வாழ்க்கை சரிதை
‘சாதகமான காலத்திலும் பாதகமான காலத்திலும்’ பெற்ற ஆசீர்வாதங்கள்
மார்ச் மாசம், 1930-வது வருஷம், மலாவி நாட்டுல இருக்கிற நம்கூம்பா கிராமத்துல நான் பிறந்தேன். 12 வயசுல யெகோவாவுக்கு என்னையே அர்ப்பணிச்சு, ஒரு அழகான ஆத்துல ஞானஸ்நானம் எடுத்தேன். தீமோத்தேயுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்ன மாதிரியே, ‘கடவுளுடைய வார்த்தையை சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி அவசர உணர்வுடன் பிரசங்கிக்க’ இந்த 70 வருஷமா முயற்சி செஞ்சுட்டு வர்றேன்.—2 தீ. 4:2.
1948-ல, நேதன் எச். நாரும் மில்டன் ஜி. ஹென்ஷெலும் மலாவிக்கு வந்தாங்க. அவங்க கொடுத்த பேச்சைக் கேட்டதுக்கு அப்புறம் நானும் யெகோவாவுக்கு முழுநேரமா ஊழியம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு அருமையான சகோதரியை சந்திச்சேன்; அவங்க பேர் லிடாசி. அவங்களோட ஆசையும் யெகோவாவுக்கு முழுநேரமா ஊழியம் செய்யணுங்கறதுதான். 1950-வது வருஷம் நாங்க கல்யாணம் செஞ்சுகிட்டோம். மூணு வருஷத்துல எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. அதனால எங்களுக்கு பொறுப்பு அதிகமாயிடுச்சு. ஆனாலும் ஒருத்தராவது முழுநேர ஊழியம் செய்யணும்னு முடிவு செஞ்சோம். அதனால நான் ஒரு ஒழுங்கான பயனியரா ஆனேன். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம், நான் விசேஷ பயனியரா ஆனேன்.
சீக்கிரத்திலேயே, வட்டார கண்காணியா சேவை செய்ற வாய்ப்பு எனக்கு கிடைச்சுது. என் மனைவி எனக்கு ரொம்ப உதவியா இருந்ததுனால, குடும்பத்தையும் கவனிச்சிட்டு வட்டார கண்காணியாவும் சேவை செய்ய முடிஞ்சுது. * (அடிக்குறிப்பை பாருங்க.) இருந்தாலும், நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து யெகோவாவுக்கு முழுநேரமா ஊழியம் செய்யணும்னு ஆசைப்பட்டோம். அதுக்காக நல்லா யோசிச்சு திட்டம் போட்டோம்; எங்க பிள்ளைகளும் ஒத்துழைச்சாங்க. அதனால 1960-வது வருஷம் என் மனைவியும் முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்க முடிஞ்சுது.
1962-ல, “தைரியமான ஊழியர்கள்”ங்கற மாவட்ட மாநாடு நடந்தது. ஒரு வருஷத்துக்கு அப்புறம், மலாவியில பிளான்டையர் நகரத்துக்குப் பக்கத்துல ஒரு விசேஷ மாநாடு நடந்தது. அதுக்கு சகோதரர் ஹென்ஷெல் வந்திருந்தார். 10,000-க்கும் அதிகமானவங்க அந்த மாநாட்டுல கலந்துகிட்டாங்க. கஷ்ட காலத்தை சமாளிக்க மலாவியில இருந்த சகோதர சகோதரிகளை அந்த மாநாடு தயார்ப்படுத்துச்சு; அவங்களுக்கு தேவையான பலத்தை கொடுத்துச்சு.
