Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா அன்பாகவே இருக்கிறார்

யெகோவா அன்பாகவே இருக்கிறார்

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்.”—1 யோ. 4:8, 16.

பாடல்கள்: 18, 91

1. கடவுளுடைய முக்கியமான குணம் என்ன? இந்தக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது கடவுளைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 4:8) அதனுடைய அர்த்தம் என்ன? யெகோவாவுக்கு இருக்கிற நிறைய குணங்களில் அன்பும் ஒரு குணம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், அன்புதான் அவருடைய முக்கியமான குணம்! அவருக்கு வெறுமனே அன்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது; அவர் அன்பாகவே இருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றிற்கும் அன்புதான் காரணம்! அன்பு இருப்பதால்தான் இந்த முழு பிரபஞ்சத்தையும் அதில் இருக்கும் எல்லா உயிரினங்களையும் யெகோவா படைத்திருக்கிறார். இதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

2. கடவுளுக்கு நம்மீது அன்பு இருப்பதால் நாம் எதை உறுதியாக நம்பலாம்? (ஆரம்பப் படம்)

2 யெகோவா அவருடைய படைப்புகள்மீது நிறைய அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். அதனால், மனிதர்களைப் படைத்ததற்கான அவருடைய நோக்கம் மிகச் சிறந்த விதத்தில் நிறைவேறும் என்று நாம் உறுதியாக நம்பலாம். அவருக்குக் கீழ்ப்படியும் மக்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்றும் நம்பலாம். உதாரணத்துக்கு, அன்பு இருப்பதால்தான் “தாம் நியமித்த ஒரு மனிதரைக் கொண்டு [இயேசு கிறிஸ்துவைக் கொண்டு] இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.” (அப். 17:31) நியாயந்தீர்க்கும் இந்த வேலை நிச்சயம் நடக்கும் என்று நாம் நம்பலாம். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இருப்பவர்களுக்கு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது; அவர்கள் எல்லாரும் என்றென்றும் வாழ்வார்கள்.

சரித்திரம் எதைக் காட்டியிருக்கிறது?

3. கடவுளுக்கு மனிதர்கள்மீது அன்பு இல்லையென்றால் மனிதர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

3 கடவுளுக்கு மனிதர்கள்மீது அன்பு இல்லையென்றால் மனிதர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மனிதர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் ஆட்சி செய்துகொண்டு இருப்பார்கள். பகையும் வெறுப்புமுள்ள இந்த உலகத்தின் கடவுளாகிய சாத்தானைப் போல மனிதர்கள் நடந்துகொள்வார்கள். (2 கொ. 4:4; 1 யோ. 5:19; வெளிப்படுத்துதல் 12:9, 12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுடைய அன்பு மட்டும் இல்லையென்றால் நம் எதிர்காலம் ரொம்ப மோசமாக இருக்கும்!

4. தம்முடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய யெகோவா ஏன் அனுமதித்தார்?

4 சாத்தான் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தான். அதோடு, ஆதாம்-ஏவாளையும் கலகம் செய்ய வைத்தான். இந்த முழு பிரபஞ்சத்தையும் ஆட்சி செய்யும் உரிமை கடவுளுக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினான். கடவுளுடைய ஆட்சியைவிட அவனுடைய ஆட்சியே நன்றாக இருக்கும் என்று சொன்னான். (ஆதி. 3:1-5) இந்தச் சூழ்நிலையில், யெகோவா ஞானமாக நடந்துகொண்டார்; அவன் சொன்னதை நிரூபிக்க அவனுக்குக் கொஞ்சம் காலம் அனுமதித்தார். மனிதர்களை நல்ல விதத்தில் ஆட்சி செய்ய சாத்தானாலும் முடியாது, மனிதர்களாலும் முடியாது என்பதை சரித்திரம் காட்டியிருக்கிறது.

5. சரித்திரம் எதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது?

