Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்மால் ஒழுக்கமாக இருக்க முடியும்!

நம்மால் ஒழுக்கமாக இருக்க முடியும்!

“உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள் . . . உங்கள் இருதயங்களைச் சுத்தமாக்குங்கள்.”—யாக். 4:8.

1. இன்று நிறையப் பேர் என்ன நினைக்கிறார்கள்?

இந்த உலகம் ஒழுக்கங்கெட்ட விஷயங்களிலேயே ஊறிப்போய் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதும் மணத்துணையாக இல்லாதவர்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வதும் சகஜம் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். திரைப்படங்கள், புத்தகங்கள், பாடல்கள், விளம்பரங்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒழுக்கங்கெட்ட விஷயங்கள்தான் இருக்கின்றன. (சங். 12:8) ஆனால், இந்த ஒழுக்கங்கெட்ட உலகத்திலும் நம்மால் ஒழுக்கமாக, சுத்தமாக, யெகோவாவுக்குப் பிரியமாக வாழ முடியும். அப்படி வாழ யெகோவா நமக்கு உதவி செய்வார்.1 தெசலோனிக்கேயர் 4:3-5-ஐ வாசியுங்கள்.

2, 3. (அ) தவறான ஆசைகளை ஏன் தவிர்க்க வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?

2 யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால், அவர் வெறுக்கிற எல்லாவற்றையும் நாமும் வெறுக்க வேண்டும். ஆனால், நாம் இயல்பாகவே தவறு செய்கிறவர்களாக இருப்பதால் ஒழுக்கங்கெட்ட விஷயங்களில் சுலபமாக சிக்கிவிடலாம். ஒரு மீன் எப்படி இரையிடம் கவர்ந்து இழுக்கப்படுகிறதோ அதேபோல் நாமும் ஒழுக்கங்கெட்ட விஷயங்களிடம் கவர்ந்து இழுக்கப்படலாம். தவறான ஆசைகள் நம் மனதில் வேர்விட ஆரம்பித்த உடனேயே அதை பிடுங்கிவிட வேண்டும். அதை வளரவிட்டால், நாம் என்றாவது ஒரு நாள் பாவம் செய்துவிடுவோம். அதனால்தான், நமக்குள் இருக்கிற தவறான ஆசை “கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது” என்று பைபிள் சொல்கிறது.யாக்கோபு 1:14, 15-ஐ வாசியுங்கள்.

3 தவறான ஆசைகளை நாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் ஒழுக்கங்கெட்ட விஷயங்களை நாம் செய்யவும் மாட்டோம், அதன் மோசமான விளைவுகளினால் கஷ்டப்படவும் மாட்டோம். (கலா. 5:16) தவறான ஆசைகளைத் தவிர்க்க நமக்கு மூன்று விஷயங்கள் உதவும்: (1) யெகோவாவோடு இருக்கும் நட்பு. (2) பைபிளில் இருக்கும் ஆலோசனைகள். (3) சபையில் இருக்கும் அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள்”

4. யெகோவாவிடம் நெருங்கி இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

4 யெகோவாவோடு இருக்கிற நட்பை நாம் பொக்கிஷமாக நினைத்தால், அவருக்குப் பிடிக்காத எந்தவொரு விஷயத்தையும் செய்யவும் மாட்டோம், யோசிக்கவும் மாட்டோம். அதனால்தான், ‘கடவுளிடம் நெருங்கி வர’ வேண்டுமென்றால், நம் ‘கைகளைத் தூய்மையாக்க’ வேண்டும் என்றும் நம் ‘இருதயங்களைச் சுத்தமாக்க’ வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது. (யாக். 4:8) நம் ‘இருதயம் சுத்தமாக’ இருக்க வேண்டுமென்றால் நம் யோசனைகள் சுத்தமாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். (சங். 24:3, 4; 51:6; பிலி. 4:8) நாம் இயல்பாகவே தவறு செய்பவர்கள் என்பதையும்... ஒழுக்கங்கெட்ட விஷயங்களை யோசிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும்... யெகோவா நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார். இருந்தாலும், யெகோவாவுடைய இருதயத்தைக் கஷ்டப்படுத்த நாம் விரும்புவதில்லை. அதனால், கெட்ட ஆசைகளைத் தவிர்ப்பதற்கும் ஒழுக்கமான விஷயங்களை யோசிப்பதற்கும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.—ஆதி. 6:5, 6.

