Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாவற்றையும் நம்புகிறீர்களா?

எல்லாவற்றையும் நம்புகிறீர்களா?

“செய்தித்தாளைப் படிக்காதவர்கள் முட்டாள்கள்; செய்தித்தாளில் இருக்கிறது என்பதற்காக ஒரு விஷயத்தை நம்புகிறவர்கள் அதைவிட பெரிய முட்டாள்கள்.” —ஜெர்மன் சரித்திராசிரியரும் எழுத்தாளருமான, ஆகஸ்ட் ஃபொன் ஷ்லாட்சர் (1735-1809).

200 வருஷங்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த எல்லா விஷயங்களையும் மக்களால் நம்ப முடியவில்லை. அப்படியென்றால், நாம் இன்று இன்டர்நெட்டில் படிக்கிற விஷயங்களை மட்டும் நம்ப முடியுமா என்ன? இன்டர்நெட்டில் இன்று ஏராளமான விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன. இன்று இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் அதை எல்லாம் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் இருக்கும் நிறைய விஷயங்கள் உண்மையானதாக... நல்லதாக... பிரயோஜனமானதாக இருக்கிறது. ஆனால், நிறைய விஷயங்கள் பொய்யானதாக... கெட்டதாக... எந்தப் பிரயோஜனமும் இல்லாததாக இருக்கிறது. அதனால், நாம் எதைப் படிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறவர்கள், ஒரு விஷயம் இன்டர்நெட்டில் இருப்பதாலோ அதை நண்பர்கள் ஈ-மெயிலில் அனுப்பியதாலோ அதை உண்மை என்று நம்பலாம். ஒரு விஷயம் நம்புவதுபோல் இல்லை என்றாலும் அதை நம்பலாம். ஆனால், பைபிள் நம்மை இப்படி எச்சரிக்கிறது: “பேதையானவன் [முட்டாள்] எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ [புத்தியுள்ளவனோ] தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதி. 14:15.

முட்டாளாக இருக்கும் ஒருவர் கேட்கிற எல்லாவற்றையும் நம்புவார். ஆனால், புத்தியுள்ளவர் எல்லாவற்றையும் நம்ப மாட்டார். நாம் விவேகமாக நடந்துகொண்டால் உண்மையான விஷயங்களை மட்டுமே நம்புவோம். இன்டர்நெட்டில் இருக்கும் பொய்யான விஷயங்களை நம்பி ஏமாந்துவிட மாட்டோம். அந்த விஷயம் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதை நம்ப மாட்டோம். இன்டர்நெட்டில் எதையாவது படிக்கும்போது இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரு நம்பகமான வெப்சைட்ல இருந்துதான் இந்த விஷயத்தை வாசிக்கிறேனா? இல்லன்னா, கேள்விப்படாத ஒரு வெப்சைட்ல இருந்து... யார் வேணாலும் எதை வேணாலும் எழுதலாங்கிற ஒரு வெப்சைட்ல இருந்து... இந்த விஷயத்தை படிக்கிறேனா? ஏதாவது ஒரு நம்பகமான வெப்சைட் இந்த விஷயங்களை ஏற்கனவே பொய்யினு காட்டியிருக்கா?’ * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) எந்த விஷயத்தை இன்டர்நெட்டில் படித்தாலும் நம் ‘புத்தியை’ பயன்படுத்த வேண்டும். (1 பே. 5:8) உங்களால் ஒரு விஷயத்தை நம்பவே முடியவில்லை என்றால் அது பொய்யாகக்கூட இருக்கலாம். இன்டர்நெட்டில் யாரைப் பற்றியாவது தவறாகப் படித்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சொல்வதில் என்ன பிரயோஜனம் என்று யோசித்துப் பாருங்கள். அந்த விஷயத்தை பரப்ப வேண்டுமென சிலர் ஏன் நினைக்கிறார்கள் என்றும் யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு வரும் ஈ-மெயில்களை மற்றவர்களுக்கு அனுப்புகிறீர்களா?

