற சகோதரர்களை பார்க்கும்போது நாம் எல்லாரும் என்ன செய்கிறோம்? இதற்கு சில அனுபவங்களை சொல்லுங்கள். (ஆ) இந்த அனுபவங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

19 யெகோவாவுடைய மக்கள் ‘ஒரே உடலின் உறுப்புகளாக’ இருக்கிறார்கள். (ரோ. 12:5) இதற்கு நிறைய அனுபவங்களை சொல்லலாம். உதாரணத்திற்கு, நம் சகோதரர்கள் பேரழிவில் கஷ்டப்படுவதை பார்க்கும்போது நாம் ரொம்ப கவலைப்படுகிறோம். அவர்களுக்கு உடனே உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம். டிசம்பர் 2011-ல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிற மின்டனோ (Mindanao) தீவில் பயங்கர புயல் காற்று வீசியது. ஒரே ராத்திரியில் 40,000 வீடுகளை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. அதில் நம் சகோதரர்களுடைய வீடுகளும் போனது. அந்த நாட்டில் இருக்கிற கிளை அலுவலகத்தில் இருந்து உதவி செய்ய சகோதரர்கள் வந்தார்கள். ஆனால் அதற்கு முன்பே, பக்கத்து ஊரில் இருந்த சகோதர சகோதரிகள் உதவி செய்ய வந்துவிட்டார்கள்!

20 ஜப்பானில் பயங்கரமான பூகம்பமும் சுனாமியும் வந்தபோது நம் சகோதரர்கள் நிறையப் பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் வீடு வாசல் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். அவர்களில் யோஷிக்கோ (Yoshiko) என்ற சகோதரியும் ஒருவர். அவர்களுடைய வீடு, ராஜ்ய மன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் (25 மைல்) இருந்தது. பூகம்பம் வந்த அடுத்த நாளே ஒரு வட்டாரக் கண்காணியும் இன்னொரு சகோதரரும் அவர்களை பார்க்க வந்தார்கள். அந்த சகோதரர்களை பார்த்ததும் யோஷிக்கோவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதைப் பற்றி யோஷிக்கோ இப்படி சொன்னார்: ‘சகோதரர்கள் எங்களுக்கு பைபிள் விஷயங்களை சொல்லி ஆறுதல்படுத்துனாங்க. அதோட எங்களுக்கு தேவையான துணிமணி, ஷூ, பேக்-னு எல்லாமே தந்தாங்க. இதை பார்த்தப்போ எங்க மனசு எல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சிடுச்சு.’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்த ஒரு சகோதரர் சொல்கிறார்: “ஜப்பான்ல இருந்த எல்லா சகோதரரும் ஒன்னுசேர்ந்து உதவி செஞ்சாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்தாங்க. எங்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவுல இருந்துகூட சகோதரர்கள் வந்தாங்க. எங்களுக்காக ஏன் இவ்ளோ தூரத்துல இருந்து வந்தீங்கன்னு கேட்டப்போ அதுக்கு அவங்க, ‘நீங்க எங்களோட சகோதரர்கள், உங்களுக்கு உதவி செய்றது எங்க கடமை’னு சொன்னாங்க.” யெகோவாவின் மக்கள் ஒருவரையொருவர் உண்மையாகவே நேசிக்கிறார்கள். அந்த மக்களில் நீங்களும் ஒருவராக இருப்பதை நினைக்கும்போது உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா? நாம் இந்த மாதிரி ஒற்றுமையாக இருப்பதை யெகோவா பார்க்கும்போது அவருக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

21 இப்போதே நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் கஷ்டமான காலங்கள் வரும்போது நாம் எல்லோரோடும் சேர்ந்து அதை சமாளிப்போம். மற்ற இடங்களில் இருக்கிற சகோதர சகோதரிகளோடு நம்மால் தொடர்புகொள்ள முடியாமல் போனாலும், நம்மை சுற்றி இருக்கிற சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒன்றாக இருக்க முடியும். ஜப்பானில் சூறாவளி வந்தபோது உயிர் தப்பின ஃபியூமிக்கோ (Fumiko) என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “உலக முடிவுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. பேரழிவுகளே இல்லாத காலம் சீக்கிரத்துல வரப்போகுது. அதனால, இப்பவே நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்குறது ரொம்ப முக்கியம்.”

22. ஒற்றுமையாக இருந்தால் எதிர்காலத்தில் என்ன நன்மை கிடைக்கும்?

22 உலக முடிவை சந்திக்க இப்போதே தயாராக இருங்கள். நீங்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நம்முடைய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒற்றுமையாக இருங்கள். அப்படி செய்தால் சாத்தானுடைய உலகம் அழியும்போது யெகோவா உங்களை நிச்சயமாக காப்பாற்றுவார். (ஏசா. 52:9, 10) அடுத்த கட்டுரையில், நாம் ஏன் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்பதை பார்க்கப் போகிறோம்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 11 சங்கீதம் 122:3, 4 (NW): “எருசலேம் நகரம் ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட ஒரு நகரமாக இருக்கிறது. யெகோவாவின் கோத்திரத்தார் அங்கே போகிறார்கள்.  இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டபடியே யெகோவாவுக்கு நன்றி சொல்ல அங்கே போகிறார்கள்.”