Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”

“எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”

“என் விசுவாசம் இன்னும் பலமாவதற்கு உதவுங்கள்!”—மாற். 9:24.

பாடல்கள்: 81, 135

1. விசுவாசம் ஏன் முக்கியம்? (ஆரம்பப் படம்)

‘மிகுந்த உபத்திரவத்தில இருந்து என்னை காப்பாத்தணும்னு கடவுள் நினைப்பாரா?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். கடவுள் நம்மை மிகுந்த உபத்திரவத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் நமக்கு ஒரு முக்கியமான குணம் தேவை. அதுதான் விசுவாசம்! “விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 11:6) கடவுள்மீது விசுவாசம் வைப்பது ஒரு சாதாரண விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், “எல்லாரிடமும் விசுவாசம் இல்லை” என்று பைபிள் சொல்கிறது. (2 தெ. 3:2) நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த 2 வசனங்களும் காட்டுகின்றன.

2, 3. (அ) விசுவாசம் எந்தளவு முக்கியம் என்று 1 பேதுரு 1:7-ல் இருந்து எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

2 விசுவாசம் எந்தளவு முக்கியம் என்பதைப் பற்றி பேதுரு இப்படி சொன்னார்: ‘சோதனைகளால் பரீட்சிக்கப்படுகிற விசுவாசம், இயேசு கிறிஸ்து வெளிப்படும் சமயத்தில் நமக்கு புகழ்ச்சியையும் மகிமையையும் மதிப்பையும் சேர்க்கும்.’ (1 பேதுரு 1:7-ஐ வாசியுங்கள்.) மிகுந்த உபத்திரவம் ரொம்ப சீக்கிரத்தில் வரப்போகிறது. அந்த சமயத்தில் நம்முடைய ராஜா இயேசு வெளிப்படும்போது ‘பரீட்சிக்கப்பட்ட’ விசுவாசம் இருப்பவர்களை அவர் பாராட்டுவார். அதில் நாமும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்படுவோம். “விசுவாசமாயிருந்து நம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்களாக” இருக்க வேண்டும் என்று விரும்புவோம். (எபி. 10:39) அதனால், “என் விசுவாசம் இன்னும் பலமாவதற்கு உதவுங்கள்!” என்று ஒருவர் இயேசுவிடம் கெஞ்சி கேட்டது போல நாமும் கேட்க வேண்டும். (மாற். 9:24) அல்லது, “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கேட்டதுபோல நாமும் கேட்க வேண்டும்.—லூக். 17:5.

3 நம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? நமக்கு பலமான விசுவாசம் இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? “விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று யெகோவாவிடம் கேட்டால் அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்வார் என்று எப்படி நம்பலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால் யெகோவா சந்தோஷப்படுவார்

4. யாருடைய உதாரணங்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த உதவும்?

4 விசுவாசமாக இருந்த நிறைய பேருடைய உதாரணங்களை யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார். இவை எல்லாம் ‘நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.’ (ரோ. 15:4) ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, ராகாப், கிதியோன், பாராக் போன்றவர்களுடைய உதாரணம் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த உதவி செய்கிறது. (எபி. 11:32-35) இன்றும், நிறைய சகோதர சகோதரிகள் யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் வைக்கிறார்கள். அவர்களுடைய உதாரணங்களைப் படிக்கும்போதும் நம் விசுவாசம் பலப்படுகிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

5. யெகோவாமீது விசுவாசம் இருக்கிறது என்பதை எலியா எப்படிக் காட்டினார்? நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

