Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 18

‘ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடியுங்கள்’

‘ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடியுங்கள்’

“என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன்.”​—2 தீ. 4:7.

பாட்டு 154 சகித்தே ஓடுவோம்!

இந்தக் கட்டுரையில்... *

1. நாம் எல்லாரும் என்ன செய்ய வேண்டும்?

ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது கஷ்டம் என்று தெரிந்திருந்தும் நீங்கள் அதில் ஓடுவீர்களா? அதுவும், உங்களுக்கு உடம்பு சரியில்லாதபோது அல்லது களைப்பாக இருக்கும்போது நீங்கள் ஓடுவீர்களா? கண்டிப்பாக ஓட மாட்டீர்கள்! ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 12:1) இளைஞர்களோ வயதானவர்களோ, பலமானவர்களோ பலவீனமானவர்களோ, நாம் எல்லாரும் கடைசிவரைக்கும் சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டும். அப்படிச் செய்தால்தான், யெகோவா நமக்குக் கொடுக்கப்போகும் பரிசை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.—மத். 24:13.

2. இரண்டு தீமோத்தேயு 4:7, 8-ன்படி பவுல் எப்படி ஓடினார்?

2 கடைசிவரை சகித்திருந்து ஓடும்படி அப்போஸ்தலன் பவுலால் மற்றவர்களிடம் சொல்ல முடிந்தது. ஏனென்றால், அவர் ‘ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்தார்.’ (2 தீமோத்தேயு 4:7, 8-ஐ வாசியுங்கள்.) எந்த ஓட்டத்தைப் பற்றி பவுல் பேசினார்?

எப்படிப்பட்ட ஓட்டத்தை நாம் ஓடுகிறோம்?

3. எந்த ஓட்டத்தைப் பற்றி பவுல் பேசினார்?

3 பவுல் சிலசமயங்களில், பூர்வ கிரீஸில் நடந்த விளையாட்டு போட்டிகளோடு சம்பந்தப்பட்ட சில அம்சங்களைப் பயன்படுத்திப் பேசினார். எதற்காக? சில முக்கியமான பாடங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக! (1 கொ. 9:25-27; 2 தீ. 2:5) நிறைய சந்தர்ப்பங்களில், கிறிஸ்தவ வாழ்க்கையை ஓட்டப் பந்தயத்துக்கு பவுல் ஒப்பிட்டார். (1 கொ. 9:24; கலா. 5:7) ஒருவர் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, இந்த ஓட்டத்தை ஆரம்பிக்கிறார். (1 பே. 3:21) அவர் எப்போது வெற்றிக் கோட்டைத் தொடுவார்? முடிவில்லாத வாழ்வு என்ற பரிசை யெகோவா அவருக்குத் தரும்போது!—மத். 25:31-34, 46; 2 தீ. 4:8.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 நீண்ட தூர ஓட்டப் பந்தயத்துக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை என்கிற ஓட்டத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றில் மூன்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒன்று, சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு, கவனமெல்லாம் வெற்றிக் கோட்டின் மேல் இருக்க வேண்டும். மூன்று, வழியில் வரும் தடைகளைத் தாண்டி ஓட வேண்டும்.

சரியான பாதையில் ஓடுங்கள்

நாம் எல்லாரும் கிறிஸ்து காட்டிய பாதையில் தொடர்ந்து ஓட வேண்டும் (பாராக்கள் 5-7) *

5. நாம் எந்தப் பாதையில் ஓட வேண்டும், ஏன்?

5 ஓட்டப் பந்தயத்தில் பரிசு கிடைக்க வேண்டுமென்றால், அந்தப் பந்தயத்தை ஏற்பாடு செய்தவர்கள் போட்டிருக்கும் பாதையில் ஓட வேண்டும். அதேபோல், முடிவில்லாத வாழ்வு என்கிற பரிசு கிடைக்க வேண்டுமென்றால், கிறிஸ்து போட்டிருக்கும் பாதையில் நாம் ஓட வேண்டும். (அப். 20:24; 1 பே. 2:21) ஆனால், நாம் வேறொரு பாதையில் ஓட வேண்டும் என்று சாத்தானும் அவனைப் பின்பற்றும் மக்களும் ஆசைப்படுகிறார்கள். அதாவது, நம்முடைய பழைய வாழ்க்கைப் பாதையிலேயே அவர்களோடு சேர்ந்து ஓட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். (1 பே. 4:4) நம்முடைய வாழ்க்கைப் பாதையைப் பார்த்து கேலி கிண்டல் செய்கிறார்கள். அவர்கள் போகும் பாதைதான் சிறந்தது என்றும், அதில் போனால்தான் முழு சுதந்திரம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வது சுத்தப் பொய்!—2 பே. 2:19.

6. பிரையனிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

6 சாத்தானுடைய உலகத்தால் கவர்ந்திழுக்கப்படுகிறவர்களோடு சேர்ந்து ஓட வேண்டும் என்று முடிவு செய்கிறவர்கள், சீக்கிரத்தில் ஒரு உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள். அதாவது, அவர்கள் போகும் பாதை சுதந்திரத்துக்கான பாதை கிடையாது என்றும், அடிமைச் சிறையில் தள்ளும் பாதை என்றும் புரிந்துகொள்கிறார்கள். (ரோ. 6:16) பிரையன் என்பவரின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். கிறிஸ்தவ பாதையில் ஓடும்படி அவருடைய அப்பா அம்மா அவரிடம் சொன்னார்கள். ஆனால் அவர் டீனேஜில் இருந்தபோது, அந்தப் பாதை தனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தருமா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. அதனால், சாத்தானுடைய நெறிமுறைகளின்படி வாழ்கிறவர்களோடு சேர்ந்து ஓடலாம் என்று அவர் முடிவெடுத்தார். “சுதந்திரம்னு நான் நினைச்சிட்டு இருந்தது கெட்ட பழக்கங்களுக்கு என்னை அடிமையா ஆக்கிடும்னு நான் கொஞ்சம்கூட நினைச்சு பார்க்கல” என்று அவர் சொல்கிறார். அதோடு, “போதை பொருளயும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். மதுபானத்துக்கு அடிமையானேன், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையும் வாழ்ந்தேன். வருஷங்கள் போகப்போக, கொஞ்ச கொஞ்சமா ரொம்ப ஆபத்தான போதை பொருள்கள பயன்படுத்த ஆரம்பிச்சேன். அப்படி பயன்படுத்துன நிறைய போதை பொருளுக்கு நான் அடிமையாவே ஆயிட்டேன். என் வாழ்க்கைய ஓட்டுறதுக்கு போதை பொருள்கள விற்க ஆரம்பிச்சேன்” என்கிறார் பிரையன். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, யெகோவா சொல்வதுபோல் வாழ வேண்டும் என்றும் பிரையன் முடிவெடுத்தார். தான் ஓடிக்கொண்டிருந்த பாதையை மாற்றிக்கொண்டு 2001-ல் ஞானஸ்நானம் எடுத்தார். கிறிஸ்து காட்டும் பாதையில் ஓடுவதை நினைத்து அவர் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். *

7. என்ன இரண்டு பாதைகளைப் பற்றி மத்தேயு 7:13, 14 சொல்கிறது?

7 சரியான பாதையில் ஓடுவது எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது, இல்லையா? “முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற” குறுகலான பாதையில் ஓடுவதை விட்டுவிட்டு, இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேர் ஓடிக்கொண்டிருக்கும் விசாலமான பாதையில் நாம் ஓட வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். அந்தப் பாதை பிரபலமாக இருக்கலாம்; அதில் ஓடுவதும் சுலபமாக இருக்கலாம். ஆனால், அது “அழிவுக்குப் போகிற” பாதை! (மத்தேயு 7:13, 14-ஐ வாசியுங்கள்.) பாதை மாறிவிடாமல் சரியான பாதையில் தொடர்ந்து ஓடவேண்டும் என்றால், யெகோவாவின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்; அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்.

கவனம் சிதறாமல் ஓடுங்கள்

நாம் தடுக்கி விழாமல் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும், மற்றவர்கள் தடுக்கி விழுவதற்கும் நாம் காரணமாகிவிடக் கூடாது (பாராக்கள் 8-12) *

8. ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவர்கள் தடுக்கி விழுந்து விட்டால் என்ன செய்வார்கள்?

8 நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவர்கள், தங்களை எதுவும் தடுக்கி விழ வைத்துவிடக் கூடாது என்பதற்காக முன்னால் பார்த்து கவனமாக ஓடுவார்கள். இருந்தாலும், கூட ஓடுபவர்களால் அவர்கள் தடுமாறி விழுந்துவிடலாம். இல்லையென்றால், ஏதாவது ஒரு குழிக்குள் காலை விட்டுவிடலாம். அப்படி அவர்கள் விழுந்துவிட்டால், எது அவர்களைத் தடுக்கி விழ வைத்தது என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். உடனடியாக எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் வெற்றிக் கோட்டின் மேலும் பரிசின் மேலும்தான் இருக்கும்.

9. நாம் தடுமாறி விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

9 நம்முடைய கிறிஸ்தவ ஓட்டத்திலும் நிறைய தடவை நாம் தடுமாறி விழுந்துவிடலாம். எப்படி? சொல்லாலும் செயலாலும் நாம் ஏதாவது தவறுகளைச் செய்துவிடலாம். அல்லது, நம்மோடு ஓடுபவர்கள் செய்யும் தவறுகளால் நாம் புண்பட்டுவிடலாம். இப்படியெல்லாம் நடப்பது யதார்த்தம்தான்! ஏனென்றால், நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள். அதோடு, நாம் எல்லாருமே குறுகலான பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதனால், அவ்வப்போது ஒருவர்மீது ஒருவர் ‘மோதிக்கொள்வதற்கு’ வாய்ப்பு இருக்கிறது. ஒருவர்மேல் ஒருவருக்கு “மனக்குறை” ஏற்பட சிலசமயங்களில் வாய்ப்பு இருக்கிறது என்று பவுலும் சொன்னார். (கொலோ. 3:13) நம்மை எது தடுக்கி விழவைத்தது என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், நமக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றி யோசிக்க வேண்டும். நாம் தடுக்கி விழுந்துவிட்டால், மறுபடியும் எழுந்து தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கோபத்தில் மறுபடியும் எழுந்து ஓடாமல் இருந்துவிட்டால், வெற்றிக் கோட்டைத் தொடவும் முடியாது; பரிசைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது. அதுமட்டுமல்ல, வாழ்வுக்கான பாதையில் ஓடும் மற்றவர்களுக்கும் நாம் தடைக்கற்களாக ஆகிவிடுவோம்.

10. மற்றவர்கள் தடுமாறி விழ நாம் காரணமாகிவிடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

10 நம்மோடு ஓடுபவர்கள் தடுக்கி விழுவதற்கு நாம் ‘காரணமாகிவிடாமல்’ இருக்க வேண்டும் என்றால், நாம் இன்னொரு காரியத்தையும் செய்ய வேண்டும். அதாவது, எப்போதுமே நம்முடைய விருப்பத்தை அவர்கள்மேல் திணிக்காமல், முடிந்தபோதெல்லாம் அவர்களுடைய விருப்பத்துக்கும் நாம் இணங்கிப்போக வேண்டும். (ரோ. 14:13, 19-21; 1 கொ. 8:9, 13) பொதுவாக, ஓட்டப் பந்தய வீரர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்த முக்கியமான விஷயத்தில் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது. கூட ஓடுபவர்களோடு அவர்கள் போட்டிபோடுவார்கள். தனக்குத்தான் பரிசு கிடைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு வீரரும் குறியாக இருப்பார். அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அதனால், மற்றவர்களை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு, தாங்கள் முதலில் வர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், கிறிஸ்தவ ஓட்டத்தில் ஓடும் நாம் அப்படிப் போட்டிபோடுவது கிடையாது. (கலா. 5:26; 6:4) நம்மோடு சேர்ந்து வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கும், முடிவில்லாத வாழ்வு என்ற பரிசைப் பெறுவதற்கும் முடிந்தளவு நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள்! அதனால், “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்று பவுல் சொன்ன அறிவுரைக்குக் கீழ்ப்படிய நாம் முயற்சி செய்கிறோம்.—பிலி. 2:4.

11. ஓட்டப் பந்தய வீரரின் கவனம் எதன்மீது இருக்கும், ஏன்?

11 பொதுவாக, ஓட்டப் பந்தய வீரர்கள் தங்கள் பாதையின் மேல் கவனமாக இருப்பதோடு, கண்களுக்குத் தெரியாத வெற்றிக் கோட்டின் மேலும் கவனமாக இருப்பார்கள். வெற்றிக் கோட்டை அவர்களால் பார்க்க முடியவில்லை என்றாலும், அதைத் தாண்டுவது போலவும் பரிசை வாங்குவது போலவும் கற்பனை செய்வார்கள். பரிசைப் பற்றியே அவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதால், இன்னும் நன்றாக ஓட வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு வருகிறது.

12. யெகோவா நமக்கு என்ன பரிசைக் கொடுக்கப்போகிறார்?

12 கிறிஸ்தவ ஓட்டத்தை நாம் ஓடி முடித்தால், நிச்சயம் நமக்கு பரிசு தருவதாக யெகோவா சொல்லியிருக்கிறார். அந்தப் பரிசு, பரலோகத்தில் கிடைக்கும் வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது பூமியில் கிடைக்கும் வாழ்க்கையாக இருக்கலாம். இந்தப் பரிசு எவ்வளவு அற்புதமானது என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதனால், அந்த வாழ்க்கையைப் பற்றி நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அதைப் பற்றிய விஷயங்கள் உங்கள் மனதில் பசுமையாக இருந்தால், நிரந்தரமாகத் தடுக்கி விழுவதற்கு நீங்கள் எதற்கும் இடம் கொடுத்துவிட மாட்டீர்கள்.

தடைகள் வந்தாலும் ஓடிக்கொண்டே இருங்கள்

பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து ஓடவே நாம் விரும்புகிறோம் (பாராக்கள் 13-20) *

13. ஓட்டப் பந்தய வீரர்களுக்கு கிடைக்காத என்ன அருமையான வாய்ப்பு நமக்கு இருக்கிறது?

13 கிரீஸ் நாட்டில் நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள், சோர்வு மற்றும் வலி போன்ற தடைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குக் கிடைத்த பயிற்சியையும் அவர்களுடைய பலத்தையும்தான் அவர்கள் நம்பியிருக்க வேண்டியிருந்தது. அந்த வீரர்களுக்குக் கிடைத்த மாதிரியே நமக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஆனால், ஓட்டப் பந்தய வீரர்களுக்குக் கிடைக்காத ஓர் அற்புதமான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான், எல்லையில்லாத சக்திபடைத்த ஒருவரிடமிருந்து நமக்குக் கிடைக்கும் பலம்! அவர், அதாவது யெகோவா, நமக்குப் பயிற்சி தருவதாக மட்டுமல்ல நம்மைப் பலப்படுத்துவதாகவும் வாக்குக்கொடுக்கிறார்.—1 பே. 5:10.

14. தடைகளைச் சமாளிப்பதற்கு 2 கொரிந்தியர் 12:9, 10 எப்படி உதவுகிறது?

14 பவுல் நிறைய தடைகளைத் தாண்டி ஓட வேண்டியிருந்தது. அவரை அவமானப்படுத்தினார்கள், துன்புறுத்தினார்கள். சிலசமயங்களில் சோர்வும் அவரை வாட்டியது. தன்னுடைய ‘உடலில் குத்திக்கொண்டிருந்த ஒரு முள்ளையும்’ அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. (2 கொ. 12:7) இந்தத் தடைகளையெல்லாம், ஓட்டத்தை நிறுத்துவதற்கான காரணங்களாகப் பார்க்காமல் யெகோவாவை நம்பியிருப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்த்தார். (2 கொரிந்தியர் 12:9, 10-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், எல்லா சோதனைகளையும் சமாளிப்பதற்கு யெகோவா அவருக்கு உதவினார்.

15. பவுலைப் போல நாம் நடந்துகொண்டால் நம்மால் எதைப் பார்க்க முடியும்?

15 நம்முடைய விசுவாசத்துக்காக மற்றவர்கள் நம்மை அவமானப்படுத்தலாம், நம்மைத் துன்புறுத்தலாம். மோசமான உடல்நலப் பிரச்சினையையோ சோர்வையோ நாம் சமாளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் பவுலைப் போலவே நாம் நடந்துகொண்டால், ஒவ்வொரு தடையையும் சந்திக்கும்போது யெகோவா நம்மைத் தாங்கிப்பிடிப்பதை நம்மால் பார்க்க முடியும்.

16. உங்களுடைய உடல்நிலை மோசமாக இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்?

16 நீங்கள் படுத்த படுக்கையாக இருக்கிறீர்களா? வீல்சேர்தான் வாழ்க்கை என்பதுபோல் ஆகிவிட்டதா? உங்கள் முழங்கால்கள் தளர்ந்துபோய்விட்டனவா? உங்கள் பார்வை மங்கிவிட்டதா? அப்படியென்றால், இளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பவர்களோடு சேர்ந்து கிறிஸ்தவ ஓட்டத்தில் உங்களால் ஓட முடியுமா? கண்டிப்பாக முடியும்! வயதான, உடல்நிலை சரியில்லாத நிறைய பேர் முடிவில்லாத வாழ்வுக்கான பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய சொந்த பலத்தால் அவர்களால் ஓட முடியாது. ஃபோன் வழியாகக் கூட்டங்களைக் கேட்பதன் மூலம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் வழியாகக் கூட்டங்களைப் பார்ப்பதன் மூலம் யெகோவாவிடமிருந்து அவர்கள் பலத்தைப் பெறுகிறார்கள். டாக்டர்களிடமும் நர்ஸுகளிடமும் சொந்தக்காரர்களிடமும் பிரசங்கிப்பதன் மூலம் சீஷராக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள்.

17. உடல்நலப் பிரச்சினையோடு போராடிக்கொண்டிருப்பவர்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?

17 உடல்நலப் பிரச்சினையோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், வாழ்வுக்கான பாதையில் தொடர்ந்து ஓட முடியாது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இவ்வளவு நாட்களாக நீங்கள் விசுவாசத்தோடு இருந்திருக்கிறீர்கள், யெகோவாவுக்காக நிறைய செய்திருக்கிறீர்கள். அதனால், அவர் உங்களை நேசிக்கிறார்! இவ்வளவு நாட்களாக அவருடைய உதவி உங்களுக்குத் தேவைப்பட்டதைவிட இப்போதுதான் அதிகமாகத் தேவைப்படும். அதனால், அவர் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். (சங். 9:10) முன்பைவிட இப்போது அவர் உங்களிடம் அதிகமாக நெருங்கிவருவார். உடல்நலப் பிரச்சினையோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு சகோதரி என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “எனக்கு வியாதிக்குமேல வியாதி வந்துட்டிருக்குறதுனால, சத்தியத்த பத்தி கொஞ்சம் பேர்கிட்டதான் பேச முடியுது. ஆனா, நான் எடுக்கிற ஒவ்வொரு சின்ன முயற்சியும் யெகோவாவோட மனச சந்தோஷப்படுத்துதுனு எனக்கு தெரியும். அத நினைக்குறப்போ எனக்கு சந்தோஷமா இருக்கு” என்று அவர் சொல்கிறார். சோர்வாக இருக்கும் சமயங்களில், நீங்கள் தனியாக இல்லை என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ‘எனக்கு ஏற்படுகிற பலவீனங்களை . . . சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்’ என்று பவுல் சொன்ன உற்சாகமான வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்.—2 கொ. 12:10.

18. சிலர் என்ன விதமான பிரச்சினையை அனுபவிக்கலாம்?

18 வாழ்வுக்கான பாதையில் ஓடும் சிலருக்கு இன்னொரு தடை இருக்கிறது. மற்றவர்களால் பார்க்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளோடு அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, மனச்சோர்வோடு அவர்கள் போராடிக்கொண்டிருக்கலாம் அல்லது எதையாவது நினைத்து அதிகமாகக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். இந்த அன்பான சகோதர சகோதரிகள் அனுபவிக்கும் பிரச்சினை உண்மையிலேயே ரொம்ப கஷ்டமானது! ஏனென்றால், ஒருவருக்கு கை உடைந்துவிட்டாலோ வீல்சேரில் முடங்கியிருந்தாலோ அவர்களுடைய பிரச்சினையை எல்லாராலும் பார்க்க முடியும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வரும். ஆனால், உணர்ச்சி ரீதியிலும் மன ரீதியிலும் கஷ்டப்படுகிறவர்களுடைய பிரச்சினை வெளியே தெரியாது. கை கால் உடைந்தவர்களுக்கு எவ்வளவு வேதனை இருக்குமோ, அதே வேதனைதான் இவர்களுக்கும் இருக்கும். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் கரிசனை இவர்களுக்கு கிடைக்காமல் போய்விடலாம்.

19. மேவிபோசேத்திடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

19 உடல்நலப் பிரச்சினையோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? யாராவது உங்களைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்களா? அப்படியென்றால், மேவிபோசேத்தின் வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உதவும். (2 சா. 4:4) அவருக்குக் கால் ஊனமாக இருந்தது. தாவீது ராஜாவும் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டார். இதற்கெல்லாம் மேவிபோசேத் எந்த விதத்திலும் காரணம் கிடையாது. இருந்தாலும், இதையெல்லாம் நினைத்து அவர் கோபத்தில் கொந்தளிக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றியோடு இருந்தார். முன்பு தாவீது தனக்குக் காட்டிய கருணைக்காக அவர் நன்றியோடு இருந்தார். (2 சா. 9:6-10) அதனால், தாவீது தன்னை அநியாயமாக நடத்திய சமயத்தில் இந்த எல்லா விஷயத்தையும் அவர் நினைத்துப்பார்த்தார். தாவீது செய்த தவறை நினைத்து அவர் கோபப்படவில்லை; யெகோவாவையும் குறை சொல்லவில்லை. யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு எப்படியெல்லாம் ஆதரவு கொடுக்கலாம் என்பதைப் பற்றியே யோசித்தார். (2 சா. 16:1-4; 19:24-30) நம்முடைய நன்மைக்காக அவருடைய அருமையான உதாரணத்தை பைபிளில் யெகோவா பதிவு செய்து வைத்திருக்கிறார்.—ரோ. 15:4.

20. கவலை ஒருவரை எப்படிப் பாதிக்கலாம், ஆனாலும் எதில் உறுதியாக இருக்கலாம்?

20 கவலையிலேயே மூழ்கிப்போய்விடுகிற சில சகோதர சகோதரிகள், எப்போதும் பதற்றத்தோடு இருக்கலாம். அன்றாட வாழ்க்கையில், ‘என்னை பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்களோ’ என்ற பயத்தில் அவர்கள் இருக்கலாம். இதுபோன்ற பிரச்சினையோடு போராடுபவர்களுக்கு, நிறைய பேர் இருக்கும் இடத்தில் இருப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், அவர்கள் கூட்டங்களுக்கு வருகிறார்கள், மாநாடுகளிலும் கலந்துகொள்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவது இவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஊழியத்தில் பேசுகிறார்கள். நீங்களும் இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் தனியாக இல்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நிறைய பேர் இப்படிப்பட்ட பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். முழு மூச்சோடு நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். சோர்ந்துபோகாமல் நீங்கள் தொடர்ந்து ஓடுவதே யெகோவா உங்களை ஆசீர்வதிக்கிறார் என்பதற்கும் உங்களை பலப்படுத்துகிறார் என்பதற்கும் ஓர் அத்தாட்சி! * (பிலி. 4:6, 7; 1 பே. 5:7) உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், நீங்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தால், அவர் உங்களை நிச்சயம் மெச்சுவார். இதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்!

21. யெகோவாவின் உதவியோடு நம் எல்லாராலும் என்ன செய்ய முடியும்?

21 ஓட்டப் பந்தயத்துக்கும் பவுல் சொன்ன கிறிஸ்தவ ஓட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. பைபிள் காலங்களில் நடந்த ஓட்டப் பந்தயங்களில் ஒருவருக்குத்தான் பரிசு கிடைக்கும். ஆனால், கிறிஸ்து காட்டிய பாதையில் தொடர்ந்து ஓடுகிற எல்லாருக்குமே முடிவில்லாத வாழ்வு என்ற பரிசு கிடைக்கும். (யோவா. 3:16) ஓட்டப் பந்தய வீரர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஜெயிப்பது சந்தேகம்தான். ஆனால், கிறிஸ்தவ ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிற நமக்கு உடல் ஆரோக்கியமாக இல்லையென்றாலும், நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். (2 கொ. 4:16) யெகோவாவின் உதவியோடு நம் எல்லாராலும் கடைசிவரை ஓடி வெற்றிக் கோட்டைத் தொட முடியும்.

பாட்டு 24 கண்முன் பரிசை வையுங்கள்!

^ பாரா. 5 யெகோவாவின் சாட்சிகளில் சிலர், வயதாவதால் வரும் கஷ்டங்களோடு போராடுகிறார்கள். வியாதியால் சிலர் பலவீனமாகிவிடுகிறார்கள். நாம் எல்லாருமே அவ்வப்போது களைத்துப்போய்விடுகிறோம். அதனால், வாழ்வு என்கிற ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதை நினைத்தாலே நம் எல்லாருக்கும் மலைப்பாக இருக்கலாம். சகிப்புத்தன்மையோடு எப்படி ஓடலாம் என்பதைப் பற்றியும், அப்போஸ்தலன் பவுல் சொன்ன வாழ்வுக்கான ஓட்டத்தில் எப்படி ஜெயிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 6 ஜனவரி 1, 2013 காவற்கோபுரத்தில் வந்த “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 20 கவலைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கான கூடுதல் அறிவுரைகளைத் தெரிந்துகொள்வதற்கும், அதை வெற்றிகரமாக சமாளித்தவர்களுடைய அனுபவங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மே 2019 நிகழ்ச்சியை jw.org® வெப்சைட்டில் பாருங்கள். (வெளியீடுகள் > JW பிராட்காஸ்டிங் என்ற தலைப்பில் பாருங்கள்.)

^ பாரா. 63 படங்களின் விளக்கம்: ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்வது, கிறிஸ்தவ ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுவதற்கு வயதான இந்தச் சகோதரருக்கு உதவுகிறது.

^ பாரா. 65 படங்களின் விளக்கம்: அதிகமாகக் குடிக்கச் சொல்லி மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் அல்லது நாம் அளவோடு நிறுத்திக்கொள்ளாததன் மூலம் கிறிஸ்தவ ஓட்டத்தில் மற்றவர்கள் தடுமாறி விழுவதற்கு நாம் காரணமாகிவிடலாம்.

^ பாரா. 67 படங்களின் விளக்கம்: மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தாலும் தன்னைக் கவனித்துக்கொள்பவர்களிடம் பிரசங்கிப்பதன் மூலம் இந்தச் சகோதரர் கிறிஸ்தவ பாதையில் தொடர்ந்து ஓடுகிறார்.