Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த வேலை

ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த வேலை

நானும் க்வென்னும் 5 வயசுல இருந்தே டான்ஸ் (dance) கத்துக்க ஆரம்பிச்சோம். ஆனா நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டதே இல்லை. வளர்ந்ததுக்கு அப்புறம், பாலே (ballet) நடனம்தான் எங்க ரெண்டு பேருக்குமே வாழ்க்கையா இருந்தது. டான்ஸ்ல கொடிகட்டி பறந்துட்டு இருந்த சமயத்துல, நடனமாடுறத நாங்க விட்டுட்டோம். இந்த மாதிரி ஒரு தீர்மானம் எடுத்ததுக்கு என்ன காரணம்?

டேவிட்: 1945-ல இங்கிலாந்துல இருக்கிற ஷ்ராப்ஷையர் (Shropshire) என்ற இடத்துலதான் நான் பிறந்தேன். அங்க இருக்கிற அமைதியான ஒரு கிராமத்துல, எங்க அப்பாவுக்கு ஒரு பண்ணை இருந்தது. தினமும் ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும், பண்ணையில போய் கோழிக்கு தீவனம் போடுவேன், முட்டைகளை எடுத்து வைப்பேன், ஆடுமாடுகளை பார்த்துக்குவேன். இந்த வேலை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளி விடுமுறையில, அறுவடை வேலை செய்வேன். சில சமயத்துல எங்களோட டிராக்டரையும் (tractor) ஓட்டுவேன்.

அதே சமயம் எனக்கு டான்ஸ் மேலயும் ஆர்வம் இருந்தது. மியூசிக் (music) எங்க கேட்டாலும் உடனே டான்ஸ் ஆடுவேனு எங்க அப்பா சொல்வார்! அதனால என்னை கொண்டுபோய் ஒரு டான்ஸ் ஸ்கூல்ல சேர்க்கணும்னு அம்மாகிட்ட எங்க அப்பா சொன்னார். எனக்கு 5 வயசு இருக்கும்போதே, டேப் டான்சிங் (tap dancing) கத்துக்குறதுக்காக அங்கிருந்த ஒரு டான்ஸ் ஸ்கூல்ல என்னை சேர்த்து விட்டாங்க. எனக்கு பாலே டான்ஸ் ஆடுற திறமையும் இருக்குனு என் டீச்சர் தெரிஞ்சிக்கிட்டாங்க. அதனால அவங்க அதையும் சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கு 15 வயசு இருந்தப்போ, லண்டன்ல இருக்கிற புகழ்பெற்ற ராயல் பாலே ஸ்கூல்ல (Royal Ballet School) சேர வாய்ப்பு கிடைச்சுது. அங்கதான் நான் க்வென்-ஐ பார்த்தேன். நாங்க ரெண்டு பேரும்தான் எப்போவும் ஜோடியா டான்ஸ் ஆடுவோம்.

க்வென்: நான் 1944-ல லண்டன்ல பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு கடவுள் மேல ரொம்ப நம்பிக்கை இருந்தது. ஆனா, பைபிளை படிச்சு புரிஞ்சிக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எனக்கு 5 வயசு இருந்தப்போ நான் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். ஆறு வருஷத்துக்கு அப்புறம், ஒரு பெரிய டான்ஸ் போட்டி நடந்தது. பிரிட்டன்ல இருக்கிற எல்லா இடங்கள்ல இருந்தும் வந்து கலந்துக்கிட்டாங்க. அந்த போட்டியில நான் ஜெயிச்சதுனால ராயல் பாலே ஸ்கூலோட ஜுனியர் பிரிவுல சேர வாய்ப்பு கிடைச்சுது. லண்டன்ல இருந்து கொஞ்சம் தூரத்துல இருக்கிற ரிச்மண்ட் பார்க் (Richmond Park) என்ற இடத்துல வைட் லாட்ஜ் (White Lodge) என்ற ஒரு பெரிய மாளிகையில இந்த ஸ்கூல் நடந்தது. நான் ரொம்ப பிரபலமான நடன ஆசிரியர்கள்கிட்ட பாலே நடனம் கத்துக்கிட்டேன். அங்கதான் என் பள்ளிப் படிப்பையும் முடிச்சேன். எனக்கு 16 வயசு ஆனப்போ, ராயல் பாலே ஸ்கூலோட சீனியர் பிரிவுல சேர்ந்தேன். இது லண்டன்லயே இருந்தது. அங்கதான் நான் டேவிட்-ஐ பார்த்தேன். அங்க சேர்ந்த சில மாசத்திலேயே, நாங்க ரெண்டு பேரும் ராயல் ஓப்ரா ஹவுஸ்ல (Royal Opera House) பாலே நடனம் ஆட ஆரம்பிச்சோம்.