5 இந்த உலகம் இன்று மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த 100 வருஷங்களில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் போரில் இறந்துபோயிருக்கிறார்கள். ‘கடைசி நாட்களை’ பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “பொல்லாதவர்களும் வஞ்சகர்களும் மேன்மேலும் மோசமாவார்கள்.” (2 தீ. 3:1, 13) அதோடு, “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” என்றும் பைபிள் சொல்கிறது. (எரே. 10:23) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை சரித்திரம் தெளிவாகக் காட்டியிருக்கிறது. மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொள்ளும் திறமையுடனோ உரிமையுடனோ யெகோவா அவர்களைப் படைக்கவில்லை.

6. கடவுள் ஏன் கெட்ட விஷயங்களை அனுமதித்திருக்கிறார்?

6 கெட்ட விஷயங்கள் நடப்பதற்கு யெகோவா கொஞ்சம் காலம் அனுமதித்திருக்கிறார். அதன் மூலம், அவருடைய ஆட்சி மட்டுமே சிறந்ததாக இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். எதிர்காலத்தில், கடவுள் எல்லா கெட்ட விஷயங்களுக்கும் முடிவுகட்டப்போகிறார். அதற்குப் பிறகு, அவருடைய ஆட்சியைப் பற்றி யாராவது சவால்விட்டால் அவர்களை உடனே அழித்துவிடுவார். கலகம் செய்கிறவர்களை உடனே அழிக்க மனித சரித்திரத்தை அவரால் ஆதாரமாகக் காட்ட முடியும். இனிமேலும், கெட்ட விஷயங்களை அவர் அனுமதிக்க மாட்டார்.

கடவுள் எப்படி அன்பு காட்டியிருக்கிறார்?

7, 8. யெகோவா அவருடைய அன்பை எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார்?

7 யெகோவா அவருடைய அன்பைப் பல விதங்களில் காட்டியிருக்கிறார். நம் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது, எவ்வளவு அழகாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் கோடிக்கணக்கான கோள்களும் நட்சத்திரங்களும் இருக்கின்றன. நம் பால்வீதி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒன்றுதான் சூரியன். சூரியன் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. இந்த எல்லா படைப்புகளும் யெகோவாதான் படைப்பாளர் என்பதைக் காட்டுகின்றன. அவருக்கு சக்தி, ஞானம், அன்பு போன்ற குணங்கள் இருக்கிறது என்பதையும் காட்டுகின்றன. அதனால்தான், “காணமுடியாத அவருடைய பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன” என்று பைபிள் சொல்கிறது.—ரோ. 1:20.

8 மனிதர்களும் மிருகங்களும் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா இந்தப் பூமியில் படைத்தார். ஒரு அழகான தோட்டத்தைப் படைத்து அதை மனிதர்களுக்கு வீடாகக் கொடுத்தார். மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக உடலிலும் உள்ளத்திலும் எந்தக் குறையும் இல்லாமல் படைத்தார். (வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.) யெகோவா எல்லா உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கிறார். அவருடைய உண்மையான அன்பு என்றென்றும் இருக்கும்!—சங். 136:25.

9. யெகோவா அன்பாகவே இருந்தாலும் அவர் எதை வெறுக்கிறார்?

9 யெகோவா அன்பாகவே இருந்தாலும் கெட்ட விஷயங்களை எல்லாம் அவர் வெறுக்கிறார். உதாரணத்துக்கு, சங்கீதம் 5:4-6 யெகோவாவைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல . . . அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர் . . . இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.”

கெட்ட விஷயங்கள் சீக்கிரத்தில் முடிவுக்கு வரும்

10, 11. (அ) கெட்ட மக்களுக்கு என்ன ஆகும்? (ஆ) யெகோவா அவருக்குக் கீழ்ப்படியும் மக்களுக்கு என்ன பலன் கொடுப்பார்?

10 யெகோவா சரியான சமயத்தில், கெட்ட விஷயங்களை இந்தப் பூமியிலிருந்து ஒழித்துக்கட்டுவார். ஏனென்றால், அவர் அன்பாகவே இருக்கிறார்; கெட்ட விஷயங்களை வெறுக்கிறார். “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. யெகோவாவுடைய எதிரிகள் “புகையாய்ப் புகைந்துபோவார்கள்.”—சங். 37:9, 10, 20.