கஷ்ட காலம் வந்தது
எந்த அரசியல் விவகாரத்திலயும் கலந்துக்காம இருந்ததுனால 1964-ல யெகோவாவின் சாட்சிகளுக்கு பயங்கரமா எதிர்ப்பு வந்தது. 100-க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்களையும் 1,000-க்கும் அதிகமான சகோதரர்களோட வீடுகளையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க. 1967-ல நானும் என் மனைவியும் வட்டார ஊழியத்தை
நிறுத்த வேண்டியிருந்தது. ஏன்னா, அந்த வருஷத்துல யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை அரசாங்க அதிகாரிங்க தடை செஞ்சு, கிளை அலுவலகத்தையும் மூடிட்டாங்க; மிஷனரிகளை நாட்டைவிட்டு அனுப்பிட்டாங்க; என்னையும் என் மனைவியையும் இன்னும் நிறைய சாட்சிகளையும் ஜெயில்ல போட்டாங்க. எங்களை விடுதலை செஞ்சதுக்கு அப்புறம், மறுபடியும் வட்டார ஊழியத்தை ஆரம்பிச்சோம்; ஆனா அதை ஜாக்கிரதையா செஞ்சோம்.1972-வது வருஷம், அக்டோபர் மாசத்துல ஒருநாள், ஒரு பெரிய கும்பல் எங்க வீட்டை தேடி வந்திட்டு இருந்துச்சு. அவங்க ‘மலாவி வாலிபர் சங்கம்’னு சொல்லப்பட்ட ஒரு தீவிரவாத அரசியல் கட்சியை சேர்ந்தவங்க. அவங்கள்ல ஒருத்தன், முன்னாடியே என்கிட்ட ஓடிவந்து என்னை ஒளிஞ்சுக்க சொன்னான். ஏன்னா, அவங்க என்னை கொலை செய்ய திட்டம் போட்டிருந்தாங்க. உடனே, என் மனைவியையும் பிள்ளைகளையும் பக்கத்துல இருந்த வாழை மரங்களுக்குள்ள போய் ஒளிஞ்சுக்க சொன்னேன். அப்புறம் நான் போய் ஒரு பெரிய மாங்கா மரத்தில ஏறிகிட்டேன். அந்த கும்பல் வந்து எங்க வீட்டையும் எல்லா சாமான்களையும் அடிச்சு நொறுக்குனதை அங்கிருந்தே பார்த்திட்டு இருந்தேன்.
எதிர்ப்பு அதிகமாயிட்டே இருந்ததுனால ஆயிரக்கணக்கான சாட்சிகள் மலாவியைவிட்டு போயிட்டாங்க. 1974-வது வருஷம், ஜூன் மாசம் வரைக்கும் நானும் என் மனைவியும் மொசாம்பிக்கில் இருந்த அகதிகள் முகாமில தங்கியிருந்தோம். அப்புறம், அந்த நாட்டுல இருந்த ‘டோம்வே’ங்கற ஒரு சின்ன ஊருக்கு விசேஷ பயனியரா அனுப்பப்பட்டோம். 1975 வரைக்கும் பயனியர் ஊழியம் செஞ்சோம். அதுக்கு அப்புறம் மொசாம்பிக் அரசாங்கம் எங்களை நாட்டைவிட்டு அனுப்பிட்டாங்க. நாங்க மலாவிக்கு திரும்பி வந்தோம். அங்கே எதிர்ப்பு குறையவே இல்ல.
நாங்க திரும்பி வந்ததுக்கு அப்புறம், மலாவியோட தலைநகரமான ‘லிலாங்வே’க்கு வட்டார கண்காணியா அனுப்பப்பட்டேன். எவ்வளவோ எதிர்ப்பும் பிரச்சினையும் வந்தாலும், அந்த வட்டாரங்கள்ல நிறைய சபைகள் புதுசு புதுசா உருவாகிட்டே இருந்தது.
