Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கவனச்சிதறல் இல்லாமல் யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள்

கவனச்சிதறல் இல்லாமல் யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள்

‘மரியாள் அவர் [இயேசு] சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பல வேலைகளை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாள்.’—லூக். 10:39, 40.

பாடல்கள்: 94, 134

1, 2. இயேசு மார்த்தாள்மீது ஏன் அன்பு வைத்திருந்தார், மார்த்தாளும் தவறு செய்பவள் என்பதை எது காட்டுகிறது?

லாசருவின் சகோதரி மார்த்தாளுடைய பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது? மார்த்தாள் இயேசுவுடைய தோழியாக இருந்தாள் என்றும் இயேசு மார்த்தாள்மீது அன்பு வைத்திருந்தார் என்றும் பைபிள் சொல்கிறது. கடவுள் பக்தியுள்ள பெண்கள்மீது இயேசுவுக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. உதாரணத்துக்கு, மார்த்தாளுடைய சகோதரி மரியாள்மீது இயேசுவுக்கு அன்பு இருந்தது. இயேசு அவருடைய அம்மா மரியாள்மீதும் அன்பு வைத்திருந்தார்.யோவா. 11:5; 19:25-27.

2 மார்த்தாள் பாசமுள்ளவள், தாராள குணமுள்ளவள், கடினமாக உழைப்பவளும்கூட! மார்த்தாளிடம் இருந்த இந்தக் குணங்கள் எல்லாம் இயேசுவுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும், இயேசு மார்த்தாள்மீது அன்பு வைத்ததற்கு முக்கிய காரணம் அவளுக்கு இருந்த உறுதியான விசுவாசம்தான். இயேசு கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களையும் மார்த்தாள் நம்பினாள், இயேசுதான் மேசியா என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. (யோவா. 11:21-27) இருந்தாலும், மார்த்தாள் தவறே செய்யாதவள் என்று சொல்ல முடியாது. நம்மைப்போல் அவளும் சில தவறுகள் செய்தாள். ஒருசமயம், இயேசு அவர்களுடைய வீட்டுக்கு வந்தபோது, மார்த்தாள் அவளுடைய சகோதரி மரியாள்மீது கோபமாக இருந்தாள். மரியாளை இயேசு கண்டிக்க வேண்டும் என்பதற்காக மார்த்தாள் அவரிடம், “என் சகோதரி என்னைத் தனியாக வேலை செய்ய விட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லுங்கள்” என்று சொன்னாள். (லூக்கா 10:38-42-ஐ வாசியுங்கள்.) மார்த்தாள் ஏன் அப்படி சொன்னாள், இயேசு அவளிடம் சொன்ன பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

மார்த்தாளின் கவனம் சிதறியது

3, 4. இயேசு பாராட்டும்படி மரியாள் என்ன செய்தாள், மார்த்தாள் அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டாள்? (ஆரம்பப் படம்)

3 மார்த்தாளும் மரியாளும் இயேசுவை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்ததற்காக அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். அவர்களுக்கு பைபிளில் இருக்கிற உண்மைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். மரியாள் “இயேசுவின் காலடியில் உட்கார்ந்து, அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தாள்.” மிகப் பெரிய போதகரான இயேசுவிடம் இருந்து எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மரியாள் ஆசைப்பட்டாள். மார்த்தாளும் இயேசு சொல்வதைக் கவனமாகக் கேட்டிருந்தால் இயேசு அவளை நிச்சயம் பாராட்டியிருப்பார்.

