Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது”

“அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது”

“இந்த விஷயங்களை ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.”—லூக். 10:21.

1. இயேசு ஏன் “மகிழ்ச்சியினாலும் கடவுளுடைய சக்தியினாலும்” நிறைந்திருந்தார்? (ஆரம்பப் படம்)

இயேசுவின் கண்களில் ஒரே சந்தோஷம்! அவருடைய முகத்தில் ஒரே உற்சாகம்! அவர் “மகிழ்ச்சியினாலும் கடவுளுடைய சக்தியினாலும்” நிறைந்திருந்தார். இயேசு ஏன் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்? அவருடைய சீடர்களை நினைத்துத்தான் சந்தோஷமாக இருந்தார். அவர்களில் 70 பேரை நற்செய்தியை சொல்வதற்காக அப்போதுதான் அனுப்பியிருந்தார். ஆனால், அதிகாரத்தில் இருந்த நிறையப் பேர் நற்செய்தியை பிரசங்கிக்க பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களில் பரிசேயர்களும் வேத அறிஞர்களும்தான் முக்கிய எதிரிகளாக இருந்தார்கள். அவர்கள் அதிகம் படித்திருந்தார்கள், சாமர்த்தியசாலிகளாக இருந்தார்கள். அதனால் இயேசுவை ஒரு சாதாரண “தச்சன்” என்றும், அவருடைய சீடர்களை “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்றும் மக்களை நினைக்க வைத்தார்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், சீடர்கள் எப்படி பிரசங்க வேலையை செய்யப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள இயேசு ஆர்வமாக இருந்தார். (அப். 4:13; மாற். 6:3) ஆனால், சீடர்கள் எல்லா எதிர்ப்பையும் தைரியமாக சமாளித்தார்கள், இயேசு கொடுத்த பிரசங்க வேலையை வெற்றிகரமாக செய்தார்கள்; பேய்களைக்கூட அடக்கினார்கள்! சீடர்கள் உற்சாகமாக திரும்பி வந்ததை பார்த்து இயேசு ரொம்ப சந்தோஷப்பட்டார். சீடர்களால் இந்த வேலையை எப்படி தைரியமாக, சந்தோஷமாக செய்ய முடிந்தது?லூக்கா 10:1, 17-21-ஐ வாசியுங்கள்.

2. (அ) இயேசுவின் சீடர்கள் எப்படி குழந்தைகளை போல் இருந்தார்கள்? (ஆ) சீடர்களால் ஆழமான பைபிள் சத்தியங்களை எப்படி புரிந்துகொள்ள முடிந்தது?

2 இயேசு, யெகோவாவைப் பார்த்து: “தகப்பனே, பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானரே, அனைவர் முன்பாகவும் நான் உங்களைப் போற்றிப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஆம், தகப்பனே, அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது” என்று சொன்னார். (மத். 11:25, 26) இயேசு ஏன் தம்முடைய சீடர்களை குழந்தைகள் என்று சொன்னார்? குழந்தைகள் எப்படி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்களோ அதேபோல் சீடர்களும் இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் மனத்தாழ்மையாக இருந்தார்கள். (மத். 18:1-4) அதனால்தான், ஆழமான பைபிள் சத்தியங்களை புரிந்துகொள்வதற்கு யெகோவா தம்முடைய சக்தியை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தார். ஆனால், பரிசேயர்களும் வேத அறிஞர்களும் அதிகம் படித்திருந்ததால் அவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்று நினைத்தார்கள், பெருமை பிடித்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மனத்தாழ்மையாக இல்லாததால் பைபிள் சத்தியங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சாத்தான் அவர்களுடைய மனக்கண்களை குருடாக்கி இருந்தான்.

3. இந்த கட்டுரையில் எதை பற்றி பார்க்கப் போகிறோம்?

