Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சக மனிதர்மீது” அன்பு காட்டுகிறீர்களா?

“சக மனிதர்மீது” அன்பு காட்டுகிறீர்களா?

“உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்.”—மத். 22:39.

பாடல்கள்: 73, 36

1, 2. அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியம் என்று பைபிள் சொல்கிறது?

அன்புதான் யெகோவாவுடைய முக்கியமான குணம். (1 யோ. 4:16) யெகோவாவின் முதல் படைப்பான இயேசு கிறிஸ்து கோடிக்கணக்கான வருஷங்களாக யெகோவாவோடு பரலோகத்தில் இருந்தார். அதனால், யெகோவா எவ்வளவு அன்பான கடவுள் என்பதைத் தெரிந்துகொண்டார். (கொலோ. 1:15) பரலோகத்தில் இருந்தபோதும் சரி, பூமியில் இருந்தபோதும் சரி, இயேசு யெகோவாவைப் போலவே அன்பு காட்டினார். அதனால், யெகோவாவும் இயேசுவும் அன்பான விதத்தில் ஆட்சி செய்வார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

2 ஒருவர் இயேசுவிடம், “தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டபோது இயேசு இப்படிச் சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் தலைசிறந்த கட்டளை, முதலாம் கட்டளை. ‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை.”—மத். 22:37-39.

3. நம் “சக மனிதர்” யார்?

3 நாம் எல்லாரிடமும் அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம். நாம் யெகோவாமீதும் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும் என்று இயேசு சொன்னார். ஆனால், நம் “சக மனிதர்” யார்? திருமணம் ஆகியிருந்தால் உங்கள் நெருக்கமான சக மனிதர் உங்கள் கணவன் அல்லது மனைவி. அடுத்ததாக, சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் நம் சக மனிதர்களாக இருக்கிறார்கள். ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களும் நம் சக மனிதர்கள். இவர்கள்மீது எப்படி அன்பு காட்டலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கணவன்-மனைவி எப்படி அன்பு காட்டலாம்?

4. தவறு செய்யும் இயல்புடையவர்களாக இருந்தாலும், கணவனும் மனைவியும் எப்படிச் சந்தோஷமாக வாழ முடியும்?

4 யெகோவா ஆதாம்-ஏவாளைப் படைத்து அவர்களை ஒன்று சேர்த்தார். அதுதான் முதல் முதலில் நடந்த திருமணம்! ஆதாம்-ஏவாள் சந்தோஷமாக வாழ வேண்டும்... பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்ப வேண்டும்... என்று யெகோவா ஆசைப்பட்டார். (ஆதி. 1:27, 28) ஆனால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவர்களுடைய திருமண பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. அவர்கள் தவறு செய்ததால் எல்லாருக்கும் பாவமும் மரணமும் வந்தது. (ரோ. 5:12) திருமண பந்தத்தை ஆரம்பித்து வைத்த யெகோவா கணவன்-மனைவிக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளை பைபிளில் கொடுத்திருக்கிறார். அதனால், கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ முடியும்.2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.

5. கணவனும் மனைவியும் அன்பாக இருப்பது ஏன் முக்கியம்?

5 எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக, பாசமாக இருக்க வேண்டும். முக்கியமாக, கணவன்-மனைவி ஒருவருக்கு ஒருவர் அன்பாக, பாசமாக இருக்க வேண்டும். உண்மையான அன்பைப் பற்றி அப்போஸ்தலர் பவுல் இப்படிச் சொன்னார்: “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்துச் சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்துச் சந்தோஷப்படும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.” (1 கொ. 13:4-8) கணவனும் மனைவியும் பவுல் சொன்ன இந்த வார்த்தைகளை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்; அதன்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, அவர்கள் சந்தோஷமாக வாழ முடியும்.

கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ பைபிள் உதவி செய்கிறது (பாராக்கள் 6, 7)

6, 7. (அ) தலையாக இருக்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது? (ஆ) ஒரு கணவர் மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது?

