Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நண்பர்கள் யார்?

உங்கள் நண்பர்கள் யார்?

“கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்.”—1 கொ. 15:33.

பாடல்கள்: 73, 119

1. நாம் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறோம்?

நாம் ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்கிறோம். 1914-ல் ‘கடைசி நாட்கள்’ ஆரம்பித்ததால் உலக நிலைமைகள் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகிக்கொண்டே போகின்றன. (2 தீ. 3:1-5) “பொல்லாதவர்களும் வஞ்சகர்களும் மேன்மேலும் மோசமாவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதனால், உலக நிலைமைகள் இன்று இருப்பதைவிட இன்னும் மோசமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.—2 தீ. 3:13.

2. எந்த மாதிரியான பொழுதுபோக்கை மக்கள் இன்று ஏற்றுக்கொள்கிறார்கள்? (ஆரம்பப் படம்)

2 பொழுதுபோக்குக்காக நிறைய பேர் அசிங்கமான படங்களையும் சண்டை காட்சிகளையும் பார்க்கிறார்கள். பேய் படங்கள், மேஜிக் காட்சிகள், மாயமந்திர நிகழ்ச்சிகளையும்கூட பார்க்கிறார்கள். பார்க்கிற விஷயங்களை அவர்களுடைய வாழ்க்கையிலும் செய்கிறார்கள். இதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை என்று இன்டர்நெட், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் மக்களை நம்ப வைக்கின்றன. ஒருகாலத்தில் மக்கள் தவறு என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் இன்று சர்வ சாதாரணமாக ஆகிவிட்டன. சில இடங்களில், சட்டமே இதையெல்லாம் அங்கீகரிக்கிறது. இந்த உலகம் இதையெல்லாம் சரி என்று ஏற்றுக்கொண்டாலும் யெகோவா இந்த விஷயங்களை எல்லாம் ஏற்றுக்கொள்வது கிடையாது.ரோமர் 1:28-32-ஐ வாசியுங்கள்.

3. கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்பவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

3 முதல் நூற்றாண்டில்கூட மக்கள் ஒழுக்கங்கெட்ட விஷங்களையும் சண்டை காட்சிகளையும் பார்த்தார்கள். ஆனால், இயேசுவுடைய சீடர்கள் அப்படியில்லை. யெகோவாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்தார்கள். அன்று இருந்த மக்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதனால் அவர்களை கேலி செய்தார்கள், கொடுமைப்படுத்தினார்கள். (1 பே. 4:4) கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்பவர்களை இன்றும்கூட மக்கள் ரொம்ப வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அதோடு, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் “துன்புறுத்தப்படுவார்கள்” என்று பைபிளும் சொல்கிறது.—2 தீ. 3:12.

கெட்ட சகவாசம்

4. நாம் ஏன் இந்த உலகத்தின்மீது அன்பு வைக்கக் கூடாது?

4 யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்றால் “இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீதோ” நாம் அன்பு வைக்கக் கூடாது. (1 யோவான் 2:15, 16-ஐ வாசியுங்கள்.) சாத்தான்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறான். அவனை இந்த “உலகத்தின் கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. மதங்கள், அரசாங்கங்கள், பொருளாதார அமைப்புகள், மீடியாக்கள் மூலம் மக்களை அவன் தவறாக வழிநடத்துகிறான். (2 கொ. 4:4; 1 யோ. 5:19) இந்த உலகம் போகிற போக்கில் போகாமல் இருக்க நாம் ‘கெட்ட சகவாசத்தை’ தவிர்க்க வேண்டும். “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்” என்று பைபிள் நம்மை தெளிவாக எச்சரிக்கிறது.—1 கொ. 15:33.

5, 6. யாரோடு நாம் பழகக் கூடாது, ஏன்?

5 யெகோவாவோடு இருக்கும் நட்பை இழக்கக்கூடாது என்றால் கெட்ட விஷயங்களை செய்பவர்களோடு நாம் பழகக் கூடாது. முக்கியமாக, யெகோவாவை வணங்குவதாக சொல்லிக்கொண்டு அவருக்குப் பிடிக்காததை செய்பவர்களோடு நாம் பழகக் கூடாது. ஒருவேளை அவர்கள் ஏதாவது ஒரு பெரிய தவறை செய்துவிட்டு, அதைத் திருத்திக்கொள்ளாமல் இருந்தால் அவர்களோடு பழகுவதையே நிறுத்த வேண்டும்.—ரோ. 16:17, 18.

6 கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் நம் நண்பர்களாக இருந்தால் நாமும் அவர்களைப் போலவே ஆகிவிடலாம். ஏனென்றால், நண்பர்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். உதாரணத்துக்கு, ஒழுக்கங்கெட்ட விஷயங்களை செய்பவர்களோடு பழகினால் நாமும் அவர்களைப் போலவே ஒழுக்கங்கெட்ட விஷயங்களை செய்துவிடுவோம். இந்த மாதிரியான கெட்ட சகவாசத்தினால் சில சகோதர சகோதரிகள் தவறான விஷயங்களை செய்திருக்கிறார்கள். செய்த தவறை உணராமல் போனதால் அவர்கள் சபை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். (1 கொ. 5:11-13) ஒருவேளை, செய்த தவறை அவர்கள் திருத்திக்கொள்ளவே இல்லை என்றால் அவர்களுடைய நிலைமை பேதுரு சொன்னதுபோல் ஆகிவிடும்.2 பேதுரு 2:20-22-ஐ வாசியுங்கள்.

7. நாம் யாரை நெருங்கிய நண்பராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

7 எல்லாரிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக யெகோவாவுக்குக் கீழ்ப்படியாத ஒருவரோடு நாம் நெருங்கி பழகக் கூடாது. யெகோவாவின் சாட்சியாக இல்லாத... அவருக்கு உண்மையாக இல்லாத... அவருடைய கட்டளைகளை மதிக்காத... ஒருவரை காதலிப்பது தவறு. யெகோவாவை நேசிக்காத ஒருவருக்குப் பிடித்த மாதிரி நடப்பதைவிட யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடப்பதுதான் ரொம்ப முக்கியம். யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் ஒருவர்தான் நம் நெருங்கிய நண்பராக இருக்க வேண்டும். “கடவுளுடைய சித்தத்தின்படி செய்கிறவர் எவரோ அவரே என் சகோதரராக, என் சகோதரியாக, என் தாயாக இருக்கிறார்” என்று இயேசு சொன்னார்.—மாற். 3:35.

8. கெட்ட மக்களோடு பழகியதால் இஸ்ரவேலர்களுக்கு என்ன ஆனது?

8 கெட்ட நண்பர்களோடு பழகினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு இஸ்ரவேலர்களுடைய உதாரணத்தைக் கவனியுங்கள். கானான் தேசத்திற்குள் போவதற்கு முன்பு யெகோவா அவர்களை இப்படி எச்சரித்தார்: “நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்.” (யாத். 23:24, 25) இந்த எச்சரிப்புக்கு நிறைய இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியவில்லை. அவருக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டார்கள். (சங். 106:35-39) அதனால், யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டு கிறிஸ்தவ சபையை அவருடைய சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்தார்.—மத். 23:38; அப். 2:1-4.

கவனமாக இருங்கள்

9. இந்த உலகத்தில் இருக்கும் மீடியாக்களில் என்ன ஆபத்து இருக்கின்றன?

9 இந்த உலகத்தில் இருக்கும் மீடியாக்கள்—டிவி நிகழ்ச்சிகள், வெப்சைட்டுகள், புத்தகங்கள் போன்றவை யெகோவாவோடு நமக்கிருக்கும் நட்பை கெடுத்துவிடலாம். யெகோவா மீதும் அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்க இவை எல்லாம் உதவி செய்யாது. சாத்தானுடைய இந்தக் கெட்ட உலகத்தை நம்பி வாழத்தான் நம்மை தூண்டும். அதனால் நாம் எதை வாசிக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். “உலக ஆசைகளை” தூண்டும் எல்லாவற்றையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும்.—தீத். 2:12.

10. மீடியாக்களுக்கு என்ன ஆகும்?

10 சீக்கிரமாக சாத்தானுடைய இந்த உலகமும் அதனுடைய மீடியாக்களும் அழியப்போகின்றன. அதனால்தான், “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 2:17) “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்” என்றும் “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்றும் பைபிள் சொல்கிறது. மக்கள் எவ்வளவு நாள் சந்தோஷமாக வாழ்வார்கள்? “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங். 37:9, 11, 29.

11. யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறார்?

11 என்றென்றும் வாழ சாத்தானுடைய உலகம் நமக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை. ஆனால், யெகோவாவின் அமைப்பு நமக்குப் பல வழிகளில் உதவி செய்கிறது. இயேசு யெகோவாவிடம் இப்படி ஜெபம் செய்தார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.” (யோவா. 17:3) யெகோவா அவருடைய அமைப்பின் மூலமாக அவரைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார். நம் வெப்சைட், பத்திரிகைகள், புத்தகங்கள், வீடியோக்கள் எல்லாம் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய நமக்கு உதவுகின்றன. உலகம் முழுவதும் 1,10,000-கும் அதிகமான சபைகள் இருக்கின்றன. அங்கு நடக்கும் கூட்டங்களில் யெகோவாவைப் பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதோடு, மாநாடுகளிலும் யெகோவாவைப் பற்றி நிறைய கற்றுக்கொள்கிறோம். இவை எல்லாம் யெகோவா மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் நம் நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன.—எபி. 10:24, 25.

யாரை கல்யாணம் செய்ய வேண்டும்?

12. கல்யாணம் செய்ய நினைப்பவர்களுக்கு பைபிள் என்ன கட்டளை கொடுக்கிறது?

12 நீங்கள் கல்யாணம் செய்யப் போகிறீர்களா? உங்கள் வாழ்க்கை துணையாக யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால், “விசுவாசிகளாக இல்லாதவர்களுடன் பிணைக்கப்படாதீர்கள். நீதிக்கும் அநீதிக்கும் உறவேது? ஒளிக்கும் இருளுக்கும் தொடர்பேது?” என்று பைபிள் சொல்கிறது. (2 கொ. 6:14) அதோடு, “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்ய வேண்டும் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. அதாவது, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் எடுத்த... யெகோவாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற... ஒருவரையே கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. (1 கொ. 7:39) அப்படி செய்யும்போது, கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க உங்கள் வாழ்க்கை துணை உதவி செய்வார்.

13. கல்யாணத்தைப் பற்றி இஸ்ரவேலர்களுக்குக் யெகோவா என்ன கட்டளை கொடுத்தார்?

13 நமக்கு எது நல்லது என்று நம்மைவிட யெகோவாவுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால்தான், “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை யெகோவா நமக்குக் கொடுக்கிறார். இதே போன்ற கட்டளையை யெகோவா அவருடைய மக்களுக்கு எப்போதும் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்களை சுற்றி இருந்தவர்கள் யெகோவாவை வணங்காதவர்களாக இருந்ததால் மோசே மூலம் யெகோவா அவர்களிடம் இப்படி சொன்னார்: “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.”—உபா. 7:3, 4.

14, 15. யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாததால் சாலொமோனுக்கு என்ன ஆனது?

14 சாலொமோன் இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவான உடனே, ஞானத்துக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். யெகோவா அவருக்கு நிறைய ஞானம் கொடுத்தார். சாலொமோனுடைய ஞானத்தைப் பற்றி சுற்றியிருந்த எல்லா நாட்டு மக்களும் கேள்விப்பட்டார்கள். சாலொமோனுடைய ஞானத்தைக் கேள்விப்பட்டு, சேபா நாட்டு ராணி அவரைப் பார்க்க வந்தார். “நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது” என்று சாலொமோனிடம் சொன்னார். (1 இரா. 10:7) இவ்வளவு ஞானம் இருந்தும் கல்யாணத்தைப் பற்றி யெகோவா கொடுத்த கட்டளைக்குக் சாலொமோன் கீழ்ப்படியாமல் போனார்.—பிர. 4:13.

15 யெகோவா சாலொமோனை நிறையவே ஆசீர்வதித்திருந்தார். இருந்தாலும் சாலொமோன் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்? ஏனென்றால், அவர் யெகோவாவை வணங்காத வேறு நாட்டு பெண்கள்மீது ஆசைப்பட்டார். அவருக்கு 700 மனைவிகளும் 300 மறுமனைவிகளும் இருந்தார்கள். சாலொமோனுக்கு வயதானபோது, இவர்கள் எல்லாரும் தங்களுடைய தெய்வங்களை அவர் வணங்கும்படி செய்தார்கள். அதனால், யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களை சாலொமோன் செய்தார். (1 இரா. 11:1-6) கெட்ட சகவாசத்தினால் சாலொமோன் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டார். ஞானியான சாலொமோனுக்கே இப்படி நடந்தது என்றால், இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால்தான், யெகோவாவை நேசிக்காத ஒருவரை கல்யாணம் செய்வதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்கக் கூடாது.