5, 6. ஒழுக்கங்கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட ஜெபம் எப்படி உதவும்?

5 நாம் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் உதவிக்காக யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். அப்போது, யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து நமக்கு உதவுவார். ஜெபம் செய்யும்போது, நம் எண்ணங்கள் அவருக்கு ஏற்றதாக இருக்க உதவும்படி யெகோவாவிடம் கேட்கலாம். (சங். 19:14) பாவம் செய்ய தூண்டும் தவறான ஆசைகள் ஏதாவது நம் இருதயத்தில் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கும்படியும் அவரிடம் சொல்லலாம். (சங். 139:23, 24) தவறு செய்யும் சூழ்நிலை வந்தால்கூட அவருக்கு உண்மையாக இருக்க உதவும்படி அவரிடம் தொடர்ந்து கேட்கலாம்.—மத். 6:13.

6 யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் அவருக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் செய்துகொண்டு இருந்திருக்கலாம். இப்போதும், அந்த விஷயங்களைத் தவிர்ப்பதற்கு நாம் போராடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், நம்மை மாற்றிக்கொள்வதற்கும் அவருக்குப் பிடித்ததை செய்வதற்கும் யெகோவா உதவி செய்வார். உதாரணத்திற்கு, தாவீது ராஜா பத்சேபாளோடு தவறான உறவு வைத்துக்கொண்டார். பிறகு, அதை நினைத்து மனம் வருந்தினார். ‘சுத்தமான இருதயத்தை’ கொடுக்கும்படியும் கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும்படியும் யெகோவாவிடம் கெஞ்சினார். (சங். 51:10, 12) தவறான ஆசைகள் நம் மனதில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தாலும் சரி, அதைக் கட்டுப்படுத்த யெகோவா நமக்கு உதவி செய்வார். அதோடு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்... சரியானதை செய்ய வேண்டும்... என்ற நம் ஆசையை அதிகரிக்கவும் அவர் உதவி செய்வார்.—சங். 119:133.

தவறான ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் (பாரா 6)

‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவர்களாக இருங்கள்’

7. ஒழுக்கங்கெட்ட யோசனைகளைத் தவிர்க்க பைபிள் நமக்கு எப்படி உதவும்?

7 நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா தம் வார்த்தையாகிய பைபிளின் மூலம் பதில் கொடுக்கிறார். பைபிளில் இருக்கும் ஞானம் “சுத்தமானதாக” இருக்கிறது. (யாக். 3:17) பைபிளை தினமும் படிக்கும்போது, தவறான எண்ணங்களை நம்மால் தவிர்க்க முடியும். (சங். 19:7, 11; 119:9, 11) அதோடு, ஒழுக்கங்கெட்ட யோசனைகளையும் ஆசைகளையும் தவிர்ப்பதற்கு பைபிளில் நிறைய உதாரணங்களும் ஆலோசனைகளும் இருக்கின்றன.

8, 9. (அ) ஒழுக்கங்கெட்ட பெண்ணோடு அந்த இளைஞன் ஏன் உறவு வைத்துக்கொண்டான்? (ஆ) நீதிமொழிகள் 7-வது அதிகாரத்தில் இருக்கும் உதாரணம் இன்று நமக்கு எப்படிப் பொருந்தும்?

