Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

இப்போதெல்லாம் நம் பத்திரிகையில் ஏன் நிழல்-நிஜம் என்று அடிக்கடி விளக்குவதில்லை?

நிழல்-நிஜம் என்றால் என்ன என்று செப்டம்பர் 15, 1950 காவற்கோபுரம் (ஆங்கிலம்) விளக்கியது. பைபிள் பதிவில் இருக்கிற ஒரு நபரை, சம்பவத்தை, பொருளை நிழல் என்றும் அந்த நபரும் சம்பவமும் பொருளும் எதை குறிக்கிறதோ அதை நிஜம் என்றும் அந்த பத்திரிகை சொன்னது. நிஜத்தை பெரியளவு நிறைவேற்றம் என்று சொன்னது.

கடவுளுக்கு உண்மையாக இருந்த தெபொராள், எலிகூ, யெப்தா, யோபு, ராகாப், ரெபெக்காள் போன்றவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை, இல்லையென்றால், ‘திரள் கூட்டத்தை’ குறிப்பதாக நம் பத்திரிகைகளில் இதற்கு முன்பு விளக்கப்பட்டது. (வெளி. 7:9) உதாரணத்திற்கு யெப்தா, யோபு, ரெபெக்காள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை குறிப்பதாக சொல்லப்பட்டது. தெபொராளும் ராகாபும் திரள் கூட்டத்தை குறிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நம் பத்திரிகைகளில் இந்த மாதிரி ஒப்பிட்டு சொல்வது இல்லை. ஏன் என்று இப்போது பார்க்கலாம்.

நிழல்

அந்த காலத்தில் பஸ்கா பண்டிகை சமயத்தில் ஆட்டை பலியாக கொடுத்தார்கள்.—எண். 9:2.

நிஜம்

‘பஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்’ என்று இயேசுவைப் பற்றி பவுல் சொன்னார்.—1 கொ. 5:7.

நிழல்-நிஜம் என்று பைபிளிலேயே சில உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சாராளும் ஆகாரும் யாரை குறிக்கிறார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் கலாத்தியர் 4:21-31-ல் சொன்னார். ஆபிரகாமின் வேலைக்காரியாக இருந்த ஆகார் (நிழல்), திருச்சட்ட ஒப்பந்தத்தில் இருந்த இஸ்ரவேல் தேசத்தை (நிஜம்) குறிப்பதாக பவுல் சொன்னார். ஆபிரகாமின் மனைவி சாராளை “சுதந்திரப் பெண்” என்று சொன்னார். சாராள் (நிழல்), யெகோவாவின் மனைவியை அதாவது, யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தை (நிஜம்) குறிப்பதாக சொன்னார். எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில், ராஜாவாகவும் தலைமை குருவாகவும் இருந்த மெல்கிசேதேக்கு (நிழல்), இயேசுவை (நிஜம்) குறிப்பதாக பவுல் சொன்னார். (எபி. 6:20; 7:1-3) அதோடு, ஏசாயா தீர்க்கதரிசியும் அவருடைய மகன்களும் (நிழல்) இயேசுவையும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் (நிஜம்) குறிப்பதாக சொன்னார். (எபி. 2:13, 14) யெகோவாவுடைய சக்தியின் தூண்டுதல் இருந்ததால்தான் பவுல் இப்படி ஒப்பிட்டு சொன்னார். அதனால், பைபிளில் இருக்கிற இந்த நிழல்-நிஜம் உதாரணங்கள் சரி என்று சொல்லலாம்.

ஆனால், இந்த நபர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, மெல்கிசேதேக்கு இயேசுவை குறிப்பதாக பவுல் சொன்னார். ஆனால், மெல்கிசேதேக்கின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏன்? நான்கு ராஜாக்களை ஆபிரகாம் தோற்கடித்ததற்காக மெல்கிசேதேக்கு அவருக்கு ரொட்டியையும் திராட்சமதுவையும் கொடுத்தார். ஆனால், இந்த சம்பவத்திற்கு பெரியளவு நிறைவேற்றம் எதுவும் இருப்பதாக பைபிள் சொல்வதில்லை.—ஆதி. 14:1, 18.

இயேசு இறந்ததற்குப் பிறகு வந்த நிறைய எழுத்தாளர்கள், பைபிளில் இருக்கிற எல்லா சம்பவத்திற்கும் ஒரு பெரியளவு நிறைவேற்றம் இருப்பதாக சொன்னார்கள். ஆரிஜன், அம்புரோஸ், ஜெரோம் சொன்ன விஷயங்களை பற்றி ஒரு என்ஸைக்ளோப்பீடியா இப்படி சொன்னது: ‘ஒவ்வொரு பைபிள் சம்பவத்திற்கும் ஒரு பெரியளவு நிறைவேற்றம் இருப்பதாக நினைத்து அதை தேடி கண்டுபிடித்தார்கள். அதுவும் பைபிளில் இருக்கிற சின்னச் சின்ன சம்பவத்திற்கும் அப்படி கண்டுபிடித்தார்கள். பைபிளில் சொல்லியிருக்கிற ஒரு சாதாரண சம்பவத்திற்கும்கூட மறைமுகமான அர்த்தம் இருப்பதாக நினைத்தார்கள் . . . உதாரணத்திற்கு, உயிர்த்தெழுந்த பிறகு இயேசு தம்முடைய சீடர்களுக்கு காட்சியளித்த சமயத்தில், சீடர்கள் பிடித்த 153 மீன்களின் எண்ணிக்கைக்குக்கூட ஒரு அர்த்தம் இருக்கிறது என்று சொன்னார்கள்.’