பாலே நடனக் கலைஞர்களா நாங்க உலகம் முழுதும் சுத்துனோம்

டேவிட்: க்வென் சொன்ன மாதிரியே, நாங்க புகழ்பெற்ற பாலே நடன மேடைகள்ல டான்ஸ் ஆடுனோம். இங்கிலிஷ் நேஷனல் பாலே கம்பெனிக்காகவும் டான்ஸ் ஆடுனோம். ராயல் பாலேல இருந்த நடன அமைப்பாளர் ஒருத்தர் (Choreographer) ஜெர்மனில ஒரு சர்வதேச பாலே நடன கம்பெனிய ஆரம்பிச்சார். எங்க ரெண்டு பேரையும் அவங்க கம்பெனிக்காக டான்ஸ் ஆட தேர்ந்தெடுத்தார். அதனால, நாங்க உலகம் முழுதும் போய் பல இடங்கள்ல பாலே டான்ஸ் ஆடுனோம். மார்கோ ஃபான்டெய்ன் (Margot Fonteyn), ருடால்ஃப் நூரெவ் (Rudolf Nureyev) போன்ற பிரபலங்களோடு நாங்க டான்ஸ் ஆடுனோம். இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப பெருமையா இருந்தது. டான்ஸ்காகவே எங்க வாழ்க்கைய அர்ப்பணிச்சோம்.

க்வென்: டான்ஸ்தான் என்னோட உயிர் மூச்சா இருந்தது. டேவிட்டும் நானும் புகழின் உச்சத்த தொடணும்னு ஆசைப்பட்டோம். ரசிகர்கள் கை தட்டுறது... அவங்க என்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்குறது... எனக்கு பூங்கொத்து கொடுக்கிறது... இது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. மத்த நடன கலைஞர்களை மாதிரியே நானும் அதிர்ஷ்டத்த நம்புனேன். நடன உலகத்துல புகைபிடிக்கிறது, குடிக்கிறது, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்றது எல்லாம் சகஜமா நடந்துட்டு இருந்தது.

எங்க வாழ்க்கையில் நடந்த பெரிய மாற்றம்

எங்க திருமண நாள் அன்று

டேவிட்: டான்ஸ்காக பல வருஷம் ஒவ்வொரு ஊரா சுத்திக்கிட்டு இருந்ததுனால அந்த வாழ்க்கையே எனக்கு சலிச்சுப்போச்சு. சின்ன வயசுல பண்ணைய சுத்தியே என் வாழ்க்கை இருந்ததுனால கிராமத்துக்கு போய் ஒரு எளிமையான வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டேன். அதனால 1967-ல, என்னோட டான்ஸ் வாழ்க்கைய விட்டுட்டு எங்க அப்பா வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு பெரிய பண்ணையில வேலைக்கு சேர்ந்தேன். அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினேன். அதே சமயம், க்வென் அவளோட நடன வாழ்க்கையில ஒரு ஸோலோ டான்ஸரா (solo dancer) முன்னேறி இருந்தா. அவளுக்கு நான் ஃபோன் பண்ணி, ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா’னு கேட்டேன். புகழின் உச்சத்துக்கு போயிட்டு இருந்த க்வென்னுக்கு, அந்த சமயத்துல ஒரு முடிவு எடுக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்தது. கிராம வாழ்க்கைய பத்தி அவளுக்கு ஒன்னுமே தெரியாது. இருந்தாலும், என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா. நாங்க ரெண்டு பேரும் எங்க வாழ்க்கைய கிராமத்துல ஆரம்பிச்சோம்.