8 ஒழுக்கங்கெட்ட விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமொழிகள் 5:8 நம்மை எச்சரிக்கிறது. அந்த எச்சரிப்பை அசட்டை செய்தால் நமக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி நீதிமொழிகள் 7-வது அதிகாரம் விளக்குகிறது. அதில் ஒரு இளைஞன், ஒழுக்கங்கெட்ட பெண்ணின் வீட்டு வழியாக நடந்துபோகிறான். அந்தப் பெண், ‘வேசியை போல் உடையணிந்து’ தெரு ஓரத்தில் நின்றுகொண்டு இருந்தாள். அவள் அவனிடம் நடந்துபோய், அவனைப் பிடித்து, அவனுக்கு முத்தம் கொடுத்து, பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற விதத்தில் அவனிடம் பேசினாள். அவன் அந்த ஆசையைக் கட்டுப்படுத்தாமல் அவளோடு உறவு வைத்துக்கொண்டான். தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் அங்கு போகவில்லை என்றாலும் அவளோடு தவறாக நடந்துகொண்டான். அதனால் வந்த பின்விளைவுகளையும் அவன் சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவேளை, அதைப் பற்றி அவன் முன்கூட்டியே யோசித்திருந்தால், அவள் பக்கமே போயிருக்க மாட்டான்.—நீதி. 7:6-27.

9 சிலசமயம் நாமும், ஆபத்தைப் பற்றி யோசித்துப் பார்க்காமல் தவறான தீர்மானம் எடுத்துவிடலாம். உதாரணத்திற்கு ராத்திரி நேரத்தில், சில டிவி சேனல்களில் ஒழுக்கங்கெட்ட நிகழ்ச்சிகள் வரலாம். அப்போது, சேனல்களை மாற்றிக்கொண்டே இருந்தால் நாம் ஆபத்தில் சிக்கிவிடுவோம். இன்டர்நெட்டை பயன்படுத்தும்போதும் எதையாவது தெரியாமல் ‘கிளிக்’ (click) செய்துவிட்டால் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம். இன்டர்நெட்டில் ‘சாட்’ (chat room) செய்துகொண்டு இருக்கும்போதும் ஏதாவது வெப்சைட்டை பார்த்துக்கொண்டு இருக்கும்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் ஆபாசமான படங்கள் மற்றும் விளம்பரங்களுக்கான ‘லிங்க்’ (link) இருக்கலாம். இந்த மாதிரியான சமயங்களில், கெட்ட ஆசைகளைத் தூண்டும் எதையாவது பார்த்துவிட்டால் அந்த ஆசைகள் நம் மனதில் வேர்விட ஆரம்பித்துவிடும். கடைசியில் யெகோவாவுக்குப் பிடிக்காததையே நாம் செய்துவிடுவோம்.

10. கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி பழகும்போது அதில் என்ன ஆபத்து இருக்கிறது? (ஆரம்பப் படம்)

10 ஒரு ஆணும் பெண்ணும் எப்படிப் பழக வேண்டும் என்று பைபிள் நமக்கு சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:2-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவர்கள், தங்கள் மணத்துணையிடம் அல்லது கல்யாணம் செய்துகொள்ளப்போகும் நபரிடம் மட்டும்தான் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். ‘மத்தவங்கள தொட்டு பேசுனாதானே தப்பு. ஆனா, அவங்களோட உணர்ச்சிகளை தூண்டுற மாதிரி நம்ம சைகையோ உடல் அசைவோ பார்வையோ இருந்தா அதுல ஒண்ணும் தப்பு இல்லயே’ என்று சிலர் நினைக்கலாம். கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும்போது அவர்கள் மனதில் ஒழுக்கங்கெட்ட ஆசைகள் வேர்விட ஆரம்பிக்கலாம். கடைசியில், அவர்கள் பாலியல் முறைகேட்டிலேயே ஈடுபட்டுவிடலாம். இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது, இனிமேலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

11. யோசேப்பிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

11 யோசேப்பு நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். தன்னோடு உறவு வைத்துக்கொள்ளும்படி யோசேப்பை போத்திபாரின் மனைவி நச்சரித்துக்கொண்டே இருந்தாள். யோசேப்பு அதற்கு இணங்கவில்லை என்றாலும் அவள் அவரை விடவே இல்லை. ‘அவளோடு இருக்கும்படி’ யோசேப்பை ஒவ்வொரு நாளும் தொந்தரவு செய்துகொண்டே இருந்தாள். (ஆதி. 39:7, 8, 10) ‘இரண்டு பேரும் தனியாக இருந்தால், யோசேப்பு தன்னுடைய ஆசைக்கு இணங்கி விடுவாரென போத்திபாரின் மனைவி ஒருவேளை யோசித்திருக்கலாம்’ என்று ஒரு பைபிள் அறிஞர் சொன்னார். ஆனால், அவளுடைய காதல் வலையில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதில் யோசேப்பு தீர்மானமாக இருந்தார். அதோடு, கெட்ட ஆசைகள் தன் மனதில் வேர்விடவும் அவர் அனுமதிக்கவில்லை. அதனால்தான், அவருடைய உடையைப் பிடித்து, தன்னோடு உறவு வைத்துக்கொள்ளும்படி அவள் கட்டாயப்படுத்தியபோது, அவர் ‘தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனார்.’—ஆதி. 39:12.