5 எலியா தீர்க்கதரிசி யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்தார். அதை அவர் எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்று கவனியுங்கள்: (1) யெகோவா வறட்சியை வர வைப்பார் என்று எலியா உறுதியாக நம்பினார். அதனால் அவர் ஆகாபிடம் இப்படி தைரியமாக சொன்னார்: “இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.” (1 இரா. 17:1) (2) வறட்சியின்போது, தனக்கும் மற்றவர்களுக்கும் தேவையானதை யெகோவா நிச்சயம் கொடுப்பார் என்று எலியா நம்பினார். (1 இரா. 17:4, 5, 13, 14) (3) ஒரு விதவையின் மகனை உயிரோடு எழுப்ப யெகோவா அவருக்கு உதவி செய்வார் என்று எலியா நம்பினார். (1 இரா. 17:21) (4) யெகோவா நெருப்பை அனுப்பி கர்மேல் மலையில் தன்னுடைய பலியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்று எலியா நம்பினார். (1 இரா. 18:24, 37) (5) மழை வருவதற்கு முன்பே அவர் ஆகாபிடம் இப்படி உறுதியாக சொன்னார்: “நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது.” (1 இரா. 18:41) இப்போது நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எலியாவை போல எனக்கும் பலமான விசுவாசம் இருக்கா?’

விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

6. விசுவாசத்தை வளர்க்க நமக்கு எது தேவை?

6 நம்முடைய சொந்த பலத்தால் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியாது. விசுவாசத்தை வளர்க்க கடவுளுடைய சக்தி நமக்கு தேவை. ஏனென்றால், விசுவாசம் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22) யெகோவா “தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை” கொடுப்பார் என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். (லூக். 11:13) இயேசு சொன்னபடி செய்யும்போது நாம் புத்தியுள்ளவர்களாக இருப்போம். அதனால், தொடர்ந்து யெகோவாவிடம் அவருடைய சக்திக்காக ஜெபம் செய்வது ரொம்பவே முக்கியம்!

7. நம் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று விளக்குங்கள்.

7 யெகோவாமீது பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொண்ட பிறகு அதைக் காத்துக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய விசுவாசத்தை நெருப்புக்கு ஒப்பிடலாம். நெருப்பு ஆரம்பத்தில் நன்றாக எரியும். ஆனால், தொடர்ந்து விறகு போடவில்லை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக அணைந்துவிடும். கடைசியில் சாம்பல்தான் மிஞ்சும். நம்முடைய விசுவாசமும் அதேபோல்தான்! நாம் தினமும் பைபிளை படித்தால்தான், யெகோவாமீதும் பைபிள்மீதும் நமக்கு இருக்கிற அன்பு அதிகமாகும். அப்போதுதான், நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள முடியும்; அதைப் பலப்படுத்தவும் முடியும்.

8. உங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் அதை பலப்படுத்தவும் நீங்கள் என்ன செய்யலாம்?

8 விசுவாசத்தைக் காத்துக்கொள்ள, ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு கற்றுக்கொண்ட விஷயங்களே போதுமென்று நினைக்காதீர்கள். (எபி. 6:1, 2) நிறைவேறியிருக்கும் தீர்க்கதரிசனங்களைத் தொடர்ந்து படியுங்கள். உங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் பலப்படுத்தவும் அது உதவியாக இருக்கும். பைபிளைப் பயன்படுத்தி உங்கள் விசுவாசம் எந்தளவு பலமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.யாக்கோபு 1:25; 2:24, 26-ஐ வாசியுங்கள்.

9, 10. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த (அ) நல்ல நண்பர்கள் எப்படி உதவுகிறார்கள்? (ஆ) சபைக் கூட்டம் எப்படி உதவுகிறது? (இ) ஊழியம் எப்படி உதவுகிறது?