3 அன்று மனத்தாழ்மையாக இருந்த எல்லாரும் ஆழமான பைபிள் சத்தியங்களை எளிமையாக, தெளிவாக புரிந்துகொள்வதற்கு யெகோவா உதவி செய்தார்; அவர்கள் படித்தவர்களா, படிக்காதவர்களா என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை. அதனால்தான் இயேசு அவ்வளவு சந்தோஷப்பட்டார்! யெகோவா எப்போதுமே மாறாதவர். இன்றும் மனத்தாழ்மையாக இருக்கிற மக்கள் பைபிள் சத்தியங்களை எளிமையாக, தெளிவாக புரிந்துகொள்வதற்கு உதவி செய்கிறார். இதை எப்படி செய்கிறார்? இதை பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ஆழமான பைபிள் சத்தியங்கள் எல்லாருக்கும் விளக்கப்படுகிறது

4. எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம் எப்படி நிறையப் பேருக்கு பிரயோஜனமாக இருக்கிறது?

4 இப்போது நம் அமைப்பு பைபிள் சத்தியங்களை எளிமையாக, தெளிவாக சொல்லிக் கொடுப்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு மூன்று உதாரணங்களை பார்க்கலாம். ஒன்று, எளிமையாக்கப்பட்ட காவற்கோபுர பத்திரிகை. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) எல்லாராலும் சுலபமாக புரிந்துகொள்ளும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டு இருக்கிறது. சரளமாக வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் கஷ்டப்படுகிறவர்களுக்கு இது ஒரு அருமையான பரிசு! பிள்ளைகளும் இதை சுலபமாக புரிந்துகொள்கிறார்கள் என்று நிறைய பெற்றோர்கள் சொல்கிறார்கள். இந்த காவற்கோபுரத்தை வெளியிட்டதற்காக நம் அமைப்புக்கு நன்றி சொல்லி நிறையப் பேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: ‘இதுக்கு முன்னாடி, கூட்டங்கள்ல பதில் சொல்லணும்னா எனக்கு ரொம்ப பயமா இருக்கும். ஆனா இந்த காவற்கோபுரம் வந்ததுல இருந்து நிறைய பதில் சொல்றேன். இப்போ எனக்கு பயமே இல்ல. யெகோவாவுக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி!’

5. புதிதாக வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் எப்படி பிரயோஜனமாக இருக்கிறது?

5 இரண்டாவதாக, எளிய நடையில் தயாரிக்கப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் அக்டோபர் 5, 2013-ல் நடந்த வருடாந்தர கூட்டத்தில் வெளியிடப்பட்டது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இதை வாசித்து புரிந்துகொள்வது ரொம்ப சுலபமாக இருக்கிறது. இந்த பைபிளில் இருக்கிற நிறைய வசனங்களுடைய வார்த்தைகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அதன் அர்த்தம் எதுவுமே மாறவில்லை! உதாரணத்திற்கு யோபு 10:1-ல், இதற்கு முன்பு 27 வார்த்தைகள் இருந்தது, ஆனால் இப்போது 19 வார்த்தைகள்தான் இருக்கிறது. அதேபோல், நீதிமொழிகள் 8:6-ல் இதற்கு முன்பு 20 வார்த்தைகள் இருந்தது, ஆனால் இப்போது 13 வார்த்தைகள்தான் இருக்கிறது. இருந்தாலும், இந்த வசனங்களை தெளிவாக, சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது. பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: ‘புது பைபிள்ல யோபு புத்தகத்த இப்போதான் படிச்சு முடிச்சேன். ஏதோ முதல் தடவ படிச்சு புரிஞ்சிக்கிட்ட மாதிரி இருந்தது!’ இந்த பைபிளை படித்த நிறையப் பேர் இவரை போலவே உணருகிறார்கள்!

6. மத்தேயு 24:45-47-ன் புதிய விளக்கத்தை தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது?

6 மூன்றாவதாக, சில பைபிள் வசனங்களுக்கு இப்போது புது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ஜூலை 15, 2013-ல் வெளிவந்த காவற்கோபுரத்தில், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” யார், “வீட்டார்” யார் என்பதை பற்றியெல்லாம் புது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (மத். 24:45-47) ஆளும் குழுதான் அந்த அடிமை என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும், ‘வேறே ஆடுகளும்தான்’ அந்த “வீட்டார்” என்று சொல்லப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாருமே, உண்மையும் விவேகமும் உள்ள அடிமை சொல்லிக் கொடுக்குற பைபிள் விஷயங்களில் இருந்து பயனடைகிறார்கள். (யோவா. 10:16) இந்த புதிய விளக்கங்களை பற்றி தெரிந்துகொண்டது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! இதை பற்றி மற்றவர்களுக்கு சொல்லும்போதும் நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இல்லையா! வேறு என்ன வழிகளில் யெகோவா நமக்கு எளிமையாக, தெளிவாக கற்றுக்கொடுக்கிறார்?

