Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

“தேவனுடைய மனுஷன் . . . பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக.”—நியா. 13:8.

பாடல்கள்: 88, 120

1. அப்பாவாக ஆகப்போவதை கேட்டவுடன் மனோவா என்ன செய்தார்?

மனோவாவும் அவருடைய மனைவியும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று நினைத்தார்கள். ஆனால் ஒருநாள், யெகோவாவுடைய தூதர் மனோவாவின் மனைவியிடம் வந்து, ‘உனக்கு ஒரு மகன் பிறப்பான்’ என்று சொன்னார். மனோவாவின் மனைவிக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருந்திருக்கும்! இந்தச் செய்தியை அவள் தன் கணவனிடம் சொன்னபோது அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஒரு அப்பாவாக அவரிடம் யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள மனோவா விரும்பினார். இஸ்ரவேலில் இருந்த மக்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். அப்படி இருக்கும்போது மனோவாவும் அவருடைய மனைவியும் பிள்ளையை எப்படி நன்றாக வளர்க்க முடியும்? முக்கியமாக, யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் எப்படிச் சொல்லிக்கொடுக்க முடியும்? மனோவா யெகோவாவிடம், “நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக” என்று கெஞ்சினார்.—நியா. 13:1-8.

2. உங்கள் குட்டிப் பிள்ளைக்கு நீங்கள் என்னவெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்? ( “பிள்ளைகள்தான் உங்கள் முக்கியமான பைபிள் படிப்பு!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

2 நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் மனோவா ஏன் யெகோவாவிடம் அப்படிக் கேட்டார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பிள்ளைகளை வளர்க்க வேண்டிய முக்கியமான பொறுப்பு உங்களுக்கும் இருக்கிறது. பிள்ளைகள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரை நேசிக்கவும் நீங்கள்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும். (நீதி. 1:8) ஒவ்வொரு வாரமும் யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் குடும்ப வழிபாட்டில் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். ஆனால் அதுமட்டும் போதாது, இன்னும் நிறைய விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். (உபாகமம் 6:6-9-ஐ வாசியுங்கள்.) உங்கள் குட்டிப் பிள்ளைகள், யெகோவாமீது அன்பு காட்டவும் அவருக்குச் சேவை செய்யவும் நீங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்? இயேசுவுடைய உதாரணத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். இயேசு ஒரு அப்பாவாக இல்லை என்றாலும் சீடர்களுக்கு அவர் சொல்லிக்கொடுத்ததில் இருந்து நீங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். இயேசு சீடர்கள்மீது அன்பு காட்டினார், அவர்களிடம் மனத்தாழ்மையாக இருந்தார். அவர்களை நன்றாகப் புரிந்துகொண்டார்; அதாவது, அவர்கள் உண்மையிலேயே எப்படி உணர்ந்தார்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருந்தார். பெற்றோர்கள் எப்படி இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

உங்கள் குட்டிப் பிள்ளைகள்மீது அன்பு காட்டுங்கள்

3. இயேசு தங்கள்மீது அன்பு வைத்திருந்தார் என்பது சீடர்களுக்கு எப்படித் தெரியும்?

3 ‘நான் உங்கமேல அன்பு வைச்சிருக்கேன்’ என்று இயேசு அவருடைய சீடர்களிடம் அடிக்கடி சொன்னார். (யோவான் 15:9-ஐ வாசியுங்கள்.) சீடர்களோடு நிறைய நேரம் செலவு செய்தார். (மாற். 6:31, 32; யோவா. 2:2; 21:12, 13) இயேசு அவர்களுக்கு ஒரு நல்ல போதகராக மட்டும் இருக்கவில்லை, ஒரு நல்ல நண்பராகவும் இருந்தார். அதனால், இயேசு அவர்கள்மீது அன்பு வைத்திருந்தார் என்பதில் சீடர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. இயேசுவிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4. உங்கள் குட்டிப் பிள்ளைகளை நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்? (ஆரம்பப் படம்)