6 குடும்பத்தில் யார் தலையாக இருக்க வேண்டும் என்று யெகோவா சொல்லியிருக்கிறார்? அதைப் பற்றி பவுல் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்.” (1 கொ. 11:3) கணவர் குடும்பத்தின் தலையாக இருந்தாலும் அவர் மனைவியிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். மனைவியை அடக்கியாளக் கூடாது, கொடூரமாக நடத்தக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறார். யெகோவா இயேசுவுக்குத் தலையாக இருந்தாலும் அவர் இயேசுவிடம் சுயநலம் இல்லாமல் அன்பாக நடந்துகொள்கிறார்; அவருடைய அதிகாரத்தை அன்பான விதத்தில் காட்டுகிறார். அதனால்தான், இயேசு யெகோவாவுடைய அதிகாரத்துக்கு மதிப்பு கொடுக்கிறார். “தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்று அவரே சொல்கிறார். (யோவா. 14:31) ஒருவேளை யெகோவா இயேசுவிடம் கொடூரமாக நடந்திருந்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.

7 ஒவ்வொரு மனைவிக்கும் கணவர் தலையாக இருக்கிறார். இருந்தாலும் ஒரு கணவர், தன் மனைவிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:7) அதை அவர் எப்படிச் செய்யலாம்? மனைவிக்கு என்ன தேவை என்று கணவர் புரிந்துகொள்ள வேண்டும். மனைவியின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபே. 5:25) இயேசு அவரைப் பின்பற்றுகிறவர்களுக்காக உயிரையே கொடுத்தார். கணவர்கள் இயேசுவைப் போல ஒரு அன்பான தலையாக இருக்க வேண்டும். அப்போது, மனைவிகள் கணவர்கள்மீது அன்பு காட்டுவார்கள்; அவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். அதோடு, கணவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கும் மதிப்பு கொடுப்பார்கள்.தீத்து 2:3-5-ஐ வாசியுங்கள்.

சகோதர சகோதரிகளிடம் எப்படி அன்பு காட்டலாம்?

8. நம் சகோதர சகோதரிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

8 லட்சக்கணக்கான மக்கள் இன்று உலகம் முழுவதும் யெகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் எல்லாரும் நம் சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “எல்லாருக்கும் நன்மை செய்வோமாக, முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்வோமாக” என்று பைபிள் சொல்கிறது. (கலா. 6:10; ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.) “நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷமற்ற சகோதரப் பாசத்தையும், இருதயப்பூர்வ அன்பையும் ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்” என்று அப்போஸ்தலர் பேதுரு சொன்னார். “எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்” என்றும் சொன்னார்.—1 பே. 1:22; 4:8.

9, 10. கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன காரணம்?

9 வேறு எந்த அமைப்பும் யெகோவாவுடைய அமைப்பைப் போல இருக்க முடியாது. நம் சகோதர சகோதரிகள் காட்டும் உண்மையான, ஆழமான அன்புதான் அதற்குக் காரணம். நாம் யெகோவாமீது அன்பு வைத்திருப்பதால்... அவருக்குக் கீழ்ப்படிவதால்... யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து நமக்கு உதவி செய்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில், கடவுளுடைய சக்தியால் செய்ய முடியாத விஷயம் எதுவுமே கிடையாது! உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகள் ஒற்றுமையாக இருக்க கடவுளுடைய சக்தி உதவி செய்கிறது.1 யோவான் 4:20, 21-ஐ வாசியுங்கள்.

10 சகோதர சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்று அப்போஸ்தலர் பவுல் சொன்னார். “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள்; ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள்; எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைப்பது அன்பே” என்று அவர் எழுதினார். (கொலோ. 3:12-14) நாம் வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் நம் மத்தியில் இருக்கும் அன்புதான் நம் எல்லாரையும் ‘பரிபூரணமாகப் பிணைக்கிறது.’ அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

11. யெகோவாவின் மக்கள்தான் உண்மையான மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

11 யெகோவாவின் மக்கள் உண்மையான அன்பைக் காட்டுகிறார்கள்; ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதை வைத்தே, இவர்கள்தான் உண்மையான மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்கிறார்கள். “நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:34, 35) அப்போஸ்தலர் யோவான் இப்படி எழுதினார்: “நீதியான செயல்களைச் செய்துவராத எவனும் கடவுளின் பக்கம் இல்லை; அதேபோல், தன் சகோதரன்மீது அன்பு காட்டாத எவனும் கடவுளின் பக்கம் இல்லை; கடவுளுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்த செய்தி.” (1 யோ. 3:10, 11) யெகோவாவின் சாட்சிகள்தான் கிறிஸ்துவை உண்மையிலேயே பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்கள் மத்தியில் இருக்கும் அன்பும் ஒற்றுமையும் காட்டுகிறது. உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிக்க யெகோவா இவர்களைத்தான் பயன்படுத்துகிறார்.—மத். 24:14.

