நீங்கள் செய்யும் வேலையை யாரும் பார்க்கவில்லையா?
பெசலெயேலுக்கும் அகோலியாபுக்கும் கட்டுமான வேலை ஒன்றும் புதுசு கிடையாது. அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது செங்கல் அறுக்கும் வேலையை செய்தார்கள். அந்த வேலை அவர்களுக்கு ரொம்ப கடினமாக இருந்ததால் அதைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்க்கக்கூட விரும்பவில்லை. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு அருமையான வேலை காத்திருந்தது. அதாவது, ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும் மிகப்பெரிய வேலை காத்திருந்தது. அவர்கள் மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களாக ஆகவிருந்தார்கள். (யாத். 31:1-11) அவர்கள் செய்த அந்தப் பிரமிப்பூட்டும் வேலையை ஒரு சிலர்தான் பார்த்தார்கள், எல்லாரும் பார்க்கவில்லை. அதை நினைத்து அவர்கள் கவலைப்பட்டார்களா? அவர்கள் செய்த வேலையை யார் பார்த்தார்கள் என்பது உண்மையிலேயே முக்கியமா? நீங்கள் செய்யும் வேலையையும் யாரும் பார்க்கவில்லையா?
ஒரு சிலர்தான் பார்த்தார்கள்
ஆசரிப்புக் கூடாரத்தில் அழகான வேலைப்பாடுள்ள சில பொருட்கள் இருந்தன. உதாரணத்துக்கு, ஒப்பந்தப் பெட்டியின் மேல் இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு கேருபீன்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவை ‘மகிமையுள்ளதாக’ இருந்தது என்று அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார். (எபி. 9:5) பசும்பொன்னால் செய்யப்பட்ட அந்த கேருபீன்கள் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்!—யாத். 37:7-9.
அவர்கள் செய்த பொருட்கள் இன்று இருந்திருந்தால் அவற்றை எல்லாம் புகழ்பெற்ற ‘மியூசியத்தில்’ வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து, நிறைய பேர் பாராட்டியும் இருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் உருவாக்கிய சமயத்தில் அதனுடைய அழகை எத்தனை பேர் பார்த்து ரசித்திருப்பார்கள்? கேருபீன்கள், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட்டு இருந்ததால் அதை எல்லாரும் பார்த்திருக்க மாட்டார்கள். வருடத்துக்கு ஒரு முறை பாவநிவாரண நாளில், தலைமை குரு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போவார்; அதனால் அவர் மட்டும்தான் அதைப் பார்த்திருப்பார். (எபி. 9:6, 7) இப்படி, ஒரு சில மனிதர்கள் மட்டும்தான் அதன் அழகிய கைவேலைப்பாடுகளை எல்லாம் பார்த்தார்கள்.
திருப்தியாக இருங்கள்
அற்புதமான அந்தக் கைவேலைப்பாடுகளை உருவாக்க அவர்கள் கடினமாக உழைத்தார்கள். ஆனால், அதை ஒரு சிலர்தான் பார்த்தார்கள். பெசலெயேல்-அகோலியாப் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இன்று மக்கள், தங்கள் வேலையை யாராவது பார்த்து, பாராட்டும்போது எதையோ சாதித்துவிட்டது போல் உணருகிறார்கள். மற்றவர்கள் பாராட்டுவதை வைத்துதான், தாங்கள் நன்றாக வேலை செய்திருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், பெசலெயேலும் அகோலியாபும் அப்படி இல்லை. யெகோவா விரும்புவதை செய்ததாலும் அவருடைய அங்கீகாரம் இருந்ததாலும்தான் அவர்கள் திருப்தி அடைந்தார்கள். இன்று, நாமும் இவர்களைப் போல்தான் இருக்கிறோம்.
மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்கள் ஜெபம் செய்தார்கள். மத். 6:5, 6) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் செய்யும் ஜெபத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, யெகோவா என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். அதை வைத்துதான் நாம் செய்யும் ஜெபங்கள் எவ்வளவு மதிப்புள்ளதாக இருக்கிறது என்று சொல்ல முடியும். இன்று நாம் செய்யும் பரிசுத்த சேவைக்கும் இது பொருந்தும். நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் பாராட்டுகிறார்களா இல்லையா என்பது முக்கியம் இல்லை. நம் வேலையைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்!
ஆனால் இயேசு இப்படி சொன்னார்: “நீங்களோ ஜெபம் செய்யும்போது, தனி அறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள். எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் அதைப் பார்த்து உங்களுக்குப் பலன் அளிப்பார்.” (ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டி முடித்தபோது, “ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” என்று பைபிள் சொல்கிறது. (யாத். 40:34) பெசலெயேல்-அகோலியாப் செய்த வேலையை யெகோவா அங்கீகரித்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது! அந்த சமயத்தில், அவர்கள் 2 பேரும் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்கள் உருவாக்கின பொருட்களில் அவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுடைய உழைப்பை யெகோவா ஆசீர்வதித்தார் என்ற திருப்தி அவர்களுக்கு இருந்தது. (நீதி. 10:22) அவர்கள் உருவாக்கின பொருட்கள், யெகோவாவுடைய சேவையில் பல வருடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. அதைப் பார்த்து அவர்கள் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். புதிய உலகத்தில் பெசலெயேல்-அகோலியாப் மறுபடியும் உயிரோடு வருவார்கள். அப்போது, உண்மை வணக்கத்துக்காக அவர்கள் செய்த ஆசரிப்புக் கூடாரம் சுமார் 500 வருடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள்.
இன்று கடவுளுடைய அமைப்பிலும்கூட யார் ‘அனிமேஷன்’ செய்கிறார்கள், ஓவியம் வரைகிறார்கள், இசை அமைக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், மொழிபெயர்க்கிறார்கள், எழுதுகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அவர்கள் செய்யும் வேலையை யாருமே ‘பார்ப்பதில்லை.’ உலகம் முழுவதும் 1,10,000 சபைகளுக்கு மேல் இருக்கின்றன. சபைகளில் செய்யப்படும் எல்லா வேலைகளையும் எல்லாரும் பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, மாத இறுதியில் கணக்கு ஊழியர் செய்யும் வேலையை... சபை செயலர் ஊழிய அறிக்கை தயாரிப்பதை... ஒரு சகோதரரோ சகோதரியோ ராஜ்ய மன்றத்தில் ஏதாவது ‘ரிப்பேர்’ செய்வதை... யாரும் பார்ப்பதில்லை.
பெசலெயேல்-அகோலியாப் செய்த கைவேலைப்பாட்டுக்கும் கட்டுமான வேலைக்கும் எந்தப் பரிசுக் கோப்பையோ பதக்கமோ கிடைக்கவில்லை. அதைவிட விலைமுதிப்புள்ள ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது, அதுதான் யெகோவாவுடைய அங்கீகாரம்! அவர்களுடைய வேலையை மனிதர்கள் பார்த்தார்களோ இல்லையோ யெகோவா நிச்சயம் பார்த்தார். நாமும் நம் பரிசுத்த சேவையை அவர்களைப் போல் மனத்தாழ்மையாகவும் மனப்பூர்வமாகவும் செய்ய வேண்டும்.