Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 16

சகோதர சகோதரிகளைப் புரிந்துகொள்ளுங்கள்

சகோதர சகோதரிகளைப் புரிந்துகொள்ளுங்கள்

“வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்.”—யோவா. 7:24.

பாட்டு 53 ஐக்கியமாய் உழைப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவைப் பற்றிய என்ன ஆறுதலான விஷயத்தை பைபிள் சொல்கிறது?

உங்களுடைய நிறம்... முகத் தோற்றம்... உடல் எடை... இதையெல்லாம் வைத்து மற்றவர்கள் உங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவீர்களா? கண்டிப்பாக இல்லை! வெளித்தோற்றத்தை வைத்து யெகோவா நம்மைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதில்லை என்பதைத் தெரிந்துகொள்வது ஆறுதலாக இருக்கிறது! ஈசாயின் மகன்களை யெகோவா பார்த்ததுபோல் சாமுவேல் பார்க்கவில்லை. அந்த மகன்களில் ஒருவர் இஸ்ரவேலின் ராஜாவாக ஆவார் என்று யெகோவா சாமுவேலிடம் சொல்லியிருந்தார். ஆனால், எந்த மகன் என்று சொல்லவில்லை. அதனால், மூத்த மகனான எலியாபைப் பார்த்தபோது, “நிச்சயம் இவனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருப்பார்” என்று சாமுவேல் சொன்னார். ஏனென்றால், அவனுடைய முகத்தில் ராஜகளை இருந்ததுபோல் தெரிந்தது. “ஆனால் யெகோவா சாமுவேலிடம், ‘இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே. நான் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை’ என்று சொன்னார். நமக்கு என்ன பாடம்? ‘மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவா இதயத்தைப் பார்க்கிறார்.’—1 சா. 16:1, 6, 7

2. யோவான் 7:24 சொல்வதுபோல், ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து நாம் ஏன் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது? ஓர் உதாரணம் கொடுங்கள்.

2 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் வெளித்தோற்றத்தை வைத்து மற்றவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். (யோவான் 7:24-ஐ வாசியுங்கள்.) ஆனால், வெளித்தோற்றத்தை வைத்து கொஞ்சம்தான் தெரிந்துகொள்ள முடியும். இதோ ஓர் உதாரணம்! ஒரு டாக்டர் எவ்வளவுதான் திறமைசாலியாகவும் அனுபவசாலியாகவும் இருந்தாலும், மேலோட்டமாகப் பார்த்தவுடன் நோயாளியின் வியாதியைப் பற்றி அவரால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது. இதற்கு முன்பு நோயாளிக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன... அதைப் பற்றி அந்த நோயாளி என்ன நினைக்கிறார்... நோய்க்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகின்றனவா... என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு, நோயாளி சொல்வதை அவர் கவனமாகக் கேட்க வேண்டும். ஒருவேளை, எக்ஸ்ரேகூட அவர் எடுக்கச் சொல்லலாம். இவற்றையெல்லாம் செய்யவில்லை என்றால், தவறான சிகிச்சை கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. அதேபோல், சகோதர சகோதரிகளுடைய வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதனால், மேலோட்டமாகப் பார்க்காமல் உண்மையிலேயே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியாததால், யெகோவா புரிந்துகொள்ளும் அளவுக்கு நம்மால் ஒருவரைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், யெகோவாவைப் போல் நடந்துகொள்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முடியும்.

3. யெகோவாவைப் பின்பற்ற இந்தக் கட்டுரையில் இருக்கிற உதாரணங்கள் எப்படி உதவும்?

3 அப்படியென்றால், தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படி நடத்துகிறார்? அவர்கள் செய்யும் ஜெபத்தை அவர் கவனமாகக் கேட்கிறார். அவர்களுடைய பின்னணியையும் சூழ்நிலையையும் கருத்தில் எடுத்துக்கொள்கிறார். அவர்கள்மீது கரிசனை காட்டுகிறார். இந்த மூன்றையும் யோனா, எலியா, ஆகார், லோத்துவின் விஷயத்தில் யெகோவா எப்படிச் செய்தார் என்பதையும், நம் சகோதர சகோதரிகளை நடத்துகிற விஷயத்தில் நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம் என்பதையும் பார்ப்போம்.

கவனமாகக் கேளுங்கள்

4. யோனாவை நாம் ஏன் தவறாக நினைத்துவிடலாம்?

4 நினிவேக்குப் போய் நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்லும்படி யெகோவா யோனாவுக்கு நேரடியாக கட்டளை கொடுத்தார். ஆனால், “யெகோவாவின் பேச்சைக் கேட்காமல்” எதிர்த்திசையில் பயணம் செய்வதற்காக அவர் கப்பல் ஏறினார். (யோனா 1:1-3) மேலோட்டமாகப் பார்த்தால், யோனா நம்பகமற்றவர் என்றும், உண்மையில்லாமல் நடந்துகொண்டவர் என்றும் நாம் நினைக்கலாம். யெகோவாவின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருப்பீர்களா? சந்தேகம்தான்! ஆனால், இன்னொரு வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள யோனாவுக்குத் தகுதியிருந்ததாக யெகோவா நினைத்தார்.—யோனா 3:1, 2.

5. யோனா 2:1, 2, 9-லிருந்து யோனாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

5 யோனா உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய ஜெபம் காட்டியது. (யோனா 2:1, 2, 9-ஐ வாசியுங்கள்.) நிறைய தடவை அவர் ஜெபம் செய்திருப்பார்! ஆனால், இப்போது அவர் செய்த ஜெபத்திலிருந்து அவருடைய இன்னொரு பக்கத்தைத் தெரிந்துகொள்கிறோம். அதாவது, அவர் வெறுமனே நியமிப்பை விட்டுவிட்டு ஓடியவர் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறோம். அவரிடம் தங்கமான குணங்கள் இருந்தன! ஜெபத்தில் அவர் சொன்ன வார்த்தைகள், மனத்தாழ்மையோடும் நன்றியோடும் அவர் இருந்ததைக் காட்டுகின்றன. கீழ்ப்படிய வேண்டும் என்ற உறுதியோடு அவர் இருந்ததையும் காட்டுகின்றன. யோனாவின் செயலை வைத்து, அவரைப் பற்றி யெகோவா ஒரு தவறான முடிவுக்கு வராததில் எந்த ஆச்சரியமும் இல்லை. யோனாவின் ஜெபத்துக்கு அவர் பதில் கொடுத்தார். தொடர்ந்து ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதற்கான வாய்ப்பையும் கொடுத்தார்.

உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது மற்றவர்களை இன்னும் அதிக கரிசனையோடு நடத்த முடியும் (பாரா 6) *

6. மற்றவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பதில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?

6 மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பதற்கு மனத்தாழ்மையும் பொறுமையும் அவசியம். இந்தக் குணங்களைக் காட்டும்போது குறைந்தபட்சம் மூன்று நன்மைகள் இருக்கின்றன. (1) சீக்கிரத்தில் மற்றவர்களைப் பற்றித் தவறான ஒரு முடிவுக்கு வந்துவிட மாட்டோம். (2) மற்றவர்களுடைய உணர்வுகளையும் உள்நோக்கங்களையும் சரியாகப் புரிந்துகொள்வோம்; அவர்கள்மீது அதிக கரிசனை காட்டுவோம். (3) தங்களைப் பற்றித் தாங்களே நன்றாகப் புரிந்துகொள்வதற்கு மற்றவர்களுக்கு உதவுவோம். தன் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை வார்த்தைகளில் வடிக்காதவரைக்கும் ஒருவரால் தன்னுடைய உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது! (நீதி. 20:5) ஆசியாவில் வாழும் ஒரு மூப்பர் இப்படி ஒத்துக்கொள்கிறார்: “எல்லா உண்மைகளயும் தெரிஞ்சிக்காம ஒரு தடவ நான் பேசிட்டேன். ஒரு சகோதரிகிட்ட, அவங்க இன்னும் நல்லா பதில் சொல்லணும்னு சொன்னேன். ஆனா, படிக்குறது அவங்களுக்கு கஷ்டம்னும், நிறைய முயற்சி செஞ்சுதான் அவங்க குறிப்புகள் சொல்றாங்கனும் அப்புறம்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.” ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, ஒவ்வொரு மூப்பரும் ‘விஷயங்களை முழுமையாகக் கேட்பது’ ரொம்ப முக்கியம்!—நீதி. 18:13.

7. எலியாவை யெகோவா நடத்திய விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

7 கடந்தகால அனுபவங்களாலோ சுபாவத்தாலோ, வெளிப்படையாகப் பேசுவது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படியென்றால், நாம் அவர்களுக்கு எப்படி உதவலாம்? யேசபேலிடமிருந்து எலியா தப்பித்து ஓடியபோது யெகோவா என்ன செய்தார் என்பதை ஞாபகப்படுத்திப்பாருங்கள். யெகோவாவிடம் தன்னுடைய உணர்வுகளைக் கொட்டுவதற்கு எலியாவுக்குக் கொஞ்சம் நாட்கள் எடுத்தன. அவர் தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டியபோது, யெகோவா கவனமாகக் கேட்டார்; அவரைப் பலப்படுத்தினார். முக்கியமான ஒரு வேலையையும் கொடுத்தார். (1 ரா. 19:1-18) இப்போது, நம் சகோதர சகோதரிகளின் விஷயத்துக்கு வரலாம். நம்மிடம் மனம் திறந்து பேசுவதற்கு அவர்களுக்குக் கொஞ்சக் காலம் எடுக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிப் பேசினால்தான் அவர்களுடைய மனதில் இருப்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். யெகோவாவைப் போல பொறுமையாக இருந்தால்தான் மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க முடியும். அவர்களும் தங்கள் உணர்வுகளை மனம் திறந்து சொல்வதற்குத் தயாராக இருப்பார்கள். அவர்கள் அப்படிச் சொல்லும்போது, நாம் கவனமாகக் கேட்க வேண்டும்.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்

8. ஆதியாகமம் 16:7-13-ன்படி, ஆகாருக்கு யெகோவா எப்படி உதவினார்?

8 சாராயின் வேலைக்காரப் பெண்ணாகிய ஆகார், ஆபிராமுக்கு மனைவியானதற்குப் பிறகு புத்தியில்லாமல் நடந்துகொண்டாள். எப்படி? தான் கர்ப்பமானது தெரிந்ததும் சாராயை அவள் மதிக்கவே இல்லை. ஏனென்றால், சாராய்க்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. ஆகார் இப்படி மாறிவிட்டதால், சாராய் அவளை மோசமாக நடத்தினாள். அதனால், ஆகார் ஓடிப்போனாள். (ஆதி. 16:4-6) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், ஆகார் ஒரு பெருமைபிடித்த பெண் என்றும், இந்தத் தண்டனை அவளுக்குத் தேவைதான் என்றும் நாம் நினைக்கலாம். ஆனால், யெகோவா அப்படி நினைக்கவில்லை. ஒரு தேவதூதரை அவளிடம் அனுப்பினார். அவளுடைய குணத்தை மாற்றிக்கொள்ள அந்தத் தேவதூதர் அவளுக்கு உதவினார்; அவளை ஆசீர்வதித்தார். யெகோவாவின் கண்கள் எப்போதும் தன்மேல் இருந்திருக்கின்றன என்பதையும், தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரியும் என்பதையும் அவள் புரிந்துகொண்டாள். அதனால்தான், ‘எல்லாவற்றையும் பார்க்கிற கடவுள் . . . என்னையும் பார்க்கிறார்’ என்று சொன்னாள்.ஆதியாகமம் 16:7-13-ஐ வாசியுங்கள்.

9. ஆகாருடைய விஷயத்தில் யெகோவா எதையெல்லாம் பார்த்தார்?

9 ஆகாருடைய கடந்தகாலத்தைப் பற்றியும், என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் அவள் அனுபவித்திருக்கிறாள் என்பதைப் பற்றியும் யெகோவாவுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. (நீதி. 15:3) எகிப்து நாட்டுப் பெண்ணாகிய அவள், எபிரெயர்களின் குடும்பத்தில் வாழ்ந்துவந்தாள். அதனால், அவர்களுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று சிலசமயங்களில் அவள் நினைத்திருக்கலாம். தன்னுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். தாய்நாட்டை விட்டு வந்திருப்பதை நினைத்தும் அவள் வருத்தப்பட்டிருக்கலாம். அதோடு, இவளைத் தவிர ஆபிராமுக்கு வேறு மனைவிகளும் இருந்தார்கள். சிலகாலம்வரை, உண்மையுள்ள மனிதர்கள் சிலருக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். ஆண்கள் பல பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம் இல்லை. (மத். 19:4-6) அதனால், குடும்பங்களில் போட்டி பொறாமை இருந்திருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. சாராயை ஆகார் மதிப்பில்லாமல் நடத்தியதை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ஆகாருடைய உணர்வுகளையும் அவளுடைய சூழ்நிலையையும் கருத்தில் எடுத்துக்கொண்டார்.

உங்கள் சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் (பாராக்கள் 10-12) *

10. நம் சகோதர சகோதரிகளைப் பற்றி எப்படி நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்?

10 நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வதன் மூலம் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம். அதற்கு என்ன செய்யலாம்? கூட்டத்துக்கு முன்பும் பின்பும் சகோதர சகோதரிகளோடு பேசுங்கள், அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள், முடிந்தால் உங்களோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களைக் கூப்பிடுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஒரு சகோதரி உங்களிடம் நட்பாகப் பழகுவதில்லை என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோடு பழகிய பிறகு, அவர் கூச்ச சுபாவம் உள்ளவர் என்பது உங்களுக்குப் புரியவரலாம். ஒரு சகோதரர், பொருளாசை பிடித்தவர் என்ற நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோடு பழகிய பிறகு, அவர் தாராள குணமுள்ளவர் என்பது உங்களுக்குப் புரியவரலாம். ஒரு சகோதரி, தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கூட்டங்களுக்கு எப்போதும் தாமதமாக வருவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோடு பழகிய பிறகு, தன் குடும்பத்தில் அவர் எதிர்ப்பலைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவரலாம். (யோபு 6:29) ‘மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களாக’ நாம் இருக்கக் கூடாது என்பது உண்மைதான்! (1 தீ. 5:13) அதேசமயத்தில், நம்முடைய சகோதர சகோதரிகளைப் பற்றியும், என்ன காரணத்தால் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது.

11. சகோதர சகோதரிகளைப் பற்றி மூப்பர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது ஏன் முக்கியம்?

11 சகோதர சகோதரிகளைப் பற்றி, முக்கியமாக மூப்பர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வட்டாரக் கண்காணியாக இருந்த ஆர்த்தரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவரும் இன்னொரு சகோதரரும் ஒரு சகோதரியைப் பார்க்கப் போனார்கள். அந்தச் சகோதரி, பார்ப்பதற்குச் கூச்ச சுபாவம் உள்ளவர் போல் தெரிவார். “கல்யாணமாகி கொஞ்ச வருஷத்துக்குள்ளயே அவங்களோட கணவர் இறந்துட்டாருங்குற விஷயத்த தெரிஞ்சுக்கிட்டோம். கஷ்டங்கள் இருந்தாலும், அவங்களோட இரண்டு பெண் பிள்ளைகளும் யெகோவாகிட்ட நல்ல பந்தத்த வைச்சிக்கிறதுக்கு அவங்க உதவி செஞ்சிருக்காங்க. இப்போ அந்த சகோதரியோட கண் பார்வையும் மங்கிட்டே வருது. மனச்சோர்வாலும் அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. இருந்தாலும், யெகோவா மேல இருக்கிற ஆழமான அன்பும் பலமான விசுவாசமும் அவங்கள விட்டு போகவே இல்ல. அவங்களோட அருமையான முன்மாதிரியிலிருந்து நிறைய கத்துக்கலாம்னு புரிஞ்சுகிட்டோம்” என்று ஆர்த்தர் சொல்கிறார். (பிலி. 2:3) இந்த வட்டாரக் கண்காணி யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறார்! தன்னுடைய உண்மை ஊழியர்களைப் பற்றியும் அவர்கள் அனுபவிக்கிற வேதனைகளைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். (யாத். 3:7) மூப்பர்களும் அதே மாதிரி தெரிந்து வைத்திருந்தால், அவர்களுக்கு இன்னும் நன்றாக உதவ முடியும்.

12. ஒரு சகோதரியைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது யிப் யீ என்ற சகோதரிக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?

12 ஒரு சகோதரரோ சகோதரியோ நடந்துகொள்ளும் விதம் உங்களை எரிச்சல்படுத்தலாம். ஆனால், அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் அவர்களை அன்பாக நடத்த முடியும். ஆசியாவில் இருக்கிற சகோதரி யிப் யீ இப்படிச் சொல்கிறார்: “என் சபையில இருக்குற ஒரு சகோதரி ரொம்ப சத்தமா பேசுவாங்க. அவங்க அநாகரீகமா நடந்துக்குறாங்கனு நான் நினைச்சேன். ஆனா, அவங்ககூட சேர்ந்து ஊழியம் செஞ்சதுக்கு அப்புறம்தான், மீன் மார்க்கெட்டுல அவங்களோட அப்பா அம்மாவுக்கு மீன் விக்கிறதுக்கு உதவி செஞ்சிருக்காங்கனு புரிஞ்சுகிட்டேன். மத்தவங்க இவங்ககிட்ட வந்து மீன் வாங்கணுங்குறதுக்காக சத்தம் போட்டு வித்திருக்காங்க. . . . என்னோட சகோதர சகோதரிகள புரிஞ்சுக்கணும்னா அவங்களோட பின்னணிய புரிஞ்சுக்கணும்னு தெரியுது.” சகோதர சகோதரிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முயற்சி தேவை என்பது உண்மைதான். ஆனால், இதயக் கதவை அகலமாகத் திறக்கும்படி பைபிள் சொல்லும் அறிவுரையின்படி செய்தால் ‘எல்லா விதமான மக்களையும்’ நேசிக்கிற யெகோவாவைப் போலவே உங்களால் நடந்துகொள்ள முடியும்.—1தீ. 2:3, 4; 2கொ. 6:11-13.

கரிசனை காட்டுங்கள்

13. ஆதியாகமம் 19:15, 16-ன்படி, தேவதூதர்கள் என்ன செய்தார்கள், ஏன்?

13 லோத்து சோதோமில் இருந்தபோது இரண்டு தேவதூதர்கள் அவரைச் சந்தித்து, “நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்” என்றார்கள். (ஆதி. 19:12, 13) அந்த நகரத்தைவிட்டு அவருடைய குடும்பத்தாரை வெளியே கூட்டிக்கொண்டுவரும்படியும் சொன்னார்கள். ஆனால், இந்த முக்கியமான கட்டத்தில், அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக அவர் தாமதித்துக்கொண்டே இருந்தார். அடுத்தநாள் பொழுது விடிந்ததற்குப் பிறகும் லோத்துவும் அவருடைய குடும்பமும் தங்களுடைய வீட்டில்தான் இருந்தார்கள். அதனால், தேவதூதர்கள் மறுபடியும் அவரை எச்சரித்தார்கள். ஆனால், “லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார்.” ஒருவேளை, அவர் மெத்தனமாக இருந்தார் என்று நாம் நினைக்கலாம். ஏன், அவர் கீழ்ப்படியாத ஒரு நபர் என்றுகூட நாம் நினைக்கலாம். ஆனால் யெகோவா அப்படி நினைக்கவும் இல்லை, அவரை அம்போவென்று விட்டுவிடவும் இல்லை. “யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால்,” தேவதூதர்கள் அவருடைய குடும்பத்தில் இருந்தவர்களுடைய கையைப் பிடித்து நகரத்துக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.ஆதியாகமம் 19:15, 16-ஐ வாசியுங்கள்.

14. லோத்துவிடம் யெகோவா ஏன் கரிசனை காட்டியிருக்கலாம்?

14 லோத்துவின் மேல் யெகோவா கரிசனை காட்டியதற்கு நிறைய காரணங்கள் இருந்திருக்கலாம். சோதோம் நகரத்துக்கு வெளியே இருந்த மக்களை நினைத்துப் பயந்ததால் வீட்டைவிட்டு போவதற்கு அவர் தயங்கியிருக்கலாம். இதைத் தவிர வேறுசில ஆபத்துகளும் இருந்தன. உதாரணத்துக்கு, கொஞ்ச நாட்களுக்கு முன்பு, ஒரு தார் குழியில் இரண்டு ராஜாக்கள் விழுந்துவிட்ட விஷயத்தை அவர் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தக் குழி, அவர் வாழ்ந்த ஊருக்குப் பக்கத்திலிருந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது. (ஆதி. 14:8-12) ஒரு கணவராகவும் அப்பாவாகவும், தன்னுடைய குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்று அவர் பயந்திருக்கலாம். அதோடு, அவர் வசதியானவராக இருந்ததால், சோதோமில் அருமையான ஒரு சொந்த வீடும் அவருக்கு இருந்திருக்கலாம். (ஆதி. 13:5, 6) யெகோவாவுக்கு உடனடியாகக் கீழ்ப்படியாததற்கு இந்தக் காரணங்களையெல்லாம் ஒரு சாக்காக சொல்ல முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், லோத்து செய்த தவறுகளை மட்டுமல்ல அவரிடம் இருந்த நல்லதையும் யெகோவா பார்த்தார். அதனால்தான் அவரை ‘நீதிமானாக’ கருதினார்.—2 பே. 2:7, 8.

மற்றவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டால், அவர்களிடம் எப்படிக் கரிசனையோடு நடந்துகொள்ளலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் (பாராக்கள் 15-16) *

15. மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து தவறான ஒரு முடிவுக்கு வருவதற்குப் பதிலாக நாம் என்ன செய்ய வேண்டும்?

15 மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அவர்களைப் பற்றித் தவறான ஒரு முடிவுக்கு வந்துவிடாமல், அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதைச் செய்வதற்குதான் ஜரோப்பாவில் இருக்கிற வெரோனிக்கா முயற்சி செய்தார். “ஒரு சகோதரி எப்போ பார்த்தாலும் உம்முனு இருக்கிற மாதிரி தோணுச்சு” என்று அவர் சொல்கிறார். “அவங்க எப்போ பார்த்தாலும் ஒதுங்கியே இருந்தாங்க. சிலசமயங்கள்ல, அவங்ககிட்ட பேசுறதுக்கு பயமா இருந்துச்சு. ஆனா, ‘அவங்க சூழ்நிலையில நான் இருந்தா கண்டிப்பா ஒரு ஃபிரண்டு தேவைதானே’னு யோசிச்சேன். அதனால, அவங்கள நலன் விசாரிக்கணும்னு முடிவெடுத்தேன். அப்படி செஞ்சப்போ, அவங்க மனம் திறந்து பேசினாங்க. அதுக்கு அப்புறம்தான் அவங்கள பத்தி நல்ல புரிஞ்சிக்க முடிஞ்சிது” என்கிறார் வெரோனிக்கா.

16. கரிசனை காட்ட உதவும்படி கேட்டு ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

16 யெகோவாவால் மட்டும்தான் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். (நீதி. 15:11) அதனால், அவரைப் போலவே மற்றவர்களைப் பார்ப்பதற்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள். மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொண்டு அவர்கள்மேல் கரிசனை காட்டுவதற்கு உதவும்படியும் கேளுங்கள். சகோதரி ஆன்சிலா இதைத்தான் செய்தார். அதனால், மற்றவர்கள்மேல் அவரால் அதிக கரிசனை காட்ட முடிந்தது. அவருடைய சபையில் இருந்த ஒரு சகோதரிக்கு மற்றவர்களோடு பழகுவது கஷ்டமாக இருந்தது. “அவங்கள குறை சொல்றதும் அவங்ககூட ஒட்டாம ஒதுங்கி இருக்கிறதும் எனக்கு சுலபமாதான் இருந்திருக்கும். ஆனா, ‘அவங்ககிட்ட கரிசனை காட்ட உதவுங்க’னு ஜெபம் செஞ்சேன்” என்கிறார் ஆன்சிலா. அவர் செய்த ஜெபத்தை யெகோவா கேட்டாரா? அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நாங்க ரெண்டு பேரும் ஊழியத்துக்குப் போனோம். அப்புறம் மணிக்கணக்கா பேசினோம். அவங்க பேசினத நான் ரொம்ப கரிசனையோட கேட்டேன். அதுக்கு அப்புறம் அவங்க மேல இருந்த அன்பு அதிகமாச்சு. அவங்களுக்கு கண்டிப்பா உதவணும்னு முடிவு செஞ்சேன்.”

17. நாம் என்ன செய்ய உறுதியாக இருக்க வேண்டும்?

17 இன்னார் இன்னாருக்குத்தான் கரிசனை காட்ட வேண்டும் என்று நாம் முடிவு செய்துவிடக் கூடாது. ஏனென்றால், யோனா, எலியா, ஆகார், லோத்துவைப் போலவே எல்லாருக்கும் பிரச்சினைகள் வருகின்றன. நிறைய பேர், தாங்களாகவே பிரச்சினையைத் தேடிக்கொள்கிறார்கள். வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் நாமும் அப்படிச் செய்துவிடுகிறோம். அதனால், ஒருவர் மேல் ஒருவர் அனுதாபத்தைக் காட்டும்படி யெகோவா நம்மிடம் கேட்டுக்கொள்வது எவ்வளவு நியாயமாக இருக்கிறது! (1 பே. 3:8) நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது, வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் நம்முடைய உலகளாவிய குடும்பத்துக்கு உதவ முடியும். அதாவது, அந்த அருமையான குடும்பத்தில் இருப்பவர்களின் ஒற்றுமை இன்னும் அதிகமாவதற்கு நம்மால் உதவ முடியும். அதனால், மற்றவர்களோடு பழகும்போது, கவனமாகக் கேட்பதற்கும் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் அவர்கள்மேல் கரிசனை காட்டுவதற்கும் நாம் உறுதியாக இருக்கலாம்.

பாட்டு 119 வாருங்கள்! புதுத்தெம்பு பெறுங்கள்!

^ பாரா. 5 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், மற்றவர்களைப் பற்றியும் அவர்களுடைய உள்நோக்கங்களைப் பற்றியும் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால், யெகோவா மற்றவர்களுடைய ‘இதயத்தைப் பார்க்கிறார்.’ (1 சா. 16:7) யோனா, எலியா, ஆகார், லோத்து ஆகியவர்களிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சகோதர சகோதரிகளிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்தில் யெகோவாவை எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது உதவும்.

^ பாரா. 52 படங்களின் விளக்கம்: ஒரு இளம் சகோதரர் கூட்டத்துக்குத் தாமதமாக வருவதைப் பார்த்து வயதான ஒரு சகோதரர் எரிச்சலடைகிறார். ஆனால், அவருடைய கார் விபத்துக்குள்ளானதால்தான் அவர் தாமதமாக வந்தார் என்பதைப் பிற்பாடு புரிந்துகொள்கிறார்.

^ பாரா. 54 படங்களின் விளக்கம்: ஒரு சகோதரி யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பதாக ஊழியக் கண்காணி நினைக்கிறார். ஆனால் அவர் கூச்ச சுபாவம் உள்ளவர் என்றும், நன்றாகப் பரிச்சயம் இல்லாதவர்களோடு பழகுவது அவருக்குக் கஷ்டம் என்றும் பிற்பாடு தெரிந்துகொள்கிறார்.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: ஒரு சகோதரியை முதன்முதலாக ராஜ்ய மன்றத்தில் சந்தித்தபோது, அவர் உம்மென்று இருக்கிறார் என்றும் யாரைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை என்றும் இன்னொரு சகோதரி நினைக்கிறார். ஆனால், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டதற்குப் பிறகு, தான் நினைத்தது தவறு என்பதைப் புரிந்துகொள்கிறார்.