“திரள் கூட்டமான மக்கள்” கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்

12, 13. ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கப்போகிறது?

12 இன்று இருக்கும் யெகோவாவின் மக்களில் நிறைய பேர் ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்தவர்கள். இவர்கள் வித்தியாசமான நாடு, மொழி, இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு காட்டுகிறார்கள். இவர்கள் இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்து, “மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைத்தவர்கள்; தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.” இவர்கள் யெகோவாமீதும் அவருடைய மகன்மீதும் அன்பு வைத்திருக்கிறார்கள்; “இரவும் பகலும்” யெகோவாவை வணங்குகிறார்கள்.—வெளி. 7:9, 14, 15.

13 சீக்கிரத்தில் யெகோவா இந்தக் கெட்ட உலகத்துக்கு ‘மிகுந்த உபத்திரவத்தில்’ முடிவுகட்டுவார். (மத். 24:21; எரேமியா 25:32, 33-ஐ வாசியுங்கள்.) யெகோவா அவருடைய மக்கள்மீது அன்பு வைத்திருப்பதால் அவர்களைப் பாதுகாப்பார்; அவர்களைப் புதிய உலகத்தில் வாழ வைப்பார். 2,000 வருஷங்களுக்கு முன்பே பைபிளில் கடவுள் வாக்குக் கொடுத்திருப்பதுபோல், ‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.’ அக்கிரமம், வேதனை, மரணம் இல்லாத புதிய உலகத்தில் வாழ நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?—வெளி. 21:4.

14. திரள் கூட்டம் எவ்வளவு பெரிதாக ஆகியிருக்கிறது?

14 கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பமானபோது, கடவுளுடைய ஊழியர்கள் சில ஆயிரம் பேர்தான் இருந்தார்கள். மக்கள்மீது இருந்த அன்பினாலும் கடவுளுடைய சக்தியின் உதவியாலும் பரலோக நம்பிக்கையுள்ள கொஞ்சம் பேர் பல பிரச்சினைகள் மத்தியிலும் பிரசங்க வேலையைச் செய்தார்கள். அதனால், பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள திரள் கூட்டமான மக்கள் இன்று கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் 1,15,400-க்கும் அதிகமான சபைகளில் இருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. உதாரணத்துக்கு, 2014 ஊழிய ஆண்டில் 2,75,500 பேர் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 5,300 பேர் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள்.

15. இன்று நிறைய பேர் நற்செய்தியைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்கிறார்கள்?

15 இன்று நிறைய பேர் நற்செய்திக்கு ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நம் பிரசுரங்கள் 700-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. உலகத்திலேயே அதிகமாக விநியோகிக்கப்படும் பத்திரிகை காவற்கோபுரம். ஒவ்வொரு மாதமும் 5 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான காவற்கோபுர பத்திரிகைகள் அச்சடிக்கப்படுகின்றன. இந்தப் பத்திரிகை 247 மொழிகளில் வெளிவருகிறது. பைபிள் படிப்பு நடத்த பயன்படுத்தப்படும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் 250-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. இந்தப் புத்தகம் இதுவரை 20 கோடிக்கும் அதிகமாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

16. நம் அமைப்பு தொடர்ந்து வளர்ந்துகொண்டே போவதற்குக் காரணம் என்ன?

16 நம் அமைப்பு தொடர்ந்து வளர்ந்துகொண்டே போவதற்குக் காரணம் என்ன? நாம் யெகோவாமீது விசுவாசம் வைத்திருப்பதும் கடவுளுடைய சக்தியின் உதவியால்தான் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது என்று நம்புவதும்தான் அதற்குக் காரணம். (1 தெ. 2:13) சாத்தான் நம்மீது வெறுப்பைக் காட்டினாலும் நம்மை எதிர்த்தாலும் யெகோவா நம்மை தொடர்ந்து ஆசீர்வதிக்கிறார்.—2 கொ. 4:4.

மற்றவர்கள்மீது எப்படி அன்பு காட்டலாம்?