க்வென்: கிராமத்துல வாழ்றது எனக்கு கஷ்டமாதான் இருந்தது. பண்ணையில பால் கறக்குறது, பன்றிகளுக்கும் கோழிகளுக்கும் தீவனம் போடுறது எல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருந்தது. கால்நடை பராமரிப்புல இருக்கிற புதிய விஷயங்களை படிக்கிறதுக்காக டேவிட் ஒரு கல்லூரியில சேர்ந்தார். அது ஒன்பது மாத படிப்பு. அவர் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வர ராத்திரி ஆகிடும். அதுவரைக்கும் நான் தனியாதான் இருப்பேன். அதுவும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்புறம், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவ பேரு கில்லி (Gilly). கார் ஓட்ட கத்துக்கணும்னு டேவிட் என்கிட்ட சொல்லிட்டு இருந்ததுனால நானும் கத்துக்கிட்டேன். ஒரு நாள் பக்கத்துல இருந்த ஊருக்கு போயிருந்தப்போ, கேல் (Gael) என்ற பெண்ணை பார்த்தேன். அவங்களை எனக்கு ஏற்கெனவே தெரியும். ஏன்னா, நாங்க இருந்த இடத்துல, கேல் ஒரு கடையில வேலை செஞ்சிட்டு இருந்தாங்க.

எங்க திருமண நாளும், பண்ணையில நாங்க வேலை செஞ்சதும்

கேல் அவங்க வீட்டுக்கு என்னை கூப்பிட்டாங்க. அங்க போனப்போ அவங்களோட கல்யாண ஃபோட்டோவ (photo) காட்டுனாங்க. அதுல ராஜ்ய மன்றத்துக்கு முன்னாடி நின்னு எடுத்த ஒரு ஃபோட்டோவும் இருந்தது. ‘அது என்ன சர்ச்?’னு கேட்டேன். அதுக்கு அவங்க, ‘நானும் என்னோட கணவரும் ஒரு யெகோவாவின் சாட்சி’னு சொன்னாங்க. அதை கேட்டதும் எனக்கு ஒரே சந்தோஷம். ஏன்னா, என்னோட அத்தையும் ஒரு யெகோவாவின் சாட்சியா இருந்தாங்க. அவங்க ஒரு யெகோவாவின் சாட்சியா இருந்தது எங்க அப்பாவுக்கு பிடிக்கவே இல்ல. அவங்க மேல அவருக்கு பயங்கர கோபம். ஒரு சமயம், அவங்களோட புத்தகத்த எல்லாம் தூக்கி குப்பைத் தொட்டில வீசிட்டார். என்னோட அத்தை ரொம்ப பாசமானவங்க. அதே சமயம், என்னோட அப்பாவும் ரொம்ப பாசமானவர். ஆனா, என்னோட அத்தைகிட்ட மட்டும் ஏன் அப்படி நடந்துக்கிட்டார்னு யோசிச்சிருக்கேன்.

கடைசியில, என் அத்தையோட மத நம்பிக்கை எப்படி சர்ச்சுகளோட நம்பிக்கைகள்ல இருந்து வித்தியாசமா இருந்துச்சுனு தெரிஞ்சிக்கிட்டேன். பைபிள் உண்மையிலயே என்ன சொல்லுதுனு கேல் பைபிள்ல இருந்தே காட்டுனாங்க. திரித்துவ கோட்பாடு, ஆத்துமா அழியாதுங்கிற விஷயம் எல்லாம் பைபிளுக்கு எதிரா இருக்குனு தெரிஞ்சிக்கிட்டப்போ எனக்கு ஆச்சரியமா இருந்தது. (பிர. 9:5, 10; யோவா. 14:28; 17:3) அதுமட்டுமில்ல, அப்பதான் முதல் தடவையா கடவுளோட பேர் யெகோவானு பைபிள்ல பார்த்தேன்.—யாத். 6:3.

