வாழ்க்கை சரிதை
தீவுகள் மகிழ்ந்தன
மே 22, 2000. என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள்! நானும் மத்த நாட்டுல இருந்து வந்திருந்த சகோதரர்களும் ஆளும் குழுவுல இருக்கிற எழுத்துக் குழுக்காக காத்துக்கிட்டு இருந்தோம். எங்களுக்கு ஒரே பதட்டமா இருந்தது. மொழிபெயர்ப்பு வேலையில என்ன பிரச்சினை இருக்குனும் அதை தீர்க்க என்ன செய்யலாம்னும் சில வாரங்களா ஆராய்ச்சி செஞ்சிருந்தோம். இதை பத்தி எழுத்துக் குழுக்கிட்ட பேசுறதுக்காகத்தான் நாங்க காத்துக்கிட்டு இருந்தோம். இது ஏன் அவ்வளவு முக்கியம்னு யோசிக்கிறீங்களா? அதை சொல்றதுக்கு முன்னாடி முதல்ல நான் என்னை பத்தி சொல்றேன்.
என் அப்பா பேர் ரான், அம்மா பேர் எஸ்தெல். நான் 1955-ல ஆஸ்திரேலியாவுல இருக்கிற குயின்ஸ்லாந்துல பிறந்தேன். எங்க அம்மா அப்போதான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பிச்சாங்க. ஒரு வருஷத்துக்கு அப்புறம் அவங்க ஞானஸ்நானம் எடுத்தாங்க. ஆனா என் அப்பா, 13 வருஷத்துக்கு அப்புறம்தான் ஞானஸ்நானம் எடுத்தார். 1968-ல, நான் குயின்ஸ்லாந்துல ஞானஸ்நானம் எடுத்தேன்.
சின்ன வயசுல இருந்தே புத்தகம் படிக்கிறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். மொழிகள் மேலயும் எனக்கு ரொம்ப ஆர்வம் இருந்தது. நாங்க கார்ல ஊருக்கு போகும்போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டே இருப்பேன். ‘வெளியில வேடிக்க பார்க்காம, எப்போ பார்த்தாலும் எதையாவது படிச்சுக்கிட்டே இருக்கானே’னு எங்க அப்பா-அம்மா யோசிச்சிருப்பாங்க. புத்தகங்கள் படிக்கிறதுல எனக்கு ஆர்வம் இருந்ததுனால ஸ்கூல்லயும் என்னால நல்லா படிக்க முடிஞ்சது. டாஸ்மேனியாவுல இருக்கிற ஒரு மேல்நிலை பள்ளியில நான் படிச்சேன். நான் நல்லா படிச்சதுக்காக நிறைய பரிசுகள் கிடைச்சது.
என் வாழ்க்கையில முக்கியமான தீர்மானம் எடுக்கிற நாள் வந்தது! உயர் கல்வி படிக்கிறதா இல்லன்னா யெகோவாவுக்கு சேவை செய்றதானு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. எங்க அம்மாதான் எனக்கு யெகோவாவை பத்தி சொல்லிக்கொடுத்தாங்க. அதனால யெகோவா மேல எனக்கு இருந்த அன்பு அதிகமாச்சு. புத்தகங்கள் படிக்கிறது எனக்கு எவ்வளவு பிடிக்குமோ 1 கொ. 3:18, 19) ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு பயனியர் செய்யணும்னு ஆசைப்பட்டேன். என் அப்பா-அம்மாவும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க. அதனால ஜனவரி, 1971-ல பயனியர் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு 15 வயசு.
அதைவிட யெகோவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். (எட்டு வருஷம் நான் டாஸ்மேனியாவுல பயனியர் செஞ்சேன். அங்கதான் ஜெனி அல்காக்கை சந்திச்சேன். அப்புறம், நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஸ்மித்டென், குவீன்ஸ்டவுன் போன்ற இடங்கள்ல நாங்க 4 வருஷம் விசேஷ பயனியர்களா சேவை செஞ்சோம்.