4 உங்கள் குட்டிப் பிள்ளைகளை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைச் செயலில் காட்டுங்கள். (நீதி. 4:3; தீத். 2:4) ஆஸ்திரேலியாவில் இருக்கும் சாம்வேல் இப்படிச் சொல்கிறார்: “நான் சின்ன வயசுல இருக்கும்போது, என் அப்பா தினமும் சாயங்காலம் என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து கதை சொல்வார். நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்வார். என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பார், ‘குட்-நைட்’ சொல்வார். ஆனா, கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிற பழக்கம் எல்லாம் என் அப்பா வீட்டுல கிடையாதுனு அப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இருந்தாலும், என்மேல இருக்கிற அன்பை காட்ட என் அப்பா நிறைய முயற்சி செஞ்சிருக்கார். அதனாலதான், என் அப்பாகிட்ட என்னால நெருக்கமா இருக்க முடிஞ்சது. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன், எதுக்குமே பயப்படல.” உங்கள் பிள்ளைகளும் இதுபோல் உணர வேண்டுமா? அப்படியென்றால், “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவர்களிடம் அடிக்கடி சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள்மீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்; அவர்களோடு பேசுங்கள், சாப்பிடுங்கள், விளையாடுங்கள்.

5, 6. (அ) இயேசு சீடர்கள்மீது அன்பு வைத்திருந்ததால் என்ன செய்தார்? (ஆ) நீங்கள் எப்படி உங்கள் பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்தலாம்?

5 “என் பாசத்திற்குரிய அனைவரையும் நான் கடிந்துகொண்டு திருத்துவேன்” என்று இயேசு சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (வெளி. 3:19) இயேசுவின் சீடர்கள், ‘தங்களில் யார் உயர்ந்தவர்’ என்று நிறைய முறை வாக்குவாதம் செய்தார்கள். இந்தப் பிரச்சினையை இயேசு அப்படியே விட்டுவிடவில்லை. அவர்களுக்குத் திரும்பத் திரும்ப ஆலோசனை கொடுத்தார். அதைப் பொறுமையாகவும் அன்பாகவும் செய்தார். அவர்களுக்குச் சரியான நேரத்திலும், சரியான இடத்திலும் ஆலோசனை கொடுக்க காத்துக்கொண்டிருந்தார்.—மாற். 9:33-37.

6 உங்கள் பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்துவதன் மூலம் நீங்கள் அவர்கள்மீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம். சிலசமயம் ஒரு விஷயம் ஏன் சரி, ஏன் தவறு என்று சொன்ன உடனே பிள்ளைகள் கீழ்ப்படிவார்கள். ஆனால், எல்லா சமயங்களிலும் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். (நீதி. 22:15) அப்போது, இயேசுவைப் போல அவர்களைப் பொறுமையாகவும் அன்பாகவும் கண்டியுங்கள். பிள்ளைகளைக் கண்டிக்க வேண்டும் என்றால் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும், ஆலோசனை கொடுக்க வேண்டும், அவர்களைத் திருத்த வேண்டும். அதைச் சரியான நேரத்திலும், சரியான இடத்திலும் செய்ய வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இலென் என்ற சகோதரிக்கு அவருடைய அப்பா-அம்மா கண்டித்துத் திருத்தியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இலென் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அவருடைய அப்பா-அம்மா எப்போதும் சொல்வார்கள். இலென் ஏதாவது தப்பு செய்யும்போது தண்டனை கொடுப்பதாக சொன்னால், அதை சொன்னபடி செய்வார்கள். “அவங்க கோபமா இருக்கும்போது என்னை கண்டிச்சதே கிடையாது. அவங்க என்னை ஏன் கண்டிக்கிறாங்கனு சொல்லிட்டுதான் செய்வாங்க” என்று இலென் சொல்கிறார். இப்படி, அப்பா-அம்மா கண்டித்துத் திருத்தியதால் இலென் அவர்களுடைய அன்பைப் புரிந்துகொண்டார்.

உங்கள் குட்டிப் பிள்ளைகளிடம் மனத்தாழ்மையாக இருங்கள்

7, 8. (அ) இயேசு செய்த ஜெபங்களிலிருந்து சீடர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்? (ஆ) உங்கள் ஜெபங்களிலிருந்து யெகோவாவை நம்பியிருக்க பிள்ளைகள் எப்படிக் கற்றுக்கொள்வார்கள்?