17, 18. யெகோவா அவரை வணங்காத ஆட்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்?

17 இன்று நாம் எல்லாரிடமும் நற்செய்தியைச் சொல்கிறோம். சிலர் நாம் சொல்லும் செய்தியைக் கேட்கிறார்கள், இன்னும் சிலர் அதை வெறுக்கிறார்கள். யெகோவா அவரை வணங்காத ஆட்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? நாம் சொல்லும் நற்செய்தியை மக்கள் கேட்டாலும் சரி, கேட்கவில்லை என்றாலும் சரி, பைபிள் சொல்லும் இந்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிய வேண்டும்: “உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.” (கொலோ. 4:6) நமக்கு மற்றவர்கள்மீது அன்பு இருப்பதால் அவர்கள் நம் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கும்போது, “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பதில் சொல்வோம்.—1 பே. 3:15.

18 நற்செய்தியைச் சொல்லும்போது மக்கள் நம்மீது கோபப்பட்டாலும் சரி, அதை ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் சரி, நாம் அவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும். இயேசுவைப் போல நாமும் இப்படி நடந்துகொள்ள வேண்டும்: “அவர் சபித்துப் பேசப்பட்டபோது பதிலுக்குச் சபித்துப் பேசவில்லை; துன்புறுத்தப்பட்டபோது மிரட்டவில்லை; மாறாக, நீதியாய்த் தீர்ப்பு வழங்குகிறவரிடம் [யெகோவாவிடம்] தம்மையே ஒப்படைத்தார்.” (1 பே. 2:23) “யாராவது தீங்கு செய்தால் பதிலுக்குத் தீங்கு செய்யாதீர்கள், யாராவது சபித்துப் பேசினால் பதிலுக்குச் சபித்துப் பேசாதீர்கள்; மாறாக, ஆசீர்வதியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. பைபிளின் இந்த ஆலோசனைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்; எப்போதும் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்.—1 பே. 3:8, 9.

19. நம் எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னார்?

19 மத்தேயு 5:43-45-ல் இயேசு இப்படிச் சொன்னார்: “‘சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தகப்பனின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.” இயேசு சொன்ன இந்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிய மனத்தாழ்மை நமக்கு உதவி செய்யும். நாம் யெகோவாவுடைய மக்களாக இருப்பதால் எதிரிகள் நம்மை எப்படி நடத்தினாலும் நாம் அவர்கள்மீது அன்பு காட்டுவோம்.

20. யெகோவாவையும் சக மனிதரையும் நேசிக்கிற மக்கள் பூமி முழுவதும் இருப்பார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆரம்பப் படம்)

20 நாம் யெகோவாமீதும் சக மனிதர்மீதும் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை எப்போதும் காட்ட வேண்டும். மக்கள் நம்மையும் நாம் சொல்லும் செய்தியையும் எதிர்த்தால்கூட நாம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும்; அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது உதவி செய்ய வேண்டும். அப்போஸ்தலர் பவுல் இப்படி எழுதினார்: “யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்கட்டும். மற்றவர்கள்மீது அன்பு காட்டுகிறவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறான். ஏனென்றால், ‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது, கொலை செய்யக் கூடாது, திருடக் கூடாது, பேராசைப்படக் கூடாது’ என்ற கட்டளைகளும் மற்ற எல்லாக் கட்டளைகளும், ‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்ற ஒரே கட்டளையில் அடங்கியிருக்கின்றன. அன்பு காட்டுகிறவன் சக மனிதருக்குத் தீமை செய்ய மாட்டான்; ஆகவே, அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.” (ரோ. 13:8-10) சாத்தான் ஆட்சி செய்யும் இந்த உலகம் சண்டையினாலும் அநியாயம் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமையே இல்லை. இருந்தாலும், யெகோவாவுடைய மக்கள் தொடர்ந்து சக மனிதர்மீது உண்மையான அன்பைக் காட்டுகிறார்கள். (1 யோ. 5:19) சாத்தானை, அவனுடைய பேய்களை, இந்த மோசமான உலகத்தை யெகோவா அழித்த பிறகு இந்தப் பூமி அன்பால் நிறைந்திருக்கும். யெகோவாவையும் சக மனிதரையும் நேசிக்கிற மக்கள் மட்டும் இந்தப் பூமி முழுவதும் இருப்பார்கள். அதைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!