16. யெகோவாவின் சாட்சியாக இல்லாத துணையிடம் ஒரு கணவனோ மனைவியோ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

16 கல்யாணத்துக்குப் பிறகு மனைவி மட்டும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகலாம். அப்போது, அந்த மனைவி யெகோவாவை வணங்காத அவருடைய கணவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ‘மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே உங்கள் நடத்தையினாலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:1, 2) இந்த ஆலோசனை மனைவிகளுக்குக் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இது கணவர்களுக்கும் பொருந்தும். பைபிள் ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்கிறது: ஒரு நல்ல கணவராக, மனைவியாக இருங்கள். கல்யாணத்தைப் பற்றி யெகோவா தரும் ஆலோசனைகளின்படி நடங்கள். அப்போது, வாழ்க்கையில் நீங்கள் செய்திருக்கும் நல்ல மாற்றங்களைப் பார்த்து உங்கள் துணையும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகலாம். நிறைய கணவன்-மனைவிக்கு இந்த மாதிரியான அனுபவம் இருக்கிறது.

யெகோவாவை நேசிப்பவர்களோடு பழகுங்கள்

17, 18. நோவாவும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் ஏன் உயிர் தப்பினார்கள்?

17 யெகோவாவை நேசிக்காதவர்களோடு பழகினால் நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடலாம். ஆனால், யெகோவாவை நேசிப்பவர்களோடு பழகினால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். இதற்கு நோவா ஒரு நல்ல உதாரணம். நோவா வாழ்ந்த காலத்தில் ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகியிருந்தது.’ ‘அவர்களுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக இருந்தது.’ (ஆதி. 6:5) மக்கள் அவ்வளவு மோசமானவர்களாக இருந்ததால் யெகோவா அவர்களை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், நோவா அந்தக் கெட்ட மக்களைப் போல் இருக்கவில்லை. அவர் ‘நீதிமானும் உத்தமனுமாய் இருந்தார்; நோவா தேவனோடே சஞ்சரித்தார் [நடந்தார்]’ என்று பைபிள் சொல்கிறது.—ஆதி. 6:7-9.

18 யெகோவாவை நேசிக்காத ஆட்களோடு நோவா பழகவில்லை. அவரும் அவருடைய குடும்பமும் கப்பலைக் கட்டுவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள். அதோடு, நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பே. 2:5) நோவா, அவருடைய மனைவி, 3 மகன்கள், 3 மருமகள்கள் எல்லாரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்; ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகினார்கள். யெகோவாவுக்குப் பிடித்த விஷயங்களை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள். அதனால், பெருவெள்ளம் வரும்போது அவர்கள் உயிர் தப்பினார்கள். நாம் எல்லாரும் நோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும். ஏனென்றால், நோவாவும் அவருடைய குடும்பமும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததாலும் கெட்டவர்களோடு பழகாமல் இருந்ததாலும்தான் நாம் அவருடைய வம்சத்திலிருந்து வந்திருக்கிறோம். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களும் யெகோவாவை நேசிக்காதவர்களோடு பழகவில்லை. யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால்தான் கி.பி. 70-ல் எருசலேம் அழியும்போது அவர்கள் உயிர் தப்பினார்கள்.—லூக். 21:20-22.

யெகோவாவை நேசிப்பவர்களோடு பழகும்போது புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும் (பாரா 19)

19. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க எது நமக்கு உதவும்?

19 நோவா, அவருடைய குடும்பம், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எல்லாரும் யெகோவாவை நேசிக்காதவர்களோடு பழகவில்லை. நாமும் அவர்களைப் போலவே இருக்கிறோம். யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கும் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் நமக்கு இருக்கிறார்கள். இவர்களை நம் நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கலாம். இந்தக் கடைசி நாட்களில் நாம் “விசுவாசத்தில் உறுதியாக” இருக்க இவர்கள் நமக்கு உதவுவார்கள். (1 கொ. 16:13; நீதி. 13:20) வரப்போகும் அழிவிலிருந்து தப்பித்து புதிய உலகத்தில் வாழும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! அதனால், இன்று கெட்ட ஆட்களோடு பழகாமல் இருப்பது எவ்வளவு முக்கியம்!