யெகோவா எங்களை காப்பாத்துனார்
ஒருநாள், நாங்க ஒரு கிராமத்துக்கு போனோம். அங்கே ஒரு அரசியல் கூட்டம் நடந்துட்டு இருந்தது. அங்கிருந்த சிலர் நாங்க யெகோவாவின் சாட்சிகள்னு கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால ‘மலாவியின் இளம் முன்னோடிகள்’னு சொல்லப்பட்ட ஒரு அரசியல் கும்பலோட எங்களை உட்கார வைச்சாங்க. எப்படியாவது எங்களை காப்பாத்த சொல்லி யெகோவாகிட்ட கெஞ்சுனோம். கூட்டம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவங்க எங்களை அடிக்க ஆரம்பிச்சாங்க. திடீர்னு ஒரு வயசான அம்மா ஓடிவந்து, “தயவுசெஞ்சு இவங்களை விட்டுடுங்க! இவன் என் தம்பி பையன். இவனை போக விட்டுடுங்க!”ன்னு கத்துனாங்க. அந்த கூட்டத்த நடத்துனவரு, “இவங்களை விட்டுடுங்க!”ன்னு சொன்னார். அந்த அம்மா ஏன் அப்படி சொன்னாங்கன்னு எங்களுக்குப் புரியவே இல்லை, ஏன்னா அவங்க எங்களோட சொந்தக்காரங்களே இல்ல. யெகோவாதான் எங்க ஜெபத்தை கேட்டு எங்களை காப்பாத்துனார்.
1981-ல நாங்க மறுபடியும் அந்த கும்பல் கண்ணுல மாட்டுனோம். ஆனா எப்படியோ ஒரு மூப்பரோட வீட்டுக்கு தப்பிச்சு ஓடிட்டோம். அந்த கும்பல் எங்களோட சைக்கிள், பெட்டி-படுக்கை, புத்தகங்கள், வட்டாரத்தில இருந்த சகோதரர்களை பத்திய பேப்பர்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாங்க. அந்த பேப்பர்களை அவங்க
பார்த்தா என்னாகுமோன்னு கவலைப்பட்டோம். ஆனா அவங்க அதை பார்த்தப்போ, நான் ஒரு பெரிய அரசாங்க அதிகாரின்னு நினைச்சு பயந்துபோயிட்டாங்க. ஏன்னா, மலாவி நாட்டோட எல்லா பகுதிகள்ல இருந்தும் சகோதரங்க எனக்கு அனுப்பின கடிதங்கள் அந்த பேப்பர்களோட இருந்தது. உடனே அவங்க எல்லா பேப்பர்களையும் அங்கிருந்த மூப்பர்கள்கிட்ட கொடுத்திட்டு போயிட்டாங்க.இன்னொரு சமயம், நாங்க படகுல போயிட்டு இருந்தோம். அந்த படகோட சொந்தக்காரர் ஒரு அரசியல் தலைவர். அவர் எங்க எல்லார் கிட்டேயும் அரசியல் கட்சி அட்டைகள் * (அடிக்குறிப்பைப் பாருங்க) இருக்கான்னு அவர் பார்க்க ஆரம்பிச்சார். எங்க கிட்ட வர்றதுக்குள்ள, ரொம்ப நாளா போலீஸ் தேடிட்டு இருந்த ஒரு திருடன் அவரோட கண்ணுல மாட்டுனான். அந்த பரபரப்புல அவர் கட்சி அட்டைகளை பார்க்கறத விட்டுட்டார். இந்த சமயத்திலயும் யெகோவாதான் எங்களை காப்பாத்துனார்.
என்னை ஜெயில்ல போட்டாங்க
1984-வது வருஷம், பிப்ரவரி மாசம், ஜாம்பியா கிளை அலுவலகத்துக்கு சில அறிக்கைகளை கொடுத்து அனுப்புறதுக்காக லிலாங்வே நகரத்துக்கு போயிட்டு இருந்தேன். ஒரு போலீஸ்காரர் என்னை நிறுத்தி, என் பையில என்ன இருக்குன்னு பார்த்தார். அதுல நம்மோட புத்தகங்களை பார்த்ததும், என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்திட்டு போய் அடிக்க ஆரம்பிச்சார். அப்புறம் கயிறால என்னைக் கட்டி, திருடங்க இருந்த ஜெயில்ல போட்டார்.