டேவிட்: பைபிள்ல இருந்து தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை, க்வென் என்கிட்ட சொன்னா. நான் சின்ன வயசுல இருந்தப்போ, என்னோட அப்பா பைபிளை படிக்கணும்னு என்கிட்ட சொல்லி இருந்தார். அதனால, நாங்க ரெண்டு பேரும் பைபிள் படிக்க ஆரம்பிச்சோம். கேலும் அவங்க கணவர் டெரிக்கும் எங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துனாங்க. ஆறு மாசத்துக்கு அப்புறம், எங்களுக்கு சொந்தமான பண்ணைய வாடகைக்கு விட்டுட்டு நாங்க ஷ்ராப்ஷையர்ல இருந்த ஆஸ்வெஸ்ட்ரி (Oswestry) என்ற இன்னொரு இடத்துக்கு மாறிப்போனோம். அங்க, டீர்டிரே (Deirdre) என்ற ஒரு சகோதரி எங்களுக்கு பைபிள் படிப்ப தொடர்ந்து நடத்துனாங்க. நாங்க ஆடுமாடுகள கவனிச்சிக்கிறதுல ரொம்ப பிஸியா இருந்தோம். அதனால, ஆரம்பத்துல நாங்க மெல்ல மெல்லதான் முன்னேற்றம் செஞ்சோம். இருந்தாலும், பைபிள் விஷயங்கள் மனசுல ஆழமா பதிய ஆரம்பிச்சுது.

க்வென்: நான் முன்னேற்றம் செய்றதுக்கு பெரிய தடையா இருந்ததே மூடநம்பிக்கைதான். ஆனா, அதிர்ஷ்டத்தை நம்புறவங்கள பத்தி யெகோவா என்ன நினைக்கிறார்னு ஏசாயா 65:11-ல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். நான் யெகோவாகிட்ட தொடர்ந்து ஜெபம் செஞ்சேன். என்கிட்ட இருந்த அதிர்ஷ்டப் பொருட்களையும் தாயத்துகளையும் ஒழிச்சிக்கட்டுனேன். ஆனா, இந்த மாற்றம் எல்லாம் செய்றதுக்கு கொஞ்ச காலம் எடுத்தது. “தன்னைத்தானே உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்”னு பைபிள் சொல்லுது. (மத். 23:12) இதுல இருந்து, நான் எப்படி இருக்கணும்னு யெகோவா எதிர்பார்க்கிறார்னு புரிஞ்சிக்கிட்டேன். அதுமட்டும் இல்ல, தன்னோட மகனையே நமக்காக தியாகம் செஞ்ச அன்பான கடவுளதான் வணங்கணும்னு முடிவு எடுத்தேன். இந்த சமயத்துல எங்களுக்கு ரெண்டாவது பெண் குழந்தை பிறந்தது. நாங்க குடும்பமா பூஞ்சோலை பூமியில வாழ்ற வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சிக்கிட்டப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

