Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்

படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்

“இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 4:15.

பாடல்கள்: 57, 52

1, 2. மனிதனுடைய மூளை எப்படி வித்தியாசமாக இருக்கிறது?

மனிதனுடைய மூளை ரொம்ப வித்தியாசமானது. உதாரணத்துக்கு, ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமை மனிதர்களுக்கு இருக்கிறது. வாசிக்கவும், எழுதவும், பேசவும், கேட்கிற விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் மொழி நமக்கு உதவி செய்கிறது. அதோடு, யெகோவாவிடம் ஜெபம் செய்யவும் அவரைப் புகழ்ந்து பாடவும் மொழிதான் உதவுகிறது. இந்த விஷயங்களை எல்லாம் நம்முடைய மூளையால் எப்படி செய்ய முடிகிறது என்பதை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

2 மொழியைப் பயன்படுத்தும் திறமை யெகோவா நமக்கு கொடுத்த பரிசு. (சங். 139:14; வெளி. 4:11) நாம் மிருகங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கிறோம்; ஏனென்றால், நாம் ‘கடவுளுடைய சாயலில்’ படைக்கப்பட்டிருக்கிறோம். சொந்தமாக தீர்மானம் எடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. மொழியைப் பயன்படுத்தி யெகோவாவைப் புகழ்ந்து பாட வேண்டும், அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் நம்மால் எடுக்க முடிகிறது.—ஆதி. 1:27.

3. நாம் புத்தியுள்ளவர்களாக ஆவதற்கு யெகோவா நமக்கு எதைக் கொடுத்திருக்கிறார்?

3 பைபிள் யெகோவா கொடுத்த பரிசு! யெகோவாவைப் புகழவும் அவருக்கு சேவை செய்யவும் பைபிள் நமக்கு உதவி செய்கிறது. இன்று பைபிள், முழுமையாகவோ பகுதியாகவோ 2,800-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. பைபிளில் இருக்கிற விஷயங்களைத் தியானிக்கும்போது யெகோவாவைப்போல் நாமும் யோசிப்போம். (சங். 40:5; 92:5; 139:17) அப்படி செய்யும்போது, நாம் புத்தியுள்ளவர்களாக ஆவோம். அதோடு, முடிவில்லா வாழ்வையும் பெறுவோம்.2 தீமோத்தேயு 3:14-17-ஐ வாசியுங்கள்.

4. தியானிப்பது என்றால் என்ன, இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப்போகிறோம்?

4 ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி, அதைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதைத்தான் தியானிப்பது என்று சொல்கிறோம். (சங். 77:12; நீதி. 24:1, 2) யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஆழ்ந்து யோசிக்கும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். (யோவா. 17:3) நாம் எதை வாசித்தாலும் அதை ஆழ்ந்து யோசிக்கும் விதத்தில் எப்படி வாசிக்கலாம்? எதைப் பற்றியெல்லாம் ஆழ்ந்து யோசிக்கலாம்? படிக்கிற விஷயங்களை ஆழ்ந்து யோசிப்பதற்கும் அதை சந்தோஷமாக செய்வதற்கும் நாம் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

நன்மையடையும் விதத்தில் படியுங்கள்

5, 6. படிக்கிற விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் அதை நன்கு புரிந்துகொள்ளவும் என்ன செய்யலாம்?

5 பொதுவாக சில விஷயங்களை நாம் யோசிக்காமலேயே செய்வோம். உதாரணத்துக்கு சுவாசிப்பது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றை நம்மால் யோசிக்காமலேயே செய்ய முடியும். ஆனால் சில நேரங்களில், வாசிக்கும்போதுகூட நாம் யோசிப்பது கிடையாது. ஒருவேளை, வாசிக்கும்போது நாம் வேறு எதையாவது யோசிக்க ஆரம்பித்துவிடலாம். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? வாசிக்கிற விஷயத்தில் கவனம் செலுத்துங்கள், அதனுடைய அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு பத்திரிகையில் ஒரு பாராவை அல்லது ஒரு உபதலைப்பை வாசித்து முடிக்கும்போது கொஞ்சம் நிறுத்தி, படித்த விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள். பிறகு, அதை நன்றாகப் புரிந்துகொண்டீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.

6 நாம் எதையாவது சத்தமாக வாசிக்கும்போது அதை சுலபமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். நம் படைப்பாளருக்கு இது நன்றாக தெரியும்! அதனால்தான், நியாயப்பிரமாண புத்தகத்தை “தாழ்ந்த குரலில்” வாசிக்கும்படி யெகோவா யோசுவாவிடம் சொன்னார். (யோசுவா 1:8-ஐ அடிக்குறிப்பிலிருந்து வாசியுங்கள். *) நீங்கள் பைபிளை வாய்விட்டு சத்தமாக வாசித்தால் உங்களுடைய கவனம் வேறு எங்கேயும் போகாது. அதோடு, படித்த விஷயங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் முடியும்.

7. பைபிளை எப்போது படித்து, ஆழ்ந்து யோசிக்கலாம்? (ஆரம்பப் படம்)

7 நாம் படிக்கிற விஷயத்தில் கவனம் செலுத்தவும் அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் களைப்பாக இருக்கும்போது வாசித்தால் அது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்காது. அமைதியான ஒரு சூழ்நிலையில், படிப்பதும் ஆழ்ந்து யோசிப்பதும் நல்லது. அப்படிப் படிக்கும்போது கவனச்சிதறல்கள் இருக்காது. சங்கீதக்காரனாகிய தாவீது, இரவு நேரத்தில் படுத்திருக்கும்போது ஆழ்ந்து யோசித்தார். (சங். 63:6) எந்தத் தவறும் செய்யாத இயேசுகூட அமைதியான ஒரு இடத்தில்தான் ஜெபம் செய்தார், ஆழ்ந்து யோசித்தார்.—லூக். 6:12.

நல்ல விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்

8. (அ) நாம் எதைப் பற்றியெல்லாம் ஆழ்ந்து யோசிக்கலாம்? (ஆ) நாம் மற்றவர்களிடம் யெகோவாவைப் பற்றி பேசும்போது அவர் எப்படி உணர்கிறார்?

8 பைபிளைத் தவிர வேறு என்னென்ன விஷயங்களைப் பற்றியெல்லாம் ஆழ்ந்து யோசிக்கலாம்? யெகோவாவுடைய ஒரு அற்புதமான படைப்பைப் பார்க்கும்போது அதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ‘அதுலருந்து நான் யெகோவாவை பத்தி என்ன கத்துக்கலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படி யோசிக்கும்போது, ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுவீர்கள். ஒருவேளை, உங்களோடு வேறு யாராவது இருந்தால் யெகோவாவைப் பற்றி உங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளை அவர்களிடம் சொல்வீர்கள். (சங். 104:24; அப். 14:17) நாம் யெகோவாவைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதை... அவரிடம் ஜெபம் செய்வதை... அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதை எல்லாம் யெகோவா கூர்ந்து கவனிக்கிறார்; அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அதனால்தான், பைபிள் இப்படி சொல்கிறது: “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”—மல். 3:16.

உங்கள் பைபிள் மாணாக்கரின் தேவையையும் சூழ்நிலையையும் பற்றி ஆழ்ந்து யோசிக்கிறீர்களா? (பாரா 9)

9. (அ) எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார்? (ஆ) ஊழியத்துக்குத் தயாரிக்கும்போது நாம் எதைப் பற்றியெல்லாம் யோசிக்கலாம்?

9 தன்னுடைய பேச்சும் நடத்தையும் கற்பிக்கிற விதமும் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று ஆழ்ந்து யோசிக்கும்படி தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலர் பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 4:12-16-ஐ வாசியுங்கள்.) தீமோத்தேயுவைப் போல நீங்களும் நிறைய விஷயங்களைப் பற்றி யோசிக்கலாம். உதாரணத்துக்கு, உங்களோடு பைபிள் படிப்பவர் முன்னேற்றம் செய்ய அவரிடம் என்ன கேள்வி கேட்கலாம், என்ன உதாரணத்தைப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள். இப்படி நேரம் எடுத்து பைபிள் படிப்புக்குத் தயாரிக்கும்போது உங்கள் விசுவாசம் பலப்படும். அதோடு, உங்களால் திறமையாகவும் ஆர்வமாகவும் பைபிள் படிப்பை நடத்த முடியும். ஊழியத்துக்குப் போவதற்கு முன்பும் சில விஷயங்களை யோசியுங்கள். (எஸ்றா 7:10-ஐ வாசியுங்கள்.) இன்னும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய பைபிளிலுள்ள அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து ஒரு அதிகாரத்தை வாசியுங்கள். ஊழியத்தில் அன்று என்ன வசனத்தைக் காட்டலாம், என்ன பத்திரிகையைக் கொடுக்கலாம் என்றும் யோசியுங்கள். (2 தீ. 1:6) நீங்கள் ஊழியம் செய்யும் பகுதியில் இருக்கிற ஆட்களைப் பற்றியும் அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் என்ன பேசலாம் என்பதைப் பற்றியும் யோசியுங்கள். இப்படி செய்யும்போது, நீங்கள் பைபிளைத் திறமையாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பீர்கள்.—1 கொ. 2:4.

10. வேறு என்னென்ன விஷயங்களைப் பற்றி நாம் ஆழ்ந்து யோசிக்கலாம்?

10 வேறு எதைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆழ்ந்து யோசிக்கலாம்? சபையிலும் மாநாட்டிலும் பேச்சுகள் கொடுக்கப்படும்போது நீங்கள் ஒருவேளை குறிப்பு எடுக்கலாம். நேரம் எடுத்து அந்தக் குறிப்புகளை எல்லாம் மறுபடியும் பாருங்கள். அப்படி செய்யும்போது, ‘பைபிள்ல இருந்தும் கடவுளுடைய அமைப்புகிட்ட இருந்தும் நான் என்னெல்லாம் கத்துக்கிட்டேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் படிக்கிற விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள். அதோடு, மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரசுரங்களில் இருக்கும் விஷயங்களையும் யோசியுங்கள். இயர்புக்கில் ஒவ்வொரு அனுபவத்தையும் வாசித்த பிறகு, கொஞ்சம் நிறுத்தி அதைப் பற்றி யோசியுங்கள். அப்படி செய்யும்போது நீங்கள் படித்த விஷயங்கள் உங்கள் இருதயத்தைத் தொடும். நம் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கும்போது முக்கியமான விஷயங்களைக் கோடிடலாம்; ஓரத்தில் குறிப்புகள் எழுதலாம். இப்படித் தயாரிப்பது மறுசந்திப்பு செய்யவும், மேய்ப்பு சந்திப்பு செய்யவும், பேச்சு கொடுக்கவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். படிக்கும்போது கொஞ்சம் நிறுத்தி, அதைப் பற்றி ஆழ்ந்து யோசித்தால் படித்த விஷயங்கள் உங்கள் இருதயத்தில் நன்றாகப் பதியும். அதோடு, நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுவீர்கள்.

தினமும் பைபிளைப் பற்றி ஆழ்ந்து யோசியுங்கள்

11. நாம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான புத்தகம் எது, அதனால் நமக்கு என்ன பலன்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

11 நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் பைபிள்! ஆனால், உங்கள் கையில் பைபிளே இல்லாத ஒரு காலம் வந்தால் என்ன செய்வது? * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நீங்கள் மனப்பாடம் செய்த பைபிள் வசனங்களையும் ராஜ்ய பாடல்களையும் யோசித்துப் பார்ப்பதை யாராலும் தடுக்க முடியாது. (அப். 16:25) படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தி பார்க்க கடவுளுடைய சக்தி உங்களுக்கு உதவி செய்யும். அப்படி ஞாபகப்படுத்தி பார்க்கும்போது நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருப்பீர்கள்.—யோவா. 14:26.

12. தினமும் பைபிளை வாசிக்க நீங்கள் எப்படித் திட்டமிடலாம்?

12 தினமும் பைபிளை வாசிக்க நீங்கள் எப்படித் திட்டமிடலாம்? ஒரு வாரத்தில், சில நாட்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் உள்ள பைபிள் வாசிப்பு பகுதியை வாசித்து, ஆழ்ந்து யோசியுங்கள். வாரத்தின் மற்ற நாட்களில் சுவிசேஷ புத்தகங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்களை வாசியுங்கள். அப்படி செய்யும்போது, இயேசு செய்ததையும் சொன்னதையும் உங்களால் ஆழ்ந்து யோசிக்க முடியும். (ரோ. 10:17; எபி. 12:2; 1 பே. 2:21) இயேசுவுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன சம்பவங்கள் நடந்தன என்பதைத் தெரிந்துகொள்ள நம்மிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. சுவிசேஷ புத்தகங்களைப் படித்து, அதிலிருந்து நன்மையடைய இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்.—யோவா. 14:6.

ஆழ்ந்து யோசிப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

13, 14. யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஆழ்ந்து யோசிப்பது ஏன் ரொம்ப முக்கியம், அதனால் என்ன நன்மை?

13 யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஆழ்ந்து யோசிக்கும்போது நாம் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவோம். நம்முடைய விசுவாசமும் பலப்படும். (எபி. 5:14; 6:1) ஒருவர் யெகோவாவைப் பற்றி யோசித்துப் பார்க்க நிறைய நேரம் ஒதுக்கவில்லை என்றால் என்ன ஆகும்? யெகோவாவோடு அவருக்கு இருக்கும் பந்தம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாகிவிடும்; ‘யெகோவாவே வேண்டாம்’ என்றுகூட அந்த நபர் முடிவு செய்துவிடலாம். (எபி. 2:1; 3:12) பைபிளில் இருக்கும் விஷயங்களை “நல்ல இருதயத்தோடு” கேட்டு, அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நம்மால் அந்த விஷயங்களை இருதயத்தில் ‘பதிய வைக்க’ முடியாது. “வாழ்க்கையின் கவலைகளும் செல்வங்களும் சுகபோகங்களும்” நம்மை சுலபமாகத் திசைதிருப்பிவிடும்.—லூக். 8:14, 15.

14 பைபிளைப் பற்றி ஆழ்ந்து யோசியுங்கள்; யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், நாம் அவரைப்போலவே நடந்துகொள்வோம். (2 கொ. 3:18) தொடர்ந்து, நம் அப்பா யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதும் அவரைப்போல் நடப்பதும் நமக்கு கிடைத்த பாக்கியம். இதைவிட மிகப் பெரிய பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது!—பிர. 3:11.

15, 16. (அ) யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஆழ்ந்து யோசிப்பதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது? (ஆ) ஆழ்ந்து யோசிப்பது ஏன் சில நேரங்களில் கஷ்டமாக இருக்கலாம், இருந்தாலும் நாம் என்ன செய்ய வேண்டும்?

15 யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஆழ்ந்து யோசிக்கும்போது விசுவாசத்தில் உறுதியாக இருப்பீர்கள். நீங்கள் அப்படி உறுதியாக இருப்பதைப் பார்க்கும்போது சகோதர சகோதரிகள் உற்சாகமடைவார்கள். ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் ஆட்களையும் அது உற்சாகப்படுத்தும். இயேசுவை மீட்கும் பலியாக யெகோவா உங்களுக்கு கொடுத்ததை ஆழ்ந்து யோசியுங்கள். அப்படி யோசிக்கும்போது, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற நட்பு எவ்வளவு மதிப்புள்ளது என்று புரிந்துகொள்வீர்கள். (ரோ. 3:24; யாக். 4:8) தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்க் என்ற சகோதரர் விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால் 3 வருஷங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் சொல்கிறார், ‘ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசிக்கிறப்போ அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்! எவ்ளோ அதிகமா யோசிக்கிறோமோ அவ்ளோ அதிகமா யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்குவோம். நான் சோர்ந்து போயிருக்கும்போதும் எதிர்காலத்தை நினைச்சு கவலையா இருக்கும்போதும் பைபிள்ல இருக்கிற சில வசனங்களை வாசிப்பேன். அது என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்.’

16 நம் வாழ்க்கையில் நிறைய கவனச்சிதறல்கள் இருக்கின்றன. அதனால், பைபிளில் இருக்கிற விஷயங்களை ஆழ்ந்து யோசிக்க நேரம் ஒதுக்குவது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவை சேர்ந்த பேட்ரிக் என்ற சகோதரர் இப்படி சொல்கிறார்: ‘என் மனசுல நிறைய விஷயம் ஓடிக்கிட்டு இருக்கும். அதுல எது தேவை, எது தேவையில்லனு ஒவ்வொரு நாளும் யோசிச்சு பார்ப்பேன். மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கிற விஷயம் அடிக்கடி என் ஞாபகத்துக்கு வரும். அப்போ உடனே யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுவேன். அப்படி ஜெபம் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும்தான். ஆனா, ஜெபம் செஞ்சாதான், பைபிள்ல இருக்கிற விஷயங்களை என்னால ஆழமா யோசிச்சு பார்க்க முடியும், அதை நல்லா புரிஞ்சிக்கவும் முடியும். அதோட, யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிற மாதிரியும் உணர்வேன்.’ (சங். 94:19) ஒவ்வொரு நாளும் பைபிளை வாசித்து, அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.—அப். 17:11.

உங்கள் வசதியான நேரம் எது?

17. பைபிளைப் படித்து, ஆழ்ந்து யோசிக்க உங்கள் வசதியான நேரம் எது?

17 சிலர் விடியற்காலையில் எழுந்து பைபிளை வாசிக்கிறார்கள், ஆழ்ந்து யோசிக்கிறார்கள், ஜெபம் செய்கிறார்கள். இன்னும் சிலர் அவர்களுடைய சாப்பாட்டு இடைவேளையில் இதையெல்லாம் செய்கிறார்கள். நீங்கள் ஒருவேளை சாயங்காலத்திலோ தூங்கப்போவதற்கு முன்போ பைபிளை வாசிக்க விரும்பலாம். இன்னும் கொஞ்சம் பேர் காலையிலும் படிக்கிறார்கள், தூங்கப்போவதற்கு முன்பும் படிக்கிறார்கள். (யோசு. 1:8) நீங்கள் எந்த நேரத்தில் வாசித்தாலும் சரி, ‘நேரத்தை நன்றாகப் பயன்படுத்துவது’ ரொம்ப முக்கியம். அதாவது, ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவையில்லாத காரியங்களுக்காக செலவு செய்யும் நேரத்தை எடுத்து அதை பைபிளை வாசிக்கவும் ஆழ்ந்து யோசிக்கவும் பயன்படுத்துவது ரொம்ப முக்கியம்.—எபே. 5:15, 16.

18. பைபிளை ஆழ்ந்து யோசிப்பவர்களுக்கும் அதன்படி நடப்பவர்களுக்கும் பைபிள் என்ன வாக்குறுதி கொடுக்கிறது?

18 பைபிளை ஆழ்ந்து யோசிப்பவர்களையும் அதன்படி நடப்பவர்களையும் யெகோவா ஆசீர்வதிப்பார் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.) “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிக்கிறவர்களே சந்தோஷமானவர்கள்!” என்று இயேசு சொன்னார். (லூக். 11:28) யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் தினமும் அவருடைய வார்த்தையை வாசிப்பதும் ஆழ்ந்து யோசிப்பதும் ரொம்ப முக்கியம். இப்படி செய்யும்போது, யெகோவா நமக்கு இன்றும் என்றும் சந்தோஷத்தைத் தருவார்.—யாக். 1:25; வெளி. 1:3.

^ பாரா. 6 யோசுவா 1:8 [NW]: “இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் இருப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டே இரு; அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடிப்பதற்காக இரவும் பகலும் தாழ்ந்த குரலில் வாசி. அப்போதுதான் வெற்றி பெறுவாய், ஞானமாகவும் நடப்பாய்.”

^ பாரா. 11 டிசம்பர் 1, 2006 காவற்கோபுரத்தில் எப்போதும் ஆன்மீக பலத்தோடிருக்க போராடினோம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.