9 அப்போஸ்தலன் பவுல் சகோதர சகோதரிகளிடம் இப்படி சொன்னார்: “உங்களுடைய விசுவாசத்தின் மூலம் நானும் என்னுடைய விசுவாசத்தின் மூலம் நீங்களும், ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற வேண்டுமென்று ஏங்குகிறேன்.” (ரோ. 1:12) அவர் சொன்னதன் அர்த்தம் என்ன? சகோதர சகோதரிகளோடு, முக்கியமாக ‘சோதனைகளால் பரீட்சிக்கப்பட்ட விசுவாசம்’ இருக்கிறவர்களோடு பழகும்போது நம் விசுவாசம் பலப்படும்; அதோடு, அவர்களுடைய விசுவாசத்தையும் பலப்படுத்துவோம். (யாக். 1:3) கெட்ட நண்பர்கள் நம் விசுவாசத்தைக் கெடுத்துவிடுவார்கள்; நல்ல நண்பர்கள் நம் விசுவாசத்தை வளர்க்க உதவி செய்வார்கள். (1 கொ. 15:33) அதனால்தான், கூட்டங்களைத் தவறவிடக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. கூட்டங்களில்தான் நாம் ‘ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த’ முடியும். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) கூட்டங்களில் நாம் கேட்கும் விஷயங்கள் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும் உதவும். அதனால்தான், “அறிவிக்கப்படுவதைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 10:17) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “நான் கூட்டங்களுக்கு தவறாம போறேனா?”

10 பைபிளில் இருக்கும் விஷயங்களை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும்போதும் கற்றுக்கொடுக்கும்போதும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த முடியும். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்தார்கள்; எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தைரியமாகப் பிரசங்கித்தார்கள். நம் விசுவாசம் பலப்படும்போது, நாமும் அப்படி செய்வோம்.—அப். 4:17-20; 13:46.

11. காலேபுக்கும் யோசுவாவுக்கும் யெகோவாமீது இருந்த விசுவாசம் எப்படி இன்னும் அதிகமானது? நாம் எப்படி அவர்களைப் போல இருக்கலாம்?

11 யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார், நம் ஜெபத்திற்கு எப்படியெல்லாம் பதிலளிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டால் அவர்மீது நமக்கு இருக்கும் விசுவாசம் இன்னும் அதிகமாகும். யோசுவா, காலேப் விஷயத்திலும் இதுதான் நடந்தது. கானான் தேசத்தை வேவு பார்க்கப் போவதன் மூலம் யெகோவாமீது இருந்த விசுவாசத்தை அவர்கள் செயலில் காட்டினார்கள். பிறகு, ஒவ்வொரு முறையும் யெகோவா அவர்களுக்கு உதவி செய்ததைப் பார்த்து அவர்மீது அவர்களுக்கு இருந்த விசுவாசம் இன்னும் அதிகமானது. அதனால்தான் யோசுவா இஸ்ரவேலர்களிடம் இப்படி நம்பிக்கையோடு சொன்னார்: ‘[யெகோவா] உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. அதனால், நீங்கள் அவருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவியுங்கள்.’ “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.” (யோசு. 23:14; 24:14, 15) நாமும் யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டும்; நம் ஒவ்வொருவருக்கும் அவர் எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது, அவர்மீது நமக்கு இருக்கும் விசுவாசம் பலப்படும்.—சங். 34:8.

விசுவாசத்தை செயலில் காட்டுங்கள்

12. நமக்கு பலமான விசுவாசம் இருக்கிறது என்று எப்படிக் காட்டலாம்?

12 நமக்கு பலமான விசுவாசம் இருக்கிறது என்று எப்படிக் காட்டலாம்? “என் விசுவாசத்தைச் செயல்கள் மூலம் உனக்குக் காட்டுகிறேன்” என்று யாக்கோபு சொன்னார். (யாக். 2:18) நமக்கு பலமான விசுவாசம் இருக்கிறது என்பதை நம்முடைய செயல்கள் காட்டும். அதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

அதிகமாக ஊழியம் செய்வதன் மூலம் நமக்கு பலமான விசுவாசம் இருக்கிறது என்று காட்டலாம் (பாரா 13)

13. ஊழியம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கிற விசுவாசத்தை எப்படிக் காட்டலாம்?