பசிபிக் தீவுகளுக்கு பறந்தோம்
1978-ல, பாப்புவா நியூ கினியில ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. வெளிநாட்டுல நடந்த அந்த மாநாட்டுக்கு நாங்க முதல் முறையா போனோம். ஹிரி மோத்து என்ற மொழியில ஒரு மிஷனரி பேச்சு கொடுத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவர் பேசுன ஒரு வார்த்தைகூட எனக்கு புரியல. ஆனா, அவர் பேசுனதை கேட்டதுக்கு அப்புறம் நானும் ஒரு மிஷனரி ஆகணும், மத்த மொழிகளை கத்துக்கணும், அவரை போலவே பேச்சு கொடுக்கணுங்கிற ஆசையெல்லாம் வந்தது. கடைசியா, மொழி மேல இருக்கிற அன்பையும் யெகோவா மேல இருக்கிற அன்பையும் காட்டுறதுக்கு எனக்கு ஒரு வழி கிடைச்சது.
மாநாடு முடிஞ்சதுக்கு அப்புறம் நாங்க ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி போகும்போது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கிட்டு இருந்தது. துவாலு என்ற தீவுல இருக்கிற ஒரு இடத்துக்கு எங்களை மிஷனரிகளா அனுப்புனாங்க. ஜனவரி 1979-ல நாங்க அங்க ஊழியம் செய்ய ஆரம்பிச்சோம். அப்போ, துவாலுல வெறும் மூணே யெகோவாவின் சாட்சிகள்தான் இருந்தாங்க.
துவாலுவன் மொழிய கத்துக்க கஷ்டமா இருந்தது. ஏன்னா, அந்த மொழியில எந்த புத்தகமும் இல்ல. அதை முறையா கத்துக்கிறதுக்கு வகுப்புகளும் இல்ல. “புதிய ஏற்பாடு” பைபிள் மட்டும்தான் இருந்தது. அதனால, ஒவ்வொரு நாளும் 10-20 வார்த்தைகளை நாங்களே கத்துக்கணும்னு முடிவு செஞ்சோம். கத்துக்கிட்ட நிறைய வார்த்தைகளோட அர்த்தம் எங்களுக்கு புரியலனு கொஞ்ச நாளுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. குறிசொல்றது தப்புனு சொல்றதுக்கு பதிலா எடை போடுற கருவியையும் கைத்தடியையும் பயன்படுத்த கூடாதுனு சொல்லிட்டு இருந்தோம். நிறைய பேருக்கு பைபிள் படிப்பு நடத்த துவாலுவன் மொழிய கண்டிப்பா கத்துக்க வேண்டியிருந்தது. எங்களோட முயற்சிய நாங்க விடவே இல்ல. எங்ககிட்ட பைபிள் படிப்பு படிச்ச ஒருத்தர் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் எங்ககிட்ட இப்படி சொன்னார்: “ஆரம்பத்துல, நீங்க என்ன சொல்றீங்கனே எங்களுக்கு புரியாது. இப்போ நீங்க எங்க மொழியில பேசுறத கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!”
