Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 1

மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 1

“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.”—மத். 6:9.

1. மத்தேயு 6:9-13-ல் உள்ள இயேசுவின் மாதிரி ஜெபத்தை ஊழியத்தில் நாம் எப்படி பயன்படுத்துகிறோம்?

மத்தேயு 6:9-13-ல் உள்ள இயேசுவின் மாதிரி ஜெபத்தை இன்று நிறையப் பேர் மனப்பாடமாக சொல்கிறார்கள். ஊழியத்தில் நாமும் இந்த ஜெபத்தை மற்றவர்களுக்கு விளக்குகிறோம். உதாரணத்திற்கு கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது, அது சீக்கிரத்தில் இந்த முழு பூமியையும் ஒரு அழகிய தோட்டமாக மாற்றப் போகிறது என்று சொல்கிறோம். “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளைக் காட்டி கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்றும் அந்தப் பெயரை நாம் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் விளக்குகிறோம்.—மத். 6:9.

2. இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தை அப்படியே மனப்பாடமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று எப்படி சொல்லலாம்?

2 இயேசு அவர் சொல்லிக்கொடுத்த ஜெபத்தை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மனப்பாடமாக சொல்ல வேண்டும் என்று சொன்னாரா? இல்லை. ‘ஜெபம் செய்யும்போது சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்’ என்றுதான் சொன்னார். (மத். 6:7) இன்னொரு சமயத்திலும், இயேசு தம் சீடர்களுக்கு ஜெபம் செய்ய சொல்லிக்கொடுத்தார். அப்போது இயேசு இதே ஜெபத்தைதான் சொன்னார், ஆனால் முன்பு பயன்படுத்தின அதே வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. (லூக். 11:1-4) நாம் எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கத்தான் இயேசு அந்த ஜெபத்தை சொன்னார்.

3. நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

3 இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தைப் பற்றி இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது, ‘இன்னும் நல்லா ஜெபம் செய்றதுக்கு இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபம் எனக்கு எப்படி உதவும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். முக்கியமாக, ‘அந்த ஜெபத்துல சொல்லி இருக்கிற மாதிரி நான் வாழ்றேனா?’ என்றும் கேட்டுக்கொள்ளுங்கள்.

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே”

4. “எங்கள் தகப்பனே” என்ற வார்த்தையிலிருந்து நாம் எதைப் புரிந்துகொள்கிறோம்? யெகோவா நமக்கு எப்படி அப்பாவாக இருக்கிறார்?

4 இயேசு இந்த ஜெபத்தை “எங்கள் தகப்பனே” என்று சொல்லி ஆரம்பிக்கிறார். அப்படியென்றால் உலகம் முழுவதிலும் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு யெகோவா அப்பாவாக இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். (1 பே. 2:17) பரலோகத்தில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் கடவுளை “அப்பா” என்று அழைக்கிறார்கள். (ரோ. 8:15-17) அதேசமயம், பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்களும் யெகோவாவை “அப்பா” என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், யெகோவாதான் அவர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள், ‘கடவுளுடைய பிள்ளைகள்’ என்று எப்போது அழைக்கப்படுவார்கள்? பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை கிடைத்த பிறகு அவர்கள் கடைசியாக சோதிக்கப்படுவார்கள். அப்போது, அவர்கள் கடவுளுக்கு உண்மையாக இருந்தால் ‘கடவுளுடைய பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள்.—ரோ. 8:21; வெளி. 20:7, 8.

5, 6. பிள்ளைகளுக்குப் பெற்றோர் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த பரிசு எது? பிள்ளைகளும் என்ன செய்ய வேண்டும்? (ஆரம்பப் படம்)

5 யெகோவாவை ஒரு அன்பான அப்பாவாகப் பார்க்கவும் அவரிடம் ஜெபம் செய்யவும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த பரிசு இதுதான்! தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வட்டாரக் கண்காணி இப்படி சொல்கிறார்: ‘என் பிள்ளைங்க பிறந்ததுல இருந்தே நான் ஒவ்வொரு நாளும் அவங்களோட சேர்ந்து ஜெபம் செய்வேன். நான் வீட்டுல இல்லன்னா மட்டும்தான் அப்படி செய்ய முடியாம போயிடும். இப்போகூட என் பொண்ணுங்க அதை பத்தி யோசிச்சு பார்ப்பாங்க. அந்த சமயத்துல நான் என்ன சொன்னேனு எல்லாம் அவங்களுக்கு ஞாபகம் இல்லை. ஆனா, அப்போ இருந்த அமைதியான சூழல, யெகோவாகிட்ட பயபக்தியோட ஜெபம் செஞ்சதை எல்லாம் அவங்க இன்னமும் ஞாபகம் வைச்சிருக்காங்க. அவங்க கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம், அவங்களையே சத்தமா ஜெபம் செய்ய சொல்லுவேன். அதனால, அவங்க மனசுல இருக்கிறத என்னால தெரிஞ்சிக்க முடிஞ்சது. மாதிரி ஜெபத்துல இருக்குற முக்கியமான விஷயங்களுக்காக ஜெபம் செய்யவும் அவங்களுக்கு சொல்லி கொடுத்தேன். சின்ன வயசுல இருந்தே நல்லா ஜெபம் செய்றதுக்கு இது அவங்களுக்கு உதவியா இருந்துச்சு.’