பைபிள் பதிவுகளை பற்றிய எளிய விளக்கம்

7, 8. பைபிள் பதிவுகளின் பெரியளவு நிறைவேற்றத்திற்கு சில உதாரணங்களை சொல்லுங்கள்.

7 நீங்கள் பல வருடங்களாக ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறீர்களா? அப்படியென்றால், பைபிள் பதிவுகளை விளக்குகிற விதத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதற்கு முன், சில பைபிள் பதிவுகளை விளக்கும்போது, அதற்கு பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது என்று நம் பத்திரிகை சொன்னது. ஒரு பைபிள் பதிவை ‘நிழல்’ என்றும் அதன் பெரியளவு நிறைவேற்றத்தை ‘நிஜம்’ என்றும் சொன்னது. இப்படி விளக்கியதற்கு பைபிளில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. உதாரணத்திற்கு, “யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை” பற்றி இயேசு ஒருசமயம் சொன்னார். (மத்தேயு 12:39, 40-ஐ வாசியுங்கள்.) மீனின் வயிற்றில் யோனா இருந்த நாட்கள், கல்லறையில் தாம் இருக்கப் போகிற நாட்களை குறிக்கிறது என்று இயேசுவே விளக்கினார்.

8 இப்படி நிழல்-நிஜம் உதாரணங்கள் பைபிளில் நிறைய இருக்கின்றன. அப்போஸ்தலன் பவுலும் இதேபோல் நிறைய உதாரணங்களை சொல்லியிருக்கிறார். உதாரணத்திற்கு, ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் இருந்த பந்தம் யெகோவாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இருந்த பந்தத்தை குறிக்கிறது என்று பவுல் சொன்னார். ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் இருந்த பந்தம் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பின் பரலோக பாகத்துக்கும் இருக்கிற பந்தத்தை குறிக்கிறது என்றும் சொன்னார். (கலா. 4:22-26) அதேபோல் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருந்த ஆசரிப்பு கூடாரம், ஆலயம், பாவநிவாரண நாள், தலைமை குரு, இன்னும் மற்ற விஷயங்கள் எல்லாம் ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாக’ இருந்தது. (எபி. 9:23-25; 10:1) இந்த பைபிள் பதிவுகளையும் அது எதைக் குறிக்கிறது என்பதை படிக்கும்போதும் நம்முடைய விசுவாசம் பலப்படுகிறது. அப்படியென்றால் பைபிளில் சொல்லியிருக்கிற ஒவ்வொரு நபரும், சம்பவமும், பொருளும் யாரையாவது அல்லது எதையாவது குறிப்பதாக சொல்ல முடியுமா?

9. நாபோத் பற்றிய சம்பவம் இதற்கு முன்பு எப்படி விளக்கப்பட்டது?