11 “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (சங். 37:29) அவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்றும் சொல்கிறது. (சங். 37:11) ஏனென்றால், யெகோவா அவருக்கு உண்மையோடு இருப்பவர்களுக்கு எப்போதும் மிகச் சிறந்ததைச் செய்வார். “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 21:4) யெகோவா காட்டும் அன்புக்கு நன்றியோடு இருக்கிறவர்களுக்கும் அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கும் ஒரு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது!

12. உத்தமனாக இருக்கும் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்?

12 “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (சங். 37:37, 38) உத்தமனாக இருக்கும் ஒருவர் யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் தெரிந்துகொள்வார். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவார், அவருக்குப் பிடித்ததைச் செய்வார். (யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.) “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்” என்ற விஷயத்தையும் நம்புவார். (1 யோ. 2:17) இந்த உலகத்தின் முடிவு சீக்கிரத்தில் வரப்போவதால் ‘கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்வது’ ரொம்ப முக்கியம். அதை உடனே செய்ய வேண்டும்!—சங். 37:34.

யெகோவா அன்பு காட்டிய மிகச் சிறந்த வழி

13. யெகோவா அவருடைய அன்பை எப்படி மிகச் சிறந்த விதத்தில் காட்டியிருக்கிறார்?

13 யெகோவா அவருடைய மகனையே மீட்கும் பலியாகக் கொடுத்து நம்மீது இருக்கும் அன்பை மிகச் சிறந்த விதத்தில் காட்டியிருக்கிறார். நாம் தவறு செய்பவர்களாக இருந்தாலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய முடியும்; அவருடைய நண்பராகவும் இருக்க முடியும். யெகோவாவுக்குக் கீழ்ப்படியும் மக்கள் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபடவும் முடியும். (ரோமர் 5:12; 6:23-ஐ வாசியுங்கள்.) பரலோகத்தில் பல காலங்களாக, இயேசு அவருடைய அப்பாவுக்குக் கீழ்ப்படிந்து இருந்தார். அதனால் யெகோவா, அவருடைய மகன் பூமியிலும் தமக்குக் கீழ்ப்படிந்திருப்பார் என்று உறுதியாக நம்பினார். யெகோவா அவருடைய மகனை ரொம்பவும் நேசித்தார். அதனால், அவருடைய மகனை மக்கள் மோசமாக நடத்தியபோது யெகோவா ரொம்பவே வேதனைப்பட்டார். இருந்தாலும், இயேசு அவருடைய அப்பாவுக்கு உண்மையோடு இருந்தார்; ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நிரூபித்தார். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் தவறே செய்யாத மனிதர்களால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதைக் காட்டினார்.

கடவுள் அவருடைய மகனை பூமிக்கு அனுப்பினார்; மகனும் மனப்பூர்வமாக வந்தார் (பாரா 13)

14, 15. இயேசுவின் மரணத்தால் மனிதர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

14 பயங்கரமான சோதனைகள் மத்தியிலும் இயேசு அவருடைய மரணம்வரை யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார். யெகோவாவுக்கு மட்டும்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்று நிரூபித்தார். இயேசுவின் மீட்பு பலி மூலமாகத்தான் புதிய உலகத்தில் என்றென்றும் வாழும் வாய்ப்பு எல்லா மனிதர்களுக்கும் கிடைத்திருக்கிறது. இதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! மீட்பு பலி மூலமாக யெகோவாவும் இயேசுவும் நம்மீது காட்டியிருக்கும் அன்பைப் பற்றி அப்போஸ்தலர் பவுல் இப்படிச் சொல்கிறார்: “உண்மையில், நாம் பலவீனராக இருந்தபோதே தேவபக்தியற்ற எல்லா மனிதர்களுக்காகவும் குறித்த காலத்தில் கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவர் உயிரைக் கொடுப்பது அரிது; ஒருவேளை நல்லவனுக்காக யாராவது தன் உயிரைக் கொடுக்கத் துணியலாம். என்றாலும், நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்.” (ரோ. 5:6-8) அப்போஸ்தலர் யோவானும் இப்படி எழுதியிருக்கிறார்: “தம்முடைய ஒரே மகன் மூலம் நாம் வாழ்வு பெறுவதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மீது அன்பு காட்டி நம் பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாகத் தமது மகனை அனுப்பினார், இதுவே அன்பு.”—1 யோ. 4:9, 10.