அடுத்த நாள், போலீஸ் அதிகாரி என்னை இன்னொரு ரூமுக்கு கூட்டிட்டு போய் ஒரு பேப்பர்ல கையெழுத்து போட சொன்னார்; அதுல, “ட்ராஃபிம் ஆர். நசோம்பா ஆகிய நான் இனிமேலும் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை; அதனால் என்னை விடுதலை செய்யுங்கள்”னு எழுதியிருந்தது. நான் கையெழுத்து போட சம்மதிக்கல. “என்னை கட்டிப் போட்டாலும் சரி கொன்னு போட்டாலும் சரி நான் யெகோவாவின் சாட்சியாத்தான் இருப்பேன்”னு சொன்னேன். அதைக் கேட்டதும் அவருக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்தது; டேபிள்மேல ஓங்கி அடிச்சாரு. சத்தம் அவ்வளவு பயங்கரமா கேட்டதுனால பக்கத்து ரூமுல இருந்த போலீஸ்காரர் என்னாச்சோ ஏதாச்சோன்னு ஓடி வந்தார். அவர்கிட்ட அந்த அதிகாரி, “இவன் இனிமேல் ஊழியம் செய்ய போறது இல்லன்னு கையெழுத்து போட்டு கொடுக்க மாட்டேங்கறான். அதனால இவன் ஒரு யெகோவாவின் சாட்சின்னு எழுதி கையெழுத்து போடட்டும். இவனை லிலாங்வே ஸ்டேஷனுக்கு அனுப்பிடலாம்”னு சொன்னார். நடந்த விஷயங்கள் எதுவுமே என் மனைவிக்கு தெரியாது. நான் எங்கே இருந்தேன்னுகூட நாலு நாளுக்கு அப்புறம்தான் அவளுக்கு தெரியவந்தது.
லிலாங்வே போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த போலீஸ்காரங்க என்னை அன்பா நடத்துனாங்க. அங்கிருந்த போலீஸ் அதிகாரி எனக்கு ஒரு தட்டுல சாப்பாடு கொடுத்துட்டு, “இந்த ஜெயில்ல இருக்கிற எல்லாரும் திருட்டுப் பசங்க. நீ மட்டும்தான் பைபிளை பத்தி பேசுனதுக்காக இங்கே இருக்கே. அதனாலதான் உனக்கு மட்டும் இதை கொடுக்கிறேன்”னு சொன்னார். அப்புறம் என்னை காச்சேரே ஜெயிலுக்கு அனுப்புனார். அங்கே நான் அஞ்சு மாசம் இருந்தேன்.
என்னை அந்த ஜெயில்ல போட்டதுக்காக அங்கிருந்த வார்டன் சந்தோஷப்பட்டார். அந்த ஜெயில்ல என்னை “பாஸ்டரா” ஆக்குறதுக்கு ஆசைப்பட்டார். அதனால,
ஏற்கெனவே அங்க பாஸ்டரா இருந்தவர்கிட்ட, “நீ உன்னோட சர்ச்சுல திருடுனதுனாலதான் இங்க வந்திருக்கே, அதனால இனிமேல் நீ இங்கே பைபிளை பத்தி சொல்லிக் கொடுக்க கூடாது”ன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் ஒவ்வொரு வாரமும் கைதிகளோட கூட்டத்துல நான்தான் பைபிளை கத்துக்கொடுத்தேன்.ஆனா, போகப்போக எனக்கு நிறைய பிரச்சினை வந்தது. ஜெயில் அதிகாரிங்க என்னை கூப்பிட்டு, மலாவியில எத்தனை சாட்சிகள் இருக்காங்கன்னு விசாரிச்சாங்க. அவங்க எதிர்பார்த்த பதிலை நான் கொடுக்காததுனால, நான் மயங்கி விழறவரைக்கும் என்னை போட்டு அடிச்சாங்க. இன்னொரு சமயம், நம்மோட தலைமை அலுவலகம் எங்கே இருக்குன்னு கேட்டாங்க. அதுக்கு நான், “இந்த கேள்விக்கு பதில் சொல்றது கஷ்டமே இல்ல. எங்களோட தலைமை அலுவலகத்தை பத்தி பைபிள்லேயே இருக்கு”ன்னு சொன்னேன். அவங்க ஆச்சரியத்தோட, “பைபிள்ல எங்கே இருக்கு?”ன்னு கேட்டாங்க.
