Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?

நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?

“விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.”—மத். 25:13.

1, 2. (அ) கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்று இயேசு சொன்னார்? (ஆ) என்ன கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம்?

ஒலிவ மலைமீது இயேசு உட்கார்ந்துகொண்டு இருந்தார். அவருடைய சீடர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் அவரோடுகூட இருந்தார்கள். இயேசு அவர்களிடம், கடைசி நாட்களில் நடக்கப்போகிற விஷயங்களை பற்றி சொன்னார். அவர் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்யும்போது, பூமியில் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” அவர் சார்பாக செயல்படுவார்கள் என்று சொன்னார். அதோடு, தம்முடைய சீடர்களுக்கு அவர்கள் பைபிள் விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் சொன்னார்.—மத். 24:45-47.

2 இந்த விஷயங்களை சொல்லிக்கொண்டு இருந்த சமயத்துல்தான், பத்து கன்னிகைகள் உதாரணத்தையும் அவர் சொன்னார். (மத்தேயு 25:1-13-ஐ வாசியுங்கள்.) இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்? இந்த உதாரணத்தில் இருக்கிற ஆலோசனையை பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி கடைப்பிடித்திருக்கிறார்கள், அதனால் என்ன நன்மை? இந்த உதாரணத்தில் இருந்து நாம் ஒவ்வொருவரும் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

இந்த உதாரணத்தில் இருக்கிற முக்கியமான விஷயம்

3. பத்து கன்னிகைகள் உதாரணத்தை இதற்கு முன்பு நம் பத்திரிகைகளில் எப்படி விளக்கியிருந்தார்கள், அதனால் என்ன ஆகியிருக்கிறது?

3 சமீப காலங்களில் பைபிள் பதிவுகளை விளக்கிய விதத்தில் உண்மையுள்ள அடிமை மாற்றம் செய்திருக்கிறார்கள் என்று போன கட்டுரையில் படித்தோம். அதாவது, ஒரு பைபிள் பதிவு எதை குறிக்கிறது, இல்லையென்றால், அதன் பெரியளவு நிறைவேற்றம் என்ன என்பதை பற்றியெல்லாம் இப்போது அவ்வளவாக சொல்வது கிடையாது. அதற்குப் பதிலாக, அந்த பைபிள் பதிவில் இருந்து என்ன நடைமுறையான பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, இயேசு சொன்ன பத்து கன்னிகைகள் உதாரணத்தில் இருக்கிற விளக்கு, எண்ணெய், பாத்திரம் எல்லாம் யாரையோ அல்லது எதையோ குறிக்கிறது என்று இதற்கு முன்பு நம் பத்திரிகைகளில் விளக்கினார்கள். இப்படி நுணுக்கமான விஷயங்களுக்கு அதிக கவனம் கொடுப்பதால் அதில் இருக்கிற எளிமையான அதே சமயத்தில் முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

4. பத்து கன்னிகைகள் உதாரணத்தில், (அ) மணமகன் யார்? (ஆ) கன்னிகைகள் யார்?