12. நாம் பார்க்கிற விஷயங்கள் நம் மனதைப் பாதிக்கும் என்று எப்படி சொல்லலாம்?

12 நாம் பார்க்கிற விஷயங்கள், நம் மனதைப் பாதிக்கும் என்றும் அது நமக்குள் பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்றும் இயேசு எச்சரித்தார். அதனால்தான் அவர் இப்படி சொன்னார்: “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” (மத். 5:28) தாவீது ராஜா விஷயத்தில்கூட இதுதான் நடந்தது. குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, அவர் தன் வீட்டு மாடியிலிருந்து பார்த்தார். அவர் தன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார், அவளைப் பற்றியே யோசித்துக்கொண்டும் இருந்தார். (2 சா. 11:2) அந்தப் பெண் வேறொருவனுடைய மனைவியாக இருந்தாலும் தாவீது அவள்மீது ஆசைப்பட்டார், அவளோடு உறவு வைத்துக்கொண்டார்.

13. நாம் ஏன் நம் கண்களோடு ஒப்பந்தம் செய்ய வேண்டும், அதை எப்படி செய்யலாம்?

13 ஒழுக்கங்கெட்ட யோசனைகளை எதிர்த்து போராட யோபுவின் உதாரணம் நமக்கு உதவும். ‘என் கண்களோடே உடன்படிக்கை [அதாவது, ஒப்பந்தம்] செய்துகொண்டேன்’ என்று அவர் சொன்னார். (யோபு 31:1, 7, 9) யோபுவைப் போலவே நாமும் யாரையும் தவறான ஆசையோடு பார்க்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும். பத்திரிகைகள், விளம்பர போஸ்டர்கள், கம்ப்யூட்டர் என்று எதிலாவது ஆபாசமான படங்களைப் பார்த்தால், உடனே நம் கண்களை வேறு பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்.

14. நாம் ஒழுக்கமாகவும் சுத்தமாகவும் வாழ என்ன செய்ய வேண்டும்?

14 ஒழுக்கங்கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதை இதுவரை பார்த்த விஷயங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதை உடனே செய்யுங்கள்! யெகோவா கொடுக்கும் ஆலோசனைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பாலியல் முறைகேட்டைத் தவிர்க்கலாம், ஒழுக்கமாகவும் சுத்தமாகவும் வாழலாம்.யாக்கோபு 1:21-25-ஐ வாசியுங்கள்.

மூப்பர்களிடம் உதவி கேளுங்கள்

15. நாம் கெட்ட ஆசைகளோடு போராடிக்கொண்டு இருந்தால், மற்றவர்களிடம் உதவி கேட்பது ஏன் முக்கியம்?

15 நீங்கள் கெட்ட ஆசைகளோடு போராடிக்கொண்டு இருந்தால் சபையில் இருக்கும் ஒருவரிடம் இதைப் பற்றி பேசுங்கள். அதாவது, யெகோவாவை நிறைய வருடங்களாக சேவிக்கிற... பைபிளிலிருந்து நல்ல ஆலோசனைகளை கொடுக்கிற... ஒருவரிடம் பேசுங்கள். இந்த மாதிரியான ஒரு பிரச்சினையைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், மற்றவர்களிடம் உதவி கேட்பது ரொம்ப முக்கியம். (நீதி. 18:1; எபி. 3:12, 13) நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்வார்கள். உங்கள் வாழ்க்கையில் அந்த மாற்றங்களை செய்யும்போது நீங்கள் யெகோவாவுடைய நண்பராக இருப்பீர்கள்.