துவாலுவன் மொழிய கத்துக்கிறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சது. வீடு வாடகைக்கு கிடைக்காததுனால ஒரு கிராமத்துல இருந்த சகோதரர் வீட்டுல நாங்க குடியிருந்தோம். துவாலுவன் மொழி பேசுற மக்கள்கூடவே இருந்ததுனால அந்த மொழிய சுலபமா கத்துக்க முடிஞ்சது. சொல்லப்போனா, பல வருஷத்துக்கு நாங்க
ஆங்கிலமே பேசல, துவாலுவன் மொழிலதான் எல்லார்கிட்டையும் பேசுனோம்.கொஞ்ச நாள்லயே, நிறைய பேர் பைபிளை பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டுனாங்க. ஆனா, துவாலுவன் மொழியில எந்த புத்தகமும் இல்ல. அப்படீனா, எந்த புத்தகத்தை வைச்சு அவங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துறது? அவங்க எப்படி ஆராய்ச்சி செஞ்சு படிப்பாங்க? எந்த புத்தகத்தை வைச்சு கூட்டங்கள் நடத்துறது, கூட்டங்களுக்கு அவங்க எப்படி தயாரிப்பாங்க, எப்படி பாட்டு பாடுவாங்க? ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு எப்படி முன்னேறுவாங்க? துவாலுவன் மொழியிலேயே புத்தகங்கள் கிடைச்சாதான் அவங்களால இதெல்லாம் செய்ய முடியும். (1 கொ. 14:9) ‘துவாலுவன் மொழி பேசுறவங்க 15,000 பேர்கூட இல்ல! இவ்வளவு குறைவான ஆட்களுக்காக புத்தகங்களை மொழிபெயர்ப்பாங்களா?’னு நாங்க யோசிச்சோம். ஆனா, ரெண்டு முக்கியமான விஷயங்களை யெகோவா புரிய வைச்சார்: (1) ‘தூரத்திலுள்ள தீவுகள்ல’ இருக்கிறவங்களும் நற்செய்தியை தெரிஞ்சிக்கணும்னு அவர் விரும்புறார். (2) மத்தவங்க பார்வையில “சிறுமையும் எளிமையுமான” ஜனங்கள்கூட தன்னையே நம்பியிருக்கணும்னு அவர் விரும்புறார்.—எரே. 31:10; செப். 3:12.
மொழிபெயர்ப்பு வேலையின் ஆரம்பம்
1980–ல, மொழிபெயர்ப்பு செய்ற நியமிப்பு கிடைச்சது. அந்த வேலையில எங்களுக்கு எந்த அனுபவமும் இல்ல. (1 கொ. 1:28, 29) அந்த வேலையை செய்ய முதல்ல நாங்க அரசாங்கத்துகிட்ட இருந்து ஒரு ‘மிமியோகிராஃப்’ மெஷினை (ஒரு விதமான ஜெராக்ஸ் மெஷின்) வாங்கினோம். கூட்டங்கள்ல படிக்கிறதுக்கு தேவையானதை இந்த மெஷின்ல அச்சடிச்சோம். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தையும் மொழிபெயர்த்து இதில அச்சடிச்சோம். இதை எல்லாத்தையும் கையிலேயே செய்ய வேண்டியிருந்தது. அந்த ஊரோட சூடு, அந்த மெஷினோட மை வாசனை எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு! அந்த ஊர்ல அப்போ மின்சாரம்கூட இல்ல.
ஆராய்ச்சி செய்ய நிறைய புத்தகம் இல்லாததுனால துவாலுவன் மொழியில மொழிபெயர்க்கிறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, எதிர்பார்க்காத ஆட்கள் மூலமா யெகோவா எங்களுக்கு உதவி செஞ்சார். யெகோவாவின் சாட்சிகளை பிடிக்காத வயசான ஒருத்தரை ஊழியத்தில பார்த்தேன். அவர் ஒரு டீச்சரா இருந்தார். நான் அவர் வீட்டுக்கு போனது அவருக்கு பிடிக்கல. நம்மள பிடிக்கலனாகூட அவர் நம்ம பத்திரிகைகளை எல்லாம் படிச்சிருக்கிறார்! அவர் என்கிட்ட இப்படி சொன்னார்: “ஒரு விஷயம் மட்டும் உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். மக்கள் சாதாரணமா பேசுற
