Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்!

யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்!

யெகோவா நல்லவர், அவருக்கு நன்றி சொல்லுங்கள்.” —சங். 106:1, NW.

1. யெகோவாவுக்கு நாம் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?

“நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” யெகோவா தேவனிடமிருந்துதான் வருகிறது. (யாக். 1:17) ஒரு அன்பான மேய்ப்பரை போல் யெகோவா நம்முடைய எல்லா தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார். (சங். 23:1-3) அதுவும் நாம் கஷ்டத்தில் தவிக்கும்போது, அவர் நமக்கு ‘அடைக்கலமாகவும் பெலனுமாகவும்’ இருக்கிறார். (சங். 46:1) அதனால், நாம் யெகோவாவுக்கு எப்போதுமே நன்றி சொல்ல வேண்டும். “யெகோவா நல்லவர், அவருக்கு நன்றி சொல்லுங்கள். அவருடைய அன்பு என்றுமே மாறாது” என்று சங்கீதக்காரர் சொல்கிறார். (சங். 106:1, NW) நீங்களும் அதேபோல் சொல்வீர்களா?

2015-ன் வருடாந்தர வசனம்: யெகோவா நல்லவர், அவருக்கு நன்றி சொல்லுங்கள்.”சங்கீதம் 106:1, NW.

2, 3. (அ) நாம் எப்படி நன்றிகெட்டவர்களாக ஆகிவிடலாம்? (ஆ) இந்த கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கு பதில் பார்க்கப் போகிறோம்?

2 யெகோவாவுக்கு நன்றி சொல்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த கடைசி நாட்களில் மக்கள் நன்றிகெட்டவர்களாக இருப்பார்கள் என்று பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது. (2 தீ. 3:2) இன்று நிறையப் பேர், யெகோவா அவர்களுக்கு செய்திருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றிகாட்டாமல் போய்விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, பண ஆசை பிடித்த உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதனால், நிறைய பொருள்களை வாங்கி குவிக்க மக்களும் ஆசைப்படுகிறார்கள். இருப்பதை வைத்து திருப்தியாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைப்பதில்லை. பைபிள் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைப் போலவே நாமும் நன்றிகெட்டவர்களாக ஆகிவிடலாம். யெகோவா நமக்காக செய்திருக்கிற எல்லா நல்ல விஷயங்களையும் மறந்துவிடலாம். அவருடைய நண்பராக இருக்கிற பாக்கியத்தையும் உயர்வாக மதிக்காமல் போய்விடலாம்.—சங். 106:7, 11-13.

3 முக்கியமாக, பிரச்சினைகள் வரும்போது யெகோவா கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை மறந்துவிட்டு, அந்தப் பிரச்சினையிலேயே நாம் மூழ்கிப் போய்விடலாம். (சங். 116:3) ஆனால் அந்த சமயத்திலும், நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கலாம்? கஷ்டங்கள் வந்தாலும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்? இதைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

யெகோவாவின் ‘அதிசயங்களோ அநேகம்’

4. யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

4 யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க, நாம் நிறைய முயற்சி செய்ய வேண்டும். முதலில், யெகோவா நம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் ஆசீர்வதித்து இருக்கிறார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, யெகோவா நம்மை ஆசீர்வதித்ததில் இருந்து அவர் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சங்கீதக்காரரும் அதைத்தான் செய்தார். யெகோவா அவருக்கு செய்த எல்லா நல்ல விஷயங்களையும் நினைத்துப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார்.சங்கீதம் 40:5-ஐயும்; 107:43-ஐயும் வாசியுங்கள்.

5. பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 இப்போது பவுலின் உதாரணத்தை பார்க்கலாம். அதிலிருந்து நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம். யெகோவா கொடுத்த ஆசீர்வாதங்களை பற்றி பவுல் அடிக்கடி யோசித்துப் பார்த்தார். அதனால்தான், ஜெபத்தில் யெகோவாவுக்கு எப்போதும் நன்றி சொன்னார். பவுல் ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, “தெய்வநிந்தனை செய்கிறவனாகவும், துன்புறுத்துகிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும்” இருந்தார். அவர் அவ்வளவு மோசமானவராக இருந்தாலும், யெகோவாவும் இயேசுவும் அவர்மீது இரக்கம் காட்டியதை நினைத்து நன்றியோடு இருந்தார். நற்செய்தியைப் பிரசங்கிக்கிற வாய்ப்பை கொடுத்ததற்காகவும் நன்றியோடு இருந்தார். (1 தீமோத்தேயு 1:12-14-ஐ வாசியுங்கள்.) அன்பான சகோதர சகோதரிகள் அவருக்கு கிடைத்ததற்காக, அவர்கள் காட்டிய நல்ல குணத்திற்காக, யெகோவாவுக்கு அவர்கள் விசுவாசமாக சேவை செய்து வந்ததற்காக கடவுளுக்கு அவர் நன்றி சொன்னார். (பிலி. 1:3-5, 7; 1 தெ. 1:2, 3) பவுல் கஷ்டத்தில் இருந்தபோது, சகோதரர்கள் அவருக்காக செய்த எல்லா நல்ல விஷயத்திற்காகவும் நன்றி சொன்னார். (அப். 28:15; 2 கொ. 7:5-7) அதனால்தான், “சங்கீதங்களாலும் துதிகளாலும் இனிமையான பக்திப்பாடல்களாலும்” யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள் என்று பவுல் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்.—கொலோ. 3:15-17.

ஆழ்ந்து யோசியுங்கள், ஜெபம் செய்யுங்கள்

6. என்னென்ன காரணங்களுக்காக நீங்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்வீர்கள்?

6 நாம் எப்படி பவுலைப் போல் இருக்கலாம்? நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் யெகோவா நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இதைப் பற்றி நாம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். (சங். 116:12) யாராவது உங்களிடம் வந்து, “யெகோவாவுக்கு ஏன் நன்றியோடு இருக்கீங்க, அவர் உங்களுக்காக என்ன செஞ்சு இருக்கார்” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஒருவேளை, யெகோவாவிடம் இருக்கிற நெருக்கமான பந்தத்திற்காக... இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலமாக நம் பாவங்களை யெகோவா மன்னிப்பதற்காக... கஷ்டமான சூழ்நிலையில் சகோதர சகோதரிகள் உதவி செய்ததற்காக... நல்ல வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகள் கிடைத்ததற்காக... யெகோவாவுக்கு நன்றியோடு இருப்பதாக நீங்கள் சொல்லலாம். யெகோவா நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்து இருக்கிறார் என்று நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றி சொல்ல மறக்கவே மாட்டோம்.சங்கீதம் 92:1, 3-ஐ வாசியுங்கள்.

7. (அ) ஜெபம் செய்யும்போது நாம் ஏன் யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்? (ஆ) அப்படி செய்வதால், உங்களுக்கு என்ன நன்மை?

7 யெகோவா நம்மை எப்படி ஆசீர்வதித்து இருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கும்போது, அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுவோம். (சங். 95:2; 100:4, 5) ஏதாவது வேண்டுமென்றால் மட்டும்தான் சிலர் கடவுளிடம் ஜெபம் செய்கிறார்கள். ஆனால், யெகோவா இதுவரை நமக்காக செய்திருக்கிற விஷயங்களுக்காக ஜெபத்தில் நன்றி சொல்லும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். அந்த மாதிரி ஜெபம் செய்த நிறையப் பேரை பற்றி பைபிளில் படிக்கலாம். உதாரணத்திற்கு அன்னாளும் எசேக்கியாவும், யெகோவா செய்த எல்லா நல்ல விஷயங்களையும் நினைத்து அவருக்கு நன்றி சொன்னார்கள். (1 சா. 2:1-10; ஏசா. 38:9-20) அவர்களைப் போலவே நீங்களும் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். (1 தெ. 5:17, 18) அப்படி செய்யும்போது, உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும், யெகோவாமீது இருக்கிற அன்பு அதிகமாகும், நீங்கள் அவருடைய நண்பராகவும் இருப்பீர்கள்.—யாக். 4:8.

என்னென்ன ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்வீர்கள்? (பாராக்கள் 6, 7)

8. நாம் எப்படி நன்றிகெட்டவர்களாக மாறிவிடலாம்?