9 சில பைபிள் பதிவுகளில் வருகிற ஒவ்வொரு நபரும், சம்பவமும், பொருளும் யாரையாவது அல்லது எதையாவது குறிப்பதாக நம் பிரசுரங்களில் இதற்கு முன்பு சொல்லியிருந்தோம். உதாரணத்திற்கு, நாபோத் பற்றிய பைபிள் பதிவை எடுத்துக்கொள்ளலாம். நாபோத்தின் திராட்ச தோட்டத்துக்கு ஆகாப் ராஜா ஆசைப்பட்டான். அதனால் அவனுடைய மனைவி யேசபேல் நாபோத்தை கொலை செய்து அவருடைய திராட்ச தோட்டத்தை ஆகாபுக்கு கொடுத்தாள். (1 இரா. 21:1-16) ஆகாபும் யேசபேலும், சாத்தானையும் அவனுடைய அமைப்பையும் குறிக்கிறார்கள் என்று 1932-ல் வெளிவந்த காவற்கோபுரம் (ஆங்கிலம்) சொன்னது. அதேபோல் நாபோத் இயேசுவை குறிப்பதாகவும், நாபோத்தின் மரணம் இயேசுவின் மரணத்தை குறிப்பதாகவும் அந்த பத்திரிகை சொன்னது. ஆனால், 1961-ல் வெளிவந்த “உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக” (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் இந்த சம்பவத்தை பற்றிய ஒரு புதிய விளக்கம் கொடுக்கப்பட்டது. அதாவது நாபோத் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை குறிப்பதாகவும், யேசபேல் பொய் கிறிஸ்தவ அமைப்புகளை குறிப்பதாகவும் சொல்லப்பட்டது. யேசபேல் ராணியால் நாபோத்துக்கு வந்த துன்புறுத்துதல்கள், கடைசி நாட்களில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு வருகிற துன்புறுத்துதல்களை குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. பல வருடங்களாக, பைபிள் பதிவுகளை நம் அமைப்பு இந்த விதத்தில் விளக்கியதால் நம்முடைய விசுவாசம் பலப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது பைபிள் பதிவுகளை அப்படி விளக்குவது இல்லை. ஏன்?

10. (அ) பைபிள் சம்பவங்களை விளக்குவதில், உண்மையுள்ள அடிமை இப்போது எப்படி அதிக விவேகமாக இருக்கிறார்கள்? (ஆ) நம் பத்திரிகைகளில் இப்போது எந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

10 பைபிள் விஷயங்களை விளக்குவதில் இன்னும் அதிக விவேகமாக, அதாவது கவனமாக இருக்க, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ இப்போது யெகோவா உதவி செய்கிறார். எந்த விதத்தில்? பைபிளில் தெளிவான ஆதாரம் இருந்தால் மட்டும்தான் ஒரு சம்பவத்திற்கு பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது என்று இப்போது உண்மையும் விவேகமும் உள்ள அடிமை சொல்கிறார்கள். சில பைபிள் பதிவுகளையும் அதன் பெரியளவு நிறைவேற்றங்களையும் இதற்கு முன்பு விளக்கியபோது அதை புரிந்துகொள்வதற்கும்... ஞாபகத்தில் வைப்பதற்கும்... வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும்... நமக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதைவிட முக்கியமாக, அந்த பைபிள் பதிவில் இருக்கிற நடைமுறையான பாடங்களை கற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனால்தான் இப்போது நம் பிரசுரங்களில், ஒரு பைபிள் பதிவில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்... அதை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம்... என்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு விசுவாசம், சகிப்புத்தன்மை, தேவபக்தி போன்ற நல்ல பண்புகளை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளாம் என்று விளக்கப்படுகிறது. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

நாபோத்தின் உதாரணம் நமக்கு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது (பாரா 11)

11. (அ) நாபோத்தின் பதிவில் இருந்து இப்போது நாம் என்ன புரிந்துகொள்கிறோம், இது எப்படி நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது? (ஆ) ஒரு பைபிள் பதிவின் பெரியளவு நிறைவேற்றத்தை பற்றி நம் பிரசுரங்கள் ஏன் இப்போது அடிக்கடி விளக்குவது இல்லை? (இந்த பத்திரிகையில், “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியை பாருங்கள்.)

11 நாபோத் பற்றிய பதிவை இப்போது தெளிவாகவும் எளிமையாகவும் புரிந்துகொள்ள முடிகிறது. நாபோத்தின் மரணம் இயேசுவின் மரணத்தையோ பரலோக நம்பிக்கை உள்ளவர்களுடைய மரணத்தையோ குறிக்கவில்லை. இந்த பதிவில் இருக்கிற முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆகாப் ராஜா தன்னை கொலை செய்துவிடுவான் என்று தெரிந்தபோதிலும் நாபோத் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். பலம்படைத்த அந்த ராஜாவிடம் இருந்து எதிர்ப்பு வந்தாலும் யெகோவாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில் உறுதியாக இருந்தார். (எண். 36:7; 1 இரா. 21:3) இன்றும் யெகோவாவின் மக்கள் பயங்கர எதிர்ப்பை சந்திக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும், நாபோத் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். (2 தீமோத்தேயு 3:12-ஐ வாசியுங்கள்.) நாபோத்தின் பதிவை இப்படி விளக்கும்போது, அதை எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது, ஞாபகத்தில் வைக்க முடிகிறது, வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முடிகிறது. இதனால் நம் விசுவாசமும் பலப்படுகிறது.