7 இயேசு இறப்பதற்கு முன்பு அவருடைய அப்பாவிடம் இப்படி உருக்கமாக ஜெபம் செய்தார்: “அபா, அப்பா, உங்களால் எல்லாமே முடியும்; இந்தக் கிண்ணத்தை என்னிடமிருந்து நீக்கிவிடுங்கள். ஆனாலும், என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உங்களுடைய சித்தத்தின்படியே நடக்கட்டும்.” * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (மாற். 14:36) இயேசு செய்த ஜெபத்தை சீடர்கள் கேட்டிருக்கலாம், அல்லது அதைப் பற்றி பிறகு கேள்விப்பட்டிருக்கலாம். அப்போது அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இயேசு தவறே செய்யாதவராக இருந்தாலும் உதவிக்காக அவருடைய அப்பாவிடம் மனத்தாழ்மையாகக் கெஞ்சினார். அதனால், இயேசுவைப் போல மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், யெகோவாவையே நம்பி இருக்க வேண்டும் என்பதைச் சீடர்கள் கற்றுக்கொண்டார்கள்.

8 நீங்கள் செய்யும் ஜெபங்களிலிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்? எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று மட்டும் அல்ல, யெகோவாவையே நம்பி இருக்க வேண்டும் என்றும் கற்றுக்கொள்வார்கள். பிரேசிலில் இருக்கும் அனா என்ற சகோதரி சொல்கிறார், “பிரச்சினை இருந்தப்போ, முக்கியமா, என் தாத்தா-பாட்டிக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ என் அப்பா-அம்மா யெகோவாகிட்ட ஜெபம் செய்வாங்க. அந்த சூழ்நிலைய சமாளிக்கவும் சரியான தீர்மானம் எடுக்கவும் உதவி செய்யும்படி யெகோவாகிட்ட கேட்பாங்க. நிலைமை எவ்ளோ மோசமா இருந்தாலும் எல்லாத்தையும் யெகோவா பார்த்துக்குவார்னு நம்பி இருந்தாங்க. அதனால, நானும் யெகோவாவையே நம்பி இருக்கணும்னு கத்துக்கிட்டேன்.” உங்கள் பிள்ளைகளுக்காக மட்டும் ஜெபம் செய்யாதீர்கள்; உங்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். உதாரணத்துக்கு, பக்கத்து வீட்டில் இருப்பவரிடம் தைரியமாக சாட்சி கொடுக்க... மாநாட்டுக்குப் போவதற்காக முதலாளியிடம் அனுமதி கேட்க... உதவி செய்யும்படி யெகோவாவிடம் கேளுங்கள். உங்கள் ஜெபத்தைப் பிள்ளைகள் கேட்கும்போது நீங்கள் யெகோவாவை எந்தளவு நம்பியிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்களும் யெகோவாவையே நம்பியிருக்க கற்றுக்கொள்வார்கள்.

9. (அ) சுயநலம் இல்லாமல் மனத்தாழ்மையாக இருக்க சீடர்களுக்கு இயேசு எப்படிக் கற்றுக்கொடுத்தார்? (ஆ) நீங்கள் சுயநலம் இல்லாமல் மனத்தாழ்மையாக இருப்பதைப் பார்க்கும்போது உங்கள் குட்டிப் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்?

9 சுயநலம் இல்லாமல் மனத்தாழ்மையாக இருக்கும்படி இயேசு சீடர்களிடம் சொன்னார்; சொன்னதுபோல் செய்தும் காட்டினார். (லூக்கா 22:27-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்குச் சேவை செய்யவும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் இயேசு நிறைய தியாகங்கள் செய்ததைச் சீடர்கள் பார்த்தார்கள்; அவர்களும் அப்படியே செய்தார்கள். நீங்கள் பேசும் விதத்தில் இருந்தும் நடந்துகொள்ளும் விதத்தில் இருந்தும் உங்கள் குட்டிப் பிள்ளைகளும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். பிரானாஸ்-டெபி தம்பதிக்கு 2 பிள்ளைகள். டெபி சொல்கிறார், “என்னோட கணவர் ஒரு மூப்பரா இருக்கிறதுனால அவர் மத்தவங்களோடு நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதுக்காக நான் பொறாமைப்பட்டதே கிடையாது. அதே சமயத்துல, அவர் எங்களுக்காக நேரம் செலவு செய்யாம இருந்ததும் இல்ல.” (1 தீ. 3:4, 5) இவர்களுடைய உதாரணத்திலிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொண்டார்கள்? பிரானாஸ் சொல்கிறார், ‘எங்க பிள்ளைங்க மாநாடுகள்ல நிறைய வேலை செய்வாங்க, அதை சந்தோஷமா செய்வாங்க. அவங்களுக்கு நிறைய நண்பர்களும் கிடைச்சாங்க. சகோதர சகோதரிகளோடு இருக்க அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!’ அந்தக் குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் இப்போது முழுநேர ஊழியம் செய்கிறார்கள். நீங்கள் சுயநலம் இல்லாமல் மனத்தாழ்மையாக இருக்கும்போது உங்கள் குட்டிப் பிள்ளைகளும் மற்றவர்களுக்கு உதவி செய்ய கற்றுக்கொள்வார்கள்.