6 அவருடைய இரண்டு மகள்களும் சிறு வயதிலிருந்தே யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொண்டார்கள். இப்போது அவர்கள் இரண்டு பேருமே தங்கள் கணவர்களோடு சேர்ந்து முழு நேர சேவை செய்கிறார்கள். பெற்றோர்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த பரிசை கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்கவும் அவரோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். ஆனால், அந்த நட்பு நீடிக்க வேண்டுமென்றால் பிள்ளைகள்தான் அதற்குத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.—சங். 5:11, 12; 91:14.

“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”

7. நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்ன, ஆனால் நாம் எப்படி நடந்துகொள்ளக் கூடாது?

7 கடவுளுடைய பெயரை நாம் தெரிந்து வைத்திருப்பதும் அவருடைய ‘பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியாக’ இருப்பதும் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்! (அப். 15:14; ஏசா. 43:10) அதனால்தான், நாம் யெகோவாவிடம், “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபம் செய்கிறோம். அதோடு, சொல்லிலும் செயலிலும் அவருக்குக் கெட்ட பெயர் கொண்டுவராமல் இருக்க உதவும்படியும் நாம் ஜெபிக்கிறோம். ஆனால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சிலரைப் போல் நாம் இருக்கக் கூடாது. மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்த விஷயங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை. அதனால்தான் பவுல் அவர்களை பார்த்து, “உங்களால் கடவுளுடைய பெயர் புறதேசத்தார் மத்தியில் நிந்திக்கப்பட்டு வருகிறது” என்று சொன்னார்.—ரோ. 2:21-24.

8, 9. தம் பெயரைப் பரிசுத்தப்படுத்த விரும்புகிறவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்கிறார்?

8 யெகோவாவுக்குக் கெட்ட பெயர் கொண்டுவராமல் இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்கிறோம். நார்வேயில் இருக்கும் ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடைய மகனுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவர் தன் கணவரை இழந்தார். தனிமரமாக தவித்த அந்த சகோதரி இப்படி சொன்னார்: “என் வாழ்க்கையிலேயே ரொம்ப கஷ்டமான சமயம் அதுதான். நான் மனந்தளர்ந்துட கூடாதுனு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். நான் எடுக்குற சின்ன சின்ன தீர்மானம்கூட யெகோவாவுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்... சாத்தான் யெகோவாவை நிந்திக்கிறதுக்கு நான் எந்த விதத்துலயும் காரணமாயிட கூடாதுனும்... ஜெபம் செஞ்சேன். யெகோவாவோட பெயரை நான் பரிசுத்தப்படுத்தணும், புதிய உலகத்துல என் மகன் அவனோட அப்பாவை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.”—நீதி. 27:11.

9 அந்த சகோதரியின் ஜெபத்திற்கு யெகோவா பதில் கொடுத்தாரா? ஆம், கொடுத்தார்! சகோதர சகோதரிகளோடு நெருங்கி பழகியது அந்த சகோதரிக்கு உற்சாகத்தைத் தந்தது. 5 வருடங்களுக்குப் பிறகு அவர் ஒரு மூப்பரை கல்யாணம் செய்துகொண்டார். இப்போது அந்த சகோதரியின் மகனுக்கு 20 வயது, அவர் ஞானஸ்நானமும் எடுத்துவிட்டார். “என் பையனை வளர்க்க என் கணவர் எனக்கு ரொம்ப உதவியா இருந்தார்” என்று அந்த சகோதரி சொல்கிறார்.

10. யெகோவா தம் பெயரை எப்போது முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவார்?

10 தம்மை மதிக்காதவர்களையும் தம்மை ராஜாவாக ஏற்றுக்கொள்ளாதவர்களையும் யெகோவா சீக்கிரத்தில் அழிக்கப் போகிறார். இதை செய்வதன் மூலம், யெகோவா தம் பெயரை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவார். (எசேக்கியேல் 38:22, 23-ஐ வாசியுங்கள்.) அப்போது, மனிதர்கள் எல்லாருக்கும் பாவத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கும். வானத்திலும் பூமியிலும் இருக்கும் எல்லாரும் யெகோவாவையே வணங்குவார்கள், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள். அப்போது, நம் அன்பான அப்பா யெகோவா “எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.”—1 கொ. 15:28.