4 ஆனால் மார்த்தாள், இயேசுவுக்கு விருந்து சமைப்பதிலும் அவரை நன்றாக உபசரிப்பதிலும் குறியாக இருந்தாள். மரியாள் தனக்கு உதவி செய்யாததால் மார்த்தாளுக்குக் கோபம் வந்தது. அதனால், “[மரியாள்] என்னைத் தனியாக வேலை செய்ய விட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று இயேசுவிடம் சொன்னாள். மார்த்தாள் “நிறையக் காரியங்களை” செய்ய வேண்டும் என்று நினைத்ததை இயேசு புரிந்துகொண்டார். அதனால், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ நிறையக் காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய். கொஞ்சம் இருந்தாலே போதும், ஒன்றே ஒன்றுகூடப் போதும். மரியாளைப் பொறுத்தவரை, அவள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்று இயேசு அவளிடம் கனிவாக சொன்னார். மரியாள் இயேசு பேசியதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்; அதற்காக இயேசு அவளைப் பாராட்டினார். மரியாள் அன்று என்ன சாப்பிட்டாள் என்பதைக்கூட மறந்திருக்கலாம்; ஆனால், இயேசு கற்றுக்கொடுத்ததையும் அவர் பாராட்டியதையும் மறந்திருக்கவே மாட்டாள். சுமார் 60 வருஷங்களுக்குப் பிறகு, அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: ‘மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் இயேசு நேசித்தார்.’ (யோவா. 11:5) யோவான் சொன்னதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? மார்த்தாளை இயேசு அன்பாகத் திருத்தியதை அவள் ஏற்றுக்கொண்டாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வாழ்நாள் எல்லாம் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தாள் என்பதும் தெரிகிறது.

5. முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவது ஏன் கஷ்டமாக இருக்கிறது, என்ன கேள்விக்கான பதிலைப் பார்க்கப்போகிறோம்?

5 பைபிள் காலங்களில் இருந்ததைவிட, இன்று நிறைய விஷயங்கள் நம் கவனத்தை சிதறடிக்கலாம்; யெகோவாவுக்கு சேவை செய்வதிலிருந்து நம்மை திசை திருப்பலாம். செப்டம்பர் 15, 1958 காவற்கோபுரம் நம் சகோதர சகோதரிகளை இப்படி எச்சரித்தது: ‘யெகோவாவுக்கு சேவை செய்வதிலிருந்து உலகத்தில் இருக்கும் தொழில்நுட்பம் உங்கள் கவனத்தை சிதறடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.’ அந்தக் காலத்திலேயே, ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நிறைய விஷயங்கள் வந்துகொண்டிருந்தன. கண்ணைக் கவரும் பத்திரிகைகள், திரைப்படங்கள், ரேடியோ, டிவி எல்லாம் அன்று பிரபலமாக இருந்தது. இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, “கவனச்சிதறல்கள் அதிகரிக்கும்” என்று அந்தக் காவற்கோபுரம் சொன்னது. நம்முடைய கவனத்தை சிதறடிக்க, என்றும் இல்லாததைவிட இன்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மரியாளைப் போல, யெகோவாவுக்கு சேவை செய்வதிலேயே கவனம் செலுத்த வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

‘உலகத்தை முழுமையாகப் பயன்படுத்தாதீர்கள்’

6. யெகோவாவின் மக்கள் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

6 இந்த உலகத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யெகோவாவின் மக்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். உதாரணத்துக்கு, முதல் உலகப் போரின்போதும் அதற்கு முன்பும் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படக்காட்சியை மக்களுக்குக் காட்டினார்கள். ஒலியும் ஒளியும் கலந்த கலர் ஸ்லைடுகளையும் படங்களையும் வைத்து நிறைய நாடுகளில் இருந்த லட்சக்கணக்கான மக்களுக்குப் பிரசங்கித்தார்கள். இயேசு கிறிஸ்து இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது மக்கள் எவ்வளவு சமாதானமாக இருப்பார்கள் என்பதை “ஃபோட்டோ டிராமாவின்” முடிவில் காட்டினார்கள். பிறகு, உலகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க ரேடியோவைப் பயன்படுத்தினார்கள். இன்று, கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் பயன்படுத்தி உலகத்தின் மூலைமுடுக்குகளில்கூட நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்.