டேவிட்: தானியேல் புத்தகத்துலயும் மத்தேயு 24-ம் அதிகாரத்துலயும் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் எல்லாம் எப்படி நிறைவேறுதுனு தெரிஞ்சிக்கிட்டப்போ இதுதான் உண்மைனு உறுதியா நம்புனேன். இந்த உலகத்துல, யெகோவாகிட்ட எனக்கு இருக்கிற பந்தம்தான் ரொம்ப முக்கியமானது; அதுக்கு ஈடிணை வேற எதுவுமே இல்லனு தெரிஞ்சிக்கிட்டேன். அதனால, ஒரு பெரிய ஆளா ஆகணுங்கிற ஆசைய எல்லாம் போகப் போக விட்டுட்டேன். என்னோட மனைவியும் மகள்களும் எனக்கு ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன். பிலிப்பியர் 2:4-ஐ படிச்சதுக்கு அப்புறம், சுயநலமா இருக்கக் கூடாதுனு தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு பெரிய பண்ணைய வாங்கணும்னு ஆசைப்படுறதுக்கு பதிலா யெகோவாவோட சேவைக்குதான் முதலிடம் கொடுக்கணும்னு தீர்மானிச்சேன். நான் சிகரெட் பிடிக்கிறதையும் விட்டுட்டேன். சனிக்கிழமை சாயங்காலம் நடந்த சபைக் கூட்டங்களுக்கு போறதுக்கு எங்க வீட்ல இருந்து 10 கிலோமீட்டர் பயணம் செய்யணும். ஆனா, அந்த நேரத்துலதான் நாங்க பால் கறக்க வேண்டியிருந்தது. அதனால சபை கூட்டங்களுக்கு போறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, க்வென் எனக்கு உதவியா இருந்ததுனால எங்களால கூட்டத்துக்கு போக முடிஞ்சுது. நாங்க சபை கூட்டங்களையும் ஊழியத்தையும் தவறவிட்டதே இல்ல. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலயும் பால் கறந்ததுக்கு அப்புறம் எங்க பிள்ளைங்களை தவறாம ஊழியத்துக்கு கூட்டிட்டு போயிடுவோம்.

நாங்க பைபிள் படிச்சு, மாற்றங்கள் செஞ்சது எங்க சொந்தக்காரங்களுக்கு கொஞ்சம்கூட பிடிக்கல. க்வென்னோட அப்பா அவகிட்ட 6 வருஷம் பேசல. என்னோட அப்பா-அம்மாவும், நாங்க யெகோவாவின் சாட்சிகளோட பழகுறத தடுக்க ரொம்ப முயற்சி செஞ்சாங்க.

க்வென்: இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் இருந்தாலும் யெகோவா தூணா இருந்து எங்கள தாங்குனார். ஆஸ்வெஸ்ட்ரி சபையில இருந்த சகோதர சகோதரிகள் ஒரு குடும்பம் போல எங்ககிட்ட பழகுனாங்க. பிரச்சினைகளை சமாளிக்க எங்களுக்கு அவங்க பக்கபலமா இருந்தாங்க. (லூக். 18:29, 30) நாங்க 1972-ல ஞானஸ்நானம் எடுத்தோம். என்னால முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் நற்செய்திய சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அதனால பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன்.

ஆசீர்வாதத்தை அள்ளித்தந்த வேலை

டேவிட்: பண்ணையில நான் கடினமா வேலை செய்ய வேண்டியிருந்தது. யெகோவாவை வணங்குற விஷயத்துல, எங்களால முடிஞ்சளவு பிள்ளைங்களுக்கு நல்ல முன்மாதிரியா இருந்தோம். கொஞ்ச காலத்துல, பண்ணைய நடத்துறதுக்கு கொடுத்த சலுகையை அரசாங்கம் நிறுத்திட்டாங்க. அதனால, நாங்க பண்ணைய வித்துட்டோம். அப்போ எங்களுக்கு வீடும் இல்லாம, வேலையும் இல்லாம போயிடுச்சு. எங்களோட மூணாவது குழந்தைக்கு அப்போ ஒரு வயசுதான். திக்குத் தெரியாம இருந்த சமயத்துல நாங்க யெகோவாகிட்ட உதவி கேட்டு ஜெபம் செஞ்சோம். எங்களுக்கு டான்ஸ் நல்லா தெரியுங்கிறதுனால, டான்ஸ் சொல்லிக்கொடுத்து வாழ்க்கைய நடத்தலாம்னு முடிவு எடுத்தோம். யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்குறதுக்கு நாங்க எடுத்த முயற்சிகள அவர் ஆசீர்வதிச்சார். எங்களோட மூணு பொண்ணுங்களும் பள்ளி படிப்ப முடிச்ச உடனேயே பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பிச்சாங்க. க்வென்னும் பயனியரா இருந்ததுனால, பிள்ளைங்களோட சேர்ந்து தினமும் ஊழியத்துக்கு போனா.