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

11, 12. யெகோவா தம் மக்களுக்கு எந்த விஷயத்தை 1876-ல் தெரியப்படுத்தினார்?

11 இயேசு பரலோகத்திற்குப் போவதற்கு கொஞ்சம் முன்பு சீடர்கள் அவரிடம், “எஜமானே, இக்காலத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சமயம் இன்னும் வரவில்லை என்று சொன்னார். அதுவரை ஒரு முக்கியமான வேலையில், அதாவது நற்செய்தியை சொல்லும் வேலையில், சுறுசுறுப்பாக ஈடுபடும்படி அவர்களிடம் சொன்னார். (அப்போஸ்தலர் 1:6-8-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும் என்றும் ஜெபிக்க சொன்னார்; அதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும் சொன்னார். அதனால்தான், நாமும் கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென்று ஜெபம் செய்கிறோம்.

12 இயேசு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்கான சமயம் நெருங்கியது. அப்போது, எந்த வருடத்தில் இயேசு ஆட்சி செய்ய ஆரம்பிப்பார் என்பதை யெகோவா தம்முடைய மக்களுக்குத் தெரியப்படுத்தினார். உதாரணத்திற்கு 1876-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸல், “புறதேசத்தாரின் காலங்கள்: அவை எப்போது முடிவடையும்?” என்ற கட்டுரையை எழுதினார். அதில், தானியேல் தீர்க்கதரிசி சொன்ன ‘ஏழு காலங்களும்’ இயேசு சொன்ன ‘புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்களும்’ ஒன்றுதான் என்று சொன்னார். இந்தக் காலங்கள் 1914-ல் முடிவடையும் என்பதையும் ரஸல் அந்தக் கட்டுரையில் விளக்கியிருந்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—தானி. 4:16; லூக். 21:24.

13. 1914-ல் என்ன நடந்தது, அந்தச் சமயத்திலிருந்து உலகத்தில் நடந்த சம்பவங்கள் எதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன?

13 முதல் உலகப் போர் 1914-ல் ஐரோப்பாவில் ஆரம்பித்தது; அது சீக்கிரமே உலகம் முழுவதும் பரவியது. போரினால் பயங்கரமான பஞ்சங்களும் ஏற்பட்டன. போர் முடியும் சமயத்தில், அதாவது 1918-ல் ஒரு மோசமான கொள்ளை நோய் பரவ ஆரம்பித்தது. போரினால் இறந்தவர்களைவிட இந்தக் கொள்ளை நோயினால் இறந்தவர்கள்தான் அதிகம்! இவை எல்லாமே இயேசு சொன்ன ‘அடையாளத்தின்’ பாகமாக இருந்தன. இந்த அடையாளம், இயேசு 1914-ல் பரலோகத்தில் ராஜாவாக ஆனார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. (மத். 24:3-8; லூக். 21:10, 11) இதே வருடத்தில்தான் இயேசு, “ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுச் சென்றார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.” (வெளி. 6:2) அப்போது, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளினார். அதற்குப் பிறகு, “பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று அறிந்து மிகுந்த கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்” என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—வெளி. 12:7-12.

14. (அ) கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென்று நாம் ஏன் இன்னமும் ஜெபிக்கிறோம்? (ஆ) என்ன முக்கியமான வேலையை நாம் செய்ய வேண்டும்?

14 இயேசு ராஜாவாக ஆன சமயத்தில் பூமியில் ஏன் பயங்கரமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன என்பதைப் புரிந்துகொள்ள வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம் நமக்கு உதவும். இயேசு இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டு இருந்தாலும் சாத்தான்தான் இந்தப் பூமியை இன்னமும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறான். இருந்தாலும், சீக்கிரத்தில் இயேசு ‘ஜெயித்து முடிக்க போகிறார்,’ அதாவது, இந்தப் பூமியில் இருக்கும் எல்லா பொல்லாத காரியங்களையும் அழிக்கப் போகிறார். அதுவரைக்கும், கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென நாம் ஜெபிக்கலாம், நற்செய்தியை சொல்லும் வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபடலாம். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்ற தீர்க்கதரிசனம் நாம் செய்யும் பிரசங்க வேலையின் மூலமாக நிறைவேறி வருகிறது.—மத். 24:14.

‘உங்களுடைய சித்தம் பூமியில் செய்யப்பட வேண்டும்’

15, 16. கடவுளுடைய விருப்பம் பூமியில் செய்யப்பட வேண்டும் என்று ஜெபித்தால் மட்டும் போதுமா? விளக்குங்கள்.