15 “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று இயேசு சொன்னார். (யோவா. 3:16) யெகோவாவுக்கு வேதனையாக இருந்தாலும் அவருடைய மகனை மீட்பு பலியாகக் கொடுத்தார். இதிலிருந்து மனிதர்கள்மீது அவருக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட அன்பை யெகோவா எப்போதும் காட்டுவார். அதனால்தான் அப்போஸ்தலர் பவுல் இப்படிச் சொன்னார்: “சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ, உயர்வான காரியங்களோ தாழ்வான காரியங்களோ வேறெந்தப் படைப்போ நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று நான் உறுதியாக நம்புகிறேன்.”—ரோ. 8:38, 39.

கடவுளுடைய அரசாங்கம் இன்று ஆட்சி செய்கிறது

16. மேசியானிய அரசாங்கம் எதற்கு ஆதாரமாக இருக்கிறது, அதனுடைய ஆட்சியாளராக யெகோவா யாரை நியமித்திருக்கிறார்?

16 யெகோவா மக்கள்மீது வைத்திருக்கும் அன்பிற்கு இன்னொரு ஆதாரம்தான் மேசியானிய அரசாங்கம்! ஏனென்றால், ஆட்சி செய்வதற்குத் தகுதியுள்ள ஒருவரை... மக்களை நேசிக்கிற ஒருவரை... ஆட்சியாளராக யெகோவா ஏற்கெனவே நியமித்திருக்கிறார். அவர்தான் இயேசு கிறிஸ்து! (நீதி. 8:31) அதோடு, பரலோகத்தில் இயேசுவோடு ஆட்சி செய்ய 1,44,000 மனிதர்களையும் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது, பூமியில் கிடைத்த அனுபவத்தை வைத்து மனிதர்களை ஆட்சி செய்வார்கள். (வெளி. 14:1) இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் முக்கியமாகப் பிரசங்கித்தார். அதோடு, இப்படி ஜெபம் செய்ய சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்.” (மத். 6:9, 10) இப்படி கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக செய்யப்படும் ஜெபங்கள் நிறைவேற வேண்டும் என்று நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அது மனிதர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுக்கப்போகிறது.

17. இயேசுவுடைய ஆட்சிக்கும் மனிதர்களுடைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

17 இயேசுவுடைய ஆட்சிக்கும் இன்று இருக்கும் மனிதர்களுடைய ஆட்சிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! மனிதர்களுடைய ஆட்சியில் கோடிக்கணக்கான மக்கள் போரில் இறந்துபோயிருக்கிறார்கள். ஆனால், நம் ஆட்சியாளர் இயேசு நம்மை உண்மையிலேயே நேசிக்கிறார். கடவுளுடைய அருமையான குணங்களைக் காட்டுகிறார், முக்கியமாக அன்பைக் காட்டுகிறார். (வெளி. 7:10, 16, 17) “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகம் மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார்.—மத். 11:28-30.

18. (அ) 1914-லிருந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

18 கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது என்று பைபிள் காட்டுகிறது. அந்தச் சமயத்திலிருந்து, இயேசுவோடு ஆட்சி செய்யப்போகிறவர்களில் மீந்திருப்பவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதோடு, அழிவிலிருந்து தப்பிப்பிழைத்து புதிய உலகத்தில் வாழப்போகிற ‘திரள் கூட்டமான மக்களும்’ கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள். (வெளி. 7:9, 13, 14) இந்தத் திரள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது? அவர்களிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.