உங்கள் குட்டிப் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

10. இயேசு அவரைப் பார்க்க வந்தவர்களை எப்படிப் புரிந்துகொண்டார்?

10 இயேசு மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொண்டார். மக்கள் என்ன செய்தார்கள் என்று மட்டும் பார்க்காமல் அதை ஏன் செய்தார்கள் என்றும் பார்த்தார். அவர்களுடைய மனதில் இருந்ததை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருசமயம் கலிலேயாவில் இருந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக வந்தார்கள். (யோவா. 6:22-24) அவர் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களைக் கேட்பதற்காக அல்ல, அவரிடம் வந்தால் சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே வந்தார்கள். இதை இயேசு புரிந்துகொண்டார். (யோவா. 2:25) அவர்களுடைய எண்ணம் தவறாக இருந்ததால் அவர்களைப் பொறுமையாகத் திருத்தினார். அவர்கள் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.யோவான் 6:25-27-ஐ வாசியுங்கள்.

உங்கள் குட்டிப் பிள்ளைகள் ஆர்வமாக ஊழியம் செய்ய அவர்களுக்கு உதவி செய்யுங்கள் (பாரா 11)

11. (அ) ஊழியம் செய்வதைப் பற்றி உங்கள் குட்டிப் பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (ஆ) பிள்ளைகள் சந்தோஷமாக ஊழியம் செய்ய நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?

11 மற்றவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஊழியம் செய்வதைப் பற்றி உங்கள் குட்டிப் பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஊழியத்துக்கு வர்றத நினைச்சு பிள்ளைங்க சந்தோஷப்படுறாங்களா இல்லன்னா ஊழியத்துக்கு நடுவுல சாப்பிடுறதுக்கு ஏதாவது வாங்கி தருவேனு மட்டும் வர்றாங்களா?’ ஊழியம் செய்வதில் பிள்ளைகளுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியவந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? ஊழியத்தைச் சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் செய்ய அவர்களுக்குச் சின்ன சின்ன வேலைகள் கொடுக்கலாம்; அப்போதுதான் அவர்கள் ஊழியத்தை முழுமனதோடு செய்வார்கள்.

12. (அ) எதைப் பற்றி இயேசு சீடர்களுக்கு எச்சரிப்பு கொடுத்தார்? (ஆ) சீடர்களுக்கு அந்த எச்சரிப்பு ஏன் தேவைப்பட்டது?

12 இயேசு மக்களை வேறு எப்படிப் புரிந்துகொண்டார்? ஒரு தவறு இன்னொரு தவறைச் செய்ய தூண்டும் என்றும் அது இன்னும் மோசமான பாவங்களில்போய் முடியும் என்றும் இயேசுவுக்குத் தெரியும். அதனால், அதைப் பற்றி சீடர்களை எச்சரித்தார். உதாரணத்துக்கு, ஒழுக்கங்கெட்ட விஷயங்களில் ஈடுபடுவது தவறு என்று சீடர்களுக்குத் தெரியும். ஆனால், ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்ய எது அவர்களைத் தூண்டும் என்பதைப் பற்றி இயேசு இப்படி எச்சரித்தார்: “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு.” (மத். 5:27-29) ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பார்த்த ரோம மக்கள் மத்தியில்தான் சீடர்கள் வாழ்ந்தார்கள். செக்ஸ் காட்சிகளும் மோசமான வார்த்தைகளும் இருந்த நாடகங்களை ரோம மக்கள் விரும்பிப் பார்த்தார்கள். அதனால், சரியானதைச் செய்வதற்குத் தடையாக இருக்கும் எந்தவொரு விஷயத்தையும் செய்யக் கூடாது என்று இயேசு சீடர்களை எச்சரித்தார்.

