Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘தொடர்ந்து சகித்திருங்கள்’

‘தொடர்ந்து சகித்திருங்கள்’

அனிதா ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனபோது அவருடைய கணவர் அவரைப் பயங்கரமாக எதிர்த்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “என்னை கூட்டங்களுக்கு போகவே கூடாதுனு சொன்னார்; கடவுளோட பேரைக்கூட சொல்ல கூடாதுனு சொல்லி இருந்தார். யெகோவாங்கிற பேரை கேட்டாலே அவருக்கு கோபம் தலைக்கேறும்” என்கிறார் அனிதா.

பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுக்க கூடாது என்றும் அவர்களை கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாது என்றும் அனிதாவின் கணவர் உறுதியாக சொல்லி விட்டார். அதனால், அனிதாவிற்கு இதையெல்லாம் செய்வது ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

ஒருவேளை, அனிதாவைப் போலவே நீங்களும் எதிர்ப்புகளை சந்திக்கலாம். இல்லையென்றால் தீராத வியாதியால் அவதிப்படலாம், உங்கள் பிள்ளையை அல்லது மணத்துணையை நீங்கள் மரணத்தில் இழந்திருக்கலாம். உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவர் யெகோவாவை சேவிப்பதையே நிறுத்தியிருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

‘தொடர்ந்து சகித்திருங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 10:36) அப்படியென்றால், நீங்கள் எப்படி சகித்திருக்கலாம்?

ஜெபம் செய்யுங்கள்

நீங்கள் கஷ்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும்போது யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அந்தக் கஷ்டத்தை சகிக்க அவர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார். ஆனா (Ana) என்ற சகோதரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கவனியுங்கள். அவருக்கு கல்யாணமாகி 30 வருடங்கள் ஆகியிருந்தன. வேலைக்கு போன அவருடைய கணவர் ஒரு நாள் வீடு திரும்பவே இல்லை. அவர் திடீரென்று இறந்தது ஆனாவுக்கு இடி தாக்கியது போல் இருந்தது. ஆனாவின் கணவர் இறந்தபோது அவருக்கு 52 வயதுதான்!

இந்தக் கஷ்டமான சூழ்நிலையை ஆனா எப்படி சமாளித்தார்? அவர் தன் வேலையிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்ததால் கணவருடைய இழப்பை அவரால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. இருந்தாலும் துக்கத்திலிருந்து அவரால் முழுமையாக மீள முடியவில்லை. அதற்கு ஆனா என்ன செய்தார்? “என் மனசுல இருந்ததை எல்லாம் யெகோவாகிட்ட கொட்டுனேன். என் கணவரோட இழப்பை சமாளிக்க உதவி செய்யுங்கனு கெஞ்சுனேன்” என்று சொல்கிறார். யெகோவா அவருடைய ஜெபத்தை கேட்டாரா? ஆம், நிச்சயமாகக் கேட்டார்! “யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சது என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. யெகோவா என் கணவரை நிச்சயமா உயிர்த்தெழுப்புவார்னு நான் நம்பிக்கையா இருக்குறேன்” என்று அவர் சொல்கிறார்.—பிலி. 4:6, 7.

தம் ஊழியர்களுடைய ஜெபங்களைக் கேட்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 65:2) அவரை உண்மையோடு சேவிப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதனால், எந்தவொரு கஷ்டம் வந்தாலும் சரி, தமக்கு உண்மையாக இருக்க யெகோவா உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்.

சகோதர சகோதரிகளோடு நெருங்கியிருங்கள்

கஷ்டங்களை சகிக்க சபையிலுள்ள அன்பான சகோதர சகோதரிகள் மூலமாகவும் யெகோவா நமக்கு உதவி செய்கிறார். தெசலோனிக்கேயாவில் இருந்த சகோதரர்கள் பயங்கரமான துன்புறுத்துதலை எதிர்ப்பட்டபோது பவுல் அவர்களிடம், “ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருங்கள்” என்று சொன்னார். (1 தெ. 2:14; 5:11) தெசலோனிக்கேயாவில் இருந்த சகோதரர்கள் ஒன்றாகக் கூடிவந்தார்கள், ஒருவரோடு ஒருவர் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார்கள். அதனால்தான், சபையிலிருந்த சகோதர சகோதரிகளால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடிந்தது. அவர்களைப் போலவே நாமும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

சபையில் இருக்கிறவர்களோடு நாம் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஒருவரையொருவர் பலப்படுத்த வேண்டும். (ரோ. 14:19) அதுவும் கஷ்டமான சமயங்களில் இப்படி செய்வது ரொம்பவே முக்கியம். பவுல் பல துன்புறுத்துதல்களை அனுபவித்தாலும் அதை சகிப்பதற்கு தேவையான பலத்தை யெகோவா அவருக்குக் கொடுத்தார். சில சமயங்களில், சக விசுவாசிகள் மூலமாகவும் அவருக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்தார். அதனால்தான் கொலோசெ சபையில் இருந்தவர்கள், ‘எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்’ என்று பவுல் சொன்னார். (கொலோ. 4:10, 11) அந்த சகோதரர்களுக்கு பவுல்மீது ஆழமான அன்பு இருந்தது. அதனால் அவர் கஷ்டப்பட்டபோது அவருக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருந்தார்கள். நீங்களும் உங்கள் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளிடம் இருந்து அதேபோல் ஆறுதலையும் உற்சாகத்தையும் பெற்றிருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

மூப்பர்களிடம் உதவி கேளுங்கள்

கிறிஸ்தவ சபையில் யெகோவா நமக்கு மூப்பர்களைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் நமக்கு உற்சாகத்தையும் பைபிளில் இருந்து அறிவுரைகளையும் கொடுக்கிறார்கள். அவர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள் என்று ஏசாயா சொன்னார். (ஏசா. 32:2) இதைப் படிக்கும்போது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! அப்படியென்றால், நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மூப்பர்களிடம் பேசுங்கள். அவர்கள் கொடுக்கிற உற்சாகமும் உதவியும் பிரச்சினையை சகிக்க உங்களுக்கு உதவும்.