8 சிலநேரத்தில், நாம் யெகோவாவுக்கு நன்றி காட்டாமல் போய்விடலாம். ஏனென்றால், இயல்பாகவே நாம் எல்லாரும் தவறு செய்கிறவர்கள். அதோடு, நன்றியே இல்லாத ஆதாம்-ஏவாள் வம்சத்தில் நாம் பிறந்ததால் இந்த குணம் நமக்கும் வந்துவிட்டது. யெகோவா, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு அழகான தோட்டத்தையே வீடாக தந்தார். அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்தார். அவர்கள் நினைத்திருந்தால், சாவே இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கலாம். (ஆதி. 1:28) ஆனால், அவர்களுடைய பேராசையினால், எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். (ஆதி. 3:6, 7, 17-19) இன்று நாம் நன்றிக்கெட்ட உலகத்தில் வாழ்வதால், நாமும் நன்றி இல்லாதவர்களாக ஆகிவிடலாம். யெகோவா நமக்காக செய்திருக்கிற எல்லாவற்றையும் மறந்துவிடலாம். முக்கியமாக, யெகோவாவின் நண்பராக இருப்பதையும், உலகம் முழுவதும் அன்பான சகோதர சகோதரிகளை அவர் நமக்காக கொடுத்து இருப்பதையும் மறந்துவிடலாம். இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்களிலேயே நாம் மூழ்கிப் போய்விடலாம். (1 யோ. 2:15-17) அதனால், யெகோவா கொடுத்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவருடைய மக்களில் ஒருவராக இருப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும். அப்போதுதான், நம்மால் யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க முடியும்.சங்கீதம் 27:4-ஐ வாசியுங்கள்.

நன்றியோடு இருங்கள் பிரச்சினைகளை சமாளியுங்கள்

9. கஷ்டமான சூழ்நிலை வரும்போது, நமக்கு கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?

9 யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்கும்போது பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் நம்மால் சகிக்க முடியும். சிலசமயம், எதிர்பாராத சம்பவங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்கலாம். ஒருவேளை மணத்துணை நம்பிக்கை துரோகம் செய்துவிடலாம், தீராத வியாதி வந்துவிடலாம், நமக்கு நெருக்கமானவர்கள் யாராவது இறந்துவிடலாம், இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்படலாம். இதனால், நாம் அப்படியே சோகத்தில் மூழ்கிவிடலாம். அது போன்ற சமயத்தில், யெகோவா செய்திருக்கிற எல்லா நல்ல விஷயங்களையும் யோசித்துப் பார்க்கும்போது நமக்கு ஆறுதலாக இருக்கும். கஷ்டங்களை சமாளிப்பதற்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.

10. யெகோவா கொடுத்த ஆசீர்வாதத்தை நினைத்துப் பார்த்தது ஐரீனாவுக்கு எப்படி உதவியாக இருந்தது?

10 ஐரீனா என்ற சகோதரி தென் அமெரிக்காவில் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்துகொண்டு இருக்கிறார். அவருடைய கணவர் ஒரு மூப்பராக இருந்தார். ஆனால், இந்த சகோதரிக்கு துரோகம் செய்துவிட்டு இவரையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு போய்விட்டார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இது போன்ற சூழ்நிலையிலும், அவர் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிறார்? அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “யெகோவா என்னை நல்லா பாத்துகிறதுக்காக அவருக்கு ரொம்ப நன்றியோட இருக்கேன். அவர், என்னை எப்படியெல்லாம் ஆசீர்வதிச்சு இருக்கார்னு ஒவ்வொரு நாளும் யோசிச்சு பார்க்கும்போது, ஒரு அன்பான அப்பா மாதிரி என்னை பத்திரமா பார்த்துக்குறத புரிஞ்சுக்க முடியுது. அதோட, யெகோவா என்னையும் அவரோட பிள்ளையா தேர்ந்தெடுத்து இருக்கிறத நினைச்சு பெருமைப்படுறேன். அவர், ஒருநாளும் என்னை கைவிட மாட்டார்னு உறுதியா நம்புறேன்.” கஷ்டமான சூழ்நிலைகள் வந்திருந்தாலும் ஐரீனா சந்தோஷமான மனநிலையை காத்துக்கொண்டார். பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் அது அவருக்கு உதவியாக இருந்தது.

11. யுங்-சூக் எப்படி அவர்களுடைய கஷ்டமான சூழ்நிலையை சமாளித்தார்?

11 யுங்-சூக் என்ற சகோதரி ஆசியாவில் இருக்கிறார். இவரும் இவருடைய கணவரும் ஒன்றாக சேர்ந்து 20 வருடங்களுக்கும் மேல் பயனியர் ஊழியம் செய்தார்கள். வாழ்க்கையில் அவர்கள் இரண்டு பேரும் நிறைய பிரச்சினைகளை சமாளித்து இருந்தாலும், அவர்களுக்கு பெரிதாக எந்த நோயும் வந்ததில்லை. அவர்கள் இரண்டு பேரும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள். ஆனால், யுங்-சூக்கிற்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது திடீரென்று தெரியவந்தது. அவர், 3-லிருந்து 6 மாதம் வரைக்கும்தான் உயிரோடு இருப்பார் என்று டாக்டர் சொன்னார். அதைப் பற்றி யுங்-சூக் என்ன சொல்கிறார் என்றால்: “எனக்கு இந்த நோய் இருக்கிறது தெரிஞ்ச உடனே, அப்படியே இடிஞ்சு போயிட்டேன். எல்லாத்தையுமே இழந்துட்ட மாதிரி உணர்ந்தேன். எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு.” யுங்-சூக் எப்படி அவருடைய சூழ்நிலையை சமாளித்தார்? அதற்கு அவர் சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் தூங்கப் போறதுக்கு முன்னாடி, எங்க வீட்டு மாடிக்கு போய் யெகோவாகிட்ட சத்தமா ஜெபம் பண்ணுவேன். அந்த நாள்ல யெகோவா எனக்காக செஞ்சு இருக்கிற 5 நல்ல விஷயத்துக்காக நன்றி சொல்வேன். அப்போ, யெகோவா என்மேல இன்னும் அக்கறையா இருக்கார்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. அவரை இன்னும் அதிகமா நேசிக்கிறதுக்கும் இது உதவியா இருந்துச்சு.” யுங்-சூக் இப்படி ஒவ்வொரு நாள் ராத்திரியிலும் ஜெபம் செய்ததால் என்ன நன்மை கிடைத்தது? அவர் சொல்கிறார்: “கஷ்டமான எந்த சூழ்நிலையிலயும் யெகோவா நம்மள தாங்குறார்னு தெரிஞ்சுக்கிட்டேன். வாழ்க்கையில நமக்கு இருக்கிற பிரச்சினைகளவிட யெகோவா நமக்கு செஞ்சு இருக்கிற நல்ல விஷயங்கள்தான் நிறைய இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன்.”

ஷெரிலும், உயிர் தப்பிய அவளுடைய தம்பி ஜானும்((பாரா 13))

12. மனைவியை இழந்த ஜேஸனுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது?

12 ஆப்பிரிக்காவில் இருக்கிற கிளை அலுவலகத்தில் ஜேஸன் என்ற சகோதரர் சேவை செய்துகொண்டு இருக்கிறார். இவர் 30 வருடங்களுக்கு மேல் முழுநேர சேவையில் இருக்கிறார். அவர் இப்படி சொல்கிறார்: “ஏழு வருஷத்துக்கு முன்னாடி என்னோட மனைவி இறந்துட்டாங்க, அதை என்னால தாங்கிக்கவே முடியல. புற்றுநோயால என் மனைவி கஷ்டப்பட்டத பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தா நான் இன்னும் நொடிஞ்சு போயிடுவேன். அதனால, என் மனைவியோட நான் சந்தோஷமா செலவு செஞ்ச நாட்கள பத்தி ஒரு சமயம் நினைச்சு பார்த்தேன். அந்த சந்தோஷமான நினைவுகளுக்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். அது எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. அப்போ இருந்து, அந்த மாதிரி சந்தோஷமான நினைவுகளுக்காக யெகோவாவுக்கு அடிக்கடி நன்றி சொல்லிக்கிட்டே இருக்கேன். இப்படி செஞ்சது என் வாழ்க்கையையே மாத்தியிருக்கு. மனைவியை மரணத்துல பறிகொடுத்தது எனக்கு பெரிய இழப்புதான். இருந்தாலும், கடவுளை நேசிச்ச ஒரு நல்ல மனைவியை கொடுத்ததுக்காகவும் அவளோட சேர்ந்து சேவை செஞ்சதுக்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கேன். இதெல்லாம் என்னோட மனநிலைய மாத்தியிருக்கு, நம்பிக்கையோடு வாழ்றதுக்கு உதவியா இருந்திருக்கு.”

“யெகோவா என்னுடைய கடவுளாக இருப்பதை நினைத்து அவருக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன்.”—ஷெரில்

13. ஷெரில் எப்படி அவளுடைய கஷ்டத்தை சமாளித்தாள்?

13 ஹயான் என்ற பயங்கரமான சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டை 2013-ல் தாக்கியது. அதில் பாதிக்கப்பட்ட 13 வயது ஷெரில் எல்லாவற்றையும் இழந்துவிட்டாள்; அவளுடைய வீட்டை மட்டுமல்ல அவளுடைய அப்பா-அம்மாவையும், கூடப்பிறந்த 3 பேரையும் அந்த பேரழிவில் இழந்துவிட்டாள். இதெல்லாம் நடந்ததால், ஷெரில் வாழ்க்கையில் விரக்தி அடைந்துவிட்டாளா? இல்லை. யெகோவா அவளுக்காக செய்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றியோடு இருக்கிறாள். அதைப் பற்றி ஷெரில் இப்படி சொல்கிறாள்: “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்ம சகோதர சகோதரிகள் உதவி செஞ்சதையும் ஒருத்தர ஒருத்தர் உற்சாகப்படுத்துனதையும் நான் நேர்ல பார்த்தேன். உலகத்துல இருக்கிற என்னோட சகோதர சகோதரிகள் எல்லாரும் எனக்காக ஜெபம் செய்றாங்கன்னு எனக்கு தெரியும். யெகோவா என்னோட கடவுளா இருக்குறத நினைச்சு அவருக்கு ரொம்ப நன்றி சொல்றேன். நமக்கு தேவையான எல்லாத்தையுமே அவர் கொடுக்கிறார்.” ஷெரிலைப் போலவே நாமும் யெகோவா நமக்கு செய்திருக்கிற எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது, நாம் சோகத்திலேயே மூழ்கிவிட மாட்டோம், எந்தப் பிரச்சினையையும் சமாளிப்போம்.—எபே. 5:20; பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.

“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்”

14. நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆரம்பப் படம்)

14 யெகோவாவின் மக்கள், எப்போதுமே அவருக்கு நன்றியோடு இருந்திருக்கிறார்கள். பார்வோனிடம் இருந்து தப்பித்து, செங்கடலை கடந்து வந்ததற்கு பிறகு, இஸ்ரவேல் மக்கள் பாடல்கள் பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள். (யாத். 15:1-21) நமக்கும் ஒரு அருமையான ஆசீர்வாதம் காத்துகொண்டு இருக்கிறது. அதாவது எதிர்காலத்தில், எந்த கஷ்டமும் இல்லாத காலம் வரப்போகிறது. அதை நினைக்கும்போது, இப்போதே நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! (சங். 37:9-11; ஏசா. 25:8; 33:24) சீக்கிரத்தில் யெகோவா அவருடைய எதிரிகளை எல்லாம் அழிக்கப் போகிறார். நீதியும் சமாதானமும் உள்ள புதிய உலகத்திற்குள் நம்மை அழைத்துக்கொண்டு போகப் போகிறார். அன்று நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி சொல்வோம் என்று யோசித்துப் பாருங்கள்!—வெளி. 20:1-3; 21:3, 4.

15. இந்த வருடத்தில் என்ன செய்ய நீங்கள் முடிவு செய்திருக்கிறீர்கள்?

15 இந்த 2015-ல், யெகோவா நமக்கு நிறைய ஆசீர்வாதங்களை தருவார். அதற்காக நமக்கு எந்த கஷ்டமும் வராது என்று அர்த்தம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், என்ன நடந்தாலும் யெகோவா நம்மை கைவிட மாட்டார். (உபா. 31:8; சங். 9:9, 10) யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்வதற்கு அவர் நமக்கு தொடர்ந்து உதவி செய்வார். “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என்று ஆபகூக் சொன்னார். நாமும் அவரைப் போல் ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய்’ இருக்க வேண்டும். (ஆப. 3:17, 18) “யெகோவா நல்லவர், அவருக்கு நன்றி சொல்லுங்கள்” என்பதுதான் 2015-ன் வருடாந்தர வசனம். (சங். 106:1, NW) அதனால் இந்த வருடம் முழுவதும், யெகோவா நமக்கு செய்திருக்கிற எல்லா நல்ல விஷயங்களையும் யோசித்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்லுங்கள்!

^ பாரா. 10 இந்த கட்டுரையில் இருக்கிற சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.