Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெட்டப்பட்ட மரம்-மறுபடியும் துளிர்க்குமா?

வெட்டப்பட்ட மரம்-மறுபடியும் துளிர்க்குமா?

லெபனானில் கம்பீரமாக நிற்கும் கேதுரு மரத்திற்கு முன்பு வளைந்து நெளிந்து நிற்கும் ஒலிவ மரம் (ஆலிவ் மரம்) அவ்வளவு அழகாக தெரியாதுதான். இருந்தாலும் மழை, வெயில், வறட்சி என்று எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த மரம் தாக்குப்பிடித்து நிற்கும். 1,000 வருடங்கள் பழமையான ஒலிவ மரங்கள் இன்றும்கூட அப்படியே இருக்கின்றன. ஒலிவ மரத்தின் வேர்கள் ஆழமாகப் பரந்து, விரிந்து இருப்பதால் அதை அடியோடு வெட்டினாலும் அது மறுபடியும் வளரும். வேர்கள் உயிரோடு இருந்தால் மட்டும் போதும், அந்த மரம் மறுபடியும் துளிர்க்கும்.

இறந்துபோனாலும் கடவுள் தன்னை மறுபடியும் உயிரோடு எழுப்புவார் என்று யோபு உறுதியாக நம்பினார். (யோபு 14:13-15) கடவுள்மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு ஒரு மரத்தைப் பற்றி சொன்னார். ஒருவேளை அவர் ஒலிவ மரத்தைப் பற்றி சொல்லியிருக்கலாம். “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும்” என்று அவர் சொன்னார். வெட்டப்பட்ட ஒரு ஒலிவ மரத்தின் அடிமரம் வறட்சியினால் காய்ந்து போயிருந்தாலும் மழை பெய்யும்போது அந்த அடிமரம் மறுபடியும் துளிர்க்கும். அது “இளமரம்போலக் கிளைவிடும்.”—யோபு 14:7-9.

வெட்டப்பட்ட ஒரு ஒலிவ மரம் மறுபடியும் எப்போது துளிர்க்கும் என்று அந்த மரத்தின் சொந்தக்காரர் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார். அதேபோல், தமக்கு உண்மையாக இருந்தவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்புவதற்கு யெகோவாவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். (மத். 22:31, 32; யோவா. 5:28, 29; அப். 24:15) இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! அவர்களை வரவேற்க நாமும் ஆவலாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம் இல்லையா?