Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

‘ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுதார்’ என்று எரேமியா ஏன் சொன்னார்?

எரேமியா 31:15 இப்படி சொல்கிறது: “ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று [யெகோவா] சொல்லுகிறார்.”

ராகேல் இறந்து 1,000 வருடங்களுக்குப் பிறகுதான் எரேமியா இந்த வார்த்தைகளை எழுதினார். ராகேலுடைய பிள்ளைகள் இறப்பதற்கு முன்பே ராகேல் இறந்துவிட்டார். அதனால், ராகேல் அவர்களுடைய பிள்ளைகள் இறந்துபோனதற்காக அழுதார் என்று எரேமியா சொன்னது சரியில்லை என்று தோன்றலாம்.

ராகேலுடைய முதல் மகன் பெயர் யோசேப்பு. (ஆதி. 30:22-24) இரண்டாவது மகனின் பெயர் பென்யமீன். பென்யமீன் பிறந்தபோதே ராகேல் இறந்துவிட்டார். அப்படியென்றால், ராகேல் “தன் பிள்ளைகள் இல்லாதபடியால்” அழுதார் என்று எரேமியா ஏன் சொன்னார்?

எரேமியா சொன்னதை புரிந்துகொள்ள இந்த விஷயங்களை கவனியுங்கள். ராகேலுடைய மகன் யோசேப்பிற்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய பெயர் மனாசே, எப்பிராயீம். (ஆதி. 41:50-52; 48:13-20) இஸ்ரவேலுடைய பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தில், எப்பிராயீம் கோத்திரம் பலம் உள்ளதாக இருந்தது. அதனால், வடக்கு ராஜ்யத்தின் முக்கியமான கோத்திரமாக எப்பிராயீம் இருந்தது. ராகேலுடைய இரண்டாவது மகன் பென்யமீனின் கோத்திரம், தெற்கு ராஜ்யமான யூதாவோடு சேர்ந்துகொண்டது. ஒரு அர்த்தத்தில் பார்த்தால், வடக்கு ராஜ்யத்திலும் தெற்கு ராஜ்யத்திலும் இருந்த எல்லா தாய்மார்களையும் ராகேலுக்கு ஒப்பிடலாம்.

எரேமியா அவருடைய புத்தகத்தை எழுதுவதற்கு முன்பே வடக்கு ராஜ்யத்தை அசீரியர்கள் தோற்கடித்து, அங்கிருந்தவர்களை அடிமைகளாகக் கொண்டுபோனார்கள். எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்த சிலர் உயிர் தப்புவதற்காக யூதாவுக்கு ஓடிப்போனார்கள். கி.மு. 607-ல் பாபிலோனியர்கள் தெற்கு ராஜ்யத்தை சேர்ந்த இரண்டு கோத்திரத்தை தோற்கடித்து, நிறையப் பேரை ராமாவுக்கு அடிமைகளாகக் கொண்டுபோனார்கள். எருசலேமில் இருந்து 8 கிலோமீட்டர் (5 மைல்) தூரத்தில் வடக்கு திசையில் ராமா இருந்தது. (எரே. 40:1) ராகேல் இறந்தபோது அங்குதான் அவர்களை புதைத்தார்கள். அந்த இடத்தில் பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த சிலரை பாபிலோனியர்கள் கொலை செய்திருக்கலாம். (1 சா. 10:2) பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் இறந்ததை நினைத்து அங்கிருந்தவர்கள் அழுதது, அல்லது அதற்கு அருகில் இருந்த ராமாவில் இறந்தவர்களை நினைத்து அங்கிருந்தவர்கள் அழுதது, ‘ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுதது’ போல் இருந்தது. ஒருவேளை இது இதையும் குறிக்கலாம்: அதாவது தங்களுடைய பிள்ளைகள் இறந்ததை நினைத்து அல்லது அவர்களை அடிமைகளாகக் கொண்டுபோனதை நினைத்து இஸ்ரவேலில் இருந்த ஒவ்வொரு அம்மாவும் அழுததை குறிக்கலாம்.

எப்படி இருந்தாலும் எரேமியா 31:15-ல் சொல்லப்பட்ட வார்த்தைகள், இயேசு ஒரு குழந்தையாக இருந்தபோது நடந்த சம்பவங்களை குறிக்கிறது. இரண்டு வயதிற்குள் இருந்த ஆண் பிள்ளைகளை ஏரோது ராஜா கொலை செய்ய சொன்னார். எருசலேமிற்கு தெற்கே இருந்த பெத்லகேமில் இது நடந்தது. குழந்தைகள் இறந்ததை நினைத்து அங்கிருந்த ஒவ்வொரு அம்மாவும் அழுவதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! எருசலேமிற்கு வடக்கே இருந்த ராமா வரைக்கும் அவர்களுடைய அழுகை கேட்டது போல் இருந்தது.—மத். 2:16-18.

அப்படியென்றால், ‘ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுதது’ எதை குறிக்கிறது? எரேமியாவின் காலத்திலும் இயேசுவின் காலத்திலும் பிள்ளைகளை மரணத்தில் பறிகொடுத்த ஒவ்வொரு அம்மாவின் அழுகையையும் குறிக்கிறது. இறந்தவர்களை கடவுள் உயிரோடு எழுப்பும்போது இவர்களையும் உயிரோடு எழுப்பலாம்.—எரே. 31:16; 1 கொ. 15:26.