Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் இந்த காலத்திற்கும் பொருந்துமா?

“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் இந்த காலத்திற்கும் பொருந்துமா?

“எனக்கு பொருத்தமான ஒருவர் சபையில் கிடைக்க மாட்டார் என்று நினைக்கிறேன். எனக்கு கடைசிவரைக்கும் கல்யாணமே ஆகாது!”

“இந்த உலகத்தில் இருக்கிற சில ஆண்கள்கூட அன்பாக, பாசமாக இருக்கிறார்கள், நன்றாகப் புரிந்து நடந்துகொள்கிறார்கள். நம்முடைய மத நம்பிக்கைகளை எதிர்ப்பதில்லை. சொல்லப்போனால், நம் சகோதரர்களைவிட இவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள்.”

கல்யாணம் ஆகாமல் இருக்கிற சில சகோதரிகள் இந்த மாதிரிதான் சொல்கிறார்கள். “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரை” கல்யாணம் செய்ய வேண்டுமென்றுதான் யெகோவா விரும்புகிறார் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். (1 கொ. 7:39) அப்படியென்றால் அவர்கள் ஏன் இந்த மாதிரி சொல்கிறார்கள்?

சிலர் என்ன நினைக்கிறார்கள்?

கல்யாணமாகாத சகோதரர்களைவிட சகோதரிகள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையிலேயே, நிறைய நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு கொரியாவில், சகோதரிகள் 57 சதவீதம் இருக்கிறார்கள். ஆனால் சகோதரர்கள் 43 சதவீதம்தான் இருக்கிறார்கள். அதேபோல் கொலம்பியாவில், சகோதரிகள் 66 சதவீதம் இருக்கிறார்கள். ஆனால் சகோதரர்கள் 34 சதவீதம்தான் இருக்கிறார்கள்.

சில நாடுகளில், சத்தியத்தில் இல்லாத பெற்றோர் தங்களுடைய மகளை (யெகோவாவின் சாட்சியாக இருக்கிற மகளை) கல்யாணம் செய்துகொடுப்பதற்காக நிறைய பணமும் பொருளும் பையனிடம் கேட்கிறார்கள். சில சகோதரர்களால் அதையெல்லாம் கொடுக்க முடிவதில்லை. அதனால், யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒருவர் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்றும் இனி கல்யாணமே ஆகாது என்றும் சில சகோதரிகள் நினைக்கிறார்கள். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்

ஒருவேளை நீங்களும் இந்த மாதிரி யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுடைய சூழ்நிலைமை யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய உணர்ச்சிகளையும் அவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.—2 நா. 6:29, 30.

இருந்தாலும், நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியைத்தான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்று யோசிக்கிறீர்களா? நமக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். தவறான ஒரு முடிவை எடுத்து, அதனால் நாம் கஷ்டப்பட வேண்டுமென்று அவர் விரும்புவதில்லை. நெகேமியா வாழ்ந்த காலத்தில், நிறைய யூதர்கள் யெகோவாவை வணங்காத பெண்களை கல்யாணம் செய்தார்கள். சாலொமோனைப் போல் இருக்காதீர்கள் என்று நெகேமியா சொன்னார். சாலொமோனுடைய “கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். . . . இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திட செய்தார்கள்” என்று சொன்னார். (நெ. 13:23-26, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருவரை கல்யாணம் செய்ய வேண்டுமென்று நம்முடைய நன்மைக்குத்தான் யெகோவா சொல்கிறார். (சங். 19:7-10; ஏசா. 48:17, 18) யெகோவா நம்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால், அவர் கொடுக்கிற ஆலோசனைக்கு உண்மை கிறிஸ்தவர்கள் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்வதற்கான உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனால்தான் அவருக்கு கீழ்ப்படியவும் செய்கிறார்கள்.—நீதி. 1:5.

‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடன் பிணைக்கப்பட’, அதாவது யெகோவாவை நேசிக்காத ஒருவரை கல்யாணம் செய்ய, நீங்கள் நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களை யெகோவாவிடம் இருந்து தூரமாக விலக்கிவிடலாம். (2 கொ. 6:14) நிறையப் பேர் சரியான தீர்மானம் எடுத்திருக்கிறார்கள், யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறார்கள். ஆனால், சிலர் தவறான தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்.

நம் காலத்திற்கும் பொருந்தும்

ஆஸ்திரேலியாவில் இருக்கிற மாகி என்ற சகோதரி யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரை காதலித்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “அவர்கூட நேரம் செலவு செய்றதுக்காகவே கூட்டங்களை தவற விட்டேன். அதனால யெகோவாவவிட்டு ரொம்ப தூரம் போயிட்டேன்.” இந்தியாவில் இருக்கிற ராட்டானா என்ற இளம் சகோதரி தன்னுடன் படித்த ஒரு பையனை காதலித்தார். ராட்டானாவை காதலிப்பதற்காகவே அவன் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தான். கடைசியில், ராட்டானா யெகோவாவை சேவிப்பதையே நிறுத்திவிட்டார். காதலித்த பையனை கல்யாணம் செய்வதற்காக வேறொரு மதத்திற்கும் மாறிவிட்டார்.