ஐந்து பார்லி ரொட்டியையும் இரண்டு மீனையும் வைத்து இயேசு 5,000 பேருக்கு சாப்பாடு கொடுத்ததற்கு பெரியளவு நிறைவேற்றம் இருப்பதாக அகஸ்டீன் ஆஃப் ஹிப்போ (எழுத்தாளர்) சொன்னார். ஐந்து பார்லி ரொட்டிகள் பைபிளில் இருக்கிற முதல் ஐந்து புத்தகங்களை குறிப்பதாக சொன்னார். கோதுமையைவிட பார்லியின் தரம் குறைவாக இருப்பதால் ‘புதிய ஏற்பாட்டைவிட’ ‘பழைய ஏற்பாடு’ மதிப்பு குறைவாக இருப்பதாக சொன்னார். அந்த இரண்டு மீன்களில் ஒரு மீன், ராஜாவை குறிப்பதாகவும் இன்னொரு மீன், ஆலயக் குருவை குறிப்பதாகவும் சொன்னார். ஏசா-யாக்கோபு பதிவை பற்றி இன்னொரு எழுத்தாளர் என்ன சொன்னார் என்று பார்க்கலாம்: ஏசாவின் தலைமகன் உரிமையை யாக்கோபு சிவப்பு கூழ் கொடுத்து வாங்கினார். அதேபோல், மனிதர்களுக்கு பரலோகத்தில் வாழ்கிற வாய்ப்பை கொடுப்பதற்காக இயேசு அவருடைய ரத்தத்தை விலையாக கொடுத்தார் என்று சொன்னார்.

இது போன்ற பைபிள் விளக்கங்களை எல்லாம் நம்புவது கஷ்டமாக இருக்கிறது இல்லையா? உண்மைதான். ஏனென்றால், எந்த பைபிள் பதிவுக்கு பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது, எதற்கு இல்லை என்று மனிதர்களால் சொல்ல முடியாது. அப்படியென்றால், பைபிளில் இருக்கிற ஒரு நபருக்கோ சம்பவத்திற்கோ பொருளுக்கோ பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறதா இல்லையா என்று நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்? ஒரு பைபிள் பதிவுக்கு பெரியளவு நிறைவேற்றம் இருப்பதாக பைபிள் சொன்னால் மட்டும்தான் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாமே சொந்தமாக எந்த அர்த்தமும் கொடுக்கக் கூடாது.

அப்படியென்றால் ஒரு பைபிள் பதிவை படிக்கும்போது அதில் இருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்? “வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறும்படி, முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன” என்று பவுல் சொன்னார். (ரோ. 15:4) பைபிளில் இருக்கிற விஷயங்களில் இருந்து எப்படி நன்மை அடையலாம் என்று முதல் நூற்றாண்டில் இருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னார். அவர்கள் மட்டுமல்ல, இன்று இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் ‘வேறே ஆடுகளும்’ பைபிளில் இருந்து நிறைய நல்ல பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.—யோவா. 10:16; 2 தீ. 3:1.

பைபிளில் இருக்கிற பதிவுகள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு... ‘வேறே ஆடுகளுக்கு’... ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்கிற கிறிஸ்தவர்களுக்கு... மட்டும்தான் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு யோபு பட்ட கஷ்டங்கள், முதல் உலகப் போர் சமயத்தில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. யோபு அனுபவித்ததை போலவே நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிற நம் சகோதர சகோதரிகள் எல்லாருக்குமே பொருந்தும். யோபுவின் பதிவை பைபிளில் படிக்கும்போது அவர்கள் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். அதனால் யெகோவா, “கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்று புரிந்திருக்கிறார்கள்.—யாக். 5:11.

இன்று நம் சபையில்கூட, தெபொராளைப் போல் உண்மையாக இருக்கிற வயதான சகோதரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். எலிகூவை போல் ஞானமாக நடந்துகொள்கிற இளம் மூப்பர்கள் இருக்கிறார்கள். யெப்தாவை போல் தைரியமாகவும் பக்திவைராக்கியத்தோடும் சேவை செய்கிற பயனியர்கள் இருக்கிறார்கள். யோபுவை போல் பொறுமையாக இருக்கிற சகோதர சகோதரிகளும் இருக்கிறார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்களை பற்றி யெகோவா பைபிளில் பதிவு செய்ததால்தான் அதை படிக்கும்போது நமக்கு ‘சகிப்புத்தன்மையும் ஆறுதலும்’ கிடைக்கிறது. இதற்காக நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பைபிள் பதிவில் இருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம் என்ற விஷயத்திற்குத்தான் இப்போது நம் அமைப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அப்படியென்றால், நிழல்-நிஜம் என்று இப்போது நம் பத்திரிகைகளில் ஏன் சொல்வதில்லை என்று புரிந்துகொண்டீர்களா?