12. (அ) பைபிள் பதிவுகளைப் பற்றி என்ன முடிவுக்கு வந்துவிடக் கூடாது? (ஆ) ஆழமான பைபிள் விஷயங்களை நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடிகிறது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

12 அப்படியென்றால், பைபிள் பதிவுகளில் இருந்து நடைமுறையான பாடங்களை மட்டும்தான் கற்றுக்கொள்ள முடியுமா, அதற்கு பெரியளவு நிறைவேற்றம் என்று எதுவுமே இல்லையா? அப்படி நாம் சொல்ல முடியாது! இப்போது நம் அமைப்பு பைபிள் பதிவுகளை நிழல்-நிஜம் என்று விளக்குவதற்கு பதிலாக, ஒரு பைபிள் பதிவு எப்படி இன்னொரு பைபிள் பதிவோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது என்றுதான் முக்கியமாக விளக்குகிறது. உதாரணத்திற்கு, நாபோத்தின் பதிவை கவனிக்கலாம். எதிர்ப்போ சாவோ வந்தாலும் யெகோவாவுக்குத்தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானமாக இருந்தார். இந்த பதிவை படிக்கும்போது, கடவுளுக்கு கடைசிவரை உண்மையாக இருந்த இயேசு கிறிஸ்துவும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் நம் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அதேசமயம் கடவுளுக்கு உண்மையாக இருந்த ‘வேறே ஆடுகளும்’ நம் ஞாபகத்திற்கு வருகிறார்கள் இல்லையா? பைபிள் பதிவுகளை எவ்வளவு எளிமையாக, தெளிவாக யெகோவா நமக்கு கற்றுக்கொடுக்கிறார் என்று இந்த உதாரணம் காட்டுகிறது. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

இயேசுவின் உதாரணங்களுக்கு இப்போது எளிய விளக்கம்

13. இயேசு சொன்ன உதாரணங்களை இப்போது நம் அமைப்பு எளிமையாக, தெளிவாக விளக்குகிறது என்பதற்கு சில உதாரணங்களை சொல்லுங்கள்.

13 இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிகச் சிறந்த போதகர் இயேசு கிறிஸ்துதான். அவர் மக்களுக்கு சொல்லிக் கொடுத்தபோது நிறைய உதாரணங்களை பயன்படுத்தினார். (மத். 13:34) கஷ்டமான ஒரு விஷயத்தை சுலபமாக புரிந்துகொள்ளவும் ஞாபகத்தில் வைக்கவும் உதாரணங்கள் உதவியாக இருக்கும். அது நம்மை யோசிக்க வைக்கும், நம் மனதை தொடும். இப்போது வெளிவருகிற நம்முடைய பிரசுரங்களில், இயேசு சொன்ன உதாரணங்களை ரொம்ப எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, இயேசு சொன்ன புளித்த மாவு, கடுகு விதை, மீன் வலை உதாரணங்களை ஜூலை 15, 2008 காவற்கோபுரத்தில் ரொம்ப தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். அதனால் அதை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த உதாரணங்கள், கடவுளுடைய அரசாங்கத்தை பற்றித்தான் சொல்கிறது. முக்கியமாக, மக்கள் இயேசுவின் சீடர்களாக ஆவதற்கு அந்த அரசாங்கம் எப்படி உதவி செய்திருக்கிறது என்று சொல்கிறது.

14. (அ) நல்ல சமாரியன் கதையை இதற்கு முன்பு எப்படி விளக்கியிருந்தார்கள்? (ஆ) இந்த கதையை இப்போது எப்படி விளக்குகிறார்கள்?