கடவுளுடைய சேவையிலிருந்து உங்களை திசை திருப்பும் எந்தவொரு விஷயத்தையும் செய்யாதீர்கள் (பாரா 7)

7. (அ) இந்த உலகத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் என்ன ஆபத்து இருக்கிறது? (ஆ) நாம் எதில் கவனமாக இருக்க வேண்டும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

7 இந்த உலகத்தை ‘முழுமையாகப் பயன்படுத்த கூடாது’ என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் இருக்கிற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவு செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 7:29-31-ஐ வாசியுங்கள்.) சில விஷயங்களை செய்வதில் எந்தத் தவறும் இருக்காது; ஆனால், அது நம்முடைய நேரத்தை வீணாக்கிவிடும். உதாரணத்துக்கு நமக்குப் பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடலாம், பிடித்த இடங்களுக்குப் போகலாம், ஷாப்பிங் செய்யலாம். பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம், டிவி பார்க்கலாம். அல்லது மார்க்கெட்டில் புதிதாக வந்திருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் மற்ற பொருள்களையும் பற்றி தெரிந்துகொள்ளலாம். இன்னும் நிறைய பேர் ஆன்லைனில் சாட் செய்யலாம், ஈ-மெயில் அல்லது மெசேஜ் அனுப்பலாம். அல்லது விளையாட்டு செய்தியையும் மற்ற செய்தியையும் எப்போதும் பார்க்கலாம். சிலர் இந்த மாதிரியான விஷயங்களுக்கு அடிமையாகிவிடலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (பிர. 3:1, 6) தேவையில்லாத விஷயங்களில் நிறைய நேரம் செலவு செய்தால் முக்கியமான விஷயங்களுக்கு, அதாவது, யெகோவாவை சேவிக்கும் விஷயங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்தாமல் போய்விடுவோம்.எபேசியர் 5:15-17-ஐ வாசியுங்கள்.

8. இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீது அன்பு வைக்காமல் இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

8 சாத்தான் அவனுடைய உலகத்தை வைத்து நம்மை ஈர்க்கிறான், நம்முடைய கவனத்தை சிதறடிக்கிறான். சாத்தான் இப்படி முதல் நூற்றாண்டில் செய்தான்; இன்று இன்னும் அதிகமாகவே செய்கிறான். (2 தீ. 4:10) அதனால், ‘இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீது அன்பு வைக்காதீர்கள்’ என்ற ஆலோசனைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதன்படி வாழ நாம் தொடர்ந்து மாற்றங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான், இந்த உலகத்தில் இருக்கும் விஷயங்கள் நம் கவனத்தை சிதறடிக்காது. யெகோவாமீது நமக்கு இருக்கும் அன்பும் அதிகமாகும். அதோடு, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது நமக்கு சுலபமாக இருக்கும்; அவரோடு எப்போதும் நெருங்கி இருப்போம்.—1 யோ. 2:15-17.

முக்கியமான விஷயங்களுக்கு கவனம் செலுத்துங்கள்

9. இயேசு சீடர்களிடம் என்ன சொன்னார், அதற்கு அவர் எப்படி ஒரு நல்ல உதாரணமாக இருந்தார்?

9 நிறைய காரியங்களால் திண்டாட வேண்டாம், அதாவது கவனம் சிதறடிக்கப்பட வேண்டாம் என்று இயேசு மார்த்தாளிடம் சொன்னார். அதே விஷயத்தைத்தான் அவருடைய சீடர்களிடமும் சொன்னார். யெகோவாவின் சேவையிலும் அவருடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சீடர்களை உற்சாகப்படுத்தினார். (மத்தேயு 6:22, 33-ஐ வாசியுங்கள்.) இதற்கு இயேசு ஒரு நல்ல உதாரணமாக இருந்தார். அவரிடம் வீடோ நிலமோ சொத்துப்பத்தோ இருக்கவில்லை.—லூக். 9:58; 19:33-35.