15 சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பு கடவுளுடைய சித்தம், அதாவது விருப்பம், பூமியில் செய்யப்பட்டு வந்தது. அதனால்தான், யெகோவா தாம் படைத்த எல்லாவற்றையும் பார்த்தபோது “அது மிகவும் நன்றாயிருந்தது” என்று சொன்னார். (ஆதி. 1:31) அதற்குப் பிறகு, சாத்தான் யெகோவாவுக்கு விரோதமாக நடந்தான். அந்த சமயத்திலிருந்து, பெரும்பாலான மக்கள் யெகோவாவின் விருப்பத்தை செய்யவில்லை. ஆனால் இன்று, சுமார் 80 லட்ச மக்கள் யெகோவாவை உண்மையோடு சேவிக்கிறார்கள். கடவுளுடைய விருப்பம் பூமியில் நிறைவேற வேண்டும் என்று ஜெபிக்கிறார்கள். அதோடு, கடவுளுடைய விருப்பத்தையும் செய்கிறார்கள். யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் அவர்கள் வாழ்கிறார்கள், அவருடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் மும்முரமாக சொல்கிறார்கள்.

கடவுளுடைய விருப்பத்திற்கு இசைவாக வாழ உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களா? (பாரா 16)

16 ஆப்பிரிக்காவில் ஒரு மிஷனரியாக சேவை செய்த 80 வயது சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் 1948-ல் ஞானஸ்நானம் எடுத்தார். அந்த சகோதரி இப்படி சொல்கிறார்: “அழிவு வர்றதுக்கு முன்னாடியே செம்மறியாடு போல இருக்கிற எல்லாரும் யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னு நான் ஜெபம் செய்வேன். ஒருத்தர்கிட்ட சாட்சி கொடுக்குறதுக்கு முன்னாடி, அவங்களோட மனசை தொடுற விதத்துல பேசுறதுக்கு ஞானம் கொடுங்கனு யெகோவாகிட்ட கேட்பேன். செம்மறியாடு போல இருக்கிற ஆட்களை கண்டுபிடிச்சா அவங்களுக்கு உதவி செய்ய நான் எடுக்கிற முயற்சிகளை ஆசீர்வதியுங்கனும் கேட்பேன்.” இந்த சகோதரி, யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள நிறையப் பேருக்கு உதவியிருக்கிறார். இவரைப் போலவே, யெகோவாவின் விருப்பத்தை மும்முரமாக செய்யும் வயதான சகோதர சகோதரிகள் யாராவது உங்கள் நினைவிற்கு வருகிறார்களா?பிலிப்பியர் 2:17-ஐ வாசியுங்கள்.

17. எதிர்காலத்தில் யெகோவா தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றும்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

17 பூமியில் இருக்கும் தம்முடைய எதிரிகளை யெகோவா சீக்கிரத்தில் அழிக்கப் போகிறார். அதுவரை, அவருடைய விருப்பம் பூமியில் செய்யப்பட வேண்டும் என்று நாம் ஜெபம் செய்துகொண்டிருப்போம். அதற்குப் பிறகு, இந்தப் பூமி ஒரு அழகிய தோட்டமாக மாறும்; இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். அதனால்தான், “வேளை வரப்போகிறது; அப்போது, கல்லறைகளில் உள்ள அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 5:28, 29) நம் அன்புக்குரியவர்களை வரவேற்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! நம்முடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.” (வெளி. 21:4) உயிரோடு வரப்போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அநீதிமான்களாக, அதாவது, யெகோவாவையும் இயேசுவையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாருக்கும் கடவுளுடைய விருப்பத்தைப் பற்றி நாம் சொல்லிக்கொடுப்போம்; அதனால், அவர்களும் ‘முடிவில்லா வாழ்வை’ அனுபவிப்பார்கள்.—அப். 24:15; யோவா. 17:3.

18. மனிதர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான தேவைகள் என்ன?

18 சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் பூமியில் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். அப்போது, அவருடைய பெயர் பரிசுத்தமாக்கப்படும். அதோடு, வானத்திலும் பூமியிலும் இருக்கும் எல்லாரும் கடவுளை ஒற்றுமையாக வணங்குவார்கள். இப்படி, மாதிரி ஜெபத்தில் இயேசு சொன்ன முதல் மூன்று விஷயங்கள் நிறைவேறும். இவைதான் மனிதர்களின் மிக முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. வேறு முக்கியமான தேவைகளுக்காகவும் ஜெபம் செய்யும்படி இயேசு அவருடைய மாதிரி ஜெபத்தில் சொல்லிக்கொடுத்தார். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 12 இந்தத் தீர்க்கதரிசனம் 1914-ல் நிறைவேறியது என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 215-218-ஐ பாருங்கள்.