மாதிரி உங்க மொழிபெயர்ப்பு இல்ல.” இதை பத்தி மத்தவங்ககிட்ட விசாரிச்சப்போ அவர் சொன்னது உண்மைனு புரிஞ்சிக்கிட்டேன். அதனால, மக்கள் சாதாரணமா பேசுற மாதிரி மொழிபெயர்த்தோம். யெகோவாவின் சாட்சிகளை பிடிக்காத ஒருத்தர் மூலமாகூட யெகோவா உதவி செஞ்சத நினைச்சு நான் ஆச்சரியப்பட்டேன்.முதல் முதல்ல நினைவுநாள் அழைப்பிதழைதான் துவாலுவன் மொழியில அச்சடிச்சோம். அதுக்கு அப்புறம், ராஜ்ய செய்தி எண் 30-ஐ அச்சடிச்சோம். ஆங்கிலத்தில வெளிவந்த அதேசமயத்தில இதுவும் வெளிவந்தது. மக்களுக்கு அவங்க சொந்த மொழியிலேயே இதெல்லாம் கொடுத்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. துவாலுவன் மொழியிலேயே கொஞ்ச கொஞ்சமா சிற்றேடுகளையும் புத்தகங்களையும் வெளியிட்டோம். ஆஸ்திரேலியா கிளை அலுவலகம் 1983-ல, 24 பக்கம் காவற்கோபுரத்தை மூணு மாசத்துக்கு ஒருமுறை அச்சடிக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு வாரமும் அந்த காவற்கோபுரத்தில இருந்து சுமார் 7 பாராக்களை படிச்சோம். பொதுவாவே, துவாலு மக்களுக்கு புத்தகங்களை வாசிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும். அதனால, அவங்க நம்ம புத்தகங்களை ரொம்ப ஆர்வமா படிச்சாங்க. புதுசா ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்தா அதை பத்தி உடனே ரேடியோல சொல்வாங்க. சிலசமயம், செய்தித்தாள்ல தலைப்பு செய்தியாகூட போடுவாங்க. *
மொழிபெயர்ப்பு வேலைய ஆரம்பிச்சப்போ கம்ப்யூட்டர் எல்லாம் இல்ல; கையிலதான் எழுதுனோம். ஆனா, போகப் போக நாங்க மொழிபெயர்த்ததை டைப் செஞ்சோம். பிழைகளை குறைக்க நாங்க நிறைய முறை டைப் செய்ய வேண்டியிருந்தது. அப்புறம்தான் அச்சடிக்க ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்துக்கு அனுப்புவோம். கொஞ்ச நாளுக்கு அப்புறம், 2 சகோதரிகள் நாங்க மொழிபெயர்த்ததை கம்ப்யூட்டர்ல டைப் செய்ய கிளை அலுவலகம் ஏற்பாடு செஞ்சாங்க. அவங்களுக்கு துவாலுவன் மொழியே தெரியாது. அவங்க 2 பேரும் ஒரே பிரதியை டைப் செஞ்சு ஒப்பிட்டு பார்த்தாங்க. அதனால நிறைய தப்பு வராம பார்த்துக்க முடிஞ்சது. அதுக்கு அப்பறம் அச்சடிக்க தயாரா இருக்கிற பக்கங்களை எங்களுக்கு தபால் மூலமா அனுப்புவாங்க. எல்லாமே சரியா இருக்கானு பார்த்துட்டு அச்சடிக்க திரும்பவும் கிளை அலுவலகத்துக்கே அனுப்புவோம்.
இப்பெல்லாம் நேரடியா கம்ப்யூட்டர்லேயே மொழிபெயர்க்கலாம். அச்சடிக்கிறதுக்கு முன்னாடி நடக்கிற எல்லா வேலைகளும் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு செய்ற இடங்கள்லேயே முடிஞ்சிடுது. அதுக்கு அப்புறம், இதை எல்லாத்தையும் அச்சடிக்கிற கிளை அலுவலகங்களுக்கு இன்டர்நெட் மூலமா அனுப்புறாங்க. அதனால அச்சடிக்கிறதுக்கு அவசர அவசரமா எதையும் இப்போ தபால் மூலமா அனுப்ப வேண்டியதில்ல.
மற்ற நியமிப்புகள்
பசிபிக் தீவுகள்ல எனக்கும் ஜெனிக்கும் நிறைய நியமிப்புகள் கிடைச்சது. 1985-ல துவாலுல இருந்து சமோவா கிளை அலுவலகத்துக்கு எங்களை அனுப்புனாங்க. அங்க துவாலுவன் மொழியில மொழிபெயர்ப்பு வேலை செஞ்சுக்கிட்டே சமோவான், டோங்கன், டோகிலாவன் மொழிகள்ல இருந்த மொழிபெயர்ப்பு குழுவுக்கும் உதவி செஞ்சோம். * அப்புறம், 1996-ல பிஜி கிளை அலுவலகத்துக்கு எங்களை அனுப்புனாங்க. அங்க பிஜியன், கிரிபடி, நார்வான், ரோட்டுமான், துவாலுவன் மொழிகள்ல இருந்த மொழிபெயர்ப்பு குழுவுக்கும் உதவி செஞ்சோம்.