கேமரூனில் இருக்கிற டென்கா என்ற சகோதரி 19 வயதில் யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரை கல்யாணம் செய்துகொண்டார். டென்கா அவர் எப்போதும் போல் ஒரு யெகோவாவின் சாட்சியாகவே இருக்கலாம் என்று கல்யாணத்திற்கு முன்பு அவர் சொல்லியிருந்தார். ஆனால், கல்யாணம் ஆன இரண்டாவது வாரத்தில் இருந்தே சபை கூட்டங்களுக்குப் போகக் கூடாது என்று அவர் சொல்லிவிட்டார். டென்கா சொல்கிறார்: “நான் தனியா இருக்கிற மாதிரி உணர்ந்தேன். அழுதுகிட்டே இருந்தேன். இனி என் வாழ்க்கை என் கையில இல்லை. நானா எந்த முடிவும் எடுக்க முடியாதுனு அப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். செஞ்ச தப்பை நினைச்சு நினைச்சு ரொம்ப வேதனைப்பட்டேன்.”

ஆனால், யெகோவாவை வணங்காத கணவர்கள் எல்லாருமே இப்படி எதிர்ப்பது இல்லைதான். யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரை நீங்கள் கல்யாணம் செய்துகொண்டதால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் இருக்கலாம். அவர் உங்களிடம் அன்பாக, பாசமாக நடந்துகொள்ளலாம். இருந்தாலும், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தம் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தீர்களா? யெகோவா உங்களுடைய நன்மைக்காக கொடுத்த ஆலோசனைக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போனதை நினைத்து எப்படி உணருகிறீர்கள்? முக்கியமாக, நீங்கள் எடுத்த தீர்மானத்தை நினைத்து யெகோவா எப்படி உணருவார் என்று நினைக்கிறீர்கள்?—நீதி. 1:33.

“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்ய வேண்டுமென்று யெகோவா கொடுத்த கட்டளைக்கு நிறைய சகோதர சகோதரிகள் கீழ்ப்படிந்து இருக்கிறார்கள். அவர்கள் எடுத்த தீர்மானம்தான் மிகச் சிறந்த தீர்மானம் என்று சொல்கிறார்கள். யெகோவாவை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால் அவரை வணங்குகிற ஒருவரைத்தான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று நிறைய சகோதர சகோதரிகள் தீர்மானமாக இருக்கிறார்கள். ஜப்பானில் இருக்கிற மிச்சிக்கோ என்ற சகோதரியின் அனுபவத்தை கவனியுங்கள். யெகோவாவை வணங்காத ஒருவரை கல்யாணம் செய்ய சொல்லி அவர்களுடைய சொந்தக்காரர்கள் வற்புறுத்தினார்கள். அதுமட்டும் இல்லாமல், யெகோவாவின் சாட்சியாக இருக்கிற அவர்களுடைய நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணமாகி விட்டது. அதைப் பார்த்தபோது தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று நினைத்து கவலைப்பட்டார். மிச்சிக்கோ சொல்கிறார்: “யெகோவா ‘சந்தோஷமுள்ள கடவுளா’ இருக்கார். அதனால நம்மளோட சந்தோஷம், நமக்கு கல்யாணம் ஆகுதா இல்லையா என்பதை வெச்சு இல்லன்னு எனக்கு நானே சொல்லிக்குவேன். நம்ம மனசுல இருக்கிற ஆசை எல்லாம் யெகோவாவுக்கு தெரியும். நம்ம ஆசைப்படுறத அவர் நிச்சயம் செய்வார். கல்யாணம் பண்ணணும்னு நமக்கு ஆசை இருந்தாலும், நமக்கு பொருத்தமான ஒருத்தர் கிடைக்கிற வரைக்கும் தனியா இருக்கிறதுதான் நல்லது.” (1 தீ. 1:11) மிச்சிக்கோ, அதற்குப் பிறகு யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒருவரை கல்யாணம் செய்துகொண்டார். கல்யாண விஷயத்தில் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

பொருத்தமான ஒருவர் கிடைக்க வேண்டுமென்று சில சகோதரர்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவில் இருக்கிற பில் என்ற சகோதரரின் அனுபவத்தை கவனியுங்கள். யெகோவாவின் சாட்சியாக இல்லாத சில பெண்களை அவருக்கு பிடித்திருந்தது. ஆனால், யெகோவாவை வணங்காத ஒருவரை கல்யாணம் செய்யக் கூடாது என்று தீர்மானமாக இருந்தார். அதனால் அவர்களிடம் நெருங்கிப் பழகாமல் இருந்தார். பிறகு, யெகோவாவை வணங்கிய சில சகோதரிகளை விரும்பினார். ஆனால், அவர்கள் யாருக்கும் இவர்மீது விருப்பமில்லை. ஒரு யெகோவாவின் சாட்சியை கல்யாணம் செய்வதற்கு 30 வருடங்கள் பில் காத்துக்கொண்டு இருந்தார். அவர் என்ன சொல்கிறார் என்றால்: “நான் காத்துக்கிட்டு இருந்ததை நினைச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்ல. இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நானும் என் மனைவியும் ஊழியத்துக்கு, பைபிள் படிப்புகளுக்கு, சபை கூட்டங்களுக்கு ஒன்னா போறோம். சாட்சிகளா இருக்கிற என்னோட மனைவியின் நண்பர்களோடு பேசி பழகுறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ, பைபிள் ஆலோசனைகள எங்க திருமண வாழ்க்கையில கடைப்பிடிக்க முயற்சி செய்றோம்.”

