Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா என்னை அளவில்லாம ஆசீர்வதிச்சு இருக்கார்!

யெகோவா என்னை அளவில்லாம ஆசீர்வதிச்சு இருக்கார்!

1927-ல நான் கனடாவுல இருக்கிற ஒரு சின்ன ஊர்ல பிறந்தேன். எங்க அப்பா-அம்மாவுக்கு நாங்க 7 பிள்ளைங்க; 4 பையன் 3 பொண்ணு. ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்ததுனால எல்லாரோடையும் சேர்ந்து இருக்க நான் கத்துக்கிட்டேன்.

1930-கள்ல ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால எங்க குடும்பமும் பாதிக்கப்பட்டது. நாங்க பணக்காரங்களா இல்லன்னாலும், சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதே இல்ல. எங்க வீட்டுல ஒரு மாடும் கொஞ்சம் கோழியும் இருந்தது. அதனால முட்டை, பால், தயிர், வெண்ணெய் எல்லாத்துக்கும் எந்த பஞ்சமும் இல்ல. வீட்டுலயும் பண்ணையிலயும் எங்களுக்கு ஏதாவது வேலை இருந்துகிட்டே இருக்கும்!

சின்ன வயசுல நடந்தது எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பண்ணையில இருக்கிறதை விக்கிறதுக்காக அப்பா டவுனுக்கு போவார். திரும்பி வரும்போது எங்களுக்கு கூடை நிறைய ஆப்பிள் வாங்கிட்டு வருவார். வீடு முழுசும் ஒரே ஆப்பிள் வாசனையா இருக்கும். ஒவ்வொரு நாளும் ருசியான ஆப்பிளை சாப்பிடுறது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்

எனக்கு 6 வயசு இருந்தப்போ என் குடும்பத்தில இருந்தவங்க யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கிட்டாங்க. எப்படீனு யோசிக்கிறீங்களா? எங்க அப்பா-அம்மாவுக்கு பிறந்த முதல் குழந்தை இறந்துடுச்சு. அவங்க துக்கத்தில இருந்ததுனால எங்க ஊர் பாதிரியார்கிட்ட போய், “எங்க குழந்தை ஜானி இப்போ எங்க இருக்கான்?”னு கேட்டாங்க. அதுக்கு அவர், ‘உங்க குழந்தை ஞானஸ்நானம் எடுக்காததுனால இப்போ பரலோகத்தில இல்ல. லிம்போல இருக்கான்’னு சொன்னார். (கத்தோலிக்கர்களின் போதனைப்படி, ஞானஸ்நானம் எடுக்காத குழந்தைங்களோட ஆத்துமாவும் நல்லவங்களோட ஆத்துமாவும் போற இடம்தான் லிம்போ.) அவருக்கு பணம் தந்தா, ஜானிக்காக ஜெபம் பண்ணி லிம்போல இருந்து பரலோகத்துக்கு அனுப்ப முடியும்னு சொன்னார். அதை கேட்ட எங்க அப்பா-அம்மா மனசு உடஞ்சு போயிட்டாங்க. அதுக்கு அப்புறம் அவங்க அந்த பாதிரியார்கிட்ட பேசவே இல்ல. இருந்தாலும் ஜானிக்கு என்னாச்சுங்கிற கேள்வி அவங்க மனசுல இருந்துகிட்டே இருந்தது.

யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ற புத்தகம் ஒருநாள் எங்க அம்மாவுக்கு கிடைச்சது. அவங்க அதை ஆர்வமா படிச்சாங்க. எங்க அப்பா வீட்டுக்கு வந்ததும், “ஜானி இப்போ எங்க இருக்கானு எனக்கு தெரியும்! அவன் இப்போ தூங்கிட்டு இருக்கான். ஒருநாள் மறுபடியும் உயிரோட வருவான்”னு எங்க அம்மா சொன்னாங்க. அன்னைக்கு சாயங்காலமே எங்க அப்பா அந்த புத்தகத்தை முழுசா படிச்சார். இறந்தவங்க தூங்கிட்டு இருக்காங்க, எதிர்காலத்தில உயிரோட வருவாங்கனு எங்க அப்பா-அம்மா பைபிள்ல இருந்து தெரிஞ்சிக்கிட்டாங்க. அது அவங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது.—பிர. 9:5, 10; அப். 24:15.