மொழிபெயர்ப்பு வேலை செய்றது அவ்வளவு சுலபம் இல்ல. மொழிபெயர்க்கிறவங்க சில நேரம் ரொம்ப களைப்பா சோர்வா ஆயிடலாம். இருந்தாலும், அவங்க ரொம்ப ஆர்வமா வேலை செய்றதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. ‘எல்லாத் தேசத்தினரும் கோத்திரத்தினரும் மொழியினரும் இனத்தினரும்’ நற்செய்தியை தெரிஞ்சுக்கணும்னு யெகோவா நினைக்கிறது போலவே இவங்களும் நினைக்கிறாங்க. (வெளி. 14:6) உதாரணத்துக்கு, டோங்கன் மொழியில காவற்கோபுர பத்திரிகையை மொழிபெயர்க்க ஆட்கள் தேவைப்பட்டாங்க. இதை பத்தி டோங்காவுல இருந்த எல்லா மூப்பர்கள்கிட்டயும் பேசிட்டு இருந்தப்போ ஒரு மூப்பர் அவரோட மெக்கானிக் வேலையை விட்டுட்டு மொழிபெயர்ப்பு செய்ய தயாரா இருந்தார். அதை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவருக்கு ஒரு குடும்பம் இருந்தது, குடும்பத்தை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. இருந்தாலும் அவர் மொழிபெயர்ப்பு செய்ய தயாரா இருந்தார். அவரையும் அவரோட குடும்பத்தையும் யெகோவா கைவிடவே இல்ல. பல வருஷமா அவர் மொழிபெயர்ப்பு வேலை செஞ்சார்.
ஒரு மொழியை கொஞ்சம் பேர் பேசுனாகூட அந்த மொழியிலயும் புத்தகங்களை மொழிபெயர்க்கணும்னு ஆளும் குழு விரும்புறாங்க. உதாரணத்துக்கு, ‘துவாலுவன் மொழியில புத்தகங்களை மொழிபெயர்க்கணுமா?’ என்ற கேள்வி வந்தப்போ ஆளும் குழு இப்படி சொன்னாங்க: “மற்ற மொழி பேசுறவங்களைவிட துவாலுவன் மொழி பேசுறவங்க கொஞ்சம் பேர் இருந்தாலும் அவங்களும் அவங்க சொந்த மொழியிலேயே பைபிளை பத்தி தெரிஞ்சுக்கணும். அதனால மொழிபெயர்ப்பு வேலையை நிறுத்த அவசியமே இல்ல.” ஆளும் குழுகிட்ட இருந்து வந்த பதிலை படிக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. மக்கள்மேல ஆளும் குழுவுக்கு இருக்கிற அதே அக்கறை, மொழிபெயர்ப்பு செய்றவங்களுக்கும் இருக்கு.
2003-ல என்னையும் ஜெனியையும் பிஜி கிளை அலுவலகத்தில இருந்து நியு யார்க்ல இருக்கிற மொழிபெயர்ப்பு துறைக்கு அனுப்புனாங்க. அப்போ, எங்க கனவு நிறைவேறினதுபோல இருந்தது! புது புது மொழிகள்ல மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பிக்க ஒரு குழு இருந்தாங்க. நாங்க அந்த குழுவுல வேலை செஞ்சோம். அடுத்த 2 வருஷத்துக்கு நாங்க நிறைய நாடுகளுக்கு போனோம். அங்க இருக்கிற மொழிபெயர்ப்பு குழுக்கள் அவங்களோட வேலையை இன்னும் நல்லா செய்றதுக்கு உதவி செஞ்சோம்.