4 இந்த பத்து கன்னிகைகள் உதாரணத்தில் என்ன முக்கியமான விஷயத்தை இயேசு சொல்கிறார் என்று இப்போது பார்க்கலாம். இந்த உதாரணத்தில் வருகிற மணமகன் யார்? இயேசுதான் அந்த மணமகன். ஏனென்றால், அவரே தம்மை மணமகன் என்று இதற்கு முன்பு சொல்லியிருந்தார். (லூக். 5:34, 35) கன்னிகைகள் யார்? பரலோக நம்பிக்கையுள்ள அந்த ‘சிறுமந்தைதான்’ கன்னிகைகள். இதை எப்படி சொல்லலாம்? மணமகன் வரும்போது, கன்னிகைகள் விளக்குகளை வைத்துக்கொண்டு தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு இந்த உதாரணத்தில் சொல்லியிருந்தார். இன்னொரு சமயம், பரலோக நம்பிக்கையுள்ள சீடர்களிடம், “இடுப்பில் கச்சை கட்டிக்கொண்டு தயாராயிருங்கள், உங்கள் விளக்குகளை எப்போதும் எரியவிடுங்கள்; திருமண விருந்திலிருந்து தங்கள் எஜமான் திரும்பிவந்து கதவைத் தட்டியதும் அதைத் திறக்கக் காத்திருக்கிற ஆட்களைப் போல் இருங்கள்” என்று சொன்னார். (லூக். 12:32, 35, 36) அப்போஸ்தலன் பவுலும் யோவானும்கூட பரலோக நம்பிக்கை உள்ளவர்களை கற்புள்ள கன்னிகைகளுக்கு ஒப்பிட்டு சொல்லி இருந்தார்கள். (2 கொ. 11:2; வெளி. 14:4) இதை எல்லாம் பார்க்கும்போது, மத்தேயு 25:1-13-ல் இயேசு கொடுத்த ஆலோசனையும் எச்சரிப்பும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்குதான் பொருந்துகிறது என்று சொல்லலாம்.

5. இந்த உதாரணத்தில் இருக்கிற விஷயங்கள் எந்த காலப்பகுதியில் நடக்கும் என்று இயேசு சொன்னார்?

5 அடுத்ததாக, இயேசு சொன்ன உதாரணத்தில் இருக்கிற விஷயங்கள் எந்த காலப்பகுதியில் நடக்கும் என்று இப்போது கவனிக்கலாம். இந்த உதாரணத்தின் கடைசியில், கன்னிகைகள் எண்ணெய் வாங்க சென்றபோது “மணமகன் வந்துவிட்டார்” என்று இயேசு சொன்னார். (மத். 25:10) மத்தேயு 24, 25 அதிகாரத்தில், தம்முடைய “வருகையை” பற்றி இயேசு 8 தடவை சொன்னார் என்று ஜூலை 15, 2013 காவற்கோபுரத்தில் இருந்து தெரிந்துகொண்டோம். இயேசுவின் “வருகை,” மிகுந்த உபத்திரவம் சமயத்தில் இந்த கெட்ட உலகத்தை நியாயந்தீர்க்கவும் அழிக்கவும் அவர் ‘வரும்’ சமயத்தையே குறிக்கிறது. அப்படியென்றால், இந்த உதாரணத்தில் இருக்கிற விஷயங்கள் கடைசி நாட்களில் நடக்கும். ஆனால், இயேசுவின் “வருகை” மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் இருக்கும்.

6. இந்த உதாரணத்தில், என்ன முக்கியமான விஷயத்தை இயேசு சொன்னார்?

6 என்ன முக்கியமான விஷயத்தை பற்றி இயேசு பத்து கன்னிகைகள் உதாரணத்தில் சொன்னார்? அதற்கு, இந்த உதாரணத்திற்கு முன்பும் பின்பும் இருக்கிற வசனங்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தேயு 24-ம் அதிகாரத்தில், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பற்றி இயேசு சொன்னார். ஒரு சிறு தொகுதியாக இருக்கிற இந்த உண்மையுள்ள அடிமைதான் கடைசி நாட்களில் இயேசுவின் சீடர்களை வழிநடத்துவார்கள். அதனால், இவர்கள் எல்லாரும் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். அதற்குப் பிறகு 25-வது அதிகாரத்தில், கடைசி நாட்களில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரையும் எச்சரிக்கத்தான் பத்து கன்னிகைகள் உதாரணத்தை சொன்னார். அதில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், “விழிப்புடன்” இருக்க வேண்டும் என்று எச்சரிச்சார். விழிப்பாக இருந்தால்தான் அவர்களுக்கு பரலோக வாழ்க்கை கிடைக்கும் என்ற முக்கியமான விஷயத்தை இயேசு இந்த உதாரணத்தில் சொன்னார். (மத். 25:13) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கொடுத்த இந்த ஆலோசனையை அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி கடைப்பிடித்து இருக்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இந்த ஆலோசனையை எப்படி கடைப்பிடித்து இருக்கிறார்கள்?