10. இயேசு எப்படி நமக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார்?

10 ஊழியம் செய்வதிலிருந்து தன்னுடைய கவனத்தை சிதறடிக்க இயேசு எந்தவொரு விஷயத்தையும் அனுமதிக்கவில்லை. அவர் ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்தில், கப்பர்நகூமில் இருந்த மக்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்தார்; நிறைய அற்புதங்களும் செய்தார். அதனால், அங்கிருந்த மக்கள் இயேசு அவர்களோடு இருக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டார்கள். ஆனால் இயேசு, “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். (லூக். 4:42-44) இயேசு அவருடைய ஊழியத்திலேயே கவனம் செலுத்தினார். நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ரொம்ப தூரம் நடந்துபோனார். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் நம்மை போல குறையுள்ள மனிதராக இருக்கவில்லை. இருந்தாலும், அவர் சிலசமயங்களில் களைத்துப் போனார். கடினமாக உழைத்ததால் அவருக்கு ஓய்வும் தேவைப்பட்டது.—லூக். 8:23; யோவா. 4:6.

11. ஒரு மனிதனுடைய குடும்ப பிரச்சினையை தீர்க்க இயேசு ஏன் முயற்சி செய்யவில்லை? இயேசு சீடர்களுக்கு என்ன பாடம் கற்றுக்கொடுத்தார்?

11 இயேசு அவருடைய சீடர்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, ஒரு மனிதன் குறிக்கிட்டு அவரிடம், “போதகரே, சொத்தை எனக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி என் சகோதரனுக்குச் சொல்லுங்கள்” என்று சொன்னான். இயேசு அவனுடைய பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யவில்லை; கவனம் சிதறாமல் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தினால் கடவுளுக்கு சேவை செய்வதிலிருந்து கவனம் சிதறிவிடும் என்று சீடர்களிடம் சொன்னார்.—லூக். 12:13-15.

12, 13. (அ) கிரேக்க மக்கள் எதைப் பார்த்து அசந்துபோனார்கள்? (ஆ) கிரேக்க மக்கள் இயேசுவைப் பார்த்து பேச வேண்டும் என்று சொன்னபோது அவர் என்ன செய்தார்?

12 இயேசு பூமியில் இருந்த கடைசி வாரம் அவருக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. (மத். 26:38; யோவா. 12:27) தான் துடிதுடித்து இறக்கப் போவதும், இறப்பதற்கு முன்பு நிறைய வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்பதும் இயேசுவுக்குத் தெரியும். உதாரணத்துக்கு, நிசான் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு ஒரு கழுதையின்மீது எருசலேமுக்கு வந்தார். அங்கிருந்த கூட்டம் அவரை ராஜா என்று சொல்லி வரவேற்றது. (லூக். 19:38) அடுத்த நாள், பேராசைப்பிடித்த வியாபாரிகள் ஆலயத்தில் அதிக விலைக்கு பொருள்களை விற்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை தைரியமாகத் துரத்தினார்.—லூக். 19:45, 46.

13 பஸ்காவைக் கொண்டாடுவதற்காக எருசலேமுக்கு வந்திருந்த சில கிரேக்க மக்கள் இயேசு செய்ததை எல்லாம் பார்த்து அசந்துபோனார்கள். அதனால், அவரைப் பார்த்து பேச முடியுமா என்று அப்போஸ்தலர் பிலிப்புவிடம் கேட்டார்கள். ஆனால், இயேசு தனக்கு யாராவது ஆதரவு கொடுக்க வேண்டும் என்றோ எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. எது ரொம்ப முக்கியம் என்பது இயேசுவுக்குத் தெரியும். தன்னுடைய உயிரை பலியாக கொடுக்க வேண்டும், அதுவே கடவுளுடைய நோக்கம் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும்; இயேசுவுடைய முழு கவனமும் இதிலேயே இருந்தது. அவர் சீக்கிரத்தில் இறக்கப் போவதைப் பற்றி சீடர்களிடம் சொன்னார். அவரைப் பின்பற்றி வர விரும்புகிற எல்லாரும் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். “தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகில் தன் உயிரை வெறுக்கிறவனோ அதைப் பாதுகாத்துக்கொண்டு முடிவில்லா வாழ்வைப் பெறுவான்” என்று சொன்னார். அதோடு, “ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், அவனை என் தகப்பன் கெளரவிப்பார்” என்ற வாக்குறுதியையும் கொடுத்தார். இயேசு சொன்ன இந்த விஷயங்களை எல்லாம், கிரேக்க மக்களிடம் பிலிப்பு சொல்லியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.—யோவா. 12:20-26.

14. இயேசு பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுத்தாலும் வேறு என்னவெல்லாம் செய்தார்?

14 இயேசு பூமியில் இருந்தபோது பிரசங்க வேலையைதான் முக்கியமாக செய்தார். ஊழியம் செய்வதில் அவருடைய கவனம் இருந்தாலும், அதைப் பற்றியே அவர் எப்போதும் யோசித்துக்கொண்டு இருக்கவில்லை. உதாரணத்துக்கு, அவர் ஒரு கல்யாணத்துக்குப் போனார்; அங்குதான் தண்ணீரை திராட்சைமதுவாக மாற்றினார். (யோவா. 2:2, 6-10) இயேசு அவருடைய நண்பர்கள் வீட்டுக்கும், நற்செய்தியை கேட்க ஆர்வமாக இருந்தவர்கள் வீட்டுக்கும் போனார். அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டார். (லூக். 5:29; யோவா. 12:2) அதைவிட முக்கியமாக ஜெபம் செய்யவும், ஆழ்ந்து யோசிக்கவும், ஓய்வு எடுக்கவும் அவர் நேரம் ஒதுக்கினார்.—மத். 14:23; மாற். 1:35; 6:31, 32.

‘பாரமான எல்லாவற்றையும் உதறித்தள்ளுங்கள்’

15. கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் சொன்னார், அதற்கு அவர் எப்படி நல்ல உதாரணமாக இருந்தார்?

15 கிறிஸ்தவர்கள் எல்லாரும் நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவர்களைப் போல இருக்கிறார்கள் என்று அப்போஸ்தலர் பவுல் சொன்னார். ஓட்டப் பந்தயத்தை ஓடி முடிப்பதற்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் உதறித்தள்ள வேண்டும் என்று சொன்னார். (எபிரெயர் 12:1-ஐ வாசியுங்கள்.) பவுல் இதற்கு நல்ல உதாரணமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் பணக்காரராகவும் பிரபலமான யூத மதத் தலைவராகவும் ஆகியிருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு “மிக முக்கியமான காரியங்கள்” மீது அவர் கவனம் செலுத்தினார். ஊழியம் செய்வதற்காக சீரியா, ஆசியா மைனர், மக்கெதோனியா, யூதேயா போன்ற இடங்களுக்குப் போனார். யெகோவாவுக்கு சேவை செய்வதில் கடினமாக உழைத்தார். பரலோகத்தில் என்றென்றும் வாழப் போவதைப் பற்றியே பவுல் யோசித்துக்கொண்டு இருந்தார். “பின்னானவற்றை மறந்து, முன்னானவற்றை எட்டிப்பிடிக்க நாடி . . . பரலோக அழைப்பாகிய பரிசைப் பெறுகிற லட்சியத்தோடு ஓடுகிறேன்” என்று சொன்னார். (பிலி. 1:10; 3:8, 13, 14) அவருக்குக் கல்யாணம் ஆகாததால், எந்த ‘கவனச்சிதறலும் இல்லாமல் எஜமானருக்குத் தொடர்ந்து ஊழியம் செய்தார்.’—1 கொ. 7:32-35.

16, 17. கல்யாணம் ஆகியிருந்தாலும் சரி, ஆகவில்லை என்றாலும் சரி, நாம் எப்படி பவுலைப் போல இருக்கலாம்? மார்க்-கிளேர் தம்பதி என்ன செய்தார்கள்?

16 யெகோவாவின் ஊழியர்கள் சிலர், பவுலைப் போல கல்யாணம் செய்யாமல் இருக்க தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்; யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள். (மத். 19:11, 12) கல்யாணம் ஆகாதவர்களுக்குக் குடும்ப பொறுப்புகள் நிறைய இருக்காது. நமக்குக் கல்யாணம் ஆகியிருந்தாலும் சரி, ஆகவில்லை என்றாலும் சரி, நாம் ‘பாரமான எல்லாவற்றையும் உதறித்தள்ள வேண்டும்.’ நேரத்தை வீணடிக்கும் பழக்கவழக்கங்கள் ஏதாவது இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். அப்போதுதான், எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய முடியும்.

17 மார்க்-கிளேர் தம்பதியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்கள் வேல்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் 2 பேரும் பள்ளி படிப்பை முடித்தவுடன் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். கல்யாணத்துக்குப் பிறகும், தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்தார்கள். இருந்தாலும், யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மார்க் சொல்கிறார்: ‘எங்க வாழ்க்கைய எளிமையாக்கிட்டு சர்வதேச கட்டுமான வேலைக்கு போகணும்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, நாங்க செஞ்சிக்கிட்டு இருந்த பகுதி நேர வேலைய விட்டுட்டோம், எங்களோட பெரிய வீட்டையும் வித்துட்டோம்.’ கடந்த 20 வருஷங்களில், ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்காக ஆப்பிரிக்காவில் இருக்கும் நிறைய இடங்களுக்கு அவர்கள் போயிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களிடம் கொஞ்சம் பணம்தான் இருக்கும். இருந்தாலும், அவர்களுடைய தேவைகளை எல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டார். கிளேர் சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு சேவை செய்றது எங்களுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. எங்களுக்கு எந்த குறையும் இல்ல. முழுநேர சேவையில கிடைக்கிற சந்தோஷத்தைவிட நாங்க செஞ்ச தியாகம் ஒண்ணுமே இல்ல.” முழுநேர சேவை செய்யும் நிறைய பேர் இப்படித்தான் சொல்கிறார்கள். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

18. என்ன கேள்விகளை யோசித்துப் பார்க்க வேண்டும்?

18 உங்களால் யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? மிக முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்துவதிலிருந்து ஏதாவது உங்களைத் திசை திருப்புகிறதா? அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்? பைபிளை வாசிப்பதிலும் அதை ஆராய்ச்சி செய்து படிப்பதிலும் நீங்கள் ஒருவேளை மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். அதை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 7எல்லாவற்றையும் நம்புகிறீர்களா?” என்ற கட்டுரையை இந்தப் பத்திரிகையில் பாருங்கள்.

^ பாரா. 17 ஹேடன் ஸான்டர்ஸன்-மெலடி ஸான்டர்ஸன் வாழ்க்கை சரிதையைப் பார்க்க, “எது சரி என்பதைத் தெரிந்தபின் அதையே செய்தல்” என்ற கட்டுரையைப் படியுங்கள். (மார்ச் 1, 2006 காவற்கோபுரம்) ஆஸ்திரேலியாவில் நல்ல வருமானம் தந்த தொழிலை விட்டுவிட்டு அவர்கள் முழுநேர சேவை செய்ய ஆரம்பித்தார்கள். இந்தியாவில் மிஷனரிகளாக சேவை செய்துகொண்டிருந்தபோது அவர்களிடம் பணம் இல்லாமல்போனது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள அந்தக் கட்டுரையைப் பாருங்கள்.