13 நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான மிகச் சிறந்த வழி ஊழியம்தான். முடிவு சீக்கிரம் வரப்போகிறது, “அது தாமதிப்பதில்லை” என்று நாம் நம்புவதை ஊழியம் செய்வதன் மூலம் காட்டுகிறோம். (ஆப. 2:3) நம்முடைய விசுவாசம் பலமாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஊழியம் செய்றத நான் முக்கியமா நினைக்கிறேனா? யெகோவாவை பத்தி மத்தவங்களுக்கு சொல்ல என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்றேனா? இன்னும் அதிகமா ஊழியம் செய்ய என்னென்ன வழி இருக்குனு யோசிச்சு பார்க்குறேனா?’ (2 கொ. 13:5) நற்செய்தியை “வாயினால் அறிவிக்கும்போது,” அதாவது, பிரசங்கிக்கும்போது நம்முடைய விசுவாசம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைக் காட்ட முடியும்.ரோமர் 10:10-ஐ வாசியுங்கள்.

14, 15. (அ) நமக்கு விசுவாசம் இருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் எப்படிக் காட்டலாம்? (ஆ) அதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

14 நமக்கு வரும் பிரச்சினைகளை சகித்திருப்பதன் மூலம் யெகோவாமீது நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம். நாம் ஏதாவது வியாதியாலோ மனச்சோர்வாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம். ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து நாம் சோகமாக இருக்கலாம். ஒருவேளை நாம் ஏழையாக இருக்கலாம். அல்லது, வேறு ஏதாவது பிரச்சினைகளால் கஷ்டப்படலாம். இருந்தாலும், யெகோவாவும் இயேசுவும் “தக்க சமயத்தில்” நமக்கு உதவி செய்வார்கள் என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. (எபி. 4:16) உதவிக்காக யெகோவாவிடம் கேட்கும்போது அவர் நிச்சயம் உதவி செய்வார் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. “தேவையான ஆகாரத்தை அந்தந்த நாளில் எங்களுக்குத் தாருங்கள்” என்று யெகோவாவிடம் கேட்கும்படி இயேசு சொன்னார். (லூக். 11:3) நமக்கு தேவையானதை யெகோவா கொடுப்பார் என்று பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, இஸ்ரவேலில் பயங்கரமான வறட்சி இருந்த சமயத்தில் எலியாவுக்குத் தேவையான தண்ணீரையும் உணவையும் யெகோவா கொடுத்தார். “காகங்கள் அவனுக்கு [எலியாவுக்கு] விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்” என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 17:3-6) அதனால், நமக்கு தேவையானதையும் யெகோவா நிச்சயம் கொடுப்பார் என்று நாம் நம்புகிறோம்.

தினசரி பிரச்சினைகளை சமாளிப்பதன் மூலம் நமக்கு விசுவாசம் இருக்கிறது என்று காட்டலாம் (பாரா 14)

15 பைபிள் சொல்கிற ஆலோசனையின்படி நடந்தால் நம் குடும்பத்தின் தேவைகளை நம்மால் கவனித்துக்கொள்ள முடியும். ஆசியாவில் இருக்கும் ரெபேக்கா என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருக்குக் கல்யாணமாகி 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். ரெபேக்காவும் அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களும் மத்தேயு 6:33 மற்றும் நீதிமொழிகள் 10:4-ல் இருக்கும் ஆலோசனைகளின்படி நடந்தார்கள். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்தார்கள், சுறுசுறுப்பாக ஊழியம் செய்தார்கள். ரெபேக்காவின் கணவர் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததால் அவர்கள் எல்லாரும் யெகோவாவோடு இருந்த பந்தத்தைக் காத்துக்கொள்வது கஷ்டமாக இருந்தது. அதனால், அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். செலவுகளை சமாளிக்க அவர்கள் வீட்டிலேயே சில உணவுகளை செய்து விற்றார்கள். அவர்கள் அப்படி செய்ததால், குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான பணம் கிடைத்தது. “யெகோவா எங்களை கைவிடவே இல்ல. ஒருநாள்கூட நாங்க சாப்பிடாம இருந்ததே இல்ல” என்று ரெபேக்கா சொல்கிறார். விசுவாசத்தைப் பலப்படுத்திய இதுபோன்ற அனுபவம் உங்களுக்கும் இருக்கிறதா?

16. யெகோவாமீது நம்பிக்கை வைப்பதால் என்ன பலன்?

16 யெகோவா சொல்வதுபோல் நடந்தால் அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்வார்; அதில் நமக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்! “விசுவாசத்தினால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்று பவுல் சொன்னார். இதே விஷயத்தைதான் ஆபகூக்கும் சொல்லியிருந்தார். (கலா. 3:11; ஆப. 2:4) யெகோவாவால் மட்டும்தான் நமக்கு உதவி செய்ய முடியும். அதனால், அவர்மீது நாம் பலமான விசுவாசம் வைக்க வேண்டும். ‘நம்மில் செயல்படுகிற அவருடைய வல்லமையின்படி, நாம் கேட்பதையும் நினைப்பதையும்விடப் பல மடங்கு அதிகமாய் எல்லாவற்றையும் செய்ய வல்லவர்’ யெகோவாதான் என்று பவுல் சொல்கிறார். (எபே. 3:20) யெகோவாவுக்குப் பிடித்ததை செய்ய யெகோவாவின் சாட்சிகள் அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். இருந்தாலும், அவர்களால் முடியாத சில விஷயங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். யெகோவா அவர்களுடைய முயற்சிகளை எல்லாம் ஆசீர்வதிப்பார் என்று நம்பி அவர்மீது விசுவாசம் வைக்கிறார்கள். யெகோவா நம்மோடு இருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

விசுவாசத்தை அதிகரிக்க யெகோவா உதவி செய்வார்

17. (அ) விசுவாசத்தை அதிகமாக்கும்படி அப்போஸ்தலர்கள் கேட்டதற்கு எப்படிப் பதில் கிடைத்தது? (ஆ) நம்முடைய விசுவாசம் அதிகமாவதற்கு யெகோவா உதவி செய்வார் என்று ஏன் நம்பலாம்?

17 “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். விசுவாசத்தைப் பற்றி இதுவரை தெரிந்துகொண்ட பிறகு, நாமும் அவர்களைப் போலவே ‘அதிகமான விசுவாசம் வேண்டும்’ என்று கேட்கலாம். (லூக். 17:5) அதிகமான விசுவாசம் வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் கேட்டதற்கு, கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பதில் கிடைத்தது. அன்று கடவுளுடைய சக்தி அவர்களுக்குக் கிடைத்தபோது யெகோவாவுடைய நோக்கத்தைப் பற்றிய ஆழமான விஷயங்களை அவர்கள் புரிந்துகொண்டார்கள். இது அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது. அதனால், அவர்கள் மிகப் பெரிய அளவில் அப்போது பிரசங்க வேலையை செய்தார்கள். (கொலோ. 1:23) நம்முடைய விசுவாசம் அதிகமாவதற்கு யெகோவா உதவி செய்வார் என்று நம்பலாமா? ‘அவருடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும்’ அதை நிச்சயம் தருவதாக யெகோவாவே வாக்குக் கொடுத்திருக்கிறார்.—1 யோ. 5:14.

18. விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார்?

18 நாம் யெகோவாவை முழுமையாக நம்பினால் அதைப் பார்த்து அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். “விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று அவரிடம் ஜெபம் செய்தால் அதற்கு அவர் நிச்சயம் பதிலளிப்பார். அப்போது நம்முடைய விசுவாசம் இன்னும் பலமாகும். அதோடு, நாம் ‘கடவுளுடைய அரசாங்கத்திற்கு தகுதியுள்ளவர்களாகவும் எண்ணப்படுவோம்.’—2 தெ. 1:3, 5.

^ பாரா. 4 உதாரணத்துக்கு, லில்லியன் கோபைட்டாஸ் குளோஸா (ஜூலை 22, 1993), ஃபெலிக்ஸ் போரிஸ் (பிப்ரவரி 22, 1994), ஜோஸ்பின் எலியாஸ் (செப்டம்பர் 2009) போன்றவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கில விழித்தெழு!-ல் பாருங்கள்.