7, 8. (அ) புத்தியுள்ள கன்னிகைகளால் எப்படி மணமகனை வரவேற்க முடிந்தது? (ஆ) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி தயாராக இருக்கிறார்கள்?

7 புத்தியுள்ள கன்னிகைகளால் மட்டும்தான் மணமகனை வரவேற்க முடிந்தது. அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. (1) அவர்கள் தயாராக இருந்தார்கள். (2) அவர்கள் “விழிப்புடன்” இருந்தார்கள். முதலில், அவர்கள் எப்படி தயாராக இருந்தார்கள் என்று பார்க்கலாம். மணமகனை வரவேற்க பத்து கன்னிகைகளுமே ராத்திரி முழுதும் விழிப்புடன் இருந்து, விளக்குகளை அணையாமல் பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், புத்தியுள்ள 5 கன்னிகைகள் மட்டும்தான் உண்மையிலேயே தயாராக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் விளக்குகளோடு பாத்திரத்தில் எண்ணெயையும் கொண்டுவந்தார்கள். புத்தியுள்ள கன்னிகைகளைப் போல் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவின் வருகைக்கு எப்போதுமே தயாராக இருந்திருக்கிறார்கள்?

8 அதற்காக, இந்த சாத்தானின் உலகத்தில் இருக்கிற சொத்துசுகங்களை எல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கிற பொருளாசை, ஒழுக்கங்கெட்ட விஷயங்கள், சுயநல மனப்பான்மை எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளியிருக்கிறார்கள். யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்று அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். முடிவு சீக்கிரத்தில் வரப் போகிறது என்பதால் அல்ல, யெகோவாமீதும் இயேசுமீதும் அன்பு இருப்பதால்தான் தீர்மானமாக இருக்கிறார்கள். இப்படி மணமகனுடைய வருகைக்காக பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தயாராக இருக்கிறார்கள். இயேசுவின் வருகை தாமதிப்பது போல் தெரிந்தாலும் முடிவு வரும் வரை பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள், தொடர்ந்து ஒளிவிளக்குகளாக பிரகாசிக்கிறார்கள்.—பிலி. 2:15.

9. (அ) கண்ணயர்ந்து தூங்கிவிடுவதைப் பற்றி இயேசு என்ன எச்சரிக்கை கொடுத்தார்? (ஆ) “இதோ, மணமகன் வருகிறார்!” என்ற சத்தத்தை பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி கேட்டிருக்கிறார்கள்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

9 புத்தியுள்ள கன்னிகைகளால் மணமகனை வரவேற்க முடிந்ததற்கான இரண்டாவது காரணம், அவர்கள் “விழிப்புடன்” இருந்ததுதான். ஆனால், மணமகன் வருவதற்கு தாமதிப்பது போல் தெரிந்ததால் பத்து கன்னிகைகளும் “கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள்” என்று அந்த உதாரணம் சொல்கிறது. அப்படியென்றால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் தூங்கிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அதாவது, கிறிஸ்துவின் ‘வருகைக்காக’ காத்துக்கொண்டு இருக்கிற சமயத்தில் அவர்களுடைய கவனம் வேறு பக்கம் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறதா? ஆம், இருக்கிறது! ஏனென்றால், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக” இருக்கிறது என்று இயேசுவே எச்சரித்தார். அதனால்தான், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் விழிப்பாக இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். எப்படி? அந்த உதாரணத்தில், “இதோ, மணமகன் வருகிறார்!” என்ற சத்தம் கேட்ட உடனே பத்து கன்னிகைகளும் விளக்குகளை தயார்படுத்தினார்கள். ஆனால், மணமகன் வந்தபோது, புத்தியில்லாத கன்னிகைகளிடம் எண்ணெய் தீர்ந்து போயிருந்தது. புத்தியுள்ள 5 கன்னிகைகள் மட்டும்தான் விளக்குகளோடு எண்ணெயையும் வைத்துக்கொண்டு தயாராக இருந்தார்கள். (மத். 25:5, 6; 26:41) அதேபோல், இந்த கடைசி நாட்களில் உண்மையோடு இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், “இதோ, மணமகன் வருகிறார்!” என்ற சத்தத்தை ‘கேட்டிருக்கிறார்கள்.’ அதாவது, இயேசு சீக்கிரத்தில் ‘வரப்போவதற்கான’ அசைக்க முடியாத அடையாளத்தை பார்த்திருக்கிறார்கள். அதனால், அவருடைய ‘வருகைக்காக’ விழிப்பாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அடுத்ததாக, அந்த உதாரணத்தின் முடிவில் இயேசு என்ன சொன்னார், அவர் சொன்ன விஷயங்கள் எந்த காலப்பகுதியில் நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