அவங்க தெரிஞ்சிக்கிட்ட விஷயம் எங்க வாழ்க்கையையே மாத்திடுச்சு. அவங்க யெகோவாவின் சாட்சிகளோட பைபிள் படிக்க ஆரம்பிச்சாங்க. சபை கூட்டத்துக்கும் போக ஆரம்பிச்சாங்க. உக்ரைன் நாட்டை சேர்ந்த நிறைய பேர் அந்த சபையில இருந்தாங்க. அதுக்கு அப்புறம் அப்பா-அம்மா சீக்கிரத்திலேயே ஊழியம் செய்ய ஆரம்பிச்சாங்க.

கொஞ்ச நாள்லயே, நாங்க பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு குடிமாறி போனோம். அங்க இருந்த சபையில இருந்தவங்களுக்கு நாங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. காவற்கோபுர படிப்புக்காக நாங்க குடும்பமா தயாரிச்சது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. யெகோவாவையும் பைபிள்ல இருந்து தெரிஞ்சிகிட்ட உண்மைகளையும் நாங்க நேசிக்க ஆரம்பிச்சோம். நாங்க வாழ்றதுக்கான அர்த்தத்தை புரிஞ்சிக்கிட்டோம். யெகோவா எங்களை ரொம்பவே ஆசீர்வதிச்சார்.

நாங்க சின்ன பிள்ளைங்களா இருந்தப்போ பைபிளை பத்தி மத்தவங்ககிட்ட பேசுறதுக்கு ரொம்ப கூச்சப்படுவோம். அதனால ஒவ்வொரு மாசமும் ஊழியத்தில பேச வேண்டிய விஷயங்களை நானும் என்னோட தங்கச்சி ஈவாவும் பேசி பார்ப்போம்; அதை ஊழிய கூட்டத்துல நடிச்சு காட்டுவோம். அப்படி செஞ்சதுனால, பைபிளை பத்தி எங்களால தைரியமா பேச முடிஞ்சது. எங்களுக்கு கிடைச்ச இந்த பயிற்சிக்காக எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல!

நாங்க சின்ன வயசுல இருந்தப்போ முழுநேர சேவை செஞ்ச சகோதர சகோதரிகள் எங்க வீட்டுல தங்குவாங்க. எங்க சபைக்கு வட்டார கண்காணியா வந்த சகோதரர் ஜாக் நேதன் எங்க வீட்டுல தங்குனார். * (அடிக்குறிப்பை பாருங்க.) அவர் எங்களுக்கு நிறைய கதை சொல்வார்; எங்களை மனசார பாராட்டுவார். அவர் அப்படி பாராட்டுனதுனாலதான் யெகோவாவுக்கு சேவை செய்யணுங்கிற ஆசை எங்களுக்கு வந்தது.

“வளர்ந்ததுக்கு அப்புறம் சகோதரர் நேதனை போல ஆவேன்”னு சின்ன வயசுல யோசிச்சேன். முழுநேர சேவை செய்றதுக்கு அவரோட உதாரணம்தான் எனக்கு உதவியா இருக்கும்னு அப்போ நான் நினைச்சுகூட பார்க்கல. 1942-ல, எனக்கு 15 வயசு இருந்தப்போ யெகோவாவுக்குதான் சேவை செய்யணும்னு முடிவு எடுத்தேன். அதே வருஷத்தில, நானும் ஈவாவும் ஞானஸ்நானம் எடுத்தோம்.

எங்களுக்கு வந்த பிரச்சினை

ரெண்டாவது உலகப் போர் நடந்தப்போ மக்களுக்கு தேசபக்தி அதிகமா இருந்தது. என் தம்பி-தங்கச்சி படிச்ச ஸ்கூல்ல ஸ்காட்-னு ஒரு டீச்சர் இருந்தாங்க. நம்ம மத நம்பிக்கைகள் எல்லாம் அவங்களுக்கு கொஞ்சம்கூட பிடிக்கல. கொடி வணக்கம் செய்யாததுனால என் தம்பியையும் 2 தங்கச்சியையும் ஸ்கூலை விட்டு அனுப்பிட்டாங்க. அவங்க என் டீச்சரை கூப்பிட்டு, என்னையும் ஸ்கூலை விட்டு அனுப்ப சொன்னாங்க. ஆனா என் டீச்சர், “அவங்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ நம்ம நாட்டுல எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு. தேசபக்தி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்ல கலந்துக்கணுமா வேண்டாமாங்கிறது ஒவ்வொருத்தரோட உரிமை”னு தெளிவா சொன்னாங்க. இருந்தாலும் என்னை ஸ்கூலை விட்டு அனுப்பியே ஆகணும்னு ஸ்காட் டீச்சர் என் டீச்சரை வற்புறுத்துனாங்க. ‘மெலிட்டாவை நான் ஸ்கூலை விட்டு அனுப்ப முடியாது’னு என் டீச்சர் அவங்ககிட்ட சொல்லிட்டாங்க.

‘அதை நீங்க தீர்மானிக்க முடியாது. நீங்க மெலிட்டாவ ஸ்கூலை விட்டு அனுப்பலன்னா மேல் அதிகாரிங்ககிட்ட சொல்லிடுவேன்’னு ஸ்காட் டீச்சர் சொன்னாங்க. வேலையில இருக்கணும்னா என்னை ஸ்கூல்லவிட்டு அனுப்புறத தவற என் டீச்சருக்கு வேற வழியே தெரியல. தப்புனு தெரிஞ்சாலும் அவங்க அதை செய்ய வேண்டியிருந்தது. அப்புறம், வீட்டுல இருந்தே படிக்கிறதுக்காக புத்தகங்களை எல்லாம் வாங்கிட்டு வந்தோம். கொஞ்ச நாள்லயே 32 கிலோமீட்டர் (20 மைல்) தூரத்தில இருந்த இன்னொரு இடத்துக்கு மாறிப்போனோம். அங்க இருந்த ஸ்கூல்ல எங்களை சேர்த்துக்கிட்டாங்க.

போர் நடந்த காலத்தில நம்ம புத்தகங்களை பயன்படுத்துறதுக்கு தடை செஞ்சிருந்தாங்க. இருந்தாலும் பைபிளை மட்டும் எடுத்துக்கிட்டு நாங்க வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கு போனோம். பைபிளை வைச்சே கடவுளோட அரசாங்கத்தை பத்தி மக்கள்கிட்ட திறமையா பேசுனோம். இப்படி செஞ்சதுனால, பைபிளை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டோம். பைபிள்ல சொல்லியிருக்கிறபடி வாழ கத்துக்கிட்டோம். யெகோவாவோட ஆதரவையும் ருசிச்சு பார்த்தோம்.

முழுநேர சேவையை ஆரம்பிச்சேன்

திறமையா முடி அலங்காரம் செஞ்சதுக்காக விருதுகள் வாங்கியிருக்கேன்

ஸ்கூல் படிப்பை முடிச்ச உடனே நானும் ஈவாவும் பயனியர் செய்ய ஆரம்பிச்சோம். என் செலவுக்காக, முதல்ல ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல வேலைக்கு சேர்ந்தேன். முடி அலங்காரம் செய்றதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, முடி அலங்காரம் செய்றத பத்தி 6 மாசம் படிச்சேன். அப்புறம், அழகு நிலையத்தில எனக்கு ஒரு வேலை கிடைச்சது. வாரத்தில 2 நாள் அங்க வேலை செஞ்சேன். மாசத்தில 2 தடவை மத்தவங்களுக்கு முடி அலங்காரத்தை பத்தி சொல்லிக் கொடுத்தேன். இப்படி செஞ்சதுனால, பயனியர் சேவையை என்னால தொடர்ந்து செய்ய முடிஞ்சது.

“வெற்றிசிறக்கும் அரசாங்கம்” என்ற மாநாடு 1955-ல, அமெரிக்காவுலயும் ஜெர்மனிலயும் நடந்தது. அந்த 2 இடத்தில நடந்த மாநாட்டுலயும் கலந்துக்கணும்னு விரும்புனேன். நான் அமெரிக்காவுக்கு போறதுக்கு முன்னாடி, தலைமை அலுவலகத்தில இருந்து வந்த சகோதரர் நேதன் நாரை சந்திச்சேன். கனடாவுல நடந்த ஒரு மாநாட்டுக்கு அவரும் அவரோட மனைவியும் வந்திருந்தாங்க. அவரோட மனைவிக்கு நான் முடி அலங்காரம் செஞ்சேன். அது ரொம்ப அழகா இருந்ததுனால, சகோதரர் நார் என்னை பார்க்கணும்னு சொன்னார். அவரோட பேசிட்டு இருந்தப்போ ஜெர்மனிக்கு போறதுக்கு முன்னாடி அமெரிக்காவுல நடக்கிற மாநாட்டுக்கு வருவேன்னு சொன்னேன். மாநாட்டுக்கு வரும்போது, புருக்லின்ல இருக்கிற பெத்தேல்ல 9 நாள் வேலை செய்றதுக்கு என்னை சகோதரர் நார் வர சொன்னார்.

நான் அமெரிக்காவுக்கு போனது என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. அங்க தியோடர் ஜாரஸ் (டெட்) என்ற ஒரு இளம் சகோதரரை பார்த்தேன். “நீங்க ஒரு பயனியரா”னு அவர் என்கிட்ட கேட்டார். அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நான் “இல்ல”னு சொன்னேன். உடனே என்கூட இருந்த பிரெண்ட் லவோன், “இல்ல... அவ பயனியர்தான்”னு சொன்னா. குழம்பிப்போன டெட், லவோன்கிட்ட, “இவங்க பயனியரா இல்லையானு யாருக்கு நல்லா தெரியும்? உங்களுக்கா, இல்ல அவங்களுக்கா?”னு கேட்டார். ‘நான் பயனியர்தான், ஆனா இப்போ பயனியர் செய்யல. மாநாட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பயனியர் ஊழியம் தொடர்ந்து செய்வேன்’னு அவர்கிட்ட சொன்னேன்.

யெகோவாவை நேசிச்ச ஒருத்தர கல்யாணம் செஞ்சேன்

1925-ல அமெரிக்காவுல இருக்கிற கென்டக்கி மாநிலத்தில டெட் பிறந்தார். 15 வயசுல ஞானஸ்நானம் எடுத்தார். அவரோட குடும்பத்தில யாருமே யெகோவாவின் சாட்சியா ஆகல. இருந்தாலும், அவர் ஞானஸ்நானம் எடுத்த 2 வருஷத்துக்கு அப்புறம் பயனியர் செய்ய ஆரம்பிச்சார். சுமார் 67 வருஷம் முழுநேர சேவை செஞ்சார்.

ஜூலை 1946-ல, கிலியட் பள்ளியில டெட் (7-வது வகுப்புல) பட்டம் பெற்றார். அப்போ அவருக்கு 20 வயசு. அதுக்கு அப்புறம் ஒஹாயோ மாநிலத்தில பயணக் கண்காணியா சேவை செஞ்சார். கிட்டத்தட்ட 4 வருஷத்துக்கு அப்புறம் ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்தோட கண்காணியாவும் சேவை செஞ்சார்.

ஜெர்மனியில நடந்த மாநாட்டுக்கு நான் போயிருந்தப்போ அங்க டெட்டும் வந்திருந்தார். நாங்க ரெண்டு பேரும் சந்திச்சோம், நிறைய நேரம் பேசுனோம். எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது. யெகோவாவை சேவிக்கிறது மட்டுமே டெட்டோட லட்சியமா இருந்தது. அவர் யெகோவாவை முழுமனசோட சேவிச்சார். மத்தவங்ககிட்ட அன்பா, பாசமா நடந்துக்கிட்டார். எல்லார்கிட்டயும் நட்பா பழகுனார், ரொம்ப அக்கறையா இருந்தார். அந்த மாநாடு முடிஞ்சதும் டெட் ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டார். நான் கனடாவுக்கு வந்திட்டேன். நாங்க ரெண்டு பேரும் கடிதம் மூலமாவே பேசிக்கிட்டோம்.

சுமார் 5 வருஷம் ஆஸ்திரேலியாவுல இருந்ததுக்கு அப்புறம் டெட் அமெரிக்காவுக்கு திரும்பி வந்தார். அதுக்கு அப்புறம் கனடாவுக்கு வந்து பயனியர் செஞ்சார். என் குடும்பத்துல இருந்தவங்களுக்கு டெட்டை ரொம்ப பிடிச்சிருந்தது. என்னோட அண்ணா மைக்கேல் என்னை பத்திரமா பாத்துக்குவார். யாராவது ஒரு இளம் சகோதரர் என்கிட்ட பழகுனா, அவர் உடனே ஏதாவது சொல்வார். ஆனா, எங்க அண்ணாவுக்கு டெட்டை ரொம்ப பிடிச்சிருந்தது. ஒருநாள் என்கிட்ட வந்து, ‘டெட் ரொம்ப நல்லவரா தெரியிறார். அவர்தான் உனக்கு ஏத்தவர், அவரை விட்டுடாத’னு சொன்னார்.

கல்யாணத்துக்கு அப்புறம் நானும் டெட்டும் பல வருஷம் முழுநேர சேவை செஞ்சோம்

டெட்டை நான் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சேன். டிசம்பர் 10, 1956-ல நாங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ரெண்டு பேரும் வான்குவர்லயும் கலிபோர்னியாவுலயும் பயனியர் செஞ்சோம். அதுக்கு அப்புறம் மிஸ்சௌரிலயும் அர்கான்சாஸ்லயும் டெட் பயணக் கண்காணியா இருந்தார். கிட்டத்தட்ட 18 வருஷம், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வீட்டுல தங்குனோம். அமெரிக்காவுல இருக்கிற நிறைய இடங்கள்ல டெட் பயணக் கண்காணியா இருந்தார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துக்கு போறது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ஊழியத்தில எங்களுக்கு நல்ல நல்ல அனுபவங்கள் கிடைச்சது; நிறைய சகோதர சகோதரிகளோட பழகவும் முடிஞ்சது.

டெட்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் என்னன்னா, யெகோவாவோட அவருக்கு இருந்த பந்தத்தை அவர் சாதாரணமா நினைச்சதே இல்ல. வேற எதையும்விட யெகோவாவுக்கு சேவை செய்றதுதான் டெட்டுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். பைபிளை ஒண்ணா படிக்கிறதும் ஆராய்ச்சி பண்றதும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். தூங்க போறதுக்கு முன்னாடி நாங்க முட்டிப்போட்டு ஜெபம் செய்வோம். முதல்ல, டெட் எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து ஜெபம் செய்வார். அப்புறம், நாங்க தனித்தனியா ஜெபம் செய்வோம். ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தா, டெட் நடு ராத்திரியில எழுந்து முட்டிப்போட்டு ரொம்ப நேரம் ஜெபம் செய்வார். சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, எதுவா இருந்தாலும் டெட் யெகோவாகிட்ட சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கல்யாணமான கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம், இயேசுவோட நினைவுநாள் சின்னங்கள்ல பங்கெடுக்க போறதா டெட் சொன்னார். “இதை பத்தி யெகோவாகிட்ட நல்லா ஜெபம் செஞ்சேன். யெகோவா விரும்புறததான் செய்றேனானு உறுதிப்படுத்திக்கிட்டேன்”னு சொன்னார். டெட்டுக்கு பரலோகத்துல வாழ்ற நம்பிக்கை இருக்குனு தெரிஞ்சப்போ நான் ரொம்ப ஆச்சரியப்படல. கிறிஸ்துவோட சகோதரர்கள்ல ஒருத்தருக்கு ஆதரவா இருந்ததை ஒரு பெரிய பாக்கியமா நினைச்சேன்.—மத். 25:35-40.

எங்களுக்கு கிடைச்ச புது நியமிப்பு

1974-ல, நாங்க நினைச்சுக்கூட பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. டெட்டுக்கு ஆளும் குழுவுல ஒருத்தரா சேவை செய்ற பாக்கியம் கிடைச்சது. அப்புறம், புருக்லின்ல இருக்கிற பெத்தேல்ல சேவை செய்றதுக்கான அழைப்பு வந்தது. ஆளும் குழுவுல ஒருத்தரா டெட்டுக்கு நிறைய பொறுப்புகள் இருந்தது. நான் பெத்தேல்ல சுத்தம் செய்ற வேலை செஞ்சேன்; சில நேரத்தில, அங்க இருந்த சலூன்லயும் வேலை செஞ்சேன்.

மத்த நாட்டுல இருக்கிற கிளை அலுவலகத்தை சந்திக்கிற பொறுப்பும் டெட்டுக்கு இருந்தது. நம்ம வேலை தடை செய்யப்பட்டிருந்த சோவியத் யூனியன்லயும் கிழக்கு ஐரோப்பா நாடுகள்லயும் ஊழியம் எப்படி நடக்குதுனு தெரிஞ்சுக்க டெட் ரொம்ப ஆர்வமா இருந்தார். ஒருசமயம், விடுமுறைக்காக நாங்க சுவீடனுக்கு போயிருந்தப்போ டெட் என்கிட்ட வந்து, “மெலிட்டா, போலந்துல பிரசங்க வேலையை தடை செஞ்சிருக்காங்க. அங்க இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது உதவி செய்யணும்”னு சொன்னார். உடனே வீசா (visa) எடுத்துட்டு போலந்துக்கு போனோம். ஊழிய வேலைகளை பார்த்துக்கிற சகோதரர்களை டெட் அங்க சந்திச்சார். அவங்க பேசுறதை யாரும் கேட்க கூடாதுங்கிறதுக்காக ரொம்ப தூரம் பேசிகிட்டே நடந்து போனாங்க. நிறைய முக்கியமான விஷயங்களை அவங்க 4 நாள் கலந்து பேசுனாங்க. சகோதர சகோதரிகளுக்கு உதவி செஞ்சதை நினைச்சு டெட் ரொம்ப திருப்தியா இருந்தார். டெட் திருப்தியா இருந்ததை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

நவம்பர் 1977-ல, ஆளும் குழுவுல இருந்த சகோதரர்கள் F. W. ஃப்ரான்சும் டானியேல் ஸிட்லிக்கும் டெட்டும் போலந்துக்கு போனாங்க. ஆளும் குழு சார்பா அவங்க போலந்துக்கு போறது அதுதான் முதல் தடவை. டெட்டோட நானும் போயிருந்தேன். போலந்துல பிரசங்க வேலை இன்னும் தடை செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அவங்க மூணு பேரும், அங்க இருந்த கண்காணிகளையும் பயனியர்களையும் சந்திச்சு பேசுனாங்க. ரொம்ப வருஷமா யெகோவாவுக்கு சேவை செஞ்சவங்களையும் சந்திச்சு பேசுனாங்க.

நம்ம வேலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைச்சதுக்கு அப்புறம் டெட்டும் மத்தவங்களும் மாஸ்கோவுல இருக்கிற நீதித்துறை அமைச்சகத்துக்கு முன்

அதுக்கு அடுத்த வருஷம், சகோதரர் மில்டன் ஹென்ஷலும் டெட்டும் திரும்பவும் போலந்துக்கு போனாங்க. அப்போ, அரசாங்க அதிகாரிகளை சந்திச்சாங்க. அந்த அதிகாரிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் மேலயும் நம்ம வேலைகள் மேலயும் இருந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது. 1982-ல போலிஷ் அரசாங்கம் ஒருநாள் மாநாடு நடத்த அனுமதி கொடுத்தாங்க. வாடகைக்கு எடுக்கப்பட்ட மன்றங்கள்ல, அடுத்த வருஷமே பெரிய பெரிய மாநாடுகள் நடந்தது. 1985-ல நம்ம வேலைக்கு தடை இருந்தாலும் 4 பெரிய மாநாடு நடத்த அனுமதி கிடைச்சது. மே 1989-ல அதைவிட பெரிய மாநாடு நடத்த நினைச்சப்போ, போலிஷ் அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தாங்க. அதை கேட்டதும் டெட்டோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

போலந்துல நடந்த மாவட்ட மாநாடு

டெட்டோட உடல்நல பிரச்சினை

2007-ல தென் ஆப்பிரிக்காவுல இருக்கிற கிளை அலுவலகத்தோட அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு போயிட்டு இருந்தோம். போற வழியில இங்கிலாந்துல டெட்டுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாயிடுச்சு. அதனால, கொஞ்சம் நாள் பயணம் செய்ய வேண்டாம்னு டாக்டர் சொன்னார். டெட்டுக்கு கொஞ்சம் சரியானதும் நாங்க அமெரிக்காவுக்கு திரும்பி போனோம். கொஞ்ச வாரத்திலயே டெட்டுக்கு பக்கவாதம் வந்து, வலது பக்கம் செயல் இழந்து போயிடுச்சு.

டெட்டுக்கு கொஞ்ச கொஞ்சமாதான் சரியாக ஆரம்பிச்சது. ஆரம்பத்தில அவரால வேலைக்கு போக முடியல. ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவரால எப்பவும் போல பேச முடிஞ்சது. அவருக்கு உடம்பு சரியில்லன்னாகூட ஒரு ஆளும் குழு அங்கத்தினரா அவர் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் முடிஞ்சளவு செஞ்சார். வாரம் வாரம் நடக்கிற ஆளும் குழு கூட்டத்திலயும் போன் மூலமா கலந்துக்குவார்.

பெத்தேல்ல டெட்டை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. பெத்தேல்ல கிடைச்ச சிகிச்சைக்கு டெட் ரொம்ப நன்றியோட இருந்தார். கொஞ்ச கொஞ்சமா அவர் நடக்க ஆரம்பிச்சார். அவருக்கு கிடைச்ச சில நியமிப்புகளை நல்லா செஞ்சார். டெட் எப்பவுமே சந்தோஷமா இருந்தார்.

மூணு வருஷத்துக்கு அப்புறம் டெட்டுக்கு திரும்பவும் பக்கவாதம் வந்தது. ஜூன் 9, 2010-ல அவர் இறந்துட்டார். என்னைக்காவது ஒருநாள் அவர் பரலோகத்துக்கு போவார்னு எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் அவரை பிரிஞ்சத என்னால தாங்கவே முடியல. டெட்டுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சத நினைச்சு நான் யெகோவாவுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்றேன். நாங்க 2 பேரும் சேர்ந்து 53 வருஷம் யெகோவாவுக்கு முழுநேர சேவை செஞ்சிருக்கோம். யெகோவாகிட்ட நெருக்கமா இருக்க டெட் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கார். அதுக்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொல்றேன். இப்போ டெட் பரலோகத்தில அவரோட புது பொறுப்பை சந்தோஷமா செஞ்சிட்டு இருப்பார்!

தனிமையும் முதுமையும்

பெத்தேல்ல இருக்கிற சலூன்ல வேலை செஞ்சதும் மத்தவங்களுக்கு பயிற்சி கொடுத்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது

இத்தனை வருஷம் டெட்டோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இப்போ எல்லாத்தையும் தனியா சமாளிக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு. பெத்தேல்லயும் ராஜ்ய மன்றத்திலயும் நம்ம சகோதர சகோதரிகளை பார்த்து பேசுறது டெட்டுக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். இப்போ டெட் என்கூட இல்ல, என் உடல் நிலையும் முன்ன மாதிரி இல்ல. அதனால, நிறைய பேரை என்னால பார்த்து பேச முடியல. இருந்தாலும், பெத்தேல்லயும் ராஜ்ய மன்றத்திலயும் இருக்கிற சகோதர சகோதரிகளோட இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெத்தேல் வாழ்க்கை அவ்வளவு சுலபம் இல்ல. இருந்தாலும் பெத்தேல்ல சேவை செய்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பெல்லாம் என்னால ரொம்ப நேரம் நிக்க முடியல, சீக்கிரமா சோர்ந்து போயிடுறேன். இருந்தாலும், பைபிள் படிப்பு நடத்துறதுலயும் தெரு ஊழியம் செய்றதுலயும் எனக்கு அதிக திருப்தியும் மன நிறைவும் கிடைக்குது.

நாளுக்கு நாள் உலகம் மோசமாயிட்டே போகுது. ஆனா, என் அன்பான கணவர் டெட்டோட யெகோவாவுக்கு இவ்ளோ வருஷம் சேவை செஞ்சதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன். யெகோவா என்னை அளவில்லாம ஆசீர்வதிச்சு இருக்கார்!—நீதி. 10:22.

^ பாரா. 13 சகோதரர் ஜாக் நேதனுடைய வாழ்க்கை சரிதை, காவற்கோபுரம் செப்டம்பர் 1, 1990, பக். 10-14-ல் (ஆங்கிலம்) இருக்கிறது.