மூப்பர்களால் நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. அவர்களும் நம்மைப் போல் “குறைபாடுகள் உள்ள மனிதர்கள்தான்.” (அப். 14:15) இருந்தாலும் அவர்களிடம் உங்கள் பிரச்சினையைப் பற்றி பேசும்போது, அவர்கள் உங்களுக்காக ஜெபம் செய்வார்கள். அப்போது, உங்கள் மனதில் இருக்கும் பாரம் எல்லாம் குறைந்தது போல் உணர்வீர்கள்! (யாக். 5:14, 15) உதாரணத்திற்கு, இத்தாலியில் இருக்கும் ஒரு சகோதரருக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்தார்கள் என்று கவனியுங்கள். அவர் பல வருடங்களாக தீராத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார்: “சகோதரர்கள் என்னை அடிக்கடி வந்து பார்த்தாங்க, என் மேல அன்பு காட்டுனாங்க. என்னோட வியாதியை சகிக்க இதெல்லாம் உதவியா இருந்தது.” நீங்களும் ஏதாவது கஷ்டத்தில் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.

யெகோவாவுடைய சேவையிலேயே மூழ்கியிருங்கள்

யெகோவாவுடைய சேவையிலேயே நாம் மூழ்கியிருந்தால் நம்முடைய கஷ்டங்களை எல்லாம் நம்மால் சகிக்க முடியும். ஜான் என்ற சகோதரரும் அதைத்தான் செய்தார். ஜானுக்கு 39 வயது இருக்கும்போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. “இந்த சின்ன வயசுல எனக்கு இப்படி ஒரு வியாதியா, இது நியாயமே இல்ல” என்று அவர் புலம்பினார். அவருடைய மனைவியையும் 3 வயது பிள்ளையையும் நினைத்து ரொம்பவே வேதனைப்பட்டார். அவர் சொல்கிறார், “குழந்தையை மட்டுமில்ல என்னையும் என் மனைவிதான் கவனிச்சிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் அவதான் என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவாள்.” கீமோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கொண்டதால் ஜான் அதன் பாதிப்புகளால் அவதிப்பட்டார். உடம்பில் சக்தியே இல்லாமல் துவண்டுபோனார். இது போதாதென்று, திடீரென அவருடைய அப்பாவும் படுத்த படுக்கையாகிவிட்டார். அதனால், அவருடைய அப்பாவையும் யாராவது கூடவே இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தக் கஷ்டமான சூழ்நிலையை ஜானும் அவருடைய குடும்பத்தாரும் எப்படி சமாளித்தார்கள்? ஜான் உடலளவில் சோர்ந்திருந்தாலும் அவரும் அவருடைய குடும்பமும் யெகோவாவை சேவிப்பதிலேயே மூழ்கியிருக்கும்படி பார்த்துக்கொண்டார். அவர் சொல்கிறார்: “நாங்க கூட்டத்துக்கும் வெளி ஊழியத்துக்கும் தவறாம போயிடுவோம். என்னோட உடல்நிலை எவ்ளோ மோசமா இருந்தாலும் சரி, குடும்ப வழிபாட்டை நாங்க தவறவிடவே மாட்டோம்.” யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலமாக வைக்கும்போதுதான் எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்க முடியும் என்பதை ஜான் புரிந்துகொண்டார். கஷ்டமான சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு ஜான் சொல்லும் ஆலோசனை இதுதான்: “இந்த மாதிரியான பிரச்சினையை எல்லாம் எதிர்ப்படும்போது ஆரம்பத்துல அதிர்ச்சியாதான் இருக்கும். ஆனா, யெகோவா நமக்கு மனசமாதானத்தையும் தெம்பையும் கொடுக்கும்போது மனசுல இருக்கிற பாரமெல்லாம் அப்படியே கரைஞ்சிடும். யெகோவா என்னை பலப்படுத்தி இருக்குறார்னா உங்களையும் நிச்சயமா பலப்படுத்துவார்.”

நீங்கள் கஷ்டத்தில் தவிக்கும்போது, ‘தொடர்ந்து சகித்திருங்கள்’ என்று பவுல் சொன்ன வார்த்தைகளை எப்போதும் யோசித்துப் பாருங்கள். ஜெபம் செய்வதன் மூலமாக யெகோவாவையே நம்பி இருங்கள், சகோதர சகோதரிகளோடு நெருங்கி இருங்கள், மூப்பர்களிடம் உதவி கேளுங்கள், யெகோவாவை சேவிப்பதிலேயே மூழ்கியிருங்கள். அப்போது, எந்தவொரு கஷ்டத்தையும் சகிக்க யெகோவா உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்!

^ பாரா. 2 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.