காத்திருக்கும் சமயத்தில்...

யெகோவாவை வணங்குகிற ஒருவருக்காக காத்துக்கொண்டு இருக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் ஏன் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாவின் ஆலோசனைக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று நீங்கள் காத்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் யெகோவா நிச்சயம் சந்தோஷப்படுவார். (1 சா. 15:22; நீதி. 27:11) யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் அவரிடம் கொட்டிவிடுங்கள். (சங். 62:8) யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரை கல்யாணம் செய்ய சொல்லி மற்றவர்கள் உங்களை வற்புறுத்தலாம், இல்லையென்றால் உங்களுக்கே அந்த எண்ணம் வரலாம். ஆனால், அதையெல்லாம் தவிர்ப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்கும்போது, யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற பந்தம் பலப்படும். யெகோவாவுக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் போல் இருக்கிறீர்கள். உங்களுடைய தேவை என்ன, ஆசை என்ன என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கென்று ஒரு மணத்துணையை கொடுப்பதாக அவர் வாக்கு கொடுக்கவில்லை. இருந்தாலும், உங்களுக்கு கல்யாணம் கண்டிப்பாக தேவை என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், உங்களுடைய தேவையை எப்படி பூர்த்தி செய்ய வேண்டுமென்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும்.—சங். 145:16; மத். 6:32.

தாவீது ஒரு சமயம் இப்படி சொன்னார்: “கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது . . . உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.” (சங். 143:5-7, 10) நீங்களும் சில சமயம் தாவீதைப் போல் இப்படி சொல்லலாம். இருந்தாலும் சோர்ந்து போய்விடாதீர்கள். உங்களுக்கு யெகோவா என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதை தெரிந்துகொள்ள பொறுமையாக இருங்கள். பைபிளை படியுங்கள், படித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். அப்போது, பைபிள் காலங்களில் தம்முடைய மக்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார் என்று தெரிந்து கொள்வீர்கள். அதோடு, உங்களுக்கு யெகோவா என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார் என்றும் தெரிந்து கொள்வீர்கள். அப்படி தெரிந்துகொள்ளும்போது, கல்யாண விஷயத்தில் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டுமென்று தீர்மானமாக இருப்பீர்கள்!

கல்யாணமாகாத கிறிஸ்தவர்கள் சபையில் இருப்பவர்களுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறார்கள்.

கல்யாணம் செய்வதற்கு காத்துக்கொண்டு இருக்கிற சமயத்தில் நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு வேறு என்ன செய்யலாம்? உங்களையே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்துங்கள். தாராள குணத்தை காட்டுங்கள், எல்லாரிடமும் நன்றாகப் பேசி பழகுங்கள். கடினமாக உழைப்பதற்கும் சபையில் நல்ல பெயர் எடுப்பதற்கும் யெகோவாவுக்கு தொடர்ந்து உண்மையாக இருப்பதற்கும் முயற்சி செய்யுங்கள். இந்த குணங்கள் எல்லாமே சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு உதவும். (ஆதி. 24:16-21; ரூத் 1:16, 17; 2:6, 7, 11; நீதி. 31:10-27) கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுங்கள். அதற்கு, ஊழியத்தில் அதிகமாக கலந்துகொள்ளுங்கள். சபை வேலைகளில் சுறுசுறுப்பாக இருங்கள். தவறான தீர்மானம் எடுக்காமல் இருக்க இதெல்லாம் உங்களுக்கு உதவியாக இருக்கும். தனியாக இருந்த காலத்தைப் பற்றி பில் என்ன சொல்கிறார் என்றால்: “யெகோவாவுக்கு சேவை செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கிட்டேன். பயனியர் ஊழியம் செஞ்சேன். அதனால நான் காத்துக்கிட்டு இருந்த நாட்கள் ரொம்ப வேகமா கடந்து போயிடுச்சு!”

“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்யுங்கள் என்று யெகோவா கொடுத்திருக்கிற கட்டளையை இன்றும் நம்மால் கடைப்பிடிக்க முடியும். அப்படி செய்தால் யெகோவாவுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்போம், அவரை சந்தோஷப்படுத்துவோம். “கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 112:1, 3) அதனால், யெகோவா கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிய தீர்மானமாக இருங்கள். “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்யுங்கள்!

^ பாரா. 7 இந்தக் கட்டுரை, சகோதரிகளுடைய கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டு இருந்தாலும், இதில் இருக்கிற ஆலோசனைகள் சகோதரர்களுக்கும் பொருந்தும்.

^ பாரா. 13 சில பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.