13, 14. மோசமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்காமல் இருக்க உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?

13 உங்கள் குட்டிப் பிள்ளைகள் யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்யாமல் இருக்க நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்வது முக்கியம். சின்ன பிள்ளைகள்கூட அசிங்கமான காட்சிகளைப் பார்க்க இன்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்ப்பது தவறு என்று நீங்கள் நிச்சயம் சொல்வீர்கள். இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேறு என்ன செய்யலாம்? உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அசிங்கமான படங்களை பார்க்குறதுல என்ன ஆபத்து இருக்குனு என் பிள்ளைங்களுக்கு தெரியுமா? அந்த மாதிரியான படங்களை பார்க்க எது அவங்களை தூண்டுது? அவங்க எந்த விஷயத்தை பத்தி வேணும்னாலும் என்கிட்ட பேசுற மாதிரி நான் நடந்துகிறேனா, அசிங்கமான படங்களை பார்க்கணுங்கிற ஆசை வந்தா உதவிக்காக என்கிட்ட வருவாங்களா?’ உங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தால்கூட அவர்களிடம் இப்படிச் சொல்லுங்கள்: ‘இன்டர்நெட்ல திடீர்னு ஏதாவது அசிங்கமான காட்சி வந்தா, அதை பார்க்கணும்னு உனக்கு தோணுச்சுனா என்கிட்ட வந்து பயப்படாம, தயங்காம சொல்லு. அந்த மாதிரியான நேரத்தில நீ என்ன செய்யணும்னு நான் சொல்றேன்.’

14 பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருங்கள். ஏற்கெனவே பார்த்த பிரானாஸ் சொல்கிறார், “நீங்க உங்க பிள்ளைங்ககிட்ட நிறைய விஷயங்கள் சொல்லலாம். ஆனா, நீங்க என்ன செய்றீங்கனு அவங்க கவனிப்பாங்க. உங்களை மாதிரியே இருக்கணும்னு நினைப்பாங்க.” இசை, திரைப்படம், புத்தகம் போன்றவற்றில் நல்லதையே தேர்ந்தெடுங்கள். உங்களைப் பார்த்து பிள்ளைகளும் அதேபோல் செய்வார்கள்.—ரோ. 2:21-24.

யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்

15, 16. (அ) உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க யெகோவா நிச்சயம் உதவி செய்வார் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

15 ஒரு நல்ல அப்பாவாக இருக்க உதவி செய்யும்படி மனோவா யெகோவாவிடம் கேட்டபோது, யெகோவா “மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்.” (நியா. 13:9) பெற்றோர்களே, உங்கள் ஜெபங்களையும் யெகோவா கேட்பார். உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க அவர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் பிள்ளைகளிடம் அன்பு காட்ட, மனத்தாழ்மையாக இருக்க, அவர்களைப் புரிந்துகொள்ள யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்.

16 உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க யெகோவா உங்களுக்கு உதவி செய்கிறார்; அவர்கள் டீனேஜ் வயதை எட்டும்போதும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க உங்களுக்கு உதவி செய்வார். யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்? சீடர்களிடம் இயேசு அன்பு காட்டியது, மனத்தாழ்மையாக நடந்துகொண்டது, அவர்களைப் புரிந்துகொண்டது எல்லாம் உங்களுக்கு எப்படி உதவி செய்யும்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 5 பைபிளின்படி கண்டித்துத் திருத்துவது என்றால் சொல்லிக்கொடுப்பது, ஆலோசனை கொடுப்பது, திருத்துவது, சிலசமயம் தண்டனை கொடுப்பது என்று அர்த்தம். பிள்ளைகளை அன்பாகக் கண்டித்துத் திருத்துங்கள்; நீங்கள் கோபமாக இருக்கும்போது அவர்களைக் கண்டிக்காதீர்கள்.

^ பாரா. 7 இயேசுவின் காலத்தில், பிள்ளைகள் அப்பாவை அபா என்று அழைத்தார்கள். இது அன்புக்குரிய, மரியாதைக்குரிய வார்த்தையாக இருந்தது.—தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா.