Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

“இயேசு வளரவளர ஞானத்தில் பெருகி கடவுளிடமும் மனிதரிடமும் தயவு பெற்று வந்தார்.”—லூக். 2:52.

பாடல்கள்: 41, 89

1, 2. (அ) டீனேஜ் பிள்ளைகளை வளர்க்கும் சில பெற்றோர் எதை நினைத்து கவலைப்படுகிறார்கள்? (ஆ) டீனேஜ் பிள்ளைகளால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்க்கும்போது பெற்றோருக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! பெரினீஸ் என்ற சகோதரியின் 4 பிள்ளைகளும் 14 வயது ஆவதற்கு முன்பே ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்கள். பெரினீஸ் சொல்கிறார், ‘எங்க பிள்ளைங்க ஞானஸ்நானம் எடுத்தப்போ எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. யெகோவாவுக்கு சேவை செய்ய பிள்ளைங்க தீர்மானம் எடுத்ததை நினைச்சு நாங்க ரொம்ப நன்றியோடு இருந்தோம். இருந்தாலும், எங்க பிள்ளைங்க நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்னு எங்களுக்கு புரிஞ்சது.’ உங்கள் மகனோ மகளோ டீனேஜ் வயதில் இருக்கிறார்களா, அல்லது டீனேஜ் வயதை எட்டப்போகிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு வரும் பிரச்சினையை நினைத்து நீங்களும் கவலைப்படலாம்.

2 குழந்தை மனநல நிபுணர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்: ‘டீனேஜ் பிள்ளைங்களை வளர்க்க அப்பா-அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. அதேசமயத்தில, டீனேஜ் பிள்ளைங்களும் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறாங்க. அவங்க விளையாட்டுத்தனமா, முட்டாள்தனமா இருக்கிறாங்கனு அப்பா-அம்மா நினைச்சிட கூடாது. அவங்க எப்பவுமே வித்தியாசமா யோசிப்பாங்க. அவங்க ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க. அவங்க நண்பர்களோட இருக்கணும்னும் ஆசைப்படுவாங்க.’ டீனேஜ் வயதில் இருக்கும்போதே உங்கள் பிள்ளைகளால் யெகோவாவுடைய நண்பராக இருக்க முடியும். இயேசுவும் இளம் வயதில் இருக்கும்போது யெகோவாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். (லூக்கா 2:52-ஐ வாசியுங்கள்.) பிரசங்கிக்கும் திறமையை... யெகோவாவுடைய சேவையில் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசையை... டீனேஜ் பிள்ளைகளால் வளர்த்துக்கொள்ள முடியும். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது, அவருக்குத் தங்களை அர்ப்பணிப்பது போன்ற விஷயங்களில் அவர்களால் சொந்தமாகத் தீர்மானம் எடுக்கவும் முடியும். இயேசு சீடர்களிடம் அன்பு காட்டினார், மனத்தாழ்மையாக இருந்தார், அவர்களைப் புரிந்துகொண்டார். நீங்கள் எப்படி இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம்?

உங்கள் டீனேஜ் பிள்ளைகள்மீது அன்பு காட்டுங்கள்

3. இயேசு ஒரு நல்ல நண்பராக இருந்தார் என்று சீடர்களுக்கு எப்படித் தெரியும்?

3 இயேசு சீடர்களுக்கு ஒரு எஜமானராக மட்டும் இல்லை, அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்தார். (யோவான் 15:15-ஐ வாசியுங்கள்.) பைபிள் காலங்களில் ஒரு எஜமானர் என்ன நினைக்கிறார், எப்படி உணர்கிறார் என்று அடிமைகளிடம் சொல்ல மாட்டார். ஆனால், இயேசு அவர் என்ன நினைக்கிறார், எப்படி உணர்கிறார் என்று சீடர்களிடம் சொன்னார். இயேசு சீடர்களை அடிமைகளைப் போல நடத்தவில்லை. அவர்களை நேசித்தார், அவர்களோடு நேரம் செலவிட்டார். சீடர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்று சொன்னபோது அதைப் பொறுமையாகக் கேட்டார். (மாற். 6:30-32) இயேசுவும் சீடர்களும் நன்றாகப் பேசி பழகியதால் அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். எதிர்காலத்தில் கடவுளுடைய வேலையை செய்ய சீடர்களுக்கு இது உதவியாக இருந்தது.

4. பெற்றோர்களே, டீனேஜ் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி ஒரு நல்ல நண்பராக இருக்க முடியும்? (ஆரம்பப் படம்)

4 ஒரு பெற்றோராக பிள்ளைகள்மீது உங்களுக்கு அதிகாரம் இருந்தாலும், அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருக்க முடியும். நண்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நிறைய நேரம் செலவு செய்வார்கள். அதனால், உங்கள் வேலை நேரத்தையும் மற்ற வேலைகளைச் செய்யும் நேரத்தையும் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு அதிக நேரம் செலவு செய்யுங்கள். அதை எப்படிச் செய்யலாம் என்று நன்றாக யோசியுங்கள்; அதைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். நண்பர்களுக்குப் பொதுவாக ஒரே மாதிரியான விஷயங்கள் பிடிக்கும். அதனால், உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான இசை, படம், விளையாட்டு எல்லாம் பிடிக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, நீங்களும் அவர்களோடு சேர்ந்து அதை ரசியுங்கள். இத்தாலியில் இருக்கும் இலாரியா இப்படிச் சொல்கிறார்: “எனக்கு பிடிச்ச இசையை என் அப்பா-அம்மா என்கூட சேர்ந்து ரசிப்பாங்க. சொல்லப்போனா, என் அப்பா எனக்கு ஒரு நல்ல ப்ரெண்டா ஆனார். யார்கிட்டயும் சொல்ல முடியாத விஷயத்தைகூட என் அப்பாகிட்ட தயங்காம சொல்வேன்.” உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களாக இருங்கள்; அவர்கள் யெகோவாவின் நண்பராவதற்கு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்வதால், ஒரு பெற்றோராக உங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை நீங்கள் இழந்துவிட மாட்டீர்கள். (யாக். 2:23) நீங்கள் அவர்கள்மீது அன்பு வைத்திருக்கிறீர்கள், அவர்களை மதிக்கிறீர்கள் என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். அதோடு, என்ன விஷயமாக இருந்தாலும் அவர்கள் உங்களிடம் வந்து தயங்காமல் பேசுவார்கள்.

5. சந்தோஷமாக இருக்க என்ன செய்யும்படி இயேசு சீடர்களிடம் சொன்னார்?

5 யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்தால்... ஆர்வமாகப் பிரசங்கித்தால்... சீடர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால், சுறுசுறுப்பாக ஊழியம் செய்யும்படி இயேசு சீடர்களிடம் சொன்னார். அவர்களுக்கு உதவி செய்வதாகவும் வாக்குக் கொடுத்தார்.—மத். 28:19, 20.

6, 7. சில விஷயங்களைத் தவறாமல் செய்ய பிள்ளைகளுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்கள்மீது எப்படி அன்பு காட்டலாம்?

6 உங்கள் பிள்ளைகள் யெகோவாவுடைய நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். நீங்கள் “யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில்” வளர்க்க வேண்டும் என்று யெகோவாவும் எதிர்பார்க்கிறார். (எபே. 6:4) இந்தப் பொறுப்பை யெகோவா உங்களுக்குத்தான் கொடுத்திருக்கிறார். அதனால், பிள்ளைகளுக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுப்பது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவீர்கள், அவர்கள் புது புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அதேபோல் அவர்கள் தவறாமல் சபை கூட்டத்தில், மாநாட்டில், குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், யெகோவா கொடுக்கும் கல்விதான் அவர்கள் உயிரைக் காப்பாற்றும். அதனால், அவர்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள உதவி செய்யுங்கள்; ஞானமாக நடந்துகொள்ள யெகோவா உதவி செய்வார் என்பதைப் புரிய வையுங்கள். (நீதி. 24:14) ஊழியத்தைச் சந்தோஷமாக செய்ய இயேசு அவருடைய சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அதேபோல் பிள்ளைகள் தவறாமல் ஊழியத்துக்குப் போக... பைபிளில் இருக்கும் விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க... நீங்கள் உதவி செய்யுங்கள்.

7 தவறாமல் பைபிள் படிப்பது... கூட்டங்களுக்குப் போவது... ஊழியத்துக்குப் போவது எல்லாம் யெகோவாவுக்குச் சேவை செய்ய டீனேஜ் பிள்ளைகளுக்கு எப்படி உதவும்? தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எரின் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் படிக்கிறது, கூட்டங்களுக்கு போறது, ஊழியத்துக்கு போறது எல்லாத்தையும் நாங்க புலம்பிக்கிட்டே செய்வோம். அதை பத்தி ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்போம். சிலசமயம் குடும்ப வழிபாடு நடக்காம இருக்க நாங்க வேணும்னே ஏதாவது செய்வோம். இருந்தாலும் எங்க அப்பா-அம்மா எங்களை அப்படியே விட்டுடல.” தவறாமல் பைபிளைப் படிப்பதும், கூட்டங்களுக்குப் போவதும், ஊழியத்துக்குப் போவதும் எவ்வளவு முக்கியம் என்று எரினுடைய அப்பா-அம்மா அவருக்குப் புரிய வைத்தார்கள். அதனால்தான் இதையெல்லாம் எரினால் தவறாமல் செய்ய முடிகிறது. ஊழியத்துக்கும் கூட்டத்துக்கும் போக முடியாமல் போனால்கூட அதைத் தொடர்ந்து செய்ய அவர் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். இதற்காக, எரின் அவருடைய அப்பா-அம்மாவுக்கு நன்றியோடு இருக்கிறார்.

உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் மனத்தாழ்மையாக இருங்கள்

8. (அ) இயேசு மனத்தாழ்மையாக இருந்ததை எப்படிக் காட்டினார்? (ஆ) இயேசு மனத்தாழ்மையாக இருந்ததைப் பார்த்து சீடர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?

8 இயேசு தவறே செய்யாதவராக இருந்தாலும் மனத்தாழ்மையாக இருந்தார்; அவருக்கு யெகோவாவின் உதவி தேவை என்று சீடர்களிடம் சொன்னார். (யோவான் 5:19-ஐ வாசியுங்கள்.) அதனால், சீடர்களுக்கு அவர்மேல் இருந்த மரியாதை குறைந்துவிடவில்லை. இயேசு யெகோவாவை நம்பி இருந்ததால் சீடர்களுக்கு அவர்மேல் இருந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது. பிறகு, இயேசுவைப் போல மனத்தாழ்மையாக இருக்க அவர்களும் கற்றுக்கொண்டார்கள்.—அப். 3:12, 13, 16.

9. செய்யும் தவறை நீங்கள் ஒத்துக்கொண்டால் உங்கள் டீனேஜ் பிள்ளைகளும் என்ன செய்வார்கள்?

9 நாம் இயேசுவைப் போல கிடையாது; நிறைய தவறுகள் செய்கிறோம். அதனால், நாம் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்; நம் தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும். நம்மால் நிறைய விஷயங்களைச் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். (1 யோ. 1:8) உதாரணத்துக்கு, உங்கள் மேனேஜர் ஏதாவது தவறு செய்துவிட்டு அதை ஒத்துக்கொண்டால் அவர்மீது உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகும். அதேபோல், செய்யும் தவறை நீங்கள் ஒத்துக்கொண்டால் உங்கள் டீனேஜ் பிள்ளைகளும் அவர்களுடைய தவறை ஒத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு உங்கள்மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். ரோஸ்மேரி என்ற சகோதரிக்கு 3 பிள்ளைகள். அவர் சொல்கிறார்: “நானும் என் கணவரும் ஏதாவது தப்பு செஞ்சா அதை ஒத்துக்குவோம். அதனால, ஏதாவது பிரச்சினைனா எங்க பிள்ளைங்க எங்ககிட்ட வந்து தயங்காம சொல்வாங்க. அவங்களோட பிரச்சினைக்கான தீர்வை எங்க கண்டுபிடிக்கலாம்னு சொல்லிக்கொடுப்போம். அவங்களுக்கு உதவி தேவைப்படும்போது நம்ம பிரசுரங்களை எடுத்து பார்க்க சொல்வோம். அவங்களோட சேர்ந்து ஜெபம் செய்வோம்.”

10. இயேசுவுக்கு அதிகாரம் இருந்தாலும் எப்படி மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்?

10 சீடர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் இயேசுவுக்கு இருந்தது. ஆனால், அவர் மனத்தாழ்மையாக இருந்ததால் ஒரு விஷயத்தை ஏன் செய்ய வேண்டும், ஏன் செய்யக் கூடாது என்ற காரணத்தை சீடர்களிடம் விளக்கினார். உதாரணத்துக்கு, “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள்” என்று இயேசு சொன்னார். அப்படிச் செய்யும்போது, “இவற்றையெல்லாம் அவர் [யெகோவா] உங்களுக்குக் கொடுப்பார்” என்று சொன்னார். அதோடு, “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்” என்று சொன்னார். ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்ற காரணத்தையும் விளக்கினார். “நீங்கள் நியாயந்தீர்க்கப்படாமல் இருப்பதற்கு மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்; மற்றவர்களை எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்” என்று சொன்னார்.—மத். 6:31–7:2.

11. ஒரு விஷயத்தை ஏன் செய்ய வேண்டும் என்று பெற்றோர் டீனேஜ் பிள்ளைகளிடம் சொல்வது ஏன் நல்லது?

11 உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் ஒரு விஷயத்தைச் செய்ய சொல்லும்போது ஏன் அப்படி சொன்னீர்கள் என்ற காரணத்தையும் சொல்லுங்கள். அதை சரியான நேரம் பார்த்து சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் காரணத்தைப் புரிந்துகொள்ளும்போது அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவார்கள். பேரி என்ற சகோதரருக்கு 4 பிள்ளைகள். அவர் சொல்கிறார், “ஒரு விஷயத்தை ஏன் செய்யணுங்கிற காரணத்தை உங்க பிள்ளைங்ககிட்ட சொன்னீங்கனா அவங்க உங்களை நம்புவாங்க.” உங்களுக்கு அதிகாரம் இருப்பதால் அல்ல, ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் ஒரு விஷயத்தைச் செய்ய சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்வார்கள். அவர்கள் சின்ன பிள்ளைகள் கிடையாது, டீனேஜ் பிள்ளைகள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அவர்கள் யோசிக்க கற்றுக்கொள்கிறார்கள், சொந்தமாகத் தீர்மானம் எடுக்க விரும்புகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். (ரோ. 12:1) “உணர்ச்சிவசப்பட்டு தீர்மானம் எடுக்கிறதுக்கு பதிலா நல்லா யோசிச்சு தீர்மானம் எடுக்க டீனேஜ் பிள்ளைங்க கத்துக்கணும்” என்று பேரி சொல்கிறார். (சங். 119:34) அதனால், ஒரு விஷயத்தை ஏன் செய்ய சொல்கிறீர்கள் என்று உங்கள் பிள்ளைகளிடம் மனத்தாழ்மையாகச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால், சொந்தமாகத் தீர்மானம் எடுக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள்... அவர்கள் பெரிய பிள்ளைகளாக வளர்வதைப் புரிந்துவைத்திருக்கிறீர்கள்... என்பதை உங்கள் டீனேஜ் பிள்ளைகள் தெரிந்துகொள்வார்கள்.

உங்கள் டீனேஜ் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

12. இயேசு பேதுருவைப் புரிந்துகொண்டதால் அவருக்கு எப்படி உதவி செய்தார்?

12 சீடர்களுக்கு என்ன உதவி தேவை என்று இயேசு புரிந்துகொண்டார். உதாரணத்துக்கு, தன்னை கொலை செய்யப்போகிறார்கள் என்று இயேசு சீடர்களிடம் சொன்னபோது பேதுரு அவரிடம், “இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்!” என்று சொன்னார். பேதுருவுக்கு இயேசுமீது அன்பு இருந்ததால்தான் அப்படிச் சொன்னார். இருந்தாலும், பேதுரு அப்படி யோசித்தது தவறு என்று இயேசுவுக்குத் தெரியும். பேதுருவுக்கும் மற்ற சீடர்களுக்கும் இயேசு எப்படி உதவி செய்தார்? அவர் முதலில் பேதுருவைத் திருத்தினார். பிரச்சினை வரும் என்பதற்காக யெகோவாவின் நோக்கத்தை செய்யாமல் இருப்பவர்கள் என்ன விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று சொன்னார். சுயநலம் இல்லாமல் நடப்பவர்களை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்றும் சொன்னார். (மத். 16:21-27) இயேசு சொன்ன விஷயத்திலிருந்து பேதுரு பாடம் கற்றுக்கொண்டார்.—1 பே. 2:20, 21.

13, 14. (அ) டீனேஜ் பிள்ளைகள் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எது காட்டும்? (ஆ) உங்கள் மகன் அல்லது மகளுக்கு என்ன உதவி தேவை என்று நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

13 உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு என்ன உதவி தேவை என்பதைப் புரிந்துகொள்ள ஜெபம் செய்யுங்கள். (சங். 32:8) ஒருவேளை உங்கள் டீனேஜ் பிள்ளைகள் எப்போதும் இருப்பதைப் போல சந்தோஷமாக இல்லாமல் இருக்கலாம் அல்லது சகோதர சகோதரிகளைப் பற்றி குறை சொல்லலாம். அவர்கள் உங்களிடம் எதையோ மறைக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உடனே, அவர்கள் உங்களுக்குத் தெரியாமல் ஏதோ பெரிய தவறு செய்கிறார்கள் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதேசமயத்தில், இந்தப் பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். உங்கள் பிள்ளைகளுடைய விசுவாசம் பலப்பட நீங்கள் உதவி செய்ய வேண்டியிருக்கும்!

சபையில் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள் (பாரா 14)

14 உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு உதவி செய்ய அவர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் கேள்விகள் கேளுங்கள். இது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு சமம். கிணற்றிலிருந்து வேக வேகமாக தண்ணீர் எடுக்க நீங்கள் முயற்சி செய்தால் தண்ணீர் கொட்டிவிடும்; நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் எடுக்க முடியாது. அதேபோல், உங்கள் பிள்ளைகளிடம் கேள்விமேல் கேள்வி கேட்காதீர்கள், பொறுமையாக இருங்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி பேச வைத்தால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. (நீதிமொழிகள் 20:5-ஐ வாசியுங்கள்.) இலாரியா என்ற சகோதரி டீனேஜ் வயதில் இருந்தபோது தன்னோடு படித்த பிள்ளைகளுடன் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அது தவறு என்று அவருக்கே தெரியும். அவர் சோகமாக இருப்பதை அவருடைய அப்பா-அம்மா கவனித்தார்கள். இலாரியா சொல்கிறார், “ஒருநாள் என் அப்பா-அம்மா நான் சோகமா இருக்கிறதை பார்த்து என்ன ஆச்சுனு கேட்டாங்க. அவங்க அப்படி கேட்ட உடனே அழ ஆரம்பிச்சிட்டேன். என் மனசுல இருந்ததை அவங்ககிட்ட சொல்லி எனக்கு உதவி செய்யுங்கனு கேட்டேன். அவங்க என்னை கட்டிப்பிடிச்சு, கண்டிப்பா உதவி செய்றதா சொன்னாங்க. என் சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டதாவும் சொன்னாங்க.” சபையில் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க இலாரியாவுக்கு அவருடைய அப்பா-அம்மா உடனே உதவி செய்தார்கள்.

15. இயேசுவுக்கு மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் திறமை இருந்தது என்பதற்கு உதாரணம் சொல்லுங்கள்.

15 இயேசுவுக்கு மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் திறமை இருந்ததால் சீடர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை அவரால் பார்க்க முடிந்தது. உதாரணத்துக்கு, இயேசு நாசரேத்தைச் சேர்ந்தவர் என்று நாத்தான்வேல் கேள்விப்பட்டபோது, “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று கேட்டார். (யோவா. 1:46) ஒருவேளை நீங்கள் அங்கு இருந்திருந்தால், ‘நாத்தான்வேலுக்கு விசுவாசமே இல்ல, அவரோட எண்ணம் சரியில்ல, அவர் குறை சொல்றவர்’ என்றெல்லாம் நீங்கள் முடிவுகட்டியிருக்கலாம். ஆனால், இயேசு அப்படிச் செய்யவில்லை. அவர் நாத்தான்வேலை நன்றாகப் புரிந்துகொண்டார், அவர் நேர்மையாக இருந்ததைப் பார்த்தார். அதனால் நாத்தான்வேலைப் பற்றி, “இதோ! உத்தம இஸ்ரவேலன், கபடமற்றவன்” என்று சொன்னார். (யோவா. 1:47) மக்களுடைய மனதில் என்ன இருந்தது என்பதை இயேசுவால் கண்டுபிடிக்க முடிந்தது. அதனால், மற்றவர்களிடம் இருந்த நல்ல குணங்களை அவரால் பார்க்க முடிந்தது.

16. முன்னேற்றம் செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

16 மற்றவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று இயேசுவைப் போல உங்களால் கண்டுபிடிக்க முடியாது; இருந்தாலும், அவர்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் இருக்கும் நல்ல குணங்களைத் தெரிந்துகொள்ள யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் நடக்கவில்லை என்றால் உடனே அவர்கள் அடங்காதவர்கள், சொல்பேச்சு கேட்காதவர்கள் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். உங்கள் பிள்ளைகளைப் பற்றி அப்படி யோசித்துக்கூட பார்க்காதீர்கள். ‘உன்கிட்ட நிறைய நல்ல குணம் இருக்கு, உன்னால சரியானத செய்ய முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு’ என்று அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் முன்னேற்றம் செய்ய என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள்; அதற்காக அவர்களைப் பாராட்டுங்கள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள, முடிந்தபோதெல்லாம் சில பொறுப்புகளைக் கொடுங்கள். சீடர்களுடைய விஷயத்தில் இயேசுவும் இதைத்தான் செய்தார். இயேசு நாத்தான்வேலை (இன்னொரு பெயர் பர்த்தொலொமேயு) சந்தித்து ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு அவருக்கு ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். அவரை ஒரு அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுத்தார். இயேசு கொடுத்த வேலையை நாத்தான்வேல் உண்மையோடு செய்தார். (லூக். 6:13, 14; அப். 1:13, 14) நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் பாராட்டுங்கள், உற்சாகப்படுத்துங்கள். எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று அவர்களை நினைக்க வைக்காதீர்கள். அவர்களால் உங்களையும் யெகோவாவையும் சந்தோஷப்படுத்த முடியும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இருக்கும் திறமைகளைப் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும் என்றும் சொல்லுங்கள்.

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் சந்தோஷமாக இருங்கள்

17, 18. யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுத்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

17 அப்போஸ்தலர் பவுல் யெகோவாவைப் பற்றி நிறைய பேருக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் பவுலுக்கு பிள்ளைகளைப் போல இருந்தார்கள். அவர்கள்மீது பவுல் நிறைய அன்பு வைத்திருந்தார். அவர்கள் யெகோவாவை வணங்காமல் போய்விடுவார்களோ என்று ரொம்ப கவலைப்பட்டார். (1 கொ. 4:15; 2 கொ. 2:4) பவுலுக்கு இருந்த அதே கவலை ஒருவேளை உங்களுக்கும் இருக்கலாம். மூன்று டீனேஜ் பிள்ளைகளை வளர்த்த விக்டர் சொல்கிறார்: “டீனேஜ் பிள்ளைங்களை வளர்க்கிறது சாதாரண விஷயம் இல்ல. ஆனா, நாங்க சந்தோஷமா இருந்த நேரத்தை நினைச்சு பார்க்கும்போது, பிள்ளைங்களை வளர்க்க நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லனு தோணுது. யெகோவாவோட உதவியால நாங்களும் எங்க பிள்ளைங்களும் நல்ல நண்பர்களா இருந்தோம்.”

18 பெற்றோர்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகள்மீது நிறைய அன்பு வைத்திருக்கிறீர்கள். அதனால்தான், அவர்களை நல்ல விதமாக வளர்க்க கடினமாக உழைக்கிறீர்கள். அதைத் தொடர்ந்து செய்யுங்கள்! யெகோவாவை வணங்க வேண்டும், அவருக்குத் தொடர்ந்து உண்மையோடு சேவை செய்ய வேண்டும் என்று உங்கள் டீனேஜ் பிள்ளைகள் தீர்மானம் எடுக்கும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!—3 யோ. 4.

^ பாரா. 13 பெற்றோர்களே, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் (ஆங்கிலம்) தொகுதி 1-ல் பக்கம் 317-ஐயும் தொகுதி 2-ல் பக்கங்கள் 136-141-ஐயும் பாருங்கள்.