எங்களோட மூத்த பொண்ணு கில்லிக்கும் ரெண்டாவது பொண்ணு டென்னிஸுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், டான்ஸ் சொல்லிக்கொடுக்கிற வேலைய நிறுத்திட்டோம். தேவை அதிகம் உள்ள இடத்துக்கு போய் ஊழியம் செய்றதுக்காக, கிளை அலுவலகத்துக்கு எழுதி கேட்டோம். இங்கிலாந்து நாட்டோட தென் கிழக்கு பகுதியில போய் ஊழியம் செய்ய சொன்னாங்க. அதனால, எங்களோட கடைசி மகள் டெபியையும் கூட்டிட்டு நாங்க அங்க போனோம். அங்க போன உடனேயே நானும் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். 5 வருஷத்துக்கு அப்புறம், இங்கிலாந்தோட வடக்கு பகுதியில ஊழியம் செய்ய சொன்னாங்க. டெபிக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், சர்வதேச கட்டுமான வேலையில நாங்க 10 வருஷம் சேவை செஞ்சோம். ஜிம்பாப்வே, மால்டோவா, ஹங்கேரி, கோட் டீவோர்ல எல்லாம் கட்டுமான வேலை செஞ்சோம். அப்புறம், லண்டன் பெத்தேல்ல கட்டுமான வேலை செய்றதுக்காக திரும்பவும் இங்கிலாந்துக்கு வந்தோம். எனக்கு பண்ணை வேலையில அனுபவம் இருந்ததால, பெத்தேல்ல இருந்த பண்ணைய பார்த்துக்க சொன்னாங்க. இப்போ நாங்க ரெண்டு பேரும் வட மேற்கு இங்கிலாந்துல பயனியர் ஊழியம் செய்றோம்.

சர்வதேச கட்டுமான வேலை எங்களுக்கு அளவில்லா சந்தோஷத்த கொடுத்தது

க்வென்: ஆரம்பத்துல, நாங்க ரெண்டு பேரும் எங்க வாழ்க்கையை பாலே டான்ஸ்க்கு அர்ப்பணிச்சோம். அதுல சந்தோஷம் கிடைச்சாலும் அந்த சந்தோஷம் நிரந்தரமானதா இல்ல. ஆனா, எங்க வாழ்க்கைய யெகோவாவுக்கு அர்ப்பணிச்சதுனால கிடைக்கிற சந்தோஷம் நிரந்தரமானதா இருக்கு. இதுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடுனோம். ஆனா இப்போ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஊழியம் செய்றோம். நடனமாடுறதுக்காக இல்ல, ஊழியம் செய்றதுக்காகதான் இப்ப எங்க கால்களை பயன்படுத்துறோம். உயிர் காக்கும் நற்செய்திய மக்கள்கிட்ட சொல்றதுல கிடைக்கிற சந்தோஷத்துக்கு எல்லையே இல்ல. இதனால கிடைக்கிற ‘சிபாரிசுக் கடிதத்த’, இந்த உலகம் கொடுக்கிற எந்தப் பேர் புகழோடையும் ஒப்பிட முடியாது. (2 கொ. 3:1, 2) யெகோவாவை பத்தி நாங்க தெரிஞ்சிக்காம இருந்திருந்தா எங்க நடன நிகழ்ச்சிகளோட பழைய நினைவுகளும் நாங்க எடுத்துக்கிட்ட ஃபோட்டோக்களும்தான் எங்க வாழ்க்கையில மிச்சம் இருந்திருக்கும்.

டேவிட்: யெகோவாவோட சேவைக்கு முதலிடம் கொடுத்ததுனால, எங்க வாழ்க்கையே மாறியிருக்கு. நான் ஒரு நல்ல கணவனா, அப்பாவா இருக்க இது உதவியிருக்கு. மிரியாம், தாவீது எல்லாம் சந்தோஷத்துல நடனமாடுனாங்கனு பைபிள்ல படிக்கிறோம். அவங்கள மாதிரியே நாங்களும் புதிய உலகத்துல, எல்லாரோடும் சேர்ந்து சந்தோஷமா நடனமாடுறதுக்காக ஏங்கிட்டு இருக்கோம்.—யாத். 15:20; 2 சா. 6:14.