14 இயேசு கதைகளையும் சொன்னார். சில கதைகளை அடையாள அர்த்தத்தில் சொன்னார்; சில கதைகளை தீர்க்கதரிசனமாக சொன்னார். இன்னும் சில கதைகளை பாடம் கற்றுக்கொடுப்பதற்காக சொன்னார். அப்படியென்றால், எதை அடையாள அர்த்தத்தில் சொன்னார், எதை நமக்கு பாடங்களாக சொன்னார் என்று எப்படி தெரிந்துகொள்வது? இதை பற்றி நம்முடைய அமைப்பு படிப்படியான, தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, நல்ல சமாரியனின் கதையை நாம் எப்படி புரிந்துவைத்திருந்தோம் என்று யோசித்துப் பாருங்கள். (லூக். 10:30-37) அந்த சமாரியன், இயேசுவை குறிப்பதாக 1924-ல் வெளிவந்த காவற்கோபுரம் சொன்னது. எருசலேமில் இருந்து கீழ்நோக்கி எரிகோவுக்கு போகிற வழி, ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்து மனிதர்களுடைய வாழ்க்கை மோசமாகிக்கொண்டே போவதை குறிப்பதாக சொன்னது. அந்த வழியில் வந்த திருடர்கள், பெரிய பெரிய நிறுவனங்களையும் பேராசை பிடித்த தொழில் அதிபர்களையும் குறிப்பதாக சொன்னது. ஆலயகுருவும் லேவியரும், பொய் கிறிஸ்தவ அமைப்புகளை குறிப்பதாக சொன்னது. ஆனால் இப்போது நம் அமைப்பு, நல்ல சமாரியன் கதைக்கு இந்த மாதிரியான விளக்கங்களை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக நடைமுறையான பாடங்களைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. உதாரணத்திற்கு கிறிஸ்தவர்கள், நல்ல சமாரியனை போல் பாரபட்சம் பார்க்காமல் எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறது. முக்கியமாக, கடவுளை பற்றியும் பைபிளை பற்றியும் தெரிந்துகொள்ள எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது பைபிள் சத்தியங்களை யெகோவா நமக்கு எவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார் என்று தெரிகிறது.

15. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

15 இயேசு சொன்ன பத்து கன்னிகைகள் உதாரணத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (மத். 25:1-13) இந்த கடைசி நாட்களில், நாம் இந்த முக்கியமான உதாரணத்தை எப்படி புரிந்திருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்? இந்த உதாரணத்தில் வருகிற ஒவ்வொரு நபருக்கும், பொருளுக்கும், சம்பவத்துக்கும் பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறதா? அல்லது, இந்த கடைசி நாட்களில் நமக்கு பிரயோஜனமாக இருக்கிற நடைமுறையான பாடங்களை மட்டும் இயேசு கற்றுக்கொடுக்கிறாரா? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 4 ஆங்கிலத்தில் எப்போதும் வருகிற காவற்கோபுர படிப்பு இதழைத் தவிர, எளிமையாக்கப்பட்ட படிப்பு இதழும் (simplified edition) ஜூலை 2011-ல் இருந்து வெளிவருகிறது. இப்போது இது வேறு சில மொழிகளிலும் வெளிவருகிறது.

^ பாரா. 5 ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த பைபிள் மற்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

^ பாரா. 10 உதாரணத்திற்கு இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் புத்தகம், பைபிள் காலங்களில் வாழ்ந்த 14 பேரைப் பற்றி சொல்கிறது. இவர்களிடம் இருந்து நாம் என்ன நடைமுறையான பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று அந்த புத்தகம் விளக்குகிறது. ஆனால் இவர்கள் யாரை குறிக்கிறார்கள், அந்த பைபிள் பதிவின் பெரியளவு நிறைவேற்றம் என்ன என்பதை பற்றியெல்லாம் அது விளக்குவது இல்லை.

^ பாரா. 12 பைபிளில் இருக்கிற ‘சில விஷயங்கள் புரிந்துகொள்ள கடினமாக’ இருக்கலாம். உதாரணத்திற்கு, பவுல் எழுதிய சில விஷயங்கள் நமக்கு புரியாதது போல் இருக்கலாம். ஆனால், பைபிள் எழுத்தாளர்கள் எல்லாருமே கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டுதான் எழுதினார்கள். இன்று அந்த சக்திதான், பைபிளில் இருக்கிற “ஆழமான காரியங்களை” புரிந்துகொள்ள உண்மை கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிறது.—2 பே. 3:16, 17; 1 கொ. 2:10.