“ஏசாயா 43:12-ல இருக்கு”ன்னு நான் சொன்னேன். அவங்க அந்த வசனத்தை எடுத்து கவனமா படிச்சு பார்த்தாங்க. அதுல, “நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”னு எழுதியிருந்தது. அதை மூணு தடவை திருப்பித் திருப்பி படிச்சுப் பார்த்தாங்க. அப்புறம் என்கிட்ட, “யெகோவாவின் சாட்சிகளோட தலைமை அலுவலகம் அமெரிக்காவுலதான இருக்கு, பைபிள்ல இருக்குன்னு எப்படி சொல்றே?”ன்னு கேட்டாங்க. அதுக்கு நான், “இந்த வசனம்தான் எங்க தலைமை அலுவலகத்தை பத்தி சொல்லுதுன்னு அமெரிக்காவுல இருக்கிற யெகோவாவின் சாட்சிகள்கூட நம்புறாங்க”ன்னு சொன்னேன். அவங்க எதிர்பார்த்த பதிலை நான் சொல்லாததுனால லிலாங்குவேக்கு வடக்குல இருந்த சாலேக்கா ஜெயிலுக்கு என்னை அனுப்பிட்டாங்க.
கஷ்ட காலத்தில்கூட ஆசீர்வாதங்கள் கிடைச்சுது
ஜூலை 1984-ல சாலேக்கா ஜெயிலுக்கு நான் போனப்போ, அங்கே ஏற்கெனவே 81 சாட்சிகள் இருந்தாங்க. அந்த ஜெயில்ல எக்கச்சக்கமான கைதிகள் இருந்ததுனால, ஒரே அறையில 300 பேர் கிட்டகிட்ட படுத்து தூங்க வேண்டியிருந்தது. கொஞ்ச நாளைக்கு அப்புறம், எல்லா சாட்சிகளும் சின்ன சின்ன கூட்டமா பிரிஞ்சு தினமும் ஒரு வசனத்தை பத்தி கலந்து பேச ஆரம்பிச்சோம். அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
அக்டோபர் 1984-ல எங்க எல்லாரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு போனாங்க. எங்களுக்கு ரெண்டு வருஷ சிறைத்தண்டனை கொடுத்தாங்க. இந்த தடவையும், சாட்சிகளா இல்லாத கைதிகளோட சேர்த்து அடைச்சு வைச்சாங்க. ஆனா ஜெயில் வார்டன் அங்கிருந்த எல்லார் கிட்டேயும், “யெகோவாவின் சாட்சிகள் சிகரெட் பிடிக்க மாட்டாங்க. அதனால காவலாளிகள் யாரும் சிகரெட் கேட்டு இவங்களை தொந்தரவு பண்ண கூடாது. சிகரெட்டை பத்த வைக்கிறதுக்காக அடுப்புக்கரியை எடுத்துட்டு வரச் சொல்ல கூடாது. இவங்க கடவுளோட ஜனங்க! இவங்க எந்த தப்பும் செஞ்சுட்டு இங்க வரலை. பைபிளை நம்புறதுனாலதான் இங்க வந்திருக்காங்க. அதனால இவங்க எல்லாருக்கும் தினமும் ரெண்டு வேளை சாப்பாடு கொடுக்கணும்”னு சொன்னார்.