சில முக்கிய தீர்மானங்கள்
2000-ல, உலகம் முழுவதும் இருக்கிற மொழிபெயர்ப்பாளர்கள் அவங்க வேலையை இன்னும் நல்லா செய்ய உதவி தேவைனு ஆளும் குழு நினைச்சாங்க. அதுவரைக்கும் மொழிபெயர்ப்பு செஞ்சவங்களுக்கு கொஞ்சம் பயிற்சிதான் கிடைச்சது. இந்த கட்டுரையோட ஆரம்பத்தில ஆளும் குழுவை சந்திக்கிறதை பத்தி நான் உங்களுக்கு சொன்னேன். மொழிபெயர்ப்பு வேலை சம்பந்தமா நாங்க செஞ்ச ஆராய்ச்சியை பத்தி எழுத்துக் குழுகிட்ட சொன்னோம். உலகம் முழுசும் மொழிபெயர்ப்பு வேலை செய்றவங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆளும் குழு ஏற்பாடு செஞ்சாங்க. நல்லா மொழிபெயர்க்கவும் ஆங்கிலத்தை நல்லா புரிஞ்சுக்கவும் ஒரு குழுவா சேர்ந்து மொழிபெயர்ப்பு செய்யவும் பயிற்சி கொடுத்தாங்க.
இந்த பயிற்சிகள் எல்லாம் இன்னும் நல்லா மொழிபெயர்க்க உதவி செஞ்சிருக்கு. அதோட, நிறைய மொழிகள்ல புத்தகங்களை மொழிபெயர்க்கவும் உதவி செஞ்சிருக்கு. 1979-ல, நாங்க முதல் முதல்ல மிஷனரி சேவைய ஆரம்பிச்சப்போ காவற்கோபுரம் வெறும் 82 மொழிகள்லதான் வெளிவந்தது. காவற்கோபுர பத்திரிகை ஆங்கிலத்தில வெளிவந்ததுக்கு அப்புறம்தான் மற்ற மொழிகள்ல வரும். ஆனா, இப்போ ஆங்கிலத்தில வெளிவரும்போதே 240-க்கும் அதிகமான மொழிகள்ல வருது. பைபிள் விஷயங்கள் 700-க்கும் அதிகமான மொழிகள்ல ஏதாவது ஒரு விதத்தில கிடைக்குது. ஆனா, பல வருஷங்களுக்கு முன்னாடி இதெல்லாம் வெறும் கனவாதான் இருந்தது.
2004-ல ஆளும் குழு ஒரு முக்கியமான தீர்மானம் எடுத்தாங்க. மக்களுக்கு பைபிளை சீக்கிரமா
மொழிபெயர்த்து கொடுக்கணும்னு முடிவு செஞ்சாங்க. பத்திரிகைகளை புத்தகங்களை எல்லாம் மொழிபெயர்த்தாலும் பைபிள் மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை கொடுத்தாங்க. இப்படி செஞ்சதுனால இன்னும் நிறைய மொழிகள்ல புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை வெளியிட முடிஞ்சது. 2014 வரைக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 128 மொழிகள்ல அச்சடிக்கப்பட்டு இருக்கு. தென் பசிபிக் தீவுகள்ல பேசுற மொழிகள்லயும் இது கிடைக்குது.என் வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒரு விஷயம் நடந்தது. 2011-ல துவாலுல நடந்த மாநாட்டுக்கு என்னை போக சொன்னாங்க. பல மாசமா அந்த நாட்டுல மழையே இல்லாததுனால அங்க பயங்கர வறட்சி இருந்தது. மாநாடு நடக்காம போயிடுமோனு நிறைய பேர் நினைச்சாங்க. ஆனா, மாநாட்டுக்கு முந்தின நாள் நாங்க அங்க போய் சேர்ந்தப்போ பயங்கர மழை. நினைச்சப்படியே மாநாடு நடந்தது. கொஞ்ச பேர் மட்டும் பேசுற துவாலுவன் மொழியில புதிய உலக மொழிபெயர்ப்பை (கிரேக்க வேதாகமம் மட்டும்) வெளியிடுற பெரிய பாக்கியம் எனக்கு கிடைச்சது. மாநாடு முடியும்போது மறுபடியும் நல்ல மழை. மழை வந்ததையும் பைபிள் கிடைச்சதையும் நினைச்சு மாநாட்டுக்கு வந்த எல்லாரும் சந்தோஷமா திரும்பி போனாங்க.
ஆனா, இதை எல்லாம் பார்க்க ஜெனி என்கூட இல்ல. 35 வருஷமா கூடவே இருந்தவ புற்றுநோயால 2009-ல இறந்துபோயிட்டா. 10 வருஷமா அந்த வியாதியால ரொம்ப கஷ்டப்பட்டா. ஜெனி உயிர்த்தெழுந்து வரும்போது, துவாலுவன் மொழியில பைபிள் வெளிவந்தது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா.
அதுக்கு அப்புறம் லொரைனி சிகிவொவை நான் கல்யாணம் செஞ்சேன். லொரைனியும் ஜெனியும் பிஜி பெத்தேல்ல ஒண்ணா வேலை செஞ்சாங்க. லொரைனி ஒரு பிஜி மொழிபெயர்ப்பாளரா இருந்தா. லொரைனிக்கும் யெகோவாமேல ரொம்ப அன்பு இருக்கு. என்னை போலவே அவளுக்கும் மொழிகள்ல ரொம்ப ஆர்வம். நாங்க 2 பேரும் சேர்ந்து இப்போ யெகோவாவுக்கு சந்தோஷமா சேவை செய்றோம்.
நடந்ததை எல்லாம் நினைச்சு பார்க்கும்போது யெகோவா எந்தளவு மக்கள்மேல அன்பும் அக்கறையும் வைச்சிருக்கிறார்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. ஒரு மொழியை கொஞ்ச பேர் பேசுனாலும் சரி, நிறைய பேர் பேசுனாலும் சரி, அவங்க எல்லார்மேலயும் அவர் அக்கறை காட்டுறார். (சங். 49:1-3) மக்கள் அவங்க சொந்த மொழியில புத்தகங்களை படிக்கும்போதும் பாடல்களை பாடும்போதும் அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்! (அப். 2:8, 11) துவாலுவை சேர்ந்த சவ்லோ டேசி என்ற வயசான சகோதரர் சொன்ன வார்த்தைகள் என் காதுல இன்னும் கேட்டுட்டே இருக்கு. முதல் முறையா அவரோட மொழியில ராஜ்ய பாடலை பாடிட்டு அவர் இப்படி சொன்னார்: “ஆங்கிலத்தவிட துவாலுவன் மொழியில பாட்டு பாடுறதுதான் ரொம்ப நல்லா இருக்குனு ஆளும் குழுகிட்ட சொல்லுங்க.”
செப்டம்பர், 2005-ல நான் ஆளும் குழுவுல ஒருத்தரா ஆனேன். நான் இப்போ ஒரு மொழிபெயர்ப்பாளரா இல்லன்னாகூட, உலகம் முழுசும் நடக்கிற மொழிபெயர்ப்பு வேலைக்கு உதவி செய்ய முடியுது. அதுக்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்றேன். எல்லா மக்களும் அவரை பத்தி தெரிஞ்சுக்கணும்னு யெகோவா விரும்புறார். பசிபிக் தீவுகள்ல இருக்கிற மக்களைகூட அவர் மறக்கல. இதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. “யெகோவா ராஜாவாகியிருக்கிறார்! பூமி மகிழட்டும். திரளான தீவுகள் சந்தோஷமாக இருக்கட்டும்”னு சங்கீதக்காரன் சொல்றார்.—சங். 97:1, NW.
^ பாரா. 18 சொந்த மொழியில் புத்தகங்கள் கிடைத்ததைப் பார்த்து, மக்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ள இதை பாருங்கள்: காவற்கோபுரம் டிசம்பர் 15, 2000 பக். 32; காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 1988, பக். 22 (ஆங்கிலம்); விழித்தெழு! ஜனவரி 8, 2001, பக். 9.
^ பாரா. 22 சமோவாவில் நடந்த மொழிபெயர்ப்பு வேலையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இயர்புக் 2009, பக். 120-121, 123-124-ஐ பாருங்கள்.