பரிசும், தண்டனையும்

10. இந்த உதாரணத்தின் முடிவில் நடக்கிற விஷயங்களை படிக்கும்போது என்ன கேள்வி வரலாம்?

10 இந்த உதாரணத்தின் முடிவில், புத்தியில்லாத கன்னிகைகள் விளக்குகளுக்கு எண்ணெய் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், புத்தியுள்ள கன்னிகைகள் எண்ணெய் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். (மத்தேயு 25:8, 9-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் உதவி செய்ய முடியாது என்று எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இந்த உதாரணத்தில் இருக்கிற சம்பவம் எந்த காலப்பகுதியில் நடக்கும் என்று புரிந்துகொண்டால் இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள முடியும். மிகுந்த உபத்திரவத்தின் முடிவுக்கு கொஞ்சம் முன்பு மணமகனான இயேசு நியாயந்தீர்க்க வருவார். அதனால், எண்ணெய் கொடுக்க முடியாது என்று சொன்ன சம்பவம் மிகுந்த உபத்திரவத்தின் முடிவுக்கு கொஞ்சம் முன்பு நடக்கும் என்று சொல்லலாம். அதற்கு முன்பே பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடைசி முத்திரை கிடைத்திருக்கும்.

11. (அ) மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு என்ன நடக்கும்? (ஆ) புத்தியுள்ள கன்னிகைகள் ஏன் எண்ணெய் விற்பவர்களிடம் போய் எண்ணெயை வாங்கிக்கொள்ள சொல்கிறார்கள்?

11 அப்படியென்றால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு, உண்மையாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடைசி முத்திரை கிடைத்திருக்கும். (வெளி. 7:1-4) அந்த சமயத்தில் இருந்து, அவர்கள் எல்லாரும் பரலோகத்திற்கு போவது நிச்சயம். ஆனால் விழிப்பாகவும் உண்மையாகவும் இல்லாத பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடைசி முத்திரை கிடைக்காது. அவர்களுக்குப் பதிலாக மற்ற உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோக வாழ்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புத்தியில்லாத கன்னிகைகளைப் போல் இருக்கிறவர்களுக்கு, மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கிற சமயத்தில் மகா பாபிலோனின் அழிவை பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கலாம். அப்போதுதான், இயேசுவின் வருகைக்கு அவர்கள் தயாராக இல்லை என்ற விஷயத்தை புரிந்துகொள்வார்கள். அந்த சமயத்தில், அவர்கள் உதவி கேட்டால் கிடைக்குமா? புத்தியில்லாத கன்னிகைகள் உதவி கேட்டபோது புத்தியுள்ள கன்னிகைகள் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. காலம் கடந்த பின்பு வந்து உதவி கேட்டதால் எண்ணெய் விற்பவர்களிடம் போய் அவர்களையே வாங்கிக்கொள்ள சொல்கிறார்கள். ஆனால் அது ‘நடுராத்திரியாக’ இருந்தது. அந்த சமயத்தில் எந்த கடையும் திறந்திருக்க வாய்ப்பில்லை. காலம் கடந்திருந்தது!

12. (அ) உண்மையாக இல்லாமல் போகிறவர்களுக்கு மிகுந்த உபத்திரவம் சமயத்தில் என்ன நடக்கும்? (ஆ) புத்தியில்லாத கன்னிகைகளை போல் இருக்கிறவர்களை பார்த்து இயேசு என்ன சொல்வார்?

12 மிகுந்த உபத்திரவம் சமயத்தில், உண்மையாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களால் உண்மையாக இல்லாமல் போகிறவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே காலம் கடந்திருக்கும்! அப்படியென்றால், உண்மையாக இல்லாமல் போகிறவர்களுக்கு என்னாகும்? எண்ணெய் வாங்கப் போன புத்தியில்லாத கன்னிகைகளுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். “மணமகன் வந்துவிட்டார்; தயாராக இருந்த கன்னிகைகள் அவரோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டிற்குள் போனார்கள், கதவும் அடைக்கப்பட்டது” என்று அந்த உதாரணத்தில் வாசிக்கிறோம். மிகுந்த உபத்திரவத்தின் முடிவு நெருங்குகிற சமயத்தில், இயேசு வருவார். அப்போது, உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்கு போவார்கள். (மத். 24:31; 25:10; யோவா. 14:1-3; 1 தெ. 4:17) உண்மையாக இல்லாதவர்களை இயேசு ஏற்றுக்கொள்ள மாட்டார். “எஜமானே! எஜமானே! கதவைத் திறந்து விடுங்கள்!” என்று புத்தியில்லாத கன்னிகைகள் கேட்டது போல், உண்மையாக இல்லாதவர்கள் கேட்கும்போது, இயேசு என்ன சொல்வார்? வெள்ளாடு போல் இருக்கிறவர்களிம் என்ன சொல்வாரோ அதையேதான் இவர்களிடமும் சொல்வார். அதாவது, “நிஜமாகச் சொல்கிறேன், நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” என்று சொல்வார்.—மத். 7:21-23; 25:11, 12.

13. (அ) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் நிறையப் பேர் உண்மையாக இல்லாமல் போய்விடுவார்கள் என்று நாம் ஏன் நினைக்கக் கூடாது? (ஆ) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்மீது இயேசுவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

13 அப்படியென்றால், பரலோக நம்பிக்கையுள்ள நிறையப் பேர் உண்மையாக இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக மற்றவர்களை பரலோகத்தில் வாழ தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்றும் இயேசு சொன்னாரா? இல்லை! மத்தேயு 24-வது அதிகாரத்தில் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை தீய அடிமையாக ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். அவர்கள் தீய அடிமையாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்து அப்படி சொல்லவில்லை. அவர்களை எச்சரிக்கத்தான் அப்படி சொன்னார். அதேபோல், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை எச்சரிக்கத்தான் பத்து கன்னிகைகள் பற்றிய உதாரணத்தையும் இயேசு சொன்னார். 5 கன்னிகைகள் தயாராக, விழிப்பாக இருந்தார்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. அப்படியென்றால் தயாராகவும் விழிப்பாகவும் இருக்கலாமா வேண்டாமா என்று பரலோக நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி தயாராக, விழிப்பாக இல்லையென்றால், அவர்கள் புத்தி இல்லாதவர்களாக, உண்மை இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள். பரலோக நம்பிக்கையுள்ள சகோதர சகோதரிகளுக்கு இயேசு கொடுத்த எச்சரிப்பை போலவே, பவுலும் ஒரு எச்சரிப்பை கொடுத்தார். (எபிரெயர் 6:4-9-ஐ வாசியுங்கள்; உபாகமம் 30:19-ஐ ஒப்பிடுங்கள்.) பவுல் அவர்களை எச்சரித்தாலும், அவர்கள் தங்களுடைய பரிசை பெற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்பினார். அதேபோல், பத்து கன்னிகைகள் உதாரணத்தில் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு இயேசு எச்சரிப்பு கொடுத்தாலும் இயேசுவுக்கு அவர்கள்மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எல்லாராலும் உண்மையாக இருக்க முடியும், பரிசை பெற்றுக்கொள்ள முடியும் என்று இயேசு நம்புகிறார்!

‘வேறே ஆடுகள்’ என்ன கற்றுக்கொள்ளலாம்?

14. பத்து கன்னிகைகள் உதாரணத்தில் இருந்து ‘வேறே ஆடுகள்’ என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்குத்தான் இயேசு இந்த உதாரணத்தை சொன்னார். இருந்தாலும், பூமியில் வாழ்கிற “வேறே ஆடுகளும்” இதிலிருந்து முக்கியமான பாடத்தை கற்றுக்கொள்ளலாம். (யோவா. 10:16) “விழிப்புடன்” இருக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தைத்தான் பத்து கன்னிகைகள் உதாரணத்தில் இயேசு சொன்னார். மாற்கு 13:37-ல், “உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன், விழிப்புடன் இருங்கள்” என்று சொன்னார். அப்படியென்றால், இயேசுவை பின்பற்றுகிற எல்லாருமே தயாராகவும் விழிப்பாகவும் இருப்பது ரொம்ப முக்கியம். இந்த விஷயத்தில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே ஊழியத்திற்கு முதலிடம் கொடுக்கிறார்கள். இந்த உதாரணத்தில், புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் கேட்டபோது புத்தியுள்ள கன்னிகைகள் உதவி செய்ய முடியாது என்று சொன்னார்கள். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் ஒவ்வொருவரும் தயாராக, விழிப்பாக, கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்! அதற்கு நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். நமக்காக மற்றவர்கள் எதுவும் செய்ய முடியாது. இயேசு கிறிஸ்து சீக்கிரத்தில் நீதியாக நியாயந்தீர்க்க ‘வரப்போகிறார்.’ அப்போது நாம் ஒவ்வொருவரும் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். அதனால் நாம் தயாராக இருப்பது ரொம்பவே முக்கியம்!

தயாராக, விழிப்பாக, கடவுளுக்கு உண்மையாக இருக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்; நமக்காக மற்றவர்கள் எதுவும் செய்ய முடியாது

15. பரலோகத்தில் நடக்கப் போகிற திருமண நிகழ்ச்சி ஏன் எல்லா உண்மை கிறிஸ்தவர்களுக்கும் சந்தோஷத்தை தரும்?

15 இயேசுவின் உதாரணத்தில் சொல்லப்பட்டு இருக்கிற திருமண நிகழ்ச்சியை நினைத்து எல்லா கிறிஸ்தவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அர்மகெதோனுக்குப் பிறகு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் மணமகளாக ஆவார்கள். (வெளி. 19:7-9) பரலோகத்தில் நடக்கப் போகிற அந்த திருமணத்தில் இருந்து பூமியில் இருக்கிற எல்லாரும் நன்மை அடைவார்கள். ஏனென்றால் அப்போது ஒரு நல்ல அரசாங்கம் பூமியை ஆட்சி செய்யும். நமக்கு பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, எப்போதும் தயாராக, விழிப்பாக இருக்க தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், யெகோவா தேவன் நமக்காக ஏற்பாடு செய்திருக்கிற அருமையான எதிர்காலத்தை சந்தோஷமாக அனுபவிக்கலாம்!

^ பாரா. 9 “இதோ, மணமகன் வருகிறார்!” (வசனம் 6) என்ற சத்தம் கேட்ட சமயத்திற்கும் மணமகன் நிஜமாகவே வந்ததற்கும் (வசனம் 10) இடையில் ஒரு காலப்பகுதி இருக்கிறது என்று இந்த உதாரணத்தில் இருந்து தெரிந்துகொள்கிறோம். கடைசி நாட்கள் ஆரம்பித்த சமயத்தில் இருந்து, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிரசன்னத்தின் அடையாளத்தை தெளிவாக பார்க்கிறார்கள். அதனால், இயேசு இப்போது பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இந்த கடைசி நாட்களில் விழிப்பாக இருப்பது போல் இயேசு ‘வரும்’ வரை தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும்.