நாங்க நல்ல விதமா நடந்துகிட்டதுனால நிறைய பலன் கிடைச்சுது. இருட்டு நேரத்துலயும் மழை பெய்யுற சமயத்திலயும் பொதுவா கைதிகளை வெளியில விட மாட்டாங்க. ஆனா, நாங்க தப்பிச்சு போக மாட்டோம்னு அவங்களுக்கு நம்பிக்கை இருந்ததுனால எங்களை எப்போ வேணாலும் வெளியில விட்டாங்க. ஒரு சமயம், நாங்க வயல்ல வேலை செஞ்சிட்டு இருந்தப்போ, ஒரு 1 பே. 2:12. * (அடிக்குறிப்பை பாருங்க.)
காவலாளிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. நாங்கதான் அவரை ஜெயிலுக்கு தூக்கிட்டு போனோம். நாங்க இந்த மாதிரி நல்ல விதமா நடந்துகிட்டதுனால, காவலாளிகள் நிறைய பேர் யெகோவாவை புகழ்ந்து பேசினாங்க.—மறுபடியும் நல்ல காலம் வந்தது
மே 11, 1985-ல நான் சாலேக்கா ஜெயில்ல இருந்து விடுதலையானேன். மறுபடியும் என் மனைவி பிள்ளைகளோட ஒண்ணுசேர்ந்தப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது. கஷ்ட காலத்திலயும் விசுவாசமா இருக்க உதவி செஞ்சதுக்காக இப்ப நாங்க யெகோவாவுக்கு நன்றி சொல்றோம். அப்போஸ்தலன் பவுலை மாதிரியே நாங்களும் இப்படி நினைக்கிறோம்: “சகோதரர்களே, . . . எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தைப் பற்றி நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறோம்; . . . பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது. சொல்லப்போனால், மரண தண்டனை விதிக்கப்பட்டதுபோல் உணர்ந்தோம். நாங்கள் எங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், இறந்தவர்களை உயிர்த்தெழுப்புகிற கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்காகத்தான் அப்படிப்பட்ட சோதனையை எதிர்ப்பட்டோம் போலிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையிலிருந்து அவர் எங்களைக் காப்பாற்றினார்.”—2 கொ. 1:8-10.
சில சமயத்துல, பிழைப்போங்கற நம்பிக்கையே எங்களுக்கு இல்ல. ஆனா யெகோவாவோட பேருக்கு எப்பவும் புகழ் சேர்க்கணும்னு ஆசைப்பட்டோம். அதனால, தைரியத்தையும் புத்தியையும் மனத்தாழ்மையையும் கேட்டு அவர்கிட்ட ஜெபம் செஞ்சிட்டே இருந்தோம்.
“சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி” எங்களோட சேவையை யெகோவா ஆசீர்வதிச்சார். இன்னைக்கு, லிலாங்குவேயில ஒரு புதிய கிளை அலுவலகத்தையும் மலாவியில 1,000-க்கும் அதிகமான புது ராஜ்ய மன்றங்களையும் பார்க்கறப்போ பூரிப்பா இருக்கு! யெகோவா தந்திருக்கிற இந்த ஆசீர்வாதங்களை நினைக்கறப்போ எனக்கும் என் மனைவிக்கும் பிரமிப்பா இருக்கு! எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கு! *—அடிக்குறிப்பை பாருங்க.
^ பாரா. 6 இப்போதெல்லாம், சின்ன பிள்ளைகள் இருக்கிற சகோதரர்களை வட்டார கண்காணியா தேர்ந்தெடுக்கறது இல்ல.
^ பாரா. 16 ஆளும் கட்சியை ஆதரிக்கிறதுக்கு அடையாளமா மலாவியில பயன்படுத்தப்பட்ட அட்டைகள்.
^ பாரா. 27 மலாவியில சாட்சிகள் பட்ட பாடுகளை பத்தி அதிகமா தெரிஞ்சுக்க, யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1999 (ஆங்கிலம்), பக்கங்கள் 171-223-ஐ படிச்சு பாருங்க.
^ பாரா. 31 இந்த கட்டுரை தயாரிக்கப்பட்ட சமயத்தில், 83 வயதான சகோதரர் நசோம்பா இறந்துவிட்டார்.