Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாத்தானை உங்களால் ஜெயிக்க முடியும்!

சாத்தானை உங்களால் ஜெயிக்க முடியும்!

‘நீங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, [சாத்தானை] எதிர்த்து நில்லுங்கள்.’—1 பே. 5:9.

1. (அ) சாத்தானுடைய முக்கிய குறிக்கோள் என்ன? (ஆ) சாத்தானை ஜெயிக்க முடியும் என்று நாம் எப்படி சொல்லலாம்?

இன்று பூமியில் வாழும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் அவர்களுக்கு உதவி செய்கிற ‘வேறே ஆடுகளையும்’ சாத்தான் பயங்கர கோபத்தோடு தாக்கிக்கொண்டிருக்கிறான். (யோவா. 10:16) தனக்கு இன்னும் கொஞ்சம் காலம்தான் இருக்கிறது என்று சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அதனால், எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் விழுங்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 12-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், சாத்தானை நம்மால் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக முடியும்! “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று பைபிள் சொல்கிறது.—யாக். 4:7.

2, 3. (அ) தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான், ஏன்? (ஆ) சாத்தான் ஒரு நிஜமான ஆள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

2 சாத்தான் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களும் நிஜமான ஆட்கள் இல்லை என்று சொல்கிறார்கள். புத்தகங்களில், சினிமாக்களில், வீடியோ கேம்ஸ்களில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரமாகத்தான் அவனை பார்க்கிறார்கள். ‘பேய் இருக்கிறது’ என்று முட்டாள்கள்தான் நம்புவார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் முக்கியம் இல்லை. ஏனென்றால், ‘சாத்தான் இல்லை’ என்று நினைப்பவர்களைத்தான் அவனால் சுலபமாக ஏமாற்ற முடியும். (2 கொ. 4:4) மக்களை ஏமாற்றுவதில் சாத்தான் பயன்படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்று.

3 ஆனால் யெகோவாவை வணங்கும் நாம் சாத்தானுடைய இந்தப் பொய்களை எல்லாம் நம்புவதில்லை. சாத்தான் ஒரு நிஜமான ஆள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். எப்படி? ஒரு பாம்பை பயன்படுத்தி சாத்தான் ஏவாளிடம் பேசினான் என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 3:1-5) யோபுவுடைய உள்நோக்கத்தை பற்றி யெகோவாவிடம் சாத்தான் கேள்வி கேட்டான். (யோபு 1:9-12) இயேசுவை சோதிக்க முயற்சி செய்தான். (மத். 4:1-10) இயேசு 1914-ல் ராஜாவாக ஆன பிறகு, பூமியில் வாழ்ந்துகொண்டிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சாத்தான் “போர்” செய்தான். (வெளி. 12:17) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்தையும் வேறே ஆடுகளுடைய விசுவாசத்தையும் குலைத்துப்போட, அன்று முதல் இன்றுவரை போராடுகிறான். இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் சாத்தானை எதிர்த்து நிற்க வேண்டும். அதோடு நம் விசுவாசத்தையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். இதை செய்வதற்கான மூன்று வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பெருமையை ஒதுக்கித் தள்ளுங்கள்

4. சாத்தானை பெருமை பிடித்தவன் என்று எப்படி சொல்கிறோம்?

4 பெருமையின் ஒட்டுமொத்த உருவமே சாத்தான்தான். யெகோவாவுக்கு ஆட்சி செய்ய தகுதி இல்லை என்று சாத்தான் அவரிடமே சவால்விட்டான். யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாக, எல்லாரும் தன்னை வணங்க வேண்டும் என்று துடித்தான். அவனுக்கு எவ்வளவு பெருமையும் தலைக்கனமும் இருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது இல்லையா! அப்படிப்பட்ட சாத்தானை எதிர்த்து நிற்க நாம் பெருமையை ஒதுக்கித் தள்ள வேண்டும், மனத்தாழ்மையாக நடந்துகொள்ள வேண்டும். (1 பேதுரு 5:5-ஐ வாசியுங்கள்.) ஆனால் பெருமை என்றால் என்ன? நாம் எதற்குமே பெருமைப்பட கூடாதா?

5, 6. (அ) பெருமைப்படுவது தவறா? விளக்குங்கள். (ஆ) எந்த மாதிரியான பெருமை ஆபத்தானது, இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

5 பெருமை என்ற குணத்தைப் பற்றி ஒரு டிக்ஷனரி சொல்வதைக் கவனியுங்கள்: பெருமை என்பது நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கையை, சுயமரியாதையைக் குறிக்கிறது. “நீங்களோ உங்களுக்கு நெருக்கமானவர்களோ ஏதாவது நல்லது செய்யும்போது... நல்ல குணத்தைக் காட்டும்போது... உங்கள் மனதிற்குள் ஏற்படும் ஒருவித சந்தோஷமான உணர்வுதான்” பெருமை. இந்த மாதிரியான உணர்வு நமக்கு இருப்பது ஒன்றும் தவறில்லை. அப்போஸ்தலன் பவுலுக்கும் இதே மாதிரியான உணர்வுதான் இருந்தது. அதனால்தான், அவர் தெசலோனிக்கேயர்களிடம் இப்படி சொன்னார்: “எல்லாத் துன்புறுத்தல்களையும் உபத்திரவங்களையும் நீங்கள் தாங்கிக்கொண்டு சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் காட்டி வருவதால், கடவுளுடைய சபைகளில் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசி வருகிறோம்.” (2 தெ. 1:4) அப்படியென்றால், நமக்கு நெருக்கமானவர்கள் ஒரு வேலையை நன்றாக செய்தால் அதைப் பற்றி பெருமைப்படுவது நல்லதுதான். நம்மைப் பற்றியும் ஓரளவு உயர்வாக நினைப்பது ஒன்றும் தவறில்லை. அதனால் நாம் வளர்ந்துவந்த இடத்தை, நம்முடைய குடும்பத்தை, கலாச்சாரத்தைப் பற்றி எல்லாம் தாழ்வாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.—அப். 21:39.

6 ஆனால், இன்னொரு விதமான பெருமையும் இருக்கிறது. அது மற்றவர்களோடு நமக்கு இருக்கும் பந்தத்தைக் கெடுத்துவிடும். முக்கியமாக, யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை அது கெடுத்துவிடும். இந்த மாதிரியான பெருமை ஒருவருக்கு இருந்தால், யாராவது ஆலோசனை கொடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார், அதற்குப் பதிலாக கோபப்படுவார். (சங். 141:5) இந்த மாதிரியான பெருமை உள்ளவர், “தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைப்பார்” என்றும் “மற்றவர்களைவிட தான் ரொம்ப உயர்ந்தவன் என்று நினைத்து ஆணவமாக நடந்துகொள்வார்” என்றும் ஒரு டிக்ஷனரி சொல்கிறது. தலைக்கனம் பிடித்து நடக்கிறவர்களை யெகோவா வெறுக்கிறார். (எசே. 33:28; ஆமோ. 6:8) ஆனால், அப்படிப்பட்ட ஆட்களைப் பார்க்கும்போது சாத்தானுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். உதாரணத்திற்கு நிம்ரோது, பார்வோன், அப்சலோம் எல்லாம் பெருமையாக நடந்துகொண்டபோது சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருந்திருக்கும்! (ஆதி. 10:8, 9; யாத். 5:1, 2; 2 சா. 15:4-6) யெகோவாவோடு இருந்த பந்தத்தை காயீன் இழந்ததற்கு முக்கிய காரணம் இந்தப் பெருமைதான். அவனுக்கு அந்தளவு பெருமை இருந்ததால்தான், யெகோவா கொடுத்த ஆலோசனையை அவன் கொஞ்சம்கூட கேட்கவில்லை. சொல்லப்போனால், அவர் கொடுத்த எச்சரிப்பை அவன் வேண்டுமென்றே மீறினான். கடைசியில் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தான்.—ஆதி. 4:6-8.

7, 8. (அ) இனவெறி என்றால் என்ன, இதை ஒரு வகையான பெருமை என்று எப்படி சொல்லலாம்? (ஆ) பெருமை எப்படி சபையின் சமாதானத்தைக் கெடுத்துவிடலாம்?

7 தவறான பெருமையை மக்கள் இன்று பல வழிகளில் வெளிக்காட்டுகிறார்கள். அதில் ஒன்றுதான் இனவெறி. ‘இனவெறி என்பது மற்ற இனத்தை சேர்ந்த மக்கள்மீது இருக்கும் வெறுப்பு. அதுமட்டும் இல்லாமல், சில இனத்தை சேர்ந்தவர்களுக்கு பிறப்பில் இருந்தே தனித்திறமைகள் இருக்கலாம். அதனால், அவர்கள் மற்ற இனத்தைவிட மேலானவர்களாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்’ என்று ஒரு டிக்ஷனரி சொல்கிறது. இனப்பெருமை இருப்பதால்தான் உலகத்தில் கலகம், போர், இனப்படுகொலை எல்லாம் நடக்கின்றன.

8 ஆனால், கிறிஸ்தவ சபையில் இந்த மாதிரி எல்லாம் நடக்கக்கூடாது. இருந்தாலும், சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்குள் சின்ன சின்ன மனஸ்தாபம் வருவதற்கு பெருமை காரணமாகிவிடலாம். இது சில நேரத்தில் கட்டுக்கடங்காமல் போய்விடலாம். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள்கூட இந்த மாதிரி பெருமையாக நடந்துகொண்டார்கள். அவர்களை யோசிக்க வைப்பதற்காக, “உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளும் தகராறுகளும் ஏற்படக் காரணம் என்ன?” என்று யாக்கோபு கேட்டார். (யாக். 4:1) மற்றவர்களை நாம் வெறுத்தால், அவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைத்தால், மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தும் விதத்தில் ஏதாவது பேசிவிடுவோம் அல்லது செய்துவிடுவோம். (நீதி. 12:18) அப்படியென்றால், சகோதர சகோதரிகளுக்குள் பெருமை என்ற குணம் இருக்கும்போது அது நிச்சயம் சபையின் சமாதானத்தைக் கெடுத்துவிடும்.

9. இனவெறியையும் தவறான பெருமையையும் எதிர்த்து போராடுவதற்கு பைபிள் எப்படி நமக்கு உதவி செய்கிறது? (ஆரம்பப் படம்)

9 மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைத்தால் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. அதாவது, “மனமேட்டிமை உள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என்பதை மறந்துவிடக் கூடாது. (நீதி. 16:5) இந்தக் குணம் நமக்குள் இருக்கிறதா என்று நாம் அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்கு நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘மத்த இனத்தை, நாட்டை, கலாச்சாரத்தை சேர்ந்தவங்களைவிட நான் உயர்ந்தவன்னு நினைக்கிறேனா?’ ஒருவேளை நாம் அப்படி நினைத்தால், ‘ஒரே மனிதனிலிருந்து எல்லாத் தேசத்தாரையும் [கடவுள்] உண்டு பண்ணினார்’ என்ற உண்மையை மறந்துவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். (அப். 17:26) நாம் எல்லாரும் ஆதாமுடைய சந்ததியில் இருந்து வந்ததால் நாம் அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்தான். அதனால், ஒரு இனத்தைவிட இன்னொரு இனத்தை கடவுள் உயர்வாக படைத்திருக்கிறார் என்று யோசிப்பது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும்! ஒருவேளை இப்படி யோசித்தால், கிறிஸ்தவ அன்பையும் ஒற்றுமையையும் சாத்தான் குலைத்துப்போடுவதற்கு நாமே துணை நிற்போம். (யோவா. 13:35) இந்த விஷயத்தில் சாத்தானை ஜெயிக்க வேண்டுமென்றால் தவறான பெருமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.—நீதி. 16:18.

உலக ஆசையையும் பொருளாசையையும் தவிர்த்திடுங்கள்

10, 11. (அ) இந்த உலகத்தின்மீது அன்பு வைப்பது ஏன் சுலபமாக இருக்கிறது? (ஆ) தேமா இந்த உலகத்தின்மீது அன்பு வைத்ததால் என்ன ஆனது?

10 இந்த முழு உலகத்தையும் சாத்தான் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான். அதனால்தான் பைபிள் அவனை, “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்று சொல்கிறது. (யோவா. 12:31; 1 யோ. 5:19) இந்த உலகத்தில் இருக்கும் நிறைய விஷயங்கள் பைபிளின் தராதரங்களுக்கு எதிராக இருக்கிறது. அதற்காக எல்லா விஷயங்களையுமே தவறு என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும், நமக்கு இருக்கிற ஆசைகளைப் பயன்படுத்தி இந்த உலகத்தில் இருக்கும் கவர்ச்சியான விஷயங்களில் நம்மை சிக்க வைத்து, பாவம் செய்ய சாத்தான் தூண்டுகிறான். அல்லது, இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்கள்மீது ஆசைகாட்டி நம்மை யெகோவாவைவிட்டு பிரிக்கப் பார்க்கிறான்.1 யோவான் 2:15, 16-ஐ வாசியுங்கள்.

11 ஆரம்ப காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களில் சிலர் இந்த உலகத்தின்மீது அன்பு வைத்தார்கள். உதாரணத்திற்கு, ‘தேமா இந்த உலகத்தின் மீது ஆசை வைத்து என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டான்’ என்று பவுல் சொன்னார். (2 தீ. 4:10) தேமா, இந்த உலகத்தில் இருக்கிற எந்த விஷயத்திற்காக ஆசைப்பட்டு பவுலைவிட்டு போனார் என்று பைபிள் சொல்லவில்லை. ஒருவேளை, யெகோவாவுக்கு சேவை செய்வதைவிட பொருள் சேர்ப்பதிலேயே அவர் குறியாக இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும், அவர் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டார். கடவுளுடைய சேவையில் அவருக்கு கிடைக்கவிருந்த மிகப் பெரிய பொறுப்புகளை அவர் ஒதுக்கித் தள்ளிவிட்டார்! தேமா, பவுலுக்கு உதவியாளராக அவர்கூடவே இருந்திருக்கலாம். யெகோவா கொடுக்கிற ஆசீர்வாதங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த உலகம் அவருக்கு எதையுமே கொடுத்திருக்க முடியாது!—நீதி. 10:22.

12. சாத்தான் எப்படி நம்மை ‘செல்வத்தின் வஞ்சக சக்தியில்’ சிக்க வைக்கிறான்?

12 தேமாவை போல் நமக்கும் பொருளாசை வரலாம். ஆனால், குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (1 தீ. 5:8) அதுமட்டும் இல்லாமல், மனிதர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். அதனால்தான், ஆதாமையும் ஏவாளையும் ஒரு அழகான தோட்டத்தில் குடிவைத்தார். (ஆதி. 2:9) ஆனால் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நம்முடைய ஆசையைப் பயன்படுத்தி, சாத்தான் நம்மை ‘செல்வத்தின் வஞ்சக சக்தியில்’ சிக்க வைக்கிறான். (மத். 13:22) பணமும் பொருளும் இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஒருவேளை நாமும் இதேமாதிரி யோசித்தால் நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான ஒன்றை இழந்துவிடுவோம், அதாவது யெகோவாவிடம் இருக்கிற அருமையான பந்தத்தை இழந்துவிடுவோம். அதனால்தான், “ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை உதாசீனப்படுத்துவான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு எச்சரித்தார். (மத். 6:24) நாம் பணத்துக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் யெகோவாவை சேவிப்பதையே விட்டுவிடுவோம். இதைத்தான் சாத்தானும் விரும்புகிறான்! அதனால், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். பணமும் பொருளும் யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை முறிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சாத்தானை நாம் ஜெயிக்க வேண்டுமென்றால் பொருளாசையைத் தவிர்க்க வேண்டும், இருப்பதை வைத்து திருப்தியாக வாழ வேண்டும்.1 தீமோத்தேயு 6:6-10-ஐ வாசியுங்கள்.

பாலியல் ஆசைகளை தவிர்த்திடுங்கள்

13. திருமணத்தைப் பற்றியும் செக்ஸை பற்றியும் இந்த உலகம் எப்படித் தவறான எண்ணத்தைப் பரப்பி இருக்கிறது?

13 பாலியல் ஆசைகளைத் தூண்டிவிடுவதன் மூலமும் சாத்தான் நம்மை அவனுடைய வலையில் சிக்க வைக்கிறான். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது எல்லாம் முடியாத காரியம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். கல்யாணம் செய்வது இந்தக் காலத்துக்கு ஒத்துவராது, அது நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நடிகை இப்படி சொன்னார்: “ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி, ‘ஒருவனுக்கு ஒருத்தி’னு சொல்றது எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது . . . யாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா வாழ்றதாவோ, அப்படி வாழ விரும்புறதாவோ எனக்கு தெரியல.” இன்னொரு நடிகர் இப்படி சொன்னார்: “காலம் முழுக்க ஒருத்தரோட வாழணுங்கிற ஆசை இயல்பாவே நமக்கு இருக்கிற மாதிரி தெரியல.” யெகோவா ஆரம்பித்து வைத்த திருமண ஏற்பாட்டைப் பற்றி இந்த உலகத்தில் இருக்கிற பிரபலமானவர்கள் மோசமாக பேசும்போது சாத்தானுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால், திருமண ஏற்பாட்டை அவன் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழக்கூடாது என்றுதான் அவன் நினைக்கிறான். சாத்தானை ஜெயிக்க வேண்டுமென்றால் திருமண ஏற்பாட்டைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

14, 15. பாலியல் முறைகேட்டில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

14 நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் சரி ஆகாமல் இருந்தாலும் சரி, தவறான பாலியல் ஆசைகளை எதிர்த்து போராட வேண்டும். ஆனால், இது சுலபம் இல்லை! நீங்கள் பள்ளியில் படிக்கும் இளைஞராக இருந்தால், செக்ஸ் வைத்துக்கொள்வதைப் பற்றி அல்லது செல்ஃபோனில் ஆபாசமான மெஸேஜ்களையோ படங்களையோ (sexting) அனுப்புவதைப் பற்றி உங்கள் நண்பர்கள் ரொம்ப பெருமையாகப் பேசலாம். சில நாடுகளில், செக்ஸ்டிங் என்பது குழந்தைகளைத் தவறான முறையில் பயன்படுத்தி எடுக்கப்படும் ஆபாசமான படங்களை அனுப்புவதையும் அர்த்தப்படுத்துகிறது. “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 6:18) தவறான உடலுறவில் ஈடுபடுவதால் நிறைய பேர் மோசமான வியாதிகளால் அவதிப்படுகிறார்கள்; சிலர் இறந்தும்விடுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல், திருமணத்திற்குமுன் உடலுறவில் ஈடுபட்ட நிறைய இளைஞர்கள் குற்ற உணர்வால் தவிக்கிறார்கள். கடவுளுடைய சட்டத்தை மீறி நடப்பதால் எந்தப் பாதிப்பும் வராது என்று இந்த உலகத்தில் இருக்கிற பொழுதுபோக்கு விஷயங்கள் மக்களை நம்ப வைக்கின்றன. இந்த மாதிரியான பொய்களை நாம் நம்பினால், ‘பாவத்தின் வஞ்சக சக்தியில்’ சிக்கிவிடுவோம்.—எபி. 3:13.

15 பாலியல் முறைகேட்டில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வந்தால் அதை தவிர்க்க என்ன செய்யலாம்? முதலில், இந்த விஷயத்தில் உங்களுக்கு பலவீனம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். (ரோ. 7:22, 23) இதை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்படி கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். (பிலி. 4:6, 7, 13) பாலியல் முறைகேட்டில் உங்களை ஈடுபட தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்த்திடுங்கள். (நீதி. 22:3) ஒருவேளை, அந்த மாதிரியான சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்பட்டால் அந்த இடத்தைவிட்டு உடனே ஓடிவிடுங்கள்.—ஆதி. 39:12.

16. இயேசுவை சோதிக்க சாத்தான் முயற்சி செய்தபோது அவர் என்ன செய்தார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 இயேசு நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். சாத்தான் சொன்ன எந்தவொரு விஷயத்தையும் அவர் நம்பவில்லை. அதைப் பற்றி அவர் யோசித்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, பைபிளில் இருக்கும் வசனங்களை சொல்லி அவனுக்கு உடனடியாக பதிலடி கொடுத்தார். (மத்தேயு 4:4-10-ஐ வாசியுங்கள்.) இப்படி செய்ய இயேசுவுக்கு எது உதவியது? கடவுளுடைய வார்த்தையை அவர் நன்றாகப் படித்து வைத்திருந்தார். அதனால், சாத்தான் அவரை சோதித்தபோது அவர் உடனடியாக பைபிள் வசனங்களை சொல்லி பதிலடி கொடுத்தார். அப்படியென்றால், சாத்தானை ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தவறான பாலியல் ஆசைகள் நம் மனதில் வளர்வதற்கு நாம் இடம்கொடுக்க கூடாது, அதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.—1 கொ. 6:9, 10.

சகித்திருங்கள், வெற்றி பெறுங்கள்

17, 18. (அ) சாத்தான் தன்னுடைய வலையில் நம்மை சிக்க வைக்க வேறு என்ன விஷயங்களைப் பயன்படுத்துகிறான், நாம் ஏன் அதையெல்லாம் எதிர்பார்க்கலாம்? (ஆ) முடிவில் சாத்தானுக்கு என்ன நடக்கப்போகிறது, சகித்திருக்க இது எப்படி உங்களுக்கு உதவியாக இருக்கும்?

17 சாத்தான் தன்னுடைய வலையில் நம்மை சிக்க வைக்க பெருமையை, பொருளாசையை, பாலியல் முறைகேட்டை எப்படி பயன்படுத்துகிறான் என்று பார்த்தோம். ஆனால் இது மட்டுமில்லை, இன்னும் நிறைய விஷயங்களைப் பயன்படுத்துகிறான். உதாரணத்திற்கு, யெகோவாவை வணங்காத குடும்பத்தார் உங்களை எதிர்க்கலாம் அல்லது துன்புறுத்தலாம். உங்களோடு பள்ளியில் படிக்கிறவர்கள் உங்களை கேலி கிண்டல் செய்யலாம். இன்னும் சில நாடுகளில், அரசாங்கங்கள் பிரசங்க வேலையை தடை செய்யலாம். இந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். ஏனென்றால், இயேசு இப்படி எச்சரித்திருக்கிறார்: “நீங்கள் என் சீடர்களாக இருப்பதால் எல்லா மக்களுடைய வெறுப்புக்கும் ஆளாவீர்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவனே மீட்புப் பெறுவான்.”—மத். 10:22.

சாத்தான் நிரந்தரமாக அழிக்கப்படுவான் [பக்கம் 18-ன் படம்]

18 சாத்தானுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நம்மால் எப்படி ஜெயிக்க முடியும்? “சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைக் காத்துக்கொள்வீர்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 21:19) மனிதர்கள் நமக்கு கொடுக்கிற கஷ்டங்கள் எல்லாம் தற்காலிகமானதுதான். யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை யாராலும் முறிக்க முடியாது; நாமாகவே முறித்துக்கொண்டால்தான் உண்டு. (ரோ. 8:38, 39) ஒருவேளை, யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால் சிலர் இறந்துபோயிருக்கலாம். அதற்காக சாத்தான் ஜெயித்துவிட்டான் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், இறந்துபோனவர்களை யெகோவா எதிர்காலத்தில் உயிரோடு எழுப்புவார். (யோவா. 5:28, 29) ஆனால், சாத்தானுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் கிடையாது. இந்தக் கெட்ட உலகம் அழிக்கப்பட்ட பிறகு ஆயிரம் வருடங்களுக்கு சாத்தான் ‘அதலபாதாளத்திற்குள்’ தள்ளப்படுவான். (வெளி. 20:1-3) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்கு பிறகு அவன் மறுபடியும் “சிறையிலிருந்து விடுவிக்கப்படுவான்.” அப்போது, பாவமில்லாத மனிதர்களை கடைசியாக ஒருமுறை சாத்தான் சோதிப்பான். அதற்குப் பிறகு சாத்தான் முற்றிலும் அழிக்கப்படுவான். (வெளி. 20:7-10) சாத்தானுக்கு எந்தவொரு எதிர்காலமும் இல்லை; ஆனால் உங்களுக்கு ஒரு அருமையான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனால், அவனை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருங்கள். உங்களுடைய விசுவாசத்தையும் நாளுக்கு நாள் பலப்படுத்திக்கொண்டே இருங்கள். அப்போது, சாத்தானை உங்களால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.