16, 17. (அ) ஒழுக்கங்கெட்ட ஆசைகளோடு போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்யலாம்? உதாரணம் கொடுங்கள். (ஆ) ஆபாசத்தைப் பார்க்கும் ஒருவர் ஏன் உடனே உதவி பெற வேண்டும்?

16 முக்கியமாக, சபையில் இருக்கும் மூப்பர்கள் இந்த விஷயத்தில் நமக்கு உதவி செய்வார்கள். (யாக்கோபு 5:13-15-ஐ வாசியுங்கள்.) பிரேசிலில் இருக்கும் ஒரு இளைஞர், கெட்ட ஆசைகளோடு பல வருடங்களாக போராடிக்கொண்டு இருந்தார். அவர் இப்படி சொல்கிறார்: “நான் யோசிக்கிற விஷயங்கள் யெகோவாவுக்கு பிடிக்காதுனு எனக்கு தெரியும். இருந்தாலும், அதை பத்தி மத்தவங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு ரொம்பவே தயக்கமா இருந்துச்சு.” இந்த இளைஞருக்கு உதவி தேவை என்பதை ஒரு மூப்பர் புரிந்துகொண்டார். அதனால், மூப்பர்களிடம் உதவி பெறுவது நல்லதாக இருக்கும் என்று அந்த இளைஞரிடம் சொன்னார். “மூப்பர்கள் என்கிட்ட நடந்துகிட்ட விதத்தை பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட அவங்க என்கிட்ட கனிவா பேசுனாங்க. என்னை புரிஞ்சு நடந்துகிட்டாங்க. என்னோட பிரச்சனைய காதுகொடுத்து கேட்டாங்க. யெகோவாவுக்கு என் மேல இன்னும் அன்பு இருக்குங்கிறத பைபிள்ல இருந்து எடுத்துக்காட்டுனாங்க. எனக்காக ஜெபம் செஞ்சாங்க. அவங்க கொடுத்த பைபிள் ஆலோசனைப்படி நடக்க இதெல்லாம் எனக்கு உதவியா இருந்துச்சு” என்று அந்த இளைஞர் சொல்கிறார். யெகோவாவோடு தனக்கு இருந்த பந்தத்தை அவர் பலப்படுத்திக்கொண்டார். அவர் சொல்கிறார்: “பிரச்சனைகளை நாமே சமாளிக்கணும்னு நினைக்கிறதுக்கு பதிலா மத்தவங்ககிட்ட உதவி கேட்குறது எவ்ளோ முக்கியம்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன்.”

17 ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், உடனே மூப்பர்களின் உதவியை நாடுங்கள். உதவி கேட்பதை நீங்கள் எந்தளவு தாமதிக்கிறீர்களோ அந்தளவு ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள், பாலியல் முறைகேட்டிலும் ஈடுபட்டு விடுவீர்கள். இது மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவதோடு யெகோவாவுக்கும் கெட்ட பெயரைக் கொண்டுவரும். ஆனால், யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் கிறிஸ்தவ சபையில் தொடர்ந்து இருக்கவும் நிறைய பேர் விரும்பியதால் மூப்பர்களின் உதவியைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஆலோசனைக்கும் கீழ்ப்படிந்து இருக்கிறார்கள்.—சங். 141:5; எபி. 12:5, 6; யாக். 1:15.

ஒழுக்கமாக இருக்க தீர்மானமாக இருங்கள்!

18. நீங்கள் என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறீர்கள்?

18 சாத்தானுடைய இந்த உலகத்தில் ஒழுக்கங்கெட்ட விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. ஆனால், ஒழுக்கமாக வாழ்வதற்கும் தங்கள் எண்ணங்கள் சுத்தமாக இருப்பதற்கும் யெகோவாவின் மக்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். இவர்களைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும்! அதனால் நீங்கள் யெகோவாவோடு நெருங்கி இருங்கள், பைபிள் மற்றும் மூப்பர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். இதையெல்லாம் செய்யும்போது, நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அதோடு, உங்களுக்கு சுத்தமான மனசாட்சியும் இருக்கும். (சங். 119:5, 6) எதிர்காலத்தில் சாத்தான் இல்லாத சுத்தமான புதிய உலகத்தில் நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்.