ஒரு தகவல் உண்மையா இல்லையா என்று தெரியாமலேயே சிலர் அதை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்புகிறார்கள். அதை அனுப்பினால் என்ன நடக்கும் என்று அவர்கள் யோசிப்பதே கிடையாது. முதல் ஆளாக ஒரு விஷயத்தைப் பரப்ப வேண்டும்... மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும்... என்பதற்காக அப்படி செய்கிறார்கள். (2 சா. 13:28-33) ஆனால், புத்தியுள்ள ஒருவர் ஒரு விஷயத்தைப் பரப்பினால் என்ன ஆகும் என்று யோசிப்பார்; ஏதாவது ஒரு அமைப்புக்கு அல்லது ஒரு நபருக்கு கெட்ட பெயரைக் கொண்டுவருமா என்றும் யோசிப்பார்.

ஒரு தகவல் உண்மையா, பொய்யா என்று தெரிந்துகொள்ள நிறைய நேரமும் முயற்சியும் தேவை. அதனால் சிலர், அது உண்மையா என்று தெரியாமலேயே அதை மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். அதை யாருக்கு அனுப்புகிறார்களோ அவர்களே நேரம் செலவு செய்து அது உண்மையா, பொய்யா என்று தெரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். நம்முடைய நேரம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்றவர்களுக்கும் அவர்களுடைய நேரம் முக்கியம் என்பதை நாம் மறந்துவிட கூடாது. (எபே. 5:15, 16) அதனால், “உண்மைனு தெரியாத ஒரு விஷயத்தை மத்தவங்களுக்கு அனுப்ப கூடாது” என்று தீர்மானமாக இருங்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு வர்ற ஈ-மெயிலை மத்தவங்களுக்கு அனுப்புறதுதான் என்னோட வேலையா? பொய்யான விஷயத்தை அனுப்புனதுக்காக நான் யார்கிட்டயாவது மன்னிப்பு கேட்டிருக்கேனா? இந்த மாதிரி ஈ-மெயிலை எல்லாம் அனுப்ப கூடாதுனு யாராவது என்கிட்ட சொல்லியிருக்காங்களா?’ இன்டர்நெட்டைப் பயன்படுத்த தெரிந்த உங்கள் நண்பர்கள், அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை அவர்களே தேடி எடுத்துக்கொள்வார்கள். அதனால், உங்களுக்கு வரும் எல்லா ஈ-மெயில்களையும் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. காமெடி கதை, வீடியோ, படம் எல்லாவற்றையும் நீங்கள் ஈ-மெயிலில் அனுப்பிக்கொண்டே இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ரெக்கார்ட் செய்யப்பட்ட பைபிள் பேச்சுகளையும் விலாவாரியான குறிப்புகளையும் மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் அனுப்புவதைவிட அவர்களாகவே ஆராய்ச்சி செய்து... பைபிள் வசனங்களைத் தேடி பார்த்து... கூட்டங்களுக்குத் தயாரித்தால் அது அவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.

நான் . . . இந்த ஈ-மெயிலை மத்தவங்களுக்கு அனுப்பணுமா?

யெகோவாவுடைய அமைப்பைப் பற்றி ஒரு தவறான விஷயத்தை நீங்கள் இன்டர்நெட்டில் படித்தால் என்ன செய்ய வேண்டும்? அதை நம்பிவிடக் கூடாது, உடனே ஒதுக்கித்தள்ள வேண்டும். நீங்கள் இன்டர்நெட்டில் படித்த விஷயத்தைப் பற்றி மற்றவர்களுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள அதை மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். ஒருவேளை நீங்கள் அனுப்பினால், அந்த விஷயத்தைத் தேவையில்லாமல் மற்றவர்களிடம் பரப்பிக்கொண்டு இருப்பீர்கள். இன்டர்நெட்டில் நீங்கள் படித்த விஷயம் உங்களை பாதித்தால், ஞானத்துக்காக யெகோவாவிடம் கேளுங்கள்; முதிர்ச்சியுள்ள சகோதரர்களிடம் அதைப் பற்றி பேசுங்கள். (யாக். 1:5, 6; யூ. 22, 23) நம்மைப் பற்றி மக்கள் தவறான விஷயங்களைப் பரப்புவதை நினைத்து ஆச்சரியப்படாதீர்கள். ஏனென்றால், மக்கள் இயேசுவைப் பற்றியும் நிறைய பொய்களை சொன்னார்கள். அதனால்தான் இயேசு அவருடைய சீடர்களை இப்படி எச்சரித்தார்: ‘மக்கள் உங்களை துன்புறுத்துவார்கள், உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வார்கள்.’ (மத். 5:11; 11:19; யோவா. 10:19-21) நீங்கள் நன்றாக யோசித்து, ஞானமாக நடந்துகொண்டால் மற்றவர்கள் பொய் சொன்னாலோ உங்களை ஏமாற்ற நினைத்தாலோ அதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள்.—நீதி. 2:10-17.

மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள்

நம் சகோதர சகோதரிகளைப் பற்றிய விஷயங்களையும் நாம் கேள்விப்பட்ட அனுபவங்களையும் மற்றவர்களிடம் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் சொல்வது சரியாக இருக்காது; அவர்கள் மேல் நமக்கு அன்பு இருக்கிறது என்பதையும் காட்டாது. (மத். 7:12) உதாரணத்துக்கு, ஒருவரைப் பற்றி நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு அநாவசியமாக அனுப்புவது சரியாக இருக்காது. (2 தெ. 3:11; 1 தீ. 5:13) சிலர் அவர்களைப் பற்றிய விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை மற்றவர்களிடம் எப்போது சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள்; அவர்களுடைய அந்தத் தீர்மானத்தை நாம் மதிக்க வேண்டும். ஒருவேளை, அதை மற்றவர்களிடம் அவர்கள் சொல்வதற்கு முன்பு நாம் சொன்னால் ஏதாவது பிரச்சினை வந்துவிடலாம்.

இன்று எந்தவொரு விஷயமும் மக்களுக்கு சீக்கிரமாகப் பரவிவிடுகிறது. அது உண்மையோ பொய்யோ, நல்லதோ கெட்டதோ, பிரயோஜனமானதோ பிரயோஜனம் இல்லாததோ அது சீக்கிரமாகப் பரவிவிடுகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் ஒருவருக்கு அனுப்பினால் அந்த நபர் உலகத்தில் இருக்கும் நிறைய பேருக்கு அதை சில நொடிகளிலேயே அனுப்பிவிடலாம். அதனால், ஒரு விஷயம் உங்களுக்கு தெரியவரும்போது, தெரிந்தவர்கள் எல்லாருக்கும் அதை உடனே அனுப்ப வேண்டும் என்று நினைக்காதீர்கள். அன்பு இருந்தால் நாம் ‘எல்லாவற்றையும் விசுவாசிப்போம்,’ சந்தேகப்பட மாட்டோம் என்பது உண்மைதான். அதேசமயத்தில், சுவாரசியமான எல்லா விஷயங்களையும் முட்டாள்தனமாக உடனே நம்பிவிட மாட்டோம். (1 கொ. 13:7) முக்கியமாக, நம் அன்பான சகோதரர்களைப் பற்றியும் அமைப்பைப் பற்றியும் மற்றவர்கள் சொல்லும் பொய்களை நம்பிவிட மாட்டோம். அப்படிப்பட்ட பொய்களைப் பரப்பினால் சாத்தானுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால், சாத்தானே ‘பொய்க்குத் தகப்பனாக இருக்கிறான்.’ (யோவா. 8:44) “பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:18) நாம் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். அதையெல்லாம் நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்; விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.

^ பாரா. 4 ஒரு விஷயம் பொய் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும்கூட அது அடிக்கடி இன்டர்நெட்டில் வரலாம். அந்த விஷயம் உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்க அதை கொஞ்சம் மாற்றி வெளியிடலாம்.

^ பாரா. 8 ஏப்ரல் 2010, நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கும் “கேள்விப் பெட்டி” என்ற பகுதியைப் பாருங்கள்.